Blog

  • நட்பும் உறவும்!

    -ரா. பார்த்தசாரதி 

    நட்பையும்  உறவையும்   உதறிவிடாதே !
    மனிதனே!  நட்பையும்  உறவையும்   உதறிவிடாதே !
    பழகும்  விதத்தில்  பழகினால்  பகையும் நட்பாகும்  !
    சொந்தம்  என  வாழ்ந்தால்  என்றும்  சுகமாகும் !

    மண்  எனப்  பிரித்தால்  மனிதநேயம்  மறைந்துபோகும் !
    இனம்  எனப்  பிரித்தால்  இனிமை இல்லாமல்போகும்  !
    மனித  நேயத்துடன்  வாழ்ந்தால், என்றும்  நலமாகும் !
    பாசத்தையும்   நேசத்தையும், பாலமாக  அமைத்துடு !

    சாதிமத   பேதத்தை  வேரோடு அழித்துவிடு !
    வயதிற்கும் படிப்பிற்கும் என்றும் மரியாதைக் கொடுத்திடு !
    நட்பும் உறவும் உன் உடன்பிறப்பு என நினைத்திடு !
    மன்னிக்கத் தெரிந்த  மனிதனே  நல்லவன்  எனக்  கருதிடு  !

    கோபத்தையும் ஆணவத்தையும் அடக்கி உறவினைக் காத்திடு !
    மனிதனே! உறவும் நட்பும் ஓர்  இருசக்கர  வண்டிதானோ ?
    இரண்டுமே, ஓர்  நாணயத்தின்  இரு பக்கங்கள்தானோ ?
    நட்பையும் உறவையும் நீ  பணத்தினால் மதிக்காததும் ஏனோ ?

     

    Share
  • வாழ்வாவது மாயம்

    சு. கோதண்டராமன்.

    வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் வேதத்திற்கும் தமிழ்த் திருமுறைகளுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு காணப்படுகிறது.

    வேதம் மனித வாழ்க்கையின் இனிய பகுதிகளைக் கொண்டாடுகிறது. திருமுறைகள் வாழ்க்கையின் இருண்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

    வாழ்க்கையைத் துறந்து சன்னியாசி ஆவது வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்கு அனுபவித்தார்கள். பிள்ளை குட்டிகளுடன், பேரன் பேத்திகளுடன் சௌக்கியமாக வாழ்வதில் ஆனந்தம் கண்டார்கள். வாழ்க்கை துன்பமயமானது என்ற புலம்பல் அவர்களிடம் இல்லை. அதற்காக, அவர்கள் வாழ்வில் துன்பமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் மனம் உடைந்து இந்த வாழ்க்கையே மோசம், இதிலிருந்து விடுபடவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. சாவைக் குறித்து அவர்கள் அஞ்சவில்லை. செத்தபின் என்ன ஆகிறோம் என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. முற்பிறவி, மறுபிறவி என்ற கருத்துருக்கள் அவர்கள் அறியாதவை. அவர்கள் இயற்கை அழகை ரசித்தார்கள். இயற்கையின் எழில் வளத்தை ரசித்து, அதனால் அடையும் ஆனந்தத்தையே செல்வம் என்று கருதினர். இறைவனைச் சரணடைவதே துன்பம் நீக்க வழி என்று கருதினர்.

    திருமுறைகளில் இல்லறத்தை விடத் துறவறம் மேலானது என்ற கொள்கை போற்றப்படுகிறது. வாழ்க்கை துன்பமயமானது, அதிலிருந்து விடுதலை பெறவேண்டும், இறந்த பின் மீண்டும் பிறவா நிலையை அடையவேண்டும், உடல் இழிவானது, நமது புலன்கள் நமக்கு வஞ்சனையைச் செய்பவை, அவற்றை அடக்கி வாழவேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.

    இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன?

    இடைக்காலத்தில் ஏற்பட்ட சமண சாக்கிய சமயங்கள் மக்களிடையே மறுபிறவி, கர்மாக் கொள்கைகளைப் பரப்பின. பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என்ற கருத்தை வலியுறுத்திப் பிரசாரம் செய்தன. இச்சமயங்களைத் தழுவியவர்கள் மட்டுமில்லாது எல்லோரையுமே இந்தக் கொள்கைகள் கவர்ந்தன. தேவார மூவர் மற்றும் மணிவாசகர் பாடல்களில் இவற்றின் அழுத்தமான தாக்கத்தைக் காணலாம். உடலினை முன்னம் இழுக்கென்றிருந்தேன், அந்த அறியாமையிலிருந்து விடுபட்டேன் என்று திருமூலர் சொல்கிறார். ஆடற்பெருமானின் அழகைக் காண்பதற்காக மீண்டும் பிறக்கவும் ஆயத்தம் ஆகிறார் அப்பர். ஆனால் அவரும், சம்பந்தரும், சுந்தரரும், மணிவாசகரும் உடலை இழுக்கென்று கருதினர். அதிலிருந்து விடுபட்டுப் பிறவா நிலை அடைவது தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதினர்.

    சுந்தரர் தேவாரத்தில் வாழ்க்கை துன்பமயமானது என்ற கருத்து மற்றவர்களை விட மிகுதியாகக் காணப்படுகிறது. அவற்றில் சில இடங்களைப் பார்ப்போம்.

    திருஎதிர்கொள்பாடித் தேவாரத்தில் சுந்தரர் கூறுகிறார்-
    இவ்வுலகில் மிகச் செல்வாக்குடன் வாழ்கிறோம் என்று இறுமாப்பு அடையவேண்டாம். இறந்தபின் இவை பயன்படா. நற்கதி அடையவேண்டும் என்றால் இறைவனைத் துதியுங்கள்.

    மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள்
    செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்
    வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
    அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்பதடைவோமே.

    பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி. இறந்த பின் அடையவேண்டிய பிறவாநிலைக்கு ஆயத்தம் செய்துகொள்ளுங்கள். மனை வாழ்க்கை துயரமானது. இதிலேயே கிடந்து உழல வேண்டாம்.

    தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கை
    மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே
    நீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல்
    ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.

    நமது ஐம்புலன்களும் நமக்கு வஞ்சனையைச் செய்கின்றன. எனவே அவற்றின் வழிச் செல்லாமல் இறைவனை நாடி உய்வு பெறுங்கள்.

    வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே
    யாவராலும் இகழப் பட்டு இங்கு அல்லலில் வீழாதே
    மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம்
    தேவர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.

    மனை வாழ்க்கையில் இன்பம் இருக்கிறது என்று ஏமாந்து விடாதீர்கள். அதில் துன்பமும் உண்டு. எனவே அதைக் கைவிட்டு இறைவனடி சேருங்கள்.

    இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனைவாழ்க்கை
    முன்பு சொன்ன மோழை மையான் முட்டை மனத்தீரே
    அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை அடிக ளடிசேரார்
    என்பர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.

    இப்பிறவியில் நமக்கு உறவினராய் வாய்த்தவர்கள் நமக்கு மறு உலகு அடைவதற்கு எந்த வகையிலும் உதவ மாட்டார்கள். எனவே அவர்களைக் கைவிட்டு இறைவனை நாடுங்கள்.

    தந்தை யாரும் தவ்வை யாரும் எட்டனைச் சார்வாகார்
    வந்து நம்மோ டுள்ள ளாவி வான நெறிகாட்டுஞ்
    சிந்தை யீரே நெஞ்சி னீரே திகழ்மதி யஞ்சூடும்
    எந்தை கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.

    பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய். இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய். ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே; அதன் பொருட்டு, விரைந்து அறத்தைச் செய்யுங்கள்.

    வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்
    பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
    தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்
    கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே.

    உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே, இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவதாதலை அறிகின்றிலீர்; குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்றுவன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் செய்ய முடியுமோ? எனவே இப்பொழுதே, `திருக்கேதாரம்` என்று சொல்லுஙகள்.

    பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
    குறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவே
    அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு
    கிறிபேசி நின்றிடுவார் தொழு கேதாரமெனீரே.

    சிற்றின்பத்தில் மூழ்கி இராமல் யமன் வருமுன் இப்பொழுதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழையுங்கள்.

    வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதே
    நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி
    ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே
    கீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே.

    இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையே செய்கிறீர்களே, அப்பொதி பயனற்று ஒழிவதை அறியீரோ? அறிவை இழந்து நீவிர் குழியில் வீழ்வது, நும் வினைப்பயனேயாம். இதனை விடுத்து, சிவ பெருமானது இடம் திருக்கேதாரத்தைத் துதிமின்கள்.

    பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர்
    மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற்
    கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக்
    கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே.

    தேடிச் சோறு நிதம் தின்று ஒரு நாள் கூற்றுக்கு இரையாகும் வேடிக்கை மனிதரைப் போல நான் வீழக்கூடாது என்ற பாரதியின் பாடலை நினைவூட்டும் ஒரு பாடலில் சுந்தரர் கூறுகிறார்.

    உலகியலில் நின்றோர் இறக்கும்போது மற்றவர்கள் அவரைப் பற்றி, `நல்ல துணைவியை மணந்தார்; இல்லற நெறியிலே ஒழுகினார்; நன்றாக உண்டார்; உடுத்தார்; மூப்படைந்தார்; இறந்தார்` என்று சொல்கிறார்கள். அடியேன் அத்தகைய சொல் பெற விரும்பவில்லை. நற்கதி அடைவதற்கான ஒரு வழியினைச் சொல்லியருள்.

    கல்வாய் அகிலுவங் கதிர்மா மணியுங் கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
    நெல்வா யில்அரத் துறைநீ டுறையும் நிலவெண் மதிசூ டியநின் மலனே
    நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
    சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன் தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.

    சமண சாக்கிய சமயங்களுக்கும் சைவத்துக்கும் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் வேறுபாடு இல்லை. ஆனால் சமண சாக்கிய சமயங்கள் துன்பத்தை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் என்று போதித்தன. சைவமோ, வேதக் கருத்தை ஒட்டி, துன்பத்தைத் தீர்க்க ஒரே வழி இறைவனைச் சரணடைதல் என்றது.

    வேதம்+ சமணம்= சைவம் என்று சொல்லலாமா?

     

     

     

     
    படம் உதவி: imgsoup.com

     

    Share
  • அழகு மயில் ஆட…..

    பவள சங்கரி

    நேற்று கோவையில் மருதமலை அடிவாரத்தில் அழகு மயில் அற்புதக் காட்சி காணக்கிடைத்த வரம்!

    DSC_0091[1]

    தண்டலை மயில்கள் ஆட,
    தாமரை விளக்கம் தாங்க,
    கொண்டல்கள் முழவின் ஏங்க,
    குவளை கண் விழித்து நோக்க,
    தெண் திரை எழினி காட்ட, தேம்
    பிழி மகர யாழின்
    வண்டுகள் இனிது பாட, –
    மருதம் வீற்றிருக்கும் மாதோ.

    DSC_0086[1]

    சோலைகளில் மயில்கள் ஆட, தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி நிற்க, மேகங்கள் மத்தளம் போலொலிக்க , குவளைக் கொடிகளின் மலர்கள் அழகிய கண்ணென விழித்துப் பார்க்க, நீர்நிலைகள் தம் அலைகளால் திரைச்சீலையாய் விரித்து காட்ட, தேனொத்த மகர யாழிசை போன்று வண்டுகள் இனிது பாட, மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்ததாம்… கம்பராமாயணத்தின் அற்புத வரிகள். கொண்டல் முழங்கின் மயில் ஆடும்; குவளை மலர்ந்திருக்கும் மாலைப் போதில் தாமரை குவிந்துவிடும், கோசல நாடும்,மருதத்தின் பீடும் என இரண்டையும் கம்பராமாயணத்தில் கம்பனின் கவிந‌யத்தில் கண்டு வியக்க வைக்கும் பாடல்களுள், இது கம்பர் கோசல நாட்டின் மருதநிலத்தின் வளத்தினை வர்ணிப்பதோடு அந்நாட்டின் செழிப்பினைத் திரையிட்டுக் காட்டுகிறது.

    திருமுருகக்கடவுள்

    DSC_0083[1]

    ‘மயில் வாகனன்’ என அன்புடன் போற்றப்பெறும் திருமுருகக் கடவுளுக்கும் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த மயிலுக்கும் மிகப் பழங்காலந்தொட்டே நெருங்கிய தொடர்பு இருந்துவந்துள்ளது. பண்டைக்காலத் தமிழகத்தில் குறிஞ்சி எனும் மலையும் மலைசார்ந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த நம் தமிழர்களிடையே தோன்றி வளர்ந்துள்ள வழிபாடாகவும் விளங்குகிறது. திருமுருகக் கடவுளின் அறுபடை வீடுகள், [திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர், திருஆவினன்குடி எனப்படும் பழநி, திருவேரகம் எனப்படும் சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணிகை ] திருமுருகக் கடவுள் விரும்பி அணியும் செங்காந்தள், கடம்பு போன்ற மலர்கள், திருமுருகக் கடவுளின் பேராற்றல் மிக்க வேற்படையாகத் திகழும் முருகவேல், திருமுருகக் கடவுளின் சிறப்பு வாகனமாகத் திகழ்வது மயில். சங்ககால இலக்கியத்தில் மலையும் மலைசார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் செழுமையையும் இயற்கை அழகையும் பிரதிபலிக்கும் பறவையாக விளங்கிய மயில் திருமுருகக் கடவுளின் சிறப்பு வாகனம். மயில் கருடனைப் போல் வானத்தில் அதிக உயரத்தில் பறக்கவல்ல ஆற்றலை உடையது எனவும், கடற்பகுதியுடன் தொடர்புடையது எனவும் கருதப்படுகிறது. நிலம், வானம், கடல் ஆகிய இயற்கையின் முக்கிய அம்சங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மயில் நம் தேசியப் பறவையாய் இருப்பதற்கு தகுதி வாய்ந்ததன்றோ.

    DSC_0070[1]

    இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டும் காணப்படும் ஒரு வகை பறவை நீல மயில் அல்லது இந்திய மயில். மாவீரன் அலெக்சாந்தரும் இந்தியாவிலிருந்து தம் நாட்டிற்கு மயில்களைக் கொண்டு சென்றதாக வரலாறு கூறுகிறது. பின் அங்கிருந்து உரோம் நாட்டிற்கும், மற்ற நாடுகளுக்கும் மயிலினம் பரவியதாகவும் கூறப்படுகிறது. மயில்களின் அகவல் மிக வித்தியாசமாக சூழலுக்கு ஏற்ப மாறுபடுகிறது என்பர். மயில்கள் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வகையைச் சார்ந்தவை. குச்சிகளை பொறுக்கி வந்து கூடு கட்டும் குருவிகளைப் போலில்லாமல் மயில்கள் அந்த இடத்தில் உள்ள சருகுகளைச் சேர்த்தும், சிறிய பள்ளம் பறித்தும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கூடு கட்டிக் கொள்ளும். ஒரு தடவையில் 4 முதல் 6 முட்டைகள் வரை இடுமாம். வேறு பறவைகளின் கூட்டில் முட்டையிடுவதும் அரிதாக நடப்பதுண்டு. தாவர உணவு, மாமிச உணவு இரண்டையும் சாப்பிடுவதோடு பழங்களும், விதைகளும் அதன் முக்கிய உணவு. அத்திப்பழங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடும். கிழங்குகள், இலைகள், தேன் ஆகியவற்றையும் உண்ணும். புழு, பூச்சிகள், தவளைகள், கரையான்கள் பாம்புகள் கிடைத்தாலும் மகிழ்ச்சியாக சாப்பிடும். ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் ‘கண்’ வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. குறுந்தொகையில், ‘பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்சை’ என்று குறிப்பிடப்படுகிறது.

    மற்ற மிருகங்களை விட மயில்கள் அதிகமாக தோட்டப்பயிர்களை நாசம் செய்யும் என்பதால் விவசாயிகளுக்கு இந்த அழகிய மயில் டைனசோர் போன்று பெரும் எதிரியாகவேத் தெரிகிறது என்பது வருத்தத்திற்குரிய விசயம். சமீபத்தில் ஒரு பெண் தன் தோட்டத்தை சூரையாடிக் கொண்டிருந்ததால் 16 மயில்களை விடம் வைத்துக் கொன்ற செய்தியை செய்தித்தாள்கள் மூலம் அறிந்தபோது வேதனை நெஞ்சையடைக்கிறது. 18-ம் நூற்றாண்டில் அட்லாண்டிக்கில் ஹெலனா தீவில் மயிலை அழகுப் பறவையாக நினைத்து வளர்க்கத் தொடங்கிய, சில ஆண்டுகளில் மயில்கள் நாடு முழுவதும் பெருகி விட்டதோடு, அவற்றிடம் இருந்து பயிர்களைக் காப்பது பெரும் பிரச்சினையாகியிருக்கிறது. அதன்பிறகு மயில்களுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அடியோடு அழிக்கப்பட்டு விட்டன.

    இன்றும் நம் தேசியப் பறவையான மயிலினத்தைக் காப்பதற்கு அரசாங்கம் தகுந்த முயற்சி எடுக்கவில்லையென்றால் அடுத்த தலைமுறையினர் இந்த அழகிய பறவையை புகைப்படத்தில் மட்டுமே காணக்கூடும் என்பது வேதனையான செய்தி. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Share
  • தந்தை ஒரு பொக்கிசமே !

    -பா. ராஜசேகர்

    தந்தையால்
    இவ்வுலகில்
    கால் பதித்தேன்!

    சிந்தையில்
    இரவு பகல்
    முகம் பதித்தேன் !

    பந்தியில்
    அமர்ந்துண்டேன்
    அவன் உழைப்பில்!

    அஞ்சினேன்
    தவறிழைக்க
    முகம் கண்டு !

    துஞ்சினேன்
    அரவணைப்பில்
    தினம் உண்டு !

    மிஞ்சினேன்
    கல்வியிலே
    அவன் பங்குண்டு !

    வீதியில்
    நடக்கையிலே
    அவன் மகனாய் !

    வெற்றிகள்
    குவிக்கையிலே
    தினம் பெருமிதமே !

    சுதந்திரம்
    தினம் உணர்ந்தேன்
    அவன் தந்திரத்தில் !

    சாத்திரங்கள்
    எடுத்து வைப்பான்
    என் நன்மைக்காக !

    மந்திரம்
    தந்தை சொல்லே
    உண்மையாக !

    பொத்திப் பொத்தி
    வளர்த்தானே
    நான் பூமிவாழ !

    பொக்கிசமே
    தந்தை என்பேன்
    உலகம் வாழ !

     

    Share
  • எண்ணித் துணிக கருமம்!

    -பா.ராஜசேகர்

    அன்பும்
    பண்பும்
    பாசம் தரும் !

    உண்மையும்
    உழைப்பும்
    ஊக்கம் தரும் !

    கல்விச்
    செல்வமே
    புகழைத்தரும் !

    கருமை
    மேகமே
    மழையைத் தரும்!

    காதலில்
    தூய்மை
    மேன்மை பெறும் !

    மழலைச்
    செல்வமே
    மகிழ்வைத் தரும்!

    ஒவ்வொரு
    இரவும்
    பகலைத் தரும் !

    ஒளிகண்ட
    நிலவே
    வெளிச்சம் தரும் !

    நல்நிலம் கண்ட
    முளையே
    விளைச்சல் தரும் !

    தொய்வில்லா
    முயற்சியே
    வெற்றியைத் தரும்!

    மாற்றத்தில்
    நன்றே
    சிறப்பைப் பெறும்!

    துன்பத்தின்
    பின் இன்பமே
    இனிமை தரும் !

    கருணை
    மனமே
    இறையருள் பெறும்!

    Share
  • “ஜெனி…நீ வருவாயா?”

    —  கனவு திறவோன்.

    டூ வீலரை பார்க் செய்துவிட்டு ஸ்டேசனுக்குள் நுழைந்து முதல் பார்வையில் ஜெனிஃபரைத் தேடினேன்.

    அவள் இடம் வெறுமையாக இருந்தது. இன்னும் அவள் வரவில்லை.

    ‘ப்ச்’ எத்தனை நாள் தான் இப்படி டபாய்ப்பாள்?

    ரஜினியின் அடுத்தப் பட அறிவிப்பு போல சஸ்பென்ஸ் எகிறுகிறதே? இன்றாவது வருவாளா வரமாட்டாளா?

    எங்காவது களவு, கொலை நடந்தால் எனக்கும் ஜெனிபருக்கும் தான் முதல் சம்மன் அனுப்புவார் இன்ஸ்பெக்டர். நான்கு நாட்களாய் ஜெனிஃபர் டூட்டிக்கு வரவில்லை. அதனால் வேலையில்லாமல் ஸ்டேசனில் முடங்கிக் கிடந்தால் வெறும் டீ பாய் வேலைதான் மிஞ்சுகிறது.

    இந்த மகளிர் போலீஸ் ஸ்டேசன் வந்த பிறகு எங்கள் ஸ்டேசனில் வேலை பார்த்த அழகிகளை அங்கே மாற்றி விட்டார்கள். கண்ணுக்கு அளர்ச்சியாக இருக்கிறது.

    என்ன செய்யலாம்? எதற்கும் மணியிடம் கேட்டுவிடலாம்…

    ஆண்ட்ராய்ட் போனில் மணியைக் கூப்பிட்டேன்… மணியிடம் நிச்சயம் காரணம் இருக்கும். ஆஃபிசுக்கு வராமல் மட்டம் போடும் அத்தனை பேரின் உண்மை முகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவான்.

    “என்ன மணி? இன்னைக்கும் ஜெனிஃபர் வரல…”

    “திருமல…, ஜெனிக்கு பேதி சரியாகல… அதனால மூடும் சரியில்ல… இன்னிக்கு வர்றது டவுட்டு தான்…” என்று ஸ்னிஃபர் டாக் ஜெனிஃபர் வர இயலாத காரணத்தை விளக்கினார் அதன் டிரைனர் மணி.

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ​​

    எழுத்து முன்னாகி எண்ணம் மனமேகி
    ஏற்றம் பெறவேண்டி ஏந்துவன் தாளேகிச்
    சொல்லில் வடித்தெடுத்த வாழ்வுநெறி – வள்ளுவம்
    செய்த திருக்குறள் கல்!                                                                   valluvar

    கற்றல் மெருகேற்றிக் காணும் அனைவரையும்
    பெற்றல் சுகமென்று தன்னுயர் பண்பெய்த
    உற்றதுணை யாகும் திருக்குறள் – வேண்டும்
    உயர்வுக்குத் தூண்டும் நூல்!

    நம்பிச் செயல்யாவும் நாயகன் காத்திடுவான்
    நம்பிலார் செய்திடினும் நன்மையே நல்கிடுவான்
    வம்பிலா நற்கருணை வையத்தை வாழ்விக்க
    வள்ளுவம் உணர்த்தும் இதை!

    எதுவரினும் தாளேகித் தானேகச் செய்திட்டால்
    வந்திடுவான் நெஞ்சதனில் ஓரொளியாய் மெய்க்கடல்
    சேர்பணி நின்றுத் திருக்குறள் – ஓதிடப்
    போகும் துன்பம் அறி!

    பிறப்பின் வருவது முன்னம் ஒருநிலை
    பின்னேகும் ஒத்ததோர் கூட்டிட மற்றவை

    போக்கித் தகும்நிலை கண்டிடத் – தெய்வத்
    திருக்குறள் சொல்வழி செல்!

     

    Share
  • ” அவன், அது , ஆத்மா” (14)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 14

    நீந்தவும், தர்மம் செய்யவும் கற்றுக்கொள்

    சிறிய வயதில் அவனுக்கு அப்பா அவனைக் காலையில் தன்னுடன் குளிக்க ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வார். அவனுக்கும் அப்பாவுடன் குளிக்கச் செல்வது ரொம்பவும் குஷியாக இருக்கும். அப்பா நன்றாக நீச்சல் கற்றவர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் பொழுதெல்லாம் அவர் தைரியாமாக அந்த நீரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து பாய்ந்து நீந்துவதை அவனும், அவனுக்கு நண்பர்களும் கரையில் நின்று ரசித்துக் கொண்டிருப்பார்கள். அவரைப் போலவே சின்னம்பிச் சித்தப்பாவும் மிக நன்றாக நீந்துவார். அவர் நீந்தும் பொழுது முகத்தில் விழும் அந்தச் சுருள் முடிகளை அவர் “லாவகமாக” ஒதுக்கிக் கொள்வதும், இரண்டு கைகளையும் அலக்ஷியமாக மாற்றி மாற்றி வீசி நீரின் அலைகளில் கலந்து வருவதையும் அவன் நன்றாக ரசிப்பான். அவனுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரொம்பவே ஆசை.

    அப்பொழுது அவனுக்கு ஏழு வயது. அவனுக்கு வகுப்புத் தோழன் கண்ணன் (ரெங்கநாத வாத்தியாரின் மகன்) ஒரு நல்ல கோடை நாளின் மாலை வேளையில் தொந்திவிளாகம் தெரு வாய்க்காலில் சில நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தான். எந்தக் கோடை காலமானாலும் அந்த மண்டபத்தில் ஆழம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அவனுக்குத் தாத்தா வீடு அந்த வாய்க்காலின் பக்கத்தில்தான் இருந்தது. அதனால் அவனும் அந்த மண்டபத்தில் குளித்துக் கொண்டிருந்த நண்பன் கண்ணனைப் பார்த்து, சந்தோஷம் தாங்க முடியாமல் (இருவரும் சம வயது தானே என்ற எண்ணம்) உடனேயே தனது “டிராயரைக்” கழற்றிக் கரையில் வைத்து விட்டுத் தண்ணீர்ல் குதித்தான். குதித்தவன் நீரின் மேலே வந்தான். மீண்டும் மூழ்கினான். மீண்டும் மூழ்கினான். ஏற்கனவே பெரிய விழிகள் அவனுக்கு. இபோழுது இன்னும் பேந்தப் பேந்த விழித்தான். இதைப்பார்த்த அவனுக்கு நண்பன் கண்ணன்,” மாமா விஸ்வநாதன் முங்கறான்…காப்பாத்துங்கோ” என்று கத்தினான். கரையில் நின்று கொண்டிருந்த சில பெரியவர்கள் தண்ணீரில் இறங்கி அவனைத் தூக்கினார்கள். நிர்வாணமாக இருந்த அவனை ஒருவர் தலைகீழாகச் சில நிமிடங்கள் பிடித்துக் கொண்டிருந்தார். பிறகு அவனை அந்த மண்டபத்திலேயே சிறிது நேரம் படுக்க வைத்திருந்தனர். அவன் கண்கள் சிவந்து பயந்திருந்தன. இதற்குள் அவனுக்கு மாமாத்தாத்தா அங்கு வந்து சேர்ந்தார். அவனைத் தூக்கிக் கொண்டு மெல்ல வீட்டின் திண்ணையில் படுக்க வைத்தார். “சொன்னதக் கேட்டாத்தானே…ஒனக்கோ நீஞ்சத் தெரியாது. எதுக்கு வாய்க்காலுக்குப் போனாய்..ஒங்க அம்மாட்டச் சொல்லி நாலரை குடுத்தாத்தான் நீ சரிப்படுவாய்” என்று தாத்தா சத்தம் போட்டார். அவனுக்குப் பாட்டி, மஞ்சளும், குங்குமமும் கலந்த சாதத்தை சில உருண்டைகளாகச் செய்து வந்து, அவனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள். அதன் பிறகு அந்தச் சிகப்பு உருண்டைகளை அவன் முங்கிப் பிழைத்த இடத்தில் உள்ள மீனுக்குக் கொண்டு வீசினாள். “ஏதோ..நம்ம புள்ளையார் வழி விட்டார்.” என்ற பாட்டியின் குரல் அவனுக்குத் தெம்பு தந்தது.

    amv

    அதன் பிறகு அவனுக்கு அப்பா வழித் தாத்தாதான் சிதம்பரேஸ்வரர் கோவில் வாய்க்காலில், ஒரு மார்கழி மாதக் காலை வேளையில், படித்துறையில் அவன் கைகளைக் கட்டிக் கொண்டு “குத்திட்டு” உட்கார்ந்திருக்கும் பொழுது திடீர் என்று தண்ணீரில் தள்ளி விட்டார். அவன் அந்தக் குளிர்ந்த நீரில் மூழ்கி எழும் பொழுது அவனைப் பிடித்துக் கொண்டு,” பயப்படாதே…தைரியமா இரு.. நான் ஒனக்கு நீஞ்சச் சொல்லித்தரேன்” என்று தன் மார்போடு அணைத்தார். அவன் “வேண்டாம் தாத்தா..குளுரறது..நீஞ்ச வேண்டாம் தாத்தா” என்று அலறினான். கரையில் துணி துவைத்துக்கொண்டிருந்த ஒருவர்,” சாமி..புள்ள பயப்புடுதுல்லா…போறும் விடுங்க..” என்ற பொழுது,” பயப்பட்டா எப்படி நீஞ்சக் கத்துப்பான்..இவனுக்கு நானே இங்க நீஞ்சக் கத்துக் குடுத்துருவேன் பாரு” என்று நம்பிக்கையோடு சொன்னார். அதன் பிறகு அவனுக்குத் தாத்தாவும், அப்பாவும், சின்னம்பிச் சித்தப்பாவும் நீந்தக் கற்றுக் கொடுத்தனர். ஒன்பது வயதிலேயே அவன் நன்றாக நீந்தக் கற்றுக் கொண்டான். ஊரில் உள்ள வாய்க்கால், கிணறு, குளம், ஆறு என்று ஒன்றைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை. அதன் பிறகு இன்று வரை அவனுக்குத் தண்ணீர் மிக நெருங்கிய நண்பன்தான். இதுபோலவே அவனுக்கு பகைபோலத் தோன்றுவதெல்லாம் நட்பானது.

    அப்பாவுடன் குளித்துவிட்டு வரும் பொழுதெல்லாம் ஆற்றங்கரை மண்டபத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரை தரிசனம் செய்வார்கள். கைகளைக் கூப்பியபடி அவனுக்கு அப்பா,” ஊரில் எல்லாரும் நன்னா இருக்கணும். ஊர்ல தர்மம் பண்ணற குடும்பம் எல்லாரும் நன்னா இருக்கணும். சங்கரலிங்க ஐயர் குடும்பம், R.S.A. குடும்பம், ஈஸ்வர ஐயர் குடும்பம், சங்கர ராமையர், வெங்கட்டராமையர், முத்து ராமலிங்க அண்ணாவி குடும்பத்தினர் எல்லாருமே சௌக்கியமா இருக்கணும் ..பெருமாளே இந்தத் தாமிர பரணி வற்றாமல் ஒடிண்டே இருக்கணும்” என்று பிராத்தனை செய்வார். இப்படி தினமும் அவனுக்கு அப்பா சுலோகம் சொல்லிக் கொண்டே பிராத்தனை செய்வதைப் பார்த்து,” எதுக்கப்பா இப்படி எல்லாரோடு பேரையும் சொல்லறேள்” என்று கேட்டான்.

    “தர்மம் பண்ற குடும்பம் நன்னா இருந்தாத்தானே ஊரும் நன்னாருக்கும்…நமக்கும் தர்மம் பண்ணனும்னு தோணும்..அதனாலதான் இப்படிச் சொல்லறேன்” என்றார். அந்த நல்ல பழக்கத்தை அன்று முதல் அவனும் கற்றுக் கொண்டான். இன்றும் கூட ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தாலும் அவன் எல்லோருக்குமாகத்தான் வேண்டிக் கொள்கின்றான்.

    அவனது கிராமத்து வாழ்க்கையில் எத்தனை நல்ல மனிதர்களைப் பார்த்திருக்கிறான். அவர்களோடும், அவர்களது வம்சத்தினர்களோடும் பேசிப் பழகி இருக்கிறான். “ஆதிவராகன்..பூணலுக்கு சகஸ்ரபோஜனம் போட்டார் அவர் அப்பா முத்துராமலிங்க அண்ணாவி.. சகஸ்ர போஜனம்னா ஆயிரம் போருக்குச் சாப்பாடு போடுவா.. அவர் நெறையஅன்னதானம் பண்ணிருக்கார்…அவாத்துல எந்த ராத்திரிக்கு யாரு வந்து சாப்பாடு கேட்டாலும் போடுவா…அதுபோல R.S.A. குடும்பமும் அன்னதானம் பண்ணற குடும்பம்…அதனாலதான் அவாளோட பரம்பரை இன்னிக்கும் நன்னாருக்கா….நாமளும் நம்மால முடிஞ்ச தர்மம் பண்ணிடேருக்கணும்” என்று அவனுக்கு அப்பா இன்றும் தனது தொண்ணூறாவது வயதிலும் அவனிடம் சொல்லுவார். அவனது வாழ்க்கையில் அவனுக்கு அப்பாதான் ஹீரோ. அவரது நேர்மையும், எளிமையுமே அவனுக்குக் மனக்கண்ணாடி. அமுதசுரபி தீபாவளி மலருக்கு (2014) நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் கவிதை ஒன்று கேட்டார். தீபாவளி மலரில் அந்தக் கவிதையைப் படித்து வீட்டு அவனோடு பேசினான், நெடுநாட்களாக அவனை விட்டுக் காணாமல் போன நண்பன் இரா.முருகன். அந்த “என் அப்பா” தான் தொலைந்து போன அவன் நண்பனையும் அவனுக்குக் கவிதை மூலம் கண்டுபிடித்துக் கொடுத்தார்.

    “என் அப்பா”
    ( மீ.விசுவநாதன்)

    1 ஆற்றில் குளிக்க அழைத்துப்போய் நீச்சலுடன்
    காற்றை அடக்கிநற் காயத்ரி- நாற்றை
    மனதில் பதிந்திட வைத்தயென் அப்பா
    எனதுள் உறையும் உயிர்.

    2. சட்டைப்பைக் குள்ளே சலசலக்கும் காசெல்லாம்
    சட்டெனக் காணாது சாய்ந்தந்த – விட்டத்தைப்
    பார்ப்பார்! எடுத்த பயல்நான் அவர்மடியில்
    நார்போல் கிடப்பேன் நரி.

    3. கடுஞ்சொல் வசையாகக் கண்டிக்க மாட்டார்!
    படும்கை தடவி, பதியும் – நெடிய
    பகைமறக்கப் பாசத்தால் பண்பெனும் நல்ல
    நகைபூட்டும் அப்பா நண் பன்.

    4. அப்பாவின் சம்பளநாள் அக்காவுக் கும்எனக்கும்
    எப்பவுமே கொண்டாட்டம்; அந்நாளை – இப்போதும்
    எண்ணினால் அல்வாபோல் என்னுள் இனிப்பதனால்
    கண்ணின் மணிஅப்பா காண்.

    5. சாப்பாட்டு வேளை சரிசமமாய் உட்கார்ந்து
    கூப்பாடு போடாமல் கொஞ்சம்நீ – ஆக்காட்டு,
    என்றே பரிவாக இன்னமுது ஊட்டிவிட்ட
    என் அப்பா என்றும் இறை.

    “நன்னி சங்கரராமையர்”

    amநன்னி சங்கரராமையர் மிருதங்கமும், காலாருமினியமும் நன்றாக வாசிக்கத் தெரிந்தவர். மிராசுதார். அவன் இருந்த தெருவிலேயேதான் அவரது வீடும் இருந்தது. பெரிய அகலமான நீண்ட வீடு அவருடையது. அந்த வீட்டின் வாசல் கதவுகள் அடைத்து அவன் பார்த்ததில்லை. வீட்டின் வாசலில் உள்ள அகலமான திண்ணையில் ஒரு தூணில் சாய்ந்து, இடுப்பில் சாவிக் கொத்து சகிதம் மகாலட்சுமி போல அமர்ந்திருப்பாள் சங்கரராமையரின் மனைவி மீனாக்ஷி அம்மாள். நடு வீட்டில் ரேழியில் ஒரு அழகான ஊஞ்சலில் தாம்பூலம் போட்டபடி மெல்ல ஆடிக்கொண்டிருப்பார் சங்கரராமையர். அவரது வீடு மூன்று பாகமாக இருக்கும். அதில் கிழக்கோரமாக இருக்கும் வீட்டில்தான் நிறைய மூலிகைச் செடிகளை, சிறு சிறு தொட்டிகளில் வளர்த்து வைத்திருப்பார். அந்த வீட்டின் மிகப் பெரிய ஒரு அறையில் தரையில் இருந்து மேற்சுவர் வரை மண்டை வெல்லம் மலைபோலக் கொட்டி வைத்திருப்பார்கள். அவனும் அவனுக்கு நண்பர்களும், முக்கியமாக சங்கரராமையரின் மகன் வயிற்றுப் பெயரனுமான “சங்கர ராமன்” என்ற “பிரபுவும்” அந்த “மண்டை வெல்லத்தை”ச் சுவரில் எறிந்து விளையாடும் பொழுது,” எலேய்…மேல பட்டுக்காதேங்கோ…பாத்து விளையாடுங்கோடா” என்றுதான் சங்கரராமையர் சொல்வாறே தவிர, குழந்தைகளைக் கடுஞ்சொற்கள் சொல்ல மாட்டார். நெல்லும், கரும்பும், நிலக்கடலையும், பசுக்கூட்டமும் நிறைந்த வீடு அது. மாட்டு வண்டியும், குதிரை வண்டியும் உண்டு. இரவில் அந்தக் குதிரை வண்டியின் இரண்டு பக்கத்திலும் விளக்குகள் பொருத்தி வருவதை தள்ளி இருந்து பார்த்தால் ” ஒரு தேவதை” குதித்துக் குதித்து வருவது போல இருக்கும்.

    சங்கர ராமையருக்கு பழனியில் உள்ள ஒரு “சித்தர்” மூலிகை வைத்தியம் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதை அவர் நன்கு கற்றுக் கொண்டு “விஷக்கடி”க் கெல்லாம் மூலிகை மருந்து தந்து உடனேயே விஷத்தை இறக்கி விடுவார். மணிமுத்தாறு, பாபநாசம் மலையடிவாரத்தில் விஷப்பாம்பு கடிபட்ட மக்கள் பகலோ, இரவோ இவரைத் தேடித்தான் வருவார்கள். அவரின் வீட்டு அகலமான திண்ணையில் விஷக்கடி பட்டவரைப் படுக்க வைத்து, அவருக்கு மூலிகைச்சாறு பிழிந்து கொடுத்தும், கடிபட்ட இடத்தில் மூலிகையை வைத்தும் விஷத்தை இறக்கிக் குணப்படுத்துவதை அவன் பல முறை நேரில் பார்த்திருக்கிறான். மருத்துவத்திற்குப் பணம் வாங்க மாட்டார். “உங்கள் மனத்திருப்திக்கு எதேனும் கோவிலுக்கு செய்யுங்கள்” என்று சொல்வதையும் அவன் கேட்டிருக்கிறான்.

    ஒரு முறை அவன் அவனுக்கு அப்பாவுடன் தொந்திவிளாகம் தெருவில் உள்ள மாமாத் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தான். இரவுச் சாப்பாட்டுக்குப்பின் அவனுக்கு அப்பா பக்கத்து வீட்டில் இருக்கும் L.M. சுந்தரம் ஐயர் வீட்டுத் திண்ணையில் மணிடாக்டர், சாமுவாத்தியார், வெங்காச்சம், ராமு (சீதாராமன் மாமாவின் தம்பி), சைலம் சித்தப்பா, LMS ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார். தண்ணீர் குடிக்க LMS அவரது வீட்டிற்குள் சென்ற பொழுது (LMS வீட்டின் பின்புறம் பெரிய தோட்டமும், வீட்டிற்குள் வருவதுபோல வாய்க்காலும், அழகான படித்துறையும் உண்டு.) அவரைப் பாம்பு கடித்து விட்டது. உடனே சைக்கிளில் அவனுக்கு அப்பாவும், ராமு மாமாவும் சென்று சங்கரராமையரை அழைத்து வந்தார்கள். அவர் வரும் வரை LMSன் உறவினரான சைலம் சித்தப்பா, LMSன் கடேசி மகன் ராமனைத்தன் தோளில் சுமந்து கொண்டு வீடு வாசலில் இருக்கும் “பிள்ளையாரை”ப் பிராத்தனை செய்தபடி பிரதக்ஷிணம் செய்து கொண்டே இருந்ததை அவன் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அந்த வீடே ஒரே பரபரப்பாக இருந்தது. விஷம் இறக்கிவிட்டு, “எல்லாம் சரியாயாசு…கவலைப்படாதேங்கோ…நம்ம புள்ளையாருக்கு ஒரு வடல் போடுங்கோ ” என்று உரக்கச் சொல்லியபடியே புறப்பட்டார். சைலம் சித்தப்பாதான் பிள்ளையார் கோவில் முன்பாகத் தேங்காய் வடலும் போட்டார்.

    “ஆதிவராகப் பெருமாள் கோவிலுக்கு 1944ம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வடக்கு மாடத் தெரு, மேலமாடத்தெரு, தெற்கு மாடத்தெரு, சன்னதிதெரு அடைத்து பந்தல் போட்டிருந்தார்கள். அன்னதானப் பந்திகள் இந்த மாடவீதிகளில்தான் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி முதல் நாள் R.S.A சங்கர ஐயர், இரண்டாவது நாள் E.L. சங்கர ஐயர் (மதியம்) , R.S.A. காசி ஐயர், சஹஸ்ரநாம ஐயர்( சாத்து ஐயர்)(இரவு வேளை), மூன்றாவது நாள் வைத்தியப்பபுரம் ராமசுப்பையர் (மதியம் சாப்பாடு), இரவில் பட்டாம்பிச் சங்கர் ஐயர் அன்ன தானமும், கும்பாபிஷேகத்தன்று மதியம் அன்னதானம் சங்கரராமையரும், இரவில் பண்ணை சந்தரம் ஐயர் அரிசி உப்புமாவும் அன்னதானம் செய்தனர் என்று அவனுக்கு அப்பா தர்மம் செய்தவர்களைப் பற்றிச் சொன்னார். (பட்டாம்பிச் சங்கர் ஐயரின் மகன் வீரமணி அவனுக்கு ஒன்றாவது வகுப்பில் இருந்து பி.யு.சி. வரை வகுப்புத் தோழன். நெருங்கிய நண்பன்.)

    வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிவராகப் பெருமாள் கட்டளைக் காரர்கள் நன்னி சங்கரராமையரும், அவரது சகோதரர் வேங்கடராமையரும்தான். அன்று மாலை சொர்கவாசல் தீபாராதனை ரொம்பவும் அழகாக இருக்கும். (இந்த ஊரில் சொர்கவாசல் திறப்பு மாலையில்தான் நடைபெறும் வழக்கம் உள்ளது.) ஒவ்வொரு வருடமும் ஒருவர் மாற்றி ஒருவர் கைங்கர்யம் செய்து வருகின்றனர். இன்றும் அந்த பக்திப் பணியை அவரது சந்ததியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். சங்கர ராமையரின் மூத்த மகன் சங்கரன். அவர் அவனுக்கு அப்பாவுக்குப் பள்ளித் தோழன். அப்பாவின் நண்பர். நல்ல நகைச் சுவையாக அவனிடம் பேசுவார். வெள்ளை மனம். அந்தக் காலத்திலேயே பள்ளிக்கு நூறு ரூபாய் நோட்டு கொண்டு வருவார் என்று அவனுக்கு அப்பா சொல்வதுண்டு.

    “ஏய்..சுந்தரம் நீ ஏழைப் பையன்..நன்னாப் படிக்கணும்..எங்காத்து சங்கரனுக்கு அவ தாத்தா சொத்து இருக்குனு ஊரைச் சுத்தறான். நீ அவன் கூடச் சுத்தாதே” என்று கள்ளமில்லாமல் அவனுக்கு அப்பாவிடம் சங்கரராமையர் சொல்வாராம். அவனுக்கு அப்பா இதைச் சொல்லி அந்தப் பெரியவரின் குணத்தை மெச்சுவார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி. அவனுக்கு நண்பன் பிரபுவின் தந்தை. அவர் ஊரிலேதான் இருந்தார். தனது எண்பது வயதுக்குமேல் சென்ற வருடம் ஒருநாள் ஆலடியூரில் அவர்களுக்கு இருந்த வயற்காட்டிற்கு அருகில், புதரில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். ஊரெல்லாம் தேடி மறுநாள் கண்டு பிடித்தனர். “பா.கா” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப் பட்டவர். தன் தந்தை இறந்த விதத்தை நண்பன் பிரபு அவனிடம் வருத்தமுடன் சொன்னான். அவன் வருத்தப் பட்டான். அந்த நிகழ்வை, அவரது நினைவை அப்போதே ஒரு கவிதையாகச் செய்தான். அவனால் அவரை அதில் வாழச் செய்ய முடிந்தது.

    “மௌன மொழி”
    (மீ.விசுவநாதன்)
    (19.12.2014)

    “கீழ்வானம் கிட்டக் கிடக்கிறதாய் எண்ணியே
    தாழ்வாரம் தொட்ட தனிமாடம் விட்டங்கு

    தெருவழி ஓடியே திட்டமிலாப் போக்கில்
    ஒருவழியாய் எங்களது ஊரின் அழகாம்

    பொதிகை மலைச்சாரல் பூந்தளிர் கொஞ்சும்
    பதிமணி முத்தாறு பாபநாச நீரில்

    குளித்தும் தெளித்தும் குதூகல மிட்டும்
    களித்த பொழுதுகள் கற்பனை கொள்ளாது !

    காட்டி லலையும் கரடியும் யானையும்
    கூட்டமா யோடுகிற புள்ளிமான் துள்ளலும்

    சின்னக் குருவியும் சேதி சொல்லவே
    என்னிடம் தாவிவரும் சிங்கவால் கொண்ட

    குரங்குகளும் ; வண்ணத்துப் பூச்சி வகையாம்
    அரங்குகளும் எத்தனை ஆனந்தம் அள்ளியே

    தந்திடும் ; பச்சைத் தரமான தாவரங்கள்
    மந்திரம் சொல்லி மனதை வருடுமே !

    சிந்தனை கொஞ்சம் சிதறித்தான் போகிறது !
    அந்தவோர் நாளில் அருமையாம் நண்பனின்

    அப்பா , அவரும் அதிகாலை வேளையில்
    இப்படிதான் காலாற எங்கோ நடந்துபோய்

    தப்படியாய் மெல்லத் தனிவழி சென்றங்கு
    தொப்பென வீழ்ந்தே தொலைந்தவர் போனார் !

    “நினைவிழப்பு , நெஞ்சில் நிலைகவலை” கூடி
    அனைத்தும் அந்த அடிமனதில் துள்ள

    சிறுவயதின் எண்ணமே சிந்தை யிருக்க
    அருவிக் கரைதேடி ஆசையாய்ச் சென்று

    ஒருவரும் காணாமல் ஓர்நாள் மறைந்தத்
    திருமுகம் எண்ணி அருவியின் ஓசையில்

    என்னை மறக்கிறேன் ; என்றும் இருக்கும்
    அன்னை இயற்கையை ஆசையாய்க் கேட்கிறேன் !
    இன்னும் பிறவி இருந்தாலு(ம்) அம்மாவுன்
    சின்ன மடிதா சிறிது”

    மகள்களும், அவர்களது சந்ததியரும் இன்றும் நன்றாக வாழ்கின்றனர். மூன்றாம் மகன் சாமிநாதன். திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தலைமைக் கணக்கராக இருந்து ஓய்வு பெற்றவர். நல்ல பாடகர். பி.பி.எஸ். பாடல்களை ரசித்துப் படக்கூடியவர்.

    இளைய மகன் சந்திரசேகர் என்ற “சந்துரு”. நல்ல இசைக் கலைஞன். பேச்செல்லாம் நகைச்சுவை மின்னும். அவர்களைப் பற்றி பின்பு கூறுகிறேன்.

    (28.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    படங்கள் உதவி   K.V,. அன்னபூர்ணா . நன்றி

    Share
  • செந்தூரப்பூவே …

    –கவிஜி.

     

    சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக .. ஒரு தேவதை வந்தது நீராட ..
    வெண்ணிற ரோஜா, தன்னிறம் மாறி மாலை சூடுதோ ..
    அந்த வானம் பூக்களை தூவாதோ .. புது வாழ்த்துக் கவிதைகள் பாடாதோ ..

    அதற்கு மேல் ரவியால் அந்த பாடலை கேட்க முடியவில்லை. சில போது பிடித்த பாடலைக் கூட முழுதாகக் கேட்க முடிவதில்லை, காற்றெல்லாம் கனமானது போன்றே அந்த மதிய வேலை அவனுக்குள் பல வித யோசனைகளை அல்லது நினைவுகளை கிளறி விட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குப் பிடிக்காத தொழில் மோட்டார் தொழில். ஆனால் இன்று அவனின் வாழ்வாதாரம் அவன் செய்யும் இந்த டிரைவர் தொழில்தான்.

    ஏனோ சற்று ஓய்வு தேவை என்று மனதிற்குப் பட்டதால் அந்த ஆற்றோரம் நிறுத்தினான்.

    “எப்டிண்ணே இவ்ளோ பெரிய லாரியை நாய்க்குட்டி மாறி அடக்கற……’

    சற்று சிக்கலான இடங்களில் மொத்த திறமையையும் பயன்படுத்தி லாவகமாக வண்டியை நிறுத்துவதும் இயக்குவதும் என்கின்ற பொழுதுகளில், அந்த லாரியின் கிளீனர் இலக்கி மேற்சொன்னவாறு கேட்பதுண்டு.

    செய்யும் தொழில் ஒரு கட்டத்திற்குப் பின் மிகச் சரியாக பழகி விடும்.

    வண்டியை நிறுத்திய பின் இலக்கி மதிய உணவு தயாரிக்க தொடங்கினான்.

    “அண்ணே வெங்காய சாம்பார் வைச்சிடலாமா என்றான்” அதில் அவன் நிபுணன்.

    தலையாட்டி விட்டு, வண்டியை விட்டு இறங்கி சாலையோரம் தலைவிரி கோலமாய் நின்ற ஆலமரத்தின் கீழ் அமர்ந்தான்.

    மனதுக்குள் முணு முணுககாமல் இருக்க முடியவில்லை.

    சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக ஒரு தேவதை வந்தது நீராட …….

    தலையெல்லாம் ஆங்காங்கே ஒட்டியிருந்த பருத்தி நூலோடு சசிகலா நடந்து வந்து கொண்டிருக்க, இவன் அமர்ந்திருக்கும் தேநீர் கடையிலிருந்துதான் அந்த பாடல் கசிந்து கொண்டிருந்தது.

    தேவதை வந்தது நீராட… என்ற வரிக்கும், அவள் யதேச்சையாக, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் ரவியை பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. காலக் கணக்கு …

    அட, நம்ம சசி!!! இதுவரை பார்த்த பார்வையில் இருந்து சட்டென விலகி வேறு யாரோ மாதிரி இருக்கிறாள். மெல்ல புன்னகைத்துப் போனாள். தெரிந்த பையனுக்கு எவ்ளோ புன்னைகையோ… அவ்ளோ.

    சுள்ளென்று அடித்தது சில்லென்ற பனித்துளி… சுளீரென கடித்தது கையிலேறிய எறும்பு …

    “ஏய் … ரவி … இன்னும் இங்க என்ன பண்ணற? படம் முடியற நேரம்டா……” அலாரம் அடித்துப் போனான் அன்பு.

    அட ஆமா!!! என்று கடைசி மிடரை கபக்கென முழுங்கி விட்டு, தியேட்டருக்குள் ஓடி சைக்கிள் ஸ்டாண்டில் தயாராகி நின்றான்.

    அவ்வப்போது எதிர்படுவாள். பெரிய வீதியில் கண்கள் உரசி, சிறு புன்னகையோடு கடந்து செல்வார்கள். ஆழ்மனதிற்குள் கொஞ்சூண்டு ஆசை அவள் மேல் இல்லாமல் இல்லை. ஆனால் அது விஸ்வரூபம் எடுக்கவில்லை. சின்ன முகம், மாநிறம், கீச் கீச் குரல்.. அவளுக்கு கிளி என்றொரு பெயரும் ஊருக்குள் உலவிக் கொண்டிருக்கிறது.

    “மஞ்சு, இந்த ரவி நல்லா ஆடறான்ல…. நல்லா டிரஸ் பண்ணா, தியேட்டர்ல சைக்கிள் பாஸ் போடறவன் மாதிரியே இல்லல. நல்லா படிப்பாண்டி. ஆனா ஒன்பதாவதுக்கு மேல பள்ளி கூடத்துக்கு போக மாட்டேனுட்டான்”, இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் தோழி மஞ்சுவிடம் இப்படி நிறைய அவனைப் பற்றி பேசியிருக்கிறாள்.

    ஆனால், இந்த விஷயம் ரவிக்கு தெரிந்ததேயில்லை. இவர்கள் இருவருமே சிறுவயதில் ஒன்றாக விளையாடியவர்கள்தான். அவன் ஒன்பதாவதில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டவன். அவள் பத்தாவதில் முடித்துக் கொண்டவள். ஏனோ, பதின் பருவத்துக்கு மேல் அவர்கள் பேசிக் கொள்வதில்லை. சிறு புன்னகை, சிறு சிரிப்பு, சிறு வாழ்த்து, கோயில் திருவிழாக்களில் ஆடிய பின் வரும் கை குலுக்கல் அவ்வளவே.

    அந்த மதிய வேளை அவர்களால் வாழ்ந்தது என்று இந்த காட்சி முடியும் போது தெரியும். அவள் அன்று காலையில் வேலைக்குப் போகவில்லை போலும், மதியம் நடந்து கொண்டிருந்தாள் பருத்தி கம்பெனி நோக்கி.

    “பங்காளி, சைக்கிள் புதுசா?” என்றபடியே பங்காளி லட்சுமி(காந்த் ) அருகே ரவி வந்தான்.

    “ஆமா, பங்காளி… இப்பதான் ஆப்பகூடல்ல இருந்து ஓட்டிட்டே வரேன். இந்தா… ஒரு ரவுண்டு அடிச்சு பாரு,” என்றான்.

    அடுத்த காட்சிக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்க, சைக்கிளை வாங்கி கொண்டு வெள்ளையம்பாளையம் நோக்கி ஓட்டத் துவங்கினான் ரவி.

    வர வேண்டும் என்று முடிவெடுத்த பின், இந்த காதல் வந்தே தீரும்.

    மதிய வேளை, சூரியனும் வியர்வையும் மட்டுமே, சாலையெங்கும் கானல் நீர், சுற்றிலும் மேட்டாங்காடு, பாதை மட்டுமே பயணித்துக் கொண்டிருக்கும் நீண்டதொரு ஓவியத்தில் உறைந்து விட்ட வண்ணமென சசிகலா நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். சிவப்பு தாவணியில் சின்னதாய், புதுக்கவிதையாய், மூக்குத்தி சுமக்கிறது சூரியனை. கன்னங்களில் மூக்குத்திகளாய் வியர்வைதுளிகள்.

    நெருங்கி விட்டான். அவளும் பார்த்து விட்டாள். புன்னகை எப்போதும் போல…..

    “என்ன கம்பனிக்கா?”

    “ஆமா ரவி, இப்பதான் போறேன். காலைல கொஞ்சம் வேல இருந்துச்சு. ஆமா, என்ன இந்த பக்கம்….!”அவள் கேட்டபடியே நடந்து கொண்டிருக்க, இவன் அவள் பேசுவதை கேட்டபடியே மெல்ல சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான்.

    “இல்ல….. பங்காளி லட்சுமியோட புது சைக்கிள். சும்மா ஒரு ரவுண்டு அடிக்கலாமேன்னுதான்….. ” வார்த்தைகளை இழுத்தவன், கேட்டே விட்டான்.

    “கம்பெனிக்குதான ….. வா… நா எறக்கி விடறேன்,” அவள் முகத்தையே பார்த்தான். மினு மினு என்றிருந்தது முகம்.

    அவள், “நானே கேக்கலான்னுதான் நினைச்சேன், வெயில்லு….. நடக்க முடியலப்பா..”, என்றபடியே சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள். மனமெங்கும் ஒரு வித குளுமையை உணர முடிந்தது. ஏதோ பெரிய சாதனை செய்தவன் போல முகமெங்கும் இனம் புரியாத சந்தோசம்.

    “ஏய்…. எங்க போற? கம்பெனி இந்த பக்கம்’” என்றாள் இடது பக்கம் சென்ற பாதையை காட்டி.

    “வெள்ளையம்பாளையம் போய் ஒரு கலர் குடிச்சுட்டு திரும்ப வந்தர்லாம்,” என்றான்.

    அவனால் அவளுடன் பயணிக்கும் தருணங்களை விட்டுத் தர முடியவில்லை. அவள் மௌனத்தில் சரி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். வண்டி வெள்ளையும்பாளையம் தாண்டி, பிரம்மதேசம் நோக்கி பயணிக்க….

    “ஏய் ரவி…… விளாடாத, நேரமாச்சு…. வண்டிய திருப்பு,” என்றாள் சசி.

    முடியாது என்றவன், பிரம்மதேசம் வரை போயிட்டு வந்தர்லாம் என்றான். வியர்த்திருந்த முகத்தில், கழுத்தில் சைக்கிள் கிழித்துக் கொண்டு செல்லும் குளிர்ச்சி குளுகுளுவென்றிருந்தது.

    “இப்ப வண்டிய திருப்ப போறீயா இல்லையா?” சற்று கடுமையாகவே இருந்தது வார்த்தைகள்.

    அவனால் இந்த சந்தோசத்தை இழக்க முடியவில்லை. சட்டெனக் கேட்டு விட்டான். “எனக்கு ஒரு முத்தம் தா.. வண்டிய திருப்பிடறேன்”.

    கண்டிப்பா தர மாட்டா.. வண்டில கொஞ்ச தூரம் போலாம் என்பது அவனின் எண்ணம்.

    “வண்டிய நிறுத்து தர்றேன்,” என்றாள்.

    அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. வண்டியை நிறுத்தினான். இறங்கியவள், “என்ன தரமாட்டேன்னு நினைச்சியா?” என்றபடியே அவன் சட்டையை பிடித்து முன்னால் இழுத்து இதழோடு இதழ் பதித்தாள். சற்று முன் அவள் போட்டிருந்த வெற்றிலை இடம் மாறியது.

    கானல் நீரெங்கும் கொக்குகளும் மீன்களும் போல மர அசைவின் நிழல்கள்.

    சைக்கிள் கம்பெனி நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. முன்னால் அவள் அமர்ந்திருந்தாள். அவன் ஆகாயத்தில்.

    கம்பெனி முன்னால் இறக்கி விட்டுவிட்டு கேட்டன், “சசி… லவ் பண்றதான?”

    ஆண்களின் சந்தேகம் சந்தேகம் தான்.

    “லவ் பண்ணமையா முத்தங் குடுத்தேன்?” சிரித்தபடியே உள்ளே ஒடினாள்.

    “அண்ணே சாப்பாடு ஆச்சு.. வாங்க…”

    கிளீனரின் குரலில் கலைந்தான் ரவி. அவனக்கு இப்போது குடிக்க வேண்டும் போல் தோன்றியது.

    “இப்ப எதுக்கு குடிச்சுட்டு இருக்க? வீட்ல விஷயம் தெரிஞ்சா, எதுத்து சண்டை போடணும். இல்ல, என்ன கூட்டிட்டு போய்டு. அத விட்டுட்டு குடிச்சா சரியா போய்டுமா?”
    சைக்கிள் ஸ்டாண்டுக்கே வந்துவிட்டாள் சசிகலா.

    “அது இல்ல சசி, உங்கம்மா என்னை எவ்ளோ கேவலமா பேசிருச்சு தெரியுமா? தேட்டர்ல சைக்கிள் பாஸ் போடறது கேவலமான தொழிலா? வாரம் ஐநூறு ரூபா சம்பாதிக்கறேன், பாத்தாது ?” என்றான் ரவி.

    புலம்பத் தொடங்கியவனை, ” சரி விடுடா… எங்கம்மாவா உன்ன கட்டிக்க போகுது? நான் தான? எப்பவும் நான் உன்ன விட்டுட்டு போக மாட்டேன், சரியா?” என்றபடியே அவன் வைத்திருந்த இரண்டு மிடறுக்கான சரக்கை சட்டென எடுத்து வாய்க்குள் ஊற்றினாள்.

    “ஏய்… என்னடி பண்ற? இது தப்பு,” என்றான், சைக்கிளில் இருந்து எழுந்த படியே.

    “எனக்கு ரெம்ப நாளா இதக் குடிச்சு பாக்கனும்னு ஆசை,”என்று கண் அடித்தாள். சைக்கிள் ஸ்டாண்டில் இருக்கும் அந்த ஒற்றை லைட்டில் பிரகாசமாய் தெரிந்தாள்.

    “வாழ்க்கைல ஆசைப்பட்டதப் பண்ணிப் பார்த்திடனு. இப்ப என்ன? இதக் குடிக்கணும்… அவ்ளோதானே?” என்றவன், இருந்த சரக்கை ஊற்றி தண்ணீர் கலந்து கொடுத்தான். கண்களை இறுக மூடி, முகத்தைக் கோணி என்னென்னவோ பாவனைகளில் அந்த கிளாஸ் முழுக்க உள்ளே போனது.

    கண்கள் சொருக, அவனையே பார்த்தாள், “என்ன உனக்கு எவ்ளோ பிடிக்கும்?” என்றாள் இன்னும் அழுத்தமாக பார்த்துக் கொண்டு.

    உள்ளே செந்தூரப் பூவே படம் ஓடிக் கொண்டிருந்தது…….

    “சின்னக் கண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை…..” பாடல் காதில் தேனாய்ப்பாய அவன் அவளையே பார்த்தான்.

    “ஏய் சசி….. இந்த பாட்டு கேக்கும் போதெல்லாம் உன் ஞாபகமாகவே இருக்கு, நீயும் நானும் ஆதார மாறியே ஒரு இது.. இது…”

    “இதுன்னா?”

    “இதுன்னா… ஒரு .. ஒரு ஜாலி…”, அவனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

    கல்யாணத்துக்கப்புறம் நாம இங்கயே இருக்கலாமா? இல்ல, வெளியூர் போய்டலாமா?” அவள் வாய் குழறியது, காரணமின்றி சிரித்தாள்.

    “ஹேய்….. ச, உங்கம்மா ஒத்துக்குமா? எனக்கு பயமா இருக்குடி….”

    இருவரும் எதிரெதிரே சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள்.

    “எங்கம்மா ஒத்துக்கும்… ஒத்துக்க வைப்பேன், பாக்கதான் நான் அமைதி, கோவம் வந்துச்சுனா பத்ரகாளிதான்….”

    “அப்டியா… எங்க கோவப் படு……….. பாக்கலாம்……..” என்று முகத்தை அவள் முன்னால் கொண்டு போய்க் காட்ட…அவள் கபக்கென வாந்தி எடுத்தாள்.

    “ஐயே…….ஏய் .. எ…. யா…. லூசு…. எஐ லூசு….. வோவ்…”

    காதல் வளர்ந்தது, அந்த ஒரு மாதத்தில் தாவணி பரிசளித்தான். கண்ணாடி பரிசளித்தாள், பாசிமணி வாங்கி கொடுத்தான். போன சனிக்கிழமை இரண்டாவது காட்சிக்கு குடும்பத்தோடு செந்தூரப்பூவே பார்க்க போயிருக்க, சந்திரனிடம் சொல்லி ஸ்பெசல் டீ , முறுக்கு, இடைவேளையில் கிடைக்கச் செய்தான். கிளியின் தாத்தாவுக்கு டிக்கெட் எடுத்து அனுப்பினான். இன்னும் என்னென்னமோ செய்தான். பங்காளியின் புது சைக்கிள் ரெம்ப உதவியது.

    செந்தூரப்பூவே படம் பயங்கர பிக் அப். கூட்டம் நான்கு காட்சிகளிலும் பட்டையை கிளப்பியது. இன்னும் சொல்லப் போனால் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நிரோஷா அழும் காட்சிகளில் தாய்மார்களின் கண்ணீர் பெருக்கெடுத்தது.

    அருவி தியேட்டர் சிங்காரி தியேட்டருடன் போட்ட ஒப்பந்தத்தில் ஒரே ரீல் பெட்டி இரு தியேட்டர்களிலும் ஓடும். அதாவது முதல் ரீல் முடிந்ததும், அதை டேக்ஸியில் வைத்து அடுத்த தியேட்டருக்கு கொண்டு சென்று ஓட்டுவார்கள். அடுத்த அரை மணியில் ரெண்டாவது ரீல், அப்போது அங்கு முதல் ரீல் முடியும் நேரமாய் இருக்கும். சில போது அடுத்த ரீலின் வரவுக்காக ஐந்து, பத்து நிமிடம் படம் பார்ப்பவர்கள் காத்திருக்கவும் நேரிடும். அப்படி ஒரு நாளில் டாக்சி டிரைவர் உடம்பு முடியாமல் படுத்து விட, அடித்தது டிரைவர் யோகம் ரவிக்கு. தனக்கு கார் ஓட்டத் தெரியும் என்பது தியேட்டர் ஓனருக்கு அரசால் புரசலாக காதில் விழுமாறு சில பல அறிவாளி வேலைகளையெல்லாம் ஏற்கனவே ரவி செய்திருந்தான்.

    இரண்டாவது காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ரவி காரில் பறந்து கொண்டிருக்கிறான்.

    தியேட்டரின் எதிரே இருக்கும் மஞ்சு வீட்டில் அமர்ந்திருக்கிறாள் சசி.

    “எனக்கு தெரியும்.. ஆமா…. எப்டி உங்கம்மாவ சம்மதிக்க வைச்ச?” என்றாள் மஞ்சு.

    அவ்வப் போது வாசலில் எட்டி எட்டி தியேட்டரை பார்த்துக் கொண்டாள் சசி.

    “நான் அவனை கட்டிக்கலன்னா வேசி ஆகிடுவேன்னு மிரட்டினேன். எங்கம்மா பயந்துடுச்சு” என்றாள் கண்களை உருட்டி.

    “ஏய்…. நீ பெரிய கைகாரிடி, உன்கிட்ட ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்,” என்றாள் மஞ்சு.

    மணி இரவு 12……..

    சாலையில் ஒரு ஆள் இல்லை. பனி பெய்யும் காலமிது. குளிர் கொன்று கொண்டிருக்கிறது. ஸ்வெட்டர் போட்டு, தலைக்கு ஸ்கார்ப் கட்டிக் கொண்டு தான் மஞ்சுவுடன் படுத்துக் கொண்டிருந்தாள் சசிகலா. இந்த விஷயத்தை ரவியிடம் அன்றே சொல்லத் தோன்றியது. அவளும் மாலை 7 மணியிலிருந்து அவனை பார்த்து விட முயன்று கொண்டிருக்கிறாள். “இப்பதாம்மா போறான்….” “இப்ப வந்துருவான்.. ” இப்படியே மணி 12 ஆகி விட்டது.

    இரண்டாவது காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது.

    “சின்னக் கண்ணன் தோட்டத்து பூவாக…..” பாடல் நன்றாக கேட்கிறது.

    அவனின் புன்னகை, பூக்களாக, அருவியாக, அலையாக அவளின் மீது விழுவதாக நினைத்துக் கொண்டாள்.

    மெல்ல எழுந்தாள். மஞ்சு தூங்கிக் கொண்டிருந்தா. கதவைத் திறந்து கொண்டு சாலைக்கு வந்தாள். எப்படியும் அவன் இப்போதோ அல்லது கொஞ்ச நேரத்திலோ தியேட்டருக்குள் அல்லது தியேட்டருக்குள்ளிருந்து வந்தே ஆக வேண்டு. எப்படியும் விஷயத்தை சொல்லி விடலாம். சந்தோசப் படுவான்.

    காதலில் சாத்தியமாகிறது எதுவும். நல்ல இருட்டு. .. தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஸ்ட்ரீட் லைட் கடந்த வாரம் முதல் எரிவதில்லை. அது வசதியாய் இருக்கும் இன்று அவனை சந்திப்பதற்கு என்றெல்லாம் மனம் தவித்தது. கன்னாபின்னாவென யோசிக்கிறது கன்னியின் மனம். அவனைப் பார்க்க வேண்டும். விஷயத்தை சொல்ல வேண்டும். விடிதலுக்கான நேரம் வெகு தூரத்தில் இருப்பதாகவே பட்டது. அதுவரை யுகமாகிப் போகும் தனிமை.

    அதோ… அந்த வண்டியாகத்தான் இருக்கும். அதே தான்… வெள்ளைக் கார் என்பதற்கான வெளிச்சத்துடன் வர… சட்டென சாலையை கடக்க முயற்சிக்கையில், கண நேர கணக்கில் இந்தப் பக்கம் இருந்து படு வேகமாய் வந்த மணல் லாரி அவளை மோத, அட இல்லை.. அதற்குள் சுதாரித்துக் கொண்டு, இன்னும் வேகமாய் மீதம் இருந்த பாதி சாலையை கடந்து…….

    க்ரீச் …………………………………………………

    ப்ரேக் பிடிக்கப்பட்டது. ஆனால் அவள் மீது மோதி டப் டப்… என ஓரிரு சத்தம். லாரி போன வேகத்தில் அந்தச் சத்தமும் கேட்டிருக்காது.

    வண்டியை விட்டு இறங்கிப் பார்த்த சந்திரன், ஓடி வந்து வண்டியில் ஏறினான். “மாப்ள இறங்காத… ஆள் காலின்னு நினைக்கறேன் …மேட்டர் ராணிடா …… நைட்ல அவதான் இப்படி சுத்திட்டுத் திரிவா….”

    சசி குப்புற விழுந்து கிடந்தது, தலையில் மூடிக் கிடந்த ஸ்கார்ப், ஸ்வட்டர் … அவளது அடையாளத்தை மறைத்திருந்தது.

    “மாப்ள, லாரில அடி பட்டு செத்ததாவே இருக்கட்டும். வண்டிய தியேட்டருக்குள்ள விடு என்றான் சந்திரன்”.

    நடுங்கி கொண்டே வண்டியை உள்ளே விட்டான்.

    படம் முடிந்து, மக்கள் கூட்டம் வெளியே வர, கண்ணில் பட்ட சசியை ஒரு மாதிரி அனுமானித்து சில நல்ல உள்ளங்கள் தூக்கி, அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது.

    விடிந்திருந்தது……..

    சந்திரனிடம் புலம்பிக் கொண்டிருந்தான், “அந்தப் பொண்ணு, அதுவா வந்து உள்ள விழுந்துடுச்சுடா. நான் என்ன பண்றது….?”

    “சரி விடு மாப்ள, யாருக்கும் தெரியாது. நீயா உளறிடாத. மணல் லாரிக்காரனுங்க எப்பவுமே ஸ்பீடுனு எல்லாருக்குமே தெரியும். கேஸ் அப்பிடியே திரும்பிடும்”

    மூச்சிரைக்க ஓடி வந்து நின்றான், கேண்டீனில் வேலை செய்யும் பாபு.

    “அண்ணே, நேத்து நைட் அடிபட்டு செத்தது சசிகலாக்காண்ணே”

    “டயரை ஓங்கி ஓங்கி உதைத்தபடியே கத்தி அழுதான் ரவி”

    அந்த லாரியும் மௌனமாய் நின்று கொண்டிருந்தது. விபத்துகளின் கோர முகத்தை தாங்கி கொண்டு……

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(151)

    –சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள்…

    இவ்வார மடலுடன் உங்கள் முன்னே மீண்டும் ஒரு கருத்துப் பரிமாறல்.

    மனிதப்பிறவி என்பது அளப்பரியது. இறைவன் மனிதனுக்கு அளிக்கும் வரப்பிரசாதமே மனிதப்பிறவியாகும்.

    தாய், தந்தை, உடன்பிறந்தோர், மனைவி, மக்கள் என மனிதனுக்கு இறைவன் அளிக்கும் உறவுகள் ஆயிரம்.

    எங்கே, எப்படி, யாருக்கு குழந்தையாகப் பிறக்கப்போகிறோம் என்பது எமது கைகளில் தங்கியிருப்பதில்லை.

    யாரோ போட்ட விதையில் எங்கோ செடியாக முளைக்கும் எமக்கு விதைத்தவர் தந்தையென்றும் அதற்கு விளைநிலமானவரே அன்னை என்பதும் அறிவு தெரிந்தவுடன் புரிகிறது.

    யார் தமக்கு குழந்தையாகப் பிறக்கப் போகிறார்கள் என்பதை அறியாமலே அக்குழந்தை மீது அளவு கடந்த பாசம் கொள்கிறார்கள் பெற்றோர்கள்.

    பிறக்கும் அக்குழந்தையும் வளர்ந்து ஒரு விஞ்ஞானியாகவோ அன்றி ஒரு நாட்டின் தலைவராகவோ அன்றி ஒரு நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவராகவோ அன்றி ஒரு தீரா வியாதிக்குட்பட்டவராகவோ உருவெடுக்கலாம்.

    இத்தகைய அளப்பரிய, அதிசயமான மனிதப்பிறவியாக உருவெடுக்கும் எமக்கு, எமது பிறப்பில் எந்த விதமான கட்டுப்பாட்டையும் கொண்டிராத எமக்கு எமது உயிரைப் பறிக்கும் அதிகாரம் இருக்கிறதா?

    மிகவும் வியத்தக்க வினா இல்லையா?

    என்ன சக்தியின் இக்கேள்வி எந்த வழிக்கு எம்மை இழுத்துச் செல்கிறது எனும் கேள்வி உங்களுக்குள் எழுவது இயற்கை.

    நாம் அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனும் எண்ணத்துடன் தான் எமது வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

    நாம் வாழும் போதும் சரி, அன்றி மறையும் போதும் சரி எமது உறவுகளுக்குப் பாரமாக அமைந்து விடக்கூடாது என்பதுவே பெரும்பான்மையானவர் மனங்களில் குடி கொண்டிருக்கும் நினைவாகும்.

    ஆனால் நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விடுகிறதே!

    வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் எமது வாழ்வினில் நாம் விரும்பாத முடிவுகளுக்கு எம்மைத் தள்ளி விடுவதை நாம் பலமுறை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

    எந்த வழியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று எண்ணுகிறோமோ அந்த வழிக்கு வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகள் எம்மைத் தள்ளி விடுகிறது.

    சில நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்வு இப்போது இங்கிலாந்தில் மிகவும் பலமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    54 வயது நிரம்பிய ஒரு வெற்றிகரமான வியாபாரத்தின் சொந்தக்காரர் ஜெஃப்ரி ஸ்பெக்டர் (Jeffrey Spector) என்பவர். அவர் சுவிட்சர்லாந்தில் தனது வாழ்வின் முடிவைத் தேடிக் கொண்ட நிகழ்வே இவ்விவாதம் மீண்டும் தலைதூக்கக் காரணமாகிறது.

    151                        151.2151.3

    அவர் அத்தகைய ஒரு முடிவுக்கு வருவதற்கு என்னதான் காரணம் ?

    அவருக்கு முதுகெலும்பில் ஒரு புற்றுநோய்க்குக் காரணமான “ட்யூமர்” ஒன்று வளர்ந்திருந்தது.

    மருத்துவர்களின் கணிப்புகளின் படி இது மிகவும் பாரதூரமான நோய். மிகவும் மோசமான விளைவுகளைக் கொடுக்கக்கூடியது. அறுவை சிகிச்சையின் மூலமே இவரது வாழ்வை நீடிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தன.

    அறுவை சிகிச்சையின் பின்னால் அவர் நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் எச்சரிக்கப்பட்டார்.

    தான் எடுக்கும் எந்த முடிவுகளும் தனது குடும்பத்தினரை நீண்டகால உபாதைகளுக்கு உள்ளாக்கக் கூடாது என்பதில் இவர் மிகவும் உறுதியாக இருந்தார்.

    எந்த வித அறுவை சிகிச்சைக்குள்ளாகாமல் இன்னும் எத்தனை காலத்திற்கு அவர் சாதாரணமாக நடமாட முடியும் என்பதை எந்த வைத்தியராலும் அறுதியாகக் கூறமுடியாத நிலைமை.

    இங்கிலாந்துச் சட்டத்திட்டங்களின் படி எந்த ஒரு நிலையிலும் யாரும் தனது உயிரைத்தானே எடுத்துக் கொள்வது அனுமதிக்கப்படுவதில்லை.

    மேலும் யாராவது அவர்களது தற்கொலைக்கு உதவினார்களேயானால் அவ்வுதவி செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

    ஆனால் சுவிட்சர்லாந்தில் இத்தகைய தற்கொலைகள் அதாவது விரைவில் மரணமடையக்கூடிய தீராநோய் கொண்டிருப்பவர்கள் தனது உயிரைத் தாமே மாய்த்துக் கொள்வதற்கு அந்நாட்டுச் சட்டத்தில் இடமுண்டு.

    இம்மனிதர் தனது குடும்பத்தினருக்கு தனது நிலையை விளக்கி விட்டு சுவிட்சர்லாந்துக்கு பயணித்து அங்கே இத்தகைய தற்கொலைக்கு உதவும் வைத்தியசாலையில் தானே தன்னை அனுமதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

    இவரது மரணத்தைத் தொடர்ந்து இவரது நண்பர்களும், குடும்பத்தினரும் அவரது முடிவைத் தாம் மதிப்பதாகக் கூறியுள்ளார்கள்.

    ஆனால் இங்கிலாந்தில் சட்டம் மாற்றப்பட்டு இத்தகைய முடிவு சட்டத்திற்கு புறம்பானதல்ல என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால் தமது அன்புக்குரிய அம்மனிதரின் கடைசி நேரத்தில் தாம் உடனிருந்திருந்திருக்கலாம் என்பதுவே தமக்கு வேதனையளிக்கிறது என்கிறார்கள்.

    சுவிட்சர்லாந்துக்கு செல்வதற்கு முன்னால் பேட்டியளித்த அம்மனிதர் இந்நாட்டில் தனது முடிவு சட்டப்பூர்வமானதாக இருந்திருந்தால் தான் இன்னமும் நடமாடும் நிலையில் இருக்கும் போது தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியிருந்திருக்காது என்று கூறியிருந்தார்.

    ஏன் என்கிறீர்களா ?

    அவர் தனது உயிரை இப்போது எடுத்துக் கொண்டிருக்காவிடில், ஒருவேளை நோய் தீவிரமடைந்து நடமாடமுடியாத நிலை வந்திருந்தால், அதன் பின்னால் அவர் சுவிட்சர்சலாந்து சென்று தனது உயிரைத் தானாகவே எடுத்திருந்திருக்க முடியாது.

    அந்நிலையில் தன்னை சுவிட்சர்லாந்துக்கு தனது குடும்பத்தினர் கொண்டு சென்றிருந்தால் அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்டு விடுவார்கள்.

    இதுவே அவரது இந்த அவசர முடிவுக்குக் காரணம் என்றிருந்தார்.

    இங்கிலாந்து சட்டம் அவரது எதிர்பார்ப்புக்கு அமைய மாற்றப்பட்டிருந்தால் அம்மனிதர் இன்னும் சிலகாலம் தன் அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்திருப்பார் என்று வாதிடுகிறார்கள் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கோருபவர்கள்.

    இல்லை, யாருக்கும் தமது உயிரை எடுக்கும் அதிகாரம் இல்லை. சட்டம் மாற்றப்பட்டால் அவசியமின்றி பலர் தமது வாழ்வை அனாவசியமாக முடித்துக் கொள்ளும் அபாயமிருக்கிறது என்கிறார்கள் அதை எதிர்ப்பவர்கள்.

    “லார்ட் யங்” (Lord Young ) எனும் அரசியல்வாதி மீண்டும் இச்சட்ட மாற்றத்தை இங்கிலாந்தின் பாரளுமன்றத்தின் முன்னால் விவாதத்திற்குக் கொண்டு வரும் முயற்சியிலீடுபட்டிருக்கிறார்.

    இம்மனிதப் பிறப்பு . . . ஆண்டவன் நிர்ணயிப்பு …

    இம்மனிதனின் முடிவு . . . . ?

    பொறுத்திருந்து பார்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சும்மா கிடந்த நிலத்தை கொத்தி …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    kaadu vilajenna

    சும்மா கிடந்த நிலத்தை கொத்தி …

    தானே ஒரு திரைப்படம் பெரும் பொருட்செலவில் தயாரித்து இந்தப் படம் ஓடினால் நான் மன்னன்… இல்லையேல் நாடோடி என்று கருத்து தெரிவித்து படத்திற்கு நாடோடி மன்னன் என்று பெயருமிட்ட எம்.ஜி.ஆர். பிக்சர்ஸாரின் முதல் தயாரிப்பு.

    முதல் பாதி கருப்பு வெள்ளை… பிற்பாதி கேவா கலர்… (வண்ணம்).

    முதல் பாதியில் கதையின் நாயகி வேறு… பிற்பாதியில் நாயகி வேறு… என்று எத்தனை முத்திரைகளை தன்னுள் அடக்கி வெளிவந்த படம் தெரியுமா அது?

    மக்கள் தொடர்பு அதிகாரி… என்கிற ஒரு புதிய பதவியை திரைத்துறையில் ஏற்படுத்தி… இன்றும் திரைத்துறை வரலாற்றைத் தன் விரல்நுனியில் வைத்திருக்கும் பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களை அப்படத்தின் மக்கள் தொடர்பு பிரிவுக்கு நியமித்தார் எம்.ஜி.ஆர்!

    திரைப்படத்தில் வரும் அத்தனைப் பாடல்களும் ஒன்றி்ரண்டு கவிஞர்களால் எழுதப்பட்டதல்ல… தனக்கு நெருக்கமான… பழக்கமான அனைத்துக் கவிஞர்களையும் பயன்படுத்தி… ஏராளமான பாடல்களை படத்தில் இடம் பெறச் செய்தார் எம்.ஜி.ஆர்.

    இப்படத்திற்கு வசனம் எழுதியவர் கவியரசு கண்ணதாசன்!! இப்படத்திற்கு பாடல் எதுவும் அவர் எழுதவில்லை என்பது கூடுதல் தகவல்!

    பட்டுக்கோட்டையார் தந்த பாடல்கள் இரண்டு என்று நினைக்கிறேன். ஒன்று தூங்காதே தம்பி தூங்காதே… சூப்பர் டுப்பர் ஹிட் என்று சொல்லலாமா?

    அடுத்து… இந்தப் பாடல்… சும்மா கிடந்த நிலத்தை கொத்தி …

    நானே போடப் போறேன் சட்டம்… நன்மை புரிந்திடும் திட்டம் என்கிற வரி… எழுதப்பட்ட நாளில் நிச்சயம் எம்.ஜி.ஆருக்கே தெரியாது தமிழகத்தின் முதலமைச்சராக ஆகப்போகிறார் என்பது.

    வரகவிகளின் நாவில் சரஸ்வதி வந்து அமர்ந்திருக்கிறாள் என்பது எத்தனை உண்மை என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி!

    எம்.ஜி.இராமச்சந்திரனும் நடிகை பானுமதியும் இணைந்து நடித்த பாடல் காட்சி… எதார்த்தமாய் அந்த மாட்டுவண்டியில் பாட்டுப்பாடி தொடரும் பயணத்தில்தான் எத்தனை ஆழமான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இசையை வழங்கியிருப்பவர்… எஸ்.எம்.சுப்பையா நாயுடு…

    டி.எம்.எஸ் அவர்களுடன் பானுமதி அவர்களும் இணைந்து பாடிடும் பாட்டு! பாட்டுவரிக்குள் வருங்கால தமிழக்தின் வரலாறு பதியப்பட்டிருக்கிறதே அதுவே சிறப்பு!! எம்.ஜி.ஆர் என்கிற காலச் சரித்திரத்தின் சுவட்டில் இப் பாடல் பொன்னேட்டில் பதிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்!

    சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
    சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
    கம்மா கரையை ஒசத்தி கட்டி
    கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
    சம்பா பயிரை பறிச்சு நட்டு
    தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
    நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு
    அட காடு விளஞ்சென்ன மச்சான்
    நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
    கையும் காலும் தானே மிச்சம்
    அட காடு விளஞ்சென்ன மச்சான்
    நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
    கையும் காலுந்தானே மிச்சம்

    இப்போ காடு விளையட்டும் பொண்ணே
    நமக்கு காலமிருக்குது பின்னே
    காலமிருக்குது பின்னே
    மண்ணை பொளந்து சுரங்கம் வச்சு
    பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
    மதிலு வச்சு மாளிகை கட்டி
    கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
    வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
    பட்ட துயரினி மாறும்
    ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்

    அட காடு விளஞ்சென்ன மச்சான்
    நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
    கையும் காலுந்தானே மிச்சம்

    இப்போ காடு விளயட்டும் பொண்ணே
    நமக்கு காலம் இருக்குது பின்னே
    நமக்கு காலம் இருக்குது பின்னே

    மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே
    பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்?

    அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
    சேர்வதினால் வரும் தொல்லையடி.

    பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
    பண்ண வேண்டியது என்ன மச்சான்?

    தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
    சிந்திச்சு முன்னேற வேணுமடி

    வாடிக்கையாய் வரும் துன்பங்களை
    இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ?

    இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
    சேரிக்கும் இன்பம் திரும்புமடி.

    நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
    மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்?

    நாளை வருவதை எண்ணி எண்ணி
    அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி.

    அட காடு விளஞ்சென்ன மச்சான்
    நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
    கையும் காலுந்தானே மிச்சம்

    நானே போடப்போறேன் சட்டம்
    பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
    நாடு நலம் பெறும் திட்டம்
    நன்மை புரிந்திடும் திட்டம்
    நாடு நலம் பெறும் திட்டம்

    காணொளி: https://youtu.be/pt5GymW_eE4

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”அயிரா வதத்தை கயிறாக்கி, கெட்டித்
    தயிரான தாமோ தரன்தன், -உயிரான
    ஆக்களைக் காக்கவும், அண்டர்கோன் கர்வத்தைப்,
    போக்கவும் தூக்கினான் பார்”….கிரேசி மோகன்….

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் ஏப்ரல் மாத கட்டுரைப் போட்டி முடிவு

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களுக்கு,

    Google_Appliance

    வணக்கம். சென்ற மார்ச் மாதம் (1, 2015)  ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவர்களில் மாதம் ஒருவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். இந்த முறை திருமிகு பி. தமிழ்முகில் நீலமேகம் மற்றும் சுரேஜமீ எழுதிய இரு கட்டுரைகள் மட்டுமே வந்துள்ளது. இப்போட்டியின் நடுவர் திரு ஐயப்பன் அவர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பியதில் அவர் இக்கட்டுரைகள் குறித்த தம் கருத்துகளை அளித்திருக்கிறார். திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த மாத வெற்றியாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வருகிற மாதங்களில் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் வரும் என்று நம்புகிறோம்.

    திரு ஐயப்பன் அவர்களின் போட்டி முடிவு

     

    அன்பிக்கினிய அனைவருக்கும் வணக்கம்.

    வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் முடிவு அறிவிக்க நாளானது, மன்னிக்கவும்.

    இணையத்தின் பயன்பாடுகள் சேவைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான இரு சேவைகள் குறித்த கட்டுரைகள் வல்லமைக்கு வந்திருக்கின்றன.

    முதலாவதாக இணையத்தில் கிடைக்கும் இலவச புத்தகங்கள், நூலகங்கள், குறித்து திருமதி. தமிழ்முகில் நீலமேகம் தந்திருக்கும் விவரங்கள். அருமையான பல விவரங்களை தொகுத்து அளித்திருக்கிறார்.

    அடுத்த கட்டுரை இணையத்தில் சமூக வலைதளங்கள், அதில் இருக்கும் சாதக பாதங்கள், பாதுகாப்பு முறை என விரிந்து செல்லும் கட்டுரை. அருமையான தொகுப்பு சுரேஜமி. தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள்.

    இரண்டுமே முக்கியமான கட்டுரைகள். இருந்தும் பலருக்குத் தெரியாமல் இருக்கும், இளைய தலைமுறைக்கு உந்துகோலாக, வாசிப்பைத் தூண்டவும், அறிவை விசாலமாக்கவும், பள்ளி, கல்லூரி, ஆய்வுகள் என அனைத்து வகையினருக்கும் உதவும் இணைய புத்தகங்களும் நூலகங்களும் குறித்த கட்டுரை என்னளவில் வெற்றி பெற்ற கட்டுரையாகிறது. வாழ்த்துகள் திருமதி தமிழ்முகில்

    Iyappan Krishnan

    உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
    நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
    அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
    தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

    Share
  • மாண்டூக்ய உபநிஷத்து – எளிய விளக்கம் – 1

    ஒரு அரிசோனன்

     எனது சில சொற்கள்:  வல்லமையில் வெளியான “கம்பனும், வால்மீகியும்” ஒப்பீட்டுக் கட்டுரைகள் இன்னும் சில கதைகளுடன் புத்தகமாக வெளியானவுடன், பல தடவைகள் ஜெயபாரதன் உள்பட எனது நண்பர்கள்  தமிழில் கீதை, மற்றும் உபநிஷத்துகளைப் பற்றி  புதியபார்வையில் என்னை எழுதச் சொல்லிவருகிறார்கள்.

    ஆதி சங்கரர் விரிவுரை எழுதிய உபநிஷத்துகளுக்கு எந்தவொரு விளக்கம் நான் எழுதப்புகுந்தாலும் அது அளவுகடந்த, வடிகட்டிய முட்டாள்தனமேயன்றி வேறொன்றுமில்லை.  எனவே நான் அவர்களின் அன்புக்கட்டளையைத் தட்டிகழித்துக்கொண்டே வந்தேன்.

    பிறகு என் மனதும் அதையே சொல்லத் துவங்கியபோது ஒரு நப்பாசை எனக்குள்ளேயே தலைதூக்கியது.

    உடனே, “அட முட்டாளே!  என்ன செயல் செய்யத் துணிகிறாய்?  உனக்கு என்ன அறிவு இருக்கிறது என்று, ஆழம் தெரியாமல் காலைவிடப்பார்க்கிறாய்!” என்று என் உள்ளறிவு என்னை எச்சரித்தது.

    “நீ எதையும் எழுத ஆரம்பித்தால், உன்னைவிட அறிவுமிக்கவர்கள், உன்னுடைய அறிவின்மையைச் சுட்டிக்காட்டி, உன்னை நார்நாராகக் கிழித்துத் துவைத்துத் தொங்கவிட்டுவிடுவார்கள்!’  என்றும் பயமுறுத்தியது.

    இருப்பினும், எனது உள்ளறிவின் எச்சரிக்கையையும், அச்சுறுத்தலையும்மீறி, எழுதத்துணிந்தேன்.  அதற்க்குக் காரணம்…

    உபநிஷத்துகளுக்கு இதுவரை நான் பார்த்த விளக்கங்கள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.  தமிழில் ஒரு சிலவே இருக்கின்றன.  எனவே, ஆதி சங்கரரின் விளக்கவுரை, சுவாமி கம்பீரானந்தா, சுவாமி நிகிலானந்தா, சுவாமி சின்மயானந்தா, சுவாமி கிருஷ்ணானந்தா இவர்களின் விளக்கத்தையும் துணைக்கு வைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்ததை எழுதப்போகிறேன்.

    தமிழில் உபநிஷத்துகளைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆவலே என்னைத்தூண்டுகிறது.

    வடமொழியில் எழுதிய செய்யுள்களுக்கு எனது சிற்றறிவைக்கொண்டு தமிழில் மொழிபெயர்ப்பு, பதவுரை எழுதி, ஆச்சரியாரிகளின் விளக்கவுரைகளின் கலவையைக் கலந்து எனது சக்திக்கு இயன்றவரை எளிதாக இயம்பியிருக்கிறேன்.

    சில சொற்கள் என்பது பல சொற்களாகப் பல்கிப் பெருகிவிட்டன.  இத்துடன் அதை நிறுத்திக்கொண்டு, உபநிஷத்துக்கு வருகிறேன்.

    படிக்கும் முறைதமிழில் வடமொழி ஒலிப்புகள் இல்லை என்பதால் 2,3,4 என்ற எண்களை மேற்குறியாகக் கொடுத்திருக்கிறேன்.  தேவநாகரி தெரியாதவர்களும் ஒலிப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள இது உதவும் என்றே நம்புகிறேன்.

     உபநிஷத்தைப்பற்றி:  எல்லா உபநிஷத்துகளிலும் மிகவும் சிறியதான இந்த உபநிஷத்து அதர்வ வேதத்தில் உள்ளது.  மாண்டூகர் என்ற முனிவரால் கேட்கப்பட்டு எழுதப்பட்ட இதில் மொத்தம் பன்னிரண்டு சொற்றொடர்களே உள்ளன.  இது ஓம் என்ற பிரணவ மந்திரம், பிரம்மம் [பரம்பொருள்], ஆத்மா, ஆத்மாவின் [மனிதனின்] நான்கு நிலைகள்[உள்ளுணர்வுகள்], இவற்றைப்பற்றி ஒரு சூத்திரமாக [formula] ஒரு சொல்லைக்கூட வீணாக்காமல் சொல்கிறது.  இந்த உபநிஷத்தே அத்துவைத தத்துவத்தின் அடிப்படையாக அமைகிறது.  பிரம்மமும் [பரம்பொருளும்] ஆத்மாவும் ஒன்றே என்று நிறுவுகிறது.

    ஆகையால், ஆதிசங்கரரின் பரமகுருவான கௌடபாதர் இதற்கு விளக்கவுரை [காரிகை] எழுதியிருக்கிறார். இந்துசமயத்தின் ஒரு பெரும்பிரிவான அத்துவைத தத்துவத்தை நிலைநிறுத்த ஆதிசங்கரரின் மனத்தில் கருவாகப் பரிணமித்தது இந்த உபநிஷத்தும், கௌடபாதரின் காரிகையும்தான்.

    மேலே தொடர்வோமா…

    MU1

     ஒமித்யேதத3க்ஷரமித3ஹும் ஸர்வம் தஸ்யோபவ்யாக்2யானம்

    பூ4தம் ப4வத்3ப4விஷ்யதி3தி ஸர்வமோங்கார ஏவ

    யச்சான்யது த்ரகாலாதீதம் தத3ப்யோங்கார ஏவ                                                     — 1

     

    ஒமெனுமிந்த அழியாததே இவை எல்லாம்.  அதன் விளக்கமாவதிது.

    ஆனது, ஆகியிருப்பது, ஆகப்போவதென்ற எல்லாமே ஓங்காரம்தான்.

    இவையன்றி முக்காலங்களைக் கடந்தததுவும் ஓங்காரமே.                                       — 1

     பதவுரை:  ஒமிதி – ஓம் என்ற; ஏத3து – இந்தஒரு; அக்ஷரம் – அழிவற்ற ஒன்று [சொல்]; இத3ம் ஸர்வம் – இது எல்லாம்.

    தஸ்ய – அதன்; உபவ்யாக்2யானம் – விளக்கமாவது;  பூ4தம் – ஆனது;  ப4வது3 – ஆகிவருவது; ப4விஷ்யது3 – ஆகப்போவது;  இதி ஸர்வம் – இது எல்லாம்; ஓங்கார ஏவ – ஓங்காரம்தான்.

    த்ரிகாலாதீதம் – [இறந்த, நிகழ், எதிர்] மூன்று காலங்களைக் கடந்த [அப்பாற்பட்ட];   யச்சான்யது – மற்ற எதுவாகிலும்;  தது3 அபி ஓங்கார ஏவ – அதுவும் ஓங்காரம்தான்.

     விளக்கம்இந்த முதல் சொற்றொடரில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் விளக்கப்படுகிறது. எழுத்தையும், சொல்லையும், பேச்சையும் வடமொழியில் அக்ஷரம் என்று சொல்கிறார்கள்.  ஷரம் என்றால் அழிவது என்று பொருள்.  எனவே, அக்ஷரம் என்றால் அழியாதது என்றே பொருள்கொள்ளவேண்டும். ஏன்?  மனிதன் அழியலாம், ஆனால் அவனது சொல் அழிவதில்லை;  பெரியோர் சொல்லிவைத்த சொற்கள் இன்றும் அழியாமல் நம் நினைவில் நிற்கின்றன.  ஒரு மொழி அழிந்தாலும் ஒவ்வொரு மொழியிலும் உள்ள சொற்கள் அழிவதில்லை.  ஆகையால் சொல் என்பது அக்ஷரம், அதாவது அழிவற்றது என்று ஆகிறது.

    எனவே ஓம் எனும் அழிவற்ற இது என்று மாண்டூக்ய உபநிஷத்து துவங்குகிறது.

    இது எல்லாமே என்றால், நம்மால் அறிய முடியும், முடியாத எல்லாமே என்று விளக்கமாகிறது.  இது எல்லாமே ஓம் தான் என்று சொன்னபிறகு அதன் பொருளை விவரிக்கிறது.

    ஆனது, ஆகிக்கொண்டிருப்பது, ஆகப்போவது எல்லாமே ஓங்காரம்தான் என்று அழுத்திச் சொல்கிறது.  பெரும் வெடிப்பு [Big Bang} நிகழ்ந்தபின் இந்த அண்டம் தோன்றியது என்கிறார்கள் அறிவாளிகள்.  அப்படித் தோன்றிய அண்டம், பெரும் மாறுதலை அடந்த்துகொண்டிருக்கும் அண்டம், இனி மாறப்போகும் அண்டம் எல்லாமே ஓங்காரம்தான் என்கிறது.  மேலும் விளக்க, நம்மால் காண முடிவது மட்டும் அல்ல, காண இயலாத, உணர இயலாத மூன்று காலத்திலும் நிகழ்ந்த, நிகழும், நிகழப்போகும் மற்றவை எல்லாமே ஓங்காரம்தான் என்னும்போது…

    ஒரு சொல்லானது எல்லாமாக எப்படி இருக்க இயலும் என்ற எண்ணம் எழத்தான் செய்யும்.  அப்படியானால், அந்தச் சொல்லான ஓம் என்ன என்று அறிய ஆவல் கூடுமல்லவா?  அதற்கு விளக்கம் அடுத்த சொற்றொடரில் பிறக்கிறது.

    அதற்குமுன் முக்காலத்திற்கும் அப்பாற்பட்ட, கடந்த என்ற குறிப்பீட்டைப் பார்ப்போம்.

    நமக்கு மிகவும் அருகில் உள்ள நட்சத்திரம் [விண்மீன்] பிராக்சிமா சென்டாரி [Proxima Centauri]  நமது பூமியிலிருந்து நாலேகால் ஒளிஆண்டு தூரத்தில் இருக்கிறது.  அதை நாம் பார்க்கும் பொது, நாலேகால் ஆண்டுகளுக்குமுன் அது இருப்பதைத்தான் இன்று நாம் காண்கிறோம்.

    எனவே நாம் காண்பது இறந்தகாலத்தைத்தான்.

    அதைப்போல மிகவும் தள்ளி இருக்கும் மற்ற விண்வெளி மண்டலங்கள் இன்னும் பல நூறு/ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன.  எனவே அவற்றை நமது தொலைநோக்கிகள் [telescopes] காணும்போது.  அவ்வளவு பழைய காலத்தில் இருக்கும் ஒன்றையே நாம் காண்கிறோம்.  மேலும் கருந்துளைகளில் [black-holes] காலமே வளைக்கப்பட்டுவிடுகிறது என்றும் விண்வெளி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

    இந்தக் கூற்று, முக்காலத்திற்கும் அப்பாற்பட்ட, கடந்த ஒன்று நிகழக்கூடும், நிகழுகிறது என்பதுதானே!

    இதை நமது முனிவர்கள் கேட்டுணர்ந்து இருப்பதை வானியல் உறுதிசெய்கிறது.

    ஓம் என்ற அழிவற்ற ஒன்றின் விளக்கம் தொடர்கிறது.

    mu 2

    ஸர்வஹும் ஹ்யேதது3 ப்ரஹ்மாயமாத்மா ப்ரஹ்மா

    ஸோஅயமாத்மா சதுஷ்யாது                                                                           — 2

     எல்லாமே அந்தப் பரம்பொருள்தான். இந்த ஆத்மாவும் பரம்பொருள்தான்.

    இந்த ஆத்மன்[மா] நான்காக பகுதிகளாக இருக்கிறான்.                                            — 2

     பதவுரை:   ஏதது ஸர்வம் – இம்மாதிரியான எல்லாம்;   ப்ரஹ்ம ஹி – பிரம்மம்[பரம்பொருள்]தான்;  அயம் ஆத்மா ப்ரஹ்ம – இந்த ஆத்மாவும் பரம்பொருள்தான்;   ஸ அயம் ஆத்மா – இந்த ஆத்மா என்பவனும்;  சதுஷ்யாது –  நான்கு [கால்] பகுதிகளாக இருக்கிறான்.

    விளக்கம்:  இங்கு ஆத்மாவுக்கும் பரம்பொருளுக்கும் உள்ள தொடர்பும் அத்துடன் ஒங்காரத்திற்கும் உள்ள தொடர்பும் கொண்டுவரப்படுகிறது.

    முதல் செய்யுளில் ஓங்காரம்தான் இங்கு இருப்பது, இருந்தது, இருக்கப்போவது எல்லாம் என்றும், ஓங்காரம் முக்காலத்திற்கும் அப்பாற்பட்டது என்றும் கூறப்பட்டது.  இப்பொழுது இதெல்லாம், அதாவது ஓம் குறிக்கும் எல்லாமே பரம்பொருள், பிரம்மமே என்றுரைக்கப்பட்டது.

    இந்த ஒரு சொற்றோடரைக் கவனிப்போம். ஓம் என்பது காலவட்டத்திற்குள் உட்பட்டது, அதற்கு அப்பாற்பட்டதும் என்று சொல்லிவிட்டு, அவை எல்லாம் பரம்பொருளே [பிரம்மமே] என்றால், இங்கு நாம் காணும், கண்ட, காணப்போகும், மற்றும் காலச்சக்கரத்திற்கு அப்பாற்பட்ட — அதாவது நமது அறிவுக்கு, புலனுக்குக் கட்டுப்படாத, கண்டறிய இயலாத எல்லாமே பரம்பொருள் என்று உறுதி செய்யப்படுகிறது.

    அடுத்தபடியாக, பரம்பொருளே ஆத்மா என்று இணைப்பு கொடுக்கப்படுகிறது.

    இப்படிச் சொன்னவுடன் நம் மனதில் எழும் கேள்வி என்னவாக இருக்கும்?

    ஓம்தான் எல்லாம் என்றும் சொல்லி, அதுவே பரம்பொருள் என்றும் சொல்லி, அதுதான் ஆத்மா என்றால், அந்த ஆத்மா என்பது என்ன என்பதாகத்தானே இருக்கும்?

    இந்த ஆத்மா என்ற ஒன்று நம் உடலுக்குள் இருக்கிறது, அதுதான் நாம் என்று உணருகிறோம்.  இந்த ஆத்மாவைப் பற்றி பலவிதமான விளக்கங்களும், பலராலும் சொல்லப்பட்டுக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

    இருந்தும் ஆத்மா என்றால் என்ன என்பது ஒரு குழப்பமாகவே இருந்து வருகிறது.

    இந்த ஆத்மா நமது உடலுக்குள் இருக்கிறது என்றால் அது என்ன செய்கிறது, அதன் இயல்புகள் என்ன என்று அறியும் ஆவல் பிறக்கிறது.

    இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதுபோல, ஆத்மா நான்கு பகுதிகளாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

    நான்கு பகுதிகள் என்றால் நான்கு கால் பகுதிகள் என்றுதானே பொருள்?

    இந்த ஆத்மா என்று சுட்டப்படுகிறதே, அப்படியென்றால் இது, இந்த ஆத்மா நான்கு கால்கள் உள்ள ஒரு மிருகத்தைப்போன்றதா —  அல்லாது போனால், இரண்டுகால்களும் இரண்டு கைகளும் உள்ள மனிதனைப் போன்றதா — அல்லது ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதுபோல நான்கு பக்கங்கள் உள்ள கனசதுரமா என்றும் குழப்பம் ஏற்படுகிறது.

    “இந்த நான்கு பகுதிகளை எப்படி அறிந்துகொள்வது?” என்று மேலும் குழம்புகிறோம்.

    அந்தக் குழப்பத்தை நீக்குவதுபோல ஆத்மாவின் நான்கு பகுதிகளுக்கும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

    ***

     MU 3

    ஜாக்ரிதஸ்தா2னோ ப3ஹிஷ்பிரக்ஞ: ஸப்தாங்க ஏகோனநவிம்சதிமுக2: ஸ்தூ2லபு4க்3வைஸ்வாநர: ப்ரத2ம: பாத3:                                                                                            — 3

     விழித்திருக்கும் நிலையில் வெளியறிவானவன், ஏழுறுப்புகளும் பத்தொன்பது வாய்களுமுள்ளவன்,  தெளிவாகப் புரிவதைச் சுகிக்கும் வைஸ்வாநரன்முதல் பகுதியாவான்.                           — 2

     பதவுரை:  வைஸ்வாநர: வைஸ்வாநரன்;  ஜாக்3ரிதஸ்தா2னோ – விழித்திருக்கும் நிலையில்; ப3ஹிஷ்பிரக்ஞ: –  வெளி[யில் நடக்கும் விஷயங்களை]அறிவுடைய; சப்தாங்க: – ஏழு உறுப்புகள் உள்ளவன்; ஏகோனவிம்ஸதிமுக2: – பத்தொன்பது வாய்கள் உள்ளவன், ஸ்தூ2லபு4க்3 – திடப்பொருள்களை அனுபவிப்பவன்; ப்ரத2ம: பாத3: – முதல் பகுதியாகிறான்.

     விளக்கம்:  இச்சொற்றொடர் ஆத்மனின் முதல் பகுதியைக் குறிப்பிடுகிறது.  எல்லாச் சமயங்களிலும் நம் உடலுக்குள் இருந்துகொண்டு நம்மை இயக்குவது ஆத்மா [self, soul] என்று உலகச் சமயங்கள் கூறுகின்றன.  நாம் விழித்திருக்கும் நிலை நம்மை இயக்கம் அந்த ஆத்மாவின் முதல் நிலை என்று பகரப்படுகிறது.

    அந்த முதல்நிலைக்கு வைஸ்வாநரன் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ – இவ்வண்டமான – நரன் – மனிதன். அதாவது விஸ்வ+நரன் தெய்வீக சக்தி உள்ள மனிதன் [human].  இப்பெயர் தனி மனிதனுக்குக் கொடுக்கப்படவில்லை. இவ்வண்டத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மொத்த அறிவையும் ஒரு மனிதனிடம் கொடுத்திருப்பதாக உருவகப்படுத்தப் படுகிறது.  [The Supreme Spirit or Intellect when located in a supposed collective aggregate of gross bodies]

    பரம்பொருளே ஆத்மன் என்று சொல்லிவிட்டு, அந்த ஆத்மனுக்கு நான்கு பகுதிகள் என்று சொல்லி, அந்த ஆத்மன் விழித்திருக்கும் நிலையில் வெளிஅறிவுடன் இயங்குகிறான் என்றால் – அவனுடைய புரிதல் வெளியுலகத்தில் இருக்கிறது என்று பொருள்.  அதுதான் அவனுடைய இயக்க நிலை என்றால் — அது நம் அனைவருக்கும் பொருந்துகிறது.  நமக்கு மட்டுமல்ல, நமக்குத் தெரிந்த அனைத்து உயிரினங்களுக்கும்

    நாம் வெளியுலகில் நடப்பதை வைத்துக்கொண்டுதான், நமக்கு வெளியில் நடப்பதின் மூலம்தான் நமது அறிவைப் பெறுகிறோம்.  அதை எப்படிப் பெறுகிறோம்?  அந்த விஸ்வாநரன் எப்படிப் பெறுகிறான்?

    அவனுக்கு ஏழு உறுப்புகளும், பத்தொன்பது வாய்களும் உள்ளன என்று கொடுக்கப்பட்டிருப்பதால் அவை என்னவாக இருக்க முடியும், அவை எப்படி வெளி அறிவைப் பெற உதவி செய்கின்றன என்பதை நோக்குவோம்.

    முதலில் ஏழு உறுப்புகள் எதுவாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்ப்போம்.

    விண்ணே அவனது தலை, சூரியன் கண், காற்றே உயிர்மூச்சு, வெற்றிடமே நடுப்பகுதி, தண்ணீரே அவனது சிறுநீரகம், நிலமே அவனது கால்கள், வேள்விக்கான நெருப்பே [அஹவனிய அக்னி –  கிருஷ்ண யஜுர்வேதம்] அவனது வாய் என்று சொல்லப்படுகிறது.

    இப்பொழுது 19 வாய்கள் எவை என்று நோக்கினால் அவை, நமது ஐம்புலன்கள் [கண், காது, மூக்கு, நாக்கு, தொடுஉணர்ச்சி உறுப்புகள்] — ஐந்து உணர்வுகள் [பார்வை, கேட்டல், நுகர்தல், சுவை, தொடுதல் ஆகியவை] — ஐந்து உயிர் காற்றுகள் [பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்;  இந்து ஐந்து வகைக் காற்றுகளும் நம் உடலில் சக்தியை நிலை நிறுத்துகின்றன.] – மனம், அறிவு, ஆணவம், உணர்ச்சிகள் ஆகியவை.

    இவற்றை ஏன் வாய் என்று சொல்கிறார்கள்?

    இவைதான் உயிரினங்களின் அனுபவங்களின் –  பட்டறிவின் நுழைவாயில்கள்.  இவைகளின் மூலம்தான் உயிரினங்கள் தங்களது வெளி அனுபவத்தைப் பெறுகின்றன.

    மேலே சொல்லப்பட்ட உறுப்புகளும், வாய்களும் வெளி உலகத்தையே பார்ப்பதால், அவற்றையே அனுபவிப்பதால், ஆதமனின் அப்பகுதி வைஸ்வாநரன் என்று அழிக்கப்படுகிறது.

    நம்மை எடுத்துக்கொண்டாலே, நாம் உள்ளாக எதையும் உணர்வதில்லை.  நமக்குத் தெரியும், நாம் பகுத்தறியும் எதுவும் நமக்கு வெளியிலிருந்து வருவதே.  நமது ஐம்புலங்களாலும், ஐந்து உணர்வுகளாலுமே கிடைக்கின்றன. நமக்குத் தெளிவாகப் புரிவதை மட்டுமே நம்மால் அனுபவிக்க முடிகிறது.

    உடனே, நமது அறிவு ஒரு கேள்வியை எழுப்புகிறது:

    “ஆத்மன்தான் பிரம்மம் என்றால், அவன்தான் ஓங்காரம் என்றால், விண் [சுவர்க்கம்], சூரியன், பூமி, தண்ணீர், இன்னும் மற்றவை எல்லாம் தலை, உள்ளுறுப்புகள் என்று ஏன் சொல்லப்படுகின்றன?”

    விடையை அடுத்த பதிவில் காண்போம்…

    இப்படி விளக்குவது பொருத்தமற்ற ஒன்று என்று எண்ணவேண்டியதில்லை.  புலன்களால் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய அண்டத்தையும், கடவுளர்களின் இருப்பிடத்தையும் ஆத்மனை தெய்வீகமாக உருவகப்படுத்தும் ஒரு பகுதியாக [விராட்] என்று குறிப்பிடுவது இருமை என்ற நிலையை நீக்கி எல்லாம் ஒன்றே என்று பின்னால் நிறுவுவதற்கு அடிகோலுகிறது.

    இப்படி உரைப்பது —  ஆத்மன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான், எல்லாமே ஆத்மா ஆத்மன்தான் என்பது —  வேதங்களில் குறிப்படப்படும் “அஹம் ஏவ ப்ரஹ்மன் [நானே பரம்பொருள்]” என்பதை அடிப்படையாகக் கொள்கிறது.

    அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிப் பார்க்கும் உணர்வு விழித்திருக்கும் நிலைக்கே உரித்தானது என்று நிறுவுகிறது.

    இனி அது எவ்வாறு கூறப்படுகிறது என்பதைக்கண்ணுறுவோம்.

    ***

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”யாருடைய வெற்றியையும் , பூரண மாக்கிட,
    பாரிடை பின்புலத்தில் பெண்ணிருப்பாள், -நாரணன்,
    மட்டுமென்ன ஒஸ்தியா ! , மாட்டை அவன்பின்னால்,
    கட்டிவைத்தக் கேசவ் கவி”….கிரேசி மோகன்….

    Share