குறளின் கதிர்களாய்…(78)
செண்பக ஜெகதீசன்…
ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
-திருக்குறள் -486(காலமறிதல்)
புதுக் கவிதையில்…
பயத்தினால் அல்ல
பலமுடையோர் பின்வாங்குவது,
காலமறிந்து செயல்படத்தான்..
சண்டைக்கடா
பதுங்குவது,
பாய்வதற்குத்தானே…!
குறும்பாவில்…
வலிமையுள்ளவன் பின்வாங்குவது
உரிய தருணத்திற்குத்தான்,
பதுங்கிப் பாயும் போர்க்கடாபோல்…!
மரபுக் கவிதையில்…
களத்தில் மோதிடும் சண்டைக்கடா
கணத்தில் வென்றிடத் திறமிருந்தும்,
தளர்வது போலப் பதுங்கிடுதல்
தாக்க எதிரிமேல் பாய்வதற்கே,
உளமொடு உடலும் வலியோனும்
உடனடி செயலில் இறங்காதது,
அளந்தே அறிந்து காலத்தை
அதன்படி நடந்து வென்றிடவே…!
லிமரைக்கூ…
போர்க்கடா பதுங்குதல் பாய்ந்திடத்தான் போரில்,
வலிமை யுள்ளவன் பின்வாங்குதல்
காலமறிந்து செயல்பட்டு வென்றிடத்தான் பாரில்…!
கிராமிய பாணியில்…
ஆட்டுக்கிடா ஆட்டுக்கிடா
ஆளமுட்டும் ஆட்டுக்கிடா,
சண்டியான ஆட்டுக்கிடா
சண்டபோடும் ஆட்டுக்கிடா,
அது
சண்டயில பதுங்குறது,
சட்டுண்ணு பாஞ்சிடத்தான்..
மனுசங்கத இதுபோலத்தான்,
பெலமாவுள்ளவன் ஒதுங்குறது
பயந்துபோயி ஓடயில்ல,
பாத்துநல்ல நேரம்பாத்து
செய்யிறதச்செய்து செயிச்சிரத்தான்..
ஆட்டுக்கிடா ஆட்டுக்கிடா
ஆளமுட்டும் ஆட்டுக்கிடா,
சண்டியான ஆட்டுக்கிடா
சண்டபோடும் ஆட்டுக்கிடா…!
-செண்பக ஜெகதீசன்…