வாழ்வாவது மாயம்
–சு. கோதண்டராமன்.
வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் வேதத்திற்கும் தமிழ்த் திருமுறைகளுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு காணப்படுகிறது.
வேதம் மனித வாழ்க்கையின் இனிய பகுதிகளைக் கொண்டாடுகிறது. திருமுறைகள் வாழ்க்கையின் இருண்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
வாழ்க்கையைத் துறந்து சன்னியாசி ஆவது வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்கு அனுபவித்தார்கள். பிள்ளை குட்டிகளுடன், பேரன் பேத்திகளுடன் சௌக்கியமாக வாழ்வதில் ஆனந்தம் கண்டார்கள். வாழ்க்கை துன்பமயமானது என்ற புலம்பல் அவர்களிடம் இல்லை. அதற்காக, அவர்கள் வாழ்வில் துன்பமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் மனம் உடைந்து இந்த வாழ்க்கையே மோசம், இதிலிருந்து விடுபடவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. சாவைக் குறித்து அவர்கள் அஞ்சவில்லை. செத்தபின் என்ன ஆகிறோம் என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. முற்பிறவி, மறுபிறவி என்ற கருத்துருக்கள் அவர்கள் அறியாதவை. அவர்கள் இயற்கை அழகை ரசித்தார்கள். இயற்கையின் எழில் வளத்தை ரசித்து, அதனால் அடையும் ஆனந்தத்தையே செல்வம் என்று கருதினர். இறைவனைச் சரணடைவதே துன்பம் நீக்க வழி என்று கருதினர்.
திருமுறைகளில் இல்லறத்தை விடத் துறவறம் மேலானது என்ற கொள்கை போற்றப்படுகிறது. வாழ்க்கை துன்பமயமானது, அதிலிருந்து விடுதலை பெறவேண்டும், இறந்த பின் மீண்டும் பிறவா நிலையை அடையவேண்டும், உடல் இழிவானது, நமது புலன்கள் நமக்கு வஞ்சனையைச் செய்பவை, அவற்றை அடக்கி வாழவேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.
இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன?
இடைக்காலத்தில் ஏற்பட்ட சமண சாக்கிய சமயங்கள் மக்களிடையே மறுபிறவி, கர்மாக் கொள்கைகளைப் பரப்பின. பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என்ற கருத்தை வலியுறுத்திப் பிரசாரம் செய்தன. இச்சமயங்களைத் தழுவியவர்கள் மட்டுமில்லாது எல்லோரையுமே இந்தக் கொள்கைகள் கவர்ந்தன. தேவார மூவர் மற்றும் மணிவாசகர் பாடல்களில் இவற்றின் அழுத்தமான தாக்கத்தைக் காணலாம். உடலினை முன்னம் இழுக்கென்றிருந்தேன், அந்த அறியாமையிலிருந்து விடுபட்டேன் என்று திருமூலர் சொல்கிறார். ஆடற்பெருமானின் அழகைக் காண்பதற்காக மீண்டும் பிறக்கவும் ஆயத்தம் ஆகிறார் அப்பர். ஆனால் அவரும், சம்பந்தரும், சுந்தரரும், மணிவாசகரும் உடலை இழுக்கென்று கருதினர். அதிலிருந்து விடுபட்டுப் பிறவா நிலை அடைவது தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதினர்.
சுந்தரர் தேவாரத்தில் வாழ்க்கை துன்பமயமானது என்ற கருத்து மற்றவர்களை விட மிகுதியாகக் காணப்படுகிறது. அவற்றில் சில இடங்களைப் பார்ப்போம்.
திருஎதிர்கொள்பாடித் தேவாரத்தில் சுந்தரர் கூறுகிறார்-
இவ்வுலகில் மிகச் செல்வாக்குடன் வாழ்கிறோம் என்று இறுமாப்பு அடையவேண்டாம். இறந்தபின் இவை பயன்படா. நற்கதி அடையவேண்டும் என்றால் இறைவனைத் துதியுங்கள்.
மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்பதடைவோமே.
பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி. இறந்த பின் அடையவேண்டிய பிறவாநிலைக்கு ஆயத்தம் செய்துகொள்ளுங்கள். மனை வாழ்க்கை துயரமானது. இதிலேயே கிடந்து உழல வேண்டாம்.
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
நமது ஐம்புலன்களும் நமக்கு வஞ்சனையைச் செய்கின்றன. எனவே அவற்றின் வழிச் செல்லாமல் இறைவனை நாடி உய்வு பெறுங்கள்.
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே
யாவராலும் இகழப் பட்டு இங்கு அல்லலில் வீழாதே
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
மனை வாழ்க்கையில் இன்பம் இருக்கிறது என்று ஏமாந்து விடாதீர்கள். அதில் துன்பமும் உண்டு. எனவே அதைக் கைவிட்டு இறைவனடி சேருங்கள்.
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்ன மோழை மையான் முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை அடிக ளடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
இப்பிறவியில் நமக்கு உறவினராய் வாய்த்தவர்கள் நமக்கு மறு உலகு அடைவதற்கு எந்த வகையிலும் உதவ மாட்டார்கள். எனவே அவர்களைக் கைவிட்டு இறைவனை நாடுங்கள்.
தந்தை யாரும் தவ்வை யாரும் எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி வான நெறிகாட்டுஞ்
சிந்தை யீரே நெஞ்சி னீரே திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய். இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய். ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே; அதன் பொருட்டு, விரைந்து அறத்தைச் செய்யுங்கள்.
வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்
கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே.
உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே, இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவதாதலை அறிகின்றிலீர்; குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்றுவன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் செய்ய முடியுமோ? எனவே இப்பொழுதே, `திருக்கேதாரம்` என்று சொல்லுஙகள்.
பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவே
அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு
கிறிபேசி நின்றிடுவார் தொழு கேதாரமெனீரே.
சிற்றின்பத்தில் மூழ்கி இராமல் யமன் வருமுன் இப்பொழுதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழையுங்கள்.
வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதே
நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி
ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே
கீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே.
இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையே செய்கிறீர்களே, அப்பொதி பயனற்று ஒழிவதை அறியீரோ? அறிவை இழந்து நீவிர் குழியில் வீழ்வது, நும் வினைப்பயனேயாம். இதனை விடுத்து, சிவ பெருமானது இடம் திருக்கேதாரத்தைத் துதிமின்கள்.
பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக்
கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே.
தேடிச் சோறு நிதம் தின்று ஒரு நாள் கூற்றுக்கு இரையாகும் வேடிக்கை மனிதரைப் போல நான் வீழக்கூடாது என்ற பாரதியின் பாடலை நினைவூட்டும் ஒரு பாடலில் சுந்தரர் கூறுகிறார்.
உலகியலில் நின்றோர் இறக்கும்போது மற்றவர்கள் அவரைப் பற்றி, `நல்ல துணைவியை மணந்தார்; இல்லற நெறியிலே ஒழுகினார்; நன்றாக உண்டார்; உடுத்தார்; மூப்படைந்தார்; இறந்தார்` என்று சொல்கிறார்கள். அடியேன் அத்தகைய சொல் பெற விரும்பவில்லை. நற்கதி அடைவதற்கான ஒரு வழியினைச் சொல்லியருள்.
கல்வாய் அகிலுவங் கதிர்மா மணியுங் கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும் நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன் தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
சமண சாக்கிய சமயங்களுக்கும் சைவத்துக்கும் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் வேறுபாடு இல்லை. ஆனால் சமண சாக்கிய சமயங்கள் துன்பத்தை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் என்று போதித்தன. சைவமோ, வேதக் கருத்தை ஒட்டி, துன்பத்தைத் தீர்க்க ஒரே வழி இறைவனைச் சரணடைதல் என்றது.
வேதம்+ சமணம்= சைவம் என்று சொல்லலாமா?
படம் உதவி: imgsoup.com