மீ. விசுவநாதன்

vallamai111-300x15011

பாட்டுக்குள் மெட்டுண்டு பார்க்காது போனாலும்
மேட்டுக்குப் பையிலும் மின்னுகிற பட்டுண்டு ;
வாட்டமே வேண்டாம் வசந்தம் வருவதுண்டு
நாட்டமாய் நல்லதே நாடு. (61) 01.03.2015

தண்ணீர் படப்படத் தாவரம் வாழுமே !
கண்ணீர் விடவிடக் கள்ளமும் பண்புள
மாகுமே ! குற்ற மனமழ ஞானத்தில்
ஏகுமே ஏகாந்த உள். . (62) 02.03.2015

கதை,கவிதை , கட்டுரை , கற்பனை வார்த்தை
எதையுமே நம்பாதீர் ! எல்லாம் உதைபடுது !
சொல்லெலாம் வீண்தான் ; சுநாதமாய் மூச்சிலே
எல்லோர்க்கும் கேட்கு(ம்) இசை. (63) 03.03.2015

கடலையே பார்த்திருந்தேன் கண்ணெல்லாம் நீலம் ;
உடனேயே நீரை ஒருகை எடுத்தேன்
அதில்நிற மில்லை ; அனுபவம் நன்றாய்
பதில்தரப் பாடம் படி. (64) 04.03.2015

ஆர்பரிக்கும் பேரருவி ஆளோடும் ஆடுமே
சேர்த்து அடித்துடன் சீறியே பாயுமாம் ;
தீர்ப்பை இறைவனும் தீம்பின்றிக் கூறுவான்
சீர்மதி கொண்டோன் சிறப்பு . (65) 05.03.2015

மாமழை கொட்டிப்பின் மாமலை மீதிறங்கி
பூநடை ஆறாகிப் போய்கடல் சேர்த்தல்போல்
ஊரெல்லாம் சுற்றியே ஓய்ந்த மனமுள்ளே
ஆரெனத் தேடு(ம்) அதை. (66) 06.03.2015

குருவம்சம் என்றும் குறையாத ஞானம்
தருவம்சம் ; பாரெலாம் தாங்கும் கருவம்ச(ம்)
இல்லா ஒளிவம்சம் ; ஏணியாய்ச் சீறேற்றி
நல்லோராய் மாற்றும் நலம். (67) 07.03.2015

சட்டையில் பட்ட சகதியைப் போக்கவே
சட்டெனக் கையாலே தட்டினேன் ஒட்டியது
போகாமல் முன்ஜென்ம தொட்ட குறையென
கூடவே ஈஷிய கூத்து. . (68) 08.03.2015

மலரடியில் முள்ளிருக்கும் வாசமோ முள்ளை
விலக்காது வீசிவரும் ; வீணர் பலபேராய்க்
கூடி இகழ்ந்தாலும் கொட்டும் மழைபோலப்
பாடி மகிழப் பழகு. . (69) 09.03.2015

பாறையில் தண்ணீரோ பாய்ந்தே அடிக்கிறது ;
பாறையோ கம்பீர பாவனையில் மோன
நிலையில் அசையாது நிற்கிறது ; காலம்
விலையில்லா ஞான விதை. (70) 10.03.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *