சொல்லச் சொல்ல இனிக்குதடா …
— கவிஞர் காவிரிமைந்தன்.
சொல்லச் சொல்ல இனிக்குதடா
கட்டிக்கரும்பின் சுவை போல கண்ணதாசனே… உன் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சுவைதானே!
அதைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா… என்றே சொல்லலாம்.
கந்தன் கருணை திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்…
பி.சுசீலா குரலில் குற்றால அருவி குளித்தெழுந்து வந்து பரவசம் தரும் தென்றல் குரலாய் தழுவியதுபோல் … இசையமைப்போ திரையிசைத் திலகத்தின் (கே.வி.மகாதேவன்) கைவண்ணத்தில்… இது ஒரு திரைகானம் மட்டுமல்ல!! தேவ கானம்!
சென்னை வானொலி நிலையத்தில் ஒரு முறை கவியரசர் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி வழங்குவதற்காக பாடல்கள் சில தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தேன். முதல் பாடல்… கண்ணதாசனின் முத்தான கிருஷ்ண கானம். ஒலித்தகட்டில் ஏற்பட்டிருந்த குறையினால் அப்பாடல் ஒலிபரப்ப இயலாது என நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சொல்லிவிட…
முதற்பாடல்… இறைவணக்கமாய் அமையட்டுமே என்கிற எண்ணம் அகலாமல் அடம்பிடித்தது. அப்போதுதான் இந்தப் பாடல் குறுந்தகடு கண்ணில் பட்டது. அவசரமாக … அப்பாடலை ஒரு முறை கேட்டுவிட்டு… அதற்கு வழங்கிய முன்னுரை இதோ…
உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் குரலன்றோ? என்கிற வரியைத் தொட்டு…
ஆன்மீக ரகசியத்தைக் கண்ணதாசன் திரைப்பாடல் வரிகளில் பறைசாற்றுகிறார் கேளுங்கள் என்றே!
அது சரி … எந்தப் பாடலில்தான் கண்ணதாசன் முத்திரைப் பதிக்கவில்லை?
கந்தன் கருணை திரைப்படத்தில்…இந்தப் பாடலைக் கேளுங்கள்… ஓம் என்கிற ஓங்கார நாதம் உலகமெங்கும் வியாபித்திருக்கிறது. அஃது ஒருவரையொருவர் வாழ்த்துரைக்கும்போது உட்பொருளாய் வெளிப்படுகிறது என்றே சுட்டிக்காட்டுகிறார் கவியரசர்!
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)
பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)
பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது – அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது – முருகா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)
உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது – குமரா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ – முருகா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)
காணொளி: https://youtu.be/ZCEVEOB7hao