பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: தமக்கு மருத்துவர் தாம்
எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
தமக்குந் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை
தமக்கு மருத்துவர் தாம்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
எமக்கு துணையாவார் வேண்டும் என்று எண்ணி
தமக்கு துணையாவார் தாம் தெரிதல் வேண்டா
பிறர்க்கு பிறர் செய்வது உண்டோ மற்றில்லை
தமக்கு மருத்துவர் தாம்
பொருள் விளக்கம்:
துன்பப்படும்பொழுது எனக்குத் துணையாக இருந்து உதவுபவர் தேவை என்று கருதி, தனக்குத் துணையாக இருந்து உதவக்கூடியவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. பிறர் ஒருவருக்கு பிறிதொருவர் செய்யக்கூடும் என்று நம்பியிருக்கத் தக்கது ஏதுமில்லை. நமக்கு ஏற்படக்கூடிய நோயை நாமே நமக்கு மருத்துவர் போல இருந்து காத்துக்கொள்ள வேண்டும் (என்பதைப் போன்று பிறர் உதவியை எதிர்பார்க்காது செயல்பட வேண்டும்).
பழமொழி சொல்லும் பாடம்: நமக்கு வரும் நோயைத் தவிர்க்கக் கூடிய மருத்துவர் நாமே என்பது போல, தன் கையே தனக்கு உதவி என்று உணர்ந்து, நமக்கேற்ற நன்மைகளை நாமே தேடிக்கொண்டு அடுத்தவரை எதிர்பார்க்காது வாழும் வாழ்க்கையே சிறந்தது.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (குறள்: 619)
தெய்வமே ஒருவருக்கு உதவ முடியாது கைவிட்டாலும், ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியை அவர் நிச்சயம் அடையமுடியும் என்று வள்ளுவர் அறிவுறுத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே …
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். (குறள்: 611)
நம்மால் இதைச் செய்யமுடியாது என்ற மனத் தளர்வைக் கைவிட்டு, முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமைந்துவிடும்.