சுரேஜமீ

peak111

செல்வம்

‘’பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்

காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்

பாவிகள் அந்தப் பணம்.’’ – ஔவையார்

நாம் அனைவரும் பள்ளியிலே படித்த ஒரு நல்வழிப் பாடல் இது. ஆனால் படித்ததோடு மறந்து விட்டோமோ என்று வாழ்க்கை நம்மைக் கேள்வி கேட்பது புரியாமலில்லை. நமது நாட்டின் இன்னமும் வறுமைக் கோட்டிற்குக் கீழே 22% மக்கள் வாழ்வதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அதாவது, சுமார் 27.5 கோடி மக்களுக்கு அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். ஆக, பொருளீட்டல் என்பது எவ்வளவு அவசியம் என உணர்ந்து, தம்மை வறுமையின் பிடியிலிருந்து விலக்க, ஒவ்வொரு குடும்பமும் முயற்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது? தவறேயில்லை.

எதில் தவறு என்றால், ஒரு வரம்புக்கு மீறி சேர்த்து வைக்கும் பொருளில்தான் தவறு இருக்கிறது. அதற்காகத்தான், ஔவையார் அன்றே சொல்லி இருக்கிறார்,
‘’கூடு விட்டு இங்கு ஆவிதான் போனபின்பு யார் அனுபவிப்பார்?’ என வினாவினைத் தொடுத்து,

பொருளீட்டலின் வல்லமையே, ஈட்டிய பொருள், இவ்வுலகில் பயனுற வாழ்தலில்தான் உள்ளது என்ற அறிவுரையை நமக்கு விட்டுச் செல்கிறார் என்றால் மிகையாகாது! நாம் செய்கிறோமா என்பதுதான் கேள்வி.

வறுமையின் வலி அறிந்த நாமே, பொருள் வரும்போது, நம் தேவைக்கு மிஞ்சியதை வைத்து, அடுத்தவர் வறுமை போக்கவேண்டும் என எண்ணுவது கிடையாது. ஒருவருக்கு ஒன்றுக்கு மிகுதியான பொருள் ஏதிருந்தாலும், ஒரு நேரத்தில், ஒன்றைத்தான் அனுபவிக்க இயலுமே அன்றி, நிச்சயம் மற்றவை வெறும் காட்சியாகத்தான் இருக்க முடியும் என்ற உண்மை நமக்குப் புரிவதில்லை. மேலும், நம் சமூகம், நம்மை நிலை நிறுத்த முதல் தகுதியாகப் பார்ப்பது, நாம் சேர்த்துவைத்திருக்கும் பொருட்செல்வத்தைத்தான் என்பதும் வருத்தம் தரக் கூடிய செய்தி!

இதிலிருந்து வெளிவர முயல்கிறோமா என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப நாம் நம்மைக் கேட்க வேண்டும்.

சங்க இலக்கியத்தில், நறுந்தொகை அழகாகக் குறிப்பிடுகிறது
‘செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்!’ என்று!

செழுங்கிளை என்றால் உறவுகள் எனும் பொருளில் கையாளப்பட்டிருந்தாலும், உறவுகளைத் தாண்டி, வருமையில் வாடும் எண்ணற்ற நபர்களையும் தாங்கி நின்றால், அதிலிருந்து பெறக்கூடிய மனமகிழ்வு என்பது அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும். உலகக் கோடீஸ்வரர்கள் அனைவரும் ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தோடு, தன்னைத் தொடர்பில் வைத்திருப்பதும், தன் வருமானத்தில் ஒரு பகுதியை, அதற்குச் செலவிடுவதும், அவர்தம் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுவதற்காக அன்றி, தன்னைப் பெருமைப் படுத்திக்கொள்ள அல்ல என்று நாம் அறிய வேண்டும்.

என்னதான் சங்கப் புலவர்கள் சொன்னது நமக்கு விளங்கவில்லை என்றே எண்ணியபோதும், தற்காலத்தில் வாழ்ந்த கவியரசர் கண்ணதாசன் என்ன சொல்கிறாரென உங்களின் பார்வைக்கு;

சொந்தமில்லை பந்தமில்லை ஏறி மிதிக்கும்

தோள் மீது ஏறி நின்று காதை கடிக்கும்

பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும்

படுபாவி என்கின்ற பேரை கொடுக்கும்

பணம் என்னடா பணம் பணம்

குணம் தானடா நிரந்தரம்! – கண்ணதாசன்

என்று அவருக்கே உண்டான எளிய தமிழில் அருஞ்சொல் எடுத்து, நம் செவிக்கு அறிவூட்டியிருக்கிறாரென்றால், இதை விட யார் சொல்ல முடியும், செல்வத்தின் நிதர்சனத்தை?

இது ஒரு புறமென்றால், இன்னொரு புறம் எப்படியாவது மற்றவர்களுக்கு நம் வசதியைக் காட்டுவதற்காக, ஒரு மாயைச் செலவு செய்கிறோமே? அதைப் பற்றி என்றாவது ஏன் செய்கிறோம் என எண்ணிப் பார்த்ததுண்டா? மற்றவர்களுக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதில் அல்ல வாழ்க்கை; நமக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதில்தான் இருக்கிறது என்று உணர நாம் மறுக்கும் ஒவ்வொரு நாளும் துயரம் நம்மைத் தொடர்கிறது என்பது வாழ்க்கை கற்றுத் தரும் அனுபவப் பாடம்.

இது பற்றியும் ஒரு பாடல் தமிழ்க்கிழவி சொல்கிறாள். தெரிந்து கொள்ளுங்கள் ; வாழ்க்கையைத் தெளிந்து கொள்ள!

ஆன முதலில் அதிகஞ் செலவானான்

மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு!

இதைவிட ஒரு கடுமையான பிரயோகத்தை, வாழ்க்கையில் வரவுக்கு மேல் செலவு செய்து தன்னை மிகைப் படுத்திக் காட்ட எண்ணுகிறவர்களுக்கு, எதிராக யாராலும் சொல்ல இயலாது.

வார்த்தைகளைக் கவனியுங்கள். தனக்குக் கிடைக்கும் வருவாயை விட அதிகமாகச் செலவு செய்பவன், எப்படியேனும் தன்னைப் பொய்யாக நிலைநிறுத்த எண்ணும் வேகத்தில், விவேகத்தை இழந்து, கடன் பட்டேனும், அக்காரியத்தைச் செய்வதால், நேரக்கூடிய துன்பங்களைப் பட்டியலிடுகிறார் ஔவையார்.
· தன்மானம் இழக்க நேரிடும்

· புத்தி கெடும்

· போகும் திசையெலாம் கெடுபெயர் ஆகும்

· பிறப்பின் அருமை தொலையும்

· நல்லவர்களெலாம் அவனை விட்டு விலகுவர்

மலரும் ஒவ்வொரு நாளும் பல அனுபவங்களை நமக்குப் பாடமாக கற்றுத் தருகிறது. ஏனோ நம் உள்ளம் அதனை ஏற்க மறுத்து, மாய வலைக்குள் சிக்கித் தவித்துப் பின் வருந்துகிறது. பால்ய பருவத்திலேயே, பள்ளிகளில் பாடமாகக் கற்றுத்தந்த நல்ல நெறிகளையல்லாம் விடுத்து, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தால் என்ன நடக்கிறது என்பதன் உதாரணங்களே, நம் முன்னோர்கள் நமக்கு கோடிட்டுக் காட்டியது என்பதைத்தான், உங்கள் முன் வைக்கின்றேன்.

கவியரசரும் எத்தனையோ பாடல்களில் வாழ்க்கைத் தத்துவங்களை வரியாக்கி இருந்தாலும், செலவு வரவை மிஞ்சினால் என்னவாகும் என ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். இதோ உங்களுக்காக.

நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது

ஐயா நிம்மதி இருக்காது!

அளவுக்கு மேலே ஆசை வந்தா உள்ளதும் கிடைக்காது

அம்மா உள்ளதும் கிடைக்காது! – கண்ணதாசன்

செல்வத்தை தேவைக்கு மிகுதியாகச் சேர்ப்பதிலும், செலவுகளை வரவுக்கு மிகுதியாகச் செய்வதிலும் வரும் துன்பம் என்ன என்று அறிந்தால், வாழக்கை ஒரு இனிய பயணமாகும்.

ஆகவே, நண்பர்களே நாம் சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

செல்வம் வாழ்க்கையின் செழுமைக்கு அவசியம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், தேவைக்கு மிகுதியான செல்வத்தால், வாழ்வின் அருமை பாதிக்கிறது என்பதை உணராமல் இருப்பதுதான் துயரமான செய்தி. செல்வம் ஈட்டும் வலிமை உள்ளவர்கள், அந்த செல்வத்தில், தனக்குப் போக, மீதியை அடுத்தவர்களுக்கு பயனீட்டும் வழியில் செலவிட முன் வந்தால்,

வறுமைக் கோட்டில்தான் இருக்கும் இந்தியாவில்;

வாழ்மை மிகுந்திருக்கும்!

செழுமை அதிகரிக்கும்!

சேர்ந்து வாழும் பண்பிருக்கும்!

அதேவேளை, நாம் எப்பொழுதும் திட்டமிட்டுச் செலவு செய்யவேண்டும். எந்த ஒரு செலவும் அதன் தேவையை நமக்கு நியாயப் படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் செய்யும் ஒவ்வொரு செலவும் நம்மைத் துன்பத்திற்கு இட்டுச்செல்லும் வாயிலாக இருக்கும் என்ற சிந்தனைத் தெளிவோடு இருந்தால்,

சிகரம் நோக்கிச் செல்லும் படிக்கட்டில் மற்றொன்றில் நம்மைச் செதுக்கிவிட்டோம் என்ற பெருமையோடு நடைபோடலாம்…….

தொடர்ந்து சிந்திப்போம்!

அன்புடன்
சுரேஜமீ

—————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.