பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11124265_850423111678556_1461065741_n
11147056_354093181458278_64856514929914042_nதிருமதி. கீதா மதிவாணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.07.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

தமிழறிஞரும் வசீகரமான பேச்சாளரும் செழுமையான மரபுக் கவிஞருமான கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள், வல்லமையில் இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்கு நடுவராகப் பொறுப்பேற்க இசைந்துள்ளார்.

ags

இவர், பன்னூறு அரங்குகளில் கவிதை முழங்கியவர். திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்லாண்டுகள், தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்’ என்ற தலைப்பில், ‘தினமணி’ நாளிதழின் இலவச இணைப்பான ‘தினமணி கதிர்’ வார இதழில் கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதிப் பலரையும் கவர்ந்தவர். மக்கள் தொலைக்காட்சியில் ‘தமிழ் பேசு தங்கக் காசு’ நிகழ்ச்சிக்கு நடுவர் பொறுப்பு ஏற்றவர். ஞானச்செல்வன் கவிதைகள், அர்த்தமுள்ள அரங்குகள், நீங்களும் கவிஞராகலாம், சொல்லறிவோம், தமிழில் மரியாதைச் சொற்கள், பாரதி வாழ்கிறார் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். ‘நல்ல தமிழ் அறிவோம்’ என்ற தலைப்பில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய வகுப்பறையில் காணொலிக் காட்சி மூலமாகப் பாடங்களை நடத்தி வருகிறார்.

சிறப்புகள் மிகுந்த கவிக்கோ அவர்களை வல்லமைக்கு வரவேற்கிறோம். வழக்கம் போல், உற்சாகத்துடன் போட்டியில் பங்கேற்க, அன்பர்களை அழைக்கிறோம்.

கவிக்கோ ஞானச்செல்வன் மின்னஞ்சல் முகவரி – kavikkognanachelvan@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

14 thoughts on “படக்கவிதைப் போட்டி (19)

  1. நாடகமே உலகம் ! 

    சி. ஜெயபாரதன்.

    மனித முகமூடிகள் சில  
    மட்டும் இங்கு  
    தொங்கு கின்றன.
    சில மனிதர்கள்
    சில நேரங்களில் போட்டுக்
    கழற்றிய
    நிழல் மூடிகள் !
    படித்தவன் வேடம் போட
    முகமூடி ஒன்று !
    படியாதவன் அணியும்
    முகமூடி ஒன்று !
    நடிப்பவன் நாடகத்துக்கு
    முகமூடி ஒன்று !
    அரசியல் சந்தையில்
    மந்திரிமார்
    அணியும் முகமூடிகள் சில !
    பிரதம மந்திரிக்கு
    தந்திர முகமூடிகள் பற்பல !
    பெண்டிர் முன் போடுவது
    ஒன்று !
    செல்வர் முன் அணிவது
    ஒன்று !
    கீழ்ச் சாதியர் முன்னே
    போட்டுக் கொள்வது
    ஒன்று !
    நாடகமே உலகம் என்றார்
    ஷேக்ஸ்பியர் !
    முகமூடி அணியாத 
    கலியுக 
    மாந்தர் உண்டா ?

    +++++++++++

     
     

  2.   மனிதனின் நிஜ முகம்  மறந்து போச்சே, 
      முகம்மறைத்து முகமூடி அணிந்தாச்சே, 
       முகத்தின் அழகு அகத்தில்  தெரியுமே,  
       முகமூடி  அணிந்தால் உண்மை முகம் மறையுமே  !

      பலர் பல  முகமூடியணிந்து காட்சி அளிக்கிறார்கள், 
     சந்தற்பதர்கேற்ப மனிதர்கள்  நிஜ முகத்தை மறைக்கிறார்கள்,
    உருவங்கள் மாறினாலும், எண்ணமும், குணமும் மாறாது ,
    பொய்முகம்  என்றும் உண்மைமுகம் ஆகாது !

    ஆண்டு விழா  அன்று குழந்தைகள் மாறுவேடம் அணியும், 
    வேடத்திற்கு ஏற்ப  அதன் குரலையும்  வெளிபடுத்தும் ,
    மனிதனே  வாழ்க்கையில்   பல உருவமும், எடுக்கிறான் 
    பசுத்தோல்  போர்த்திய புலியாய் வாழ்க்கை நடத்துகிறான் !

    ரா. பார்த்தசாரதி 

  3. முகமூடி மனிதர்கள்

    முகமூடி மனிதர்கள் 
    பார்வை 
    சிரைக்கிறார்கள்…..
    பயந்த மேல் மூச்சுக்களை 
    பாதியாக 
    குறைக்கிறார்கள்….
    கருவிழிகளற்ற 
    வெள்ளை தேசம் 
    காணுவதாக அவர்கள் 
    திரிகிறார்கள்……
    பூனைகளும், புதையல்களும் 
    புனைவுகளால் 
    ஆளப்பட்டாலும் 
    புதிர் விதைத்து 
    மறைகிறார்கள்… 
    ஏனோ 
    காட்டிக் கொடுக்கும் 
    உள்ளாடைகளை மட்டும் 
    வெளியே 
    காயப் போடுவதில்லை 
    முகமூடி மனிதர்கள்…………… 

    கவிஜி 

  4. முகமூடிகள்

    முகமூடி மாந்தர் முகம் மூடி
    அகம் மறைக்கும் செயல் மிக்க
    நகும் செயலன்று அது பல தீங்கு
    விகற்பம் விளைக்கும் கண்டாய்

    ககனத்தின் உள்ளே கரந்துறையும்
    நாகத்தின் விசம் போன்று கொல்லும்
    மிகக் கொடிய முகமூடித் தனங்கள்
    இகத்தினிலே மிக மலிந்து உண்டே

    தகவுறாச் செயல் புரியும் கொடிய
    தகவிலா மக்களின் கேடயமாய் அது
    அகத்தின் அழுக்கு மறைத்து வைக்கும்
    செகத்தின் தரம் மழுங்கும் உணர் நீ

    முகம் அனிச்சம் மலர் போலே எம்
    அகத்தழகு காட்டும் ஒரு கண்ணாடி
    முகமூடி மாயைக்குள் முகம் நுழைத்தே
    அகத்தழகை இழக்காமல் சிறப்போமே

    புனிதா கணேசன் (England)
    01.07.2015

  5. உறவுகளும் வேசங்களும்
    ~~~~~~~~~~~~~~~~~~~

    உறக்கத்தின் வாசல்கள்
    ஊமைக் கனவுகள்….
    ஓரிறவில் மாற்றங்கள்
    மாறிக்கொள்ளும் உறவுகள்!

    உண்மைகள் ஏனோ
    நிகழ் காலத்தில் பொருந்துவதில்லை
    எதிர்மறை எண்ணங்கள்
    விரிசல்களாய் ….வேஷங்களாய்!

    உறவெல்லாம் தொடர்கதை
    தொடர்வதில்லை புதுக்கதை…
    காரணம் மனங்களிடை
    மாயையின் திரையிடை!

    கரைந்திடும் நேரங்கள்
    குறுகிடும் வாழ்க்கைகள்…
    உணராத மனிதர்கள்
    ஒதுங்காத தோனிகள்!

    வேஷம் போட்ட வாழ்க்கை
    நாசமாகும் நம்பிக்கை..
    பிளவுகள் தோற்றுகை
    சந்ததிக்கு முற்றுகை!

    பணத்திற்கு விலைபோகும்
    பாசமுள்ள முகங்கள்- அவை
    நினைப்பதில்லை ஏனோ
    உண்மையின் நிலைகள்!

    வெறுமையான வாழ்வில்
    எங்கே உண்டு சுகங்கள்….
    வேண்டாமே… நிஜ வாழ்வில்
    உறவுகளில் வேஷங்கள்!

    துஷ்யந்தி

  6.                அன்பின் முகவரி முகம்-கார்த்திகா AK

    எங்கெங்கு காணிலும்
    வித விதமாய் வண்ண முகங்கள் 
    பல போலிகளில் 
    உண்மையின் கிழிசல்கள் 
    அறுந்து தொங்கும் அபாயம்!

    நிறங்கள் நிர்ணயிக்காத 
    அகத்தின் அழகு முகத்தில் 
    இருள் உடைத்த வெளிச்சம்

    நிமிடத்திற்கு ஒருமுறை 
    மாறும் பச்சோந்தி முகங்கள் 
    கணக்கில்லா பாவத்தில் உழன்றபடி..

    யாருக்கும் நிரந்தரமில்லாத 
    இவ்வாழ்க்கையில் 
    தீக் குச்சி பற்ற வைக்க 
    தீப் பந்தம் திருடும் அற்ப முகம்  

    தெரிந்தோ தெரியாமலோ 
    வெளித் தெரியும் 
    முகக் கோணல்கள்
    மனதின் ஒழுங்கற்ற நிலை

    நிறங்கள் பிரிக்காத 
    முகங்கள் சேர்ந்த
    அன்பின் முகமாய்
    இறுதிக்கு இறுதியில் 

    யாதும் நன்றே 
    யாவரும் ஒன்றே 
    அன்பின் முகவரி முகத்தில்!!

        

  7. அணியாத முகமூடி ஜாக்கிரதை!

    விதவிதமாய் மனிதர்தாம் நம்மிடையே இருக்கின்றார்;
           விசித்திரமாய் நாய்புலிமான் சிங்கம் நரியாக
    நிதமொரு விதமான விலங்காக வலம்வந்தே
           நடமாடித் திரிகின்றார்; மனிதமுக(மே) முகமூடி!
    முதலையாய் கடித்துயானை சாய்த்திடுவார்; விழுங்கும்
           மலைப்பாம்பாய் மாறிடுவார்; நன்மைதான் செய்து
    உதவுகின்ற சாக்கில் உறவாடித் திரிந்திடுவார்;
           உலகினில் உய்யவே உண்மையைக் கண்டுணர்வீர்!

    பழகும் விதத்தில் பார்க்கும் திறத்தில்
           பக்குவம் அறிந்து உணர்ந்து கொள்வீர்
    அழகான முகத்தில் அணியாத முகமூடி
           அரவமா கொக்கா ஆளையே விழுங்கும்
    கழுகா சிங்கமா நரியாஎன் றேஅறிந்து
           கணித்து அதற்கேற்ப முகமூடி அணிந்திடுவீர்
    வழுவாது இக்கருத்து; அதுவிடுத்து புலியின்முன்
           வந்தமான் படும்பாடு யாவரும் அறிவரே!

  8. பெண்ணே! உலக ஆணாதிக்கச் சுவரில்
    நெகிழி முகமூடிகளாய்
    எத்தனைநாள் தொங்க இயலும்?
    உலக  அரங்க மேடையில்
    விதவிதமான பெண்ணிய மன முகமூடிகள்!
    விந்தையான பல எண்ணங்கள் ஒருங்குபட
    பாலியல்வன்முறை கொடுமைகள்
    வெருண்டோட ஆணாதிக்கச் சுவரில்
    சாதி களைக்கொல்லி முகமூடி எங்கே?
    கல்விப்பூவின் தேனெடுக்க
    வண்ணத்துப்பூச்சி
    துரோக விரோதிகள் சதியறுக்க
    பேய் வடிவம்
    குழந்தைகள் உண்ண
    மனம் மயக்கும் வண்ண வடிவம்
    எத்தனை வண்ண மயமடி உனக்கு!
    வானவில் கோலமாய்
    மனக் குமுறல் முட்களை மறைக்க
    விதவிதமான முகமூடிகள்!
    ஒன்றை ஒன்று சார்ந்தது
    அர்த்தநாரீஸ்வரம்!

    அடிமை வாழ்க்கையல்ல பெண்ணே!
    பொறாமை தொலைந்தோட
    விழித்தெழு பெண்ணே!
    நிலவான முகம் மறைத்தால்
    மட்டுமே உனக்கு முக முத்திரைகள்
    இங்கு பதிக்கப்படும் நிலை மாறி 
    இதமான உளம் சார்ந்த 
    புதுஉலகம் படைக்க
    புவியினில் சாதிக்க 
    ஆண் சமுதாயம் வரவேற்கும்
    அச்சமின்மை அதிகார 
    முகமூடி எங்கே?

  9. முகம் தொலைத்தவன்

    எண்ணத்திற்கு முகமூடி
    எழுத்தாணி
    வண்ணத்திற்கு முகமூடி
    ஒளிப்படம்
    பார்வைக்கு முகமூடி
    அவள்
    பாசத்திற்கு முகமூடி
    அவன்

    வெற்றிடத்தில்
    காற்றைத் தின்று வாழுபவன்
    அவன்.

    வேசத்தைக் கலைத்துவிட்டு
    முகத்தைத் தேடுபவன்.

    மேடையில் அடுத்தவர்
    முகத்தைத் தரித்தவன்
    பாடையில் சொந்த முகத்தோடுக்
    கிடக்கிறான்
    யாருக்கும் அடையாளம்
    தெரியவில்லை
    வந்தவர்கள் தேடுகிறார்கள்
    கலைஞனை
    சுவரில் அவன் களைந்துவிட்ட
    முக ஒப்பனைகள்.

  10. உண்மை முகங்காட்டு…

    கண்முன் காண்பவை முகங்களல்ல
         கனிவாய்ப் பேச்சும் உண்மையல்ல,
    வண்ணம் பலவாய் வகைவகையாய்
         விரும்பிடும் விதமாய் முகமூடிகள்,
    எண்ணம் வெளியே தெரிவதில்லை
         எதுதான் உண்மை புரிவதில்லை,
    உண்மை முகத்தினைக் காட்டிடுவாய்
         உலகினில் மனிதம் நிலைபெறவே…!

    -செண்பக ஜெகதீசன்…

  11. வாருங்கள் அணிந்து கொள்வோம்! 
    தலைக்கவசம் அணியவில்லை என்பதிலிருந்து 
    தப்பித்துக் கொள்வதற்காய் 
    முகமூடி அணியா திருடர்களிடம்
    தெரிந்தே பறிகொடுக்கும் 
    கொள்ளைகளுக்கு இன்றுகளில் 
    முகமூடிகள் அவசியமில்லைதான் 
    என்றாலும் 
    முகமூடிகளுக்குப் பின்னால் 
    நின்று வாழ்க்கையை ஓட்டும் 
    சிறு  விற்பனையாளர்களுக்ககாக
    வாங்கி அணிந்துகொள்ளலாம்
    ஏழையின் உழைப்பில் மறையும்
    வறுமையின் இருளுக்காய் !

  12. முகமூடி இல்லா முகங்கள்

    அகத்தின் அழகு
    முகத்தில் தெரியும் அதனால்
    முகத்தை மறைக்கும்  அணிகலன்
    முகமூடி  
    இதை கோமாளிகள்
    அணிந்து  சிரிக்க வைப்பர்
    ஆனால் இன்று
    ஆண் பெண் வித்தியாசமில்லாமல்
    வீட்டிலும் நாட்டிலும்
    பொய் முகஙகள் காட்டி 
    வளைய வருகிறார்கள் 
    சிரித்து கெடுப்பவர் சிலர்
    நடித்து கெடுப்பவர் சிலர்
    கடன் கேட்க ஒருமுகம்
    கழிக்க ப் பார்ப்பது ஒருமுகம்
    கோட்டையை பிடிக்க 
    ஓட்டைவாங்க   என 
    முகமூடி இல்லாத மனிதரெங்கே
    இருக்கிறார் சொல்லுங்கள்
      பூ கொடுப்பவனே
    தீயையும் வைக்கிறான்
    இதில் யாரை  குறை சொல்ல
    விதிதானே பழி செய்யுது
    வாழ்க்கை எதுவென்று புரியாமல் 
    வாய் விட்டு அழவும்  வசதியிருக்கு
    இந்த முகமூடியில்
    இல்லை ஒருவருக்கும் மனசாட்சி
    எல்லாம் இன்று வேஷமாச்சு 
    முகமூடி அணிந்த
    எல்லோருமே கோமாளிகள் ஆனோம்

    சரஸ்வதி ராசேந்திரன்

  13. படக் கவிதை 19
    பார்வையில் தெரியாமலும் முகமூடி

    அகம் மூடிச் சிரிப்பு
    முகம் மூடிப் பேச்சு
    முன் பின் பேசுதல்
    முகமூடி இதுவும் தான்.
    கூன் ஒரு வகையில்
    தூண் இது பொய்யருக்கு
    சீண்டும்  பொய்க் கருவி
    பகிடி(fun ) இது குழந்தைகளிற்கு.

    கலை வெளிப்பாட்டுத் திறமை
    தலை விரும்பிய வேடத்திற்கு
    அலைவு மூடி நீதிக்கு
    உலை வைக்கும் உண்மைக்கு.
    திருட்டில் ஒட்டும் நண்பன்
    உருட்டும் தலைக்கு சிந்தனை
    இருட்டு பற்றி அக்கறையின்றி
    வெருட்டென வெருட்டும் முகமூடி.

    பா ஆக்கம் 
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    4-7-2015

  14. பூனை புலி
    நாய் நரி
    பாம்பு பட்டுபூச்சி
    உருவங்கள் பல
    அறிவென்னவோ ஐந்து
    இவைதம்
    உள்ளந்தனில் துவேஷமில்லை !
    தம்மினத்தை தாமே அழிப்பதில்லை !
    பகுத்தறிவு உள்ள மானுடனோ
    துவேஷம் சுமந்து
    தம்மினம் தனையே கொன்று குவிக்கிறான் !
    ஒரே முகம் – ஆனால்
    முகமூடிகள் பல !
    உள்ளந்தனில் மண்டிக் கிடக்கும்
    அழுக்குகள் பல !
    யாரை நம்ப யாரை நம்பாது போக
    உலகமே தன் உண்மை முகம் மறைக்கிறதோ ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.