கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கேசவ் பிரமாதம்….பார்த்தவுடன் த்யாகய்யரின் ”பால கனகமய” தோன்றியது….
”பால கனகமய ஆயர் குலமகனை
கோல மயிற்பீலி கண்ணனைபிம் -மாலை
அனுப்பிடும் கேசவ்க்கு ஆயிரம் கோடி,
குனிப்புடன்(வளைந்து) குட்மார்னிங் கூறு”….கிரேசி மோகன்….
பிம்மாலை -அதிகாலை
குனிப்புடன் -வணங்கியபடி….
விடியவிடிய வரைந்த கேசவ்வும், வரைதலுக்கு உட்பட்ட கண்ணனும்
”தூங்க வருகவே”….
—————————–
காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்
தூளியில் ஆடித் தூங்க வருகவே….(1)
வானிடை சூரியன் காய்கின்ற வேளையில்
ஆநிரை காத்து மேய்த்துக் களைத்தவன்
தூணிடை சிங்கன் எந்தன் துரும்பு
மேனியில் ஒளிந்து தூங்க வருகவே….(2)
பாரதப் போரில் பார்த்தனின் தேரை
சாரத்யம் செய்து சோர்ந்துக் களைத்தவன்
நாரத மாமுனி நாவிருப்போன் என்
மாரதில் புரண்டு தூங்க வருகவே….(3)
மாணிக்கக் குறளன் மாவலி ஈன்ற
காணிக்கை ஏற்றுக் கால்களை நீட்டி
வானுக்குத் தாவி களைத்தவன் எந்தன்
ஊனுக்குள் கலந்து தூங்க வருகவே….(4)
மாம்பழக் கதுப்பு மருங்கில் கட்டிய
தாம்புக் கயிறால் உரலை இழுத்து
கூம்பிய ஆம்பலாய்க் களைத்தவன் ஐம்புலப்
பாம்பை அடக்கத் தூங்க வருகவே….(5)
முடியில் கற்றை மயிற்பீலி புனைந்து
மடியில் பட்டுப் பீதாம்பரம் அணிந்து
நொடியில் ராதைக்காய் காத்துக் களைத்தவன்
அடியேன் என்னகத்தில் தூங்க வருகவே….(6)
அன்னையர் துரத்த ஆயர் பாடியில்
வெண்ணெய் திருடி வீதியோடிக் களைத்தவன்
பின்னையின் பின்னல் நிறத்தன் என்மனத்
திண்ணையில் சாய்ந்து தூங்க வருகவே….(7)
ஆசை கோபியர் அன்புக்கு அடிமையாய்
ராச லீலையில் மூழ்கிக் களைத்தவன்
வாச துளசி மாலை அணிந்தென்
பூசை உள்ளில் தூங்க வருகவே….(8)
பூதனை நச்சுப் பாலொடு அவளின்
வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்
சீதரன் கோமளன் ஸ்யாமளன் என்னுளத்
தீதினை விரட்டித் தூங்க வருகவே….(9)
இத்தரை இன்னல்கள் களைந்து தர்மம்
புத்துயிர் பெற்றிடப் பற்பல யுகத்தில்
பத்தவதாரம் பூண்டுக் களைத்தவன்
புத்தியில் யோகமாய்த் தூங்க வருகவே….(10)