Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    “அம்பாள் அலமேலு அம்புஜ வல்லியொடு,
    நம்பாள் சமேத நகர்வலம், -தெம்பாக,
    ஐந்தா யுதமேந்தி ஆனைமேல் அம்பாரி,
    பைந்தா மரைக்கண் பராக்”….கிரேசி மோகன்….

    Share
  • இடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு

    Posirons in thunder

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    இடிமுகில் திரண்டு வான்மீது

    வெடிக்கும் மின்னலில் 

    பாஸிட்டிரான் பராமாணுக்கள் தோற்றம்

    முதன்முறை கண்டுபிடிப்பு ! 

    காமாக் கதிரொளி எழுந்திடும் தூரத்தில்  

    துகள், எதிர்த்துகள் பிணைந்து.

    விண்வெளியில் ஒளி மந்தைகளோ 

    வெடிப்பு மீன்களோ,

    பரிதிக் கதிர்த்துகள்களோ

    அகிலக் கதிர்களாய்

    அடிக்குது.

    பூமியின் வானில்  புரளும்

    இடிமுகில் மின்னழுத்தம் அளக்க 

    அகிலக்கதிர்கள் உதவும்.

    மின்னலைத் தூண்டி விடுமா அவை

    என்றறிய உதவலாம்

     +++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=M-uNtC426R4

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sjxsy3LpWd4

    +++++++++++++++++++

    Positrons in Lightening

    நாங்கள் ஆராய்ச்சி விமானம் மூலம் எதிர்பாராதவாறு இடிமுகில் ஊடே சிறிது கண நிமிடங்கள் கடந்த போது, எங்கிருந்தோ திடீரென 10 மடங்கு பெருக்கத்தில் பாஸிட்டிரான்கள் எங்கள் விமானத்தைச் சுற்றிலும் முகில் போல் சூழ்ந்து கொண்டன.  அது ஏனென்று எமக்குப் புரியவில்லை.  ஒளி மிக்க காமாக் கதிர் எழுச்சி, பாஸிட்டிரான்களோடு தெரியவில்லை. முதலில் அதற்குப் பதிலாக விமானத்தைச் சுற்றிலும் பாஸிட்டிரான்கள் முகிலே தென்பட்டது.  பிறகு 7 கி.மீ. தூரத்தில் இரண்டாம் பாஸிட்டிரான் முகில் தெரிந்தது.  இறுதியில் ஓர் ஒளிமயமான காமாக் கதிரொளிக் காட்சி தோன்றியது.  எப்படி இந்நிகழ்ச்சி நேர்ந்ததென எமக்கு விளங்கவில்லை.

    ஜோஸ்ஃப் துவையர் [Joseph Dwyer, Physicist & Lightning Scientist University of New Hampshie, USA]

    Exploding Stars

    இக்கருத்துதான் பேரளவு பாஸிட்டிரான்கள் உண்டாக்கும் “இருண்ட மின்னல்” [Dark Lightning] எனப்படுவது.  பாஸிட்டிரான் கண்டுபிடிப்பில் இருண்ட மின்னல் தடத்தைக் காண்கிறோம்.  இருண்ட மின்னலில் அதிக சக்தி வாய்ந்த துகள்கள்  விரைவாக்கப்பட்டு பாஸிட்டிரான்களை உருவாக்குகின்றன.  ஆயினும் இடி மின்னலில் எப்படி மின்சாரச் சூழ்நிலை உண்டாக்குகிறது என்று தெரியவில்லை.

    ஜோஸ்ஃப் துவையர் [Joseph Dwyer, Physicist & Lightning Scientist University of New Hampshie, USA]

    ஆராய்ச்சி விமானம் இடிமுகில் எதிர்பாரா நுழைவில் அதிசயக் கண்டுபிடிப்பு
    2009 ஆகஸ்டு மாதம் ஜோஸஃப் துவையரும் அவரது விஞ்ஞான சகாக்களும் ] சூழ்வெளி தேசீய ஆராய்ச்சி விமானப் பயண மத்தியில், [National Center for Atmospheric Research Gulfstream V] எதிர்பாராமல் ஒரு பயங்கர இடிமுகில் ஊடே சிறிது நேரம் நுழைந்த போது, அது ஒரு மாபெரும் பாஸிட்டிரான் பரமாணுக்கள் சூழ்ந்த முகிலாகக் கண்டார்.  பாஸிட்டிரான் என்பது எலெக்டிரான் நுண்துகளின் எதிர்த்துகள் [Anti-Particle].  அந்த இடிமுகிலில் பாஸிட்டிரான் இருப்பு மர்மமாய் இருந்தது.  இந்த எதிர்பாரா கண்டுபிடிப்பு மேலும் இடிமுகிலில் மின்சார ஏற்றங்கள் [Electrical Charge] இருப்பை விளக்கப் பயன்படலாம்.  ஆராய்ச்சி விமானத்தைச் சுற்றிலும் வியப்பாக 10 மடங்கு பாஸிட்டிரான்கள் இடிமுகிலில் உலாவின.  இது இருண்ட மின்னல் மின்சார வெளியேற்றத்தால் [Dark Lightning Electrical Discharge] நிகழ்ந்திருக்கலாம் என்று துவையர் கூறுகிறார்.  இத்தகவல் ஒளிப்பிழம்பு பௌதிக இதழில் மே 22, 2015 இல்  [Journal of Plasma Physics] வெளிவந்துள்ளது.
    Lightening measurements

    அகிலக் கதிர்கள் இடிமுகில் மின்னழுத்தம் அளக்கப் பயன்பாடு
    20 கி.மீடர் [12 மைல்] உயரத்தில் அகிலக் கதிர்ப் புரோட்டான் பூகோளச் சூழ்வெளி வாயுவைத் தாக்கிய பிறகு, 10 மில்லி செகண்டுகளில் உண்டாகும் கதிர்ப் பொழிவுகளை ஒரு கணினிப் போலி வடிவில் [computer Simulation Model] போட்டு வானியல் பௌதிக விஞ்ஞானி  ஹைனோ ஃபால்கே [Heino Falcke] ஆராய்ந்ததில் ஓர் அரிய விளைவைக் கண்டார். ரேடியோ வானியல் ஆய்வகத்தில் வேலை செய்யும் ஃபால்கே குழுவினர் பூமியின் இடிமுகிலில் உள்ள ஆற்றல் மிக்க மின்னழுத்ததை, ஒரு கருவி மூலம் அளக்க முடிந்தது.  அந்தக் கருவி அகிலக் கதிர்கள் உருவாக்கும் மின் காந்த விளைவை அளவிட்டுக் காட்டியது.  இதற்கு முன் வாயு பலூன்கள், உளவு ராக்கெட்டுகள் மூலம் அளந்தாலும், ஃபால்கேயின் புதுவித பொறிநுணுக்கம் துல்லிய முறையில் மேம்பாட்டாகக் காட்ட முடிந்தது.  அத்துடன் மின்னல் எப்படி தூண்டப்படுகிறது என்று அறியவும், அகிலக் கதிர்கள் மின்னலைத் தூண்டுகிறதா என்று அறியவும், ஆய்வுகள் உதவின.  ரேடியோ வானியல் கருவியின் பெயர் : லோஃபர் [(LOFAR – Low Frequency Array) A Network of Radio Antennas & Particle Detectors, kept in Five European Countries]
    Lightning on Earth

    பரிதியின் ஆற்றல் மிக்க காந்தப்புலம் இங்கிலாந்தில் மின்னல் அடிப்பு வீதத்தை மிகைப் படுத்தத் தூண்டுவதில் பெரும்பங்கு ஏற்கிறது.  சூரிய காந்தப்புலம் ஒரு பட்டைக் காந்தம் போல் [Bar Magnet] நடந்து கொள்கிறது.  பரிதி சுற்றும் போது, அதன் காந்தப்புலம் பூமியை நேராக நோக்கியோ அல்லது மாறாக எதிர் நோக்கியோ தென்பட்டுப் பூகாந்தப் புலத்தை இழுத்தோ, விலக்கியோ வருகிறது.  காந்தப்புல மாற்றங்கள் மின்னேற்றும் பாட்டரிபோல் [Battery Charger]  சேர்ந்து இடிமின்னல் புயல்களைத் தீவிரமாக்கி அதிகப் படுத்துகின்றன.

    டாக்டர் மாத்தியூ ஓவன்ஸ் [Leading Researcher, University of Reading, UK] 
    காலநிலை அறிவிப்போர் சம்பிரதாய முன்னறிப்புடன், துல்லியமாகப்  பரிதியின் சுழி வடிவக் காந்தப் புலத்து அளவையும் [Spiral-shaped Magnetic Field, known as Heliospheric Magnetic Field (HMF)] சேர்த்து வெளியிட வேண்டும்.   2001  ஆண்டு முதல் 2006 வரை கிடைத்த காலநிலைத் தகவலை ஆராய்ந்து, பரிதி காந்தப்புலம் பூமிக்குப் புறம்பாக நோக்கிய போது,  இங்கிலாந்தில் 50% இடிமின்னல் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகத் தெரிகிறது.
    டாக்டர் மாத்தியூ ஓவன்ஸ் [Leading Researcher, University of Reading, UK] 
    ajayபரிதியின் காந்தப் புலச் சுழற்சி இடிமின்னலை மிகையாக்குகிறது
    2014 நவம்பர் 19 ஆம் தேதி வெளியான ஓர் விஞ்ஞான அறிக்கையில் [IOP Journal, Environmental Research Letters] இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக் கழக [University of Reading, UK] ஆராய்ச்சியாளர், ஐந்தாண்டு காலத்தில் 50% மிகையான எண்ணிக்கையில் இடி மின்னல்கள் இங்கிலாந்தில் அசுர ஆற்றலில் அடித்துள்ளன வென்று கூறியுள்ளார்.  குறிப்பாக அந்தக் காலங்களில் பூமியின் காந்தத் தளத்தைச் சூரியனின் காந்தப் புலம் ஒருபுறமாய் வளைத்துள்ளது என்று காரணம் தெரிந்துள்ளது.  விண்வெளியிலிருந்து வீழும் அகிலக் கதிர் மின்னேற்றத் துகள்களி லிருந்து [Charged Particles like Protons from the Cosmic Rays ] பாதுகாத்துக் கவசம் அளிப்பது பூமியின் காந்த மண்டலமே.  அவ்விதத் துகள்களே தொடரியக்கங்களைத் தூண்டி, தீவிரமான இடி மின்னல்களை முன்பு அறியப்பட்டது.  இம்முறைகள் மூலமாய் இப்போது பல வாரங்களுக்கு முன்பே இடி மின்னல் பேரிடர் விளைவுகளை முன்னதாகவே அறிவிக்க முடியும் என்பது புலனாகிறது.
    Lightening striking Earth

    அதைச் செய்ய காலநிலை அறிவிப்பாளருக்கு, சம்பிரதாயக் காலநிலைக் குறிப்புகளும், துல்லியமாக சூரியனின் கோள நிலைக் காந்தப் புலம் [Heliospheric Magnetic Field (HMF)]  தேவைப்படுகிறது.  சூரியன் சுற்றும் போது, பரிதிப் புயல், பூமியை நோக்கிக் காந்தப் புலத்தை உதைத்துத் தள்ளுகிறது.  இதை அறிவித்த பிரிட்டீஷ் ஆய்வாளர் டாக்டர் மாத்யூ ஓவனஸ் [Dr. Matthew Owens] “சூரியனின் ஆற்றல் மிக்க காந்தப்புலம் இங்கிலாந்தில் வீழும் இடி மின்னல் எண்ணிக்கையை அதிகமாக்குவதில் பெரும் பங்கு ஏற்கிறது,” என்றார்.  இங்கிலாந்தின் காலநிலை நிறுவகம் [United Kingdom Met Office], கடந்த 2001 ஆண்டு முதல் 2006 வரை கணிசமாக இடிமின்னல் எண்ணிக்கை 50% கூடியுள்ளதாக வெளியிட்டுள்ளது. இடிமின்னல்களின் எண்ணிக்கை, தீவிரத்தை முன்பெல்லாம் முன்னறிய முடியாது.  புதிய ஆய்வுகளின்படி எங்கு, எப்போது இடிமின்னல்கள் தாக்கும் என்பதை முன்னறிவிப்பு செய்வது எளிதானது.
    சூரியனின் காந்தப் புல எழுச்சி மேலும், கீழும் ஏறி இறங்கும் போது, பூமியின் காந்தப் புலத்தை ஒருபுறம் வளைத்து, தீவிரச் சக்திப் புரோட்டான்கள் கொண்ட அகிலக் கதிர்களைப் [The Cosmic Rays (High Energy Protons)] புவித்தளம் மீது பொழியச் செய்கிறது.   அப்போது அகிலக் கதிர்கள் புவியின் வாயு மண்டலத்தில் வழி யுண்டாக்கிப் புயல் முகிலில் மின்னேற்றம் மிகையாக்கி [Electrical Charge builds up in Storm Clouds] பூமியைத் தாக்குகிறது.  சூரிய கோளம் 27 நாட்களுக்கு ஒருமுறை தன்னச்சில் சுற்றுகிறது.  அதாவது சூரிய காந்தப்புலம் இரண்டு வாரங்கள் பூமியை நேர் நோக்கியும், இரண்டு வாரங்கள் எதிர் நோக்கியும் உள்ளது.  ஆதலால் பாதி பரிதி சுழற்சியில், பூமியில் தாக்கும் இடிமின்னல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    Solar magnetic field -1“சமீபத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான் : பூமியின் உட்கருவை மெதுவாக ஆனால் அசுரத் தீவிரத்தில் பாதிப்பது சூரியன் ஒன்றே !  பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனே பிரதானக் காரணி என்பதை நானும் எனது கீர்த்தி பெற்ற விருந்தினர்கள் டாக்டர் பீட்டர் ஆல்ஸனும் டாக்டர்  நிகோலா ஸ்கஃபீட்டாவும்  ஒப்புக் கொண்டோம்.”
    மிட்செல் பாட்டிரோஸ் (Mitchel Battros) (Solar Rain நூல் படைப்பாளி)
    “பரிதி உச்சத்தின் (Solar Maximum) போது எப்போதும் (பரிதித் துருவத் திருப்பம்) நிகழ்கிறது !  பரிதி வடுக்களின் எண்ணிக்கை (Sunspots) உச்சமாகும் போது அதன் துருவ முனைகள் மாறுகின்றன.  இப்போது அந்த உச்ச நிலையைப் பரிதி அடைவது ஒரு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது.”
    டேவிட் ஹாத்தவே (David Hathaway, Solar Physicist, Marshal Space Flight Center)
    பரிதிக் கோளத்தில் (Heliosphere) நிகழும் துருவத் திருப்பத்தின் தாக்கம் மிகவும் சிக்கலானது !  பரிதி வடுக்கள் தீவிரக் காந்த முடிப்புகள் சேமிக்கப் பட்டுள்ள பெரும் களஞ்சியம். இரட்டைத் துருவக் காந்தப் பட்டை (Dipole Magnetic Field) மறைந்து போனாலும் முடிச்சு அவிழ்ந்து காந்த தளம் சுருள் சுருளாக வெளிப்புறம் பாய்கிறது.  துருவத் திருப்பம் நேரும் போது பரிதிக் கோளம் காணாமல் போவதில்லை !  வெற்றிடத்தை நிரப்பிட ஏராளமான, சிக்கலான அளவுக் காந்த அமைப்பாடுகள் இருக்கின்றன.  இதுவரை விஞ்ஞானிகள் மேலிருந்து கீழ் நேரான நோக்கில் துருவத் திருப்பத்தைக் காணவில்லை.  இப்போது “யுலிஸிஸ் விண்ணுளவி” விஞ்ஞானிகளுக்கு பரிதியின் மெய்யானச் சோதிப்பு உளவைக் காட்டப் போகிறது.
    டேவிட் ஹாத்தவே. (டிசம்பர் 9, 2005)
    “பரிதியின் காந்த மண்டலம் சூரிய குடும்பம் முழுவதையும் பரிதிக் கோளம் எனப்படும் ஒரு குமிழிக்குள் (Heliosphere Bubble) மூடிக் கொள்கிறது.  அப்பரிதிக் கோளம் 50 AU முதல் 100 AU வானியல் அளவீட்டில் நீட்சி அடைந்து புளுடோ சுற்று வீதிக்கு அப்பாலும் செல்லும்.  [1 Astronomical Unit (AU) = Unit Distance Between Sun & Earth]. சூரியனின் காந்தத் தள மாறுபாடுகள் பரிதிக் கோளத்தின் வழியாக பரிதிப் புயலால் எடுத்துச் செல்லப் படுகின்றன.”
    ஸ்டீவ் சூயஸ் (Steve Suess, Solar Physicist, Marshal Space Flight Center)
    [தொடரும்]
    +++++++++++++++++++
    தகவல்:
    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
      2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
      3. Astronomy Facts File Dictionary (1986)
      4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
      5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
      6. Cosmos By Carl Sagan (1980)
      7. Dictionary of Science – Webster’s New world (1998)
      8. Physics for Poets By :  Robert March (1983)
      9. Atlas of the Skies (2005)
      10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
      11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
      12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
      13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton
      14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
      15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
      16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
      17 Solar Pole Shift & Pole Reversal in 2012 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools) By : Patrich Geryl (May 19, 2009)
      18 Science at NASA – The Sun Does a Flip (February 15 2001)
      19 India Daily Technology Team (Aug 8, 2005)
      20 NASA Claims Sun Polar Shift Due in 2012 (Dec 9, 2005)
      21 Earth Wobbles Linked to Extinctions (Oct 11, 2006)
      22 The Sun’s Magnetic Cycle By Dr. David Stern (April 12, 2007)
      23 Earth’s Magnetic Reversals & Moving Continents By Dr. David Stern (Feb 23, 2008)
      24 The Sunspot Cycle By Mitzi Adams (June 6 2009)
      25 ECTV News Letter – Has The Solar Magnetic Pole Reversal Already Begun ? By : Mitch Battros (Oct 10, 2005)
      26 New Sunspot Activity Threatens Mobile Phone Networks (Jan 7, 2008)
      27 Sun’s Polar Reversal 2012 – The Next Magnetic Polar Shift & Consequences
      28http://www.thinnai.com/?module=displaystory&story_id=40906041&format=html(Earth’s Pole Reversal)
      29 National Geographic Picture Atlas of Our Universe By : Roy Gallant (1986)
      29 (a) National Geographic – Sun Bursts By Curt Suplee (July 2004)
      30 American National Oceanic & Atmospheric Administration (NOAA) Forecast – Next Solar Storm Cycle 24 Will Start Late NOAA Website :http://www.noaa.gov & NOAA’s Space Environment Center: <http://www.sec.noaa.gov&gt; (April 25, 2007)
      31 Philip’s World Atlas – Solar System Profile & Anatomy of the Earth (2005)
      32 Oxford Essential World Atlas – Restless Earth (2006)
      33 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
      34 National Geographic Picture Atlas of Our Word (1990)
      35 Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)

      1.  http://en.wikipedia.org/wiki/Stellar_magnetic_field  [March 7, 2014]
      2.  http://www.sciencedaily.com/releases/2014/11/141119204849.htm  [November 19, 2014]
      3.  http://www.iop.org/news/14/nov/page_64495.html [November 19, 2014]
      4. http://www.spacedaily.com/reports/Suns_rotating_magnetic_field_may_pull_lightning_toward_Earth_999.html [November 24, 2014]
      5. http://en.wikipedia.org/wiki/Stellar_magnetic_field   [November 24, 2014]
      6. http://phys.org/news/2015-04-stars-thunderclouds-earth.html [April 22, 2015]
      7. http://en.wikipedia.org/wiki/Electron%E2%80%93positron_annihilation[April 15, 2015]
      8. http://en.wikipedia.org/wiki/Positron [May 26, 2015]
      9. http://positrons.physics.lsa.umich.edu/current/nanopos/PALS-intro/psitronphysics.htm
      10. https://zedie.wordpress.com/2015/05/13/physicist-finds-mysterious-anti-electron-clouds-inside-thunderstorm/ [May 13, 2015]
    ******************
    S. Jayabarathan [jayabarathans@gmail.com] May 30, 2015
    Attachments area
    Preview YouTube video Electrons and Positron – Simple experiment.

    Electrons and Positron – Simple experiment.

    Preview YouTube video Electron Positron Annihilation – Frank Taylor

    Electron Positron Annihilation – Frank Taylor
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”நீலம் அரவணைக்க நிர்மூலம் ஆகிடும்,
    காலம் இடம்பொருள் ஏவல்கள்: -கோல,
    விடமுறங்கி ஆலில் விளையாடும் பிள்ளை,
    உடனிருக்க உற்சாக ஊற்று”….கிரேசி மோகன்…..

    Share
  • புகை நமக்குப் பகை – புதிய தலைமுறை தொலைக்காட்சி குறும்படங்கள் போட்டி

    (மே 31 ம் தேதி ஞாயிறன்று மதியம் 12.00 மணிக்கு)

     apug

    புகை உயிருக்குப் பகை குறும்படப்போட்டி 2015…வெல்லப்போவது யார் ? (பத்திரிகை குறிப்பு)

    புகை உயிருக்குப் பகை என்ற தலைப்பில் புகை பிடிக்கும் வழக்கம் ஏற்படுத்தும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரையை புதிய தலைமுறைத் தொலைக்காட்சி  மேற்கொண்டது.  கலந்துரையாடல்கள்,  விழிப்புணர்வு குறிப்புகளை அடங்கிய  அறிவிப்புகள், பிரபலங்களின் பேட்டிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஒளிபரப்பியதுடன் புகை உயிருக்குப் பகை என்ற தலைப்பில் குறும்படங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது புதிய தலைமுறைத் தொலைக்காட்சி.

    புகை பிடித்தலின் தீமையை வெளிக்காட்டும் வகையிலும், புகையைத் தவிர்ப்பதை வலியுறுத்தவும் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படங்கள் வரவேற்கப்பட்டன. அந்தவகையில் சுமார் 300 குறும்படங்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் ஒளிபரப்புக்குத் தகுதியானவை என 85 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அந்த 85 படங்களில் புதிய தலைமுறையின் நடுவர் குழு 25 குறும்படங்களைத் தேர்ந்தெடுத்தது. அந்த 25 படங்களின் படைப்பாளிகளை அரங்க்த்திற்கு அழைத்து இயக்குனர் சரண் முன்னிலையில் அந்தப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் முதல் மூன்று பரிசுகளை வென்ற குறும்படங்களும், 10 ஊக்கப்பரிசு பெற்ற குறும்படங்களையும் இயக்குனர் சரண் தேர்ந்தெடுத்து அறிவித்ததுடன், அவர்களுக்குப் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் பரிசுகள் அளித்து கவுரவித்தார்.மேலும் முதல் இரண்டு பரிசுகளைப் பெற்ற குறும்பட இயக்குனர்களுக்கு தன்னுடன் இணைந்து பணியாற்ற உதவி இயக்குனர்கள் வாய்ப்பையும் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

    இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சி புகையிலை எதிர்ப்பு தினமான மே 31 ம் தேதி ஞாயிறன்று மதியம் 12.00 மணிக்கு புதிய  தலைமுறை  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    “அகர முதலவன் ஆக்களைக் காக்க,
    சிகரமதை சுண்டுவிரல் சேர்த்து, -தகரமாட்.
    டுக்கொட்டாய் வேய்ந்தது, தேவர்கோன் கர்வபங்கம்:
    அக்குட்டன் பாகவதம் அன்று’’….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தமக்கு மருத்துவர் தாம்

     

    எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
    தமக்குந் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
    பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை
    தமக்கு மருத்துவர் தாம்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    எமக்கு துணையாவார் வேண்டும் என்று எண்ணி
    தமக்கு துணையாவார் தாம் தெரிதல் வேண்டா
    பிறர்க்கு பிறர் செய்வது உண்டோ மற்றில்லை
    தமக்கு மருத்துவர் தாம்

    பொருள் விளக்கம்:
    துன்பப்படும்பொழுது எனக்குத் துணையாக இருந்து உதவுபவர் தேவை என்று கருதி, தனக்குத் துணையாக இருந்து உதவக்கூடியவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. பிறர் ஒருவருக்கு பிறிதொருவர் செய்யக்கூடும் என்று நம்பியிருக்கத் தக்கது ஏதுமில்லை. நமக்கு ஏற்படக்கூடிய நோயை நாமே நமக்கு மருத்துவர் போல இருந்து காத்துக்கொள்ள வேண்டும் (என்பதைப் போன்று பிறர் உதவியை எதிர்பார்க்காது செயல்பட வேண்டும்).

    பழமொழி சொல்லும் பாடம்: நமக்கு வரும் நோயைத் தவிர்க்கக் கூடிய மருத்துவர் நாமே என்பது போல, தன் கையே தனக்கு உதவி என்று உணர்ந்து, நமக்கேற்ற நன்மைகளை நாமே தேடிக்கொண்டு அடுத்தவரை எதிர்பார்க்காது வாழும் வாழ்க்கையே சிறந்தது.

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும். (குறள்: 619)

    தெய்வமே ஒருவருக்கு உதவ முடியாது கைவிட்டாலும், ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியை அவர் நிச்சயம் அடையமுடியும் என்று வள்ளுவர் அறிவுறுத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே …

    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும். (குறள்: 611)

    நம்மால் இதைச் செய்யமுடியாது என்ற மனத் தளர்வைக் கைவிட்டு, முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமைந்துவிடும்.

    Share
  • பெரியபுராணத்தில் தொண்டுநிலை

    — புலவர் இராமமூர்த்தி.

     

    நம்நாட்டின் சனாதன தர்மமாகிய ஹிந்து மதத்தின் ஆறுவகைக் கடைப்பிடிப்புகளில் சைவ நெறியும் ஒன்று! இந்நெறியில் சிவனடியார்கள் வழிவழியாகக் கடைப்பிடித்து வரும் சிறந்த கொள்கை, மாகேச்சுர பூஜை! மாகேச்சுரபூஜை என்பது சிவனடியார்களை வரவேற்று, அவர்கள் கைகால் தூய்மை செய்து கொள்ள நீர் வழங்கி, வீட்டினுள் அழைத்துவந்து உயர்ந்த இருக்கையில் அமர வைத்து, வழிபாடு செய்து, வேட்கை தீரப் பருகும் நீர் தந்து, நாலுவிதமான உணவை அறுசுவையுடன் சமைத்து, வந்த அடியாரின் விருப்பத்திற்கும், தகுதிக்கும் ஏற்ற வகையில் உணவிட்டு விருந்தோம்புதல் ஆகும்! இதனை சமஸ்கிருதத்தில் அர்க்யம், பாத்யம், ஆசமனீயம், அர்ச்சனம் நைவேத்யம் என்று கூறுவர்.

    இதனைப் பெரியபுராணத்தின் இளையான்குடி மாறநாயனார் புராணத்தில் சேக்கிழார் சுவாமிகள் ,

    ”ஆரம் என்புபு னைந்த ஐயர்தம்
              அன்பர் என்பதோர் தன்மையால்
    நேர வந்தவர் யாவ ராயினும்
              நித்த மாகிய பக்திமுன்
    கூர வந்தெதிர் கொண்டு கைகள்
              குவித்து நின்று செவிப்புலத்து
    ஈர மென்மது ரப்பதம்பரிவு
              எய்த முன்னுரை செய்தபின்

    கொண்டு வந்தும னைப்புகுந்து
              குலாவு பாதம் விளக்கியே
    மண்டு காதலின் ஆசனத்திடை
              வைத்த ருச்சனை செய்தபின்
    உண்டி நாலு விதத்தில் ஆறு
              சுவைத் திறத்தன ஒப்பிலா
    அண்டர் நாயகர் தொண்டர் இச்சையின்
              அமுது செய்ய அளித்துளார்!”

    என்ற திருப்பாடல்களில் தெரிவிக்கிறார்! இதனைத் தம் பரம்பரைக் கடமையாகவே சைவ நன்மக்கள் போற்றி மேற்கொண்டனர்!
    (ஒரு சிறு விளக்கம்:- நாலுவிதம்= உண்ணல், கடித்து நொறுக்கித் தின்னல், பருகுதல், நாவல் நக்குதல் ;
    ஆறுசுவை:- உவர்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு, இனிப்பு என்பன)

    இவ்வகை விருந்தோம்பல் சமயக் கடமை ஆனதால் நாடே பசித்துன்பம் நீங்கி விளங்கியது! இக்கடமையைக் கண்போல் போற்றிய குடும்பங்கள், பணியாளர்கள், அரசர்கள், குடிமக்கள் செய்த சேவை பற்றிய இக்கட்டுரை அவர்களின் கொள்கைப் பிடிப்பை எடுத்துக் காட்டுகிறது.

    சமஸ்கிருதத்தில்,

    மாத்ரு தேவோ பவ:
    பித்ரு தேவோ பவ:
    ஆசார்ய தேவோ பவ:
    அதிதிதேவோ பவ:

    என்ற வழிகாட்டும் பாடல் புகழ் வாய்ந்தது. அப்பாடலின் ”அதிதி தேவோ பவ” என்ற பகுதி சைவத்தின் மாகேச்சுர பூஜையைக் குறிக்கும். இந்த சமய, குடும்பக் கடமையைப் பழங்காலத்தில் தமிழக மக்கள் எவ்வாறு கடைப்பிடித்தனர், என்பதைப் பெரியபுராணம் விரிவாக விளக்குகிறது.

    குடும்பத்தில் கணவன் மேற்கொள்ளும் இந்த நன்னெறியை மனைவிக்கும் வற்புறுத்துவான்; மனைவியும் இதனைக் கணவனுக்கும் கற்பிப்பாள் ; அவர்கள் இல்லத்தின் பணியாளர்களையும் இந்நெறியில் ஈடுபடுத்துவர்; நாட்டின் அரசன் அரசிக்கும், நாட்டின் அரசி அரசனுக்கும், அரசன் பணியாளனுக்கும், பணியாளன் நாட்டு மக்களுக்கும் இந்த நன்னெறியைக் கற்பிப்பார்கள்.

    அவ்வகையில் தம் இல்லத்தில் முற்காலத்தில் ஏவல் கூவல் பணி புரிந்த வேலைக்காரர் ஒருவர் பிற்காலத்தில் சிவனடியாராக தம்மை நாடி வந்த போது, அவரை அலட்சியப் படுத்தி, அவருக்குக் கால் கழுவ நீர் வார்க்கத் தயங்கிய தம் மனைவியாரிடம் சினம் கொண்டு அவர்தம் கரத்தை வெட்டியவர் கலிக்கம்ப நாயனார். தம் உயிர்க் கொள்கையைப் புரிந்து கொள்ளாத மனைவிபால் சினம் கொண்டு அவரைத் தம் வழிக்குத் திருப்பிய வரலாறும்-

    தம் கணவர் தம் சிவபக்தி மாண்பையும், சிவனடியாருக்கு விருந்திடும் கடமையின் சிறப்பையும் அறியாத பரமதத்தன் என்ற பெயருடைய கணவன் முன் புதியதொரு மாங்கனியை வரவழைத்து அவனைச் சிவனடியாராக ஆக்கியவரான காரைக்காலம்மையார வரலாறும்-

    பரசமயத்தினர் பால் மயக்கம் கொண்டு அவர்கள் வகுத்த நெறியில் பாண்டிய நாட்டை ஆண்ட நெடுமாறன் என்ற கூன் பாண்டியனைத் திருஞானசம்பந்தரின் திருநீற்று மகிமையால் திருத்திச் சிவனடியாராக்கிய மங்கையர்க்கரசியார் வரலாறும் –

    சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்டுவந்த சிவனடியார் ‘தலைக்கறி’ யையும் கேட்பார் என்று சிவபிரான் திருவுள்ளத்தை உணர்த்து பணிபுரிந்த சந்தனத்தாதி என்ற பணிப்பெண்ணின் வரலாறும்-

    பரசமயம் நாடிப்போய்ப் பதவியும் பெற்ற திருநாவுக்கரசர் சைவ நன்னெறியை அடைய வேண்டி, ”அம்பொன் மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கிய ” திலகவதியாரின் வரலாறும்-

    ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள்; அனைவரும் சமயக் கடமையை, மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொண்டு கடைப்பிடித்தனர் என்பதை நமக்குப் புலப்படுத்தும்!

    அடுத்து, ”மெய்யெலாம் நீறு பூசி, வேணிகள் முடித்துக் கட்டிச்” சிவனடியார் போல் வேடமிட்டு வந்த முத்தநாதனைக் காப்பது அரசனின் திருவுள்ளம் என்று அறிந்து கொண்டு அவ்வாறே கடைப்பிடித்த தத்தன் என்ற பெயருடைய மெய்க்காப்பாளன் வரலாறும், அந்த மெய்க்காப்பாளன் பேச்சைக் கேட்டு முத்தநாதனைக் கொல்லாமல் பணிந்து விலகிய சேதி நாட்டு மக்களின் கொள்கை ஈடுபாடும், அரசனின் உயிர்க் கொள்கையை அவன் நாட்டுப் பணியாளர்களும் ஈடுபாட்டுடன் பாதுகாத்தனர் என்பதை நமக்குப் புலப்படுத்தும்.

    ஒரு கணவனின் உயிர்க் கொள்கையை மனைவியும், மனைவி கருத்தைக் கணவனும், குடும்பத் தலைவன் கருத்தைப் பணியாளரும், அரசனின் கருத்தை அதிகாரிகளும், பணியாளர்களும் நாட்டு மக்களும் மிகுந்த ஈடுபாடு காட்டி மேற்கொள்ள வேண்டும் என்று பெரியபுராணம் காட்டுகிறது.

    இவை யாவும் ஆன்மிக நெறியில் அடியார்கள் காட்டிய மிகுந்த ஈடுபாட்டினைக் காட்டுகின்றன!

    Share
  • காதலின் பொன்வீதியில் – 6

    மீனாட்சி பாலகணேஷ்.

    நிழலாய் நடந்தாள் அவனோடு!

     

    “ஓ! சாவித்ரி, நில்! திரும்பிச் செல். என்னைத் தொடராதே! திரும்பிச் சென்று உனது அன்புக் கணவன் சத்யவானின் ஈமக்கடன்களைச் செய்!” என்றான் யமதர்ம ராஜன்.

    சாவித்ரி சொன்னாள்: “என் கணவரை என்றென்றும் நிழலாகப் பின் தொடர்வது எனது கடமைகளில் ஒன்றாகும். என் கணவர் மீது நான் கொண்ட அன்பினால், அவர் நன்மைக்காக நான் செய்த நோன்புகளால், யாராலும், ஏன் உன்னாலுமே நான் அவரை, அவர் உயிரைத் தொடர்வதைத் தடுக்க முடியாது யமராஜனே! ஆகவே இப்போதும் கூட, நீர் எங்கு அவர் உயிரைக் கொண்டு செல்கிறீரோ அங்கும் நான் நிழலாய்த் தொடர்ந்து வருவேன்.”

    அப்பப்பா! என்ன உறுதியுடன் வெளிப்படும் திருத்தமான வார்த்தைகள். “நான் அவருடைய நிழல். அவரைத்தானே பின் தொடர வேண்டும்? அது என் கடமையல்லவோ?” கேட்ட யமன் திகைத்து நின்றான் சில கணங்களுக்கு!

    சிறிது பின்னால் நோக்கலாமா?

    *******************************************

    சாவித்ரி: மத்ர நாட்டு மன்னன் அசுவபதியின் ஒரே அருமை மகள். அழகின் சிகரமாகவும், அறிவின் சுடராகவும் விளங்கிய அவளை மணம் புரிந்து கொள்ள இளவரசர்கள் (தாழ்வு மனப்பான்மையால்) தயங்கியமையால், மனம் வருந்திய அவள் தந்தை அசுவபதி, “சாவித்ரி! நீயே சென்று உன் மனதுக்கு உகந்த மணாளனைத் தேர்ந்தெடுத்து வருவாயாக,” என்றார். பல புனிதமான ஆசிரமங்களுக்கும் பல தேசங்களுக்கும் படைகளுடன் செல்கிறாள் அவள். ஆச்சரியம்! தன் மனதைக் கவரக்கூடிய விதத்தில் ஒருவரையுமே சந்திக்கவில்லை. ஒரு வனத்தில், ஆசிரமத்தில் தன் மனத்துக்கிசைந்தவனைக் காண்கிறாள். அவன்…..

    சத்யவான்: சத்யசீலனான உயர்ந்த குணங்கள் படைத்த ஒரு இளவரசன்; அறிவில் உயர்ந்தவன்; உண்மையாளன், உதாரகுணம் படைத்தவன்; எளிமையானவன். மூத்தோர்களிடம் பெரும் மரியாதை கொண்டவன். அழகன்; வீரன்; கொடையாளன். நாட்டை இழந்து கண்களையும் இழந்து விட்ட தந்தை தியுமத்சேனனுடனும் தாயுடனும் கானகத்தில் ஆசிரமத்தில் வசித்து வந்தான். கண்ணிழந்த தந்தையைப் பரிவோடு, கைபிடித்து அழைத்து வந்து, ஆசிரமத்துள் கொண்டு அமர்த்தி, அவருக்கு உணவாகப் பழங்களையும், குடிக்க நீரும் கொடுத்து ஆதரவாக இருப்பதைப் பார்க்கிறாள் சாவித்ரி.

    சாவித்ரியின் மனம் அவனுடைய உயர் குணங்களால் கவரப்பட்டு அவன்பால் காதலில் ஆழ்ந்து விடுகிறது.

    தந்தை அசுவபதியிடம் சென்று தனது முடிவைத் தெரிவிக்கிறாள்.

    ஆனால் அவனிடம் சாவித்ரியே- ஏன் அவனே அறியாத ஒரே ஒரு பெருங்குறை உண்டு- அவனுக்கு நீண்ட ஆயுள் கிடையாது. இன்னும் ஒரு ஆண்டின் முடிவில் இறப்பான்.

    அவனது குறை ஆயுளைப் பற்றி நாரதர் மூலமாக அசுவபதி அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிறான். “மகளே! இத்தனை நாள் உனக்குப் பொருத்தமானவனைத் தேடியலைந்தது இதற்குத் தானா? நீண் ட ஆயுள் கொண்ட வேறு ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொள் அம்மா! அதில் ஒன்றும் தப்பில்லை!” என்கிறான்.

    சாவித்ரி திட சிந்தையுடன் கூறுகிறாள்: “மரணம் நேர்வது ஒரு முறையே! ஒரு பெண்ணை அவளுடைய தகப்பனார் கன்யாதானம் செய்து கொடுப்பதும் ஒரு முறை தான். என் மனதில் நான் ஒருவரைக் கணவராக வரித்ததும் ஒரு முறையே! ஆகவே வேறு ஒருவரை எண்ணிப் பார்க்க இயலாது,” என்கிறாள்.

    கனத்த இதயத்துடன் அசுவபதி கோலாகலமாகத் தன் மகளை சத்யவானுக்குத் திருமணம் செய்வித்துப் பின் கானகத்திற்கு அவனுடன் வாழ அனுப்பி வைக்கிறான்.

    திருமணத்தின் பின்: கானகத்து ஆசிரமத்தில் சத்யவானுடன் அவன் தாய் தந்தையருக்குப் பணி செய்து வாழ்கிறாள். தனது உடலை வருத்திப் பல நோன்புகளை அவனுடைய நீண்ட ஆயுளுக்காகக் கடைப்பிடிக்கிறாள். நாட்கள் விரைகின்றன.

    ஒரு வருடம் முடியப் போகிறது. கடைசி நாள்! அன்றைய தினம் தானும் சத்யவானுடன் அவனை நிழலாகத் தொடர்ந்து காட்டுக்குச் செல்கிறாள். உலர்ந்த மரக்கிளைகளை வெட்டி விறகு சேகரிக்கும் கணவனைப் பார்த்தபடி எப்போது என்ன நேரும், அதனை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்ற தவிப்புடன் அமர்ந்திருக்கிறாள் சாவித்ரி.

    “சாவித்ரி! எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. தலையை வலிக்கிறது. சிறிது நேரம் இளைப்பாறுகிறேன்,” எனக் கோடாலியைக் கீழே போட்டுவிட்டுத் தன்னருகே வந்த சத்யவானைத் தன் மடிமீடி தலைவைத்து ஓய்வெடுக்கச் செய்கிறாள்.

    savithiriதிடீரென எங்கும் இருள் படர்கிறது. அந்த இருளினூடே சாவித்ரி, புகை போன்ற ஒரு வடிவைக் காண்கிறாள். அவள் முன்பு நிற்பது யம தர்மராஜன்; மரணத்தின் கடவுள்! “உன் கணவனின் உயிரைக் கொண்டு செல்ல வந்துள்ளேன்,” என அறிவிக்கிறான். சாவித்ரியின் மடியில் கிடந்த சத்யவானின் உடல் தொய்கின்றது; பாசக் கயிற்றில் சத்யவானின் உயிரைப் பிணைத்து எடுத்துச் செல்கிறான் யமதர்மராஜன். கணவனின் உடலை மிருகங்களும் பறவைகளும் தீண்டி சேதப்படுத்தாத வகையில், இலை, தழை, மரக்கிளைகளால் மூடி வைத்து பத்திரப்படுத்தி விட்டு யமன் பின்னால் ஓடோடிச் சென்று சாவித்ரி அவனைப் பின் தொடர்கிறாள்.

    “சாவித்ரி! நில்! உனக்கு இன்னும் காலம் வரவில்லை. என்னைத் தொடராதே! திரும்பிச் செல்,” என்கிறான் யமதர்ம ராஜன்.

    இவை தான் நாம் மேலே கண்ட நிகழ்ச்சியும் உரையாடலும்!

    பலவாறு மறுத்துக் கூறிய அவளுடைய சொற்களைக் கேட்ட யமன், “உன் உறுதியைக் கண்டு நான் வியக்கிறேன். உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எந்த வரத்தையாவது கேள்!” என, சாவித்ரி தன் மாமனாரான அரசன் தியுமத்சேனன் இழந்த கண்பார்வையைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்கிறாள். வரத்தை அருளினான் யம தர்ம ராஜன்.

    திரும்பவும் தன்னைப் பின் தொடர்ந்த சாவித்ரியை திரும்பிப் போகுமாறு யமன் கூற, அவளோ, “என் கணவர் இருக்குமிடமே எனது இடமும் ஆகும். எனக்குக் களைப்பில்லை,” என்கிறாள். மனமிரங்கிய யமன், “உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எதையாவது வரமாகக் கேள்,” எனக் கூறவே, இம்முறை மாமனாராகிய தியுமத்சேனன் இழந்த நாட்டைத் திரும்ப அடையட்டும் எனக் கேட்கிறாள் அவள்.

    மறுபடியும் தன்னைத் தொடரும் இளம் பெண்ணான அவள் கூறும் ஆன்ம சிந்தனை நிறைந்த சொற்களைக் கேட்டு மகிழ்ந்த எமனிடம், மூன்றாவது வரமாகத் தன் தந்தை அசுவபதியின் குலம் தழைக்க நூறு மகன்களையும், நான்காவது வரமாகத் தனக்கும் நூறு புத்திரர்கள் பிறக்கும்படியும் வரங்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறாள் சாவித்ரி.

    அவ்வரங்களைக் கொடுத்துவிட்டு விரைகின்றான் யமதர்மன். சத்யவானின் உயிரைப் பாசக்கயிற்றால் பற்றிக் கொண்டு செல்லும் தன்னை இன்னும் விடாது பின் தொடரும் சாவித்ரியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவன் சிறு பெண்ணான அவளிடம் பரிதாபம் கொள்கிறான்.

    அவளைத் திரும்பிச் செல்லக் கூறுகிறான்; அதை மறுத்து அவள் பேசும் அறநெறி செறிந்த சொற்களைக் கேட்ட யமன், “காதல் கணவனிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டுள்ளவளே, உன் கணவன் உயிரைத் தவிர ஏதேனும் ஒப்பற்ற ஒரு வரத்தைக் கடைசியாகக் கேள்,” என, அவள், “நீர் ஏற்கெனவே கொடுத்த வரம்- எனக்கு நூறு மகன்கள் பிறப்பர் எனும் வரம்- உண்மையாக வேண்டுமெனில், எனக்குக் கணவனான சத்யவானின்றி அது சாத்தியப்படாது!

    “தர்ம ராஜனான உமது சொற்கள் பொய்க்கக் கூடாது! எனது கணவரில்லாமல் உலகில் நான் எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்க விரும்பவில்லை. சுவர்க்கமும் எனக்கு வேண்டாம். கணவரில்லாவிடின் நான் இறந்தவள் போல்பவளே! எனக்கும் சத்யவானுக்கும் உமது வாக்குப்படி புத்திரர்கள் பிறக்க அவர் உயிரை நீர் திருப்பித் தர வேண்டும்!” என்றாள்!

    பிரமித்து நின்றான் யமதர்ம ராஜன். ஆஹா! இந்த புத்திசாலிப்பெண் அவனைத் தன் வாக்கு வன்மையால் மடக்கிக் காரியத்தைச் சாதித்துக் கொண்டு விட்டாளே! யமனுக்குக் கோபம் வரவில்லை! மாறாக அளவு கடந்த மரியாதையும், பாசமும் இந்த அற்புதமான பெண் சாவித்ரி பால் ஏற்பட்டது. இப்படியும் ஒருத்தியா? கணவன் மேல் அவள் கொண்ட மாறாத பெருங்காதல் ஒன்றே, அவளுக்கு மிக அதிகமான சக்தியை, யமதர்ம ராஜனுடன் வாதிட்டு வெல்லும் பெரும் பலத்தை, வாக்கு சாதுரியத்தை அளித்திருக்கிறது.

    “சாவித்ரி! நீ என்னை வென்று விட்டாய். கணவன் மீது நீ கொண்டுள்ள உறுதியான அன்பும் காதலும் தான் இதனை நடத்தி வைத்தது,” என்றான் யமன்.

    பாசக்கயிற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட சத்யவானின் உயிர் உடலைச் சென்றடைகின்றது. கணவனின் உடலை ஒளித்து வைத்த இடத்திற்கு ஓடோடிச் செல்கிறாள் சாவித்ரி. உறக்கத்திலிருந்து எழுந்தவன் போல் எழுகிறான் சத்யவான். நடந்தது ஒன்றினையும் அவன் அறிந்தானில்லை.

    “சாவித்ரி! நான் மிகவும் களைப்படைந்திருக்கிறேன்,” என்பவனைக் காதலும் கருணையும் பொங்க நோக்குகிறாள் அவள். உள்ளம் உவகையில் விம்முகின்றது.

    அவன் கரத்தினை ஆதுரத்துடன் பற்றியபடி, பெண்மையின் மென்மையும், திண்மையும் விகசிக்க, ஆசிரமத்தை நோக்கிக் காதலின் பொன்வீதியில், அந்தப் புனிதப் பெரும் பாட்டையில் வெற்றிநடை பயிலுகிறாள் சாவித்ரி என்னும் பெண்கள் குலத் திலகம்!

    ***********************************************

    முதல் வரத்திலேயே சாதுரியமாக புத்திரர்களைக் கேட்டுக் கணவனின் உயிரை அவள் ஏன் பெறவில்லை?

    எதற்காக மற்ற எல்லா வரங்களையும் கேட்டாள்?

    இவை நம் உள்ளத்தில் எழும் வினாக்கள்.

    தன் விருப்பப்படித் தானே தேர்ந்தெடுத்த காதல் கணவனுடன் இன்ப வாழ்வு வாழ வேண்டுமாயின், அவனுடைய தாயும் தந்தையும் பழையபடி இன்புற்றிருக்க வேண்டும். அதற்கு அரசனான தியுமத்சேனன் அவர் இழந்த கண்பார்வையை மீண்டும் பெற வேண்டும்; நாட்டையும் திரும்பப் பெற வேண்டும். சுற்றமும் சொந்தங்களும் வாழ்த்த வாழும் இன்பமான காதல் வாழ்வு எத்தனை இனிமையானது என உணர்ந்தவள் சாவித்ரி.

    அடுத்து, மனதிற்குகந்த மணாளனைத் தேடித் தேர்ந்தெடுக்க அனுமதி தந்தவர் தந்தை அசுவபதி. அவள் தேர்ந்தெடுத்த கணவனோ ஓராண்டில் இறந்து விடுவான் என அறிந்தும் அவள் விருப்பப்படி சத்யவானுக்கே அவளை மணம் செய்து கொடுத்தவர். அவருக்கோ தமது குலம் தழைக்க மகன் இல்லாத நிலை. ஆகவே தனது அருமைத் தந்தைக்காக பிள்ளை வரம் கேட்க சாவித்ரி யமனின் அடுத்த வரத்தைப் பயன் படுத்துகிறாள்.

    இப்போது புகுந்த வீடும் பிறந்த வீடும் நல்வாழ்வு பெற வழி செய்தாகி விட்டது. இனி இந்தச் சூழ்நிலையில் காதல் தலைவனுடன் வாழ்வது தான் காதலின் வெற்றி என்பது அவளுடைய எண்ணம். ஆகவே யமராஜன் தன் கணவன் உயிரைத் தந்தே ஆகுமாறு செய்யும் ஒரு வரத்தினை – சாதுரியமான பிள்ளை வரமாக- அடுத்துக் கேட்கிறாள். அதுவும் கிடைத்து விடுகிறது. பின்பு தான் அந்த வரத்தினுள் சாமர்த்தியமாகப் புகுத்திய தன் தலைவனின் உயிரின் இன்றியமையாத தேவையை யமராஜனுக்கு விளக்குகிறாள். அதைக் கொடுத்துத் தன் வாக்கைக் காப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை என்ற நிலைமையை உருவாக்கி விடுகிறாள் சாவித்ரி எனும் திட மதி படைத்த பெண்.

    காதலின் வலிமை எத்தனை மன உறுதியையும் துணிவையும் ஒருவருக்கு அளித்து விடுகின்றது என்பதை எண்ணியெண்ணி வியக்காமல் இருக்க இயலவில்லை அல்லவா?

    ***********************************************

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    இங்கிலாந்தின் இணையற்ற சிந்தனையாளர் – பெர்ட்ரண்ட் ரசல் (Bertrand Russell)

    Bertrand_Russellபுகழ்பெற்ற தத்துவவாதி, ஏரணவியலர்(தருக்கவாதி), கணிதவியலாளர், சமூகச் சீர்திருத்தவாதி எனப் பன்முகங்கள் கொண்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் ஆர்தர் வில்லியம் ரஸல் ஆவார். அவருடைய பகுப்பாய்வுத் தத்துவவியல் (analytical philosophy) 20-ஆம் நூற்றாண்டில் சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தையும் புரட்சியையும் தோற்றுவித்தது எனில் மிகையில்லை.

    பிரிட்டனிலுள்ள மேட்டுக்குடியினரிடம் பெரும் செல்வாக்குக் கொண்ட வளமான குடும்பமொன்றில் மே 18, 1872-இல் பிறந்தார் பெர்ட்ரண்ட் ரஸல். அவருடைய தாய் தந்தையர் இருவருமே முற்போக்குச் சிந்தனைகள் உடையோர். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், அருமை அன்னையின் அன்பைத் தொடர்ந்து பெறமுடியாத வகையில் ரஸலின் வாழ்வில் விதி குறுக்கிட்டது. ஆம்! தன்னுடைய இரண்டாவது வயதிலேயே டிப்தீரியா நோய்க்குத் தாயைப் பலிகொடுத்த ரஸல், தன் இளமைப் பருவத்தைப் பாட்டி வீட்டில் கழித்தார். அதனால்தானோ என்னவோ, அவர் பாட்டிக்குப் பிடித்த விவிலிய வாசகமான “கும்பலைப் பின்பற்றிப் பிறருக்குத் தீங்கு செய்யாதே!” என்பதே பின்னாளில் அவருடைய தாரக மந்திரமாயிற்று!

    தன் இளமைப்பருவத்தைப் பெரும்பாலும் தனிமையிலேயே கழிக்கவேண்டிய அவலநிலை ரஸலுக்கு நீடித்ததால், தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி அவருக்குத் தலையெடுத்திருக்கின்றன. அத்தருணங்களிலெல்லாம் தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தவை ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் படைப்புக்களே என்று தன் சுயசரிதையில் ரஸல் குறிப்பிடுவது, ஷெல்லியின் ஆளுமையை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.

    பள்ளிக்கல்விக்குப்பின், கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் கணிதம், தத்துவம் ஆகியவற்றை விருப்பப் பாடங்களாகப் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார் ரஸல்.

    தன் வாழ்நாள் முழுவதுமே அரசியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்த பெர்ட்ரண்ட் ரஸல், போருக்கு எதிரான புரட்சியாளராகவும் (anti-warist), முதலாளித்துவத்தை முற்றும் எதிர்ப்பவராகவும் (anti-imperialist) திகழ்ந்தார். அவருடைய எண்ணங்களும் எழுத்துக்களும் இடதுசாரிச் சிந்தனையாளராக அவரை அடையாளப்படுத்தினாலும், தன்னை முழுமையான பொதுவுடைமைவாதி என்று கூறுவதற்கில்லை என்று அவரே குறிப்பிட்டிருப்பது இங்கே எண்ணத்தக்கது.

    1896-ஆம் ஆண்டு தன்னுடைய அரசியல் ஆய்வு நூலான ‘ஜெர்மானிய சமுதாய மக்களாட்சி’யைப் பதிப்பித்து வெளியிட்டார். 1905-ஆம் ஆண்டு ’மைண்ட்’ எனும் தத்துவ இதழில் இவருடைய ‘ஆன் டினோட்டிங் (On denoting) எனும் புகழ்பெற்ற கட்டுரை வெளியானது. 1903-இல் கணிதக் கோட்பாடுகள் (principles of mathematica) என்ற நூலையும், 1910-இல் ’கணித அணுகுமுறை’ என்ற மற்றொரு நூலையும் வெளியிட்டார்.

    1914—ஆம் ஆண்டு தொடங்கிய முதல் உலகப்போரை (World War I) எதிர்த்ததால் அவர் சிறைசெல்ல நேரிட்டது. அதற்காக அவர் மனந்தளரவில்லை. போருக்கு எதிரான அவருடைய சிந்தனைகளிலும் மாற்றமில்லை. 1939-இல் மீண்டும் தொடங்கிய இரண்டாம் உலகப்போரையும் (World War II) அவர் கடுமையாக எதிர்த்து அதற்குக் காரணமாயிருந்த ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருக்கு எதிராகப் பிரசாரங்கள் செய்தார்.

    தன்னுடைய சொந்த வாழ்வில் பல்வேறு சிக்கல்கள், தொடர் மணமுறிவுகள் என்று தோல்விகள் ஒருபக்கம் இருந்தாலும் அதன்காரணமாய் அவருடைய எழுத்துப்பணிகள் முடங்கிப்போகவில்லை. தொடர்ந்து பல்வேறு நூல்களை எழுதிக் குவித்தார். அவருடைய மேனாட்டுத் தத்துவத்தின் வரலாறு (History of Western Philosophy) பரபரப்பாக விற்பனையாகிப் பணமழையைக் கொட்டச் செய்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1950-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.

    தருக்கவியல், அறிவியல், மொழியியல், கணிதம் எனப் பல்துறைகளில் தொடராய்வுகள் செய்து நூல்கள் எழுதி வெளியிட்ட ரஸல், இறையியல் குறித்தும் தன் கருத்துக்களை எவ்வித ஒளிவுமறைவுமின்றித் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இறைநம்பிக்கையைப் பொறுத்தவரைத் தான் நாத்திகனும் அல்லன்; ஆத்திகனும் அல்லன்; கடவுளைப்பற்றியே கவலைப்படாதவன் (Agnostic) என்று கூறியிருக்கிறார் அவர்.

     இன்றளவும் பிரபலமாகத் திகழ்ந்துவரும் அவருடைய கிறித்துவ இறையியல் மறுப்பு நூலான ‘நான் ஏன் ஒரு கிறித்துவன் இல்லை? (Why I am not a Christian?) எனும் நூலில் அவர் முன்வைக்கும் கருத்துக்களாவன:

    ”மதம், முக்கியமாக அச்சத்தின் மேல் உண்டாக்கப்பட்டதுதான் என எண்ணுகிறேன். அதன் ஒரு பகுதி, நமக்கு தெரியாதவற்றைப் பற்றிய நம் அச்சம்; மற்றொரு பகுதி, நம் பக்கத்திலேயே ஓர் சகோதரன் இருந்து நம் துக்கங்களிலும், துயரங்களிலும் ஆதரவு கொடுப்பதுபோன்ற ஓர் உணர்வு! ஒரு நல்ல உலகமானது அறிவு, கருணை, திடமனம் இவற்றை வேண்டுகிறது. அது கடந்த காலத்தின் மேல் பச்சாதாபமுள்ள புலம்பல்களையும், நெடுங்காலத்திற்குமுன் அறிவற்றவர்கள் சொன்ன வார்த்தைகளால் சிறைப்படுவதையும் விரும்பவில்லை”

    அணுஆயுதத் தடையில் தொடர்ந்து ஆர்வம் காட்டினார் ரஸல். 1955-ஆம் ஆண்டு அணுகுண்டுப் பயன்பாட்டைக் கைவிடுவதற்கான ரஸல்-ஐன்ஸ்டைன் பிரகடனம் பதினொரு அணுஇயற்பியலாளர்களின் உடன்பாட்டுடன் கையெழுத்தானது.

    தன் வாழ்நாளின் கடைசிவரைத் தன் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாத மனவுறுதியுடன் வாழ்ந்த பேரறிஞர் ரஸல், பிப்ரவரி 2, 1970-இல் மறைந்தார். அவருடைய விருப்பப்படியே அவர் உடல் எவ்வித மதச் சடங்குகளுக்கும் உட்படுத்தப்படாது எரிக்கப்பட்டது.

    இங்கிலாந்தின் இணையற்ற சிந்தனையாளரான ரஸல், “எல்லாவிதமான மூடப்பழக்கங்களுக்கும், கொடுமைகளுக்கும் பிறப்பிடமாயிருப்பது அச்சமே; அத்தகைய அச்சத்தை வெல்வதே அறிவின் தொடக்கமாகும்” என்று கூறியிருப்பது நாம் எண்ணிப்பார்க்க ஏற்றது. எனவே அச்சத்தை விடுத்து அறிவைத் துணைகொள்வோம்!

    ***

    கட்டுரைக்கு உதவிய தளங்கள்:
    http://en.wikipedia.org/wiki/Bertrand_Russell

    http://www.brainyquote.com/quotes/authors/b/bertrand_russell.html
    http://www.britannica.com/EBchecked/topic/513124/Bertrand-Russell

     

    Share
  • துரத்தியடிக்கும் நாள் !

    -கனவு திறவோன்

    என் உடல் சலனமற்றுக்
    கிடப்பது கண்டு
    புதைத்து விடாதீர்கள்!
    புதைப்பது எங்கள் குல வழக்கமல்ல!

    எரித்து விடாதீர்கள்!
    சடலத்தை எரிப்பது
    என் மதக் கொள்கைக்கு முரணானது!

    ஆற்றில் போட்டு விடாதீர்கள்!
    சுற்றுச் சூழலைப்
    பேணியவன் நான்
    என் உடலால்
    அது மாசு பட வேண்டாம்!

    விட்டு வையுங்கள்…
    கூடு மறந்த உயிர்
    என்றேனும் ஒரு நாள் திரும்பும்…
    அது
    அவள் துரத்தியடிக்கும்
    நாளாகக் கூட இருக்கலாம்!

     

    Share
  • சாதனையின் நோக்கம்

    -கனவு திறவோன்

    நான் சாதித்த போது
    எல்லோரும் தட்டினார்கள்…
    பலர் கையைச்
    சிலர் என் முதுகைச்
    சிலர் என் தோளை !

    எல்லோரும் தட்டினார்கள்
    சத்தமாய்…
    நீ மட்டும் கடைசி வரைத் தட்டவேயில்லை..!

    சத்தம் அடங்கியதும்
    நீ மெலிதாய்ப் புன்னகைத்தாய்
    அந்தக் கள்ளச் சிரிப்பின்
    அர்த்தம்
    விலை
    எனக்கு மட்டும் தானே தெரியும்…!

    எல்லோரும்
    நான் சாதித்ததற்காகத் தட்டினார்கள்
    நான் சாதித்ததே
    உன் இதயக் கதவைத் தட்டத்தான்
    என்பதறிந்துதானே
    நீ சிரித்தாய்!

     

    Share
  • அந்த மாமரம்!

    -பா. வானதி வேதா. இலங்காதிலகம்

    அந்த மாமரம் அன்று
    சொந்த மாமரம் எமக்கு
    தந்த நிழற் குடையில்
    குந்தப் பாய்விரித்த
    முந்தை அனுபவம் இது
    சந்தமாய் நெஞ்சில் பாயுது!

    வாழ்வூக்கிய பால பருவ
    வான் நோக்கிய மாமரம்
    புல் வெட்டிப் பசுந்தாகக்
    கல் பொறுக்கிச் சுத்தமாகச்
    சருகுகள் கூட்டி அள்ளி
    ஒருமையாய் ஒரு மைதானமாக்கி
    அருமையாய் அப்பா சகோதரர்களுடன்
    ஒருத்து அனுபவித்த வசந்தம்
    பெருமையான மாலைப் பொழுதுகள்
    கருமையற்ற மனமினித்த காலங்கள்!

    தேன் சுவையான மாம்பழம்
    பென்னம் பெரிய மாம்பழம்
    இன்று நினைத்தாலும் ஏக்கம்!
    மாலைத் தென்றல் பெரும்
    சாலையெனப் புகுந்து விளையாடி
    வாலையாட்டிச் சாமரம் வீசியது
    ஊஞ்சல் கட்டி ஆடி
    உறவாடிய பசும் கொற்றக்குடை!

    பெரிய கல்லோ ஒரு
    பெரிய வேரின் புடைப்பையோ
    சிம்மாசனமாக்கிக் கூடி அமர்ந்து
    சிரித்து ரசித்த ரசனை
    சிந்தை நிறைந்து வழிகிறது
    கூட்டுக் குடும்பமாய் மாமரத்தடியில்
    குலவியதை நெஞ்சம் மறக்காதது!
    குறை! இன்றைய பிள்ளைகளறியாதது!

     

    Share
  • நாட்டுப்புறப் பாடல்!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    பெண்:   ஏரிக்கரை        ஓரத்திலே
    ஏத்தம்        இறைக்கையிலே
    என்மனசைப்    பறிகொடுத்தேன் மாமா
    உன்மனசில்     எனக்கிடம் தரலாமா?

    ஆண்:    கண்டாங்கி      சேலைகட்டிக்
    கை  நிறையக்    கொசுவம் வைச்சுக்
    கஞ்சிக்கலையம் சுமந்துவரும் கண்ணம்மா என்
    நெஞ்சுக்குள்ளே   நீ இருக்கே தெரியுமா?

    பெண்:   வக்கணையாச்    சோறாக்கி
    வட்டிலிலே      போட்டுவைச்சேன்
    சட்டமாத்   தின்னுபோட்டு நீ
    வெட்டிக்கதை    பேசாம
    விரசா வந்து     பரிசம் போடு  மாமா உன்
    சரசமெல்லாம்    தாலிக்கப்புறமா!

    ஆண்:  நாளும்  நல்லா  உழைச்சு  நான்
    நாலு காசு     சேர்த்துச்
    சொந்தக்காலில்     நின்னு
    வந்து உன்னை    முறையா கேட்பேன்   தாலி
    தந்தபின்னே      உன்னைத்தொடுவேன்!

    பெண்:  வாழ்ந்தால் உன்   கூட வாழணும்
    உன்கையாலே   பூமாலைவாங்கோணும்
    அதுதானே    என்   ஆசை மாமா!

    ஆண்:   எனக்கது நீ     சொல்லித் தெரியணுமா?
    உனக்காகத் தானே நான் இருக்கேன் கண்ணம்மா!

    இருவரும்:   நல்ல நாளும்     கனியட்டும்
    நாடு நல்லாச்      செழிக்கட்டும்
    பெத்தவங்க      ஆசியோடும்
    மத்தவங்க     வாழ்த்தோடும்
    மணவறையில்   அமர்ந்திடுவோம் நாமே
    வானம் பூமிபோல நிறைஞ்சிருப்போம்
    வாழ்வு தாழ்விலே   இணைஞ்சிருப்போமே!

     

    Share
  • காலம் (7)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x15011

    பாட்டுக்குள் மெட்டுண்டு பார்க்காது போனாலும்
    மேட்டுக்குப் பையிலும் மின்னுகிற பட்டுண்டு ;
    வாட்டமே வேண்டாம் வசந்தம் வருவதுண்டு
    நாட்டமாய் நல்லதே நாடு. (61) 01.03.2015

    தண்ணீர் படப்படத் தாவரம் வாழுமே !
    கண்ணீர் விடவிடக் கள்ளமும் பண்புள
    மாகுமே ! குற்ற மனமழ ஞானத்தில்
    ஏகுமே ஏகாந்த உள். . (62) 02.03.2015

    கதை,கவிதை , கட்டுரை , கற்பனை வார்த்தை
    எதையுமே நம்பாதீர் ! எல்லாம் உதைபடுது !
    சொல்லெலாம் வீண்தான் ; சுநாதமாய் மூச்சிலே
    எல்லோர்க்கும் கேட்கு(ம்) இசை. (63) 03.03.2015

    கடலையே பார்த்திருந்தேன் கண்ணெல்லாம் நீலம் ;
    உடனேயே நீரை ஒருகை எடுத்தேன்
    அதில்நிற மில்லை ; அனுபவம் நன்றாய்
    பதில்தரப் பாடம் படி. (64) 04.03.2015

    ஆர்பரிக்கும் பேரருவி ஆளோடும் ஆடுமே
    சேர்த்து அடித்துடன் சீறியே பாயுமாம் ;
    தீர்ப்பை இறைவனும் தீம்பின்றிக் கூறுவான்
    சீர்மதி கொண்டோன் சிறப்பு . (65) 05.03.2015

    மாமழை கொட்டிப்பின் மாமலை மீதிறங்கி
    பூநடை ஆறாகிப் போய்கடல் சேர்த்தல்போல்
    ஊரெல்லாம் சுற்றியே ஓய்ந்த மனமுள்ளே
    ஆரெனத் தேடு(ம்) அதை. (66) 06.03.2015

    குருவம்சம் என்றும் குறையாத ஞானம்
    தருவம்சம் ; பாரெலாம் தாங்கும் கருவம்ச(ம்)
    இல்லா ஒளிவம்சம் ; ஏணியாய்ச் சீறேற்றி
    நல்லோராய் மாற்றும் நலம். (67) 07.03.2015

    சட்டையில் பட்ட சகதியைப் போக்கவே
    சட்டெனக் கையாலே தட்டினேன் ஒட்டியது
    போகாமல் முன்ஜென்ம தொட்ட குறையென
    கூடவே ஈஷிய கூத்து. . (68) 08.03.2015

    மலரடியில் முள்ளிருக்கும் வாசமோ முள்ளை
    விலக்காது வீசிவரும் ; வீணர் பலபேராய்க்
    கூடி இகழ்ந்தாலும் கொட்டும் மழைபோலப்
    பாடி மகிழப் பழகு. . (69) 09.03.2015

    பாறையில் தண்ணீரோ பாய்ந்தே அடிக்கிறது ;
    பாறையோ கம்பீர பாவனையில் மோன
    நிலையில் அசையாது நிற்கிறது ; காலம்
    விலையில்லா ஞான விதை. (70) 10.03.2015

    Share
  • அரசியல்

    -கனவு திறவோன்

    யாரோ விதை ஊன்றி
    யாரோ நீர் பாய்ச்சி
    யாரோ உரம் கொட்டிப்
    போனார்கள்
    என்றாலும்
    காத்திருந்தோம்
    முளை விடும்
    விருட்சம் தரும் என்று
    மலட்டு விதையென்று
    அறியாமலே!

    Share