Blog

  • ஓலைத்துடிப்புகள் (7)

    கவிஞர் ருத்ரா

    “தி இந்து தமிழ்” நாளிதழில் (22/5/2015) நம் தமிழின் தொன்மையைக் குறிக்கும் செய்தி அடங்கிய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது.திரு.ஒய்.ஆண்டனி செல்வராஜ் என்பவர் அரிய தகவல்களுடன் புகைப்படத்தோடு அக்கட்டுரையை எழுதியிருக்கிறார்.

    பழனி அருகில் கோடைக்கானல் மலைப்பகுதியில் “கோம்பைக்காடு” எனும் இடத்தில் சுமார் 4000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை நம் தொல் இயல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.பாறை ஓவிய ஆராய்ச்சியாளர்கள் திரு.நாராயணமூர்த்தி முனைவர் கன்னிமுத்து,வாஞ்சிநாதன் ஆகியோர் அப்பாறை ஓவியத்தின் நுட்பத்தை நன்கு விளக்கியுள்ளனர்.தொல் தமிழர்களின் வேட்டையாடும் மற்றும் போர் புரியும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக

    “ஐந்து விரல் விரித்த நிலையில்”

    ஒரு கையின் ஓவியமும் அருகில் ஒரு நீண்ட கோடும் அருகில் சூலம் போன்ற கருவியும் வரையப்பட்டிருப்பதாக (சிவப்பு நிறத்தில்) விவரித்திருக்கிறார்கள்.இது கி.மு 2000 ஆண்டுக்கு முன் உள்ள‌ தொன்மைக்காட்சி ஆகும்.இன்னும் கி.மு 4000 ஆண்டுகளுக்கு முன் மொஹஞ்ச தாரோ ஹரப்பா முத்திரைகளில் ஆழ்நிலை தவ நிலையில் உள்ள உருவம் பற்றிய குறிப்பு தமிழ் ஒலிப்பில் இருப்பதாக புதிர் அவிழ்ப்பு (டி சைஃபரிங்)செய்யப்பட்டிருக்கிறது.இயற்கையோடு சிவணிய(பொருந்திய)தமிழனே சிவண் ஆகி சிவன் ஆகி இருப்பானோ என்று நான் (என் சொந்த கருத்து)எண்ணுகிறேன்.அப்படியொரு தலவனே சிவன் ஆகியிருப்பான்.சிவண் என்ற சொல்லே திரிந்து சிரவண் ஆகி தாடி முடி சடையுடன் முனிவன் ஆகியிருக்கலாம். (புலி வேட்டையாடி புலித்தோலை அரைக்கசைத்து பாம்புகளை பழக்கி ஆபரணமாய் சூடிய சிவன்)

    அதன் தொடர்ச்சியானபண்டைய தமிழ‌னின் தொல்லிய சிந்தனை வடிவங்கள் பிற்றை நாட்களில் சித்த வடிவங்கள் ஆகின. இங்கு நான் பெரிதும் கவரப்பெற்றது அந்த ஓவியங்கள் நம் தொல் தமிழ் இனத்தவரான பளிஞர்களால்(பளியர் அல்லது பழையர்) உருவாக்கப்பட்டிருக்கின்றன‌ என ஆய்வாளார்கள் கருதும் செய்தியே ஆகும்.

    அத்தகைய பழைஞர் அல்லது பளிஞர் தலைவன் தன் காதலிக்கு “இரவுக்குறியாக”இந்த பாறை ஓவியத்தையே அடையாளமாகக்காட்டி களவு (காதல்)செய்ததாக விரித்த கற்பனையையே இங்கு “புழைபடு பெருங்கல்” என்ற தலைப்பில் சங்கநடைக்கவிதையாய் ஆக்கியிருக்கிறேன்.

    மேலே குறிப்பிட்ட கட்டுரையாளர் அவர்களுக்கும் “தி இந்து தமிழ்” ஆசிரியருக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

    புழைபடுப் பெருங்கல்
    ================================================

    oolaisuvadi

    எல்லே கனைகுரல் எரி சொரிந்தாங்கு
    சூர்தரு கோட்டின் முப்பால் ஓவு
    முகடு தோய் மன்ற முளி மள்ளல் நூரி
    பழைய சான்ற பழைஞ காண்தி.
    என் ஐம்பால் தோகை அணிகொள வருடி
    அருள வந்து ஓம்பல் ஆற்றுதி.
    கடுவிரல் ஐவிரல் அறை அறைந்தன்ன‌
    நின்ற ஒண்குறி அளையுனள் ஆகி
    வள்ளிய நிலனும் வன்கல் மன்றும்
    வருத்தியும் உன் வெள்ளி தோன்றுபு
    காணிய எதிர்க்கும் மெய் அழி விதிர்க்கும்.
    பாறைக்கோட்டின் பனிநிறை குறியில்
    நிலவும் கண்சாஅய் மடிகொளத்தோயும்
    வானின் மங்கைக்கும் இடுகுறி இட்டு
    யாங்கண் ஒளித்தனை?வருதி விழிமுன்.
    புழைபடுப் பெருங்கல் பொள்ளும் உருவும்
    தழைபடு நுண்ணிறத் திண்மைக்கவினும்
    நுவலாநின்ற ஊழ்ப்பாடு ஊரே அறியும்.
    என்னில் குழைத்த என் உயிர் வண்ணம்
    நின்னை யூடி என்பு மீமிசை இன்னும் உள்ளில்
    கூரிடும் குருதிச்சோறும் கூர்த்த கூறிடும்.
    எற்றுக்கு பின் விசும்பு நீவு அணங்கு ஈண்டு
    குறி ஓவு தழீஇ கொடுங்காட்சி மல்கும்?

    ==================================================

    பொழிப்புரை

    எல்லே கனைகுரல் எரி சொரிந்தாங்கு
    சூர்தரு கோட்டின் முப்பால் ஓவு
    முகடு தோய் மன்ற முளி மள்ளல் நூரி
    பழைய சான்ற பழைஞ காண்தி.

    குறிஞ்சிகாட்டில் இரவுக்குறி எனும் சந்திப்பு அடையாளத்தில் நின்று கொண்டு தவித்துக்கொண்டிருக்கும் தலைவியின் கூற்று இது.

    காலைக்கதிரவனின் ஒளியில் அக்கதிர்களின் வெப்பம் மிகுந்த தீயே மழை பொழிவது போலவும் விளங்கும் அந்த மலைக்காட்டிலே அச்சம் தரும் கோடு போன்ற ஓவியம் மூன்று கவடுகளாய் (சூலம்) தெரியும்படி பாறைமேடுகள் நிறைந்த மலியின் தலவனே.உன் வலிமை இழைந்து பறைசாற்றி பகைவர்களை சிதறி ஓடச்செய்யும்.அத்தகைய பழமை சான்ற வேட்டைவீரத்தின் பழைஞர் தலைவனே என்னைக்காண விரைவாயாக‌

    என் ஐம்பால் தோகை அணிகொள வருடி
    அருள வந்து ஓம்பல் ஆற்றுதி.
    கடுவிரல் ஐவிரல் அறை அறைந்தன்ன‌
    நின்ற ஒண்குறி அளையுனள் ஆகி
    வள்ளிய நிலனும் வன்கல் மன்றும்
    வருத்தியும் உன் வெள்ளி தோன்றுபு.
    காணிய எதிர்க்கும் மெய் அழி விதிர்க்கும்.

    ஐவகையாய் அழகுபெற என் கூந்தல் வகிடு பிரித்து கிடக்கும் நிலையில் அன்புடன் வந்து அவற்றைக்கோதி காதலுடன் ஆறுதல் காத்து அருள்வாயாக.அதோ அந்த பாறையில் ஐந்து விரல்களைக் கொண்டு பளீரென அறைந்தாற்போல் தோன்றும் அந்த ஓவியத்தைக்குறியாக கொண்டு இங்கு நின்று அலைவுற்றுக்கொண்டிருக்கிறேன்.வள்ளிக்கிழங்கு நிலத்தில் வேரோடி நெருடல் செய்யும்.கடுமை மிக்க கற்களின் மலை மேடுகள் என்முன்னே எதிர்ப்படும்.இத்துயரங்களின் இடையே விடிவெள்ளி போல் தோன்றி நீ வருவாயாக.உன்னைக்கண்டு களிக்கும்வரை என் உடலின் அழகு நலன் சிதைவுற்று மெய் நடுங்குவதைகாண்.

    பாறைக்கோட்டின் பனிநிறை குறியில்
    நிலவும் கண்சாஅய் மடிகொளத்தோயும்
    வானின் மங்கைக்கும் இடுகுறி இட்டு
    யாங்கண் ஒளித்தனை?வருதி விழிமுன்.

    பாறை ஓவியத்தின் கோடுகள் வெம்மை நிறைந்து தகித்தாலும் நம் காதல் சந்திப்புக்குறி காட்டுவதால் குளிர்ந்து அகம் களிக்கச் செய்கிறது.இதில் நிலவுகூட வந்து கண் உறங்கி உறவாடும் போல் இருக்கிறது.அதனால் இந்த வானம் என்ற அந்த பரந்த மங்கைக்கும் இந்த இரவுக்குறி காட்டினாயா என்ன? இவையெல்லாம் செய்து விட்டு நீ எங்கு ஒளிந்திருக்கிறாய்.உடனே என் கண் முன் வந்துவிடு.

    புழைபடுப் பெருங்கல் பொள்ளும் உருவும்
    தழைபடு நுண்ணிறத் திண்மைக்கவினும்
    நுவலாநின்ற ஊழ்ப்பாடு ஊரே அறியும்.

    பிளவு பட்ட மலையிடுக்குகளில் அகன்ற பாறையில் செதுக்கிய அல்லது கீறல் செய்த ஓவிய வடிவங்கள் நுட்பமான செய்திகள் அடங்கிய சில இலை தழைகளின் வண்ணங்கள் குழைத்து செய்யப்பட்டவை.அதனால் அவை காலத்தால் அழியாத உறுதியான‌ எழில்நலம் கொண்டவை.அவை பறை சாற்றும் தொன்மைச்சான்றுகள் பற்றி இந்த ஊரால் எப்போதும் அறியப்படும் தன்மையுடையன.

    என்னில் குழைத்த என் உயிர் வண்ணம்
    நின்னை யூடி என்பு மீமிசை இன்னும் உள்ளில்
    கூரிடும் குருதிச்சோறும் கூர்த்த கூறிடும்.
    எற்றுக்கு பின் விசும்பு நீவு அணங்கு ஈண்டு
    குறி ஓவு தழீஇ கொடுங்காட்சி மல்கும்?

    நீ என்னைக்குழைத்து என் உயிர்வண்ணம் பூசிய‌ ஓவியமாகத்தான் இதனைக்காண்கிறேன்.உன்னை ஊடுருவி எலும்புக்குள்ளும் உறைந்து அதற்கும் மேலாய் உன் உள்ளமும் புகுந்து பிளந்து இரத்தத்தின் சத்துக்குள்ளும் நிலைகொண்டு நங்கூரம் இட்டு உன் எண்ணக்கூறுகளில் விரவி நிற்பேன்.அப்படி இருக்க வானம் முழுதும் வட்டமிடும் இந்த பேய்த்தழுவல்கள் எப்படி இந்த குறியில் வந்து படர்ந்து நின்று கொடிய காட்சிகளை மருட்காட்சிகளாய் என் முன் காட்டி நிற்கும்? அவை ஒழிந்து மறையட்டும்.

    ================================================================================

    Share
  • உணவை வீணாக்காதீர்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சிறு வயதிலிருந்தே எங்கள் தந்தை எங்கள் அனைவரையும் உணவை வீணாக்காமல் இருப்பதற்கு நன்றாகப் பழக்கி இருக்கிறார்.  தட்டில் வைத்ததை முழுவதுமாகச் சாப்பிட்டுவிட வேண்டும் என்பார்.  இதற்கு நன்றாகப் பழகிப் போயிருந்த எனக்குக் கல்லூரி விடுதியில் சில மாணவிகள் தாறுமாறாக உணவை வீணாக்கும்போது மிகவும் எரிச்சலாகவும் வருத்தமாகவும் இருக்கும்.  அதிலும் இந்தியாவில் பலர் அவர்களுக்கு அடிப்படைத் தேவையான உணவு இல்லாமல் இருக்கும்போது இவர்கள் இப்படி உணவை வீணாக்குகிறார்களே என்று மிகவும் மனவேதனை ஏற்படும்.  அதிலும் பணம் படைத்த சில மாணவிகள் வேண்டுமென்றே உணவை வீணடிப்பதைப் பார்க்கும்போது இவர்களுக்குக் கடவுள் என்ன தண்டனை வழங்குவார் என்று எண்ணத் தோன்றும்.  என் சக மாணவி ஒருத்தி இவள் சிறு பிள்ளையாக இருக்கும்போது வீட்டில் இவள் தட்டில் எதையாவது மீதிவைத்தால், அவளுடைய தாய், ‘நீ இப்படிச் செய்தால் நீ இறந்து மேலுலகம் போன பிறகு நீ இப்போது தட்டில் வீணாக்குவதை எல்லாம் சேர்த்துவைத்து கடவுள் உன்னை அப்போது சாப்பிடச் சொல்லுவார்’ என்று கூறுவாராம்.  இதைக் கேட்டு இன்னும் சில பெற்றோர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று சந்தோஷமாக இருக்கும்.  தட்டில் உள்ள எல்லாவற்றையும் வழித்துச் சாப்பிட்டால் வசதியில்லாதவர்கள்தான் இப்படிச் செய்வார்கள் என்று இந்தியாவில் ஒரு தவறான எண்ணம் பல பேரிடம் உண்டு.  யார் என்ன நினைத்தாலும் சரி வீட்டிலும் வெளியிலும் நான் உணவை வீணாக்குவதே இல்லை.  இந்தப் பழக்கம் அப்பா நான் சிறு பிள்ளையாக இருந்தபோதே கற்றுக் கொடுத்ததால் எளிதில் என்னை விட்டுப் போகாது.

    எதையும் வீணாக்கும் அமெரிக்காவில் அவர்கள் உணவை வீணாக்குவதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  அமெரிக்காவில் உணவை வழித்துச் சாப்பிட்டால் வசதியற்றவர்கள் என்று யாரும் நினைப்பதில்லை.  இங்கு உணவிற்கா பஞ்சம்?  உணவு வகைகள் மிகவும் மலிவாகக் கிடைக்கின்றன.  யாரும் எளிதாக வயிறாரச் சாப்பிடலாம்.  Delicacies என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த (இவற்றையும் நான் சிறப்பான / சத்தான உணவுகள் என்று அழைக்க மாட்டேன்) உணவுகள் வேண்டுமானால் எல்லோருக்கும் கிடைக்காமல் இருக்கலாம்.   அமெரிக்காவில் வேறு காரணங்களுக்காக உணவை வீணடிப்பார்கள்.  என்னோடு வேலைபார்த்த ஒருவர் மதிய உணவை வெளியில் வாங்கிக்கொண்டு வருவார்.  பாதிக்கு மேல் குப்பையில் கொட்டுவார்.  ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் ‘நிறையக் கொடுக்கிறார்கள்.  என்னால் அத்தனையையும் சாப்பிட முடியவில்லை’ என்பார்.  ‘அப்படியென்றால் வீட்டில் நீங்கள் தயாரித்ததைக் கொஞ்சமாகக் கொண்டுவரலாமே’ என்றால் அப்படியும் தன்னால் செய்ய முடியாது என்பார்.  ‘மீதியுள்ளதை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமே’ என்றால் அதையும் செய்ய முடியாது என்பதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுவார்.  ‘இந்தியாவில் எத்தனை பேர் உணவில்லாமல் வாடுகிறார்கள்’ என்றால் ‘நான் இங்கு உணவை வீணாக்காமல் இருந்தால் அவர்களுக்கு உணவு கிடைத்துவிடுமா என்ன?’ என்று குதர்க்கம் பேசுவார்.  அமெரிக்காவில் விளைவிப்பதில் எத்தனை சதவிகிதம் வீணாகிறது, உணவுப் பொருள்கள் விற்கும் கடைகளில் எத்தனை சதவிகிதம் வீணாகிறது, வீடுகளில் எத்தனை சதவிகிதம் வீணாகிறது என்று பல புள்ளிவிபரங்கள் கொடுப்பார்கள்.  ஆனால் உணவை வீணாக்கக் கூடாது என்ற ஞானோதயம் அமெரிக்காவில் எத்தனை பேருக்கு வந்திருக்கிறது என்று தெரியவில்லை.

     ana

    சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் செய்தித்தாளில் வந்த செய்தி என்னை மிகவும் வாட்டியது.  பால் உற்பத்தியாளர்கள் தங்களுடைய பாலுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை என்பதால் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, பாலைப் பெரிய சாலைகளில் கொட்டினார்களாம்.  இவர்களால் எப்படி இப்படிச் செய்ய முடிந்தது?  இப்போது மறுபடி ஈரோட்டிற்கு அருகில் ஐம்பது லிட்டர் பாலை சாலையில் கொட்டியிருக்கிறார்கள்.  அப்படிக் கொட்டிய பாலின் மேல் செருப்புக் கால்களோடு நின்றுகொண்டிருக்கிறார்கள்.  பாலில் மனிதனின் உடல்நலனுக்குத் தேவையான பல சத்துக்கள் இருக்கின்றன.  அதனால்தான் பாலை அமிர்தம் என்கிறோம்; அதை நமக்கு வழங்கும் மாடுகளை வணங்குகிறோம்.  நாம் மாடுகளுக்குக் கொடுக்கும் தீவனத்தை அவை பாலாக மாற்றி நமக்குக் கொடுக்கின்றன.  அதை இப்படி வீணாக்கலாமா?  பாலுக்குரிய விலையைக் கேட்பதற்கு இதைவிட வேறு வழியே அவர்களுக்குத் தெரியவில்லையா?  எத்தனை ஏழைகளுக்கு அதை இலவசமாகக் கொடுத்திருக்கலாம்.  அப்படிச் செய்திருந்தால் தங்கள் எதிர்ப்பைக் காட்டியது மாதிரி ஆகாதா?

    இன்னொரு இடத்தில் தக்காளிப் பழங்களுக்குத் தகுந்த விலை கிடைக்கவில்லையென்று அவற்றை வீதியில் கொட்டியிருக்கிறார்கள்.  இப்படி அவர்கள் கொட்டிய தக்காளியை ஏழைச் சிறுவர், சிறுமிகள் தரையிலிருந்து பொறுக்கியிருக்கிறார்கள்.  இது என்ன கொடுமை.  இப்படிச் செய்தால்தான் அவர்களால் தங்கள் கோபத்தைக் காட்டியிருக்க முடியுமா?  என் கவனத்திற்கு வந்தது இந்தியாவில் இந்த இரண்டு உதாரணங்கள் மட்டும்தான்.  இன்னும் இப்படி எத்தனை நடந்தனவோ?  நடக்கின்றனவோ?

    பாரீஸின் புறநகரைச் சேர்ந்த ஒரு முனிசிபல் கவுன்சிலர் இப்போது அங்கு உணவை வீணாக்குவதைத் தடைசெய்யும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, நான்கே மாதங்களில் இரண்டு லட்சம் கையெழுத்துகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களை உணவை வீணாக்குவதைத் தடைசெய்யும் சட்டத்தை அங்கு இயற்றும்படி செய்திருக்கிறார்.  குறிப்பிட்ட தேதிக்குள் உபயோகித்தால் நல்லது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுகளை தேதி முடிந்தவுடன் குப்பையில் எறிந்து விடுவார்கள்.  ஏழைகள் அவற்றை குப்பையிலிருந்து எடுத்து உபயோகித்துவிடக் கூடாது என்பதற்காக அவற்றில் விஷம் கலந்து குப்பையில் கொட்டுவார்களாம்.  இதையெல்லாம் தடைசெய்ய வேண்டும் என்று கூறும் இவர் தான் கல்லூரியில் படிக்கும்போது குறைந்த பணத்தில் தேவையான உணவு வாங்க முடியாமல் பட்டினியில் இருந்ததையும் அந்தச் சமயங்களில் தன்னால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்ததையும் சுட்டிக்காட்டி யாரும் அப்படிப் பட்டினியால் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்ததாகக் கூறியிருக்கிறார்.

    இவருடைய இந்த முயற்சியை சிலர் விபரம் தெரியாத ஒருவர் செய்யும் முயற்சி என்றும் இந்த இலட்சிய முயற்சி என்றும் வெற்றி பெறப்போவதில்லை என்றும் கூறி இவரை எள்ளிநகையாடுகிறார்களாம்.  ‘பட்டினி கிடப்பது என்றால் என்ன என்று எனக்கு நன்றாகத் தெரியும்.  அப்படி யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காகவே நான் கவுன்சிலராக ஆனேன்’ என்று கூறும் இவர் செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கப் போகும் உலக வறுமை ஒழிப்பு திட்டத்திலும் நவம்பரில் துருக்கியில் நடக்கப் போகும் பொருளாதார மாநாட்டிலும் டிசம்பரில் பாரீஸில் நடக்கப் போகும் சுற்றுச்சூழல் மாநாட்டிலும் தன் இயக்கத்தின் வேண்டுகோளை வைக்கப் போகிறாராம்.

    பிரான்சில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உணவை வீணாக்குவதைத் தடைசெய்யும் சட்டங்களைக் கொண்டுவருவது இவருடைய திட்டத்தின் முக்கிய இலக்கு.  இந்தியாவில் அமெரிக்காவில் வீணாக்கும் அளவிற்கு உணவை நாம் வீணாக்குவது இல்லை.  விருந்துகளிலோ ஓட்டல்களிலோ இலையில் வீணாக்கப்படுவதை சாப்பிடுவதற்கு முன்பு மனிதர்களே இருந்தார்கள்.  இப்போது அந்த அவலம் இந்தியாவில் இல்லை.  இன்றும் தெரு நாய்கள் அவற்றைச் சாப்பிட்டுவிடுகின்றன.  ஆனால் இந்தியாவில் வீணாகும் கொஞ்ச நஞ்ச உணவும் வீணாகாமல் பார்த்துக்கொள்வது நம் கடமையல்லவா?

    பாரீஸில் உணவு வீணாகுவதை தடுக்க முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் இவருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களைக் கூறுவோம்.  அவரைப் பின்பற்றி இந்தியாவிலும் நம்மால் முடிந்ததைச் செய்வோம்.

    Share
  • தேசியகீதத்தில் பிழை!

    -இரா. சந்தோஷ் குமார்

    கல்லறையும் மரணித்துவிட்டது
    இன்றைய விஞ்ஞானத்தில்
    மின் மயானம்!

    ***
    புகைப்பிடிக்கிறது பூக்கள்
    தேசிய நெடுஞ்சாலை நடுவில்
    அலங்காரச் செடிகள்!

    ***

    போதைப்பொருளாகக் காந்தி
    ஆயிரம்ரூபாய் விநியோகத்தில்
    மதிமயங்கியது வாக்குரிமை !

    ***
    அரசு கஜானா
    தள்ளாடும் போதெல்லாம்
    தாங்கிப்பிடிக்கிறார்கள்
    டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் !

    ***
    உலக மேதாவிகளின்
    சிந்தனைகளைத்
    தின்றுச் செழிக்கிறது
    நூலகத்து கறையான்கள் !

    ***
    பெரியாரின் கோட்பாட்டில்தானோ
    மனித ஜாதிகளைப்
    பேதமின்றித் தொடுகிறது
    கொசுக்களும் ஈக்களும்?

    ***
    சமூகப்பிணிகளைக் குணப்படுத்தத்
    தமிழிலக்கியத்தில் இல்லையோ
    மனித(ம்) லேகியம்?

    ***

    அகோரப்பசியெடுத்து காத்திருக்கிறது
    பகுத்தறிவு வெண்ணிலா
    அமாவாசை மானிடர்களே!
    கொஞ்சமேனும் கவனியுங்களேன்!

    ***

    தேசியகீதத்தில் கருத்துப்பிழை
    தமிழகத்தைக் காப்பாற்றவில்லை
    காவேரியும் முல்லைப்பெரியாரும்!

    ***

    கடைசியாக
    இன்றைய அரசியல்வாதிகள்
    கண்டுபிடித்து விடுவார்கள்
    இந்திய இறையாண்மையை
    அகராதியில்!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(74)

    -செண்பக ஜெகதீசன்

    உளரென்னும் மாத்திரைய ரல்லாற் பயவாக்
    களரனையர் கல்லா தவர். (திருக்குறள்-406: கல்லாமை)

    புதுக் கவிதையில்…

    கல்லாதவர்
    உலவும் மனிதர் என்ற
    ஒன்றைத் தவிர
    ஒரு பயனும் இல்லாதவர்
    ஒன்றும் விளையாத
    உவர் நிலத்திற்கு ஒப்பானவரே!

    குறும்பாவில்…

    இயங்கும் மனிதர் என்பதைத்தவிர
    கல்லாதவர் பயனற்றவர்,
    களர் நிலம் போல!

    மரபுக் கவிதையில்…

    எந்தப் பயிரைப் போட்டாலும்
       எதுவும் வராதே களர்நிலத்தில்,
    இந்தப் புவியில் மாந்தரிலே
       இருப்புக் கணக்கில் சேர்ந்ததல்லால்
    எந்தப் பயனும் இல்லாரே
       ஏதும் கல்வி கல்லாரே,
    மந்தப் புத்தி யுடையாரிவர்
       மண்ணில் பயனிலாக் களர்நிலமே!

     லிமரைக்கூ…

    மனிதனே கற்றுநீ கல்விப்பயிர் வளர்,
    கல்லாதவர் காட்சிக்கே மனிதன்,
    நிசத்திலவர் பயனிலா நிலமாம் களர்!

    கிராமிய பாணியில்…

    மண்ணுமண்ணு களர்மண்ணு
    மலட்டுநெலமாம் களர்மண்ணு,
    ஒண்ணுக்குமொதவாத ஒவர்மண்ணு
    ஒண்ணும்வெளயாத களிமண்ணு…

    ஒலகத்துல
    ஒண்ணும்படிக்காதவன் களிமண்ணு
    ஒண்ணுக்குமொதவாத ஒவர்மண்ணு,
    கணக்கில அவனும் மனுசந்தான்
    காரியம்பாத்தா ஒண்ணுமில்ல
    யாருக்கும் எந்தப் பயனில்ல…

    மண்ணுமண்ணு களர்மண்ணு
    மலட்டுநெலமாம் களர்மண்ணு!

     

    Share
  • திருஞானசம்பந்தர் குருபூஜை – வைகாசி மூலம்

    -மீ.விசுவநாதன்

    குளக்கரையில் அழும்பிள்ளை குரல்கேட்டுப் பக்கத்தில்
    அளப்பரிய அன்புடனே அன்னையவள் பார்வதியும்
    பளபளக்கும் ஜோதியெனப் பரவசத்தில் பால்கொடுக்க
    மளமளெனப் பாட்டிசைத்த மணிக்குழந்தை அடிபணிவோம் !

    பிள்ளையவன் தேன்சொல்லைப் பிரியமுடன் தான்கேட்டு
    அள்ளியள்ளி வரங்களையே அந்தசிவன் கொடுத்திடுவார் !
    நள்ளிரவில் சுடலையிலே நடனமிடும் நமசிவாயம்
    உள்ளிருக்கும் கவியன்றோ உயிர்ஞான சம்மந்தன் !

    Share
  • பெண் பாவின் வெண்பா

    எடுத்த செயலை எளிதாய் முடித்து
    அடுத்த பயணத்தை அன்றே – தொடுத்திட
    வாழவழி ஆக்கும் வழக்கத்தின் தூணாகும்
    வேழமுகன் தம்பிக்கை வேல்!

    படிக்கும் அறிவினால் பண்பை வளர்க்க
    படியும் சினமாம் பகையை- கடிதினிலே
    கூழாக்கிப் பேராசைக் கூட்டையும் வேரறுக்கும்
    வேழமுகன் தம்பிக்கை வேல்!

    பிறப்பாம் படைப்பு பிறவி பயனாம்
    மறக்க இயலா மழலை – உறவதன்
    தாழம்பூ வாசமொத்த தாளின் அழகன்றோ
    வேழமுகன் தம்பிக்கை வேல்!

    … நாகினி

    Share
  • சிகரம் நோக்கி – 7

    சுரேஜமீ

    peak111

    செல்வம்

    ‘’பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்

    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்

    காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்

    பாவிகள் அந்தப் பணம்.’’ – ஔவையார்

    நாம் அனைவரும் பள்ளியிலே படித்த ஒரு நல்வழிப் பாடல் இது. ஆனால் படித்ததோடு மறந்து விட்டோமோ என்று வாழ்க்கை நம்மைக் கேள்வி கேட்பது புரியாமலில்லை. நமது நாட்டின் இன்னமும் வறுமைக் கோட்டிற்குக் கீழே 22% மக்கள் வாழ்வதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அதாவது, சுமார் 27.5 கோடி மக்களுக்கு அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். ஆக, பொருளீட்டல் என்பது எவ்வளவு அவசியம் என உணர்ந்து, தம்மை வறுமையின் பிடியிலிருந்து விலக்க, ஒவ்வொரு குடும்பமும் முயற்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது? தவறேயில்லை.

    எதில் தவறு என்றால், ஒரு வரம்புக்கு மீறி சேர்த்து வைக்கும் பொருளில்தான் தவறு இருக்கிறது. அதற்காகத்தான், ஔவையார் அன்றே சொல்லி இருக்கிறார்,
    ‘’கூடு விட்டு இங்கு ஆவிதான் போனபின்பு யார் அனுபவிப்பார்?’ என வினாவினைத் தொடுத்து,

    பொருளீட்டலின் வல்லமையே, ஈட்டிய பொருள், இவ்வுலகில் பயனுற வாழ்தலில்தான் உள்ளது என்ற அறிவுரையை நமக்கு விட்டுச் செல்கிறார் என்றால் மிகையாகாது! நாம் செய்கிறோமா என்பதுதான் கேள்வி.

    வறுமையின் வலி அறிந்த நாமே, பொருள் வரும்போது, நம் தேவைக்கு மிஞ்சியதை வைத்து, அடுத்தவர் வறுமை போக்கவேண்டும் என எண்ணுவது கிடையாது. ஒருவருக்கு ஒன்றுக்கு மிகுதியான பொருள் ஏதிருந்தாலும், ஒரு நேரத்தில், ஒன்றைத்தான் அனுபவிக்க இயலுமே அன்றி, நிச்சயம் மற்றவை வெறும் காட்சியாகத்தான் இருக்க முடியும் என்ற உண்மை நமக்குப் புரிவதில்லை. மேலும், நம் சமூகம், நம்மை நிலை நிறுத்த முதல் தகுதியாகப் பார்ப்பது, நாம் சேர்த்துவைத்திருக்கும் பொருட்செல்வத்தைத்தான் என்பதும் வருத்தம் தரக் கூடிய செய்தி!

    இதிலிருந்து வெளிவர முயல்கிறோமா என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப நாம் நம்மைக் கேட்க வேண்டும்.

    சங்க இலக்கியத்தில், நறுந்தொகை அழகாகக் குறிப்பிடுகிறது
    ‘செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்!’ என்று!

    செழுங்கிளை என்றால் உறவுகள் எனும் பொருளில் கையாளப்பட்டிருந்தாலும், உறவுகளைத் தாண்டி, வருமையில் வாடும் எண்ணற்ற நபர்களையும் தாங்கி நின்றால், அதிலிருந்து பெறக்கூடிய மனமகிழ்வு என்பது அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும். உலகக் கோடீஸ்வரர்கள் அனைவரும் ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தோடு, தன்னைத் தொடர்பில் வைத்திருப்பதும், தன் வருமானத்தில் ஒரு பகுதியை, அதற்குச் செலவிடுவதும், அவர்தம் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுவதற்காக அன்றி, தன்னைப் பெருமைப் படுத்திக்கொள்ள அல்ல என்று நாம் அறிய வேண்டும்.

    என்னதான் சங்கப் புலவர்கள் சொன்னது நமக்கு விளங்கவில்லை என்றே எண்ணியபோதும், தற்காலத்தில் வாழ்ந்த கவியரசர் கண்ணதாசன் என்ன சொல்கிறாரென உங்களின் பார்வைக்கு;

    சொந்தமில்லை பந்தமில்லை ஏறி மிதிக்கும்

    தோள் மீது ஏறி நின்று காதை கடிக்கும்

    பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும்

    படுபாவி என்கின்ற பேரை கொடுக்கும்

    பணம் என்னடா பணம் பணம்

    குணம் தானடா நிரந்தரம்! – கண்ணதாசன்

    என்று அவருக்கே உண்டான எளிய தமிழில் அருஞ்சொல் எடுத்து, நம் செவிக்கு அறிவூட்டியிருக்கிறாரென்றால், இதை விட யார் சொல்ல முடியும், செல்வத்தின் நிதர்சனத்தை?

    இது ஒரு புறமென்றால், இன்னொரு புறம் எப்படியாவது மற்றவர்களுக்கு நம் வசதியைக் காட்டுவதற்காக, ஒரு மாயைச் செலவு செய்கிறோமே? அதைப் பற்றி என்றாவது ஏன் செய்கிறோம் என எண்ணிப் பார்த்ததுண்டா? மற்றவர்களுக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதில் அல்ல வாழ்க்கை; நமக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதில்தான் இருக்கிறது என்று உணர நாம் மறுக்கும் ஒவ்வொரு நாளும் துயரம் நம்மைத் தொடர்கிறது என்பது வாழ்க்கை கற்றுத் தரும் அனுபவப் பாடம்.

    இது பற்றியும் ஒரு பாடல் தமிழ்க்கிழவி சொல்கிறாள். தெரிந்து கொள்ளுங்கள் ; வாழ்க்கையைத் தெளிந்து கொள்ள!

    ஆன முதலில் அதிகஞ் செலவானான்

    மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை

    எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய

    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு!

    இதைவிட ஒரு கடுமையான பிரயோகத்தை, வாழ்க்கையில் வரவுக்கு மேல் செலவு செய்து தன்னை மிகைப் படுத்திக் காட்ட எண்ணுகிறவர்களுக்கு, எதிராக யாராலும் சொல்ல இயலாது.

    வார்த்தைகளைக் கவனியுங்கள். தனக்குக் கிடைக்கும் வருவாயை விட அதிகமாகச் செலவு செய்பவன், எப்படியேனும் தன்னைப் பொய்யாக நிலைநிறுத்த எண்ணும் வேகத்தில், விவேகத்தை இழந்து, கடன் பட்டேனும், அக்காரியத்தைச் செய்வதால், நேரக்கூடிய துன்பங்களைப் பட்டியலிடுகிறார் ஔவையார்.
    · தன்மானம் இழக்க நேரிடும்

    · புத்தி கெடும்

    · போகும் திசையெலாம் கெடுபெயர் ஆகும்

    · பிறப்பின் அருமை தொலையும்

    · நல்லவர்களெலாம் அவனை விட்டு விலகுவர்

    மலரும் ஒவ்வொரு நாளும் பல அனுபவங்களை நமக்குப் பாடமாக கற்றுத் தருகிறது. ஏனோ நம் உள்ளம் அதனை ஏற்க மறுத்து, மாய வலைக்குள் சிக்கித் தவித்துப் பின் வருந்துகிறது. பால்ய பருவத்திலேயே, பள்ளிகளில் பாடமாகக் கற்றுத்தந்த நல்ல நெறிகளையல்லாம் விடுத்து, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தால் என்ன நடக்கிறது என்பதன் உதாரணங்களே, நம் முன்னோர்கள் நமக்கு கோடிட்டுக் காட்டியது என்பதைத்தான், உங்கள் முன் வைக்கின்றேன்.

    கவியரசரும் எத்தனையோ பாடல்களில் வாழ்க்கைத் தத்துவங்களை வரியாக்கி இருந்தாலும், செலவு வரவை மிஞ்சினால் என்னவாகும் என ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். இதோ உங்களுக்காக.

    நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது

    ஐயா நிம்மதி இருக்காது!

    அளவுக்கு மேலே ஆசை வந்தா உள்ளதும் கிடைக்காது

    அம்மா உள்ளதும் கிடைக்காது! – கண்ணதாசன்

    செல்வத்தை தேவைக்கு மிகுதியாகச் சேர்ப்பதிலும், செலவுகளை வரவுக்கு மிகுதியாகச் செய்வதிலும் வரும் துன்பம் என்ன என்று அறிந்தால், வாழக்கை ஒரு இனிய பயணமாகும்.

    ஆகவே, நண்பர்களே நாம் சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

    செல்வம் வாழ்க்கையின் செழுமைக்கு அவசியம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், தேவைக்கு மிகுதியான செல்வத்தால், வாழ்வின் அருமை பாதிக்கிறது என்பதை உணராமல் இருப்பதுதான் துயரமான செய்தி. செல்வம் ஈட்டும் வலிமை உள்ளவர்கள், அந்த செல்வத்தில், தனக்குப் போக, மீதியை அடுத்தவர்களுக்கு பயனீட்டும் வழியில் செலவிட முன் வந்தால்,

    வறுமைக் கோட்டில்தான் இருக்கும் இந்தியாவில்;

    வாழ்மை மிகுந்திருக்கும்!

    செழுமை அதிகரிக்கும்!

    சேர்ந்து வாழும் பண்பிருக்கும்!

    அதேவேளை, நாம் எப்பொழுதும் திட்டமிட்டுச் செலவு செய்யவேண்டும். எந்த ஒரு செலவும் அதன் தேவையை நமக்கு நியாயப் படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் செய்யும் ஒவ்வொரு செலவும் நம்மைத் துன்பத்திற்கு இட்டுச்செல்லும் வாயிலாக இருக்கும் என்ற சிந்தனைத் தெளிவோடு இருந்தால்,

    சிகரம் நோக்கிச் செல்லும் படிக்கட்டில் மற்றொன்றில் நம்மைச் செதுக்கிவிட்டோம் என்ற பெருமையோடு நடைபோடலாம்…….

    தொடர்ந்து சிந்திப்போம்!

    அன்புடன்
    சுரேஜமீ

    —————————————————————————————————

    Share
  • கதையல்ல நிஜம் …

    –மாதவன் ஸ்ரீரங்கம்.

    டாக்டர் அவனை விசித்திரமாகப் பார்த்தார்.

    “என்ன பண்றீங்க?”

    “பேங்க்ல அக்கவுண்டன்ட்டா இருக்கேன் டாக்டர்”

    “எப்பயிருந்து இது மாதிரி தோணுது உங்களுக்கு?”

    “தோணலை டாக்டர். நடக்குது. சின்னச்சின்னதா நெறைய சம்பவங்கள். என்னோட வேலையை வச்சு ஒரு கதை எழுதினேன். அதாவது என் பேங்குல திடீர்னு ஒருநாள் ராத்திரி தீவிபத்து நடந்து எல்லா டாக்குமெண்ட்ஸும் எரிஞ்சுபோயிடற மாதிரி எழுதுனேன். நாலாவதுநாள் அதேமாதிரி தீவிபத்து நடந்தது. அப்பறம் இன்னொரு கதை எழுதினேன் டாக்டர். அதுல ஹீரோ பைக்ல வேலைக்கி போறப்ப பைக் ஆக்ஸிடன்ட் ஆகி வலதுகால்ல பிராக்சர் ஆகுற மாதிரி எழுதிருந்தேன். நாலாவதுநாள் நா கதைல எழுதியிருந்த அதே இடத்துல, அதே முறையில ஆக்ஸிடன்ட் ஆகி என் வலதுகால் பிராக்சர் ஆயிடுச்சி”

    டாக்டர் அமைதியாயிருந்தார். இதுபோல அவர் அதிகம் கேள்விப்பட்டதில்லை. இதை ஹாலூஸினேஷன் வகையிலும் சேர்க்கமுடியாது என்று தோன்றியது அவருக்கு. எங்காவது நாம் கதையாக எழுதுவதெல்லாம் யதார்த்தத்தில் நடக்குமா? நடக்கிறது என்கிறான் அவன்.

    “இல்ல. மொத நீங்க எப்பயிருந்து இதை கவனிக்க ஆரம்பிச்சீங்கன்னு சொல்லுங்க”

    “நாலு வருஷம் முந்தி நா ஒரு சிறுகதை எழுதுனேன் டாக்டர். ஒரு சின்னப்பொண்ணு மூடாத சாக்கடைக்குள்ள விழுந்து செத்துபோறதுதான் கரு. அதை எழுதி நாலாவது நாள் பக்கத்து வீட்டுப்பொண்ணு அதேமாதிரி செத்துடுச்சி”

    “இது நம்ம நாட்டோட சாபக்கேடுங்க. எத்தனை உசிருங்க. ஆனா இன்னும் அதே தப்பைத்தான் தொடர்ந்துட்டிருக்காங்க. இது பொதுவானதுதாங்க”

    “நானும் அப்டித்தான் நெனச்சிருந்தேன் டாக்டர். பட் அந்த புள்ளைய பார்க்க ஆஸ்பத்திரி போயிருந்தப்பதான் கவனிச்சேன். என் கதைல என்னவிதமா அந்த பொண்ணை வர்ணிச்சனோ அதேமாதிரி இருந்தது எப்படி டாக்டர்”?

    டாக்டர் யோசித்தார். “இது ஒன்னும் பெரிசில்ல… சிவ…”

    “சிவான்னே கூப்பிடலாம் சார்”

    “ஆங்.. சிவா. உங்க பக்கத்துவீடுன்னு சொல்றீங்க. அடிக்கடி பார்த்ததுல அந்த பொண்ணு உருவம் உங்களுக்குள்ள ஆழ்மனசுல பதிஞ்சிருக்கும். அதைத்தான் உங்க கதைல வர்ணிச்சிருக்க சான்ஸ் இருக்கு”

    “இதை நானும் யோசிச்சேன் சார். பட் செத்தப்ப அந்த பொண்ணு போட்ருந்த டிரஸ்கூட கதைல வர்ணிச்ச அதே டிரஸ்தான் சார். இதுக்கு என்ன விளக்கம் சொல்வீங்க”?

    டாக்டருக்கும் உண்மையாகவே சற்று குழப்பமாகத்தான் இருந்தது. இது சாத்தியமில்லை. ஆனால் அதை இவனுக்கு புரியவைக்கவேண்டும்.

    “சரி அதை விடுங்க. வேற சொல்லுங்க”

    “அடுத்தகதை ஒரு நாலுமாசம் கழிச்சு எழுதினேங்க. ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்றாங்க. வீட்ல ஒத்துக்கல. வீட்டைவிட்டு ஓடிப்போயிடறாங்க. ஒரு ஃபிரண்ட்டை தேடி போறாங்க. போன எடத்துல ஃபிரண்ட் ஊர்ல இல்ல. போன்ல தன்னோட ஃபிரண்ட் அட்ரஸ் குடுக்குறான். அவங்களும் அங்க போறாங்க. அவனும் கொஞ்சம் தயக்கத்தோட தங்க வைக்கிறான். மறுநாள் காலைல ரெண்டுபேரும் வீட்ல வெஷம் சாப்பிட்டு செத்துக்கெடக்காங்க”

    “சோ.. சேட்.. அப்பறம்?”

    “அவ்ளோதாங்க கதை”

    “அப்டியா. சோ சிம்பிள். இதுல என்ன பிரச்சனை?”

    “இல்ல டாக்டர். கதைல அந்த ஃபிரண்ட் தர அட்ரஸா நா எழுதிருந்தது என்னோட ஒரிஜினல் அட்ரஸ் சார்”

    டாக்டருக்கு சிரிப்பு வந்துவிட்டது. “சோ வாட்?”

    “சோ வாட்டா? சார் கதை எழுதுன நாலாவது நாள் உண்மையிலியே ஒரு பொண்ணும் பையனும் என் வீட்டுக்கு வந்துட்டாங்க சார். என் ஃபிரண்ட் போன் பண்ணி தங்க வச்சிக்க சொன்னான். நானும் மடத்தனமா ஒத்துகிட்டேன். காலைல அவங்க ரெண்டுபேரும் என்வீட்ல செத்துகெடக்காங்க”

    “ஓ மைகாட் !! அப்பறம் என்னாச்சு?”

    “அப்பறமென்னங்க. போலீசு கோர்ட்டுன்னு அலையா அலைஞ்சதுதான் மிச்சம். அப்பயிருந்துதான் எனக்கு டவுட்டு வர ஆரம்பிச்சுடுச்சி”

    டாக்டர் அவனையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்.

    “சரி இதை டெஸ்ட் பண்ணிப்பார்த்துடலாம் அப்டீன்னு யோசிச்சிட்டிருந்தப்பதான் அடுத்த கதை எழுதுனேன். ஆனா வேற யாரையாச்சும் வச்சி எழுதினா உண்மையா பொய்யான்னு எப்டி தெரிஞ்சுக்கிறது? அதான் என்னையே ஹீரோவா வச்சு ஒரு கதை எழுதினேன்”

    “இன்ட்ரஸ்டிங் சிவா. பட் அது பெரிய ரிஸ்க் இல்லையா? இன்கேஸ் அது உண்மையாவே நடக்கும்பட்சத்தில ..?”

    “ஒரு வகைல அது ரிஸ்க்தான் டாக்டர். ஏன்னா நா எழுதுனது காதல் கதை. மர்டர் கதைக்கெல்லாம் நம்ம பாடி தாங்குமா டாக்டர். அதான் உசாரா காதல் கதை. ஆனா மர்டரே பரவாயில்லைன்ற அளவுக்கு டெரர் பண்ணிருச்சிங்க காதல்”

    டாக்டருக்கு இப்போது ஆர்வம் அதிகரித்திருந்தது. நல்லவேளையாக இரவின் இறுதி நோயாளியாக வந்தான். ஆனால் இவன் நோயாளிதானா? எல்லாவற்றையும் தெளிவாகத்தான் பேசுகிறான். என்றெல்லாம் உள்ளுக்குள் யோசித்தபடி காத்திருந்தார்.

    “ஒரு பொண்ணு டாக்டர். உங்களுக்கு புடிச்சமாதிரி யாரையாச்சும் கற்பனை செஞ்சுக்கங்க. அப்டி ஒரு பொண்ணு. ஒரு கல்யாண மண்டபத்துல சந்திக்கிறான் ஹீரோ. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொல்வாங்களே. அதுதான் சார். ஒடம்பு மனசெல்லாம் தீயா எரியுது காதலால. அந்த பொண்ணுக்கும் அவனை புடிச்சிருக்குன்னு அப்பப்ப ஓரக்கண் பார்வை வச்சு புரிஞ்சுக்கிறான். ஆனா எப்டி பட்டுன்னு கேக்குறதுன்னு தயக்கம்.”

    வேற வழியில்லாம பல்லாயிரம் தாத்தாக்கள் காலத்துக்கு முந்தின டெக்னிக் ஒன்னை கையாளலாம்னு நெனச்சி அந்த பொண்ணுக்கு சின்ன பேப்பர்ல புடிச்சிருக்கா? அப்டின்னு எழுதி சின்னப்புள்ளை ஒன்னுகிட்ட குடுக்கலாம்னு யோசிச்சு ஒரு சின்னப்புள்ளைய கூப்பிடுறான். ஓடிவந்த அந்த புள்ள இவனுக்கு முன்னாடி ஒரு துண்டுபேப்பர இவன்கிட்ட குடுக்குது. பார்த்தா. இவன் நெனச்சதை அந்த பொண்ணு செஞ்சிட்டா”

    “சூப்பர் சிவா. அப்டியே மூவி பார்க்கிற மாதிரி இருக்கு. கன்டின்யு”

    “அப்பறம் என்னங்க. வழக்கம்போல பார்க் பீச் எல்லாம் சுத்தியடிச்சிட்டு. அப்டியே கழட்டி விட்ருக்கலாம். லூசு மாதிரி அவங்களுக்கு கல்யாணத்தை பண்ணி கதைய முடிச்சிட்டேன்”

    “ஏம்பா நல்ல முடிவுதானே. என்ன பிரச்சனை? அந்த பொண்ண உண்மையிலியே பாத்தியா?”

    “அட …ஏன் டாக்டர் நீங்க ஒண்னு. அது எல்லாமே அப்டியே நடந்துச்சிங்குறேன். கல்யாணத்துல மீட் பண்ணப்ப நா கதைல எழுதிருந்த அவ புடவை டிசைன்ல அப்டியே வந்து நிக்கிறா. எல்லாமே கதைப்படி நடந்து எனக்கு ஒய்ஃபா வீட்ல இருந்துகிட்டு உசிர வாங்குறா”

    “ஹஹ்ஹ்ஹ்ஹா”

    “நா எவ்ளோ சீரியஸா சொல்லிட்ருக்கேன். நீங்க என்ன சார் சிரிக்கிறீங்க?”

    “அதென்னமோ தெரியல சிவா. உங்க கதை கேட்டா அப்டி சிரிப்பு வருது எனக்கு. மேல சொல்லுங்க”

    “அப்பறம் நா யோசிச்சேன். இது வேலைக்காவாது அப்டின்னு கொஞ்சநாள் எழுதாம இருந்தேன். அப்பறம் என் ஒய்ஃப் தான். உங்களுக்கு நல்லா எழுத வருது. தொடர்ந்து எழுதுங்கன்னு என்கரேஜ் பண்ணா. சரின்னு நானும் எழுதுனேன். இந்த வாட்டி ரொம்ப வெவரமா நடிகர் டேஷ் ஸ்டார் என் வீட்டுக்கு வரமாதிரி ஒரு கதை எழுதுனேன் டாக்டர். நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் சத்தியமா அப்டியே நடந்ததுங்க.”

    “எங்க தெருவுல ஷூட்டிங் வந்துருக்காரு. எங்க ஏரியால ஜாஸ்தி வீடுங்க எல்லாம் இல்லையா ? இருக்குற ஒன்னுரெண்டு வீடுகள்லயும் பூட்டிட்டு வேலைக்கி போயிருவாங்க. அதனால என் வீட்ல கொஞ்சநேரம் வெயிலுக்கு வெயிட் பண்ணியிருந்திருக்காரு. என் ஒய்ப் ஆபீசுக்கு போன் பண்ணப்ப என் நெலமை எப்டி இருந்திருக்கும்னு யோச்சிப்பாருங்க டாக்டர்”

    டாக்டர் இந்தமுறை சற்று பலமாகவே சிரித்தார்.

    “நீங்களே சொல்லுங்க. அந்த ஏரியாவுலயே வீடுகள் ஜாஸ்தியில்லன்னு சொல்றீங்க. அந்த டேஷ் ஸ்டாரும் பெரிய வேல்யு இல்லாத நார்மல் நடிகர்தான். சோ கேரவன் எல்லாம் அவருக்கு சான்ஸ் இல்ல. அதனால பக்கத்துல இருந்த உங்க வீட்ல வந்து கொஞ்சநேரம் ஒக்காந்துருக்காரு. லாஜிக்கலா எல்லாமே பொருந்துதே. இது சாதாரணமா நடக்கக்கூடிய ஒண்ணுதானே சிவா?”

    இப்போது அவன் சிரிக்கத்தொடங்கினான்.

    “ஏன் சிரிக்கிறீங்க?”

    “சரி டாக்டர். நான் உங்க வழிக்கே வரேன். கொஞ்சநாள் முந்தி ஒரு கதை எழுதினேன். அதுல ஒரு பிளைட்டு மர்மமான முறையில் காணாம போறதாவும், கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியாம போறதாவும் எழுதிருந்தேன். எழுதி நாலாவதுநாள் நியூஸ் பேப்பர்ல படிக்கிறேன். மலேஷியா ஃபிளைட்டு காணாம போயிருச்சின்னு. இன்னிக்கி வரை கண்டுபிடிக்கலை”

    டாக்டர் சில விநாடிகள் தீவிரமாக யோசித்துவிட்டு சொன்னார்.

    “இது ஒன்னும் பெரிய ட்ரபிள் இல்ல சிவா. சும்மா பெரிய பெரிய மெடிக்கல் டேர்ம்லாம் சொல்லி உங்கள பயமுறுத்தவிரும்பல. இது ஒருவிதமான பிரமைதான். அதாவது இயற்கையா தற்செயலா நடக்குற எல்லாத்துக்கும் ஒரு காரணம் கற்பிச்சுக்குறது. ஃபார் எக்ஸாம்பிள். அந்த செவுத்த பாருங்க”

    அவன் திரும்பி டாக்டர் காட்டிய திசையில் பார்த்தான்.

    “அந்த ஜன்னலுக்கு பக்கத்துல நிழல் தெரியுதா?”

    “தெரியுது டாக்டர்”

    “குட். அந்த நெழல்ல எதாவது உருவம் தெரியுதா பாருங்க”

    “அட ஆமா டாக்டர்.. ஒரு மாதிரி.. ஆங் ஆடுமாதிரி இல்லயில்ல.. குதிரை மாதிரி இருக்கு டாக்டர்”

    “ஹஹ்ஹ்ஹா நான் சொல்லலை? இதான் விஷயம். உண்மையில அங்க நெழல் மட்டுந்தான் இருக்கு. இப்ப ஆடு குதிரைன்னு நாம பார்த்ததெல்லாம் நம்ம கற்பனைதான். இப்டித்தான் லைப்ல பல விஷயங்களுக்கு நாமளா எதாவது நெனச்சிக்கிறோம். இது காமன்தான் சிவா. சில மெடிஸின்ஸ் எழுதித்தரேன். எடுத்துக்கங்க. நல்லா டைமுக்கு சாப்டுங்க. தூங்குங்க. இதைப்பத்தியெல்லாம் நெனைக்காம உங்க வேலைய பாருங்க”

    “அப்ப நான் ஃபேஸ் பண்ணதெல்லாம் எதார்த்தமா நடந்த ஒண்ணுதான்னு சொல்றீங்களா டாக்டர்”?

    “நிச்சயமா சிவா. நீங்களே வீட்டுக்குப்போயி பொறுமையா யோசிச்சுப்பாருங்க. இதையெல்லாம் செய்யிறது நம்மளோட கிரியேட்டிவிட்டி மைன்ட். அது உங்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி ஒர்க்காவுது அதான். இதையெல்லாம் கரெக்டா பயன்படுத்திக்கிட்டவங்கதான் பிற்காலத்துல பெரிய செலிபிரட்டியா ஆகிருக்காங்க. நீங்களும் ஒருநாள் பெரிய ஆளா வர வாழ்த்துக்கள்”

    அவன் மிகுந்த குழப்பத்துடன் எழுந்துகொண்டான்.

    “என்ன சிவா? ஃபீஸ் ரிசப்ஷன்ல குடுத்துடுங்க” என்றபடி சிரித்தார் டாக்டர்.

    “அதில்ல சார்.. வந்து…”

    “சொல்லுஙக. என்னமோ தயங்குறீங்க”…

    “ஒண்ணுமில்ல டாக்டர்” என்றபடி அவன் நகர ரிசப்ஷன் பெண் உள்ளே வந்து இன்னொரு பேஷன்ட் வந்திருப்பதாகச் சொன்னாள். டாக்டர் வரச்சொல்ல, இவன் வெளியேறும்போது தோளுரசியபடி டாக்டரின் அறைக்குள் நுழைந்தவனை எங்கோ பார்த்ததுபோலிருந்தது.

    ரிசப்ஷனில் பணமெல்லாம் கொடுத்து பக்கத்து ஃபார்மசியில் மருந்துகள் வாங்கும்போதுகூட யோசித்தான். எங்கோ மிக நெருக்கமாக பார்த்த முகமாக நன்கு அறிமுகமான முகமாக தோன்றியது. முக்கியமாக அவன் வலது புருவத்தின் அருகிலிருந்த மரு. நன்றாக நினைவிருக்கிறது. அது இவனது கதையொன்றின் பாத்திரம்தான்.

    தெருமுனை டீக்கடையில் டீ சொல்லிக்காத்திருக்கும்போது நான்கு நாட்கள் முன்பு தான் எழுதிய கதையை நினைவுபடுத்திப்பார்த்தான்.

    சிட்டியில் தொடர்ந்து நிகழும் சீரியல் கில்லர் ஒருவனைப் பற்றிய கதை அது. அதில் ஹீரோ டாக்டர்களக தேடிக்கண்டுபிடித்து கொலைசெய்வதுதான் கதை. சரியாக சற்றுமுன்பு டாக்டரின் அறைக்குள் நுழைந்தவன் இவன் கதையில் வந்தவனைப்போலவே இருந்தான்.

    இவன் டீ ஆறிக்கொண்டிருந்தது.

    Share
  • நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    anbae vaa

    அன்பே வா திரைப்படத்தில் அனைத்துப்பாடல்களும் அற்புத வகையைச் சார்ந்தவை. மெல்லிசை மன்னரும் கவிஞர் வாலியும் இணைந்து தந்த இன்ப நாதங்கள்! ஏவிஎம் தயாரிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ஒரு காதல் கதை சுகமாக பின்னப்பட்டிருக்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவியும் இணைந்து நடித்த இன்னொரு காவியம். அலுப்பில்லாமல் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமெனில் அன்பே வா என்று அடித்துச் சொல்லலாம்! கண்ணைக் கவரும் காஷ்மீரின் அழகு எண்ணம் முழுவதையும் கொள்ளையடித்துவிடும்! நகைச்சுவைப் பகுதியை நாகேஷும் மனோரமா ஆச்சியும் கொட்டிக் குவித்திருக்கிறார்கள்.

    அன்பில் உயிர்க்கும் காதல் இன்பம் தருவது சரிதான்… ஆனால், ஒருவரையொருவர் புரிதல் அடிப்படையாக வேண்டுமன்றோ? இங்கே இவர்தம் புரிதல் இணைந்து நடக்கத் தவற … ஒருவர் புரிந்துகொள்ளும்போது மற்றொருவர் புரிந்துகொள்ளத் தவறுகிறார். இதுதான் கதையின் போக்காக… அதிலே வரும் பாடல்கள் பொழியும் தேனாக… டி. எம். சௌந்தரராஜன் அவர்களுடன் பி.சுசீலா குரல்கள் இணைய இனிய பாடல் ஒலிக்கிறது.

    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
    நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
    நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத்தான் ஒரு
    கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

    பாடலின் காட்சி அமைப்பும்… ஈர்க்கும் இருவர் நடிப்பும்… இன்னும் இன்னும் இந்தப் பாடலை நமக்கு சொந்தம் செய்யச் செய்கிறது. திரைப்படத்திற்காக எழுதப்பட்டு இருந்தாலும்… அட… கவிஞன் எழுதிய ஒரு கவிதை இசையைப் பெற்றது போலிருக்க… இயல்பான வார்த்தைகள் அரங்கேறுகின்ற அழகுதான் வாலி அவர்களின் கைவண்ணம் காட்டுகிறது.

    ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
    அவள் தான் சொல்லத் துடித்தாள்
    உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
    கண்ணால் சொல்லி முடித்தாள்

    காதல் கொண்ட உள்ளங்கள் அனைத்திற்கும் பொருந்தும் கவிதைதான்… இன்பத்தேர் இதயம் நோக்கி நகர்வதைப்போல் ஒரு பாடல் பதிவாகி நம் மனதில் பதிந்திருக்கிறது. புரட்சித் தலைவரின் பாடல்கள் வெற்றியின் விளிம்பைத் தொடுபவை என்பதற்கு இந்தப் பாடலும் சத்திய சாட்சியாய்…

    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
    நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
    நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
    கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
    நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

    எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
    எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
    அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
    அவள் நினைவாலே என் காலம் செல்லும்
    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
    நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

    இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
    கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
    குடை போல் விரியும் இமையும் விழியும்
    பார்த்தால் ஆசை விளையும்
    அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
    புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ
    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
    நல்லஅழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

    ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
    அவள் தான் சொல்லத் துடித்தாள்
    உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
    கண்ணால் சொல்லி முடித்தாள்
    அந்தக் காதலன் முகம் தொடுவானோ?
    இந்தக் காதலி சுகம் பெறுவாளோ
    கனவோ நனவோ எதுவோ?
    நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
    அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
    நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
    கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
    நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
    அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    பாடல்: நான் பார்த்ததிலே (1966)
    திரைப்படம்: அன்பே வா
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    காணொளி: https://youtu.be/ndvucTxXwhA

    Share
  • இசைஞானி இளையராஜா இன்று பிறந்த நாள்…

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    இசைஞானி இளையராஜா இன்று பிறந்த நாள்…

    border

    அசையும் பொருள்கள் யாவும் அவனது சொந்தம் என்று ஆண்டவனைச் சொல்வார்கள்…
    இசையும் மனங்கள் எல்லாம் இவருக்கே சொந்தம் என்றே சொல்லலாமா?
    திசைகள் எட்டும் இசையால் நிறைத்த இவர்தம் கீதங்கள் ..
    பசியால் வாடியபோது கிடைத்த அற்புத விருந்தன்றோ?

    திரையிசைதன்னில் நுழைந்தது அன்று அன்னக்கிளியாலே…
    உயிரிசை என்று ஆனது எல்லாம் உன்னாலே..
    இன்னிசை முழங்கும் இனிய வருடல்கள் இவரது கானங்கள்..
    இரவோ பகலோ கேட்டு மயங்கலாம் எல்லோரும் வாருங்கள்..

    அன்பின் தவத்தால் ஆண்டவன்பதம் தொடும் அருளினைப் பெற்றவர்
    ஆயிரம் புகழ் தானது வந்துமே அடக்கத்தைக் காட்டுகின்றார்..
    எத்தனை எத்தனை இசையின் சித்திரம் அழகாய் வரைகின்றார்..
    நித்திரை தொடும்வரை நம் நெஞ்சில் கோலங்கள் இடுகின்றார்..

    கருணையின் கோயிலில் கடவுளைக் காணலாம் இசையின் மூலமே..
    இதயத்தின் வாசலில் நித்தமும் போடலாம் நாதங்களின் கோலங்களே..
    பண்ணைப்புரத்து பைந்தமிழ்ச் செல்வம் நம்ம சின்ன ராசாதான்….
    இன்றும் என்றும் நலமாய் வாழ்ந்து இசைபோல் வாழ்ந்திடவே..
    இதயம் நிறைந்து கவிதை வழியே இசையே.. உம்மை வாழ்த்துகிறேன்..

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy1

     

    ”கார்பட்டு மேனியன் கண்ணன் குழலெடுத்து,
    சார்பட்டா ராகத்தில் சங்கீதம்: -பார்பட்ட,
    பாரம் விலக்கிட, பாரதப் போர்நெருங்கும்,
    நேரமவன் நெஞ்ச நினைப்பு”….

    ”எழில்ஏழு வண்ணம் , பொழில்வேணு கானம் ,
    தொழில்காதல் , தாமரைத் தொப்புள் -சுழியில்
    உலகெலாம் உண்டு அலைகடல் நீந்தும்
    அலகிலாக் கண்ணன் அழகு”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    “இன்று வைகாசி அனுஷம்”….பெரியவா பிறந்த நாள்….
    சபாஷ் கேசவ்….

    crazy

    “நல்லதோர் வீணை நமக்காக நாட்டையில்,
    வல்லமை தந்திட வாசிப்பு; -இல்லற,
    சம்சாரிக் காய்வந்த, சங்கரர் கண்களில்,
    மின்சார ஜோதி மினுக்”…..கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender

    ”எந்தவேலை செய்தாலும் தொந்தரவாய்த் தோணுதே,
    இந்தநிலை ஏனெனக்கு நந்தலாலா: -அந்தநாளில்,
    ஆளாள் குறைதீர்க்க ஆதரித்தோய், இன்றுமட்டும்
    வாளா(து) இருப்பதேன் வா”….கிரேசி மோகன்….
    ”பெண்பால் புணர்ச்சியாய், வெண்பா வடிவத்தில்,
    என்பால் எழுந்தருளும் எம்பிரானே, -உன்போல்,
    பொழுதை கழிக்க, புவியிலில்லை தெய்வம்,
    தொழுது கிடப்பதே தொண்டு”….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 1, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு வரலாற்றாய்வாளர் இரா. கலைக்கோவன் அவர்கள்

    கலைக்கோவன் profile

     

    கள ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகளின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கும் நோக்குடன் “தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார்” பெயரில் முனைவர் இரா. கலைக்கோவனால் திருச்சிராப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆய்வு அமைப்பே டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். நிறுவனரான இவரே வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரும் ஆவார். நடப்புலகில் பொது அங்கீகாரமோ புகழோ கிடைக்க வழியில்லாத வரலாற்றாய்வுத் துறையில் 33 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரான முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கும் இப்பணி வாழ்வாதாரம் அல்ல. தொழில்முறையில் இவர் ஒரு கண் மருத்துவர். இவரது முயற்சி ஆல் போல வளர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டு ஆய்வுகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தக வெளியீடுகள், 25 “வரலாறு” ஆய்விதழ்கள், 119 வரலாறு.காம் மின்னிதழ் பதிப்புகள், 1356 வரலாற்றுக் கட்டுரைகள் எனப் பல எல்லைகளைக் கடந்துள்ளனர் வரலாற்றாய்வு மையத்தினர். இச்சாதனைகளை நினைவுகூரும் விதத்தில் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகளை முன்னிறுத்திக் கௌரவிக்கும் இதழாக தற்பொழுது வெளிவந்திருக்கும் மையத்தின் இம்மாதத்தின் திங்களிதழ் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் பால் கொண்ட  ஆர்வம் காரணமாக 25 ஆவது “வரலாறு” ஆய்விதழ் வெளியாகும் வரை வரலாற்றாய்வு மையத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ள முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    வரலாறு

    1. பதிவு செய்யப்படாத கல்வெட்டுகளைக் கண்டறிந்து பதிப்பித்தல்
    2. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றை முழுமையுற உருவாக்கல்
    3. ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் புதிய தரவுகளை வழங்கும் ஆண்டு ஆய்விதழ் வெளியிடல்
    4. களஆய்வில் நம்பிக்கையுடைய இளம் ஆய்வாளர்களை வழிநடத்தல்
    5. உலகளாவிய தமிழர்களுக்கு இலக்கியம், வரலாறு குறித்த ஆர்வத்தையும் ஆய்வு நோக்கையும் விதைத்தல்
    6. கோயில்கள் வரலாற்றுக் களங்கள் என்பதால் அது குறித்த விழிப்புணர்வைச் சமுதாயத்தில் பரவச் செய்தல்
    ஆகியவை வரலாற்றாய்வு மையத்தின் குறிக்கோள்கள்.

    திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் கருடாழ்வார் சன்னிதியில், கருவூலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், உண்மையை அறிவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் இடம்பெற்ற முனைவர் இரா.கலைக்கோவன், மூன்று நாள் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தார்.

    இவர் பங்கேற்ற பற்பல களஆய்வுப்பணி தொடர்பான செய்திகள் மாதம் ஒருமுறையாவது நாளிதழ்களில் இடம் பெறத் தவறுவதில்லை … சமீபத்தில் வெளியான செய்திகள் சில …

    செவந்திலிங்கபுரத்தில் அரியவகை ஐய்யனார் சிற்பம் கண்டெடுப்பு – ஏப்ரல் 23, 2015, தினமணி

    கலைக்கோவன்  கல்வெட்டு - தினமணி

    முசிறி அருகே வெள்ளூரில் சுந்தரபாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு – ஜனவரி 21, 2015, தி ஹிந்து தமிழ் பதிப்பு

    கலைக்கோவன்  கல்வெட்டு - தி ஹிந்து

                       கலைக்கோவன் கள ஆய்வு 8கலைக்கோவன் கள ஆய்வு 7

    கலைக்கோவன் கள ஆய்வு 32கலைக்கோவன் கள ஆய்வு 2

    கலைக்கோவன் கள ஆய்வு 4கலைக்கோவன் கள ஆய்வு

                      கலைக்கோவன் கள ஆய்வு 6கலைக்கோவன் கள ஆய்வு 5

    அரசு ஆதரவு, நல்ல பொருளாதாரப் பின்புலமுள்ள பெரிய பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் சாதித்ததைக் காட்டிலும், பெரிய அளவில் பொருளாதாரப் பின்புலம் ஏதும் இல்லாமல் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் உதவியுடன் கடந்த முப்பத்து மூன்றாண்டுகளில் வரலாற்றாய்வு மையம் சாதித்துள்ள வரலாற்றுப் பணி குறிப்பிடத் தக்கது. மையத்தின் ஒரு முக்கிய ஆய்வாளருமான 67 வயதாகும் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களின் இப்பணியைப் பாராட்டி, சென்ற ஏப்ரல் (2015) மாதத்தில் கும்பகோணம் ரோட்டரி கிராண்ட் நிறுவனம் “வாழ்நாள் சாதனையாளர்” விருது அளித்து முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களைக் கௌரவப்படுத்தியுள்ளது.

    கலைக்கோவன்

    ஏற்புரையில் முனைவர் இரா.கலைக்கோவன், ‘கோரிக்கைகளுக்காக மட்டும் கோயில்களை அணுக வேண்டாம்!’ என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழர் அனைவரும் இவ்வேண்டுகோளை சிரமேற்கொண்டால் தமிழகத் தொல்பொருள் ஆய்வும், தமிழக வரலாற்று ஆய்வும் நல்ல உயர்ந்த நிலையை அடைந்து தமிழகத்திற்கு பெருமைகள் பல சேர்க்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

    இந்த வேண்டுகோளை இவர் பலகாலமாக தமிழக மக்களிடம் முன்வைத்துவருகிறார். “வரலாறு” ஆய்விதழின் எட்டாம் இதழில் அவர் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

    “குடமுழுக்கு, திருப்பணி என்ற சொற்களைக் கேட்டாலே அஞ்சுமளவிற்குத் திருக்கோயில்கள் இவற்றால் சீரழிக்கப்படுவது கண்கூடு. எவ்வளவோ எடுத்துரைத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ளாமலிருப்பது ஏனென்று தெரியவில்லை. இந்தக் கொடுமைகளை எப்படித் தடுப்பதென்றும் விளங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள ஆய்வாளர்கள்தான் இதற்கொரு முடிவுகட்டவேண்டும். மக்களுக்குக் கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றின் முக்கியத் துவத்தை விளங்க உரைப்பதுடன், எக்காரணம் கொண்டும், அவை குடமுழுக்குக் கோலாகலங்களின் பூச்சுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆளாகாது காப்பாற்றிடல் வேண்டும். ஆங்காங்கே உள்ள ஆய்வமைப்புகளும் இப்பணியில் முழுமூச்சாய் ஈடுபடுவது அவசியமாகும். இன்றொரு விதி செய்யத் தவறினோமாயின், இனி எந்நாளும் கல்வெட்டுகளைக் கோயில்களில் காண்பது குதிரைக்கொம்புதான். வாருங்கள் தோழர்களே, கையிணைப்போம். இந்த நாட்டின் வரலாற்றை அழிவினின்று காப்போம்.”

    வரலாற்றாய்வு மையத்தின் போற்றத்தக்க மற்றொரு கோணம், பொறியியல் வல்லுநர்களையும் கணிப்பொறி வல்லுநர்களையும் கட்டுமானத் தொழிலதிபர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் வரலாற்று மாணவர்களாக மாற்றி தமிழக வரலாறு, கல்வெட்டு, களப்பணி ஆகியவற்றில் ஆர்வம் கொள்ளச் செய்து பலரை வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் மாற்றி வருவதே. தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார் பெயரில் ஆய்வு மையம் அமைத்து தமிழக வரலாற்றிற்கு இன்றியமையாத வகையில் ஆய்வுத்தொண்டுகள் பல ஆற்றி வரும் மையத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் அவர்களின் மைந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.

    என்ற குறள் காட்டும் நெறியினைப் பின்பற்றி, தமது தந்தையாரின் வரலாற்று ஆய்வுப்பணியை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்களின் பணிகளை வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்புக்கு:
    http://www.varalaaru.com
    https://www.facebook.com/varalaarumagazine
    varalaaru.editor@gmail.com

    நன்றி:
    படங்களும் தகவல்களும் www.varalaaru.com தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன.
    கல்வெட்டு செய்தி, சிற்பம் படங்களை தந்துதவியவை ‘தினமணி’ மற்றும் ‘தி இந்து தமிழ்’ நாளிதழ்கள்

    Share
  • நூல் மதிப்புரை – தமிழ் இனி மெல்ல…

    நூல் மதிப்புரை

    தமிழ் இனி மெல்ல…(புதினம்)

    ஆசிரியர்: திரு. மகாதேவன் (ஒரு அரிசோனன்)

    தமிழ் இனி மெல்ல…’ எனும் இப்புதினத்தின் ஆசிரியர் திரு. மகாதேவன், தமிழகத்திலுள்ள காரைக்குடியில் பிறந்தவர். இளம் வயதுமுதலே தமிழின்பால் மிகுந்த ஆர்வம் கொண்டு கதைகள், கட்டுரைகள் முதலியவற்றை எழுதியிருக்கின்றார். தன் தமிழார்வத்திற்குக் காரணமே தன் தாய்வழிப்பாட்டிதான் என்று மகிழ்ச்சிப்பெருக்கோடு குறிப்பிடும் அவர், ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த தன்பாட்டியின் தமிழிலக்கண இலக்கிய அறிவையும், ஆன்மிக அறிவையும் எண்ணி இன்றும் வியக்கின்றார். தமிழல்லாது, ஆங்கிலம், ஹிந்தி மொழிகளிலும் நல்ல புலமையுடையவர் திரு. மகாதேவன்.

    சிதம்பரத்திலுள்ள, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம்பெற்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (Indian Space Research Organization) ஆராய்ச்சியாளராய்ச் சிலகாலம் பணிசெய்திருக்கின்றார். அப்போது தன்னுடைய உயரதிகாரியாய், ’எளிமையின் உறைவிடமான’ மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் மாண்புமிகு திரு. அப்துல்கலாம் பணிபுரிந்ததைப் பெருமிதத்துடன் நினைவுகூருகின்றார்.

    பின்பு, மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்த திரு. மகாதேவன், லெக்சிங்டனிலுள்ள (Lexington), யூனிவர்சிட்டி ஆப் கெண்ட்டக்கியில் (University of Kentucky) இயந்திரப் பொறியியலில் (Mechanical Engineering) முதுகலைப்பட்டம் பெற்று (M.S), இன்டெல் நிறுவனத்திலும், பின்னர் மோட்டோரோலா நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். தன் பணிக்காலத்தில் குறைக்கடத்தி பொதிகட்டுதல் (‘Semi-conductor packaging’) ஆராய்ச்சியில் 6 சட்டக் காப்புரிமைகள் (patents) வாங்கிய சாதனையாளர் அவர் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவின் அரிசோனா (Arizona) மாகாணத்தில் வசித்துவரும் திரு. மகாதேவன்,   ஒரு அரிசோனன் என்ற புனைபெயரில் பல சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் திண்ணை, தமிழ் இந்து, வல்லமை, இணையவெளி போன்ற இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். தன்னுடைய முதல் புதினமான, தமிழ் இனி மெல்ல…’வை, நூலாகக் கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் வெகுசிறப்பாய் வெளியீடு செய்திருக்கின்றார். இப்புதினத்தை, “The Golden Scroll” [Story of a language and its people] எனும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறார் என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றேன்.

    தமிழ் இனி மெல்ல…’ புதினத்திற்குள் இனி மெல்ல நுழைவோமா?

    திராவிடக் குடும்பத்தின் மூத்த மொழியும், இலக்கிய இலக்கண வளமும்,tamil ini mella1 - Copy பிறமொழிகளின் சார்பின்றித் தனித்தியங்கும் திறனும் பெற்ற செம்மொழியான நம் தமிழ்மொழியின் நிலை இன்னும் 400 ஆண்டுகளுக்குப் பின் (25-ஆம் நூற்றாண்டில்) எவ்வாறிருக்கும் என்பதைத் தொலைநோக்குப் பார்வையுடன் கணித்து நம் சிந்தனைக்கு விருந்தாய்ச் சுவைநிறைந்த புதினமாய்த் ’தமிழ் இனி மெல்ல…’வை ஒளிரச் செய்திருக்கின்றார் ’ஒரு அரிசோனன்’.

    பள்ளி, கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி என்பதே (இன்றைய) தமிழகத்தில் அருகிவருவதை நாமறிவோம். வருங்காலத்தில் இந்நிலை மேலும் சீர்கேடடையலாம்; தமிழ் பயிற்றுவிப்பதற்கும் பயில்வதற்கும்கூட ஆட்கள் இல்லாத நிலை உருவாகலாம். அதன் விளைவாய் நம் அன்னைத்தமிழ் வலுவிழந்து பொலிவிழந்து, (அங்குமிங்குமாய்) ஒருசிலரே பயன்படுத்தும் கூற்றுமொழியாகிவிடலாம் (dialect) என்றும், தமிழின் இடத்தை (தமிழக மக்களின் அமோக ஆதரவுடன் கோலோச்சும்) ஆங்கிலமும், பாரதத்தின் செல்வாக்குமிக்க மொழியான இந்தியும் எடுத்துக்கொண்டு தமிழுக்கே அவை ’கூற்று’ (எமன்) மொழிகளாகிவிடக்கூடும் எனும் எச்சரிக்கை மணியை இப்புதினத்தின் மூலம் ஓங்கி ஒலித்திருக்கின்றார் ஆசிரியர்.

    இரண்டு பாகங்களைக் கொண்ட இப்புதினத்தின் முதல் பாகம் 2411-ஆம் ஆண்டின் தமிழகத்தைக் கதைக்களமாகக் கொண்டிருக்கின்றது. (ஆசிரியரின் அனுமானப்படி) அப்போது தமிழகத்தில் தமிழைப் பேச்சுமொழியாக மட்டுமே அறிந்திருப்போர், ’எடுபிடிகளாய்’ உரிமைகள் ஏதுமற்ற கீழ்நிலையிலும், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் புலமைபெற்றோர் பதவிகளிலும் அதிகாரங்களிலும் மேம்பட்டு, எடுபிடிகளை அடிமைகளாய் நடத்தும் உரிமைக் குடிமக்களாயும்’ இருப்பர்.

    பணம் படைத்தவன் ’ஆண்டான்’; ஏழையாய்ப் பிறந்தவன் ’அடிமை’ எனும் இன்றைய நிலைமாறி, ஆங்கிலமும் இந்தியும் அறிந்தவன் ஆண்டான்; தமிழ் மட்டும் அறிந்தவன் ’உரிமைகளற்ற’ அடிமை எனும் நிலையைக் கற்பனை செய்யும்போதே நெஞ்சு ‘பகீர்’ என்கிறது. அப்படியோர் இழிநிலை நம் தமிழுக்கு வந்துவிடுவோமோ? எனும் பதற்றமும், அச்சமும் புதினத்தைப் படிக்கும் நமக்கு ஏற்படுகின்றது.

    இனி, கதை மாந்தர்களைச் சந்தித்து வருவோம்!

    சென்னையிலிருக்கும் சீன நிறுவனமொன்றில் பெரிய பொறுப்பிலிருக்கும் ’உரிமைக் குடிமக்கள்’ பிரிவைச் சேர்ந்த ஷிஃபாலி எனும் பெண்மணி, அவளுடைய அருமை மகளும், கல்லூரி மாணவியுமான நிமிஷா, அவர்கள் வீட்டில் எடுபிடிகளாக வேலைசெய்யும் தமிழ்மட்டுமே அறிந்த காமாட்சி, அவளுடைய தம்பியான சிறுவன் ஏகாம்பரநாதன் ஆகியோரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். ஒருவர் மொழியை ஒருவர் அறிந்துகொள்ள இயலாத அச்சூழ்நிலையின் சிரமத்தைப் போக்குவதற்கு மொழிமாற்றுக்கருவி (translator) உதவுகின்றது.

    25-ஆம் நூற்றாண்டில், தமிழ்நாடு ’தக்கன்கண்ட்’ என்றும், சென்னை ’ஷெனாய்’ என்றும், தஞ்சை ’தஞ்ஜூ’ என்றும், கொடைக்கானல் ’கோட்கல்’ என்றும், காரைக்குடி ’காரைகுட்’ என்றும் நவீனப் பெயர்களுடன் திகழும் எனப் புதினம் உரைப்பது, ஊரின் பெயர்களில்கூடத் தமிழில்லாது போய்விடும் அவலநிலையை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.

    முப்பரிமாண அலைவரிசைகள், ஹோலோகிராம்கள் எனத் தொழில்நுட்பங்கள் உச்சத்தைத் தொட்டிருக்கும் எதிர்காலச்சூழலில், மக்கள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதெல்லாம் நின்றுபோய்க் கடவுளரை வீட்டு வரவேற்பறையிலேயே (தொலைக்காட்சிகள் வாயிலாய்த்) தரிசிக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதனால் வழிபாட்டுத்தலங்களெல்லாம் வெறும் சுற்றுலாத்தலங்களாக மாறிவிட்டிருக்கின்றன.

    இவ்வாறு, புதுமையான உத்திகளோடு நகரும் கதையில், தன் தாய் ஷிஃபாலியை வேலை நிமித்தமாய்ச் சீனாவுக்கு வழியனுப்புவதற்காகத் தஞ்ஜூவிலுள்ள ஹோட்டல் ராஜ்ராஜில் தங்கியிருக்கின்றனர் நிமிஷா, காமாட்சி, மற்றும் ஏகாம்பரநாதன். தான் சீனாவிலிருக்கும்போது தன் மகளைக் கண்ணுங்கருத்துமாய்க் கவனித்துக்கொள்ளவும், வீட்டைப் பாதுகாக்கவும், ’அழகேசன்’ எனும் எடுபிடிப் பிரிவைச் சேர்ந்த மல்யுத்தவீரன் ஒருவனை நியமிக்கிறாள் ஷிஃபாலி. தஞ்ஜூ பெரிய கோயிலில் பணியாளனாய் வேலைசெய்துவரும் மற்றொரு எடுபிடியான ’ஈஸ்வரன்’, சுயமுயற்சியால் இந்தி பேசக் கற்றுக்கொண்டிருப்பதால் ஷிஃபாலியின் கருணைக்குப் பாத்திரமாகி, அவள் தயவால் சமீபத்தில் இழந்த தன் பணியை மீண்டும் பெற்றிருக்கிறான்.

    விமானநிலையத்தில் ஷிஃபாலிக்கு விடைகொடுத்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பும் நிமிஷா, காமாட்சி, ஏகாம்பரநாதன் ஆகியோர், தம் வாழ்வில் என்றும்காணாத (விண்வெளிசார்) அதிசய நிகழ்வொன்றைச் சந்திக்கின்றனர். அதன் விளைவாய் மின்சாரம், தொலைபேசி, அலைபேசி, விமான சேவை, வாகனப் போக்குவரத்து என அனைத்தும் முடங்கிவிட, மீண்டும் அவர்கள் 18-ஆம் நூற்றாண்டுக்கே (வாழ்க்கை வசதிகளின் அடிப்படையில்) சென்றுவிடக் காண்கிறோம்.

    மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையையே புரட்டிப்போட்டுவிட்ட அவ்வரிய நிகழ்வையும், அதன் பின்னணியிலான வானியல் காரணிகளையும் புதினத்தில் மிக நேர்த்தியாக விளக்கித் தானொரு சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் என்பதை நிரூபித்துள்ளார் ’ஒரு அரிசோனன்’.

    தங்களுடைய வாழ்க்கை வசதிகளனைத்தையும் ஓரிரவில் தொலைத்துவிட்ட நிமிஷா, காமாட்சி, ஏகாம்பரநாதன் முதலியோர் ஈஸ்வரனின் சொந்தஊரான ஒரு கிராமத்திற்குச் சென்று தங்கள் வாழ்க்கைப்பயணத்தைத் தொடருகின்றனர். ஒருநாள், அக்கிராமத்திற்கு அருகிலிருக்கும் கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலில் ஈஸ்வரன், அழகேசன், ஏகாம்பரநாதன் மூவரும் இறைவனை வழிபட்டுக்கொண்டிருக்க, அப்போது அங்கே திடீர் நிலநடுக்கமேற்பட்டு, ஓர் அரிய பொன்ஓலைச்சுருள் எதிர்பாராமல் அவர்கள் கைகளுக்குக் கிடைக்கின்றது.

    அதில் என்ன எழுதியிருக்கிறது எனும் ஆவல் அதைப் படிக்கும் ஈஸ்வரனுக்கு மட்டுமல்ல…புதினத்தைப் படிக்கும் நமக்கும் ஏற்படும் வண்ணம் பரபரப்பாய்ப் புதினத்தின் முதல் பாகத்தை நிறைவுசெய்து, நம் கேள்விக்கான விடையை இரண்டாம் பாகத்தில் ஒளித்து வைத்திருக்கின்றார் ஆசிரியர்.

    ’சயின்ஸ் ஃபிக்‌ஷன்’ என்று சொல்லக்கூடிய விதத்தில் 25-ஆம் நூற்றாண்டின் ’அல்ட்ரா மாடர்ன்’ தமிழகத்தை முதல் பாகத்தில் நம் கண்முன் நிறுத்திய புதினம், இரண்டாம் பாகத்தில் பல நூற்றாண்டுகள் நம்மைப் பின்னோக்கிப் பயணிக்கவைத்து, கி.பி. பத்து மற்றும் பதினோராம் நூற்றாண்டுத் தமிழத்திற்கு அழைத்துச்சென்று, தமிழகத்தின் மாமன்னர் இராஜராஜரின் பொற்கால ஆட்சியைக் காணும் நல்வாய்ப்பை நமக்கு நல்கியிருக்கின்றது.

    இராஜராஜரின் வீரம், தமிழார்வம், மதிநுட்பம் போன்ற குணங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? அவ்வேங்கையின் மைந்தரான முதலாம் இராஜேந்திரரும் தந்தையை ஒத்த பெருவீரராய்த் திகழ்கின்றார்!

    இரண்டாம் பாகத்தில், அடுத்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள் இராஜராஜரின் ஆசிரியரான கருவூர்த்தேவர், தேவரின் மாணவரும், உறவினருமான சிவசங்கர சிவாசாரியார் இருவரும். எளிமை, புத்திக்கூர்மை, தீர்க்கதரிசனம் முதலிய அபூர்வ குணங்கள் நிரம்பப்பெற்ற கருவூரார், சோழநாட்டிற்குச் சிறந்ததோர் ஆலோசகராய்த் திகழ்கின்றார். தமிழ்மீது அளவிறந்த பற்றுக்கொண்ட அவர், தமிழைச் சோழ நாடெங்கும் பரப்பவேண்டும் என்னும் வேணவா கொண்டு இராஜராஜரை வழிநடத்துகின்றார்.

    சிவசங்கர சிவாசாரியாரே இரண்டாம் பாகத்தின் நாயகன் என்று சொல்லுமளவிற்கு அப்பாத்திரத்தை நுட்பத்தோடு திறம்படச் செதுக்கியிருக்கின்றார் ஆசிரியர். சிவன்கோயிலில் பூசைசெய்யும் சிவாசாரியாராக வரும் அந்த இளைஞர், அறியாத கலைகளில்லை எனும்படிச் சகலகலாவல்லவராய்த் திகழ்கின்றார். முக்கியமான போர் ஒன்றை வழிநடத்திச்செல்லும் அவர், தம் புதிய உத்திகளால் எதிரிகளை உதிரிகளாக்கி, இராஜராஜரிடம் பாராட்டுப்பெறுவதை நாமே நேரில் நின்று காண்பதுபோல் வெகுசிறப்பாக விவரித்துள்ள ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்! விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத வகையில் கதை சாதுரியமாய் நகர்த்தப்பட்டிருக்கின்றது. முதல் பாகத்தின் கதாபாத்திரங்களை இரண்டாம் பாகத்தின் பாத்திரங்களோடு ஆசிரியர் அழகாக இணைத்துக்காட்டியிருப்பது இரசிக்கத்தக்கது.

    முதலாம் இராஜேந்திரர் முடிசூட்டிக்கொள்ளும் அரிய காட்சியைக் காணும் வாய்ப்பையும் கதை நமக்கு அளித்திருக்கின்றது. ஆயினும் இராஜராஜர் (கருவூராரின் விருப்பத்தின்படித்) தொடங்கிய தமிழ்ப்பணிகள் என்னவாயின? இராஜராஜருக்குப்பின் இராஜேந்திரர் அவற்றை ஆர்வத்தோடு தொடர்ந்தாரா? போன்ற  வினாக்கள் நம்மிடம் குறுகுறுக்கின்றன.

    அதுபோல், முதல்பாகத்தில் ஈஸ்வரன் பொன்ஓலைச்சுருளை படித்துக்கொண்டிருக்கும்போது நாம் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு வந்தோமல்லவா? அவ்வோலையின் மூலம் தமிழர்களின் பண்டைச்சிறப்பைப் படித்தறிந்த ஈஸ்வரன், நிமிஷா உள்ளிட்டோர் அதன்பின் எவ்வாறு நடந்துகொண்டனர் எனும் கேள்வியும் பிறக்கின்றது.

    நம் உள்ளத்து வினாக்களை ஊகித்தறிந்த ஆசிரியர், ”உங்கள் வினாக்கள் அனைத்திற்குமான விடைகளைத் தாங்கிப் புதினத்தின் மூன்றாம், நான்காம் பாகங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன; அவற்றையும் படித்து மகிழுங்கள்!” என்று முறுவலோடு பதிலிறுக்கின்றார்.

    நண்பர்களே! தாய்த்தமிழைக் காக்க உடனடியாக நாம் செய்யவேண்டிய கடமைகளைப் பொட்டில் அடித்ததுபோல் இப்புதினம் நமக்கு உணர்த்திச் செல்கின்றது. நம்முடைய அதீத ஆங்கில மோகம் நம்மை எங்கு கொண்டுபோய் விடுமோ? எனும் தமிழார்வலர்களின் உள்ளக் குரலையே இப்புதினம் எதிரொலிப்பதாய் உணர்கின்றேன்.

    மிடுக்கான எழுத்துநடை, கதைச் சம்பவங்களைக் கச்சிதமாய்க் கோத்திருக்கும் பாங்கு ஆகியவற்றைக் காணும்போது ஆசிரியரின் தேர்ந்த எழுத்துவன்மை தெற்றெனப் புலனாகின்றது.

    ஆங்கில மோகத்தால் மழுங்கிவரும் நம் தமிழுணர்ச்சியைக் கூர்தீட்டிக்கொள்ள, இதுபோன்ற புதினங்களை நாம் படிக்கவேண்டியது அவசியம். எனவே, ’தமிழ் இனி மெல்ல…’ எனும் இப்புதினத்தை விரைவாகவே வாங்கிப் படிப்போம்! தாய்த்தமிழை அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுக்க உறுதி கொள்வோம்!

    காலத்தின் தேவையறிந்து சிறந்த புதினத்தைப் படைத்தளித்திருக்கும் ஆசிரியர் ஒரு அரிசோனனைப் பாராட்டி, இதுபோல் மேலும் பல ஆக்கங்களைத் துடிப்புடன் அவர் நல்கிட வேண்டும் என்று வாழ்த்துவோமாக!

    புதினத்தை வாங்க விரும்புவோர் ஆசிரியரை அவருடைய மின்னஞ்சலில் தொடர்பு கொள்க!

    ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: oruarizonan@gmail.com

     

     

    Share