சிகரம் நோக்கி (6)
சுரேஜமீ
இதுவரை நாம் சென்ற இரு கட்டுரைகளின் தொடர்ச்சியாக, இப்புவியின் இருப்பைக் கெடுக்கும் இயற்கையின் தலையாய பிரச்சினைகளைப் பட்டியலிட்டு,
1. மக்கள் தொகை
2. காலநிலை மாறுபாடுகள்
3. பல்லுயிர்ப் பெருக்கங்களின் இழப்புகள்
4. வேதிப்பொருட்களின் சுழற்சி
5. தண்ணீரின் தேவை
6. கடல்நீர் அமிலமயமாதல்
7. மாசு படிதல் (Pollution)
அதுபற்றி நாம் அறியவேண்டிய சுருக்கமான கருத்துக்களைப் பார்த்தோம். இன்றைய பதிவில் அதன் இறுதிப் பகுதியாக, அடுத்த மூன்று பிரச்சினைகளான,
8. ஓசோன் படல பாதிப்பு
9. கடல் வளங்கள் அபகரிப்பு
10. காடுகளை அழித்தல்
பற்றிச் சில தகவல்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.
8. ஓசோன் படல பாதிப்பு
ஓசோன் படலம் என்றால் என்ன? அதன் பயன் என்ன? அதைப் பாதுகாப்பது எப்படி? என்றெல்லாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஓசோன் படலம் என்பது வளிமண்டலத்தில் சற்றேறக் குறைய ஒரு 50 கிலோ மீட்டர் தூரத்தில் பரவியுள்ள ஒரு படலம் ஆகும். இதன் முக்கியப் பணி என்னவென்றால், வான் மண்டலத்திலிருந்து பூமியை நோக்கி வரக் கூடிய புற ஊதாக் கதிர்களைக் கட்டுபடுத்தி, பூமியில் வாழும் உயிரினங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதே. ஆனால், அபரிமிதமான நச்சு வாயுக்களின் வெளிப்பாடு காரணமாக, ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு ஒரு பெரிய ஓட்டை அப்படலத்தின் மீது விழுந்திருப்பதும், அதன் தாக்கத்தால், வாழும் சூழல் மாறியிருப்பதும், அது தொடர்பான எச்சரிக்கைகளை அறிவியல் வல்லுநர்கள் நமக்கு விடுத்த வண்ணம் இருப்பதும் நாம் அறிவோம்.
இதனைப் பாதுக்காப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு, மிகவும் உறுதியுடன், நச்சு அமிலங்களை வெளிப்படுத்தும் தொழிற்சாலைகளை மட்டுப்படுத்துவதும், அதற்கு மாற்றாக சுற்றுச் சூழலோடு ஒத்துப் போகக்கூடிய எரிசக்திகளைக் கண்டுபிடிப்பதும் தானேயொழிய, வேறேதும் கிடையாது. இதை எவ்வாறு தனி ஒருவனால் செய்ய முடியும் என எண்ணாமல், இன்றே, இப்பொழுதே, நாம் நினைத்தால், நிச்சயமாக, ஒரு மாற்று சமுதாயத்தை, இயற்கை வளங்களை மேம்படுத்தும் ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையும், அது தொடர்பான செயல்பாடுகளும் தான்!
9. கடல் வளங்கள் அபகரிப்பு
கிராமங்களிலே நீர்நிலைகள் இருக்கும். அங்கு தாமரை, அல்லி, பாசி முதலான தாவரங்களோடு, மீன்களும் இருக்கும். அப்படி இருக்கின்ற சூழலில், அந்த நீர் நிலையிலிருந்துதான் குடிநீருக்கான தண்ணீரையும் எடுத்து வருவது வழக்கம். நீர்நிலை அவ்வளவு சுத்தமாக இருப்பதுடன், சத்து நிறைந்ததாகவும் இருப்பதற்கு முக்கியக் காரணம், அதில் வாழ் தாவரங்களும், உயிரினங்களும் என்றால், அது அறிந்தவர்களுக்குப் புரியும்.
ஆக, ஒரு சாதாரண நீர்நிலைக்கே இப்படி என்றால், அகண்டு விரிந்து இப்புவியில் சுமார் மூன்று பங்கு நீரால் சூழப்பட்ட பெருங்கடல்களை நினைத்துப் பாருங்கள்! அதன் வளங்கள் நம் இயற்கைக்குத் துணை புரிந்தால்தான், நல்ல மழையே பெய்ய ஏதுவாகும் என்பதை நாம் யோசித்து இருக்கிறோமா? அது மட்டுமா?
உயிரிகள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவை. இத்தகைய சூழலில், பரந்த வலையின் மூலமோ, இயந்திரங்கள் உதவியுடனோ, அபரிமிதமாக கடல்வாழ் உயிரிகளை பிடித்து நம் வாழ்வின் தேவைகளுக்குப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இதனால், அரிதான உயிரினங்கள் அழிக்கப்படுவதும், கடல் வாழ் உயிரினகளில் சூழல் நிலைகுலைவதும் நாம் எண்ணிப்பார்த்தது உண்டா?
ஒரு தகவலை உங்களுடன் பகிர்வதில் நிச்சயம் உங்கள் சிந்தனையில் ஒரு மாற்றம் வரும் என நம்புகிறேன்.
நம் சிந்தனையைத் தூண்டும் ஒரு புள்ளி விவரம்;
52% மீன்களின் உற்பத்தியை முழுதும் உறிஞ்சிவிட்டோம்
20% மீன்களின் உற்பத்தியை சுமாராக உறிஞ்சி இருக்கிறோம்
17% மீன்களின் உற்பத்தியை அபரிமிதமாக உறிஞ்சி இருக்கிறோம்
7% மீன்களை அழித்துவிட்டோம்
1% மீன்கள் அழிவிலிருந்து மீண்டு வருகின்றன! (source: http://overfishing.org)
அதிகபட்சமாக, 90% மீன்கள் இதுவரை சூறையாடப் பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
10. காடுகளை அழித்தல்
ஒரு நாடு உருவாகவேண்டுமென்றால் காடுகள் அழிக்கப்படத்தானே வேண்டும்? அது தவறல்ல. ஆனால், ஒரு நாட்டை உருவாக்கிய் பின்னர் அழித்த காட்டிற்கு இணையாக மரங்களை நடலாமே என்றுதான் சொல்கிறோம். அது புரியாமல், சாலைகள் போடுவதற்காகவும். இன்னும் சொல்லப்போனால், வானளாவிய கட்டிடங்கள் கட்டுவதற்காகவும், மனிதனைவிட அதிக ஆண்டுகள் வாழக்கூடிய, வாழ்ந்த மரங்களை வெட்டுவது, தன்னைத் தானே அழிப்பதற்குச் சமம் என்பதை உணரும் நாள் வந்தால், நாம் வாழும் பூமி சொர்க்கம் எனலாம்!
உலக நாடுகளில் இயற்கைச் சீற்றங்களால், காடுகள் அழிவதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்! ஆனால், மனித மேம்பாடுக்காக அழிக்கப்படும் காடுகள்தான் வேதனையைத் தருகின்றன. இதில் கொள்ளையர் கூட்டங்களும், அவர்பின் நிற்கும் அரசியல் ஊக்கங்களும் அடங்கும்.
இதனால் ஏற்படும் விளைவுகளைச் சிந்தித்தோமா?
மிக முக்கிய மூன்று விளைவுகளைப் பாருங்கள்!
• தட்பவெப்ப மாறுபாடு
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பூமிச்சூடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஒவ்வொரு ஆண்டும் என்றால் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. அடர்ந்த காடுகள் இருந்த இடங்களெல்லாம் அழிக்கப்பட்டு, நகரங்கள் உருவானதும், பெரிய பெரிய தொழிற்சாலைகளும், ஆராய்ச்சி என்ற பெயரில் நிறுவப்படும் கனரக உலைகளும் தரும் பாதிப்புதான் இவைகளெல்லாம் என்பதை உங்கள் மனக்கண் முன் கொண்டு வர விழைகிறேன்.
• சுகாதாரக் குறைவான காற்று
இன்று நாம் பெரும்பாலும் சுவாசிக்கும் காற்று நச்சுக் காற்றுதான் என்பதும், நம் வாழ்க்கையின் நீளத்தை, இந்த நச்சுக் காற்று குறைப்பதோடு மட்டுமல்லாமல், மிகக் கொடிய நோய்களுக்கும் காரணமாக இருக்கிறதென்பதும் தெரிந்தும் கையாலாகாத நிலையில், உலக வாழ்க்கையில் நம் பொருளாதார நிலையையே ஒற்றைக் குறிக்கோளாக நினைத்து, வாழ்க்கையை ஓட்டுகிறோமே என்பதற்காக நாம் வருத்தப் படவேண்டும் நண்பர்களே!
• பொய்யும் மழை
பருவத்தை ஒட்டி மழை பெய்த காலங்கள் மாறிவிட்டன. இன்னும் சொல்லப் போனால், பருவமே மாறிவிட்டது கூடப் பரவாயில்லை, ஆனால் பெய்ய வேண்டிய மழை கூடப் பொய்த்துப் போனதால், நாம் இயற்கை விவசாயத்திலிருந்து செயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு உந்தப் பட்டிருக்கிறோம் என்பதைவிடத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்ற சொல்லையே உபயோகிக்க விரும்புகிறேன்.
ஆக, நாம் வளர்ச்சி என்று எதையெல்லாம் நினைத்தோமோ அதை அடைவதற்கு நாம் கொடுத்த விலையோடு நின்றுவிட்டது தான் தளர்ச்சியேயொழிய,
நாம் வளர்ச்சிக்கு ஈடாக, இயற்கை வளங்களை மேம்படுத்தியிருந்தால்,
நிச்சயமாக நம்மால், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திருக்க இயலும்.
வளர்ச்சி என்பது நாணய மேம்பாடு (wealth appreciation) அல்ல; மாற்றாக, நாம் நயத்தோடு செய்யும் ஒவ்வொரு செயலும்தான் என்று கூறக் கடமைப்பட்டிருப்பதாக நாம் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்; அதற்கேற்ப செயலாற்ற வேண்டும்! அதைப் பார்த்து வரும் சமுதாயம் வளர வேண்டும்! அதுதான் உண்மையான வளர்ச்சி!
இல்லையேல், ஒரு ஆக்க பூர்வமான சமுதாயத்தை நாம் விட்டுச் செல்வதாக ஒரு போதும் மன நிறைவு கொள்ளமுடியாது!
தொடர்ந்து சிந்திப்போம்………சிகரம் நோக்கி!