Advertisements
Featuredஇலக்கியம்பத்திகள்

” அவன், அது , ஆத்மா” (14)

(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 14

நீந்தவும், தர்மம் செய்யவும் கற்றுக்கொள்

சிறிய வயதில் அவனுக்கு அப்பா அவனைக் காலையில் தன்னுடன் குளிக்க ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வார். அவனுக்கும் அப்பாவுடன் குளிக்கச் செல்வது ரொம்பவும் குஷியாக இருக்கும். அப்பா நன்றாக நீச்சல் கற்றவர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் பொழுதெல்லாம் அவர் தைரியாமாக அந்த நீரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து பாய்ந்து நீந்துவதை அவனும், அவனுக்கு நண்பர்களும் கரையில் நின்று ரசித்துக் கொண்டிருப்பார்கள். அவரைப் போலவே சின்னம்பிச் சித்தப்பாவும் மிக நன்றாக நீந்துவார். அவர் நீந்தும் பொழுது முகத்தில் விழும் அந்தச் சுருள் முடிகளை அவர் “லாவகமாக” ஒதுக்கிக் கொள்வதும், இரண்டு கைகளையும் அலக்ஷியமாக மாற்றி மாற்றி வீசி நீரின் அலைகளில் கலந்து வருவதையும் அவன் நன்றாக ரசிப்பான். அவனுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரொம்பவே ஆசை.

அப்பொழுது அவனுக்கு ஏழு வயது. அவனுக்கு வகுப்புத் தோழன் கண்ணன் (ரெங்கநாத வாத்தியாரின் மகன்) ஒரு நல்ல கோடை நாளின் மாலை வேளையில் தொந்திவிளாகம் தெரு வாய்க்காலில் சில நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தான். எந்தக் கோடை காலமானாலும் அந்த மண்டபத்தில் ஆழம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அவனுக்குத் தாத்தா வீடு அந்த வாய்க்காலின் பக்கத்தில்தான் இருந்தது. அதனால் அவனும் அந்த மண்டபத்தில் குளித்துக் கொண்டிருந்த நண்பன் கண்ணனைப் பார்த்து, சந்தோஷம் தாங்க முடியாமல் (இருவரும் சம வயது தானே என்ற எண்ணம்) உடனேயே தனது “டிராயரைக்” கழற்றிக் கரையில் வைத்து விட்டுத் தண்ணீர்ல் குதித்தான். குதித்தவன் நீரின் மேலே வந்தான். மீண்டும் மூழ்கினான். மீண்டும் மூழ்கினான். ஏற்கனவே பெரிய விழிகள் அவனுக்கு. இபோழுது இன்னும் பேந்தப் பேந்த விழித்தான். இதைப்பார்த்த அவனுக்கு நண்பன் கண்ணன்,” மாமா விஸ்வநாதன் முங்கறான்…காப்பாத்துங்கோ” என்று கத்தினான். கரையில் நின்று கொண்டிருந்த சில பெரியவர்கள் தண்ணீரில் இறங்கி அவனைத் தூக்கினார்கள். நிர்வாணமாக இருந்த அவனை ஒருவர் தலைகீழாகச் சில நிமிடங்கள் பிடித்துக் கொண்டிருந்தார். பிறகு அவனை அந்த மண்டபத்திலேயே சிறிது நேரம் படுக்க வைத்திருந்தனர். அவன் கண்கள் சிவந்து பயந்திருந்தன. இதற்குள் அவனுக்கு மாமாத்தாத்தா அங்கு வந்து சேர்ந்தார். அவனைத் தூக்கிக் கொண்டு மெல்ல வீட்டின் திண்ணையில் படுக்க வைத்தார். “சொன்னதக் கேட்டாத்தானே…ஒனக்கோ நீஞ்சத் தெரியாது. எதுக்கு வாய்க்காலுக்குப் போனாய்..ஒங்க அம்மாட்டச் சொல்லி நாலரை குடுத்தாத்தான் நீ சரிப்படுவாய்” என்று தாத்தா சத்தம் போட்டார். அவனுக்குப் பாட்டி, மஞ்சளும், குங்குமமும் கலந்த சாதத்தை சில உருண்டைகளாகச் செய்து வந்து, அவனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள். அதன் பிறகு அந்தச் சிகப்பு உருண்டைகளை அவன் முங்கிப் பிழைத்த இடத்தில் உள்ள மீனுக்குக் கொண்டு வீசினாள். “ஏதோ..நம்ம புள்ளையார் வழி விட்டார்.” என்ற பாட்டியின் குரல் அவனுக்குத் தெம்பு தந்தது.

amv

அதன் பிறகு அவனுக்கு அப்பா வழித் தாத்தாதான் சிதம்பரேஸ்வரர் கோவில் வாய்க்காலில், ஒரு மார்கழி மாதக் காலை வேளையில், படித்துறையில் அவன் கைகளைக் கட்டிக் கொண்டு “குத்திட்டு” உட்கார்ந்திருக்கும் பொழுது திடீர் என்று தண்ணீரில் தள்ளி விட்டார். அவன் அந்தக் குளிர்ந்த நீரில் மூழ்கி எழும் பொழுது அவனைப் பிடித்துக் கொண்டு,” பயப்படாதே…தைரியமா இரு.. நான் ஒனக்கு நீஞ்சச் சொல்லித்தரேன்” என்று தன் மார்போடு அணைத்தார். அவன் “வேண்டாம் தாத்தா..குளுரறது..நீஞ்ச வேண்டாம் தாத்தா” என்று அலறினான். கரையில் துணி துவைத்துக்கொண்டிருந்த ஒருவர்,” சாமி..புள்ள பயப்புடுதுல்லா…போறும் விடுங்க..” என்ற பொழுது,” பயப்பட்டா எப்படி நீஞ்சக் கத்துப்பான்..இவனுக்கு நானே இங்க நீஞ்சக் கத்துக் குடுத்துருவேன் பாரு” என்று நம்பிக்கையோடு சொன்னார். அதன் பிறகு அவனுக்குத் தாத்தாவும், அப்பாவும், சின்னம்பிச் சித்தப்பாவும் நீந்தக் கற்றுக் கொடுத்தனர். ஒன்பது வயதிலேயே அவன் நன்றாக நீந்தக் கற்றுக் கொண்டான். ஊரில் உள்ள வாய்க்கால், கிணறு, குளம், ஆறு என்று ஒன்றைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை. அதன் பிறகு இன்று வரை அவனுக்குத் தண்ணீர் மிக நெருங்கிய நண்பன்தான். இதுபோலவே அவனுக்கு பகைபோலத் தோன்றுவதெல்லாம் நட்பானது.

அப்பாவுடன் குளித்துவிட்டு வரும் பொழுதெல்லாம் ஆற்றங்கரை மண்டபத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரை தரிசனம் செய்வார்கள். கைகளைக் கூப்பியபடி அவனுக்கு அப்பா,” ஊரில் எல்லாரும் நன்னா இருக்கணும். ஊர்ல தர்மம் பண்ணற குடும்பம் எல்லாரும் நன்னா இருக்கணும். சங்கரலிங்க ஐயர் குடும்பம், R.S.A. குடும்பம், ஈஸ்வர ஐயர் குடும்பம், சங்கர ராமையர், வெங்கட்டராமையர், முத்து ராமலிங்க அண்ணாவி குடும்பத்தினர் எல்லாருமே சௌக்கியமா இருக்கணும் ..பெருமாளே இந்தத் தாமிர பரணி வற்றாமல் ஒடிண்டே இருக்கணும்” என்று பிராத்தனை செய்வார். இப்படி தினமும் அவனுக்கு அப்பா சுலோகம் சொல்லிக் கொண்டே பிராத்தனை செய்வதைப் பார்த்து,” எதுக்கப்பா இப்படி எல்லாரோடு பேரையும் சொல்லறேள்” என்று கேட்டான்.

“தர்மம் பண்ற குடும்பம் நன்னா இருந்தாத்தானே ஊரும் நன்னாருக்கும்…நமக்கும் தர்மம் பண்ணனும்னு தோணும்..அதனாலதான் இப்படிச் சொல்லறேன்” என்றார். அந்த நல்ல பழக்கத்தை அன்று முதல் அவனும் கற்றுக் கொண்டான். இன்றும் கூட ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தாலும் அவன் எல்லோருக்குமாகத்தான் வேண்டிக் கொள்கின்றான்.

அவனது கிராமத்து வாழ்க்கையில் எத்தனை நல்ல மனிதர்களைப் பார்த்திருக்கிறான். அவர்களோடும், அவர்களது வம்சத்தினர்களோடும் பேசிப் பழகி இருக்கிறான். “ஆதிவராகன்..பூணலுக்கு சகஸ்ரபோஜனம் போட்டார் அவர் அப்பா முத்துராமலிங்க அண்ணாவி.. சகஸ்ர போஜனம்னா ஆயிரம் போருக்குச் சாப்பாடு போடுவா.. அவர் நெறையஅன்னதானம் பண்ணிருக்கார்…அவாத்துல எந்த ராத்திரிக்கு யாரு வந்து சாப்பாடு கேட்டாலும் போடுவா…அதுபோல R.S.A. குடும்பமும் அன்னதானம் பண்ணற குடும்பம்…அதனாலதான் அவாளோட பரம்பரை இன்னிக்கும் நன்னாருக்கா….நாமளும் நம்மால முடிஞ்ச தர்மம் பண்ணிடேருக்கணும்” என்று அவனுக்கு அப்பா இன்றும் தனது தொண்ணூறாவது வயதிலும் அவனிடம் சொல்லுவார். அவனது வாழ்க்கையில் அவனுக்கு அப்பாதான் ஹீரோ. அவரது நேர்மையும், எளிமையுமே அவனுக்குக் மனக்கண்ணாடி. அமுதசுரபி தீபாவளி மலருக்கு (2014) நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் கவிதை ஒன்று கேட்டார். தீபாவளி மலரில் அந்தக் கவிதையைப் படித்து வீட்டு அவனோடு பேசினான், நெடுநாட்களாக அவனை விட்டுக் காணாமல் போன நண்பன் இரா.முருகன். அந்த “என் அப்பா” தான் தொலைந்து போன அவன் நண்பனையும் அவனுக்குக் கவிதை மூலம் கண்டுபிடித்துக் கொடுத்தார்.

“என் அப்பா”
( மீ.விசுவநாதன்)

1 ஆற்றில் குளிக்க அழைத்துப்போய் நீச்சலுடன்
காற்றை அடக்கிநற் காயத்ரி- நாற்றை
மனதில் பதிந்திட வைத்தயென் அப்பா
எனதுள் உறையும் உயிர்.

2. சட்டைப்பைக் குள்ளே சலசலக்கும் காசெல்லாம்
சட்டெனக் காணாது சாய்ந்தந்த – விட்டத்தைப்
பார்ப்பார்! எடுத்த பயல்நான் அவர்மடியில்
நார்போல் கிடப்பேன் நரி.

3. கடுஞ்சொல் வசையாகக் கண்டிக்க மாட்டார்!
படும்கை தடவி, பதியும் – நெடிய
பகைமறக்கப் பாசத்தால் பண்பெனும் நல்ல
நகைபூட்டும் அப்பா நண் பன்.

4. அப்பாவின் சம்பளநாள் அக்காவுக் கும்எனக்கும்
எப்பவுமே கொண்டாட்டம்; அந்நாளை – இப்போதும்
எண்ணினால் அல்வாபோல் என்னுள் இனிப்பதனால்
கண்ணின் மணிஅப்பா காண்.

5. சாப்பாட்டு வேளை சரிசமமாய் உட்கார்ந்து
கூப்பாடு போடாமல் கொஞ்சம்நீ – ஆக்காட்டு,
என்றே பரிவாக இன்னமுது ஊட்டிவிட்ட
என் அப்பா என்றும் இறை.

“நன்னி சங்கரராமையர்”

amநன்னி சங்கரராமையர் மிருதங்கமும், காலாருமினியமும் நன்றாக வாசிக்கத் தெரிந்தவர். மிராசுதார். அவன் இருந்த தெருவிலேயேதான் அவரது வீடும் இருந்தது. பெரிய அகலமான நீண்ட வீடு அவருடையது. அந்த வீட்டின் வாசல் கதவுகள் அடைத்து அவன் பார்த்ததில்லை. வீட்டின் வாசலில் உள்ள அகலமான திண்ணையில் ஒரு தூணில் சாய்ந்து, இடுப்பில் சாவிக் கொத்து சகிதம் மகாலட்சுமி போல அமர்ந்திருப்பாள் சங்கரராமையரின் மனைவி மீனாக்ஷி அம்மாள். நடு வீட்டில் ரேழியில் ஒரு அழகான ஊஞ்சலில் தாம்பூலம் போட்டபடி மெல்ல ஆடிக்கொண்டிருப்பார் சங்கரராமையர். அவரது வீடு மூன்று பாகமாக இருக்கும். அதில் கிழக்கோரமாக இருக்கும் வீட்டில்தான் நிறைய மூலிகைச் செடிகளை, சிறு சிறு தொட்டிகளில் வளர்த்து வைத்திருப்பார். அந்த வீட்டின் மிகப் பெரிய ஒரு அறையில் தரையில் இருந்து மேற்சுவர் வரை மண்டை வெல்லம் மலைபோலக் கொட்டி வைத்திருப்பார்கள். அவனும் அவனுக்கு நண்பர்களும், முக்கியமாக சங்கரராமையரின் மகன் வயிற்றுப் பெயரனுமான “சங்கர ராமன்” என்ற “பிரபுவும்” அந்த “மண்டை வெல்லத்தை”ச் சுவரில் எறிந்து விளையாடும் பொழுது,” எலேய்…மேல பட்டுக்காதேங்கோ…பாத்து விளையாடுங்கோடா” என்றுதான் சங்கரராமையர் சொல்வாறே தவிர, குழந்தைகளைக் கடுஞ்சொற்கள் சொல்ல மாட்டார். நெல்லும், கரும்பும், நிலக்கடலையும், பசுக்கூட்டமும் நிறைந்த வீடு அது. மாட்டு வண்டியும், குதிரை வண்டியும் உண்டு. இரவில் அந்தக் குதிரை வண்டியின் இரண்டு பக்கத்திலும் விளக்குகள் பொருத்தி வருவதை தள்ளி இருந்து பார்த்தால் ” ஒரு தேவதை” குதித்துக் குதித்து வருவது போல இருக்கும்.

சங்கர ராமையருக்கு பழனியில் உள்ள ஒரு “சித்தர்” மூலிகை வைத்தியம் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதை அவர் நன்கு கற்றுக் கொண்டு “விஷக்கடி”க் கெல்லாம் மூலிகை மருந்து தந்து உடனேயே விஷத்தை இறக்கி விடுவார். மணிமுத்தாறு, பாபநாசம் மலையடிவாரத்தில் விஷப்பாம்பு கடிபட்ட மக்கள் பகலோ, இரவோ இவரைத் தேடித்தான் வருவார்கள். அவரின் வீட்டு அகலமான திண்ணையில் விஷக்கடி பட்டவரைப் படுக்க வைத்து, அவருக்கு மூலிகைச்சாறு பிழிந்து கொடுத்தும், கடிபட்ட இடத்தில் மூலிகையை வைத்தும் விஷத்தை இறக்கிக் குணப்படுத்துவதை அவன் பல முறை நேரில் பார்த்திருக்கிறான். மருத்துவத்திற்குப் பணம் வாங்க மாட்டார். “உங்கள் மனத்திருப்திக்கு எதேனும் கோவிலுக்கு செய்யுங்கள்” என்று சொல்வதையும் அவன் கேட்டிருக்கிறான்.

ஒரு முறை அவன் அவனுக்கு அப்பாவுடன் தொந்திவிளாகம் தெருவில் உள்ள மாமாத் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தான். இரவுச் சாப்பாட்டுக்குப்பின் அவனுக்கு அப்பா பக்கத்து வீட்டில் இருக்கும் L.M. சுந்தரம் ஐயர் வீட்டுத் திண்ணையில் மணிடாக்டர், சாமுவாத்தியார், வெங்காச்சம், ராமு (சீதாராமன் மாமாவின் தம்பி), சைலம் சித்தப்பா, LMS ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார். தண்ணீர் குடிக்க LMS அவரது வீட்டிற்குள் சென்ற பொழுது (LMS வீட்டின் பின்புறம் பெரிய தோட்டமும், வீட்டிற்குள் வருவதுபோல வாய்க்காலும், அழகான படித்துறையும் உண்டு.) அவரைப் பாம்பு கடித்து விட்டது. உடனே சைக்கிளில் அவனுக்கு அப்பாவும், ராமு மாமாவும் சென்று சங்கரராமையரை அழைத்து வந்தார்கள். அவர் வரும் வரை LMSன் உறவினரான சைலம் சித்தப்பா, LMSன் கடேசி மகன் ராமனைத்தன் தோளில் சுமந்து கொண்டு வீடு வாசலில் இருக்கும் “பிள்ளையாரை”ப் பிராத்தனை செய்தபடி பிரதக்ஷிணம் செய்து கொண்டே இருந்ததை அவன் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அந்த வீடே ஒரே பரபரப்பாக இருந்தது. விஷம் இறக்கிவிட்டு, “எல்லாம் சரியாயாசு…கவலைப்படாதேங்கோ…நம்ம புள்ளையாருக்கு ஒரு வடல் போடுங்கோ ” என்று உரக்கச் சொல்லியபடியே புறப்பட்டார். சைலம் சித்தப்பாதான் பிள்ளையார் கோவில் முன்பாகத் தேங்காய் வடலும் போட்டார்.

“ஆதிவராகப் பெருமாள் கோவிலுக்கு 1944ம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வடக்கு மாடத் தெரு, மேலமாடத்தெரு, தெற்கு மாடத்தெரு, சன்னதிதெரு அடைத்து பந்தல் போட்டிருந்தார்கள். அன்னதானப் பந்திகள் இந்த மாடவீதிகளில்தான் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி முதல் நாள் R.S.A சங்கர ஐயர், இரண்டாவது நாள் E.L. சங்கர ஐயர் (மதியம்) , R.S.A. காசி ஐயர், சஹஸ்ரநாம ஐயர்( சாத்து ஐயர்)(இரவு வேளை), மூன்றாவது நாள் வைத்தியப்பபுரம் ராமசுப்பையர் (மதியம் சாப்பாடு), இரவில் பட்டாம்பிச் சங்கர் ஐயர் அன்ன தானமும், கும்பாபிஷேகத்தன்று மதியம் அன்னதானம் சங்கரராமையரும், இரவில் பண்ணை சந்தரம் ஐயர் அரிசி உப்புமாவும் அன்னதானம் செய்தனர் என்று அவனுக்கு அப்பா தர்மம் செய்தவர்களைப் பற்றிச் சொன்னார். (பட்டாம்பிச் சங்கர் ஐயரின் மகன் வீரமணி அவனுக்கு ஒன்றாவது வகுப்பில் இருந்து பி.யு.சி. வரை வகுப்புத் தோழன். நெருங்கிய நண்பன்.)

வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிவராகப் பெருமாள் கட்டளைக் காரர்கள் நன்னி சங்கரராமையரும், அவரது சகோதரர் வேங்கடராமையரும்தான். அன்று மாலை சொர்கவாசல் தீபாராதனை ரொம்பவும் அழகாக இருக்கும். (இந்த ஊரில் சொர்கவாசல் திறப்பு மாலையில்தான் நடைபெறும் வழக்கம் உள்ளது.) ஒவ்வொரு வருடமும் ஒருவர் மாற்றி ஒருவர் கைங்கர்யம் செய்து வருகின்றனர். இன்றும் அந்த பக்திப் பணியை அவரது சந்ததியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். சங்கர ராமையரின் மூத்த மகன் சங்கரன். அவர் அவனுக்கு அப்பாவுக்குப் பள்ளித் தோழன். அப்பாவின் நண்பர். நல்ல நகைச் சுவையாக அவனிடம் பேசுவார். வெள்ளை மனம். அந்தக் காலத்திலேயே பள்ளிக்கு நூறு ரூபாய் நோட்டு கொண்டு வருவார் என்று அவனுக்கு அப்பா சொல்வதுண்டு.

“ஏய்..சுந்தரம் நீ ஏழைப் பையன்..நன்னாப் படிக்கணும்..எங்காத்து சங்கரனுக்கு அவ தாத்தா சொத்து இருக்குனு ஊரைச் சுத்தறான். நீ அவன் கூடச் சுத்தாதே” என்று கள்ளமில்லாமல் அவனுக்கு அப்பாவிடம் சங்கரராமையர் சொல்வாராம். அவனுக்கு அப்பா இதைச் சொல்லி அந்தப் பெரியவரின் குணத்தை மெச்சுவார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி. அவனுக்கு நண்பன் பிரபுவின் தந்தை. அவர் ஊரிலேதான் இருந்தார். தனது எண்பது வயதுக்குமேல் சென்ற வருடம் ஒருநாள் ஆலடியூரில் அவர்களுக்கு இருந்த வயற்காட்டிற்கு அருகில், புதரில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். ஊரெல்லாம் தேடி மறுநாள் கண்டு பிடித்தனர். “பா.கா” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப் பட்டவர். தன் தந்தை இறந்த விதத்தை நண்பன் பிரபு அவனிடம் வருத்தமுடன் சொன்னான். அவன் வருத்தப் பட்டான். அந்த நிகழ்வை, அவரது நினைவை அப்போதே ஒரு கவிதையாகச் செய்தான். அவனால் அவரை அதில் வாழச் செய்ய முடிந்தது.

“மௌன மொழி”
(மீ.விசுவநாதன்)
(19.12.2014)

“கீழ்வானம் கிட்டக் கிடக்கிறதாய் எண்ணியே
தாழ்வாரம் தொட்ட தனிமாடம் விட்டங்கு

தெருவழி ஓடியே திட்டமிலாப் போக்கில்
ஒருவழியாய் எங்களது ஊரின் அழகாம்

பொதிகை மலைச்சாரல் பூந்தளிர் கொஞ்சும்
பதிமணி முத்தாறு பாபநாச நீரில்

குளித்தும் தெளித்தும் குதூகல மிட்டும்
களித்த பொழுதுகள் கற்பனை கொள்ளாது !

காட்டி லலையும் கரடியும் யானையும்
கூட்டமா யோடுகிற புள்ளிமான் துள்ளலும்

சின்னக் குருவியும் சேதி சொல்லவே
என்னிடம் தாவிவரும் சிங்கவால் கொண்ட

குரங்குகளும் ; வண்ணத்துப் பூச்சி வகையாம்
அரங்குகளும் எத்தனை ஆனந்தம் அள்ளியே

தந்திடும் ; பச்சைத் தரமான தாவரங்கள்
மந்திரம் சொல்லி மனதை வருடுமே !

சிந்தனை கொஞ்சம் சிதறித்தான் போகிறது !
அந்தவோர் நாளில் அருமையாம் நண்பனின்

அப்பா , அவரும் அதிகாலை வேளையில்
இப்படிதான் காலாற எங்கோ நடந்துபோய்

தப்படியாய் மெல்லத் தனிவழி சென்றங்கு
தொப்பென வீழ்ந்தே தொலைந்தவர் போனார் !

“நினைவிழப்பு , நெஞ்சில் நிலைகவலை” கூடி
அனைத்தும் அந்த அடிமனதில் துள்ள

சிறுவயதின் எண்ணமே சிந்தை யிருக்க
அருவிக் கரைதேடி ஆசையாய்ச் சென்று

ஒருவரும் காணாமல் ஓர்நாள் மறைந்தத்
திருமுகம் எண்ணி அருவியின் ஓசையில்

என்னை மறக்கிறேன் ; என்றும் இருக்கும்
அன்னை இயற்கையை ஆசையாய்க் கேட்கிறேன் !
இன்னும் பிறவி இருந்தாலு(ம்) அம்மாவுன்
சின்ன மடிதா சிறிது”

மகள்களும், அவர்களது சந்ததியரும் இன்றும் நன்றாக வாழ்கின்றனர். மூன்றாம் மகன் சாமிநாதன். திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தலைமைக் கணக்கராக இருந்து ஓய்வு பெற்றவர். நல்ல பாடகர். பி.பி.எஸ். பாடல்களை ரசித்துப் படக்கூடியவர்.

இளைய மகன் சந்திரசேகர் என்ற “சந்துரு”. நல்ல இசைக் கலைஞன். பேச்செல்லாம் நகைச்சுவை மின்னும். அவர்களைப் பற்றி பின்பு கூறுகிறேன்.

(28.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

படங்கள் உதவி   K.V,. அன்னபூர்ணா . நன்றி

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here