— புலவர் இராமமூர்த்தி.

 

நம்நாட்டின் சனாதன தர்மமாகிய ஹிந்து மதத்தின் ஆறுவகைக் கடைப்பிடிப்புகளில் சைவ நெறியும் ஒன்று! இந்நெறியில் சிவனடியார்கள் வழிவழியாகக் கடைப்பிடித்து வரும் சிறந்த கொள்கை, மாகேச்சுர பூஜை! மாகேச்சுரபூஜை என்பது சிவனடியார்களை வரவேற்று, அவர்கள் கைகால் தூய்மை செய்து கொள்ள நீர் வழங்கி, வீட்டினுள் அழைத்துவந்து உயர்ந்த இருக்கையில் அமர வைத்து, வழிபாடு செய்து, வேட்கை தீரப் பருகும் நீர் தந்து, நாலுவிதமான உணவை அறுசுவையுடன் சமைத்து, வந்த அடியாரின் விருப்பத்திற்கும், தகுதிக்கும் ஏற்ற வகையில் உணவிட்டு விருந்தோம்புதல் ஆகும்! இதனை சமஸ்கிருதத்தில் அர்க்யம், பாத்யம், ஆசமனீயம், அர்ச்சனம் நைவேத்யம் என்று கூறுவர்.

இதனைப் பெரியபுராணத்தின் இளையான்குடி மாறநாயனார் புராணத்தில் சேக்கிழார் சுவாமிகள் ,

”ஆரம் என்புபு னைந்த ஐயர்தம்
          அன்பர் என்பதோர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும்
          நித்த மாகிய பக்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்
          குவித்து நின்று செவிப்புலத்து
ஈர மென்மது ரப்பதம்பரிவு
          எய்த முன்னுரை செய்தபின்

கொண்டு வந்தும னைப்புகுந்து
          குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆசனத்திடை
          வைத்த ருச்சனை செய்தபின்
உண்டி நாலு விதத்தில் ஆறு
          சுவைத் திறத்தன ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையின்
          அமுது செய்ய அளித்துளார்!”

என்ற திருப்பாடல்களில் தெரிவிக்கிறார்! இதனைத் தம் பரம்பரைக் கடமையாகவே சைவ நன்மக்கள் போற்றி மேற்கொண்டனர்!
(ஒரு சிறு விளக்கம்:- நாலுவிதம்= உண்ணல், கடித்து நொறுக்கித் தின்னல், பருகுதல், நாவல் நக்குதல் ;
ஆறுசுவை:- உவர்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு, இனிப்பு என்பன)

இவ்வகை விருந்தோம்பல் சமயக் கடமை ஆனதால் நாடே பசித்துன்பம் நீங்கி விளங்கியது! இக்கடமையைக் கண்போல் போற்றிய குடும்பங்கள், பணியாளர்கள், அரசர்கள், குடிமக்கள் செய்த சேவை பற்றிய இக்கட்டுரை அவர்களின் கொள்கைப் பிடிப்பை எடுத்துக் காட்டுகிறது.

சமஸ்கிருதத்தில்,

மாத்ரு தேவோ பவ:
பித்ரு தேவோ பவ:
ஆசார்ய தேவோ பவ:
அதிதிதேவோ பவ:

என்ற வழிகாட்டும் பாடல் புகழ் வாய்ந்தது. அப்பாடலின் ”அதிதி தேவோ பவ” என்ற பகுதி சைவத்தின் மாகேச்சுர பூஜையைக் குறிக்கும். இந்த சமய, குடும்பக் கடமையைப் பழங்காலத்தில் தமிழக மக்கள் எவ்வாறு கடைப்பிடித்தனர், என்பதைப் பெரியபுராணம் விரிவாக விளக்குகிறது.

குடும்பத்தில் கணவன் மேற்கொள்ளும் இந்த நன்னெறியை மனைவிக்கும் வற்புறுத்துவான்; மனைவியும் இதனைக் கணவனுக்கும் கற்பிப்பாள் ; அவர்கள் இல்லத்தின் பணியாளர்களையும் இந்நெறியில் ஈடுபடுத்துவர்; நாட்டின் அரசன் அரசிக்கும், நாட்டின் அரசி அரசனுக்கும், அரசன் பணியாளனுக்கும், பணியாளன் நாட்டு மக்களுக்கும் இந்த நன்னெறியைக் கற்பிப்பார்கள்.

அவ்வகையில் தம் இல்லத்தில் முற்காலத்தில் ஏவல் கூவல் பணி புரிந்த வேலைக்காரர் ஒருவர் பிற்காலத்தில் சிவனடியாராக தம்மை நாடி வந்த போது, அவரை அலட்சியப் படுத்தி, அவருக்குக் கால் கழுவ நீர் வார்க்கத் தயங்கிய தம் மனைவியாரிடம் சினம் கொண்டு அவர்தம் கரத்தை வெட்டியவர் கலிக்கம்ப நாயனார். தம் உயிர்க் கொள்கையைப் புரிந்து கொள்ளாத மனைவிபால் சினம் கொண்டு அவரைத் தம் வழிக்குத் திருப்பிய வரலாறும்-

தம் கணவர் தம் சிவபக்தி மாண்பையும், சிவனடியாருக்கு விருந்திடும் கடமையின் சிறப்பையும் அறியாத பரமதத்தன் என்ற பெயருடைய கணவன் முன் புதியதொரு மாங்கனியை வரவழைத்து அவனைச் சிவனடியாராக ஆக்கியவரான காரைக்காலம்மையார வரலாறும்-

பரசமயத்தினர் பால் மயக்கம் கொண்டு அவர்கள் வகுத்த நெறியில் பாண்டிய நாட்டை ஆண்ட நெடுமாறன் என்ற கூன் பாண்டியனைத் திருஞானசம்பந்தரின் திருநீற்று மகிமையால் திருத்திச் சிவனடியாராக்கிய மங்கையர்க்கரசியார் வரலாறும் –

சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்டுவந்த சிவனடியார் ‘தலைக்கறி’ யையும் கேட்பார் என்று சிவபிரான் திருவுள்ளத்தை உணர்த்து பணிபுரிந்த சந்தனத்தாதி என்ற பணிப்பெண்ணின் வரலாறும்-

பரசமயம் நாடிப்போய்ப் பதவியும் பெற்ற திருநாவுக்கரசர் சைவ நன்னெறியை அடைய வேண்டி, ”அம்பொன் மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கிய ” திலகவதியாரின் வரலாறும்-

ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள்; அனைவரும் சமயக் கடமையை, மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொண்டு கடைப்பிடித்தனர் என்பதை நமக்குப் புலப்படுத்தும்!

அடுத்து, ”மெய்யெலாம் நீறு பூசி, வேணிகள் முடித்துக் கட்டிச்” சிவனடியார் போல் வேடமிட்டு வந்த முத்தநாதனைக் காப்பது அரசனின் திருவுள்ளம் என்று அறிந்து கொண்டு அவ்வாறே கடைப்பிடித்த தத்தன் என்ற பெயருடைய மெய்க்காப்பாளன் வரலாறும், அந்த மெய்க்காப்பாளன் பேச்சைக் கேட்டு முத்தநாதனைக் கொல்லாமல் பணிந்து விலகிய சேதி நாட்டு மக்களின் கொள்கை ஈடுபாடும், அரசனின் உயிர்க் கொள்கையை அவன் நாட்டுப் பணியாளர்களும் ஈடுபாட்டுடன் பாதுகாத்தனர் என்பதை நமக்குப் புலப்படுத்தும்.

ஒரு கணவனின் உயிர்க் கொள்கையை மனைவியும், மனைவி கருத்தைக் கணவனும், குடும்பத் தலைவன் கருத்தைப் பணியாளரும், அரசனின் கருத்தை அதிகாரிகளும், பணியாளர்களும் நாட்டு மக்களும் மிகுந்த ஈடுபாடு காட்டி மேற்கொள்ள வேண்டும் என்று பெரியபுராணம் காட்டுகிறது.

இவை யாவும் ஆன்மிக நெறியில் அடியார்கள் காட்டிய மிகுந்த ஈடுபாட்டினைக் காட்டுகின்றன!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பெரியபுராணத்தில் தொண்டுநிலை

  1. நடைமுறை வாழ்வில் ஒவ்வொரு குடிமகனும் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுங்குதனை அருமையாகக் கூறும் “பெரிய புராணத்தில் தொண்டு நிலை”யைப் புலவர் இரா.ராமமூர்த்தி விளக்கியிருப்பது அருமை.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

  2. இல்லறத்தோரே மற்ற அனைவருக்கும் ஒதுங்கும் நிழல் போன்றவர் ஆவர்.  நம் நாட்டில் இல்லறம் அப்படிப் போற்றப்பட்டது.  அதனையே சைவர்களும் கடிப்பிடித்து ஓங்கினார் என்பதைத் தெளிவாக்கிய உங்கள் கட்டுரை அருமை.

  3. கடைப்பிடித்து ஓங்கினர் என்று திருத்திப் படித்துக்கொள்ளவும்.  தட்டச்சுப்பிழைக்கு வருந்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *