பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: கண்டது காரணம் ஆம்
பேருலையுள் பெய்த அரிசியைவெந்தமை
ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு – யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும்
கண்டது காரணமாம் ஆறு.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர் மூழையாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யாதற்கும்
கண்டது காரணம் ஆமாறு
பொருள் விளக்கம்:
கொதிக்கும் பெரிய உலையினில் இட்ட அரிசி வெந்து சோறாயிற்றா என அறிய ஓர் அகப்பைச் சோற்றினை மட்டுமே சோதித்து அறிவது போல, யாரிடமும் காணும் செயல்பாடுகளைக் கொண்டே அவரைப் பற்றி நாம் அறிந்திராத குணநலன்கள் என்னவாக இருக்குமென்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
பழமொழி சொல்லும் பாடம்: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறைக் கொண்டு பதத்தை அறிவது போல, ஒருவருடைய செயல்களைக் கொண்டு அவரது பண்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. (குறள்: 701)
ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவர் உலகத்திற்கே அணியாவார் என்று வள்ளுவர் குறிப்பறியும் திறன் கொண்டவரை உலகத்திற்கே அணியாவார் என்று பாராட்டுகிறார். பிறரது இயல்பை குறிப்பாலறிதல் அறிவுடமையாகும்.