ஐந்து கை ராந்தல் (20)

வையவன்

 

“காரணீஸ்வரன் கோயில் தெருவுக்குப் போயிருக்கியா சிவா?”
ஆஸ்பத்திரியில் புண்ணியகோட்டியைப் பார்த்து விட்டு ஒர்க்ஷாப் தபால் ஒன்றைச் சேர்க்க போஸ்டாபீஸுக்குப் போகும் போது திஷ்யா அவனைக் கேட்டாள்.
தபாலைப் பெட்டியில் போட்டுக் கொண்டே அவன் பதிலளித்தான். “போயிருக்கேன்… என்ன விஷயம்?” என்றான்.
அவளிடமிருந்து பதில் இல்லை. சிவா திரும்பினான்.
அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு ஏதோ தப்பாகச் சொல்லி விட்டவள் மாதிரி விழித்துக் கொண்டு நின்றாள்.
“ஏன் என்ன ஆச்சு?”
“ஐ ஆம் சாரி”
“எதுக்கு?”
“ஒன்… அடச் சட்.. ஒங்களெ ஒருமையிலே பேர் வச்சுக் கூப்பிட்டுட்டேன்.”
“இனிமே மரியாதை தரப் போறியோ.”
அவள் முகம் அபூர்வமான நாணத்தால் மிளிர்ந்தது.
“சரி.. ஒன் ஸாரியை ஏத்துக்கறேன்.. ஆனா திடீர்னு வாங்கோ போங்கோண்ணா எனக்கு அசிங்கமா இருக்கு.”
“எனக்குக் கூட கஷ்டமாத்தான் இருக்கு”
“அப்ப எதுக்கு கஷ்டப்படுத்திக்கறே?”
“நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோமே!”
“ஏய்… கிண்டல் பண்றியா?”
அவள் பளிச்சென்று சிரித்தாள்.
“என்ன இருந்தாலும் நீங்கள் கணவர்.”
“இதானே வேணாம்!”
அவள் முகம் மலர்ந்திருந்தது கூப்பிற்று.
“என்ன திஷ்யா? திடீர்னு சேஞ்ச் ஆயிட்டே?”
“ம் ம்…” என்று நினைவுகளில் புதைந்தவள் வெளிப்படுவது போல் விழித்தாள்.
“என் ஃபிரண்டு ஒருத்திக்குக் கல்யாணம் இன்னிக்கு மாப்பிள்ளை அழைப்பு அந்த ஞாபகம்.”
“அதான் காரணீஸ்வரன் கோயில் தெருவைக் கேட்டியா?”
“ஆமாம்” அப்போதும் அவள் நினைவுச் சுமையிலிருந்து முழுக்க விடுபடவில்லை.
“அங்கேதான் கல்யாணமா?”
“ஆமாம்…”
“போய்ட்டு வாயேன்.”
“துணைக்கு? பிரேம் வரமாட்டேங்கறான்.”
“நான் வரட்டுமா? அவள் தலையசைத்தாள்.”
“என்ன அபாரமான ஐடியா… இவ்வளவு கலாட்டா நடந்திருக்கு. இப்ப உன் சிநேகிதி கல்யாணத்துக்கு நான் துணை வரணும்ங்கிறே!”
“நீ தெரு முனையிலேயே நின்னுடு. உள்ளே வர வேண்டாம். நான் போய் அரை மணி நேரத்திலே திரும்பிடறேன்.”
“அப்பா கிட்டே சொன்னியா?”
“ம்ம்ம்.”
“சரி பொறப்படு… நான் நாளைக்குக் காலையிலே திருப்பத்தூர் போகணும்… போனமா வந்தமாண்ணு தலையைக் காட்டிட்டு திரும்பிடு.”
மைலாப்பூர் பீச் அருகில் அவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கினர். காரணீஸ்வரன் கோவில் தெருவில் பந்தல் போட்டிருந்த ஒரு வீட்டுக்குச் சற்று முன்னே அவளிடமிருந்து விடைபெற்று தெருமுனைக்கு வந்து நின்றான் சிவா. சாலையை வேடிக்கை பார்த்தான்.
சரியாக அரை மணி நேரத்தில் திஷ்யா வந்து விட்டாள்.
“என்ன இவ்வளவு சீக்கிரம்?”
“சொன்னது அரை மணி வார்த்தையைக் காப்பாத்தணுமோ இல்லியோ?”
“என்ன சொன்னா ஒன் சினேகிதி?”
“சிரிச்சா… பூரிச்சா… இருந்து நாளைக்குப் போகச் சொன்னா. ஒரு கல்யாணப் பொண்ணு வேற என்ன சொல்லுவா?…” அவள் பெருமூச்சு.
“என்ன திஷ்யா… ஒரு துயரம்!”
“பெண்… பாரதப் பெண், வேறென்ன சொல்றது? திடீர்னு ஒரு வசந்தம் கலைஞ்சிடுது. பெரிய டாக்டராகப் போகிறேன்… ஸயன்டிஸ்டாகப் போறேன்… லீடராகப் போகிறேன்னா… நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கப் போறா.”
சற்று நிறுத்தி திஷ்யா மெலிதாகப் பெருமூச்செறிந்தாள்.
“அடுத்த வருஷம் குழந்தை… அப்புறம் இன்னொண்ணு. அதுக்கப்புறம் குழந்தைக்கு ஜுரம். சமையல் ஆகலே… அவருக்கு சீதனம் கம்மிண்ணு கோபம்… ஓடி ஓடி அவள் சக்கரம் சுத்தும். கெழவியாவா…”
சிவாவுக்கு சுரீர் சுரீரென்று ஊசியால் குத்துவது போலிருந்தது.
“நிறுத்து… இதென்ன இப்படி ஒப்பாரி?”
“எனக்கு ஒன்னோட பேசணும்! ரொம்ப ரொம்பப் பேசணும்.”
“பேசிக்கிட்டுதானே இருக்கோம்.”
“இல்லே தனியா!” அவள் குரலில் ஆழங் காண முடியாத அமைதி இருந்தது.”
“மைலாப்பூர் பீச்சுக்குப் போவோமா?”
“சீச்சீ… வீட்டுக்குப் போவோம்”
“காதலர்கள்னா பீச்சுக்குப் போகணும்னு ஒரு சம்பிரதாயம் உண்டு. டோன்ட் ஃபோர்கோ இட்”
“ஸ்டாப் ஜோகிங் ப்ளீஸ்” அவள் நிஜமாகவே வருத்தத்தோடு சொன்னாள்.
“சரி…கட்டாயம் பீச்சுக்குப் போவோம். வீட்டில் ஒரு பட்டாளம் இருக்கு. நமக்கு எங்கே பேச டயம் கெடைக்கப் போவுது.”
அவள் சம்மதித்தாள்.
நிரந்தரமாக அலைகள் சந்திக்கும் கடற்கரையில் இன்றோ நாளையோ கட்டுமரங்களில் நனைந்து விட்டு வரக் காத்திருக்கும் கயிற்றுக் கருணைகளின் ஆளுயர மறைவில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.
கடலும் காத்திருந்தது – கறுத்து வரும் நீலப்பரப்பின் ஒரு முகூர்த்த வெளிச்சத்திற்கு.
“என்ன பேசப் போறே?”
திஷ்யா அலைகளின் சிலிர்த்தெழும் வெண் பிடரிகளில் லயித்தாள். ஏதோ ஓர் அமைதி அவளுக்குத் தேவைப்படுவது போல் சிவா உணர்ந்தான்.மௌனமானான்.
அங்கங்கே பேச்சுக் குரல்கள் காற்றில் சருகுகளாக மிதந்து வந்தன. புதிய காதலர்களும் பழைய காதலர்களும் கடந்து சென்றனர். தழுவித் தழுவி முத்தமிட்டனர்.
ஒருவர் மடியில் இன்னொருவர் புதைந்தனர். சிரித்தனர். எல்லாம் அக்கரை ஒலிகள் போன்று அகன்றன.
திஷ்யாவும் சிவாவும் மௌனமாய், ஒலிகள் யாவும் மெதுவாய் அமிழும் நிசப்தம் ஒன்றின் சந்நிதியில் நிற்பது போல் அமர்ந்திருந்தனர்.
“சிவா”
“சொல்லு”
“என்ன உன் வாழ்க்கையின் நோக்கம்?”
சிவாவுக்குத் தெரியவில்லை.
“தெரியவே இல்லே!”
“ஆமா”
“டூ யூ லவ் மீ?”
“எஸ்”
“கல்யாணம் பண்ணிக்கற அளவு நீ ஸீரியஸா என்னை நேசிக்கிறியா?”
“எஸ்”
திஷ்யா அவனைப் பார்த்துச் சிரித்தாள். இருளில் முகத்தின் உணர்ச்சிகள் தெரியவில்லை. பல்லின் ஒளி மட்டும் தெரிந்தது.
“நீ பொய் சொல்றே… அல்லது உன்னை முழுக்கத் தெரிஞ்சுக்காம சொல்றே!”
“என்ன திடீர்னு ஒரு மாற்றம் உங்கிட்டே?”
“இல்லே… அப்பாகிட்டே கடைசியிலே சினிமாவிலே நடிக்கறதா இருந்தா கூட சரிப்பான்னு சொன்னேனே! அது ஏண்ணு நீ என்னைக் கேட்டியா?”
“அதுக்கு என்ன இப்போ! நீ மனசு ஒடிஞ்சு போன மூட்லே அதைச் சொல்லியிருக்கலாம்.”
நிலா மெதுவாக எழுந்தது.
“உன்னை ஏன் நான் இதிலே இன்வால்வ் பண்ணணும். நீ ஒரு ரைட்டர். எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கு. இந்த மனுஷாளை.. இந்த மண்ணை உன் எழுத்திலே ஏதாவது கொஞ்சம் புரட்டி எடுக்க வேண்டியிருக்கு.” சற்று நிறுத்தித் தூரவரும் ஓர் ஆண் அலையைப் பார்த்தாள். “என் வீட்டிலே ஒரு பட்டாளம் இருக்கு. வறுமை இருக்கு. பிரச்னை இருக்கு. எல்லாத்தையும் நீ ஏன் தலையிலே சொமந்துக்கறே?”
“என்னை டெஸ்ட் பண்றியா?”
“இல்லே, என்னையே டெஸ்ட் பண்ணிக்கறேன். நம்ம சினேகிதத்திலே உனக்கும் எனக்கும் மத்தியிலே அந்த ஸோ கால்ட் அர்ப்பணம் இல்லே. சூழ்நிலைகளின் நிர்ப்பந்தம் தான் இருக்கு”
சிவாவுக்கு அவளது அறிவின் தெளிந்த கூர்மை அவனை வகிர்ந்து வரையறை செய்வது போலிருந்தது.
“இப்படி ஆபரேஷன் பண்ணினா எல்லா உறவுகளும் ஒரு கோணத்தில் வெற்றுக் கோடுகளாயிடும்.”
அவள் அவனது விமர்சனத்தைப் பொருட்படுத்தாதவள் போல் “ம்ம்ஹ்ஹ்ம்மா” என்று தனக்குள் சிரித்தாள். அது அவன் செவியில் விழுந்தது.
“சிவா, எல்லா உறவும் வேறே..இது வேறே! ஒனக்குத் தர எங்கிட்டே இந்த அழகும் என் பெண்மையும் இருக்கு. அது மட்டும் இருந்தா பரிபூரண சந்தோஷம் கெடைச்சுடும். ஆனா கூடவே ஒரு சொமை இருக்கு. எங்க அப்பா… கூட நாலு ஜீவன்கள். இதெல்லாம் என் சொமை. நீயும் நானும் அதோ அந்தக் கப்பல்லே ஏறி கண் காணாத சீமைக்கு ஓடிட்டாலும் கூட அந்த சொமை எனக்குள்ளே அழுத்திட்டே இருக்கும்!”
சிவா அவள் என்ன விரும்புகிறாள் என்று மனசிற்குள் அலசினான்.
“நீ கல்யாணத்துக்கு மானசீகமா தயாராயிட்டியா?” என்று திஷ்யா அவனைக் கேட்டாள்.
“எதுக்குக் கேக்கறே?”
“நான் தயாராகலே. எனக்குப் பிடிக்காத ஒரு ஏற்பாட்டிலிருந்து தப்பிச்சிக்க ஒன்னைப் பயன்படுத்திட்ட மாதிரி எனக்குத் தோணுது.
இன்னும் விளக்கமாச் சொன்னா ஒன் அனுதாபத்தை எனக்கு சாதகமாக்கிக் கிட்ட மாதிரி இருக்கு.”
அப்படியெல்லாம் அவன் சிந்தித்துப் பார்க்கவில்லை. ஆனால் இந்த திஷ்யா விவகாரத்தில் பிரீதா குறுக்கிட்டு தன்னை ஏதோ ஒரு போக்கிற்கு செதுக்கி உருவாக்கிய மாதிரி இப்போது தென்பட்டது.
“இன்னொண்ணு சொல்லட்டுமா?”
“சொல்லு”
“ஒரு நாள் இல்லாட்டி இன்னொரு நாள் இந்தச் சுமை உனக்கு பளுவாகும். தவிர்க்க நெனைப்பே. அப்ப இந்த பிரியம் போயிடும். நீ என்னை வெறுப்பே.”
“இதெல்லாம் கற்பனை…யூகம். ஏதோ ஒரு முடிவுக்கு நீ வந்துட்டே! அதைச் சொல்லத் தயங்கறே… இப்படி சாக்கு போக்கு சொல்றே.”
சந்திர வெளிச்சம் தனது ஆசியை அவள் மீது வீசிற்று.
அவள் இளமை… அதன் மனசைக் கிறக்கும் கவர்ச்சி… முத்தமிடத் தூண்டும் அவளது உதடுகளின் ஈரப் பளபளப்பு… மையெழுதிய விழிகளின் இமைகளின் துடிப்பு…
இவற்றை மீறி திஷ்யாவிடம் அவனுக்கு ஒரு மரியாதை எழுந்தது. இவள் சிந்திக்கிறாள்.
“இது கற்பனை இல்லே சிவா. எனக்கு கற்பனை பண்ணத் தெரியாது. நடைமுறை இதான். எதிர்த்த வீட்டிலே, பக்கத்து வீட்டிலே, அடுத்த தெருவிலே இதான் நடக்கிறது.”
“நீ என்ன முடிவுக்கு வர்றே?”
“முடிவுக்கு நான் மட்டும் வரமுடியாது. நீயும் சேர்ந்து. இன்னும் சொல்லப் போனா இதுவரைக்கும் உங்க அம்மாவின் அபிப்பிராயம் என்னண்ணு நாம ரெண்டு பேரும் தெரிஞ்சுக்கலே…”
“திஷ்யா” என்று சிவா அவளது கவலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல அழைத்தான்.
“ம்ம்ம்” என்று அவள் பதிலளித்தாள்.
“என் மேலே உனக்கு நம்பிக்கை வரலே. நான் கடைசி வரைலே உறுதியா இருப்பேனாண்ணு சந்தேகப்படறே!”
திஷ்யா காற்றில் நெகிழ்ந்து போய் படபடத்த முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அவள் வளையல்களின் ஒலி இனிமையாய்க் கேட்டது.
“சிவா… நான் முன்னாடியே சொன்னேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணுவோம்ணு…”
அவளை விட்டு சற்றுத் தள்ளி ஒதுங்கி உட்கார்ந்திருந்த சிவா வேறொன்று நினைத்தான்.
அவர்கள் நட்பு தொட்டுப் பழகாதது. ஓர் உடல் இன்னோர் உடலுக்கு ஸ்பரிசங்களின் தந்தி மீட்டலில் வழங்கும் நம்பிக்கையை அறியாதது. வாய்ச் சொற்களின் வரம்புகளில் நின்று இடைவெளிகளை அழிக்காதது. ஒரு பெண் ஆணை நம்புவதற்கு அதுவும் தேவைப்படுமோ!
அவன் அவள் அருகில் நெருங்கினான்.
“சிவா… என்னது இது?” என்று அவள் துணுக்குற்றாள்.
சிவா அவள் இடையில் வழுவழுத்த வெற்று மேனியின் மீது ஒரு கை கொடுத்துத் தழுவி வலிமையும் உறுதியும் வெளிப்பட அவளைத் தன் அருகே இழுத்தான்.
ஒரு கணம் அதை எதிர்க்கப் போராடியவள் நெருக்கத்தில் வந்த அந்த முகத்தைப் பார்த்துச் செயலற்றுப் போனாள்.
அவன் கண்களிலும் உதட்டிலும் உறுதி மின்னிற்று. உண்மை ஒளி வீசியது.
சிவா அவளை உதட்டில் முத்தமிட்டான்.
கிளர்ச்சி… வெறி… இவை சம்பந்தப்படாத வாக்குறுதி போன்று ஒரு வலிமை அந்த முத்தத்தில் வெளிப்பட்டது. பின்பு நெற்றியில்… மூடிக் கொண்ட கண்ணிமைகளில் அவன் ஆழ்ந்து முத்தமிட்டான்.
அவள் கன்னத்தில் கழுத்தில் மோவாயில் மீண்டும் உதடுகளில் அவன் உதடுகள் சஞ்சரித்தன.
அவள் தன்னைத் தழுவியிருந்த கையை உதறித் தன்னை விடுவித்துக் கொண்டாள்.
அவன் எதிர்பார்த்த மாதிரியே ஓர் ஆணின் காக்கும் கரத்தின் வலிமையை அவள் உணர்ந்தாள்.
“போதும்” என்று மூச்சுத் திணறிக் கொண்டே சொல்லி நகர்ந்து உட்கார்ந்தாள்.
சிறிது நேரம் இந்த ஆக்கிரமிப்பால் அவள் பேசும் சக்தியிழந்தாள். அவன் உணர்ச்சிவசப் படாமல் தூரத்திலேயே உட்கார்ந்திருந்தான்.
“சிவா…” அவள் குரல் கலங்கியிருந்தது.
“ம்ம்ம்…”
அவள் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள்.
“இப்ப நம்ம கல்யாணத்துக்கு அவசரமில்லே.”
“……..”
“காத்திருப்போம்”
“எதுவரை?”
“எதுவரை முடியுமோ அது வரை.”
“எதுக்கு?”
“நம்மை நாமே உறுதியாக்கிக்கிறதுக்கு.”
அவன் கையை நீட்டினான்.
ஏதோ ஓர் ஒப்பந்தத்துக்கு நீட்டுவது போல அவள் தன் கையை அதன் மீது வைத்தாள்.
கடற் காற்றில் சில்லென்றிருந்த அந்தக் கை அவன் ஏந்திய சில நிமிஷங்களில் வெது வெதுப்பாயிற்று.
“புறப்படு, போவோம்” என்று அந்தக் கையைப் பற்றி அவளைத் தூக்கினான் சிவா.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.