-துஷ்யந்தி, இலங்கை
மாயையெனும்
போர்வை போர்த்தி
மனதில் நுழைந்த
காதல் பற்றி…
கற்பனை உலகில்
பறந்திடும் பொழுது
அற்பமாய் தோன்றும்
ஆசைகள் பற்றி…
உலாவரும் மேகம்
மலைகளின் முகட்டை
முத்தமிடுகின்ற
மோகம் பற்றி…
பள்ளந் தேடி
பாதை வகுத்துப்
பாலாய்ச் சொரியும்
அருவிகள் பற்றி…
எழுதிய தாள்களை
எரித்து விடுவோம்!
கறள் பிடித்த வார்த்தைகள்
இருள் படிந்த சிந்தனைகள்
தடம் பதித்த சுவடுகள்
நடம் பயிலும் பாதங்கள்
போதும் என்றெழுதுவோம்!
அலுத்துச் சலித்த
எழுத்துக்களுக்குக்
கட்டாய ஓய்வென்றும்
சட்டம் இயற்றுவோம்!
அழுக்காய்ப் படிந்த
அறிவின் தேக்கம்
நகர மறுக்கும்
’அடிமைத் தழிழன்’ எனும்
நரகம்
அறியாமை அவலங்கள்
அடிமைத்துவ எச்சங்கள்!
எழுதுவோம்
புத்துயிர் ஊட்டும்
புத்துணர்வூட்டும்
புதிய வார்த்தைகள்
வேண்டுமென் றெழுதுவோம்!
தனியொரு மனிதன்
தனியொரு இளைஞன்
தன்னம்பிக்கையுடன்
தாழ்வுணர்வின்றி
முன்னேறி வாழும்
எண்ணம் எழுதுவோம்!
புயலைப் போல,
புற்றீசல் போல,
புதிய வார்த்தைகள்
புறப்பட்டு வருக!
இளமை கொஞ்ச
அறிவு மிஞ்ச
மடமை ஓட்டி
வலிமை ஊட்ட
சிந்தனைத் தீயுடன்
புதிய வார்த்தைகள்
புறப்பட்டு வருக!!

Leave a Reply