Blog

  • விரும்பும் நல்லறம்!

    நாகினி

     

    சூடும் மல்லி பூவும் வாசம்
    ..சேரும் மணநாளில்
    பாடும் பாட்டு வாராய் தோழி
    .. பாகாய் இசைந்தோடக்
    காட்டும் நாணச் சிவப்பு பெண்ணின்
    .. கன்னம் தொடுமதுவே
    ஏடும் சொல்லித் தாரா இன்பம்
    .. எழுதும் இல்லறமே!

    இல்லம் இனிக்க வந்த மழலை
    .. இன்ப ஊற்றாகும்
    சொல்லும் செயலும் ஒன்றாய் நடக்க
    .. சோர்வு ஈற்றாகும்
    வெல்லம் நிகர்த்த மொழியே வாழ்வில்
    .. வேண்டும் நாற்றாகும்
    வல்லம் பொறுமை இல்லம் வாய்த்தால்
    .. வளமை நூற்றாகும்!

    நூற்று ஆண்டு கடந்தும் ஒருமை
    .. நுகரும் மனையறமே
    காற்று புகாது மாசில் லாமல் நகரும்
    .. கடமை எழில்வரமே
    நாற்று வயலில் ஆண்பெண் சேர்ந்து
    .. நடக்கும் உழவதுபோல்
    வேற்று மையே இல்லா இல்லம்
    .. வேட்கை நல்லறமே!

    … நாகினி

    Share
  • ஐந்து கை ராந்தல் (20)

    வையவன்

     

    “காரணீஸ்வரன் கோயில் தெருவுக்குப் போயிருக்கியா சிவா?”
    ஆஸ்பத்திரியில் புண்ணியகோட்டியைப் பார்த்து விட்டு ஒர்க்ஷாப் தபால் ஒன்றைச் சேர்க்க போஸ்டாபீஸுக்குப் போகும் போது திஷ்யா அவனைக் கேட்டாள்.
    தபாலைப் பெட்டியில் போட்டுக் கொண்டே அவன் பதிலளித்தான். “போயிருக்கேன்… என்ன விஷயம்?” என்றான்.
    அவளிடமிருந்து பதில் இல்லை. சிவா திரும்பினான்.
    அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு ஏதோ தப்பாகச் சொல்லி விட்டவள் மாதிரி விழித்துக் கொண்டு நின்றாள்.
    “ஏன் என்ன ஆச்சு?”
    “ஐ ஆம் சாரி”
    “எதுக்கு?”
    “ஒன்… அடச் சட்.. ஒங்களெ ஒருமையிலே பேர் வச்சுக் கூப்பிட்டுட்டேன்.”
    “இனிமே மரியாதை தரப் போறியோ.”
    அவள் முகம் அபூர்வமான நாணத்தால் மிளிர்ந்தது.
    “சரி.. ஒன் ஸாரியை ஏத்துக்கறேன்.. ஆனா திடீர்னு வாங்கோ போங்கோண்ணா எனக்கு அசிங்கமா இருக்கு.”
    “எனக்குக் கூட கஷ்டமாத்தான் இருக்கு”
    “அப்ப எதுக்கு கஷ்டப்படுத்திக்கறே?”
    “நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோமே!”
    “ஏய்… கிண்டல் பண்றியா?”
    அவள் பளிச்சென்று சிரித்தாள்.
    “என்ன இருந்தாலும் நீங்கள் கணவர்.”
    “இதானே வேணாம்!”
    அவள் முகம் மலர்ந்திருந்தது கூப்பிற்று.
    “என்ன திஷ்யா? திடீர்னு சேஞ்ச் ஆயிட்டே?”
    “ம் ம்…” என்று நினைவுகளில் புதைந்தவள் வெளிப்படுவது போல் விழித்தாள்.
    “என் ஃபிரண்டு ஒருத்திக்குக் கல்யாணம் இன்னிக்கு மாப்பிள்ளை அழைப்பு அந்த ஞாபகம்.”
    “அதான் காரணீஸ்வரன் கோயில் தெருவைக் கேட்டியா?”
    “ஆமாம்” அப்போதும் அவள் நினைவுச் சுமையிலிருந்து முழுக்க விடுபடவில்லை.
    “அங்கேதான் கல்யாணமா?”
    “ஆமாம்…”
    “போய்ட்டு வாயேன்.”
    “துணைக்கு? பிரேம் வரமாட்டேங்கறான்.”
    “நான் வரட்டுமா? அவள் தலையசைத்தாள்.”
    “என்ன அபாரமான ஐடியா… இவ்வளவு கலாட்டா நடந்திருக்கு. இப்ப உன் சிநேகிதி கல்யாணத்துக்கு நான் துணை வரணும்ங்கிறே!”
    “நீ தெரு முனையிலேயே நின்னுடு. உள்ளே வர வேண்டாம். நான் போய் அரை மணி நேரத்திலே திரும்பிடறேன்.”
    “அப்பா கிட்டே சொன்னியா?”
    “ம்ம்ம்.”
    “சரி பொறப்படு… நான் நாளைக்குக் காலையிலே திருப்பத்தூர் போகணும்… போனமா வந்தமாண்ணு தலையைக் காட்டிட்டு திரும்பிடு.”
    மைலாப்பூர் பீச் அருகில் அவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கினர். காரணீஸ்வரன் கோவில் தெருவில் பந்தல் போட்டிருந்த ஒரு வீட்டுக்குச் சற்று முன்னே அவளிடமிருந்து விடைபெற்று தெருமுனைக்கு வந்து நின்றான் சிவா. சாலையை வேடிக்கை பார்த்தான்.
    சரியாக அரை மணி நேரத்தில் திஷ்யா வந்து விட்டாள்.
    “என்ன இவ்வளவு சீக்கிரம்?”
    “சொன்னது அரை மணி வார்த்தையைக் காப்பாத்தணுமோ இல்லியோ?”
    “என்ன சொன்னா ஒன் சினேகிதி?”
    “சிரிச்சா… பூரிச்சா… இருந்து நாளைக்குப் போகச் சொன்னா. ஒரு கல்யாணப் பொண்ணு வேற என்ன சொல்லுவா?…” அவள் பெருமூச்சு.
    “என்ன திஷ்யா… ஒரு துயரம்!”
    “பெண்… பாரதப் பெண், வேறென்ன சொல்றது? திடீர்னு ஒரு வசந்தம் கலைஞ்சிடுது. பெரிய டாக்டராகப் போகிறேன்… ஸயன்டிஸ்டாகப் போறேன்… லீடராகப் போகிறேன்னா… நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கப் போறா.”
    சற்று நிறுத்தி திஷ்யா மெலிதாகப் பெருமூச்செறிந்தாள்.
    “அடுத்த வருஷம் குழந்தை… அப்புறம் இன்னொண்ணு. அதுக்கப்புறம் குழந்தைக்கு ஜுரம். சமையல் ஆகலே… அவருக்கு சீதனம் கம்மிண்ணு கோபம்… ஓடி ஓடி அவள் சக்கரம் சுத்தும். கெழவியாவா…”
    சிவாவுக்கு சுரீர் சுரீரென்று ஊசியால் குத்துவது போலிருந்தது.
    “நிறுத்து… இதென்ன இப்படி ஒப்பாரி?”
    “எனக்கு ஒன்னோட பேசணும்! ரொம்ப ரொம்பப் பேசணும்.”
    “பேசிக்கிட்டுதானே இருக்கோம்.”
    “இல்லே தனியா!” அவள் குரலில் ஆழங் காண முடியாத அமைதி இருந்தது.”
    “மைலாப்பூர் பீச்சுக்குப் போவோமா?”
    “சீச்சீ… வீட்டுக்குப் போவோம்”
    “காதலர்கள்னா பீச்சுக்குப் போகணும்னு ஒரு சம்பிரதாயம் உண்டு. டோன்ட் ஃபோர்கோ இட்”
    “ஸ்டாப் ஜோகிங் ப்ளீஸ்” அவள் நிஜமாகவே வருத்தத்தோடு சொன்னாள்.
    “சரி…கட்டாயம் பீச்சுக்குப் போவோம். வீட்டில் ஒரு பட்டாளம் இருக்கு. நமக்கு எங்கே பேச டயம் கெடைக்கப் போவுது.”
    அவள் சம்மதித்தாள்.
    நிரந்தரமாக அலைகள் சந்திக்கும் கடற்கரையில் இன்றோ நாளையோ கட்டுமரங்களில் நனைந்து விட்டு வரக் காத்திருக்கும் கயிற்றுக் கருணைகளின் ஆளுயர மறைவில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.
    கடலும் காத்திருந்தது – கறுத்து வரும் நீலப்பரப்பின் ஒரு முகூர்த்த வெளிச்சத்திற்கு.
    “என்ன பேசப் போறே?”
    திஷ்யா அலைகளின் சிலிர்த்தெழும் வெண் பிடரிகளில் லயித்தாள். ஏதோ ஓர் அமைதி அவளுக்குத் தேவைப்படுவது போல் சிவா உணர்ந்தான்.மௌனமானான்.
    அங்கங்கே பேச்சுக் குரல்கள் காற்றில் சருகுகளாக மிதந்து வந்தன. புதிய காதலர்களும் பழைய காதலர்களும் கடந்து சென்றனர். தழுவித் தழுவி முத்தமிட்டனர்.
    ஒருவர் மடியில் இன்னொருவர் புதைந்தனர். சிரித்தனர். எல்லாம் அக்கரை ஒலிகள் போன்று அகன்றன.
    திஷ்யாவும் சிவாவும் மௌனமாய், ஒலிகள் யாவும் மெதுவாய் அமிழும் நிசப்தம் ஒன்றின் சந்நிதியில் நிற்பது போல் அமர்ந்திருந்தனர்.
    “சிவா”
    “சொல்லு”
    “என்ன உன் வாழ்க்கையின் நோக்கம்?”
    சிவாவுக்குத் தெரியவில்லை.
    “தெரியவே இல்லே!”
    “ஆமா”
    “டூ யூ லவ் மீ?”
    “எஸ்”
    “கல்யாணம் பண்ணிக்கற அளவு நீ ஸீரியஸா என்னை நேசிக்கிறியா?”
    “எஸ்”
    திஷ்யா அவனைப் பார்த்துச் சிரித்தாள். இருளில் முகத்தின் உணர்ச்சிகள் தெரியவில்லை. பல்லின் ஒளி மட்டும் தெரிந்தது.
    “நீ பொய் சொல்றே… அல்லது உன்னை முழுக்கத் தெரிஞ்சுக்காம சொல்றே!”
    “என்ன திடீர்னு ஒரு மாற்றம் உங்கிட்டே?”
    “இல்லே… அப்பாகிட்டே கடைசியிலே சினிமாவிலே நடிக்கறதா இருந்தா கூட சரிப்பான்னு சொன்னேனே! அது ஏண்ணு நீ என்னைக் கேட்டியா?”
    “அதுக்கு என்ன இப்போ! நீ மனசு ஒடிஞ்சு போன மூட்லே அதைச் சொல்லியிருக்கலாம்.”
    நிலா மெதுவாக எழுந்தது.
    “உன்னை ஏன் நான் இதிலே இன்வால்வ் பண்ணணும். நீ ஒரு ரைட்டர். எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கு. இந்த மனுஷாளை.. இந்த மண்ணை உன் எழுத்திலே ஏதாவது கொஞ்சம் புரட்டி எடுக்க வேண்டியிருக்கு.” சற்று நிறுத்தித் தூரவரும் ஓர் ஆண் அலையைப் பார்த்தாள். “என் வீட்டிலே ஒரு பட்டாளம் இருக்கு. வறுமை இருக்கு. பிரச்னை இருக்கு. எல்லாத்தையும் நீ ஏன் தலையிலே சொமந்துக்கறே?”
    “என்னை டெஸ்ட் பண்றியா?”
    “இல்லே, என்னையே டெஸ்ட் பண்ணிக்கறேன். நம்ம சினேகிதத்திலே உனக்கும் எனக்கும் மத்தியிலே அந்த ஸோ கால்ட் அர்ப்பணம் இல்லே. சூழ்நிலைகளின் நிர்ப்பந்தம் தான் இருக்கு”
    சிவாவுக்கு அவளது அறிவின் தெளிந்த கூர்மை அவனை வகிர்ந்து வரையறை செய்வது போலிருந்தது.
    “இப்படி ஆபரேஷன் பண்ணினா எல்லா உறவுகளும் ஒரு கோணத்தில் வெற்றுக் கோடுகளாயிடும்.”
    அவள் அவனது விமர்சனத்தைப் பொருட்படுத்தாதவள் போல் “ம்ம்ஹ்ஹ்ம்மா” என்று தனக்குள் சிரித்தாள். அது அவன் செவியில் விழுந்தது.
    “சிவா, எல்லா உறவும் வேறே..இது வேறே! ஒனக்குத் தர எங்கிட்டே இந்த அழகும் என் பெண்மையும் இருக்கு. அது மட்டும் இருந்தா பரிபூரண சந்தோஷம் கெடைச்சுடும். ஆனா கூடவே ஒரு சொமை இருக்கு. எங்க அப்பா… கூட நாலு ஜீவன்கள். இதெல்லாம் என் சொமை. நீயும் நானும் அதோ அந்தக் கப்பல்லே ஏறி கண் காணாத சீமைக்கு ஓடிட்டாலும் கூட அந்த சொமை எனக்குள்ளே அழுத்திட்டே இருக்கும்!”
    சிவா அவள் என்ன விரும்புகிறாள் என்று மனசிற்குள் அலசினான்.
    “நீ கல்யாணத்துக்கு மானசீகமா தயாராயிட்டியா?” என்று திஷ்யா அவனைக் கேட்டாள்.
    “எதுக்குக் கேக்கறே?”
    “நான் தயாராகலே. எனக்குப் பிடிக்காத ஒரு ஏற்பாட்டிலிருந்து தப்பிச்சிக்க ஒன்னைப் பயன்படுத்திட்ட மாதிரி எனக்குத் தோணுது.
    இன்னும் விளக்கமாச் சொன்னா ஒன் அனுதாபத்தை எனக்கு சாதகமாக்கிக் கிட்ட மாதிரி இருக்கு.”
    அப்படியெல்லாம் அவன் சிந்தித்துப் பார்க்கவில்லை. ஆனால் இந்த திஷ்யா விவகாரத்தில் பிரீதா குறுக்கிட்டு தன்னை ஏதோ ஒரு போக்கிற்கு செதுக்கி உருவாக்கிய மாதிரி இப்போது தென்பட்டது.
    “இன்னொண்ணு சொல்லட்டுமா?”
    “சொல்லு”
    “ஒரு நாள் இல்லாட்டி இன்னொரு நாள் இந்தச் சுமை உனக்கு பளுவாகும். தவிர்க்க நெனைப்பே. அப்ப இந்த பிரியம் போயிடும். நீ என்னை வெறுப்பே.”
    “இதெல்லாம் கற்பனை…யூகம். ஏதோ ஒரு முடிவுக்கு நீ வந்துட்டே! அதைச் சொல்லத் தயங்கறே… இப்படி சாக்கு போக்கு சொல்றே.”
    சந்திர வெளிச்சம் தனது ஆசியை அவள் மீது வீசிற்று.
    அவள் இளமை… அதன் மனசைக் கிறக்கும் கவர்ச்சி… முத்தமிடத் தூண்டும் அவளது உதடுகளின் ஈரப் பளபளப்பு… மையெழுதிய விழிகளின் இமைகளின் துடிப்பு…
    இவற்றை மீறி திஷ்யாவிடம் அவனுக்கு ஒரு மரியாதை எழுந்தது. இவள் சிந்திக்கிறாள்.
    “இது கற்பனை இல்லே சிவா. எனக்கு கற்பனை பண்ணத் தெரியாது. நடைமுறை இதான். எதிர்த்த வீட்டிலே, பக்கத்து வீட்டிலே, அடுத்த தெருவிலே இதான் நடக்கிறது.”
    “நீ என்ன முடிவுக்கு வர்றே?”
    “முடிவுக்கு நான் மட்டும் வரமுடியாது. நீயும் சேர்ந்து. இன்னும் சொல்லப் போனா இதுவரைக்கும் உங்க அம்மாவின் அபிப்பிராயம் என்னண்ணு நாம ரெண்டு பேரும் தெரிஞ்சுக்கலே…”
    “திஷ்யா” என்று சிவா அவளது கவலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல அழைத்தான்.
    “ம்ம்ம்” என்று அவள் பதிலளித்தாள்.
    “என் மேலே உனக்கு நம்பிக்கை வரலே. நான் கடைசி வரைலே உறுதியா இருப்பேனாண்ணு சந்தேகப்படறே!”
    திஷ்யா காற்றில் நெகிழ்ந்து போய் படபடத்த முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அவள் வளையல்களின் ஒலி இனிமையாய்க் கேட்டது.
    “சிவா… நான் முன்னாடியே சொன்னேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணுவோம்ணு…”
    அவளை விட்டு சற்றுத் தள்ளி ஒதுங்கி உட்கார்ந்திருந்த சிவா வேறொன்று நினைத்தான்.
    அவர்கள் நட்பு தொட்டுப் பழகாதது. ஓர் உடல் இன்னோர் உடலுக்கு ஸ்பரிசங்களின் தந்தி மீட்டலில் வழங்கும் நம்பிக்கையை அறியாதது. வாய்ச் சொற்களின் வரம்புகளில் நின்று இடைவெளிகளை அழிக்காதது. ஒரு பெண் ஆணை நம்புவதற்கு அதுவும் தேவைப்படுமோ!
    அவன் அவள் அருகில் நெருங்கினான்.
    “சிவா… என்னது இது?” என்று அவள் துணுக்குற்றாள்.
    சிவா அவள் இடையில் வழுவழுத்த வெற்று மேனியின் மீது ஒரு கை கொடுத்துத் தழுவி வலிமையும் உறுதியும் வெளிப்பட அவளைத் தன் அருகே இழுத்தான்.
    ஒரு கணம் அதை எதிர்க்கப் போராடியவள் நெருக்கத்தில் வந்த அந்த முகத்தைப் பார்த்துச் செயலற்றுப் போனாள்.
    அவன் கண்களிலும் உதட்டிலும் உறுதி மின்னிற்று. உண்மை ஒளி வீசியது.
    சிவா அவளை உதட்டில் முத்தமிட்டான்.
    கிளர்ச்சி… வெறி… இவை சம்பந்தப்படாத வாக்குறுதி போன்று ஒரு வலிமை அந்த முத்தத்தில் வெளிப்பட்டது. பின்பு நெற்றியில்… மூடிக் கொண்ட கண்ணிமைகளில் அவன் ஆழ்ந்து முத்தமிட்டான்.
    அவள் கன்னத்தில் கழுத்தில் மோவாயில் மீண்டும் உதடுகளில் அவன் உதடுகள் சஞ்சரித்தன.
    அவள் தன்னைத் தழுவியிருந்த கையை உதறித் தன்னை விடுவித்துக் கொண்டாள்.
    அவன் எதிர்பார்த்த மாதிரியே ஓர் ஆணின் காக்கும் கரத்தின் வலிமையை அவள் உணர்ந்தாள்.
    “போதும்” என்று மூச்சுத் திணறிக் கொண்டே சொல்லி நகர்ந்து உட்கார்ந்தாள்.
    சிறிது நேரம் இந்த ஆக்கிரமிப்பால் அவள் பேசும் சக்தியிழந்தாள். அவன் உணர்ச்சிவசப் படாமல் தூரத்திலேயே உட்கார்ந்திருந்தான்.
    “சிவா…” அவள் குரல் கலங்கியிருந்தது.
    “ம்ம்ம்…”
    அவள் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள்.
    “இப்ப நம்ம கல்யாணத்துக்கு அவசரமில்லே.”
    “……..”
    “காத்திருப்போம்”
    “எதுவரை?”
    “எதுவரை முடியுமோ அது வரை.”
    “எதுக்கு?”
    “நம்மை நாமே உறுதியாக்கிக்கிறதுக்கு.”
    அவன் கையை நீட்டினான்.
    ஏதோ ஓர் ஒப்பந்தத்துக்கு நீட்டுவது போல அவள் தன் கையை அதன் மீது வைத்தாள்.
    கடற் காற்றில் சில்லென்றிருந்த அந்தக் கை அவன் ஏந்திய சில நிமிஷங்களில் வெது வெதுப்பாயிற்று.
    “புறப்படு, போவோம்” என்று அந்தக் கையைப் பற்றி அவளைத் தூக்கினான் சிவா.

    தொடரும்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”அங்கதன் இல்லை, அனுமனும் இல்லை,
    சிங்கா சனமில்லை, சீராயர் -ரங்கனுக்கு:
    வட்டமிட்டு பால்சொரிந்து வாத்சல்ய மாய்பசுக்கள்,
    பட்டமளிப்பு பாகவத BOYக்கு”….கிரேசி மோகன்….a

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: இழி தரு தண்புனல் நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை

     

    கல்வி யகலமும் கட்டுரை வாய்பாடும்
    கொல்சின வேந்தன் அவைகாட்டும் – மல்கித்
    தலைப்பாய் இழிதரு தண்புனல் நீத்தம்
    மலைப்பெயல் காட்டுந் துணை.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,
    கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,
    தலைப்பாய் இழிதரு தண் புனல் நீத்தம்
    மலைப் பெயல் காட்டும் துணை.

    பொருள் விளக்கம்:
    பரந்துபட்ட கல்வி அறிவையும், சிறந்த நாவன்மையையும், எதிரியை அழித்துவிடும் கொடுஞ்சினத்தையும் கொண்ட மன்னவனின் திறமையானது அவனது அவையோரின் சிறப்புகளினால் அமைவது என அறிந்து கொள்ளலாம். (அது எவ்வாறென்றால்) பெருகிப் பொங்கி வீழ்கின்ற குளிர்ந்த புனலின் அளவினை மலை மீது பொழிந்த மழையின் அளவு காட்டி நிற்பது போலவாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: ஒரு சிறந்த அரசனின் கல்வியையும், நாவன்மையையும், வீரத்தையும் அவனது அவையோரின் திறம் கண்டே அறிந்துவிட முடியும். இவ்வாறாக அவையோரின் திறமையினால் மன்னன் புகழடைவதை வள்ளுவர் தரும் இரு வேறு குறள்களின் வழி அறியலாம்.

    சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். (குறள்: 445)

    தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், சிறந்த அறிவுரை கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.

    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில். (குறள்: 446)

    தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.

    Share
  • அனைவரும் செய்திடுவோம் !

    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

     

    பல்லில்லா வாயாலே பலகதைகள் நீசொல்வாய்
    கேட்டபடி நானிருருந்து கிறுகிறுத்துப் போய்விடுவேன்

    ஓரடிநீ வைத்தவுடன் உலப்பில்லா மகிழ்வுடனே
    உன்கையைப் பிடித்தபடி உன்னுடனே நான்நடப்பேன்

    பல்முளைத்த பின்னாலே பலதடவை நீகடித்தாய்
    தொல்லையென நினைக்காமல் சுகமாக நானினைத்தேன்

    மடிமீது கிடந்திருந்து மார்பினிலே உதைத்திடுவாய்
    மனமெல்லாம் இன்பவெள்ளம் பெருகெடுத்து நிற்குமப்போ

    முடிமீது கையைவைத்து முறுக்கிநீ இழுத்திடுவாய்
    முகஞ்சுழியா உனைப்பார்த்து முறுவலுடன் நானிற்பேன்

    மார்பினிலே படுத்திருந்து மழலையிலே பேசிடுவாய்
    ஊர்முழுக்க ஓடிவந்து உன்பேச்சைக் கேட்குமப்போ

    வேரிலே பழுத்தபலா என்றுமே வியந்துமவர்
    மாரியென முத்தமழை மாறிமாறிக் கொடுத்திடுவார்

    ஊர்போற்ற வந்தவுனை உயர்செல்வ மாநினைந்து
    உச்சியெலாம் முத்தமிட்டு உவகையிலே நான்மிதப்பேன்

    கண்ணுக்குள் மணியெனவே காலமெலாம் உனைநினைத்து
    எண்ணற்ற கனவுகளை எனக்குள்ளே நான்சுமந்தேன்

    நீவளர்ந்து உரமாகி நெடுந்தூரம் எனைத்தாங்கி
    வானளவு புகழ்பெறவே மனத்துள்ளே நினைத்திருந்தேன்

    சுரமுனக்கு வந்துவிடின் துடிதுடித்துப் போய்விடுவேன்
    நடுஇரவு ஆனாலும் நாடிநிற்பேன் வைத்தியரை

    நீசிரித்தால் நான்சிரிப்பேன் நீயழுதால் நானழுவேன்
    மேதினியில் நீதானே மேலான செல்வமென்பேன்

    தோழ்மீது ஏறிநின்று துஷ்டத்தனம் செய்திடுவாய்
    ஆள்பாதி ஆக்கிடுவாய் அத்தனையும் ஆனந்தம்

    நாள்முழுக்க உன்னுடனே நானிருக்க வேண்டுமென்று
    தோழணைத்துப் பிடித்திடுவாய் சுகமங்கே பெருக்கெடுக்கும்

    பள்ளிக்கூடம் விட்டுவிட்டு பாதிவழி வந்துநிற்பேன்
    துள்ளிவந்து எனைப்பற்றி அள்ளிமுத்தம் தந்துநிற்பாய்

    வெள்ளை உள்ளத்தோடென்னை விட்டுவிடா உன்விருப்பால்
    உள்ளமெலாம் இன்பமெனும் உணர்வாக ஓடிநிற்கும்

    சொல்லசொல்ல கதைகேட்பாய் சுற்றிவந்தும் கதைகேட்பாய்
    நல்லகதை சொல்லுவென நயமுடனே நாடிநிற்பாய்

    ஆராதகாதலுடன் அணைத்தபடி சொல்லி நிற்பேன்
    பேராவல் கொண்டுநீயும் பிரமிப்பாய் கேட்டிடுவாய்

    இப்போது போன்செய்தால் எடுக்கநீ தயங்குகிறாய்
    அப்போது என்பேச்சை ஆனந்தமாய் கேட்டாயே
    முப்போதும் உன்நினைப்பாய் முழுவதுமாய் இருந்தேனே
    இப்போது அழைப்பதற்கு எனக்கிப்போ யாருள்ளார்

    நான்நடக்க முடியாமல் நர்சிங்ஹோம் இருக்கின்றேன்
    நீநடந்த நடையினைநான் நினைவினிலே மீட்கின்றேன்
    என்மகனே என்நடையை இங்குவந்து பார்த்துவிடு
    உன்மனத்தில் பழையநடை ஓடிவந்து நின்றுவிடும்

    பார்ப்பதற்கு வருவாயா எனப்பார்த்து நிற்கிற்றேன்
    பார்வையிப்போ எனைப்பார்த்து பரிகசித்து நிற்கிறது
    பள்ளிக்கூடம் விட்டபின்பு பாதிவழி வந்தவனே
    பார்த்தபடி நிற்கின்றேன் பார்த்துவிட வருவாயா

    நடு இரவில் நீவிழித்தால் நானணைத்துக் கொஞ்சிடுவேன்
    நானெழுந்து விழித்தாலும் எனையணைக்க யாருமிலை
    தனிமையிலே வாடுகிறேன் தயவைநான் நாடுகிறேன்
    எனதருமை தவப்புதல்வா எனையணைக்க வருவாயா

    முதுமை வந்தகாரணத்தால் மூச்சுவிட முடியவில்லை
    தனிமையிலே தவிக்கின்றேன் தாகமெலாம் உன்னிடத்தில்
    புவிமீது உன்னையேநான் புதுமருந்தாய் உணருகிறேன்
    மடிமீது எனைவைத்து வருடிவிட வருவாயா

    உன்குடும்பம் உன்பிள்ளை உனக்கு அதுதேவைதான்
    என்றாலும் உன்னம்மா என்றுமுனக் கம்மாதான்
    இளமையிலும் முதுமையிலும் உனக்குநான் அம்மாதான்
    ஏக்கமுடன் இருப்பவளை பார்ப்பதற்கு வருவாயா

    நேர்சிங்ஹோம் வாழ்க்கை நிம்மதியாய் இல்லையப்பா
    யாரிடம்நான் சொல்லுவது நான்நொந்து போய்விட்டேன்
    வேரற்றமரமாக விழும்நிலையில் நான் உள்ளேன்
    யாருள்ளார் எனையணைக்க நானழுது தொலைகின்றேன்

    பிள்ளைகளே தயவுசெய்து பெற்றவரை பேணுங்கள்
    உள்ளமதில் பெற்றவரை உயர்த்திவைத்துப் பாருங்கள்
    கள்ளமிலா அன்புடைய வெள்ளமனம் உடையவரே
    கடவுளென திகழுமெங்கள் கண்நிறைந்த பெற்றவரே

    கண்ணிரில் அப்பாவும் கதறலுடன் அம்மாவும்
    மண்மீது இருந்துவிடின் மனிதருக்கே மதிப்புண்டா
    எண்ணிநாம் பார்க்காமல் இருந்துமே விட்டுவிட்டால்
    மண்ணிலே வாழ்வதிலே வாழ்வினுக்கே பயனுண்டா !

    அன்னையும்பிதாவும் முன்னறிதெய்வம்
    என்பதை அனைவரும்
    அறமெனக் கொண்டிடுவோம்
    அவர் அகமும்முகமும்
    ஆனந்தம் அடைய
    அனைவரும் செய்திடுவோம் !

    Share
  • இலைகள்

    மெய்யன் நடராஜ்

     

    மழைக்காலத்துக்கான மேகங்கள்
    உதிர்கின்ற இலைகளில் இருந்துதான்
    சேமிக்கின்றன
    வானவில்லுக்கான நிறங்கள்!

    இதழ்கள் பரப்பி பூப்பதில்
    காம்புகளின் வெற்றிடங்கள் நிரப்பும்
    மலர்களை அந்நியப்படுத்திவிட்டு
    இலைகள் பரப்பி நிறங்களை
    புஷ்பிக்கும் இலையுதிர்கால
    வர்ணங்களில் வசப்படுகிறது
    மரணத்தின் அழகு

    மர வீடுகளின்
    கூரைகளுக்கு வேயப்படும்
    பச்சை ஓடுகள் இலைகள்

    தூக்கி வளர்த்தக் கிளைகள்
    துரத்திவிடும் பட்சத்தில்
    பாதத்தில் சரணடையும்
    பழுத்த இலைகள்
    வேர்களுக்கு விருந்து
    கொடுக்கின்றன உரமாய்.

    தாமரை இலைகளின்மேல
    தண்ணீராய் ஒட்டாமல்
    தாவர வளர்ப்பின் மேல்
    ஒட்டாமை வளர்க்கின்ற
    பிரபஞ்சத்துக்கு
    வரும்பஞ்சத்தை
    பாடமாக்கிப் போதிக்கின்றன
    இலைகள் .

    இலைகள் இயற்கை வைத்தியர்கள்.

    தூதுவளை ,துளசி
    கொத்தமல்லி புதினா
    வல்லாரை முருங்கை என்று
    நீள்கின்ற மூலிகை இலைகள்
    இயற்கை வைத்திய மாளிகை

    புழுக்கள் கூடுகட்ட
    தன்னையே கொடுக்கும்
    ஈகைக் குணத்தில்
    வள்ளல்களை மிஞ்சிவிடுகின்றன

    விலங்குகள் கேட்டாலும்
    மனிதன் கேட்டாலும்
    இலைகள் இல்லை என்று
    கைவிரிப்பதில்லை .

    சருகாகி உதிர்ந்தாலும்
    மக்கி உரமாகும் வரமாகும்
    இலைகள் ஒருநாளும்
    கைவிரிப்பதில்லை.

    வாழை இலைபோட்டு
    வயிறார உண்ணும்போது
    எடுத்தெறியும்
    கரிவேப்பிலையைபோல்
    எடுத்து வீசி விடுகிறோம்
    இலைகளின் மகிமைகளை

    சுபகாரியங்களில்
    முதலிடம் கொடுத்து வரவேற்று
    பின் அதையே மென்றுத் துப்பி
    பொது இடங்களை அசுத்தமாக்கி
    கெட்ட பேர் வாங்கிக் கொடுக்கிறோம்
    வெற்றிலைகளுக்கு

    மொட்டைமரங்களின்
    ஓட்டை நிழல்களில்
    உட்கார்ந்து பேச
    யாருமில்லா ஊர் வாய்
    இலைகளை பற்றிப்
    பேசத்தவருவதில்லை

    இலைகள் இருப்பதால்தான்
    இளைப்பாருகிறோம்.
    இறந்தாலும் பாடையாய்ச் சுமக்கும்
    இலைகளைப் பார்த்து
    மண்மேல் வந்தது வாழ்ந்தது
    மண்ணுக்குச் சொந்தம் என்பதை
    மனதுக்குள் வைப்போம்.

    Share
  • வள்ளுவ மாலை

     

     சுரேஜமீ​​
    avallu
    மேல்நீர் நிலைவாரா மண்ணில் கானழிக்க
    ஏர்பிடிக்கும் கைகள் இயந்திரம் நோக்கின்
    வருமுலகில் உண்ணும் உணவேது – வள்ளுவம்
    நெறிபழகிச் செய்யப் பழகு!
    கானழிய வெப்பம் தானேகும் பூமியில்
    காற்றும் கரும்புகை யேகிநச்சைத் தூவும்
    உயிரழிக்கும் துன்பம் விலக்க – வள்ளுவம்
    காட்டும் திசையறிந்து வாழ்!
    ஓரிடத்துப் பெய்தும் வருமிடத்துப் பொய்த்தும்
    சேரிடத்தில் வீணாய்ப் போகும் மழையும்
    பேரிடராய் மண்ணில் புகுதல் நீக்கத்
    திருக்குறள் சொல்லும் வழி!
    ஈதலை நன்கறியப் பேணிடு ஞாலஞ்செய்
    வளம்யாவும் அன்றேல் அழிந்திடுவர் நாளையர்;
    வள்ளுவம் வெல்நெறியே மாந்தர்க்கு என்றும்
    வழித்துணை யாமறிந்து செல்!
    வளம்குன் றின்வரும் போருணர்வாய் மாநிலத்தில்
    தாயுள்ளம் தள்ளாடும் சேயுயிர்கள் வாடிநிற்க;
    தேடிடுவாய் மண்ணில் நிறைகளையே – வள்ளுவம்
    தெரிந்து கற்கத் தெளிந்து!
     
    அன்புடன்
    சுரேஜமீ​

                                                      

    —————————————————————————————————
    Share
  • சிகரம் நோக்கி (11)

    வெற்றி

    peak111111

    சுரேஜமீ

    தொட்டுவிடும் தூரம் தான் வானம்;
    தொட முனைபவர்க்கு!
    தோகையை விரித்தால் தான்
    மயிலுக்கு அழகு!
    எண்ணங்கள் எனும் தோகை விரிந்தால்தான்
    ஏற்றங்கள் பெற முடியும்! – சுரேஜமீ

    நாம் எதை நினைக்கிறோமோ, அதுவாகவே ஆகக் கூடிய வல்லமை, மனிதனுக்கு மட்டுமே உண்டு! ஆனால், நம் நினைவுகள் எல்லாம் ஒரு எல்லையிலேயே இருப்பதுதான், நம் பிரச்சினையே.

    ஒரு விடயத்தை எடுத்தால், அதில் வெற்றியடையும் வரை, வேறு எச்சிந்தனையும் இல்லாமல், ஒரு முகமாக, செயலில் ஏகினால், வெற்றி தள்ளிப் போகலாமெயொழிய, நிச்சயம், தட்டிப் போகாது!

    நம்புங்கள் உங்களை! நாளை வரலாறு உங்களால் எழுதப் படும் என்று! வரம் கேட்டு உங்கள் வாசலுக்கே வரும் வாய்ப்புகள்!

    எந்த ஒரு சாதனையாளருக்கும், வெற்றி தன் வாயிற்கதவை உடனே திறந்து விடவில்லை; ஒவ்வொரு முறையும் ஒரு படிப்பினையைக் கொடுத்துத் தங்கத்தை மெருகேற்றுவது போல, தன்னைச் செதுக்கிய பின்னரே வரும் வெற்றி, காலத்தால் போற்றப் படுகிறது என்பது நாம் அறிந்ததே!

    அப்படி இருந்தும் ஏன், நாம் மட்டும் தோல்வி என்றவுடன், எதிர் மறையாகச் சிந்திக்கிறோமே?

    தோல்வி என்பது விதை போன்றது; விதை வீறிட்டு எழும்வரை போராட்டம்தான்!
    எழுந்த மறு நொடியே பாராட்டும் வாழ்வு பிறக்கும்!

    தோல்வி கற்றுத் தரும் பாடத்தை, உளிதாங்கும் சிற்பத்தைப் போல, எடுத்தவுடன் கிடைக்கும் வெற்றி ஒருநாளும் கற்றுத்தராது!

    வெற்றியின் ரகசியமே, நீங்கள் எந்த நிலையில் ஒரு செயலின் முடிவை அணுகுகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு முடிவும், படி தாண்டி வரும்பொழுது, ஒவ்வொன்றும் வெற்றிதானே?

    வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.

    பாரதி என்ன சொல்கிறான்?
    தேடிச் சோறு நிதம் தின்று – பல

    சின்னஞ்சிறு கதைகள் பேசி

    வாடித் துன்பமிக உழன்று – பிறர்

    வாடப் பல செயல்கள் செய்து – நரை

    கூடிக் கிழப்பருவம் யெய்தி – கொடுங்

    கூற்றுக்கிரை எனப் பின் மாயும் – பல

    வேடிக்கை மனிதரைப் போல நானும் – இங்கு

    வீழ்வேன் என்று நினைத்தாயோ?

    உரக்க, உணர்வுகளோடு இந்த வரிகளைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் உதிரத்தில் வெற்றியின் வேர்கள் நிச்சயம் விதைக்கப்பட்டுவிடும்! திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்! உங்கள் வாழ்வின் இலட்சியம் புலப்படும்!

    மனித வாழ்வு என்பது அதிக பட்சம் நூறு ஆண்டுகள் தான்! இருக்கின்ற ஒவ்வொரு நாளும், இறைவன் கொடுத்த பரிசு! விதி என்று உங்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள். உங்கள் வாழ்வு, உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

    ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ‘ரைட்’ சகோதரர்களை, இந்த உலகம் ஏளனமாகத்தான் பார்த்தது; ஆனால், இன்று அதன் வசதியில், இந்த உலகத்தின் ஒரு மூலையும், மற்றொரு மூலையும் தொட்டுவிடும் தூரமாகிப் போனதென்றால்,

    நீங்கள் அறிய வேண்டுவது, உங்கள் முயற்சிகளைப் பற்றிய, உங்களின் தெளிவான சிந்தனையே அன்றி, அடுத்தவர்கள் உங்கள் மீது வைக்கும் விமர்சனங்கள் அல்ல என்பதே!

    உங்களுக்கு எது விருப்பமானதோ, எதை உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ, அதைத் தாமதிக்காமல் செய்ய முற்படுங்கள்! வெற்றி உங்கள் கைகளில் தவழும் நாள் வெகு தொலைவில் இல்லை!

    ஒருபோதும் உங்களுடன் மற்றொருவரை ஒப்பீடு செய்யாதீர்கள்! அது உங்களை, நீங்களே அவமதிக்கும் செயல் என்று உலகப் பணக்காரர்களுள் ஒருவரும், வெற்றியின் உச்சத்தை அடைந்தவருமான பில் கேட்ஸ் கூறுகிறார்.

    சத்தியமான வார்த்தைகள் அவை!

    மாபெரும் சபைதனின் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழ வேண்டும்!
    ஒரு மாத்து குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழவேண்டும்!

    எப்பொழுது அது நடக்கும்?

    உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்!
    உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை
    வணங்காமல் நீ வாழலாம்!

    என்ற கவியரசரின் எளிமையான வரிகளை உங்கள் இதயத்தில் இருத்தி, இலட்சியங்களை நோக்கி, இடைவிடாது பயணிக்க,

    சிகரங்கள் சிரம் வணங்கக் காத்திருக்கிறது உங்களுக்காக!

    …….. தொடர்ந்து பயணிப்போம்!

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 4

    புலவர் இரா. இராமமூர்த்தி.

     

     

    உலகில் எல்லாராலும் போற்றப் பெறும் நல்ல உள்ளம், கொடை உள்ளமே யாகும்! நம் வாழ்கையின் பயனே கொடுத்துப் புகழ் பெற்று வாழ்தல் ஆகும் இதனை வள்ளுவர்,

    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு!

    என்ற குறட்பாவில் குறிப்பிடுகிறார்! இருப்பதை எடுத்து இல்லாருக்கு வழங்கும் ஈகையைப் பற்றித் திருவள்ளுவர் கூறும் பத்துப் பாடல்களும் பொருட்செறிவு மிக்கவை ஆகும்.

    ஈகை அதிகாரத்தின் முதற் குறளே, தனித் தன்மை வாய்ந்தது.வறியவர் ஒருவருக்கு நாம் கொடுக்கும் பொருளை வள்ளுவர் ‘ஓன்று’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் ஒன்று என்ற சொல்லுக்கு, – தேவையான ஓன்று, விரும்பிய ஓன்று என்றெல்லாம் விளக்கம் கூறுவார்கள்! தம்மிடம் இருக்கும் பொருட் செல்வத்தையும் அது குறிக்கும்! ஒருவர் எந்தப் பொருளில் வறியவராக இருக்கிறாரோ, அந்தப் பொருளை வழங்குவதே ஈகை ஆகும். இந்தப்பொருள் செல்வம், உணவு, ஆகியவற்றை மட்டுமே குறிக்கும். ஆனால் அறிவில் வறியவராய் இருப்போர்க்கு அறிவை வழங்குவதும் ஈகையே ஆகும்! ஆகவே,

    ”ஆங்கோர் எழைக்கு எழுத்தறிவித்தல்” என்று மகாகவி பாரதியார் பாடிய கல்வியை வழங்குவதும் ஈகையே ஆகும் . ”வறியார்க்கு ஒன்றுஈவதே ஈகை ” என்ற தொடரில் உள்ள ஒன்று என்ற சொல் விரிந்த பொருளுடையதாகும்! எழுத்தறிவில்லார்க்குக் கல்வி யும், பசித்தோர்க்கு உணவும், ஊக்கம் குறைந்தோருக்கு உரிய எழுச்சிதரும் அறிவுரையும், வழங்க வேண்டும் என்பதையே பாரதியார் பாடினார்.

    இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
               இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
               ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
    பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
               பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
               ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.

    என்று கல்விக் கொடை பற்றிப் பாடிய பாரதியார் ,

    நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்!
               நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
    அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
               ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர் !

    என்ற பாடற்பகுதியில் பொற்குவை, காசுகள், வாய்ச்சொல், உடலுழைப்பு ஆகிய வற்றைக் கொடைப் பட்டியலில் சேர்க்கிறார்.

    ஆகவே ஈகை பற்றிய திருக்குறள் காட்டும் ‘ஓன்று’ என்ற பொருள் பொதிந்த சொல்லின் பொருளின் விரிவு புலனாகின்றது!

    அந்த ”ஒன்றையும்” கொடுக்கும்போது, ஈகை புரிபவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த அதிகாரத்தின் மூன்றாவது குறட் பாவில் கூறுகிறார்!

    இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையார் கண்ணே உள! (223)

    என்பது அப்பாடல்! இந்தப் பாடலுக்குப் பரிமேலழகர் , இலன் என்னும் எவ்வம் உரையாயாமையும் , ஈதலும் ஆகிய இரண்டும் நற்குடிப் பிறந்தாரின் நற்பண்புகள் ஆகும் என்கிறார். உள என்னும் பன்மைச் சொல் இவை இரண்டையும் குறிக்கிறது என்பார் அவர். இவ்வாறு அவர் உரை கூறக் காரணம் மற்றோர் உரைகாரர், வறியவனான ஒருவன் தன்னிடம் பொருள் வேண்டி வந்த ஒருவனிடம் யான் இல்லாதவன் ஆயினேன் என்று தன் வறுமை நிலையைச் சொல்லாமல், எவ்வாறாயினும் ஈதல் வேண்டும் என்று ஒரே செயலாகக் கூறிய உரையே! அதனை இந்தப் பன்மை விகுதியைக் காட்டி மறுத்தார்!

    இவ்வுரையின் சிறப்பு பரிமேலழகர் காட்டிய சிறந்த செயல்களுக்கும் மேலே பல பொருள்களைத் தருகிறது. சிவஞானமுனிவர் தம் நன்னூல் உரையில் , ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை” என்ற தொடருக்கு,
    (1) தம்மிடம் பொருள் பெற்ற ஒருவன் மீண்டும் பிறர்பால் சென்று தன்னிடம் ஏதுமில்லை என்று கூறாத வகையில் பெரும் பொருள் ஈதல் வேண்டும் என்றும்
    (2) தான் பெரும்பொருளை ஈந்தபின் ஈந்தவன் பொருளிழப்பால் வறுமை அடைந்து பிறர்பால் ”இலன் ஆயினேன் என்று தன் துன்பத்தைக் கூறாத வண்ணம் அளவறிந்து கொடுத்தல் என்றும் இரண்டு பொருள் கூறினார்!

    இனி, இக்குறளுக்கு மேலும் பல பொருள்கள் விரிவதை இங்கே காணலாம்!

    (1) தன்னை நாடி வந்தவனிடம், தன்னிடத்துள் உள்ள வறுமையை ”இலன்” என்று கூறி வந்தவனிடம் தன் துன்பத்தை கூறாமல் ஈதல் என்றும்,

    (2) வந்தவன் தன்னிடம் ஏதுமில்லை என்று கூறும் முன்னரே பசித்தோன் முகம் பார்த்துக் குறிப்புணர்ந்து தானே முன்வந்து ஈதல் என்றும்,

    (3) வந்தவனிடம் உள்ள வறுமையைச் சுட்டிக்காட்டி ‘இவன் ஏதுமே இல்லாதவன்” என்று இகழ்ந்து கூறாமல் கொடுத்தல் என்றும் ,

    (4) தன்னிடம் பொருள் பெற்றவன், தன்னைப் போலவே வறியவராக வருவோரிடத்தில் அவர்கள் கேட்கும் முன்னதாகத் தானே ஈயும் வண்ணம் பெரும் பொருள் ஈந்து தனது ஈகைப்பண்பைப் பெற்றவனிடத்திலும் உருவாக் குதல் என்றும் பொருள் தருகிறது

    தன்னிடம் கொடை பெற்றவன், மீண்டும் கொடுத்தவனின் கொடைப் பண்பை உடனே பெற்ற நிகழ்ச்சி வில்லிபாரதத்தில் உள்ளது. வறியவனாக வேடம் புனைந்து கர்ணனை நோக்கி வந்த கண்ணபிரான், கர்ணனின் செய் புண்ணி யத்தைப் பெற்ற பின், தாமே கர்ணனை நோக்கி” உனக்கு என்ன வரம் வேண்டும்? ” என்று கேட்டாரே! அதுதான் கொடைப் பண்பு பரவும் முறை!

    முன்னாளில் யாருமற்ற அனாதையாக இருந்த கர்ணனே தனக்கு அங்க தேசத்தை வழங்கிய துரியோதனனிடம் கொடைப்பண்பை மேலும் வளர்த்துக் கொண்டான் என்று பாரதக்கதை கூறுகிறது.

    இக்குறட் பாவுக்குப் பன்னிரண்டு பொருள்கள் கூறலாம். வாசகர்கள் முயற்சி செய்க ! பின்னர் நானே ஆதாரங்களுடன் விளக்குவேன்!

    Share
  • என்று மடியும் அமெரிக்காவின் இனதுவேஷம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை.

     

    என்று மடியும் அமெரிக்காவின் இனதுவேஷம்?

    துப்பாக்கி மூலம் நடக்கும் வன்முறைச் சம்பவங்களும் கருப்பு இன அமெரிக்கர்களை வெள்ளை இனக் காவல் அதிகாரிகள் தேவையில்லாமல் சுட்டுக் கொல்வதும் அதிகமாக இப்போது அமெரிக்காவில் நடந்து வருகின்றன. ஜூன் மாதம் 15-ஆம் தேதியன்று இன்னொரு கொடிய சம்பவம் இங்கு நடந்திருக்கிறது. தென் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த சார்ல்ஸ்டன் என்னும் ஊரில் கருப்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தேவாலயத்தில் அம்மாநில செனட்டரும் அந்த தேவாலயத்தின் போதகருமான கெலெமென்டா பிங்க்னி (Clementa Pinckney) உரையாற்றிக்கொண்டிருக்கும்போது இருபத்தி ஒன்று வயதே ஆன ஒரு வெள்ளை இன வெறியன் தேவாலயத்திற்குள் புகுந்து ஒரு மணி நேரம் அவருடைய உரையைக் கேட்டுவிட்டுத் திடீரென்று துப்பாக்கியை எடுத்து அவரைச் சேர்த்து ஒன்பது பேரைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றிருக்கிறான். அந்த அராஜகச் செயலைச் செய்துகொண்டிருக்கும்போதே ‘கருப்பர்களாகிய நீங்கள் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து வருகிறீர்கள். நாட்டை (அமெரிக்காவை) எங்களிடமிருந்து அபகரிக்கப் பார்க்கிறீர்கள்’ என்று கூவியிருக்கிறான். அவன் தன்னுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் ஆப்பிரிக்காவின் ரொடீஷியாவிலும் (இன்றைய ஜிம்பாவ்வே) தென் ஆப்பிரிக்காவிலும் வெள்ளையர் ஆட்சி நடந்த சமயத்தில் இருந்த கொடிகளைத் தன் சட்டையில் அணிந்துகொண்டு இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறான். வெள்ளை இனத்தவர்களின் ஆதிக்கம் இவனுடைய தாரகமந்திரம்.

    சார்ல்ஸ்டன் ஊரில் உள்ள கிறித்துவ தேவாலயம் மிகவும் பழமை வய்ந்தது; அமெரிக்க சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் அமெரிக்காவில் வெள்ளையர்களால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆடுமாடுகளைப் போலவும் வெள்ளையர்களின் உடமைகள் போலவும் நடத்தப்பட்டனர். ஆப்பிரிக்கர்களுடைய மதங்களிலிருந்து அவர்களை முழுவதுமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய பிறகு இறைவனின் சன்னிதானமான தேவாலயங்களில் அவர்களுக்கு சம அந்தஸ்து கொடுக்காமல் அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கினார்கள். அடிமைகள் தங்களுக்கென்று தனித் தேவாலயங்கள் கட்டிக்கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவர்களுக்கு விடுதலை கொடுப்பதா வேண்டாமா என்ற சர்ச்சையில் 1861-இல் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.

    இதற்கு முன்பே ஆப்பிரிக்க அடிமைகளின் விடுதலைக்காக 1822-லேயே புரட்சி ஏற்படுத்தச் சிலர் முனைந்தனர். இவர்கள் இந்தத் தேவாலயத்தில்தான் ரகசியமாகக் கூடுவார்களாம். இவர்களின் முயற்சியை அறிந்துகொண்ட அரசு அதிகாரிகள் இவர்களில் 313 பேரைக் கைதுசெய்து 35 பேரைத் தூக்கிலிட்டனர். வெள்ளை இன வெறியர்கள் இந்தத் தேவாலயத்திற்குத் தீவைத்து இதை அழித்தனர். 1863-இல் ஜனாதிபதி லிங்கன் எல்லா அடிமைகளுக்கும் விடுதலை அளித்து அறிக்கை வெளியிட்ட பிறகு எல்லாக் கருப்பர்களுக்கும் விடுதலை அளிக்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து வெள்ளையர்களின் கொடுமைக்கு ஆளாகினர். கருப்பர்கள் தாங்கள் வழிபடுவதற்கு ஏதுவாக தனித் தேவாலயங்கள் கட்டிக்கொண்டனர். 1891-இல் சார்ல்ஸ்டன் தேவாலயம் மறுபடி புதுப்பித்துக் கட்டப்பட்டது. கருப்பர்களின் விடுதலை முயற்சிகளுக்குத் தலைவராக இருந்தவருக்கு இந்தத் தேவாலயத்தில் ஒரு நினைவாலயம் இருக்கிறது. இது போன்ற பல தேவாலயங்கள் அமெரிக்காவின் தெற்குப் பகுதி முழுவதும் கட்டப்படுவதற்கு இதுதான் முன்னோடியாகத் திகழ்ந்தது. இப்படிப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேவாலயத்தை இந்த வெள்ளை இன வெறியன் நிறையக் கருப்பர்களைக் கொல்வதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.

    சார்ல்ஸ்டனில் வெள்ளையர்கள், யூதர்கள், கருப்பர்கள் என்று பல இனத்தவர் வாழ்ந்தாலும் கருப்பர்கள்தான் அதிகம். இந்த தேவாலயத்திற்கு வருபவர்களில் பெரும்பாலானோர் கருப்பர்கள். பல அப்பாவி நிராயுதபாணி கருப்பர்களைச் சுட்டுக் கொன்ற பல வெள்ளைக் காவல் அதிகாரிகள் போதிய ஆதாரங்கள் இல்லாதால் தண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொண்டனர். இவர்களைத் தண்டிக்கத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்க அவர்கள் தங்கள் உடம்பில் காமராக்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் தென் கரோலினா மாநிலத்தில் இயற்றப்படக் காரணமாக இருந்த மாநில செனட்டர் பிங்க்னி இங்குதான் மதபோதகருமாக இருந்தார். இந்தத் தேவாலயத்தைத் தாக்குவதன் மூலம் கருப்பர்களின் மேல் தனக்கிருந்த வெறுப்பை கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ரௌஃப் காட்டிக்கொண்டான்.

    i am with stupidஇந்தச் சம்பவம் நடந்துவுடனேயே தென் கரோலினா மாநில ஆளுநர் நிக்கி ஹேலி (இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) மாநில சட்டமன்ற வளாகத்திற்குள் இருந்த கான்பிடரேட் கொடியை அகற்றிவிட வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். கான்பிடரேட் கொடி பற்றி ஒரு சிறிய விளக்கம். அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கக் கூடாது என்று வாதாடிய தென் மாநிலங்கள், கான்பிடரேட் என்ற ஒரு நாடாகத் தங்களை அமைத்துக்கொண்டு, அடிமைகளுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று விரும்பிய வட மாநிலங்கள் சேர்ந்து அமைத்துக்கொண்ட யூனியனைத் தாக்கின. கான்பிடரேட் சார்ல்ஸ்டனில்தான் முதன் முதலில் பீரங்கியை வெடித்துப் போரைத் துவக்கியது. பதிமூன்று மாநிலங்கள் அடங்கிய அமெரிக்காவிலிருந்து பிரிந்து தனி நாடாக இயங்கி தொடர்ந்து ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்று திட்டமிட்ட பிரிவினைவாதிகள் இவர்கள். கான்பிடரேட் கொடி இன்னும் சில தென்மாநிலத் தலைநகரங்களில் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்று மற்ற சில கான்பிடரேட் சின்னங்களும் இன்னும் இம்மாநிலங்களில் இருப்பதால் கருப்பர்கள் வெள்ளையர்களுக்கு அடிமை என்னும் எண்ணத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதாகவும் அவற்றை அகற்றுவதன் மூலம் இப்போது ஒன்பது கருப்பர்களைக் கொலைசெய்த ரௌஃப் போன்றவர்களின் மனதிலிருந்து அந்த எண்ணத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல வெள்ளையர்கள் உட்பட பலரிடம் தோன்றியிருக்கிறது. இந்தக் கொடிய சம்பவத்திற்குப் பிறகு எல்லா இனத்தவர்களும் இந்தத் தேவாலயத்தில் கூடி தாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதாக உலகுக்குக் காட்டியிருக்கிறார்கள்.

    கருப்பர்களுக்கு அடிமைத்தளையிலிருந்து விடுதலை கிடைத்து 150 ஆண்டுகளும் அவர்களுக்கு குடிமையுரிமைகள் கிடைத்து ஐம்பது ஆண்டுகளும் ஆகியிருந்தும் இன்னும் அவர்களைத் தங்களுக்குச் சமமாக நினைக்காதவர்கள் வெள்ளையர்களிடையே இருக்கிறார்கள். இவர்கள் மனதில் தாங்கள் உயர்ந்த இனத்தவர்கள் என்ற எண்ணம் நன்றாகவே ஊறிப்போயிருக்கிறது. இப்படிப்பட்டவர்களில் ஒருவன்தான் இப்போது சார்ல்ஸ்டனில் ஒன்பது பேரைக் கொன்ற வெள்ளை இன வெறியன். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய பண்ணைக்காரன் கருப்பர்கள் அடிமைகளாக இருந்தபோது எவ்வளவோ சந்தோஷமாக இருந்தார்கள் என்று திருவாய் மலர்ந்திருந்தான். எத்தனை தூரம் கருப்பர்களை வெறுத்தால் இப்படிக் கூறியிருப்பான்?

    2001, செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதிக்குப் பிறகு அல்கொய்தாவின் செல்வாக்குக்கு உட்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அமெரிக்கர்கள் வெள்ளை இன வெறியர்களாலும் அமெரிக்க அரசை எதிர்க்கும் தீவிரவாதிகளாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

    இந்தியாவில் காலம் காலமாக உயர் ஜாதிகளால் கொடுமைப்படுத்தப்பட்ட தலித்துகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் கண்டு குமுறும் உயர்ஜாதி மக்களைப்போல் அமெரிக்காவிலும், அவர்களின் இஷ்டத்திற்கு மாறாக அவர்களின் இருப்பிடங்களிலிருந்து வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக வாழ்ந்த கருப்பர்களின் மேல் இன்னும் வன்மம் பாராட்டும் வெள்ளை இன வெறியர்களுக்கு கருப்பர்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த கான்பிடரேட் நாட்டுக் கொடியை அகற்றுவதில் விருப்பம் இல்லை. ஏதோ ஒரு தனிப்பட்டவன் செய்த கொலைக்கும் கான்பிடரேட் கொடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இவர்கள் வாதிடுகிறார்கள். அது மட்டுமல்ல, கொடியை அகற்றுவதைத் தொடர்ந்து கான்பிடரேட்டின் மற்ற சில அடையாளங்களையும் நீக்குவதற்கு இது வழிகோலும் என்றும் கான்பிடரேட் ராணுவத்தில் பணிபுரிந்த தங்கள் மூதாதையர்களின் தியாகங்கள் எல்லாம் மறக்கப்படுவதோடு அவர்கள் எல்லோரும் கொலை வெறியர்கள் என்று சித்தரிக்கப்படுவதை எப்படித் தங்களால் ஒப்புக்கொள்ள முடியும் என்றும் கேட்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை கான்பிடரேட் நாட்டை உருவாக்கப் பாடுபட்டவர்கள் அமெரிக்கர்களின் மனதில் எப்போதும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதே.

    இன்னொரு வெள்ளையர் கான்பிடரேட் நினைவுகளையே மக்களிடமிருந்து அகற்றுவதன் மூலம் தங்கள் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் கம்யூனிஸ கொள்கைகள் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    கருப்பர்களின் மேல் இத்தனை வெறுப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அப்படியொன்றும் பெரியதல்ல என்றும் நினைக்கும் வெள்ளையர்களிடையே இனி கான்பிடரேட் கொடியைத் தங்கள் கடையில் விற்கப் போவதில்லை என்று சில பெரிய கார்ப்போரேட் நிறுவனங்கள் முடிவுசெய்திருப்பதும் தென் கரோலினாவோடு டென்னஸி, வட கரோலினா, மிஸிஸிபி, அலபாமா போன்ற மற்ற தென் மாநிலங்களும் கான்பிடரேட்டோடு தங்களுக்கிருக்கும் எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ளப் போவதாக அறிவித்திருப்பதும் – தங்கள் மாநிலக் கொடிகளிலிருந்து கான்பிடரேட் கொடியின் அடையாளத்தை அகற்றுவது, கான்பிடரேட் கொடிகள் விற்பனையை நிறுத்துவது போன்றவை – பெரிய ஆறுதலைத் தருகிறது. பத்து வருஷங்களுக்கு முன் கான்பிடரேட் கொடியைத் தன் கையில் பச்சை குத்திக்கொண்ட ஒருவர் அதைத் தன் கையிலிருந்து அகற்றிவிட முடிவுசெய்து ஒரு பியூட்டி பார்லருக்கு வந்திருக்கிறார் அங்கிருந்த ஊழியரிடம் சார்ல்ஸ்டன் தேவாலயத்தில் நடந்த கொடிய சம்பவத்திற்குப் பிறகு ஒரு கருப்பினப் பெண்ணின் முகத்தில் இருந்த சோகத்தைப் பார்த்து தான் அதை அகற்றிவிட முடிவுசெய்ததாகக் கூறியிருக்கிறார். இவரை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற வெள்ளையர்களும் மனம் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    Share
  • முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்

    முத்துச் சிப்பி மெல்ல மெல்ல‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்றான் வள்ளுவன். மண்ணில் பிறந்த உயிர்கள் யாவும் ஒன்றையொன்று சார்ந்துவாழும் உன்னதம் ஜீவனில் தொடங்கியது. மானிடர்களே இந்த சொந்தமும் பந்தமும் மகத்துவமானது. ஈருயிர் இணைந்து ஓருயிர் தோற்றுவிக்க ஜனனக் கணக்கில் பூமிக்கு ஒரு வரவு! ஈன்றவள் நெஞ்சம் பெரிதுவக்க ‘தாய்’ என்று அவளும் மனதில் ஆர்ப்பரிக்க அந்த ஆனந்த வைபவத்தை அணுவணுவாய் ரசிப்பதிலே பெண்மை பெறும் சுகம் கோடியென்பேன்! பிஞ்சு மழலை முகம் பார்த்து அவள் சொல்லரும்பும் வேளையிலே என்ன என்ன வார்த்தை வரும்? கண்ணே கனியே முத்தே அமுதே என்று அல்லும் பகலும் தன் பிள்ளையே உலகம் என்றன்றோ மாறிவிடுவாள்?

    தன்னுறக்கம் மறந்து தன்னுயிராய் நினைந்து அன்னையவள் பாடும் பாடல் பிள்ளைக்கனி அமுதே! மழலையின் சின்னச் சின்ன சிணுங்கல்களும் சிங்கார அசைவுகளும் தாய் அவளுக்கு மட்டுமே தனித்துவமாய் புரியும்! அந்த இன்பபுரி நோக்கி இதயம் ஓடிவர, வண்ணக் குழந்தையது வளர்பிறைபோல் நிதம் வளர, தவழ்வதும் தாவி வருவதும் நின்று நடப்பதும் தாயவள் காணும் திருவிழாக்களே!

    ராமு திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் வரிகளை வழங்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை முழங்க, இன்னிசைப் பூங்குயில் பி.சுசீலாவின் குரலில் இழைந்து வரும் பாட்டு!

    திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில் வல்லமை பெற்ற கவிஞர்கள் பலரை நாம் கண்டிருக்கிறோம். கண்டு கொண்டிருக்கிறோம்! என்றாலும் கவியரசர் கண்ணதாசன் அவர்களது முத்திரை தனித்துவம் கதையை உள்வாங்கி அந்தப் பாத்திரங்களைப் பிரதி பிம்பம் எடுத்துக் காட்டும் கவிஞரை எவர்தான் இன்று வரை விஞ்சியிருக்கிறார் சொல்லுங்கள்?

    தாயிருந்து பள்ளி கொண்ட மஞ்சம் – அதில்
    தானிருக்கத் துள்ளும் எந்தன் நெஞ்சம்

    கதையின் போக்கில் பிள்ளையின் அன்னை ஒரு கோர விபத்தில் மரணமடைகிறாள். அதைப் பார்த்த சிறுவன் அதிர்ச்சியில் பேசும் தன்மை இழக்கிறான். பட்டாளத்தில் இருந்து திரும்பும் தந்தை குழந்தையின் எதிர்கால வாழ்வுக்காக, அவன் மீண்டும் பேசும் சக்தி பெற வேண்டும் என்கிற லட்சியத்துடன் வாழ்கிறான் என்று நகர்கிறது கதை. இவர்களின் வாழ்விலே இன்னொருத்தி நுழைகிறாள். கனிந்த மனம் காதல் மனமாகிறது! தாயென்று ஆகும் முன்னரே அப் பிள்ளையின் தாயாகவே மாறிவிடுகிறாள் சொற்களில் அந்தக் கதையின் சூத்திரங்களைப் பொருத்தி அற்புதமாகப் பாடல் யாத்துத் தந்துவிடுகிறார் பாருங்கள்.

    பெற்றவள் உள்ளம் போல் பெரிதும் உவக்க, மற்றவள் ஒருத்தி அப்பதவிக்கு வர மன்றாடுகிறாள். தாயாய் தானும் மாறும் முன்னே தாய்மையின் தரிசனம் காட்டுகின்றாள். தத்தி நடக்கும் முத்துச் செல்வத்தை தங்கத் தேரில் உலவ வைக்கிறாள்! பிள்ளைத் தமிழின் பேரின்பத்தை சொல்லிச் சொல்லி இன்பம் துய்க்கிறாள்!

    பெண்ணின் மனது என்ன சொல்லும் என்பதை உணர்ந்த கண்ணதாசன் என்று சொல்லலாமா? இல்லை … இல்லை… உணர்த்திய கண்ணதாசன் வார்த்தைச் சரங்களைத் தொடுக்கிறார்!

    ரசிக்கத் தெரிந்த எந்த மனமும் இந்தப் பாடலைக் கேட்டு மயங்கத் தவறியதில்லை!

    திரைப்படம்: ராமு
    இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
    இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
    பாடியவர்: பி.சுசீலா
    நடிப்பு: கே.ஆர்.விஜயா, ஜெமினிகணேசன், மாஸ்டர் ராஜ்குமார்

    முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்
    முத்தம் ஒன்று சத்தம் இன்றிப் பிறந்து வரும்
    அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
    தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)

    தாயிருந்து பள்ளி கொண்ட மஞ்சம் – அதில்
    தானிருக்கத் துள்ளும் எந்தன் நெஞ்சம்
    சென்ற உலகம் இன்று திரும்பும்
    தேடி எடுத்தால் கோடி மலரும்!
    அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
    தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)

    மூவருக்கும் சின்னச் சின்ன வீடு – அதில்
    மூன்றுதமிழ் வந்ததென்று பாடு
    அன்பு மொழியும் இன்ப இசையும்
    தங்க மழையும் பொங்கி வழியும்
    அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
    தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)

    காணொளி: https://youtu.be/vb07dtn23mg

    https://youtu.be/vb07dtn23mg

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”சங்கிசக்ரி நந்தகி சாரங்கி தெண்டுட்றோன்,(கதாயுதம்)
    கங்கி பசுவுடன் கைகோர்த்து, -இங்கிபிங்கி,
    பாங்கி, விளையாட்டு: பாரதத்தில் பார்த்தனுக்கு,
    சாங்கியம் சொன்ன சிசு”….கிரேசி மோகன்….

    கங்கி -கண்ணனின் செல்லப் பசு….இதன் வாலால்தான்
    குழந்தை கண்ணனுக்கு தாயார் யசோதை திருஷ்டி
    சுற்றிப் போடுவோளாம்….”டோங்ரே மஹராஜ்” பாகவத
    உபன்யாஸம்….

    Share
  • படக்கவிதைப் போட்டி (19)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11124265_850423111678556_1461065741_n
    11147056_354093181458278_64856514929914042_nதிருமதி. கீதா மதிவாணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.07.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    தமிழறிஞரும் வசீகரமான பேச்சாளரும் செழுமையான மரபுக் கவிஞருமான கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள், வல்லமையில் இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்கு நடுவராகப் பொறுப்பேற்க இசைந்துள்ளார்.

    ags

    இவர், பன்னூறு அரங்குகளில் கவிதை முழங்கியவர். திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்லாண்டுகள், தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்’ என்ற தலைப்பில், ‘தினமணி’ நாளிதழின் இலவச இணைப்பான ‘தினமணி கதிர்’ வார இதழில் கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதிப் பலரையும் கவர்ந்தவர். மக்கள் தொலைக்காட்சியில் ‘தமிழ் பேசு தங்கக் காசு’ நிகழ்ச்சிக்கு நடுவர் பொறுப்பு ஏற்றவர். ஞானச்செல்வன் கவிதைகள், அர்த்தமுள்ள அரங்குகள், நீங்களும் கவிஞராகலாம், சொல்லறிவோம், தமிழில் மரியாதைச் சொற்கள், பாரதி வாழ்கிறார் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். ‘நல்ல தமிழ் அறிவோம்’ என்ற தலைப்பில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய வகுப்பறையில் காணொலிக் காட்சி மூலமாகப் பாடங்களை நடத்தி வருகிறார்.

    சிறப்புகள் மிகுந்த கவிக்கோ அவர்களை வல்லமைக்கு வரவேற்கிறோம். வழக்கம் போல், உற்சாகத்துடன் போட்டியில் பங்கேற்க, அன்பர்களை அழைக்கிறோம்.

    கவிக்கோ ஞானச்செல்வன் மின்னஞ்சல் முகவரி – kavikkognanachelvan@gmail.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy1

    ”முயலாமை ஓட்டத்தில் முந்தியது ஆமை;
    கயல்ஆவின் ஓட்டத்தில் கன்று, -புயலாக,
    கண்ணன்TASTE உண்ணவலக், கால்நோக்கி ஓடியது,
    WINNER-POST முன்கண்ணன் WAIT(ING)”….கிரேசி மோகன்….

    கயல் -மச்சவதாரக் கண்ணன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 29, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு “கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம்” அவர்கள் 

    dorai sundaram

     

    தனது பணிநிறைவுக்குப் பின்னரும், ஆர்வத்துடன் தனது பொழுதை மக்களுக்கு உதவும் பொருட்டோ அல்லது தமிழ்க் கலாச்சாரத்தை உலகறியச் செய்யும் வகையிலோ தன்னார்வப்பணி செய்யும் தொண்டர்கள் பலர் பெருகி வருவது தமிழகம் பெற்ற பேறு. வல்லமையின் வல்லமையாளர் வரிசையில் அவர்களில் பலரை சிறப்பித்துப் பாராட்டி மகிழ்வதில் வல்லமை இதழும் பெருமை அடைந்து வருகிறது. அந்த வரிசையில் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர் கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. து.சுந்தரம் அவர்கள். இவர் அவினாசி பள்ளியிலும், கோவை அரசு கலைக்கல்லூரியிலும் படித்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றியவர். நடுவணரசுப் பணிநிறைவுக்குப் பின்னர் தொல்லியல் ஆர்வமும் கல்வெட்டறிவும் அமையப்பெற்றதால் கல்வெட்டுகளைத் தேடிச் சென்று, அவற்றை ஆராய்ந்து, தகவலைப் படித்து, கல்வெட்டுகளைப் படமெடுத்து, அவற்றைப் பற்றி தானறிந்த விவரங்களை “கொங்கு கல்வெட்டு ஆய்வு” என்ற தனது வலைத்தளத்தில் தொகுத்து பதிவு செய்து வருகிறார். அத்துடன் “கல்வெட்டு எழுத்துகள் கற்போம்” என்ற தொடரின் வழியாக கல்வெட்டுகளை எப்படிப் படிப்பது என்று கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சியை வழங்கும் பாடங்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழக வரலாற்றில், கல்வெட்டுகளில் ஆர்வம் உள்ள எவரும் அவரது பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதில் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

    இவரது இரு பதிவுகளில் இருந்து கருத்தைக் கவர்ந்த தகவல்களும் படங்களும் தொகுக்கப்பட்டு வல்லமை வாசகர்களுக்காக இங்கு வழங்கப்படுகிறது. விவரமான கட்டுரைகளை அவரது “கொங்கு கல்வெட்டு ஆய்வு” வலைத்தளத்தில் படிக்கலாம். தனது கல்வெட்டு பயணத்தை விவரித்து, கல்வெட்டு பற்றி சேகரித்த செய்திகளை படங்களுடனும் விளக்கங்களுடனும் இவரது கட்டுரையின் முதல்பகுதியில் அறியத் தரும் திரு. து.சுந்தரம் அவர்கள், கட்டுரையின் பிற்பகுதியை கல்வெட்டுப் பாடத்திற்காக ஒதுக்கி, அதில் கல்வெட்டின் வரிகளைக் கொடுத்து அவற்றைப் படிக்கும் முறையைக் குறிப்பிட்டு விளக்கமும் தருகிறார். இனி, அவர் கட்டுரையிலிருந்து …

    இராசகேசரிப்பெருவழி (The Rajakesari Highway) 

    இராசகேசரிப்பெருவழி, கல்வெட்டு:

    … தமிழகத்தின் மிகப்பழமையான பெருவழி என்று அறியப்படும் “இராசகேசரிப்பெருவழி” கொங்கு நாட்டில் அமைந்திருந்தது கொங்கு நாட்டின் பழமைக்கும் பெருமைக்கும் சான்றாகும். இராசகேசரிப்பெருவழி இந்திய நாட்டிலேயே மிகப்பழமையான சாலை என்று தொல்லியலார் கருதுகின்றனர்…

    … இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு எதிர்பாராது நிகழ்ந்த ஒன்று. 1976 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்துக் கல்வெட்டினைப் படித்து வெளிக்கொணர்ந்தவர் முனைவர் பூங்குன்றன் ஆவார்…

    rajakesari peruvazhi stone inscription-file photo

    கல்வெட்டுப்பாடம்:
    … “இக்கல்வெட்டில் மூன்று முறை நிழல் என்ற சொல் பயின்றுவருகிறது. இங்கு பயன்படுத்தப்பெறும் நிழல் என்ற சொல்லின் பொருளை விளங்கிக்கொள்ள கேரள மாநிலச் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றில் கிடைக்கும் சான்றுகளை அணுகவேண்டும். அந்த ஆவணங்களில் நிழல் என்ற சொல் நிழற்படை (Shadow Army) என்ற பொருளில் கூறப்பெறுகின்றது. அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழிக் கல்வெட்டிலும் “நிழல்” என்ற சொல் (Shadow Army) என்ற பொருளில் வழங்கப்பெற்றிருக்கவேண்டும். நிழற்படை அரசனைமட்டும் பாதுகாக்கவில்லை. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர் என்பதாகப் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்…

    தமிழக அரசர்கள் தங்கள் ஆட்சிக்கு உதவும் வகையில் நிழற்படை என்ற ஒரு படையை வைத்திருந்தார்கள் என்பதே பலருக்கு புதிய செய்தியாக இருக்கும். அடுத்து,

    பெள்ளாதி – நடுகல் சிற்பம் 

    புலிகுத்திக்கல்:

    … ஒரு தோட்டத்தில் அமைந்துள்ள நடுகல் சிற்பத்தைக்காணச்சென்றோம். இந்த நடுகல் சிற்பம் புலிகுத்திக்கல் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டுடன் கூடிய இந்நடுகல் பற்றி மேற்சுட்டிய தொல்லியல் துறைக்கல்வெட்டு நூலில் (தொடர் எண்: 936/2003) குறிப்பிடப்பெறுகிறது. மறவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கும், முல்லை நிலப்பகுதியில் ஆனிரை கவர்தலிலும், மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கும் நடுகல் நட்டு மக்கள் வணங்கினர். (ஆனிரையில் ஆடுகளும் அடங்கும் எனலாம்) கோவைப்பகுதி பழங்காலத்தே பெருமளவில் முல்லை நிலப்பகுதியாக விளங்கியமையால் பட்டிகளில் ஆனிரை காத்த வீரர்கள் ஆடுமாடுகளைத் தின்னவரும் புலிகளுடன் போரிட்டு மடிவதுண்டு. (புலியைக்கொன்ற பின்னரே வீரன் மடிகிறான்) அத்தகைய வீரர்களுக்கு நடுகல் எடுத்து வணங்கினர். கோவைப்பகுதியில் இவ்வகை நடுகற்கள் புலிகுத்திக்கல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறன. இக்கற்களில் வீரன் புலியைக் குத்திக்கொல்லும் காட்சி புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்நடுகற்கள் பெரும்பாலும் எழுத்துகள் பொறிக்கப்படாமல் இருக்கும். அரிதாகச் சில நடுகற்கள் எழுத்துப்பொறிப்பைக்கொண்டிருக்கும். நாங்கள் பார்த்தது எழுத்துடைய நடுகல் ….

                        kalvettukalvettu2

    கல்வெட்டுப்பாடம்:
    … நல்ல வெண்மையான நிறத்துடன் ஏறத்தாழ நான்கு அல்லது நாலரை அடி உயரத்தில் உள்ள இக்கல்லில் வீரன் புலியுடன் போரிட்டுக் கொல்லும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் கீழே ஆறுவரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனின் தலையில் தலைப்பாகை; காதுகளில் காதணிகள்; கழுத்திலும் அணிகள். கைகளில் தோள்வளை காணப்படுகிறது. வீரனின் இடைப்பகுதியில் இடைக்கச்சு. கால்களில் கழல்கள். வீரன் தன் வலக்கையால் நீண்ட வாளைப் புலியின் நடுமார்பில் பாய்ச்சிய நிலையில் வாள் புலியின் உடலைக் குத்தி உடலின் மறுபுறம் வெளிவந்த தோற்றம். இடக்கை புலியின் முகத்தருகே நெருங்கிய நிலையில் கைவிரல்கள் தோன்றாதவாறு காணப்படுவதால் இடக்கையில் இருந்த குறுவாள் புலியின் வாய்ப்பகுதியில் நுழைந்துவிட்டது புலனாகிறது. இடைக்கச்சில் குறுவாள் காணப்படாதது இதை உறுதிப்படுத்துகிறது. (வீரர்களின் சிற்பங்களில் இடையில் குறுவாள் தப்பாது இடம் பெறுகிறது.) புலி நின்ற நிலையில் ஒரு காலை வீரனின் தொடைப்பகுதியில் தாக்குகிறது. புலியின் நிமிர்ந்து நிற்கும் வால் புலியின் சினவெறியைக்காட்டும் எனக் கல்வெட்டு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் …

    மேலும்,
    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் 
    மதுரை அரண்மனை
    சுமை தாங்கி
    போன்ற பதிவுகளும் சுவையான வரலாற்றுச் செய்திகள் பல அடங்கியவை.

    தொல்லியல்துறை சொற்பொழிவுகளுக்கு சென்று அங்கு அத்துறை அறிஞர்களின் உரையில் கிடைக்கும் தகவல்களையும் திரு. சுந்தரம் தனது வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். ஆர்வத்துடன் தான் திரட்டும் தொல்லியல் செய்திகளை அனைவருக்கும் உதவும் வகையில் பதிவு செய்து, கல்வெட்டுகளைப் படிக்க பயிற்சியும் அளித்துவரும் திரு. சுந்தரம் தொடர்ந்து இப்பணியைச்செய்து தமிழக வரலாற்றைப் பற்றிய விரிவான பார்வையை பலரும் பெற உதவுமாறு தொடரவேண்டும் என்று பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி கொள்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    தொடர்பு கொள்ள:
    திரு. து.சுந்தரம்,
    கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
    21, கிரீன்வியூ டெலிகாம் காலனி,
    விளாங்குறிச்சி சாலை,
    பீளமேடு, கோவை-641 004.

    அலை பேசி: 9444939156.
    மின்னஞ்சல்: doraisundaram18@gmail.com
    வலைத்தளம்: கொங்கு கல்வெட்டு ஆய்வு
    கூகுள் + : https://plus.google.com/116958920038237666409/

     

    படங்களும் தகவல்களும் வழங்கிய கொங்கு கல்வெட்டு ஆய்வு  இணையதளத்திற்கு நன்றி.

    Share