Blog

  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: கண்டது காரணம் ஆம்

     

    பேருலையுள் பெய்த அரிசியைவெந்தமை
    ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு – யார்கண்ணும்
    கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும்
    கண்டது காரணமாம் ஆறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
    ஓர் மூழையாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும்
    கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யாதற்கும்
    கண்டது காரணம் ஆமாறு

    பொருள் விளக்கம்:
    கொதிக்கும் பெரிய உலையினில் இட்ட அரிசி வெந்து சோறாயிற்றா என அறிய ஓர் அகப்பைச் சோற்றினை மட்டுமே சோதித்து அறிவது போல, யாரிடமும் காணும் செயல்பாடுகளைக் கொண்டே அவரைப் பற்றி நாம் அறிந்திராத குணநலன்கள் என்னவாக இருக்குமென்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

    பழமொழி சொல்லும் பாடம்: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறைக் கொண்டு பதத்தை அறிவது போல, ஒருவருடைய செயல்களைக் கொண்டு அவரது பண்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
    மாறாநீர் வையக் கணி. (குறள்: 701)

    ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவர் உலகத்திற்கே அணியாவார் என்று வள்ளுவர் குறிப்பறியும் திறன் கொண்டவரை உலகத்திற்கே அணியாவார் என்று பாராட்டுகிறார். பிறரது இயல்பை குறிப்பாலறிதல் அறிவுடமையாகும்.

    Share
  • அமைதி இழந்த பொழுது!

    -ரோஷான் .ஜிப்ரி

    நடைமுறையிலுள்ள எல்லாம்
    முறைமைகளாக மாறிப்
    பெரும் பயத்தைத் தோற்றுவிக்கின்றன!        roshan

    வாழ்வு பற்றிய கனவில்
    இழப்பைத் தவிர
    எதையும் யோசிக்க முடியாதபடி
    ஆதிக்கத்தைக் கூர்மையாக்கி
    வைத்திருக்கிறது காலம்!

    மொழிகளாலும்,சாதி பேதங்களாலும்
    ஆஸ்தி, அந்தஸ்து என்று
    மனிதத்தைக் கூறுபோடும்
    நடைமுறைச் சிக்கல்கள்!

    பணத்தால் மட்டுமே
    ஓரளவேனும்
    வாழ்வைத் தக்கவைக்கலாம்
    என்றாகிப்போனதோர்
    பொதி செய்யப்பட்ட ஜீவிதம்!

    செம்மையாக்கப்படாத
    இந் நாழிகைகளில் சாத்தியமற்ற
    ஆசைகளோடு மனசு
    இறுகி இருக்கிறது பாறையென!

    அச்சுறுத்தலுக்குள்ளான இக்கணங்களில்
    இழக்கவென்று
    உயிர் தவிர
    ஒன்றும் இல்லா நிலையிலும்
    இயல்பான விடயங்கள் கூடப்
    பாரிய அழுத்தம் தந்து
    பயம் காட்டுகின்றன!

    எதற்கும்
    முன்நின்று முகம் காட்டி
    எதிர்க்கத் திராணியற்ற இயலாமைக்
    குறிப்பாக…
    நிறைவேறாது என அறிந்தும்
    நீ என்மேல்
    வலிந்து திணித்துவிட்டுப்போன
    காதலும்தான்!

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (15)

    வையவன்

    செம்மஞ்சளாகப் பிளந்திருந்த பப்பாளிப் பழத்துண்டங்களில் கருமுத்துகளாய் மின்னிய விதைகளை ஸ்பூனில் வழிக்கப் போனாள் பிரீதா.

    நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிவா “வெய்ட்” என்று தடுத்தான்.
    பீங்கான் கோப்பையில் அவள் அந்த எவர்சில்வர் ஸ்பூனை அப்படியே விட்டாள். ‘ணங்’கென்று ஓர் இனிய ஒலி வந்தது.
    “வாவ். ஹவ் லவ்லி” என்றான்.

    பிரீதாவும் அந்த அழகில் லயித்தாள்.
    “செம்மஞ்சள் மேகத்தில் மிதக்கும் கறுப்பு தேவதைகள்” என்றான்.
    “பிரிந்த இதயத்தின் நிராசைக் கருமணிகள்” என்றாள் பிரீதா.

    சிவா “வொண்டர் ஃபுல்” என்று அவள் உவமையைச் சிலாகித்தான். அவளைப் பார்த்தான். அந்தக் கண்களில் அந்த இனிய பிரீதா இல்லை. இவள் பிரச்னையை எதிர் கொள்பவள். குளிர்ச்சியான ஒளியூட்டுகின்ற பிரீதா இல்லை.
    இவள் வேறு-விளக்கின் கீழே நிற்கும் கருநிழல் மாதிரி.

    சிவா அவளிடம் அந்த அந்நியத்தைக் கண்டு அதைச் சந்திக்கப் பிரியமின்றி பார்வையை ஒதுக்கினான்.
    “உனக்கு திஷ்யாகிட்டே என்ன அப்படி ஒரு அக்கறை?”
    மெல்ல கடற்காற்று அசோக மரங்களை உயிர்ப்பித்தது.

    சிவாவுக்கு அவள் இன்னும் சில அடிகள் முன்னேறி வருவது போல் ஓர் உணர்வு.
    “இன்னிக்குக் காலையிலே அவள் ஒர்க்ஷாப்புக்கு தம்பியை அனுப்பி என்னைக் கூட்டி வரச் சொன்னா”
    “அதுக்கு மேலே?” அவள் தூண்டினாள்.

    “அதுக்கு மேலேயும் உண்டுண்ணு இன்னிக்குத்தான் வாய் விட்டுச் சொன்னாள்.”
    “ஓ”
    பிரீதா இதை இயல்பாகச் சொன்னாளா என்று அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் புன்னகை செய்ய முயன்றாள். அதில் வலி தென்பட்டது.

    சிவாவின் கண்களில் அவள் எதையோ ஆழ்ந்து தேடினாள்.

    “உனக்கும் உண்டா?”
    “நேத்து வரைக்கும் இருந்தது.”
    “இப்ப…”
    “யோசிக்கிறேன்”
    “ஏன்?”
    “தாமுவுக்கு அவள் பேரிலே என்ன இன்ட்ரஸ்ட் இருக்கும்னு தெரிஞ்சபிறகு யோசிக்காம என்ன பண்றது?”
    “பப்பாளி விதையை எடுத்துடட்டுமா?”
    “ஓ… எஸ்!”
    பிரீதா விதைகளை அகற்றினாள். இன்னொரு சாஸரில் இரண்டு துண்டங்களை எடுத்து வைத்தாள்.

    “சாப்பிடு”
    அவன் கீழ்ப்படிவது போல் பழத் துண்டங்களில் செருகியிருந்த ஸ்பூனில் வெட்டினான்.
    அவன் பழத்தை அருந்தும் போது அவளும் கூட சாப்பிடத் தொடங்கினாள்.
    “எதற்காக யோசிக்கிறே?”

    “ம் ம்…” என்று அவள் கேள்வி புரியாது எங்கோ நினைவில் கரைந்திருந்த சிவா விழிப்பு வந்து கேட்டான்.
    “தாமு என்னை மனிதனாக்கியிருக்கிறார்”
    “நன்றி விசுவாசமா?”

    “அது மட்டுமல்லே.”
    “பின்னே?”
    “திஷ்யா தாமுகிட்டே இன்னும் மகிழ்ச்சியா இருக்கலாம்.”
    “உன்னை விரும்பின பிறகா?”

    “விருப்பங்கள் நிலையானவையல்ல”
    “வாட் டு யூ மீன்?”
    “வசதிகளைத் தான் மனசு எப்பவும் தேடுது. இன்னும் ஒண்ணுமே ஆகாத என்னாலே என்ன வசதி செஞ்சுட முடியும்? இந்தச் சினிமா சான்சை விட்டுட்டதுக்கு அவளே பின்னால வருத்தப்படலாம்.

    என்னை விரும்பியதுக்கும் சேர்த்து வருத்தப்படலாம். அவளே இல்லேண்ணாலும் அவங்க அப்பா, குடும்பம் எல்லாரும் அப்படி அவளை நெனைக்க வச்சுடலாம்.”

    “வாட் அபவ்ட் திஷ்யா? அவள் மனசு என்ன? தாமு யார் என்னண்ணு அவளுக்கு நல்லாத் தெரியும். அவ தாமுவை லைக் பண்ணுவாளா?”
    “இல்லே”
    “தென்?”
    “தென் இட்ஸ் ஹெர் ஒன் ப்ராப்ளம்”
    “இந்த ஒலகத்துக்கு நீ ஒரு மிஸ்ஃபிட் சிவா”
    அவன் சிரித்தான்.

    “இது நீ வாழ வேண்டிய காலமில்லே. நீ ஒரு நூற்றாண்டு பின்னாடி இருக்கே”
    “ஆ, இருக்கட்டுமே. ஒலகம் ரொம்பப் பெரிசு. அதற்குப் பொருத்தமானவங்களே மெஜாரிட்டி ஆயிட்டாலும் மைனாரிடிக்கு ஒரு மூலை இருக்கு.”
    “இதான் டிஃபீடிஸம். தோல்வி மனப்பான்மை.”

    “இது ஒரு மனப்பானந்மை. வெற்றியோ தோல்வியோ நாலு பேர் குத்தற முத்திரை. முத்திரைகளுக்கு வாழாம மனசுக்காக வாழ்கிறவனுக்கு இது விஷயமில்லே. தேர் அர்ஸோ மெனி மிஸ்ஃபிட்ஸ். நல்ல யோசிச்சா மிஸ் ஃபிட்ஸ் தான் மெஜாரிடி.”

    சிவா ஸ்பூனில் மற்றொரு பப்பாளிப் பழத்துண்டை எடுத்தவாறே பேசினான்.
    “நீயும் என்னைப் போலவே ஒரு கோழைதான் சிவா.”
    “ஆமா… நாம வாழ்க்கைக்கு வசதிகளுக்கு. அது நமக்கோ பிறருக்கோ இல்லாமப் போறதுக்கு ரொம்பப் பயப்படறோம்.”

    “தென்… நீ ஏன் பேனா எடுத்து எழுதறே. தன்னை விரும்புகின்ற நம்புகின்ற ஒருத்தியை ஏத்துக்க முடியாதவன்-அந்த பிரச்னைகளுக்குப் பயப்படறவன் என்ன எழுத்தாளன்?”
    அவன் அதிர்ச்சியுற்றான்.

    “பின்னாலே இந்தத் தோல்வி மனப்பான்மைக்கு கோழைத்தனத்திற்கு அழகான ஜோடனைகள் செய்து கதை எழுதுவே, பெரிய காதல் தோல்வி மாதிரி நீ இதைப் போஸ் பண்ணுவே”
    பிரீதாவிடம் இப்படி ஒரு பக்கத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

    ‘நான் அப்படியா பிரீதா”
    “நீ மட்டுமில்லே. யூ மென், மோஸ்ட் ஆஃப்யூ ஆர் லைக் திஸ். ஒங்களுக்குப் பெண் வேணும்; பிரச்னைகள் இல்லாமே. லகுவா பொறுப்பு ஏத்துக்கனும்ணா ஒங்களுக்கு கசக்கும். எந்த சாக்கிலே கை கழுவலாம்னு யோசிப்பீங்க.”
    சிவாவுக்கு அவள் இன்னும் பேசட்டும் என்று ஒரு வெறி வந்தது.

    அவளுடைய வார்த்தைகள் உளித்தாக்கு போல் இறங்கி அவனைச் செதுக்கின.
    அவன் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்தான். வடிவமைப்பின் பரிணாமங்களில் உரிந்து உரிந்து வீழ்ந்தான்.

    “ஒங்களுக்கெல்லாம் காதல் வேணும். காதல் பிடிக்கும். அதன் பிரச்னைகளுக்கு நீங்க துடிதுடிப்பீங்க. ஆனா அது இன்னொருத்தருடையதா இருக்கணும். வென் இட் கம்ஸ்டு யூ. சமுதாயம்… தியாகம்… அது இதுண்ணு உங்க சுயநலத்துக்காக நீங்க போலிக் காரணங்களைத் தேடுவீங்க…”
    சிவா ஸ்பூனைக் கீழே வைத்து விட்டான்.

    இவள் வேறு பிரீதா. கொதிப்புற்றவள். வெடிக்கின்றவள்.
    மெய்மறந்து போய் அவன் கேட்டுக் கொண்டிருப்பது உறைத்த மாதிரி பிரீதா நிறுத்தினாள்.
    “ஸாரி சிவா.”
    “ப்ரொஸீட்… மேலே சொல்லுங்க. எக்ஸ்ப்ளய்ன் யுவர் செல்ஃப்.”
    அவள் முகம் குப்பென்று சிவந்தது.

    “ஐ டிட்ன்ட் மீன் யூ”
    “நோ… இட்ஸ் ஆல் ரைட்.. நானும் ஆண். அதே வர்க்கம், கேரி ஆன்.”
    அவள் உதட்டை மென்றுகொண்டே அவனை ஊடுருவுவது போன்று பார்த்தான். பிரீதாவின் கண்களிலிருந்து முத்து முத்தாக ஒரு மௌனத்தினிடையே நீர்த்துளிகள் உருண்டன.

    “பிரீதா” என்று ஒன்றும் புரியாமல் முனகினான்.

    அவள் சட்டென்று திரும்பி சமையலறைக்குப் போய் விட்டாள். பத்து நிமிஷம்… பதினைந்து நிமிஷம்… சிவா அங்கே ஒரு சம்பந்தமற்றவன் போன்று உட்கார்ந்திருந்தான்.

    அங்கே உட்கார்ந்திருப்பதா… எழுந்து செல்வதா என்று புரியாமல் கொஞ்சம் குழம்பினான்.
    சமையல் அறைக்கு உள்ளே போய் அவளை எந்த விதத்திலாவது தேற்ற வேண்டுமா என்று யோசித்தான்.

    பேசாமல் அங்கே உட்கார்ந்திருப்பதைத் தவிர தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டவன் போன்று அமைதியாக சாஸரில் வைக்கப்பட்டிருந்த பப்பாளிக் கீற்றை ஸ்பூனில் கொஞ்சம் கொஞ்சமாக நறுக்கிக் கொண்டே அதை அருந்தாமல் வெறுமனே நறுக்கிக் கொண்டே அதன் சிதைவைக் கவனித்தான்.

    பதினைந்து நிமிஷம் கழித்து டிரஸ் மாற்றிக் கொண்டு வந்தாள். பிரீதா.

    பவுடர் டச்-அப் செய்திருந்தாள். அழுத முகமல்ல பழைய பிரீதா. இனிய, சுமுகமான, ஒளி பாய்ச்சுகின்ற பிரீதா.
    “சரி… நாம கௌம்புவோமா?” என்று அப்படி எதுவும் நடக்கவில்லை போன்று புன்னகையுடன் கேட்டாள்.

    “எங்கே?”
    “திஷ்யா வீட்டுக்குத்தான்”
    அவளை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறோம் என்பது சிவாவுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.
    அவனும் எழுந்தான்.

    தொடரும்

    Share
  • மதுபானம்!

    -துஷ்யந்தி, இலங்கை

    இதுவே உலகம்
    பலருக்கு…
    இதனால் துன்பம்
    இருப்போர்க்கு!

    இரவும் பகலும்
    உழைத்திடுவோர்
    உடலின் களைப்பைத்                                       liquor
    தீர்ப்பதற்காய்
    மதுவை நாடிப்போகின்றார்
    அதிலே களைப்பை
    தீர்க்கின்றார்!

    உழைப்புமின்றித்
    தொழிலுமின்றிப்
    பொழுதைப் போக்கி
    அலைவோரும்
    மறக்காமல் போகின்றார்
    மதுவுக்கடிமையாகின்றார்!

    உடல் கெட்டு மனங்கெட்டு
    நற்குணங்கள்
    யாவும் கெட்டு
    உற்றார் உறவினர்
    அனைவரையும் இழந்து
    தெருவிற்கு வருகிறார்!

    கையிலே பணமின்றித்
    தவிக்கும் தருணம்
    கையிலே கிடைத்ததை
    அடகு வைத்து விற்றுப்
    பையை நிறைத்துத்
    தண்ணீரில் கரைக்கிறார்!

    எண்ணிலே எட்டாத
    பொய்யெல்லாம்
    கற்கின்றார்
    மண்ணறை
    காண்பதற்கு வழி
    தோண்டிக் கொள்கிறார்!

    மதிகெட்டுப் போவதும்
    முறைதானோ?
    மதுவால்,
    குடிகெட்டுப் போவதும்
    சரிதானோ?
    வீணாய்
    இறைத்திடும் பணத்தை
    உங்கள் வாழ்வில்
    இறைத்தால்
    நன்மையல்லவா?

    மதுக்கரங்களே
    கேளுங்கள்!
    தீயதெல்லாம்
    சுட்டுப் பொசுக்குங்கள்!
    இல்லத்தை
    மதுரமாக்கிப் பாருங்கள்!
    மதுவிலே இவை
    கிடைத்ததா சொல்லுங்கள்!?

     

    Share
  • கனடா தேசீய கீதம்

    ajay
    கனடா தேசீய கீதம்

    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    ++++++

    ஓ கானடா !
    எமது இல்லமே ! சொந்த பூமியே !
    நின் மாந்தரிடம் எல்லாம்
    நிஜ தேசப் பற்றை
    நிலை நாட்டுவது நீதான்
    ஒளி நிறைந்த எமது
    உள்ளத்தோடு
    நீ உயர்வதைக் காண்கிறோம் !
    நேர்வட திசையில் நீ
    நிலைத்திடும் தனி நாடே !
    நீண்டு அகண்ட கண்டம்,
    ஓ கானடா !
    உனை யாம் காத்து நிற்போம் !
    சீரும் சிறப்பும் பொங்கிட
    எமது நாட்டை, இறைவா நீ
    சுதந்திர நாடாய் வைத்திரு !
    ஓ கானடா !
    உனை யாம் காத்து நிற்போம் !
    ஓ கானடா !
    உனை யாம் காத்து நிற்போம் !

    *********

    Canada National Anthem

    O Canada !

    Our home and native land !
    True patriot love
    In all thy sons command.
    With glowing hearts
    We see thee rise,
    The true North
    Strong and free !
    From far and wide,
    O Canada,
    We stand on guard
    for thee.
    God keep our land
    Glorious and free !
    O Canada,
    We stand on guard for thee.
    O Canada,
    We stand on guard for thee.

    *******

    Share
  • தேகமும் யோகமும் – பகுதி-9

    மனம் பற்றி..! 

    yoga2

    கவியோகி வேதம்

    தியானத்தில் நீங்கள் அமரப்போகும் முன்பு உங்கள்  ‘மனது’ பற்றிச் சற்றே சிந்திக்கலாமா? மனம்பற்றிப் பலர் பலவிதமாகச் சொல்லியிருப்பினும் அதை ஒரு ஒழுங்குக்குக் கொணர அதுபற்றி விரிவாக அலசுவது அவசியம். மனிதனுக்குக் கிடைத்த ஒரு பெரிய வரப்ரஸாதம் இந்த மனம். எண்ணங்களின் தொகுப்பே மனம். அளப்பரிய சூக்கும யந்திரம் இது. சுழன்று கொண்டே இருக்கும்.

    நீங்கள் இதனைப்பற்றிச் சரியாக தெய்வீகச் சிந்தனையுடன் அணுகாவிட்டால் உங்களை அது எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும். நல்லதும் அதுவே செய்யவைக்கும். சமுதாயப் பணி செய்யத் தூண்டி உங்களுக்கு ‘ஓஹோ’என்று புகழை வாங்கிக் கொடுக்கும். அல்லதும் (தீமை) செய்ய வைத்து உங்கள் வாழ்க்கையையே கெட வைக்கும். சமீபத்தில் நீங்கள் பேப்பரில் படித்திருப்பீர்கள். ஒரு சாதாரண ‘அறிமுகக் கார்டை’ச் சரியாக எடுத்துக் காட்டாததற்காக நெய்வேலியில் ஒரு ராணுவத்தான் ஒரு நபரை நெற்றியில் (சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு) சுட்டுவிட்டான். அவன் வாழ்க்கையே போச்சு. தேவையா இப்படிப்பட்ட அவசர புத்தி? பதட்ட நிலை? மனத்தை ஓர்மைப்படுத்தி சரியான முடிவை எடுக்காத எண்ணம்?….
    ஆகவே தியானத்தில் மிக ஆழமாக நீங்கள் அமரும் முன் அதற்குச் சில கடுமையான உத்தரவுகளைப் போட வேணும். ஒழுங்காக நேர்வழியில் செல் என்று அதனை(மனத்தை) ஒரு தெய்வீக்க் கட்டுக்குள் கொண்டு வர வேணும். ஏன் எனில் உங்கள் நெற்றிப்பொட்டு வைக்கும் இடம்(ஆக்ஞா சக்கரம்) இருக்கிறதே அதுதான் மனம் என்னும் சூக்கும யந்திரம் சற்றுநேரமாவது நிற்கும் இடம்.

    ….அந்த இடத்தில் நீங்கள் மனத்தை ஓர்மைப்படுத்தி ஒரு இருபது நிமிடமாவது அதனை நிற்க வைத்துப் பயிற்சி கொடுத்தீர்கள் என்றால், அதில் வெற்றியும் பெற்றுவிட்டீர்கள் எனில், உங்களைப்போல் ஒரு ‘ராஜா’ (Controlling king) இருக்கவே முடியாது. மெல்ல மெல்லப் பயிற்சியின் மூலம் ஒரே வருடத்தில் அதே ‘ஆக்ஞா’வில் மனத்தை நிறுத்தி, அங்கே ‘ஒளிப்படலம்’ கொண்டுவரச்செய்து அதனால் சிறிதாவது ‘சக்திகள்’ பெற்று மற்றவர் நோயைக் குணப்படுத்த முடியும். உங்கள் ஆலோசனைகளே பலத்த வெற்றிபெறும். பிறரது காய்ச்சலுக்கோ, இல்லை குணப்படுத்தக்கூடிய லேசான மற்ற நோய்களுக்கோ நீங்கள் வெறும் ‘விபூதி’ கொடுத்தால்கூட அதில் தெய்வீக சக்தி ஏறி சட்டென்று குணம் கிட்டும். இது எல்லா தியான மனிதர்களின் அனுபவம். ஆயின் அப்படி ஆழ்ந்த தியான சக்தியில் ஈடுபட்டவர்களுக்கே இது சாத்தியம். என் அனுபவமும் கூட. நாம் எத்தனை மகான்களைப் பார்த்திருக்கின்றோம்? அவர்களுக்கு இந்த விபூதியால் குணப்படுத்தும் தெய்வீக சக்தி எப்படி வந்தது? ஆழ்ந்த பல வருடத் தியானப்பயிற்சியால் அன்றோ? ஆகவே, ஓடிக்கொண்டே இருக்கும் மனத்தை ஓர்மைப்படுத்தி, ஒரு புள்ளியில் நிலைக்கவைக்கும் சாதனை உங்களை எங்கோ கொண்டு சேர்க்கும். இது பெரிய வித்தையே அன்று. தீவிர தினசரிப் பயிற்சியால் இது எல்லோர்க்கும் சாத்தியமே!

    ‘எண்ணங்கள் மனத்தின் அசைவுகள்’ (vibrations) என்பான் ஒரு கவி. நேரிய தெய்வீக எண்ணங்கள் நித்தம் என்னைப் புனிதனாக்கின’ என்றான் ஒரு ஃப்ரென்ச் ஞானி. ‘நெற்றிப்பொட்டில் ஒளியைக் கொண்டேன்; நிமலனின் அருள் சக்தி தானே வந்தது’ என்பார் திருமூலர் ஞானி ஒரு மந்திரத்தில். அவரே பிறிதொரு மந்திரப் பாட்டில் சொல்வார், “பத்து சதம் கூட நாம் ‘எண்ண யானை’யைத் தினசரி சரியாகப் பயன்படுத்த வில்லையடா! பராபரமே! பின்பு நாம் ‘சித்திகளை’ப் பெறமட்டும் துடிப்பது எங்ஙனம்?” என்பார்.

    .. இதே கருத்தைத் தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்களும் வலியுறுத்தியிருக்கின்றனர். நாம் இவர்களை ஆழ்ந்து படித்தாலே நம் தினசரித் தியானத்தைச் சீராக, அற்புதமாக, ஆநந்தமாகப் பின்பற்றலாம். ஆம்! நம் எண்ணங்களின் தரம் மிக உயர்வாக இருந்தால் மட்டுமே எல்லோரது வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவும், சமுதாயத்திற்கு மிகப் பயன் உள்ளதாகவும் இருக்கும். இதைத்தானே திருமூலர் ‘மனம்! அது, செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்!’ என அடித்துச் சொல்கின்றார்.

    (தொடரும்)-

    *************************************************************************************

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ​​

    திருக்குறள் நீதிவழி வாழ்வில் நடைபோட
    போர்க்குரலும் வாராது பொய்யிலை – மேதினியில்
    யாவரும் மாறிட வகுக்கும் வள்ளுவம்
    போற்றி வரும்நாள் வெல்!                                                 valluvar

    ​தன்னிலை தானுணர் தூயநல் வாழ்வுணர்
    எந்நிலை வந்திடினும் ஏற்றமும் காண்பரே
    சொல்நிலை வள்ளுவம் ஏகிட – மேதினியில்
    கோள்நிலை வாய்க்கும் ​அறிவு!

    இல்வாழ்க்கைப் பேறுடைத்து ஊர்போற்றச் சீருடைத்து
    சொல்லென்றும் மென்மையாய்த் தித்திக்கும் – வாழ்வில்
    திருக்குறள் பற்றிட நல்லறம் சேர்ந்து
    செறிவோடு மண்ணில் வர!

    திடமான எண்ணமும் சேரிடத் தேற்றமும்
    தேடிய வாழ்வும் சுகம்தரும் – கற்றுணர்
    வள்ளுவம் சொல்நெறி ஏகிட நற்றமிழ்
    தெள்ளின் திறனாகிச் சூழ்!

    வருமவர் நானறியார் வள்ளுவம் தானறிவார்
    வாழ்க்கைப் பயனதுவே சேர்த்திடல் யாவர்க்கும்
    வானுயர மூத்தோர் மொழிதந்த தேவநூல்
    மானுடம் பற்றிடச் சுகம்!

     

    Share
  • முதுமை

    -ரா. பார்த்தசாரதி 

    முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
    உடலும் உள்ளமும் சற்றே  அடையும் தளர்ச்சி
    துணை  தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
    வீ ழ்ந்தாலும்  கைகொடுத்துத் தூக்கிவிடும் முயற்சி!

    அனுபவத்திற்கும் வயதிற்கும் மதிப்பு  இல்லை
    பெற்றதும்  உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை
    ஏனோ கடனுக்காக  உதவும் நிலைமை  இங்கே
    உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எங்கே?

    அடிபட்டு இடம் தேடித் தட்டுத்தடுமாறும் நெஞ்சங்கள்
    பாசத்தினால் விடுபட முடியாத  முதியோரின்  எண்ணங்கள்
    இளம் ஜோடிகள் போல் காதலும் காமமும்  இல்லை
    முதிர்ந்த காதல்தான் ஆனால்  காமம் இங்கில்லை!

    முதுமைக் காதல் என்பது தாஜ்மஹாலின்  நினைவு
    இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு
    இன்றுமுதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
    இதனை மாற்றாதோ  இளமையின்  எண்ணங்கள்?

    தனக்காக  வாழாது  பிறருக்காக வாழும்  முதுமை
    என்றும் உறவுக்கும் பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
    இளமையின்  முதிர்ச்சியே  மனித இனத்தின்  முதுமை
    தன் வினை தன்னைச் சுடும் என்பதுதான் பொதுவுடைமை!

     

    Share
  • புதிய வார்த்தைகள்

    -துஷ்யந்தி, இலங்கை

    மாயையெனும்
    போர்வை போர்த்தி
    மனதில் நுழைந்த
    காதல் பற்றி…

    கற்பனை உலகில்
    பறந்திடும் பொழுது
    அற்பமாய் தோன்றும்
    ஆசைகள் பற்றி…

    உலாவரும் மேகம்
    மலைகளின் முகட்டை
    முத்தமிடுகின்ற
    மோகம் பற்றி…

    பள்ளந் தேடி
    பாதை வகுத்துப்
    பாலாய்ச் சொரியும்
    அருவிகள் பற்றி…

    எழுதிய தாள்களை
    எரித்து விடுவோம்!
    கறள் பிடித்த வார்த்தைகள்
    இருள் படிந்த சிந்தனைகள்
    தடம் பதித்த சுவடுகள்
    நடம் பயிலும் பாதங்கள்
    போதும் என்றெழுதுவோம்!

    அலுத்துச் சலித்த
    எழுத்துக்களுக்குக்
    கட்டாய ஓய்வென்றும்
    சட்டம் இயற்றுவோம்!

    அழுக்காய்ப் படிந்த
    அறிவின் தேக்கம்
    நகர மறுக்கும்
    ’அடிமைத் தழிழன்’ எனும்
    நரகம்
    அறியாமை அவலங்கள்
    அடிமைத்துவ எச்சங்கள்!

    எழுதுவோம்
    புத்துயிர் ஊட்டும்
    புத்துணர்வூட்டும்
    புதிய வார்த்தைகள்
    வேண்டுமென் றெழுதுவோம்!

    தனியொரு மனிதன்
    தனியொரு இளைஞன்
    தன்னம்பிக்கையுடன்
    தாழ்வுணர்வின்றி
    முன்னேறி வாழும்
    எண்ணம் எழுதுவோம்!

    புயலைப் போல,
    புற்றீசல் போல,
    புதிய வார்த்தைகள்
    புறப்பட்டு வருக!

    இளமை கொஞ்ச
    அறிவு மிஞ்ச
    மடமை ஓட்டி
    வலிமை ஊட்ட
    சிந்தனைத் தீயுடன்
    புதிய வார்த்தைகள்
    புறப்பட்டு வருக!!

     

    Share
  • அம்மா அரியணை ஏறிவிட்டார்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புகளைப் பற்றிய வாதங்களும் பிரதிவாதங்களும் முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணி அம்மா அரியணை ஏறிவிட்டார்.  இனி தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் பிறந்துவிடும்!  இப்படி அம்மா திரும்ப வந்து, தான் அவர் விரும்பியபடி நடக்கவில்லையென்று தன் மீது குற்றம் சாட்டப்பட்டால் தன் கதி அதோகதிதான் என்று நன்றாகவே உணர்ந்திருந்த பன்னீர்செல்வம் (இனிமேல் இவர் தன்னை முன்னாள் தமிழக முதல்வர் என்று சொல்லிக்கொள்ளக் கூடப் பயப்படுவார் என்று நினைக்கிறேன்) இப்போது பெருத்த நிம்மதி அடைவார்.  இனி அம்மாவின் ஆணையைத் தலைமேல் தாங்கி அவர் சொல்வது போல் நடக்கலாம்.  தானாக எதையும் செய்து அதனால் பின்னால் அம்மாவின் கோபத்தில் மாட்டிக்கொள்வோமே என்று பயப்படத் தேவையில்லை.  அம்மா எப்படியும் திரும்பவந்துவிடுவார் என்று எதிர்பார்த்துச் செயல்பட்ட மற்ற மந்திரிகளும் அ.தி.மு.க. உறுப்பினர்களும் அவ்வாறே நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

    அரசு அதிகாரிகள் தங்களுக்குரிய லஞ்சத்தை நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து சதவிகிதமாகக் கூட்டிக் கேட்ட ‘அநியாய’த்தைப் பற்றி அரசு கட்டடங்களைக் கட்ட டெண்டெர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் புகார் கொடுத்தார்கள்.  அப்போது அவர்கள் அம்மா இவ்வளவு சீக்கிரம் அரியணை ஏறுவார் என்று எதிர்பார்க்கவில்லை.  ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.  இனி அவர்கள் அரசு அதிகாரிகள் எத்தனை சதவிகிதம் லஞ்சம் கேட்டாலும் தயங்காமல் கொடுப்பார்கள்.  அது தவிர்க்க முடியாதது என்பதையும் உணர்ந்திருப்பார்கள்.  அம்மாவின் பொன்னாட்சி அல்லவா மீண்டும் மலர்ந்திருக்கிறது!

    அம்மாவின் பொன்னான ஆட்சியில் அவரைக் குறைகூறுபவர்களுக்குக் காவல்துறை என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்கலாம்.  அவர்களை யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை.  வேண்டாத யார் மேலும் எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடலாம்.  நடப்பது அம்மாவின் ஆட்சி.  அம்மாவைத் தட்டிக் கேட்க யாருக்கும் தைரியம் வராது.

    அம்மாவும் அரசு ஊழியர்களும் யாரிடம் வேண்டுமானாலும் தைரியமாக லஞ்சம் கேட்கலாம்.  மதிப்புமிக்க நீதிபதியே லஞ்சம் வாங்குவது தவறில்லை என்று தீர்ப்பு வழங்கிவிட்டார்.  இனி அம்மாவின் அணுக்கத் தொண்டர்கள் யாரும் சட்டத்திற்குப் பயப்படத் தேவையில்லை.  அம்மாவை யாரும் எதிர்த்தால் அதைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக நிலைநாட்ட காவல்துறை அதிகாரிகள் எந்த உத்தியையும் கையாளலாம்.

    மாநிலங்களில் அராஜகம் நிலவினால் அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு படையை அனுப்பும்.  ஆனால் அம்மா மாநில முதல்வரின் அதிகாரத்தைக் காப்பார்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அங்கு சட்டம் ஒழுங்கு குலைந்தாலும் அம்மாவின் ஆட்சியில் எந்தத் தவறும் நடக்காது என்று மக்களுக்கு உறுதி அளிப்பதற்கு இருக்கவே இருக்கிறது மத்திய அரசு.  ஊழலை ஒழிப்பதாகச் சூளுரைத்துப் பதவிக்கு வந்து இப்போது ஊழல் மிகுந்த அரசை எப்படியும் ஆதரித்தே தீருவது என்று முடிவுகட்டிவிட்ட பி.ஜே.பி. அரசு மத்தியிலும் ஊழலில் ஊறிப்போன அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டிலும் கோலோச்சும்வரை தமிழ்நாட்டில் ஊழல் புரிவோர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    அம்மா மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு விட்டதே என்று பலர் அப்போது தற்கொலை செய்துகொண்டார்கள்.  இனி தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணிக்கை குறைந்துவிடும்!   குற்றங்களிலிருந்து அம்மா புடம் போட்ட தங்கமாக வெளிவந்துவிட்டார்.  இனி தமிழ்நாட்டில் பொன்னான, நிலையான ஆட்சி அம்மாவின் தலைமையில் நடக்கும்.  தேனும் பாலும் ஓடும், அமைச்சர்களின், அதிகாரிகளின் வீடுகளில்.  லஞ்சம் கொடுத்துக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் லஞ்சம் பெற்றுக்கொள்ளக் காத்திருப்பவர்களுக்கும் இனி வரப் போகும் நாட்கள் பொன்னானவை.  அவர்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.  அம்மா பக்கம் சாய்வதா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது தெளிவான பதில் கிடைத்துவிட்டது.  அம்மா திரும்ப வருவாரா? அவரை விட்டு விலகலாமா என்று தயங்கியவர்களிடம் அம்மாவுக்கு ஆதரவாக இருந்து அவரோடு சேர்ந்து உங்கள் பைகளையும் நிரப்பிக்கொள்ளுங்கள் என்று கூறாமல் கூறிவிட்டார்கள் உயர்நீதி மன்ற நீதிபதியும் மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசும்.

    தமிழ்நாட்டில் ஊழல் புரிந்து பணம் பண்ணப்போகும் சமூகத்தின் அதிகாரவர்க்கத்தினருக்கு மட்டுமல்ல ஏழை எளியவர்களுக்கும் இனி பொன்னான காலம்தான்.  அம்மா உணவகங்கள் இன்னும் சில பொருள்களை குறைந்த விலைக்கு வழங்கலாம், ஏன் இலவசமாகக் கூடக் கொடுக்கலாம்.  அடுத்து என்ன இலவசமாகக் கொடுக்கலாம் என்பதிலேயே அம்மாவின் இருபத்தி நான்கு மணி நேரச் சிந்தனையும் இருக்கும்.  அம்மா இவர்களின் இதய தெய்வமல்லவா?  இவர்களின் இதயங்களின் தேவைகளை அறிந்து செயல்படுவார்.

    அம்மா போட்டியிடப் போகும் தொகுதியில் மற்ற கட்சிகளும் போட்டியிட வேண்டும் என்று அத்தொகுதி மக்கள் கேட்கிறார்களாம்.  அம்மாவின் கட்சி மட்டும் போட்டியிட்டால் அப்புறம் அவர்களுக்கு அம்மா கட்சி உட்பட எல்லாக் கட்சிகளிடமிருந்தும் எப்படிப் பணம் கிடைக்கும்?  தங்கள் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடந்தால் ஆயிரக் கணக்கில் பணம் கிடைக்குமே.  அவர்களும் அம்மாவைத் தேர்ந்தெடுக்கத் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.  ஜனநாயகமாவது மண்ணாங்கட்டியாவது!  யாருக்கு வேண்டும் ஜனநாயகம்?

    அம்மா ஆட்சிக்கு வந்துவிட்டார்.  இனித் தமிழ்நாட்டிற்குப் பொற்காலம்தான்!

    வளர்க ஊழல்!  வாழ்க தமிழகம்!!

    Share
  • ஓலைத்துடிப்புகள் (6)

    கவிஞர் ருத்ரா

    சென்ற இதழில் ஓலைத்துடிப்புகள் (5)ன் பாடலுக்கு உரிய பொழிப்புரையுடன் இங்கு தொடங்குகிறேன்.

    oolaisuvadi

    பொழிப்புரை
    =========================

    கடவுள் வழங்கு கையறு கங்குல்

    வேங்கை கொழுவிய திண்கான் குறியில்
    வேங்கை மார்பன் அன்றொரு திங்களில்
    தழீஇத் தந்த தண்சிறை நடுக்கம்
    ஊன் உருக்கி என்பு முறுக்கிய நெடுமலைப்
    பாம்பாய் ஆவி சுற்றி அடுபிணி செய்யும்.

    அந்த அடர்ந்த காட்டில் வேங்கைமரம் தழுவிய இடத்தில் புலி போன்ற வீரம் செறிந்த மார்பனான என் தலைவன் அன்றொரு நாளில்
    அவன் சொல்லிய இரவுக்குறி சந்திப்பின் போது என்னைத்தழுவி குளிர்ச்சி பொருந்தியதாய் சிறைப்படுத்தினான்.அந்த நடுக்கத்தில்
    என் ஊனை உருக்கி எலும்பை முறுக்கும் நீண்ட மலைப்பாம்பாய் என் உயிரையே (அவன் உயிரால்) சுற்றிகொண்டது போல்
    ஒரு காதல் நோய் ஏற்படுத்திவிட்டான்.

    செருந்தி தாழ அந்துறை சினைப்பூ
    செயிர்த்தன்ன பயிர்க்கும் விழிபொத்தி.
    ஆங்கவன் நோக்கின் நாணிரைக் கொளீஇ
    துடீஇய துடீஇய நீள் இரவு கொல்லும்.
    கல் கனை செல்வன் காறி உமிழ்ந்தாங்கு
    புல்லிய ஊரின் பிணித்த தெருக்கூடல்
    அலரி படர்ந்து அறுவலி கூட்டும்.

    கடற்கரையை ஒட்டிய செருந்தி எனும் மரம் தாழ்ந்து தன் கிளைகளை நீட்ட அதில் பூத்த பூக்கள் சிலிர்த்தன போல (ஒரு வித நாணத்தில்)
    மெய்விதிர்ப்புற விழிகள் எனும் இதழ்களை மூடிக்கொள்ளும்.அவன் அங்கு என்னை பார்த்த ஒரு பார்வை இருக்கிறதே அது தூண்டில் போல்
    என்னை இரையாக்கிக்கொள்ளும்.அதனால் நான் துடித்து துடித்து துயரம் கொள்ள அந்த நீண்ட இரவே என்னை கொன்றுவிடும்.மறுநாள்
    காலை மலையிடையே எழுந்த கதிரவன் தன் ஒளிக்கதிரால் (கல் கனை) எங்கும் காறி உமிழ்ந்தாற்போல சிறுமதி படைத்த ஊர்மக்கள்
    நெருக்கி நின்று தெருக்களில் கூடி பழிச்சொல் பேசி பரப்பி என்னை அறுப்பது போன்ற வலியை என் மீது கூட்டும்.

    கரும்பு பிழி எந்திரம் வாய்படு நிலையின்
    நையக்கொண்டு துவல்பட வீழும்.
    தில்லை தழுவுநர் முள் கொல் நோதல்
    அன்ன அலரின் புண் படுத்தாங்கு
    அவியும் வாழும் புல்லென செத்து.
    “கடவள் வழங்கு கையறு கங்குல்”
    ஓதல் அந்தணர் சொல்லில் ஊழ்க்க‌
    பிணியா நின்று பிறள்தல் போலும்
    என் உடம்பொடு அவன் ஆருயிர் ஒக்கும்.

    கரும்பு ஆலையின் வாய்பட்டு பிழி பட்டு சக்கையாகி துவண்டு சிதறி வீழ்ந்து துன்புறுவேன். முள் நிறைந்த “தில்லை”மரம் ஏறுபவர்கள் முள்ளினால் துன்பம் உறுவது போல் இந்த பழிச்சொற்கள் என்னை புண்படுத்த நான் கீழ்மைநிலை அடைந்தாற்போல் (புன்மை செத்து) இறந்தேன் மீண்டும் உயிர்த்தேன்.இந்த இரட்டைநிலையை நான் எதனுடன் ஒப்பிடுவது? அந்த நெடிய நள்ளிரவின் வானம் வெறுமையாய் தோன்றும் இந்த‌ துன்பத்தின் ஒரு இயலாத்தன்மைதான் கடவுளா? அல்லது அந்த உருவமற்ற இருட்பிழம்பு தான் கடவுளா?(கடவுள் வழங்கு கையறு கங்குல்)என்று நான் மயக்கமும் கலக்கமும் அடைகிறேன்.என் உடம்போடு கலந்து எனைத் துயர் செய்யும் அவன் உயிர் அப்படி ஒரு உருவமற்ற கையறுநிலையை எனக்கு ஊட்டுகிறது.இது எப்படி இருக்கிறது என்றால் கடவுள் பற்றி ஓதும் சான்றோர்களின் சிந்தனைக்குள் அவர்களின் சொற்களுக்குள் அடிக்கடி ஒலிக்கப்பட்ட போதும் (சொல்லில் ஊழ்க்க) கட்டுப்படாமல் பிறள்ந்து வழுக்கிக்கொண்டு ஓடிவிடும் கடவுளைப்போன்றதே ஆகும்.

    திதலை அன்ன நிழற்பொறி படர்ந்த
    வெள்நெடு வானம் கறை கண்டாங்கு
    அலரி மூசும் அழல் வெங்காட்டின்
    அலைபடு புள்ளென‌ அழியும் என்கவினே.
    எக்கர் ஞாழல் குவி இணர் உகுக்கும்
    தாதுண் தும்பியும் அலர் ஒலி வெரிக்கும்.
    குவவு மணற் குடுமி கோவை தோறும்
    குருகு உடை ஓமை ஓடு கிடந்தன்ன‌
    எவ்வம் படர்க்கும் எரி ஒலி அலரே.

    வெட்ட வெளிபோன்ற வானம் என் உடம்பில் படர்ந்த தேமல் போல் ஆங்காங்கே ஒளியும் நிழலும் புள்ளிகளாய் பரவி கறை பட்டது போல் பழிச்சொல் எனும் அலரி (அலரி என்பது கரும்பின் சிறு சிறு வெண் பூ போன்றது.அது சிதறினால் காற்றில் தூசு போல் பரவும்) மொய்க்கும்.அப்போது தீப்பற்றிய காட்டில் பறவைகள் அங்கும் மிங்கும் சிதறி ஓடுவது போல் என் மேனியழகு பாழ்படும்.அந்த அலர் எனும் பழிச்சொல் ஒலி கேட்டு பூந்தாது உண்ணும் தும்பிகள் கூட வெறித்து ஓடும்.குவியல் குவியலாகி (குவவு) கிடக்கும் மணற் குப்பங்கள் (குடுமி) ஏற்படுத்திய மேடுகளின் குவியல்கள் தோறும் நாரைகள் தின்று மிஞ்சிய ஆமை ஓடுகள் பரந்து கிடப்பதைப்போல துயரம் செய்யும் இந்த அலரிகள் கூச்சல்கள் எழுப்பும் ஒரு தீ போன்ற வெம்மையை அங்கே பரவ விட்டுக்கொண்டிருக்கும்.

    ===========================================================================================

    “பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
    துறைபடி அம்பி அகமணை ஈனும்”
    ……

    ஐங்குறு நூற்றின் 168 ஆம் பாடல் இது.அம்மூவனார் பாடிய கற்பனை வளம் செறிந்த ஒப்பற்ற வரிகள் இவை..இதில் வரும் கடற்கரை காட்சியில் அடுக்கு அடுக்காய் சித்திரங்கள் விரிவது போல் காட்சியை நான் கண்டு களிக்கலாம்.வெள்ளைக்காக்காய் பார்த்தேன் என்றால் நம்மை மேலும் கீழும் பார்க்கும் இன்றைய தமிழர்கள் அப்படித்தான் பார்த்திருப்பார்களோ அம்மூவனாரை? ஆனால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள சீ கல் எனும் “அந்த சிறுவெண் காக்கைகளை” கூர்ந்து கவனித்திருப்பார் போலும்.யார் கண்டது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள சிவப்புத் தமிழர்களே செவ்விந்தியர்களாக இருந்திருக்கலாம்.அந்த சிறுவெண் காக்கை கூடு கட்டும் இடம் “துறைபடி அம்பி அகமணை” ஆகும்.கரையில் பழசாகிப்போன படகுகளை (அம்பி) அப்படியே விட்டு விடுவார்கள்.அதுவே துறை படி அம்பி ஆகும்.அதில் உள்ள குறுக்குக்கட்டைகள் அமர்வதற்கு உள்ளவை.அது தான் “மணை” எனப்படுகிறது.இன்றும் “மணை” என்றால் சாப்பிட மட்டும் அல்லாமல் காய்கறி அரியும் போதும்(அரிவாள் மணை) அமர்வதும் அதுவே தான்.இது மட்டுமா? வாழ்க்கையில் மங்கலம் தொடங்கும் மணமேடையில் கூட “மணையில்”தான் பெண்ணும் மாப்பிள்ளையும் மணையில் அமர்ந்து தான் தொடங்குகிறார்கள்.அந்த “அம்பி”மணையில் அவ்வளவு நுட்பம் இருக்கிறது.”ஈனும்” என்பதும் கூட சிறுவெண் காக்கைகள் அங்கே தங்கள் இல்லம் தொடங்க கூடு கட்டி குஞ்சுகள் ஈனுவதை குறிக்கும்.பறவைக்கூடு தானே அதற்கு “அருமணை” (அரியதாக அங்கே கட்டப்படும் கூடு என்ற பொருளில்) அம்மூவனார் எழுதியிருக்கலாமே.மனித வாழ்க்கையையே அந்த சிறு வெண் காக்கைக்கு ஏற்றி (வீடு…. உள்ளம் என்று பொருள் பட) “அக மணை” என்றல்லவா எழுத்தாணியைக்கொண்டு கீறியிருக்கிறார்.இங்கு மேலோட்டமாய் உள்ளடங்கி இருக்கும் மணை என்று உரை செய்தாலும் “அக நானூற்றின்” காதல் மணம் அந்த மணையில் அவற்றிக்கு கூடு கட்ட உந்து விசை ஆகி இருக்கிறது என்று “உள்ளுரையும்” அதில் உளது.படகுகள் இரு முனையும் கூராக இருப்பதால் அவற்றிற்கு அம்பு என்ற சொல் வழங்குவது நமக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது.கூராக கிழித்துச் செல்லக்கூடியவை “அம்பி” என சொல்லப்படுகிறது.அம்பு இங்கு “நீருக்கும்” ஆகி வரும் ஆகுபெயர் எனலாம்.தண்ணீர் என்ற சொல்லுக்கு அம்பு என்ற சொல் நமக்கு அப்பு (இடைப்போலி) என்றும் வழங்கப்பட்டிருக்கலாம்.வடமொழியில் அப்பு என்று ஆகியிருப்பதன் உட்குறிப்பில் தமிழின் தொன்மை நன்கு வெளிப்படுகிறது.

    தமிழ்ச்சொல்லின் இந்த “அம்பியின்” அம்பு என்னில் தைத்தையே இங்கு சங்கநடைக்கவிதை ஆக்கியிருக்கிறேன்.

    துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌

    தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
    கொடுவரி முதலை குடை தண் துறைய‌
    குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
    உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
    பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?
    அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
    அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்
    வேங்கை வரித்த திண்கால் ஓமை
    அசைவுறு காலை முரண்தர முரலும்
    அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
    அலமரல் செய்யும் அயற்சினை சேரும்.
    அள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌
    துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌
    ஞாழற்பூவின் பொன்பொறி சுணங்கு
    மெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.
    புலம்பல் காலொடு புள் ஓர்த்து நின்று
    என்று வருங்கொல்? இடமெது?தடமெது?
    குறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது
    குழைஇழையாடும் மழைக்கண் தோழி.

    பொழிப்புரை

    தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
    கொடுவரி முதலை குடை தண் துறைய‌
    குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
    உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
    பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?

    தான் ஈன்ற குட்டிகளை தானே தின்னும் இயல்புடையது முதலை. மேல் தோல் தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களைப் போன்றும் வரிகளைக் கொண்டதுமான மேல் தோலை உடைய முதலை மூழ்கி மூழ்கி குளிக்கும் ஆற்றுத்துறையை உடையவனாகிய தலைவனே.ஒரு நாள் அவன் வருவான் என செய்திக்குறி அனுப்பியும் இந்த நீண்ட நெடும் இரவில் வராமல் இருந்துவிட்டான்.தூக்கம் தொலைத்து நான் மாய்ந்து விட்டேன்.என் உடலை உயிர் தின்னுவது போலவும் உயிரை உடல் தின்னுவது போலவும் எனக்கு நோய் தந்து என்னை ஆட்கொண்டு எங்கு சென்றாய்? தலைவனை நோக்கி தலைவி கேட்பது போன்ற கூற்று இது.

    அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
    அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்
    வேங்கை வரித்த திண்கால் ஓமை
    அசைவுறு காலை முரண்தர முரலும்
    அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
    அலமரல் செய்யும் அயற்சினை சேரும்.

    கடற்கரையில் உள்ள ஒரு காட்சி அங்கே விரிகிறது.அளத்தல்(முகவை) பாத்திரமான மரக்கால் எனும் அம்பணம் ஒன்றை கவிழ்த்துப்போட்டது போன்ற ஆமையின் முதுகுப்புறத்தில் அடிக்கடி விட்டு விட்டு குரல் எழுப்பும் நாரை (குருகு) ஒன்று நிற்கிறது.அது சிலம்பின் பரல் ஒலி போல் ஓசை எழுப்புகிறது.அந்த ஒழுங்கான ஓசை திடீரென்று முரண்பட்டு ஒலிக்கிறது.ஏனெனில் வேங்கை மரத்து பட்டை வரிகளைப்போன்ற அமைப்புடைய ஆமையின் உறுதியான கால்கள் நகர்வுற்ற பொழுது நாரை அவ்வாறு கூச்சல் இட்டது.ஆமை முதுகில் ஒரு நில அதிர்வு போல நிகழ்ந்த அந்த அச்சத்தில் சிறகை பட பட என்று அடித்துக்கொண்டு நாரை கலக்கம் அடைந்து அருகில் உள்ள ஒரு மரக்கிளையில் தஞ்சம் அடைகிறது.தலைவன் வராமல் விட்டது அவளுக்கு உள் மனத்தில் அப்படி ஒரு அதிர்வு ஏற்பட்டதை உட்குறிப்பாய் இக்காட்சி உணர்த்துகிறது.நரைக்கு தஞ்சம் கிடைத்தது போல் தலைவன் மீண்டும் அவளிடம் வந்து விடுவானா? அடுத்துவரும் வரிகள் அதை விவரிக்கின்றன.

    அள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌
    துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌
    ஞாழற்பூவின் பொன்பொறி சுணங்கு
    மெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.
    புலம்பல் காலொடு புள் ஓர்த்து நிற்கும்.
    என்று வருங்கொல்? இடமெது?தடமெது?
    குறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது
    குழைஇழையாடும் மழைக்கண் தோழி.

    சேறு அடைந்த உப்பங்கழியின் பக்கம் சார்ந்த (இருங்கழிப் பால)அந்த‌ கரையில் நெடுநாளாய் கிடப்பில் கிடக்கும்(பழைய) படகு (அம்பி) தனக்கே உரிய நீரில் செல்லும் பாய்ச்சலை மறந்து கிடந்தாற்போல‌ தலைவி துயரம் தோய்ந்து கிடக்கிறாள்.அதனால் அதை தோழியிடம் இவ்விதம் கூறுகிறாள்.பொன் போன்ற மஞ்சள் நிற (கடற்கரையின்)ஞாழற் பூவின் படர்ந்த புள்ளிகள் போன்ற தேமல் (இப்பசலை நோயில்)உடம்பு முழுதும் சிற்பம் செதுக்கியது போல் (மெய்யது பொள்ளி…பொள்ளி என்றால் செதுக்கி என்று பொருள்) பொய்மைப்பூக்கள் படர்ந்தாற்போல் தோன்றும்.அதனால் நான் காற்றின் ஒலியில் ஒரு புலம்பல் கேட்டு துன்புறுவேன்.வானத்தை வெறித்து பறவைகள் பறப்பதை கூர்மையோடு உற்றுநோக்கி என்னை ஆற்றிக்கொள்ளப் பார்ப்பேன். இருப்பினும் தோழி!அவன் மீண்டும் என்று வருவான்? எந்த இடத்துக்கு எந்த வழியில் வருவான்?என உன்னை அந்த இரவு சந்திப்பு அடையாளத்தின் நெடியதோர் கணிப்பைப்பற்றி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருப்பேன் (தொண தொண வென்று).செவிகளில் ஆடும் அழகான குழையணிந்தவளே! குளிர்பார்வையால் என்னை களிப்பூட்டுவளே!.இப்படி கேள்வி கேட்பது தானே தலைவிகள் எனும் இந்த இரக்கத்துக்குரிய காதலிகளின் பண்டைய வழக்கமான கேள்வி (தொல் கேள்)கேட்கும் தன்மைகள்.

    ================================================================================================

    Share
  • சிகரம் நோக்கி (6)

    சுரேஜமீ

    peak111

    இதுவரை நாம் சென்ற இரு கட்டுரைகளின் தொடர்ச்சியாக, இப்புவியின் இருப்பைக் கெடுக்கும் இயற்கையின் தலையாய பிரச்சினைகளைப் பட்டியலிட்டு,

    1. மக்கள் தொகை
    2. காலநிலை மாறுபாடுகள்
    3. பல்லுயிர்ப் பெருக்கங்களின் இழப்புகள்
    4. வேதிப்பொருட்களின் சுழற்சி
    5. தண்ணீரின் தேவை
    6. கடல்நீர் அமிலமயமாதல்
    7. மாசு படிதல் (Pollution)

    அதுபற்றி நாம் அறியவேண்டிய சுருக்கமான கருத்துக்களைப் பார்த்தோம். இன்றைய பதிவில் அதன் இறுதிப் பகுதியாக, அடுத்த மூன்று பிரச்சினைகளான,

    8. ஓசோன் படல பாதிப்பு
    9. கடல் வளங்கள் அபகரிப்பு
    10. காடுகளை அழித்தல்

    பற்றிச் சில தகவல்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

    8. ஓசோன் படல பாதிப்பு

    ஓசோன் படலம் என்றால் என்ன? அதன் பயன் என்ன? அதைப் பாதுகாப்பது எப்படி? என்றெல்லாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஓசோன் படலம் என்பது வளிமண்டலத்தில் சற்றேறக் குறைய ஒரு 50 கிலோ மீட்டர் தூரத்தில் பரவியுள்ள ஒரு படலம் ஆகும். இதன் முக்கியப் பணி என்னவென்றால், வான் மண்டலத்திலிருந்து பூமியை நோக்கி வரக் கூடிய புற ஊதாக் கதிர்களைக் கட்டுபடுத்தி, பூமியில் வாழும் உயிரினங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதே. ஆனால், அபரிமிதமான நச்சு வாயுக்களின் வெளிப்பாடு காரணமாக, ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு ஒரு பெரிய ஓட்டை அப்படலத்தின் மீது விழுந்திருப்பதும், அதன் தாக்கத்தால், வாழும் சூழல் மாறியிருப்பதும், அது தொடர்பான எச்சரிக்கைகளை அறிவியல் வல்லுநர்கள் நமக்கு விடுத்த வண்ணம் இருப்பதும் நாம் அறிவோம்.

    இதனைப் பாதுக்காப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு, மிகவும் உறுதியுடன், நச்சு அமிலங்களை வெளிப்படுத்தும் தொழிற்சாலைகளை மட்டுப்படுத்துவதும், அதற்கு மாற்றாக சுற்றுச் சூழலோடு ஒத்துப் போகக்கூடிய எரிசக்திகளைக் கண்டுபிடிப்பதும் தானேயொழிய, வேறேதும் கிடையாது. இதை எவ்வாறு தனி ஒருவனால் செய்ய முடியும் என எண்ணாமல், இன்றே, இப்பொழுதே, நாம் நினைத்தால், நிச்சயமாக, ஒரு மாற்று சமுதாயத்தை, இயற்கை வளங்களை மேம்படுத்தும் ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையும், அது தொடர்பான செயல்பாடுகளும் தான்!

    9. கடல் வளங்கள் அபகரிப்பு

    கிராமங்களிலே நீர்நிலைகள் இருக்கும். அங்கு தாமரை, அல்லி, பாசி முதலான தாவரங்களோடு, மீன்களும் இருக்கும். அப்படி இருக்கின்ற சூழலில், அந்த நீர் நிலையிலிருந்துதான் குடிநீருக்கான தண்ணீரையும் எடுத்து வருவது வழக்கம். நீர்நிலை அவ்வளவு சுத்தமாக இருப்பதுடன், சத்து நிறைந்ததாகவும் இருப்பதற்கு முக்கியக் காரணம், அதில் வாழ் தாவரங்களும், உயிரினங்களும் என்றால், அது அறிந்தவர்களுக்குப் புரியும்.
    ஆக, ஒரு சாதாரண நீர்நிலைக்கே இப்படி என்றால், அகண்டு விரிந்து இப்புவியில் சுமார் மூன்று பங்கு நீரால் சூழப்பட்ட பெருங்கடல்களை நினைத்துப் பாருங்கள்! அதன் வளங்கள் நம் இயற்கைக்குத் துணை புரிந்தால்தான், நல்ல மழையே பெய்ய ஏதுவாகும் என்பதை நாம் யோசித்து இருக்கிறோமா? அது மட்டுமா?

    உயிரிகள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவை. இத்தகைய சூழலில், பரந்த வலையின் மூலமோ, இயந்திரங்கள் உதவியுடனோ, அபரிமிதமாக கடல்வாழ் உயிரிகளை பிடித்து நம் வாழ்வின் தேவைகளுக்குப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இதனால், அரிதான உயிரினங்கள் அழிக்கப்படுவதும், கடல் வாழ் உயிரினகளில் சூழல் நிலைகுலைவதும் நாம் எண்ணிப்பார்த்தது உண்டா?
    ஒரு தகவலை உங்களுடன் பகிர்வதில் நிச்சயம் உங்கள் சிந்தனையில் ஒரு மாற்றம் வரும் என நம்புகிறேன்.

    நம் சிந்தனையைத் தூண்டும் ஒரு புள்ளி விவரம்;

    52% மீன்களின் உற்பத்தியை முழுதும் உறிஞ்சிவிட்டோம்
    20% மீன்களின் உற்பத்தியை சுமாராக உறிஞ்சி இருக்கிறோம்
    17% மீன்களின் உற்பத்தியை அபரிமிதமாக உறிஞ்சி இருக்கிறோம்
    7% மீன்களை அழித்துவிட்டோம்
    1% மீன்கள் அழிவிலிருந்து மீண்டு வருகின்றன! (source: http://overfishing.org)

    அதிகபட்சமாக, 90% மீன்கள் இதுவரை சூறையாடப் பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

    10. காடுகளை அழித்தல்

    ஒரு நாடு உருவாகவேண்டுமென்றால் காடுகள் அழிக்கப்படத்தானே வேண்டும்? அது தவறல்ல. ஆனால், ஒரு நாட்டை உருவாக்கிய் பின்னர் அழித்த காட்டிற்கு இணையாக மரங்களை நடலாமே என்றுதான் சொல்கிறோம். அது புரியாமல், சாலைகள் போடுவதற்காகவும். இன்னும் சொல்லப்போனால், வானளாவிய கட்டிடங்கள் கட்டுவதற்காகவும், மனிதனைவிட அதிக ஆண்டுகள் வாழக்கூடிய, வாழ்ந்த மரங்களை வெட்டுவது, தன்னைத் தானே அழிப்பதற்குச் சமம் என்பதை உணரும் நாள் வந்தால், நாம் வாழும் பூமி சொர்க்கம் எனலாம்!

    உலக நாடுகளில் இயற்கைச் சீற்றங்களால், காடுகள் அழிவதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்! ஆனால், மனித மேம்பாடுக்காக அழிக்கப்படும் காடுகள்தான் வேதனையைத் தருகின்றன. இதில் கொள்ளையர் கூட்டங்களும், அவர்பின் நிற்கும் அரசியல் ஊக்கங்களும் அடங்கும்.

    இதனால் ஏற்படும் விளைவுகளைச் சிந்தித்தோமா?

    மிக முக்கிய மூன்று விளைவுகளைப் பாருங்கள்!

    • தட்பவெப்ப மாறுபாடு

    கடந்த ஐம்பது ஆண்டுகளில் பூமிச்சூடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஒவ்வொரு ஆண்டும் என்றால் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. அடர்ந்த காடுகள் இருந்த இடங்களெல்லாம் அழிக்கப்பட்டு, நகரங்கள் உருவானதும், பெரிய பெரிய தொழிற்சாலைகளும், ஆராய்ச்சி என்ற பெயரில் நிறுவப்படும் கனரக உலைகளும் தரும் பாதிப்புதான் இவைகளெல்லாம் என்பதை உங்கள் மனக்கண் முன் கொண்டு வர விழைகிறேன்.

    • சுகாதாரக் குறைவான காற்று

    இன்று நாம் பெரும்பாலும் சுவாசிக்கும் காற்று நச்சுக் காற்றுதான் என்பதும், நம் வாழ்க்கையின் நீளத்தை, இந்த நச்சுக் காற்று குறைப்பதோடு மட்டுமல்லாமல், மிகக் கொடிய நோய்களுக்கும் காரணமாக இருக்கிறதென்பதும் தெரிந்தும் கையாலாகாத நிலையில், உலக வாழ்க்கையில் நம் பொருளாதார நிலையையே ஒற்றைக் குறிக்கோளாக நினைத்து, வாழ்க்கையை ஓட்டுகிறோமே என்பதற்காக நாம் வருத்தப் படவேண்டும் நண்பர்களே!

    • பொய்யும் மழை

    பருவத்தை ஒட்டி மழை பெய்த காலங்கள் மாறிவிட்டன. இன்னும் சொல்லப் போனால், பருவமே மாறிவிட்டது கூடப் பரவாயில்லை, ஆனால் பெய்ய வேண்டிய மழை கூடப் பொய்த்துப் போனதால், நாம் இயற்கை விவசாயத்திலிருந்து செயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு உந்தப் பட்டிருக்கிறோம் என்பதைவிடத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்ற சொல்லையே உபயோகிக்க விரும்புகிறேன்.

    ஆக, நாம் வளர்ச்சி என்று எதையெல்லாம் நினைத்தோமோ அதை அடைவதற்கு நாம் கொடுத்த விலையோடு நின்றுவிட்டது தான் தளர்ச்சியேயொழிய,

    நாம் வளர்ச்சிக்கு ஈடாக, இயற்கை வளங்களை மேம்படுத்தியிருந்தால்,

    நிச்சயமாக நம்மால், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திருக்க இயலும்.

    வளர்ச்சி என்பது நாணய மேம்பாடு (wealth appreciation) அல்ல; மாற்றாக, நாம் நயத்தோடு செய்யும் ஒவ்வொரு செயலும்தான் என்று கூறக் கடமைப்பட்டிருப்பதாக நாம் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்; அதற்கேற்ப செயலாற்ற வேண்டும்! அதைப் பார்த்து வரும் சமுதாயம் வளர வேண்டும்! அதுதான் உண்மையான வளர்ச்சி!

    இல்லையேல், ஒரு ஆக்க பூர்வமான சமுதாயத்தை நாம் விட்டுச் செல்வதாக ஒரு போதும் மன நிறைவு கொள்ளமுடியாது!

    தொடர்ந்து சிந்திப்போம்………சிகரம் நோக்கி!

    Share
  • சொல்லச் சொல்ல இனிக்குதடா …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    solla solla

     

    சொல்லச் சொல்ல இனிக்குதடா

    கட்டிக்கரும்பின் சுவை போல கண்ணதாசனே… உன் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சுவைதானே!

    அதைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா… என்றே சொல்லலாம்.

    கந்தன் கருணை திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்…

    பி.சுசீலா குரலில் குற்றால அருவி குளித்தெழுந்து வந்து பரவசம் தரும் தென்றல் குரலாய் தழுவியதுபோல் … இசையமைப்போ திரையிசைத் திலகத்தின் (கே.வி.மகாதேவன்) கைவண்ணத்தில்… இது ஒரு திரைகானம் மட்டுமல்ல!! தேவ கானம்!

    சென்னை வானொலி நிலையத்தில் ஒரு முறை கவியரசர் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி வழங்குவதற்காக பாடல்கள் சில தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தேன். முதல் பாடல்… கண்ணதாசனின் முத்தான கிருஷ்ண கானம். ஒலித்தகட்டில் ஏற்பட்டிருந்த குறையினால் அப்பாடல் ஒலிபரப்ப இயலாது என நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சொல்லிவிட…

    முதற்பாடல்… இறைவணக்கமாய் அமையட்டுமே என்கிற எண்ணம் அகலாமல் அடம்பிடித்தது. அப்போதுதான் இந்தப் பாடல் குறுந்தகடு கண்ணில் பட்டது. அவசரமாக … அப்பாடலை ஒரு முறை கேட்டுவிட்டு… அதற்கு வழங்கிய முன்னுரை இதோ…

    உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் குரலன்றோ? என்கிற வரியைத் தொட்டு…

    ஆன்மீக ரகசியத்தைக் கண்ணதாசன் திரைப்பாடல் வரிகளில் பறைசாற்றுகிறார் கேளுங்கள் என்றே!

    அது சரி … எந்தப் பாடலில்தான் கண்ணதாசன் முத்திரைப் பதிக்கவில்லை?

    கந்தன் கருணை திரைப்படத்தில்…இந்தப் பாடலைக் கேளுங்கள்… ஓம் என்கிற ஓங்கார நாதம் உலகமெங்கும் வியாபித்திருக்கிறது. அஃது ஒருவரையொருவர் வாழ்த்துரைக்கும்போது உட்பொருளாய் வெளிப்படுகிறது என்றே சுட்டிக்காட்டுகிறார் கவியரசர்!

    சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
    உள்ளமெல்லாம் உன் பெயரைச்
    (சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

    பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
    உள்ளமெல்லாம் உன் பெயரைச்
    (சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

    பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
    முருகா அமைதி கொண்டது – அறிவில்
    சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
    கந்தா பெருமை கொண்டது – முருகா
    (சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

    உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
    உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
    யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
    உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
    கந்தா முதுமை வராது – குமரா
    (சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

    முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
    அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
    உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
    அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
    கந்தா உன் அருளன்றோ – முருகா
    (சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

    காணொளி: https://youtu.be/ZCEVEOB7hao

    https://youtu.be/ZCEVEOB7hao

    Share
  • “தேடல்“

    — கார்த்தி ராஜூ.

    கரியமேகம் கண்ணீர் விடத் தொடங்கிய போது கார்த்திக் அந்தப் பேருந்தில் ஏறி இருந்தான். கூட்டம் என்றும் சொல்ல முடியாது … அதே சமயம் காலி என்றும் சொல்ல முடியாது. ஒரு மிதமான கூட்டம். ஜன்னலோர இருக்கையாய் தேடி அமர்ந்தான் கார்த்திக். வண்டி கிளம்பத் தொடங்கியதும் மேகம் கண்ணீர் விடத்தொடங்கிய நேரமும் சரியாய் இருந்தது. அந்த சாரல்களிடம் ஒவ்வொன்றாய் நலம் விசாரித்து பேசி கொண்டிருந்தான். அந்த சாரல்களுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட நட்புப்பிணைப்பு வண்டியின் மேல் கூரையில் இருந்து ஒழுகிய துளிகளுக்கு இடம் கொடுத்துத் தள்ளி உட்காரச் செய்தது. இம்முறை அவன் நினைவுகள் ஒவ்வொரு மைல்களாய் அவனோடு பயணிக்கத் தொடங்கின.

    சிறு வயதுக் குறும்புகள்…..வாத்தியாரிடம் செய்த சில்மிஷங்கள்…. நண்பனுக்காக வாங்கிய தண்டைனைகள்…. சொல்லாத காதல்கள்…..மறைக்கப் பட்ட உணர்வுகள்…..காயம் பட்ட இதயம் …என தன் கட்டுபாட்டை இழந்து அது பயணிக்கத் தொடங்கியபோது நடத்துனர் பயணச்சீட்டிற்காக அவனருகே வந்து நின்றார்.

    “சார் … குருவம்பட்டிக்கு ஒரு டிக்கெட் குடுங்க …” சில்லறை வாங்கிவிட்டு மனதிற்குள் எதோ ஒன்றை நினைத்து பெருமூச்சு விட்டு சாய்ந்து படுத்தான். அலுவல் விஷயமாக அந்த கிராமத்திற்கு அவன் சென்றாலும் மனது மட்டும் அவன் விட்டுச் சென்ற சொந்தங்களை எண்ணிக் கொண்டிருந்தது. சிறு வயதில் கோபப்பட்டு வீட்டை விட்டு ஓடி வந்து, சென்னைக்கடற்கரையில் தஞ்சம் புகுந்தவன், பால்ய ஞாபகங்களை தவழ விட்டான்.

    தினமும் காலை டீக்கடையிலும் மாலை சுண்டல் விற்பதற்கும் சென்று விடுவான் கார்த்திக். அவனுக்கு வழக்கமான வாடிக்கையாளர்கள் அந்த கடற்கரைக்கு வரும் முதியவர்களும் பகுதி நேர காதலர்களும் தான்.

    “சுண்டல்………. சுண்டல்……… சுவையான சுண்டல்!“

    “சார் சுண்டல் சார்”….”மேடம் சுண்டல் மேடம் !“

    “பத்து ரூபாய்க்கு குடுப்பா …!”

    “இந்தாங்க சார்…… அம்மா நீங்களும் வாங்கிகங்க…”

    “இந்தா சார்…இன்னொன்னு ….சும்மா ஜமாய்ங்க..!”

    இப்படித்தான் வருடத்தில் 365 நாட்களும் கழியும் கார்த்திக்குக்கு. அந்த கடற்கரைக்கு குழந்தைகளோடு வரும் பெற்றோரையும், அவர்கள் அந்த குழந்தையை கொஞ்சும்போது அவனுக்கு ஏக்கமாய் வருகிற கண்ணீர்த் துளிகள் கடலில் சேர்ந்ததால்தான் என்னவோ கடல்நீரும் உப்பு கரிக்குது போலும்.

    அன்றும் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு ஒரு படகின் ஓரமாய் உட்கார்ந்தான் கார்த்திக்.

    “வளையல், பொம்மை வாங்கிறிங்களா சார்?” என சென்னைக்கே உரித்தான பாணியில் ஒரு பெண் குரல்.

    திரும்பிப் பார்த்தால் கருமையும் மாநிறமும் சேர்ந்த கலைவையாய் எண்ணெய் வைக்காத தலையோடு, கையில் வளையல்களோடும் கூடையில் பொம்மைகளோடும் பதினாறு பதினைந்து வயது சிறுமி.

    “இல்லைமா…வேணாம் … நானே சுண்டல் விக்கிறவன்…எனக்கு எதுக்கு வளையல் பொம்மை எல்லாம்?”

    இதை கேட்ட அந்தப் பெண் முகம் வாடி அழ தொடங்கி விட்டாள்.

    “ஏ புள்ள …இந்தா புள்ள ….ஏன் அழுவுற?”

    “சாயங்காலம் ஆகிப் போச்சு, இன்னும் நான் எதுவுமே விக்கல….எங்க அம்மா என்னைக் கொன்னுடுவாங்க !”….என்றாள் விக்கலுடன்.

    அவள் அழகில்லை என்றாலும் அந்த வெகுளித்தனம் அவனுக்கு பிடித்திருந்தது,

    “இந்தா இருபது ரூபா …கொண்டு போய் உங்க ஆத்தா கிட்ட குடு”

    சற்று தயங்கி அந்தக் காசை வாங்கியவள் சின்னதாக சிரித்துவிட்டு ஓடினாள்.

    “நாளைக்கு இதே இடத்துக்கு வாங்க…காச கொடுத்துடறேன்.”…..புன்னகையோடு அவள் சந்தோஷப்பட்டதை எண்ணி தானும் சந்தோஷப்பட்டான்.

    மறுநாள் அதே இடத்தில், அதே சந்திப்பு …ஆனால் இந்த முறை சற்று நெருக்கத்துடன். அவள் பெயர் பாத்திம்மா. மற்றபடி அவர்களுக்குள் எல்லா விஷயங்களும் ஒத்துப் போயின. வாழ்கையை புதிதாக பார்க்க ஆரம்பித்தான் கார்த்திக். தனக்கு ஒரு புது சொந்தம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடின…ஒரு நாள் வழக்கம் போல் அவர்கள் பேசிகொண்டு இருக்கையில் அவள் அம்மா அவளை அடித்து இழுத்துச் சென்றவள்தான்…பின்பு அந்த கடற்கரையில் கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை அவள் தென்படவில்லை. இருந்த ஒரு சொந்தமும் விட்டுப் போனதை எண்ணிக் கடலிடம் அழுது முறையிடுவான் கார்த்திக். பின்னாளில் முட்டி மோதி பத்திரிகையில் எதோ எடுபிடி வேலை பார்த்து இப்போது ஒரு ஒரு சின்ன ரிபோர்டர் ஆக இருக்கிறான்.

    அருகம்பட்டிதான் கார்த்திக்கின் சொந்த ஊர். குருவம்பட்டியிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர். இயற்கை வளம் செழிக்கும் இடம். விவசாயத்திற்கு ஏற்ற இடம். பயணிகள் நிழற்குடையாய் நின்ற பனைமரங்களும் வெயிலில் கருகி போன துணை மரங்களும், அங்கே ஓடி விளையாடி திரிந்த தும்பிகளும், கலெக்டரிடம் மனு கொடுத்து ஏற்படுத்திய மின் கம்பிகளும், சில்மிஷமாய் சிரித்து பறக்கும் சிட்டுக்குருவிகளும், சின்னதாய் காக்கைகள் குளியல்கள் போடும் அருவிகளும், புழுதி படிந்து வெறிச்சோடிய சாலைகளும் அமைதியாய் விடியும் காலைகளும் என அங்கே ஒரு ஒட்டு வீட்டில்தான் கார்த்திக் வசித்து வந்தான். இப்போதும் அவனுக்கு தன் பெற்றோரை பார்க்க மனம் வர வில்லை… வண்டி தேநீர் இடைவேளையில் நின்று கிளம்பியது. வருடங்கள் பல கடந்தாலும் நினைவுகள் மட்டும் தூறலாய் கார்த்திக்கின் இதயத்தில் சொட்டிக் கொண்டிருந்தது…..முற்று பெறாமல். ஜன்னலின் ஓரம் தலை சாய்த்து கண்ணாடியிடம் காதோரமாய் அது சொல்லும் ரகசிய நினைவுகளை கொண்டு தன் பயணத்தை மீண்டும் ஓட விட்டான்… பின்னால் யாரோ கத்தும் சத்தம் கேட்டது …திரும்பி பார்த்தான்.

    “அஞ்சலி ….அழுவாதம்மா… அம்மா உனக்கு எல்லாம் வாங்கி தரேன் …” என்று ஒரு தாய் எட்டு வயது பெண் குழந்தையை சமாதானம் செய்து கொண்டிருந்தார். மரத்துப்போன மனம் வலிக்கத் தொடங்கியது. தலையை திருப்பி நன்றாகச் சாய்ந்து பெருமூச்சு விட்டுக் கண்களை இறுக மூடி ஐந்து வருடம் பின்னோக்கிச் சென்றான்.

    “அஞ்சலி “……ஆயுளுக்கும் மறக்க முடியாத பெயர்….. அவன் ஊரை விட்டு செல்லும் சமயம் அவனின் கை பிடித்து “என்னால முடியல கார்த்தி….எனக்கு வாழவே புடிக்கல …. என்ன எங்கயாவது கூட்டிட்டுப் போய்டு …” என்று அவள் கதறிய வார்த்தைகளும் கண்ணீரும் அவன் காதோரம் ஒலித்தும் இதயத்தில் இன்றும் வலித்துக் கொண்டு இருக்கின்றன. காதலிக்க ஜாதி வேண்டாம் என்று அவள் சொன்னாள். அவள் குடும்பமோ கல்யாணத்திற்கு ஜாதி வேண்டும் என்று அவனை பிரித்து அவளை வேறு ஊரில் கட்டிக் கொடுத்தனர். அவளை அவள் கணவன் துன்புறுத்திக் கொன்ற விஷயம் அவனுக்கு மட்டும்தான் தெரியும். ஊருக்கு அதன் பெயர் “காரணமில்லாத் தற்கொலை“.

    கார்த்திக்கின் கண்களோடு சறுக்கி விளையாடும் கண்ணீர் துளிகள் இன்று முட்டாளாய் அவனை பார்த்தது. அவன் உடலோடு ஒட்டிய அவள் உயிர் பிரியப் போகிறேன் எனக் கதறுகிறது. வார்த்தைகள் மௌனமொழி பேசுகின்றன. அவள் தந்த நினைவு பரிசுகளை பொக்கிஷமாய் இதயத்தினுள் பூட்டி வைத்திருந்தான் கார்த்திக். அவன் மனங்கள் அவள் ரணங்களால் அலங்கரிக்க பட்ட போதும், அதன் உயிர் அவளுடன் வாழ்ந்த நொடிகளை கொண்டு தத்தளிக்கிறது! வலிகளில் லயித்துத் துவண்டு போன அவன் இதயம் அவள் சென்ற பாதையை தேடி அலைகிறது. ஒவ்வொரு நிமிடமும் அவன் மூச்சு உள்ளேறும் பொழுதெல்லாம் அவள் கூந்தல் வாசத்தையும் அவள் மூச்சுக் காற்றும் சுவாசித்து உயிர் வாழ்ந்து கொண்டிருந்தான். இப்பொழுது அது இல்லை என அவன் மூளை உணர்ந்தாலும்….. இதயம் மறுக்கின்றது.

    இந்த நொடி உடனே முடிய வேண்டும். சதைகள் பிசைந்து நரம்புகள் முறுக்கி உடல் ஊனமாய் பேச முடியாமல் கண்ணீரை மட்டுமே மொழியாகக் கொண்டு இனிமேலும் கார்த்திக்கால் பேச முடியாது, மரணம் என்ற சொல்லின் அர்த்தம் அவள் பிரிவில் உணர்ந்தான் கார்த்திக். எதிர்பார்ப்பில்லா அன்பு அவள் தந்து அரவணைத்த பொழுது இருந்த மகிழ்ச்சி இப்போது அவள் இல்லை எனத் தெரிந்ததும் சுக்கு நூறாய் ஆனான். அவள் பேசிய வார்த்தைகள் மட்டும் அவன் காதில் ஒலித்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் யுகமாய் ஓடி கொண்டிருந்தது. இமைகள் விலகாமல் ஒரே இடத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் கார்த்திக்.

    மழை நின்று, லேசாக வெட்கம் விட்டு முகில்களுக்குள் முக்காடு போட்டு மறைந்திருந்த சூரியன் எட்டி பார்த்தது. இதமான நேரம். என்ன தோன்றியதோ தெரியவில்லை சட்டென்று வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கியவன், கையிலிருந்த பையை இறக்கி வைத்து பெருமூச்சு விட்டுத் தனக்குத் தானே சிரித்து கொண்டான். குருவம்பட்டி ஐந்து கிலோமீட்டர் என பொறிக்கப்பட்டிருந்த மைல்கல் சிறிதுநேரம் தன்னை சிம்மாசனமாய் கருதி கொள்ளும் படி கேட்டது. அந்த மைல்கல் அவன் காலடி கிடந்தது கெஞ்சியதிற்காக அதன் மேல் உட்கார்ந்து இளைப்பாறினான். கண்ணுக்கெட்டிய தூரம் சேறும் சகதியும் மட்டுமே கம்பளம் விரித்து காத்திருந்தது. நடக்க தொடங்கினான். அப்போது பத்து ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஒரு பெரியவர் அவ்வழி சென்றார்.

    “ஐயா … குருவம்பட்டிக்கு இந்த வழியா போக முடியுமா???“

    “என்னது …??“

    “ஐயாஆஆ….. குருவம்பட்டிக்கு இந்த வழியா போக முடியுமானு கேட்டேன்…” இந்த முறை சத்தமாக ….

    “ம்ம்ம்ம் போலாம் …போலாம் …”

    “நீங்க எந்த வழியில போறீங்க…??

    “நான் அருகம்பட்டிக்கு போகணும் ….இந்த வழியா தான் போறேன் …”

    “சரி வாங்க ஐயா … நடந்துகிட்டே பேசுவோம் .சரி…. நீங்க ஏன் இந்த வயசுல இப்பிடி கஷ்டப்படறிங்க… வீட்ல உக்காந்து நல்லா சாப்பிடலாம்ல….”

    “எனக்கும் ஆசை தான் … ஒத்த புள்ள … கண்ணே மணியேன்னு வளத்தேன்… …அப்பன் மகன் ஒறவு என்ன தண்ணில எழுதுன மாறியா… ஒடனே சலசலத்து போறத்துக்கு…..அது காத்து மாரி… சில சமயம் உன்னத் தடவி கொடுக்கும் பல சமயம் பொரட்டி எடுக்கும் …. அதே சமயம் காத்து இல்லைனாலும் நாம மூச்சு நின்னு போவும் ….. என்னாத்த சொல்ல … கஷ்டப்பட்டு நெலத்த வித்து அவன படிக்க வச்சா……தீடீர்னு ஒரு நாள் பொண்ண கண்ணாலம் கட்டிகினு வந்தான் .. “

    “இனிமே எனக்கு உங்க கூட வாழப் பிடிக்கல…. என் பொண்டாட்டிக்கும் இந்த எடம் புடிக்கல … நாங்க கெளம்புறோம்னு சொல்லிட்டு எங்கள அனாதயா விட்டுட்டு போய்டான்யா ……” என்று முடிக்கும் போதே அவர் கண்களில் கண்ணீர் லேசாக எட்டி பார்க்கத் தொடங்கியது. கார்த்திக்கிற்கு அவன் குடும்பம் பற்றிய நினைவுகள் அவனை தீண்டத் தொடங்கியது. அவரை சமாதானம் செய்து இருவரும் ஒரு வழியாக குருவம்பட்டியை அடைந்தனர்.

    “தம்பி நீங்க கேட்ட ஊரு வந்துருச்சு ….”

    “ம்ம்ம் ரொம்ப நன்றிங்க அய்யா” இப்போது காற்று மெதுவாக சில்லென வீசத் தொடங்கியது. மீண்டும் பெரியவர் லேசாக அழத் தொடங்கினார்.

    “அய்யா… என்னாச்சு?”

    “இல்ல தம்பி ….என் பையனுக்கு குளிர் காத்துனா ஒத்துக்காது… இப்போ எங்க கஷ்டப்படுதோ என்னவோ …” என்றார் விசும்பலுடன்.

    இதற்கும் மேலும் கார்த்திக்கு மனம் பொறுக்க முடியாமல் மனதிற்குள் அழுதே கொண்டே “கவலைப் படாதிங்க அய்யா … எல்லாம் உங்க பையன் நல்லவே இருப்பார்…. நானும் உங்களோடவே அருகம்பட்டிக்கு வரேன்”

    “தம்பி …உங்களுக்கு எதோ ஒரு முக்கியமான வேலை இருக்குனு சொன்னிங்க …”

    “பெத்தவங்கள சந்தோஷ படுத்துறத விட வேற என்ன பெரிய வேலை இருக்க முடியும்” என மனதில் சொல்லி கொண்டு அந்த பெரியவரோடு தனது சொந்த ஊரை நோக்கி நகர்ந்தான் கார்த்திக். ஆனால் அவன் தேடல் மட்டும் அங்கயே முடிவுற்றது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”பார்முழுதும் நின்று பரந்த பரம்பொருள்
    ஓர்நாளும் மாறா(து) ஒழியாது ! -யார்வாளும்
    இத்தை அழித்தல் இயலா தெனவென்று
    சத்தை அறிதல் செறிவு”….

    ”அளவிலான் என்றும் அழிவிலான், ஆனால்
    கொளுமுடற்க் கோலம் கொதியும் ! -அலகிலா
    ஆன்மன் அவனென்(று) அறிவாய் அருச்சுனா
    வான்மண் வசப்பட வை”….கிரேசி மோகன்….

    Share