ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
— கவிஞர் காவிரிமைந்தன்.
ஓடி ஓடி உழைக்கணும் …
‘நல்ல நேரம்’ திரைப்படத்திற்காக நாயகன் பாடும் பாடல்! காட்டுவிலங்காம் யானைகள் வைத்து தேவர் எடுத்த படம்! உழைப்பின் மேன்மையை உயர்த்திக்காட்டும் புலவரின் கைவண்ணம்! எழுத்தில் எழுந்துநிற்கும் உயர்ந்த கோபுரம்! வாழ்க்கைப் பாடத்தை வரிகளில் காட்டியிருக்கும் அற்புதக் கவிதை!
உழைப்பின் பெருமை என்னவென்று உலகறியும்! உழவன் முதல் கவிஞன் வரை உழைப்பு ஒன்றுதான் மனித முன்னேற்றத்திற்கு முதல்படி! இவ்வுலகில் பிறந்த எந்த மனிதனும் உழைப்பதில் பின்வாங்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், உழைக்க மறுப்பவனுக்கு உண்ணுவதற்கு உரிமை கிடையாது என்றே இலக்கணம் வகுக்கலாம். அதுவும் தனக்காக வாழ்வதைவிட பிறருக்காக வாழ்வதிலேதான் அர்த்தமிருக்கிறது! ஆனந்தமிருக்கிறது! இந்த தத்துவ தரிசனத்தைத் திரைப்பாடலில் கொண்டுவரும் சாமர்த்தியம் புலவர் புலமைப்பித்தன் போன்ற பிதாமகர்களுக்கே கைகூடும்!
இருசக்கர வாகனத்தில் பயணம் செல்லும்போதெல்லாம் என் மகனை முன் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். பாடல்களை முணுமுணுப்பது வழக்கம்! என் மகன் விவேகானந்தன் சுமார் 6 வயது இருக்கும்போது முதலில் உரக்கப்பாடிய வரிகள் இவைதான்…
வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
நான் கூட கேட்டேன். என்ன விவேக், பல்லவியெல்லாம் விட்டுவிட்டு சரணத்தில் உள்ள வரிகளைப் பாடுகிறாயே என்று! அப்பா, அதில் கருத்து இருக்கிறது என்றான். அவன் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னுக்கு வருவான். வெற்றி மேல் வெற்றி பெறுவான் என்று உணர்ந்தேன். தற்போது பொறியியல் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதோடு, கவியரசு கண்ணதாசன் அவர்களின் பூரண ஆசிகளால் குறும்படங்களுக்குப் பாடல்கள் எழுதிவருகிறான்.
உலகம் முழுமைக்கும் உரிய பாடலிது! அறநெறி போற்றி ஆயிரம் செய்யுள்களைவிட இந்த ஒரு திரைப்பாடல் அதைவிட மக்கள் மனதில் எளிதாகச் சென்று சேரத்தக்கது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
1234 … அப்… அப்…
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடிமுடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
அன்போடு சொல்லுறதைக் கேட்டு நீ அத்தனைத் திறமையும் காட்டு
இந்த அம்மாவைப் பாரு ஐயாவைக் கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க
சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி
இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லிப்போடு
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினைத் தந்தாகணும் – நாட்டுக்குப்
படிப்பினைத் தந்தாகணும்.
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
காணொளி: https://www.youtube.com/watch?v=yiOVK2taBno