Blog

  • இந்த வார வல்லமையாளர்! (245)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக தொழிலதிபர் திரு குமார் துரைசாமி அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    குமார் துரைசாமி அவர்களின் சொந்த ஊர் திருப்பூர். பின்னலாடை தொழில் செய்து வருபவர். டாலர் சிட்டி என பெயர் பெற்றிருந்தாலும் சுற்றுச்சூழல் பிரச்சனை திருப்பூரை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தினமலர் நாளிதழ் மற்றும் தமிழக வனத்துறை ஆகியோர் உதவியுடன் திருப்பூர் மாநகர மக்கள் இணைந்து வனத்துக்குள் திருப்பூர் எனும் ஒரு முயற்சியை முன்னெடுத்தனர்.

    இதன்படி அப்துல்கலாம் ஐயா அவர்கள் கனவை நிறைவேற்றும் வகையில் திருப்பூர் எங்கும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகளில் மரக்கன்றை நட்டுவிட்டுப் போய்விடுவார்கள். மரம் விரைவில் பட்டுப்போய்விடும். ஆனால் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினர் மரங்களை நடுவதுடன் நில்லாமல் அவற்றுக்கு தினமும் தண்ணீர் லாரிகளை கொண்டு நீர் பாய்ச்சி மரங்களை கண்காணித்து வளர்த்தார்கள்.

    பல தனியார் நிறுவனங்கள், கம்பனிகள் ஆகியோரை தொடர்புகொண்டு தொழிலகங்களின் நிலங்களில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டுகோள் விடுத்தார்கள். திருப்பூர் தொழிலதிபர்களும், பொதுமக்களும் இதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உதவி செய்தார்கள். சில ஆண்டுகளில் இது திருப்பூரா, கானகமா எனக் கேட்கும் அளவு திருப்பூர் பசுமை பொருந்திய மாநகர் ஆகிவிட்டது.

    இரண்டுகட்டமாகத் துவங்கிய இத்திட்டம் 1 .40 இலட்சம் மரங்களை நடுதல் என்ற இலக்குடன் ஆகஸ்ட் 15 ‘2017 அன்று மூன்றாம் கட்டமாக விரிவடைந்தது. இரு மாதங்களில் 75 ,000 மரக்கன்றுகள் நிறைவு பெற்று இலக்கின் பாதியை எட்டவுள்ளது.

    இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் தலைவரும் ஆன தொழிலதிபர் குமார் துரைசாமி அவர்கள் இது குறித்து கூறுகையில் “இன்றைய வனத்துக்குள் திருப்பூர் 3.0 நிகழ்வின் வெற்றி அனைவருக்கும் மகிழ்வளிக்கிறது. குக்கிராமமாக இருந்த இந்த திருப்பூர் இன்று மாவட்டத் தலைநகராக உருவெடுத்துள்ளதென்றால் அதற்கான முழு காரணம் உழைப்பு மட்டுமே, இன்றைய முதலாளிகள் அனைவருமே நேற்றைய தொழிலாளிகள், உழைக்கும் வர்க்கம் இல்லையென்றால் இந்த ஊரின் வளர்ச்சி கேள்விக்குறியே, பல்வேறு இன்னல்களை இந்த நகரம் குறிப்பாக பின்னலாடை தொழில் சந்தித்தபோதெல்லாம் அனைவரோடும் தோளோடு தோள்கொடுத்து வளர்ச்சியை சீராக்கிய பங்கு இங்குள்ள தொழிலாளர்களையும் அவர்கள் சார்ந்த அனைத்து தொழில்சங்கங்களையும் சாரும்.
    தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் எங்கள் கரங்களை கோர்ப்போம்” எனக் கூறினார்.

    மரங்களை நடுவதுடன் நில்லாமல் நீர்நிலைகளை மேம்படுத்தவும் இவ்வமைப்பு பாடுபட்டு வருகிறது. இது குறித்து பேசிய குமார் துரைசாமி அவர்கள் “தான் உண்பதைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் தொகுத்துக் கூறிய அரங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த அறமாகும்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப வாழாமல் தொடர்ந்து தான் வாழ பிற உயிர்களை தெரிந்தும் தெரியாமலும் அழித்து வந்ததால் ஏற்பட்ட வினையின் நீட்சி பருவமழை பொய்த்தல், அதன் விளைவாக நீர் நிலைகள் அழிந்து அதன் ஆதாரத்தில் வாழ்ந்த பல்வேறு உயிரினங்கள் அழிந்து அதன் காரணமாக ஏற்பட்ட இயற்கைக்கு முரணான நிகழ்வுகள், விழித்துக்கொண்ட தருணத்தில் இயற்கையைக் காக்கவும் மீட்கவும் இயன்ற அளவு,  தலைப்பட்டு வருகிறோம். அந்த வகையில் எங்கள் வெற்றி அமைப்பு திருப்பூர் மக்களோடு இணைந்து நீர்வழித் தடங்களை செப்பனிட்டு தூர்வாரிய ஆண்டிபாளையம் குளத்தில் பல்வேறு உயிரினங்கள் மீண்டும் வாழத் துவங்கி பதிமூன்று ஆண்டுகள், படத்தில் காண்பது ஆண்டிபாளையம் குளத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் விருந்தாளிகள், குளத்தின் நடுவே செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இரண்டு தீவுகளில் சர்க்கரை பழம் உள்ளிட்ட பல்வேறு சிறு பழங்களை தரும் மரங்களை நட்டோம், நன்கு வளர்ந்துள்ள இந்த மரங்களில் ஏராளமான பறவையினங்கள் வசிக்கின்றன. காலையிலும் மாலையிலும் அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

    மாணிக்கபுரம் குளம், மூளிக்குளம், வேட்டுவப்பாளையம் குளம், அவிநாசி தாமரை குளம் என மாவட்டத்தின் பல்வேறு குளங்கள் பல்வேறு அமைப்புகளால் குறிப்பாக இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து தூர் வாரப்பட்டு பருவமழையின் காரணமாக நிரம்பியுள்ளது, அங்கெல்லாம் பல்வேறு உயிரினங்கள் மறுவாழ்வு பெற்றுள்ளன, பறவை இனங்கள் வந்த வண்ணம் உள்ளன, நாளது தேதியில் பல்வேறு அமைப்புகள் மாவட்டம் முழுவதும் மரங்களை நடுவது, அதனை பராமரித்து வளர்ப்பது, நெகிழி ஒழிப்பு, குப்பை மற்றும் கழிவு நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு என ஒரு எழுச்சியுடன் இளைஞர்கள் செயலாற்றுகிறார்கள்.

    இன்னும் 10 வருடங்களில் நிச்சயம் திருப்பூர் மிகப் பசுமையான மாவட்டமாக உருவெடுக்கும் நிலப்பரப்பில் 34 % மரங்கள் , 50 அடியில் நிலத்தடி நீர், நீர் மேலாண்மை , மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் மேலாண்மை உள்ளிட்ட இயற்கை சார்ந்த அனைத்து பிரிவுகளிலும் முன்னோடியாகத் திகழும் , வலிமையான, வளமான, பசுமையான இந்திய தேசத்தை கட்டமைக்க திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் நிச்சயம் முன்னோடியாக இருப்பார்கள்” என்றார்

    திருப்பூர் வணிகத்துக்கு மட்டுமல்ல, சுற்றுசூழலிலும் இந்தியாவுக்கே முன்னோடி என்பதை உணர்த்தும் வகையில் செயல்படும் வனத்துக்குள் திருப்பூர் மற்றும் வெற்றி அமைப்புகளை பாராட்டும் வகையில் குமார் துரைசாமி அவர்களை வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை இதழ் மகிழ்ச்சி அடைகிறது. இவரை கண்டு தற்கால இளைஞர் சமூகம் சுற்றுசூழல் மேம்பாட்டில் ஆர்வம் காட்டவேண்டும் என வல்லமை விரும்புகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • ’சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு’’….!

     

    1

    “இங்கல்பம் யாவுமே இந்திரியம் மூலமாய்
    சங்கல்பம் ஆகிட சஞ்சலம் -பொங்குது ,
    ஆகவே ஆசை அறுமின் ,அகந்தைப்பேய்
    சாகவே ஆன்மன் ஜனிப்பு”….கிரேசி மோகன் ….!

    ‘சூரி நாகம்மாள்’’ ‘’ஸ்ரீரமணாஸ்ரம லேகுலு’’(கடிதங்கள்)….குருவின் கண்ணசைவுக்குக் காத்திருக்கும் சீடனின் திருஷ்டியை வேதாந்த பரிபாஷையில் ,வானர லக்‌ஷியத்திற்கு உவமானமாக சொல்கிறார்கள்….இதைத்தான் ZEN SATORI என்கிறது….விவேகானந்தரின் ‘’விழிமின்! எழுமின்!’’….!

    ”செத்தமனம் வேண்டும் சகஜ சமாதிக்கு,
    புத்தமனம் பூர்ண பிரஞ்ஞைக்கு, -மொத்தமனம்,
    வேண்டுமே லக்‌ஷியமாய் வானரம்போல், கைவல்யம்
    தீண்டுமே உன்னைத் தொடர்ந்து’’….கிரேசி மோகன்….!

    Share
  • ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்!

    Research Articles

    வல்லமை மின்னிதழ், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) அங்கீகாரத்தை அண்மையில் பெற்றது நீங்கள் அறிந்ததே. வல்லமை, ஆய்வுக் கட்டுரைகளுக்காகவே தனிப் பகுதியைக் கொண்டிருக்கிறது. தரமான ஆய்வுக் கட்டுரைகளையும் இதர ஆக்கங்கள் பலவற்றையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

    ஆய்வாளர்கள் பலரும் தத்தம் கட்டுரைகளை நமக்கு விரும்பி அனுப்பி வருகின்றனர். மேலும் புதிய ஆய்வாளர்கள் பலர், ஆய்வுக் கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும்? என்னென்ன நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? எந்தெந்தக் கருப்பொருள்களில் இருக்கலாம்? என்றும் பலவுமாய் வினவி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு, சில குறிப்புகளை இங்கே வழங்குகிறோம்.

    ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்:

    புதிய கோணத்தில், ஆய்வுச் சிக்கல் ஒன்றுக்குத் தீர்வு காணும் வகையில் கட்டுரை அமைதல் நலம்.

    ஆய்வுக் கட்டுரையானது, ஆய்வாளரின் சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு, தழுவல், போலச் செய்தல் போன்றவை கூடாது.

    ஆய்வுக் கட்டுரை, புதிய ஆக்கமாக இருக்க வேண்டும். வேறு எங்கும் வாசிக்கப்பட்டது, வேறு இதழ்களில் வெளிவந்தது எனில் அதனை முதலிலேயே குறிப்பிட வேண்டும். வல்லமை ஆசிரியர் குழுவினர் விரும்பினால், அவற்றை மறுபகிர்வு என்ற பிரிவில் வெளியிடப் பரிசீலிப்போம்.

    ஆய்வுக் கட்டுரை, எந்தக் கருப்பொருளிலும், எந்தத் தலைப்பிலும் இருக்கலாம். இந்தத் தலைப்பினைத் தேர்ந்ததற்கான காரணத்தையும் முன்னுரையில் குறிப்பிட்டால், வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ஆய்வுகள் நன்னோக்கத்துடன், ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும். அதன் மூலமாகச் சமுதாயம், நன்மை அடைய வேண்டும். அந்தக் கண்ணோட்டத்துடன் ஆய்வுகள் அமைந்தால், பெரிதும் மகிழ்வோம்.

    ஏற்கனவே வெளியான தலைப்புகளைத் தவிர்க்கலாம். அதே கருப்பொருள், தலைப்பினைத் தேர்ந்தெடுத்தால், அதனைப் புதிய கோணத்தில், புதிய உண்மைகள் வெளிப்படுமாறு கட்டுரைகளைப் படைக்க வேண்டும்.

    வழக்கமான ஆய்வியல் நெறிகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். உரிய சான்றுகள், தரவுகளுக்கான மூலங்கள், அடிக்குறிப்புகள், உசாத் துணைகள், ஆய்வுக்கு உதவிய நூல்கள், இணையச் சுட்டிகள் உள்ளிட்டவற்றைத் தவறாது குறிப்பிட வேண்டும்.

    அடிப்படைச் சான்றுகள் இல்லாத, கற்பனைக் கதைகளைச் சான்றாகக் கொண்ட கட்டுரைகளை அனுப்ப வேண்டாம். பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டவை எனில், அச்செய்தி உண்மையா என ஆராய்ந்து தெளிந்து அனுப்ப வேண்டுகிறோம். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    கட்டுரைகள், சந்திப் பிழை உள்ளிட்ட இலக்கணப் பிழைகள், தட்டுப் பிழைகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றனவா எனச் சரிபார்த்து அனுப்ப வேண்டும். அளிக்கும் தரவுகளிலும் மேற்கோள்களிலும் பிழையில்லாமல் இருக்க வேண்டும்.

    கட்டுரைக்குத் தேவையான படங்கள், பட்டியல்கள் உள்ளிட்டவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
    கட்டுரை, தமிழிலோ, ஆங்கிலத்திலோ இருக்கலாம்.

    ஒருங்குறியில் இருக்க வேண்டும். இதர எழுத்துருக்களிலோ, பிடிஎஃப் வடிவிலோ அனுப்ப வேண்டாம்.

    முறையாக வாக்கியங்கள், பத்திகள், சொற்கள் பிரிக்கப்பட்டு, நிறுத்தற்குறிகள் இடப்பட்டு இருக்க வேண்டும்.

    ஆய்வாளரின் படத்துடன் அவரைப் பற்றிய சிறுகுறிப்பைக் கட்டுரையின் இறுதியில் அளிக்கலாம். ஆய்வாளரின் தொடர்பு விவரங்களைக் கட்டுரையில் அல்லாமல், மடலின் ஒரு பகுதியாகவே வல்லமைக்குத் தெரிவிக்கலாம்.

    தகுதி வாய்ந்த, தரமான ஆய்வுக் கட்டுரைகளை வல்லமை உளமார வரவேற்கிறது. இதன் வழியே அறிவுலகம் செழித்து, அனைத்துலகும் பயன்பெற விழைகிறோம். ஆய்வாளர்களின் ஒத்துழைப்பினைத் தொடர்ந்து வேண்டுகிறோம். உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – vallamaieditor@gmail.com

    ===================================

    அன்புடன் என்றும்,
    அண்ணாகண்ணன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171023 -Udupi Krishna -lr

     

    “சாமயஜுர் ரிக்கதர்வ கானரச கீதையை
    ஆமை உருவெடுத்து அன்றளித்த -வாமன
    மீனவ ராகசிம்ம மூணுராம கண்ணனாய்
    ஆனகல்கி மூர்த்தி அவர்”….கிரேசி மோகன்…

    *கல்கி” கிருஷ்ண மூர்த்தி….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 131-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    man lying on tree

    வெண்துகிலென அருவியது பாய்ந்துவர, அவ்வருவி நீரில் குளித்த பாறைகள் பளிச்சென்று பளபளக்க, இவ்வெழிற் காட்சிகளிடையே மரத்தின்மீது ஏகாந்தமாய்ச் சாய்ந்திருக்கும் மனிதரை அழகுறப் படம்பிடித்து வந்திருக்கிறார் திரு. முத்துகுமார். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    இயற்கை அன்னையின் இன்ப அணைப்பினில்  மயங்கிநிற்கும் வேளையிலே,

    ”எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
    எங்கள் இறைவா இறைவா இறைவா!

    சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்குச்
    சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்
    அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
    மாகப் பலபலநல் அழகுகள் சமைத்தாய்”
    என்று நமதுள்ளம் துள்ளும்; ஆனந்தக்களி கொள்ளும்.  

    இந்த அழகின் சிரிப்பு நம் கவிஞர்களின் சிந்தனைக்கும் சேர்த்திடும் சிறப்பு எனும் நம்பிக்கையோடு அவர்களைக் கவிபாட அழைப்போம்!

    *****

    ”தம்பி! நீ படுத்திருக்கும் இடம் உனக்குப் பாதுகாப்பானதில்லை; சறுக்கி விழுந்திடாதே; சுருக்காய் எழுந்திடு” என்று அன்போடு எச்சரிக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    தம்பி கவனமடா சறுக்கி விழப் போகின்றாய்
    ஆனை அடிசறுக்கி அதலபாதாளத்தில்
    போனது போல் நீயும் பொறி கலங்க வீழ்ந்திட்டால்
    முட்டுக்கால் பேந்த மொடமாய்ப் பொழப்பின்றி
    கட்டிலில் வீழ்ந்து கவலைமிக வுற்று
    துட்டுக்கலையும் துயர்சேர எப்போதும்
    தட்டுப்பாட்டோடு தவிக்கு நிலை வரலாம்
    மெல்ல இறங்கு வேண்டாமிவ் வீண்வேலை
    கல்லெல்லாம் ஈரம் கவனம்.

    *****

    ”மரத்தின்மேல் மல்லாந்துபடுத்த கரணியம் என்ன தம்பி? கரணம் தப்பினால் மரணம் என்பதை நீ அறியாயோ? அலட்சியத்தை விடுத்து இலட்சியத்தில் உறுதிகொண்டு உலகை வெல்வாய்!” என்று படுத்திருக்கும் இளைஞனை எழுச்சிகொள வைக்கின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

    எழுச்சி கொள் தம்பி:

    வனம் பூமித்தாய் தந்த சீதனம் தம்பி!
    அருவி ஆண்டவனின் அருட்கொடை தம்பி!
    மரங்கள் பூமித்தாய் பெற்றெடுத்த அழகுப் பெண்கள் தம்பி!
    இத்தனையும் ரசிப்பதற்கு இப்பிறவி போதாது தம்பி!
    இளங்கன்று பயமறியாது, நான் அறிவேன் தம்பி!
    காட்டாறு கிணற்றுக்கள் அடங்காது,
    நான் அறிவேன் தம்பி!
    ஏகாந்தம் இனிமை தரும்,
    நான் அறிவேன் தம்பி!
    மரத்தின் மேல் ஏன் படுத்தாய் தம்பி!
    கரணம் தப்பினால் மரணம், எச்சரிக்கை தம்பி!
    அச்சமின்மை ஆண்மைக்கு அழகு,
    நான் அறிவேன் தம்பி!
    விவேகம் இல்லா வீரம் விபரீதம் தம்பி!
    நான் உரைக்கும் வார்த்தைகளை
    செவிமடுப்பாய் தம்பி!
    பாரதியின் கனவுகளை மறந்தாயோ தம்பி!
    அய்யா கலாம் சொன்னதை
    நீ மறந்தாயோ தம்பி!
    உன் லட்சியத்தைக் கனவாக்கு தம்பி!
    சாதனைகள் படைத்திட
    உடனே எழுந்திடுவாய் தம்பி!
    நாளைய உலகம் இருக்குது, இளைஞர்களை நம்பி!
    பாரதம், பார் புகழ வளரட்டும் தம்பி!

    ***** 

    ”நிலையிலா மனிதா…மரத்தின்மேல் துஞ்சிடாதே! நீ கீழே விழுந்தால் எதுவும் மிஞ்சிடாதே!” என்று அக்கறையோடு அறிவுரை பகர்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மலை மேலே…

    மலையினில் பெய்த மழையதுதான்
    மகிழ்ந்தே ஆறாய் ஓடியபின்,
    மலையி லிருந்தே குதித்தாலும்
    மகிழ்ந்தே நாமும் அருவியென்போம்,
    நிலையில் கொஞ்சம் மாறிடினும்
    நீரில் மாற்றம் ஏதுமில்லை,

    நிலையிலா மனிதனே நெஞ்சில்கொள்
    நீவிழ எதுவும் மிஞ்சிடாதே…!

    *****

    ”கண்விழிக்கும்போதே கணினியைக் கையில்கட்டிக்கொண்டு விழிக்கவேண்டிய அவசர யுகத்தில், இயற்கையோடு இயைந்திருக்கும் சிறுபொழுதில் மட்டுமே மனம் பெருமகிழ்வு கொள்கிறது” என்று எதார்த்தம் பேசும் கவிதையைத் தந்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    எந்திர வாழ்க்கை...!
    காலை எழும்போதே கணிணியைக் கையில்
    ……….
    கட்டிக் கொண்டே கண்விழிக்கும் அவலநிலை.!
    மாலைநேரம் வேலை முடிந்து திரும்பினாலும்
    ……….
    மலைபோலக் குவியும்நம் அலுவலக வேலை.!
    வேளைக்கு அவசரமாக உண்டபின் அலுவலக
    ……….
    வேலையைக் கடுகிமுடிக்க எழும் மனக்கவலை.!
    களைப்பாற நேரமில்லை..! தகுந்த இடமில்லை..
    ……….
    கண்டதெலாம் நாகரிக நகரமாகிப் போனதாலே.!

    சற்றுநேரம் எந்திரவாழ்வில் கிடைத்து விட்டால்
    ……….
    சங்கடத்தில் மனமது ஓய்வுகொள்ள நினைக்கும்.!
    பற்றுடனே மனமெதிலும் ஈடுபாடு கொள்ளாது
    ……….
    படபடப்புடனே எப்போதும் நிலைத் திருக்கும்.!
    கற்றறிந்த மானிடர்க்கு மனத்தில் தோன்றுமிடர்
    ……….
    கடக்கும் வழியறிய வாழ்வில்பல வழியுண்டாம்.!
    எற்றைக்கும் இந்நிலை வாழ்வில் நீடிக்காதென
    ……….
    எண்ணும் போதிலெ மனமும் அமைதியாகும்.!

    உதிக்கின்ற கதிரவனுக்கு முன்னெழ வேண்டும்
    ……….
    உலகம் சுழல்வதுபோல் நாமும் சுற்றவேண்டும்.!
    அதிகாலை எழுந்து நடைபயில முடியவில்லை
    ……….
    ஆவலுடன் அலுவல் நோக்கி ஓடவேண்டும்.!
    மதியமைதி பெறுதற்கு இயற்கையெழில் சூழ்நிலை
    ……….
    மனிதருக்கே வேண்டுமப்பா இக்கலி யுகத்தில்.!
    இயற்கையின் இன்பத்திலென் மனம் மூழ்குதப்பா
    ……….
    இறைவன் படைப்பில் எத்தனை அற்புதமப்பா.!

    ***** 

    நல்ல சிந்தனைகளை வழக்கம்போலவே தம் பாக்களில் பதிவுசெய்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    எனக்குள்ளும் இருக்கின்றான்!

    மனம் பறக்கிறது
    மரக்கிளையில் சாய்ந்த
    மறுகணம்
    மனம் பறக்கிறது….
    கவலைகள்
    ரணங்கள்
    இயலாமைகள்
    தவிப்புகள்
    அனைத்தையும் மறந்து
    ஆனந்த லயத்தில்

    மனம் பறக்கிறது

    காட்டாற்று
    வெள்ளம் கண்ட
    வேளையில்தான்
    ஆரவாரமிக்க மனம்
    அமைதியை
    அரவணைத்தது

    பெரும் பாறைகளைவிடப்
    பாறையாய் இருந்த மனம்
    காட்டாற்று வெள்ளத்தைப்போல
    கருணையை உள்ளத்தில் கொண்டு
    காலங்கள் பின்னோக்கி ஒடுகின்றது
    கண்ணீரைக்
    கண்கள் விரும்பிச் சூடுகின்றது

    இசைக்கின்ற ஆறு
    இனிய மரங்கள்
    ஈரக்காற்று
    ரசித்த பிறகுதான்
    தெரிகிறது…
    எனக்குள்ளும் இருக்கின்றான்
    இறைவன்!

    வெள்ளத்தின் ஓட்டம்
    தீர்ந்தது
    உள்ளத்தின் வாட்டம்

    இயற்கையை
    தரிசிக்க வந்தவனைத்
    தன்னை,
    தன்னிலையைத் தானே
    தரிசிக்க செய்தது இயற்கை!

    கவலை எனும் சிலந்தி வலை மனித மனத்தைச் சுற்றிப் பின்னி, அதனைத் துன்புறுத்தும் வேளையில், கைபுனைந்து இயற்றா கவின்பெறு வனப்பாய் விரிந்துகிடக்கும் இயற்கையொன்றே அம்மனத்துக்கு மகிழ்ச்சியெனும் ஒத்தடத்தை நல்கவல்லது. பாய்ந்துவரும் ஆற்றுவெள்ளம் மகிழ்ச்சிவெள்ளத்தை மனித உள்ளத்திலும் ஊற்றெடுக்க வைப்பது எனும் உண்மையைத் தன் கவிதையில் உரக்கச் சொல்லியிருக்கும் திரு. வி. மணிகண்டனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (132)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22359423_1449646335089561_257837991_n
    கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • கல்விக்கு வரதட்சணை

    சி. ஜெயபாரதன், கனடா

     

    பல்கலைக் கழகம் பகட்டுப்
    பணச் சந்தை ஆனது !
    பள்ளிக்கூடம்
    பணக்கூடம் ஆனது !
    கல்விக்கூடம்
    காசுக்கூடம் ஆனது !
    மடி நிறையப் பணமிருந்தால்
    மகளுக்குப் படிப்பு !
    வாரிக் கொடுத்தால் தான்
    பட்டம் கிடைக்கும் !
    படிப்புக்கும், பதவிக்கும்
    லஞ்சமா ???
    வள்ளுவரைப் படிக்கவும், ஆங்கிலத்தில்
    ஷேக்ஸ்பியர் படிக்கவும்,
    வரதட்சணை வழங்க வேண்டுமா ?
    வழி தவறிய தமிழ்நாடே !

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -100

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலின் நோக்கமும் வருங்காலமும்

    education-1-1-1-1-1

    கற்றலைப் பற்றிய பல பரிமாணங்களை இதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்றோம். ஒரு தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுதிலிருந்து கற்றல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்துகொண்டிருக்கின்றது. ஒருவர் இப்படித்தான் கற்றுக்கொள்வாரென்றோ இவ்வளவுதான் கற்றுகொள்வாரென்றோ இந்தச் சூழ்நிலையில் தான் கற்றுக்கொள்வாரென்றோ சொல்லமுடியாது. கற்றல் உணர்வோடு ஒன்றி தொடர்ந்து நடக்கின்ற ஒரு செயல்.

    நாம் பள்ளிகளில் ஒரு கதை படித்திருக்கின்றோம். கண் பார்வை இல்லாத பத்து பேர்கள் ஒரு யானையை தொட்டுப் பார்த்துவிட்டு தங்கள் அனுபவத்திற்கேற்ப  அதை எவ்வாறு வர்ணனை செய்தார்களோ அது போல் கற்றலைப் பற்றி பல பார்வைகள் உள்ளன. எல்லாப் பார்வைகளிலும் உண்மையும் குறைகளும் இருக்கின்றன. ஆகவே தற்போதைய மூளை நரம்பியல் வல்லுநர்கள் கருத்துப்படி கற்றல் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட செயல் என்றும் அதில் மற்றவர்களால் தாக்கத்தை மட்டும் ஏற்படுத்த முடியும் என்றும் கூறுகின்றனர். எனவே “கற்பித்தல்” (Teaching) என்ற செயலுக்கு ஒரு புதிய பார்வை ஏற்பட்டுளளது. அது “கற்றலை” ஊக்குவிக்கும் வளப்படுத்தும் மற்றும் வழிகாட்டும் செயல் மட்டுமே என விளக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பிக்கும் முறைகளில் மாற்றங்களும் புதிய பார்வைகளும் தேவைப்படுகின்றது. ஆசிரியர்கள் கூட்டுக் கற்றலில்(Cooperative and participative learning ) பங்குதாரர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும் அவர்கள் மாணவர்களிடையே உணர்வுசார் கற்றலை ஏற்படுத்தி கற்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். மேலும் மூளையின் நெகிழ்தன்மை (Neuro-plasticity) காரணமாக கற்றலின் திறனையும் அளவையும் காலத்தையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன. மூளை வல்லுநர்கள் கருத்துப்படி கடைசி மூச்சு வரை கற்றல் தானாக நடந்துகொண்டுதானிருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக, நாம் கற்றலைப் பள்ளிச்சுவர்களுக்குள்ளேயும் கல்லூரிக் கட்டிடங்களுக்குள்ளேயும் மற்றும்  புத்தகங்களுக்குள்ளேயும் சில தேர்வுகளுக்கு விளக்கமாக வரும் பதிவேடுகளிலும் சிறைப்படுத்திவிட்டோம். இவைகளுக்கு அப்பாலும் கற்றல் சிறப்பாகவும் வலுவாகவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. கற்றல் என்பது மனிதனின் ஒரு உயிர் ஆற்றல். நம் உயிர் மூச்சின் பதிவேடு. நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதற்கு ஒரு பதிவில்லாத சான்று.

    கற்றலில் எத்தனை விழுக்காடு ‘நினைவாக’ மாறுகின்றது என்று செய்யப்பட ஆராய்ச்சிகளில் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கும் பாடங்களில் கிட்டத்தட்ட அறுபது முதல் எழுபது விழுக்காடு வரை கேட்கப்பட்ட நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் மறக்கப்படுகின்றது என்றும், (Volatile Memory) கிட்டத்தட்ட தொண்ணூறு விழுக்காடு நான்கு நாட்களுக்குள் மறக்கப்படுகின்றது என்றும் அறியப்பட்டுள்ளது.  மூளையில் பதிவாகும் கருத்துக்களில் அதிகமானவை தற்காலிக நினைவாகவே (Short term memory) இருந்து மறைந்து விடுகின்றன. அதில் சிறிதளவு மட்டும் அந்தத் தனி நபரின் ஆர்வம், தேவை, மற்றும் ஈடுபாடுகளுக்கேற்ப நீண்ட கால நினைவாக மாறி பதிவாகின்றது. இதில் ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் எப்பொழுது ஒரு கற்றலுக்குக் கிடைக்கும் உள்ளீடுகள் உணர்வுசார்ந்ததாக அமைகின்றனவோ,(Emotionally Competent Stimuli) அப்பொழுது விரைவில் நீண்டகால நினைவாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அறிந்துள்ளனர்.

    தற்காலத்தில் தொழில்நுட்பங்களாலும் (Technology) மற்றும் கணினியின் தாக்கத்தாலும் கற்றலின் முறைகள், பாதைகள் மற்றும் தாக்கங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நேர்முகக் கற்றலிலிருந்து மறைமுக மற்றும் தொலைதூரக் கல்வி முறையில் (Distance learning) கல்வி கற்கும் முறைகள் வளர்ந்தும் முக்கியத்துவம் அடைந்தும் வருகின்றன. அத்துடன் வலைத்தளங்களின் ஆதிக்கத்தால் எல்லாவிதமான அறிவு உள்ளீடுகளும் விரைவிலும் நல்ல தரத்திலும் அதிக அளவிலும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாக கற்றலுக்கான துணை உள்ளீடுகள் அதிகரித்து வரும் நிலையில் கற்றல் தாற்காலிகத் தேவைகளை ஈடுகட்டுவதற்கான ஒரு கருவியாக மட்டும் அமைந்துவிட்டது. இதனால் கல்வியின் தரத்திலும் மேன்மையிலும் மாற்றங்களும் தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன. இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாத நிலைக்கு நாம் ஏற்கனவே வந்துவிட்டோம்.

    இந்த வலைத்தள உள்ளீடுகளால் சில நேரங்களில் மாணவர்களின் கற்றலின் போக்கில் கவனச் சிதறல்களும் கவனச் சிதைவுகளும் ஏற்பட வாய்ப்புக்களும் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமின்றி, தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள், செய்தி ஊடுருவல்கள், வியாபாரத் தாக்கங்கள் ஆகியவற்றால் மாறுபட்ட சிந்தனைகளும் உறவுப் பார்வைகளும் கற்றலின் ஆழம், வளமை மற்றும் வலிமையின் அடித்தளங்களை ஆட்டிக்கொண்டிருக்கின்றன. இது நல்லதா இல்லையா என்பதைக் காலம்தான் நிர்ணயிக்க முடியும். ஏனென்றால்  மாற்றம் என்பது இயற்க்கையின் வழி. காலந்தொட்டு மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருப்பதால் தான் சிந்தனைகளில் வளர்ச்சியும் வாழ்வாதாரங்களில் முன்னேற்றங்களும் சமூக நீதியில் புதிய பார்வைகளும் தோன்றிக்கொண்டிருக்கின்றன. “மாற்றம் என்பது நிரந்தரமானது. அதை மாற்றமுடியாது” என்று சமூகவியல் வல்லுநர்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர்.

    கற்றல் ஒரு தனிமனிதனின் தன்னிச்சையான செயல் என்பதால் இதற்கு பள்ளிக்கூடங்கள் தேவையா ஆசிரியர்கள் தேவையா அப்படியானால் அவர்களின் வருங்காலச் செயல்பாடுகள் எப்படியிருக்கும் எப்படியிருக்கவேண்டும் என்ற கேள்விகளும் அவ்வப்போது மேடை விவாதங்களுக்கு ஒரு கருத்தாக முன்வைக்கப்படுகின்றது. பல மேலை நாடுகளில் ஆசிரியர் தட்டுப்பாடுகளை நீக்கவும் கற்றலின் தரத்தை சமப்படுத்தவும் ரோபோ இயந்திரங்களை ஆசிரியர்களாக பயன்படுத்தும் சிந்தனையும் வளர்ந்துள்ளது. இது வியப்பாக மட்டுமின்றி  வேதனையளிப்பதாகவும் இருக்கின்றது. ஆனால் முன் கூறியபடி மாற்றங்களின் பாதைகள் எப்படி இருக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே நிர்ணயிக்க முடியாது.

    கற்றல் வாழ்வின் முழு வளமைக்கா அல்லது பொருளீட்டலுக்கு தயார் செய்யப்படவேண்டிய ஒரு வழிமுறையா என்ற கருத்துக்களை  காலந்தொட்டு கல்வியாளர்கள் உலகளவில் விவாதித்துள்ளனர்  ஆனால் கல்வியின் குறிக்கோளை மிக அழகாகக் கூறியுள்ள வள்ளுவர் பெருந்தகை

    கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

    நிற்க அதற்குத் தக.

    என்று சொல்லி கற்றலுக்கும்  வாழ்விற்கும் உள்ள நெருக்கமான உறவை தெள்ளத்  தெளிவாக விளக்கியுள்ளார். ஆகவே கற்றலில் ஒரு மனிதனின் நல்வாழ்க்கைக்கும் பண்புகளுக்கும் மேன்மையான சமூகச் சிந்தனைகளுக்கும் தேவையான உள்ளீடுகள் இருத்தலின் அவசியம் தென்படுகின்றது. இந்தக் கருத்தை அரசும் பள்ளி நிர்வாகங்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் சமூகச் சிந்தனையாளர்களும் நினைவில் நிறுத்துதல் மிக்க அவசியம். அது நம்முடைய கல்விக்கொள்கைகளில் உள்ள சில தவறுகளை சீர் செய்ய உதவியாக இருக்கும்.

    ஆனால் இதே நேரத்தில் வள்ளுவப் பெருந்தகையின் மற்றொரு குறளையும் நாம் மனதில் கொள்ளுதல் அவசியமாகின்றது.

    உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்

    கல்லான் அறிவிலாதான் .

    உலகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களைத் தன்னடக்கி  நமது கல்வி முறைகள் மாணவச் செல்வங்களை உலகளவில் பெருமைசேர்க்கும் நல்ல மனிதர்களாக உருவாக்க ஒரு கருவியாக இருக்கவேண்டும்.

    “கற்றல் என்ற ஆற்றல்” – இதில் பல கோணங்களைக் கண்ட நாம் விரைவில் மற்றொரு தலைப்பின் கீழ் சந்திப்போம் !

    இந்தத் தொடருக்கு உறுதுணையாக இருந்த வல்லமை ஆசிரியர் குழுவிற்கும் நிர்வாக ஆசிரியராக இதற்கு உதவி செய்த திருமதி பவள சங்கரிக்கும் என் உளங்கனிந்த நன்றி.

    (நிறைவு)

    Share
  • தாம்பத்தியம் = சண்டை + பொய்

    நிர்மலா ராகவன்

     

    அதிவேகமாக உள்ளே நுழைந்த மகளைப் பார்த்தாள் வேதா. வழக்கம்போல், ஆத்திரமும், தன்னிரக்கமுமாகத்தான் இருந்தாள் பத்மினி. யாருடன்தான் ஒத்துப்போக முடிந்தது இவளால்!

    `ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொண்டால் அதிக செலவாகாமல் தப்பிக்கலாம். வேலையும் மிச்சம்!’ என்றுஎப்போதோ எண்ணியது தவறோ என்ற சிந்தனை உதித்தது. “வேலை முடிஞ்சு நேரா வர்றியா?” அனுசரணையாகக்கேட்பதுபோல் கேட்டாள். “என்ன சாப்பிடறே?”

    “ஒரு சொட்டு விஷம்!”

    “அதெல்லாம் இந்த வீட்டிலே கிடையாது. தோசை வேணுமா? மாவு இருக்கு. ஆனா, புளிக்கும்”.

    “விஷமே சாப்பிடறேன்னு சொல்றேன். என்னமோ, புளிப்பு, அது, இதுன்னு! ஒண்ணும் வேண்டாம், போ!”முணுமுணுத்தபடியே தன் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி. அவள் கணவன் வீட்டுக்குப் போய் ஒரு வருடம்ஆகியிருந்தாலும், அவள் குணம் புரிந்து,  அந்த அறையை அப்படியே விட்டு வைத்திருந்தார்கள்.

    உள்ளே நுழைந்தவள் அதே வேகத்தில் திரும்ப வந்தாள்.

    “பாத்துப் பாத்து எனக்குப் பண்ணி வெச்சீங்களே, ஒரு கல்யாணம்!” என்று தாயைச் சாடினாள்.

    “மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? படிப்பு இருக்கு. கைநிறைய சம்பளம் வாங்கறார்!”

    தனக்குப் பிடிக்காதவருக்கு அம்மாவே வக்காலத்து வாங்குவதா! பச்சைத் துரோகம்!  பத்மினி பொருமினாள்.

    “தான்தான் ஒசத்தின்னு கர்வமும் இருக்கு. அதை விட்டுட்டியே!”

    வேதாவுக்கு அலுப்பாக இருந்தது. வாரம் தவறாமல் இவள் கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டுக்குவந்துவிடுவது எப்போதுதான் நிற்குமோ!

    “அவர் செய்யறதுதான் ரைட்டு. நான் என்ன செஞ்சாலும், தப்பு கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கணும்மா அவருக்கு!”  பத்மினியின் குரல் தழுதழுத்தது.

     

    அதே சமயத்தில், “பத்மினி இருக்காளே, அவ செய்யறது தப்புன்னு ஒத்துக்கவே மாட்டாம்மா. அதுதான்பிரச்னையே!” என்று தன் தாயிடம் முறையிட்டுக்கொண்டிருந்தான் கார்த்தி.

    “அவ குணம்தான் புரிஞ்சு போச்சில்ல? என்ன செஞ்சாலும் கண்டுக்காதே,”  என்று அறிவுரை வழங்கினாள் மங்களம்.

    “அது எப்படி? இன்னிக்கு உப்புமா பண்ணியிருந்தா. பேரிலே உப்பு இருக்குதான். அதுக்காக கரண்டி கரண்டியாஉப்பை வாரிப் போடணுமா?”

    “அப்படியே தூக்கிக் கொட்டிட்டு, ஹோட்டல்லே போய் சாப்பிட்டிருக்கணும் நீ!”

    “தோணிச்சு. ஆனா அவ கத்துவாளேன்னு பயந்து, ரொம்ப கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடிச்சேன்”.

    மங்களத்திற்கு அவனுக்குப் பரிந்து பேசத் தோன்றவில்லை. ஒரே மகன் என்று பார்த்துப் பார்த்து, அவனுக்குப்பிடித்ததாக சமைத்துப்போட்டது  ஒரு காலம். இன்று அவன் அவளுக்கு மகன் மட்டுமில்லை. இன்னொரு பெண்ணின்துணைவன். அவனைப்போலவே தானும் சிறுபிள்ளைத்தனமாக, விட்டுக்கொடுக்காமல் இருந்தால் எப்படி!

    “நிறைய படிச்ச பொண்ணு வேணும்னு சொன்னே. அவ படிச்சுக்கிட்டே இருந்ததிலே  சமைக்க  கத்துக்க நேரமில்லாம போயிருக்கும்னு அப்பவே தெரியாம போச்சு! இனிமே என்ன செய்யறது! விட்டுப் பிடி!”

    மகன் காதில் அந்த அறிவுரை விழுந்ததாகத் தெரியவில்லை. உப்புமா விஷயத்திலேயே இருந்தான். “நானும்மொதல்லே ஒண்ணும் சொல்ல வேண்டாம்னுதான் பாத்தேன். ஆனா, அவ வாய்க்குப் பயந்து,” என்றுசொல்லிக்கொண்டே போன மகனை இடைமறித்தாள் மங்களம். “என்னடா பயம்?” புரியாமல் கேட்டாள்.

    “முந்தி ஒரு தடவை பீன்ஸ் பொரியலைக் கறுக்க விட்டுட்டா. அடுப்பிலே எதையாவது வெச்சுட்டு, டி.வியைப் பாத்துயோகா பண்ணப்போனா வேற எப்படி இருக்கும்?  `இதை எவன் சாப்பிடுவான்?’னு கத்தினேனா! `எனக்குஇவ்வளவுதான் தெரியும். ஒங்கம்மாமாதிரி சமைச்சுப்போட பொண்டாட்டி வேணும்னா, படிக்காத பொண்ணாபாத்து கட்டியிருக்கணும்,’ அப்படின்னு காளி மாதிரி ஆடினா, பாரு! பயந்துட்டேன்”.

    தாய்க்கும் கோபம் வந்தது. இவர்கள் சண்டையில் தன்னை எதற்கு இழுக்கிறாள்?

    “ஆபிசிலிருந்து நேரா வர்றியா?” பேச்சை மாற்றப்பார்த்தாள்.

    “ஆமா. அவ ஏன் எங்க வீட்டிலே இருக்கப்போறா! அம்மா வீட்டிலே அவளுக்கு ஆசார உபசாரம் நடக்குமில்ல!” சற்றுப் பொறாமையுடன் கூறியவன், “இதுக்குத்தான் அழகில்லாத, அனாதைப் பொண்ணாப் பாத்துக்கட்டியிருக்கணும்கிறது!” என்றான் நொந்த குரலில்.

    கட்டியவளுக்கு ஒரு நியாயம், இவனுக்கு ஒரு நியாயமா? கோபம் வந்தால் போக இவனுக்கு அம்மா வேண்டுமாம்,அதையே மனைவி செய்தால் ஆத்திரம்! நல்ல பிள்ளை!

    சிரிப்பை அடக்கிக்கொண்டு மங்களம் யோசித்தாள். தான் உபசாரம் பண்ணி உணவளிப்பதால்தான், ஒவ்வொருமுறை மனைவி கோபித்துக்கொண்டு பிறந்தகம் போய்விடும்போதும் சாப்பிட இங்கு வந்துவிடுகிறான்!

    “எனக்குக் கொஞ்ச நாளா உடம்பே சரியா இல்லே, கார்த்தி. இன்னிக்குப் பெரிசா ஒண்ணும் ஆக்கலே. நீ போறவழியிலே ஏதாவது ஹோட்டல்லே சாப்பிட்டுக்க,”  என்று அந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டினாள்.

    தனது ஏமாற்றத்தை மறைத்தபடி, “ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு! பேசாம, டைவர்ஸ் வாங்கிடறேன்,” என்றபடி எழுந்தான் கார்த்தி.

    தியானம் பண்ணுவதாகப் பெயர் பண்ணிக்கொண்டு தன் அறையிலிருந்த அப்பா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு  வெளியே வந்தார். “பசியோட வந்திருக்கான், பாவம்! ஒடம்பு முடியலேன்னு ஏன் கதை விடறே?” என்று மனைவிமேல் பாய்ந்தார்.

    “நாம்ப போடாத சண்டையா! அப்புறம் எப்படியோ சமாதானமாகி, நான் இந்த முப்பது வருஷமா ஒங்ககூட குப்பை கொட்டலியா?   இந்த காலத்துப் பசங்க ஆஊன்னா, டைவர்ஸ் அது இதுன்னு போயிடறாங்க! உள்ளூரிலே பொண்ணு எடுத்ததே தப்பு!”  என்றாள் மங்களம்.

     

    ஹோட்டலைக் கடந்தபோது கார்த்திக்கு  விரக்தி எழுந்தது.  சமைக்கத் தெரிந்தவன்களெல்லாம் கைநிறையச்சம்பாதிக்கலாம் என்று பேராசையாக வெளிநாட்டுக்குப் போய் சமைக்கிறான்கள். இங்கிருப்பவனோ, முன்னேபின்னே சமையலறைக்குப் போயிருக்க மாட்டான்.

    மனைவி மோசமாகச் சமைத்தால் திட்ட முடியும். இங்கு அது நடக்குமா?

    பசியுடன் வீடு திரும்பியதும் அவனுக்கு  ஆச்சரியம் காத்திருந்தது. பத்மினி வீட்டில்தான் இருந்தாள்! அதுவும்அழகாக அலங்கரித்துக்கொண்டு!

    அப்படியானால், தான் நினைத்ததுபோல் அவள் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குப் போகவில்லையா?

    “இன்னிக்கு ரொம்ப வெயில், இல்லே? களைப்பா இருக்கு. நாம்ப ரெண்டுபேரும் வெளியே போய் சாப்பிடலாமா?”என்று பத்மினி   அன்பு சொட்டச்  சொட்ட கேட்டபோது, `நல்லவேளை,  சமைக்கிறேன்னு நீ கிளம்பலே!’ என்றஎண்ணம் எழுந்தது  கார்த்திக்கு.

    கூடவே, `எவ்வளவு அழகா இருக்கா! இவளோட சேர்ந்து நடந்துபோனா, அவனவன் பொறாமையில சாவான்!’ என்றும்தோன்ற,   “நானும் அதைத்தான் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே வந்தேன்! உனக்கு வெளியிலேயும் வேலை,வீட்டிலேயும் வேலை, பாவம்! அது நியாயமில்லே,” என்று உருகிவிட்டு, “நல்லா சாப்பிட்டு, ரெஸ்ட் எடு. அப்பத்தானேராத்திரி..!” என்று கண்களைச் சுழற்றினான்.

    `பொய் சொன்னா, சாமி கண்ணைக் குத்திடும்!’ என்று சொல்லி வைத்திருப்பவர் பிரம்மச்சாரியாகவே காலத்தைக்கடத்தியிருப்பார் என்று தோன்ற, சிரிப்பு வந்தது அவனுக்கு.

    Share
  • பதிற்றுப்பத்தில் பெண் தொன்மங்கள்

    -முனைவர். வே.மணிகண்டன்

     

    சங்கச் சமுதாயத்தில் இடம்பெற்றுள்ள தொன்மங்கள் சங்ககால மாறுதல் நிலையையும் தொன்மையான சமுதாய எச்சத்தையும் வெளிக்காட்டுவனவாய் அமைந்துள்ளன. சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் பெண் தொன்மங்களாக கொற்றவை, கொல்லிப்பாவை திருமகள், அருந்ததி, துர்க்கை, கண்ணகி ஆகியோர் பற்றிய பதிவுகள் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. மேலும்,  ஆண் தெய்வங்களான முருகப்பெருமான், திருமால், தேவர்கள் குறித்த தொன்மச்செய்திகளும் இவ்விலக்கிய நூலில் இடம்பெற்றுள்ளது. பதிற்றுப்பத்தில் பெண் தெய்வங்கள் என்னும் இவ் ஆய்வுக்கட்டுரை பெண் தொன்மங்களுக்கு முதன்மை தந்து படைக்கப்படுவதுடன் ஆண் தொன்மங்களைப் பற்றியும் விவரிக்கின்றது.

    கொற்றவை பற்றிய தொன்மம்

    பதிற்றுப்பத்தில் பாலை நிலத்துத் தெய்வமாகிய கொற்றவை பற்றிய தொன்மம் மூன்றாம் பத்தின்  பதிகத்திலும், அரிசில் கீழார் பாடிய எட்டாம் பத்தில் மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலிலும்  இடம் பெற்றுள்ளது.

    மூன்றாம் பத்தின்  பதிகத்தில்,

    அயிரை பரைஇ ஆற்றல் சால் முன்போடு

    என்னும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது. இவ்வரியில் சால் என்னும் சொல் கொற்றவை என்னும்  தெய்வத்தை குறிப்பதாகும். அயிரை என்னும் மலையில் இருக்ககூடிய தெய்வம் கொற்றவை என்னும் பொருள் தரக்கூடிய இப்பாடல் வரிகளின் வாயிலாகப் புராணச்செய்தியை அறிகின்றோம்.

    அரிசில் கீழார் பாடிய எட்டாம் பத்தில் மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

    மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
     கடவுள் அயிரையின் நிலைஇ

    கடவுள் அயிரை என்னும் சொல் கொற்றவையை குறிக்கும் சொல்லாகும். கொற்றவை வாழும் இடமாகிய அயிரைமலையைப் பற்றிய குறிப்புக்கள் இப்பாடலில் தொன்மச்செய்தியாக வெளிவந்துள்ளது.

    கொல்லிப்பாவை பற்றிய தொன்மங்கள்

    பதிற்றுப்பத்தில் கொல்லிப்பாவை பற்றிய தொன்மங்கள் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. கபிலர் பாடிய ஏழாம் பத்தில் வென்றிச் சிறப்போடு படுத்து அவன் கொடைச்சிறப்புக் கூறுதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்
    பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்
       வாடை தூக்கும் நாடுகெழு பெருவிறல்
    ஒவத்தன்ன வினைபுனை நல்இல்
    பாவை அன்ன நல்லோள் கணவன்

    இங்கே பாவை என்னும் சொல் கொல்லிப்பாவை எனும் தெய்வத்தைக் குறிப்பிடுகின்றது. கொல்லிப்பாவையானது புராணங்களில் வரக்கூடியது. எனவே, இப்பாடலில் கொல்லிப்பாவையைப்பற்றிய குறிப்புகள் உள்ளதால் தொன்மக்கருத்துள்ள பாடலாக அமைகின்றது.

    பெருங்குன்றூர் கிழார் பாடிய ஒன்பதாம் பத்தில் கொடைச்சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

    ஓவத்து அன்ன உருகெழு நெடுநகர்,
    பாவை அன்ன மகளிர் நாப்பண்

    பாவை என்னும் சொல்  புராணத் தொன்மமாகிய  கொல்லிப்பாவையை குறிக்கின்றது. சித்திரத்தைப் போன்ற அழகையுடைய பகைவர்க்கு அச்சம் பொருந்திய நீண்ட அவ்வரண்மனையில் கொல்லிப்பாவையைப் போன்ற வடிவழகையுடைய நின் உரிமை மகளிர் என்னும் கருத்தினை இவ்வரிகள் தருகின்றன.

    திருமகள் பற்றிய தொன்மங்கள்

    பதிற்றுப்பத்தில் திருமகள் பற்றிய தொன்மங்கள் நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளன. குமட்டூர்க்கண்ணணார் படைத்துள்ள இரண்டாம் பத்தில் மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

    எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
    நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை

    என்னும் பாடல் வரிகளில் திரு என்னும் சொல் திருமகள் என்னும் தெய்வத்தை குறிக்கின்றது. வெற்றியைத் திருமகள் மிகவும் விரும்புபவள் என்னும் தொன்மச்செய்தியை இப்பாடலின் வாயிலாக அறியலாம்.

    காப்பியாற்றுக்காப்பியனார் படைத்துள்ள நான்காம் பத்தில் மன்னர்க்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

    வண்டுஊது பொலிதார் திருஞெமர் அகலத்து
    கண்பொரு திகிரி கமழ்குரல் துழாஅய்
    அலங்கல் செல்வன் சேவடி பரவி,
    நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதி பெயர

    திரு என்னும் சொல்லாவது திருமகளைக் குறிப்பதாக வந்துள்ளது. வண்டுகள் ஒலிக்கும் மாலையினை அணிந்த திருமகள் பொருந்திய மார்பினை உடைய, காண்பவர் கவர்திருக்கும் சக்கரப்படையினை ஏந்திய கையையும்

    நறுமணம் வீசும் பூங்கொத்துக்களையுடைய துவள மாலையை அணிந்த மார்பினையும் கொண்ட திருமாலினது திருவடிகளைப் புகழ்ந்து வணங்கித் துதித்து மனத்தின்கண் மிகுந்த மகிழ்ச்சியுடையவராகத் தாங்கள் வாழும் ஊர்களுக்குச் செல்வர் என்பது இப்பாடலின் பொருளாகும். திருமகள் பொருந்திய மார்பினையும், கையில் சக்கரப்படையினையும், துவளமாலையினையும் உடையவர் திருமால் என்னும் தொன்மச்செய்தி  இடம்பெற்றிருப்பதை இப்பாடலின் வாயிலாக அறியலாம்.

    காப்பியாற்றுக்காப்பியனார் படைத்துள்ள நான்காம் பத்தில் கொடைச்சிறப்பு என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்

    எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து

    என்னும் பாடல் வரிகளில் திரு என்னும் சொல் திருமகளைக் குறிப்பதாக வந்துள்ளது. இப்பாடலானது நன்னனது சிறப்பினை உரைக்கும் பொழுது திருமகளை மார்பில் பொருந்தியவன் நன்னன். வெற்றியைத் தன்னகத்தே பெற்றவர்களுக்குத் தக்க துணையாக திருமகள் இருப்பாள் என்னும் தொன்மச்செய்தி இப்பாடலில் பதிவுச்செய்யப்பட்டுள்ளது.

    அரிசில் கிழார் பாடிய எட்டாம் பத்தில் நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக்கூறுதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

    வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
    கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
    என்னும் பாடல் வரிகளில் திரு என்னும் சொல் திருமகளைக் குறிப்பதாக வந்துள்ளது. நுண்மையான கருமணலைப் போன்ற புறத்தே தாழ்ந்த பெரிய கூந்தலையுடையவளும், தெய்வமாகிய திருமகளில் இருந்து வேறுபட்டு இன்னொரு திருமகளாக உன் தலைவி இருக்கின்றாள் என்னும் பொருளில் இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன.

    அருந்ததி பற்றிய தொன்மங்கள்

    அருந்ததி பற்றிய தொன்மங்கள் பதிற்றுப்பத்தில் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளன. காப்பியாற்றுக்காப்பியனார் படைத்துள்ள நான்காம் பத்தில் மன்னர்க்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

    வண்டுபட
    ஒலித்த கூந்தல் அறம்சால் கற்பின்
    குழைக்கு விளக்கு ஆகிய ஒள்நுதல், பொன்னின்
    இழைக்கு விளக்கு ஆகிய அவ்வாங்கு உந்தி,
    விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
    செம்மீன் அனையள் நின் தொல்நகர்ச் செல்வி

    செம்மீன் என்னும் சொல்லானது அருந்ததி  என்ற பெண் தெய்வத்தினைக் குறிக்கின்றது. வண்டுகள் ஒலிக்கும்படி தழைத்த கூந்தலினையும் அறக்கற்பினையுடைய காதிலே அணிந்திருக்கின்ற அணிக்கு விளக்கம் அளிப்பதாக அமைந்திருக்கின்ற ஒளிபொருந்திய நெற்றியினையும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு விளக்கம் அளிப்பவளாகிய அழகிய வளைந்த கொப்பூழினையுடைய நின்மனைவி வானுலகில் திரியும் தெய்வப் பெண்களுக்குள் சிறந்த அருந்ததியை போன்றவள். இப்பாடலில் அருந்ததி என்னும் தொன்மத்தினைப்பற்றிய செய்திகள் தரப்ப்பட்டுள்ளது.

    கற்புத் தெய்வம் அருந்ததி எனும் தொன்மச்செய்தியானது அரிசில் கிழார் எழுதிய எட்டாம் பத்தில் வென்றிச் சிறப்புக் கூறி, மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

     மீனோடு புரையும் கற்பின்

    என்னும் பாடல் வரிகளில் மீன் என்கின்ற சொல் அருந்ததியைக் குறிப்பதாக கூறப்பட்டுள்ளது.

    முருகப்பெருமான் குறித்த தொன்மம் 

    பதிற்றுப்பத்து இலக்கியத்தில் முருகப்பெருமான் குறித்த தொன்மம் இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளது.

    வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
    வளிபாய்ந்து அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்
    நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
    அணங்குடை அவுணர் ஏமம் புணக்கும்
    சூருடை முழுமுதல் தடித்த பேர்இசை
    கடிஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு

    இப்பாடலில் வேள் என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கின்றது. கடலிலே அலைகள் மலைப்போல்  பெரியனவாய் எழுகின்றன. அவ்வலைகள் சிறுசிறு துளிகளாக உடைந்து சிதறும் வகையில் காற்று பாய்ந்து அடிக்கின்றது. எனவே கடல் அசைகின்ற நிறைந்த நீரினைச் சூல்போலக் கொண்டு விளங்குகின்றது. இத்தகைய நீர்நிறைந்த பெரிய பரப்பினையுடைய கரிய கடலின் நடுவே சென்று உயிர்களை வருத்துகின்ற இயல்புடைய அசுரர்களுக்குச் பாதுகாவலைச் செய்யும் சூரபதுமனது தன்மையுடைய மாமரத்தின் அடியினை வெட்டிய பெரும்புகழையும் மிகுதியான சினத்தையும் வெற்றியினையும் கொண்ட முருகப்பெருமான் எனும் கருத்தினைக் கொண்ட இப்பாடலில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம்செய்த புராணச் செய்தி இடம்பெற்றுள்ளதை அறிகின்றோம்.

    திருமால் பற்றிய தொன்மங்கள்

    சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் திருமால் பற்றிய தொன்மங்கள் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பத்தில் வென்றிச் சிறப்பும் நாடு காத்தற் சிறப்பும் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

    மண்ணுடை ஞாலத்து மன்உயிர்க்கு எஞ்சாது
    ஈத்துக் கை தண்டாக் கை கடுந்துப்பின்
    புரைவயின் புரைவயின் பெரிய நல்கி
    ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
    நெடியொன் அன்ன நல் இசை
    ஒடியா மைந்தே நின்பண்பு பல நயத்தே

    நெடியோன் என்னும் சொல் திருமாலைக் குறிப்பதாக இடம்பெற்றுள்ளது. மண்செறிந்த இந்நிலவுலகில் நிலைபெற்றுள்ள உயிர்களுக்கெல்லாம் குறைவில்லாத ஈகையும் குறைவில்லாத வலிய வலிமையையும் உடையாய். உயர்ந்த இடங்களாகிய இறைவன் உறையும் ஆலயங்களுக்கெல்லாம் சிறந்த அணிகலன்களை அளிப்பவனே. காண்பவருக்கு இன்பத்தைத் தருகின்ற திருமாலைப் போன்ற குறைவற்ற புகழ்உடைய உனது பண்புகளைக் காண விரும்புகின்றேன் என்பது இப்பாடலின் கருத்தாகும். குறைவற்ற புகழ் உடைய தெய்வம் திருமால் எனும் தொன்மச்செய்தியை இப்பாடலின் வாயிலாக அறிகின்றோம்.

    நான்காம் பத்தில் மன்னர்க்கு உரிய மாட்சிமையேல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

    குன்று தலைமணந்து, குழூஉக்கடல் உடுத்த
    மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக்
    கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து
    நால்வேறு நனந்தலை ஒருங்குஎழுந்து ஒலிப்ப
    தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென
    உண்ணாப் பஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
    வண்டுஊது பொலிதார், திருஞெமர் அகலத்து
    கண்பொரு திகிரி கமழ்குரல் துழாஅய்
    அலங்கல் செல்வன் சேவடி பரவி
    நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதி பெயர 

    குன்றுகள் தம்மிடம் பொருந்தி நிற்க, பல்பொருள்களும் திரளுகின்ற கடலினை ஆடையாக உடுத்திய நிலவுலகத்து மக்கள். ஒரே நேரத்தில் ஒன்று போல் தம் கைகளைத் தலைமேல் தூக்கி வணங்கித் தம் குறையைக் கூறித் தீர்க்குமாறு வேண்டிக்கொள்ளும் ஆரவாரமானது வேறுபட்ட நான்கு திசைகளும் பரந்த இடத்தில் ஒன்றாக ஓங்கி ஒலித்தது போன்று இருந்தது. தெளிந்த ஓசையை உடைய மணியை அடிப்பவர் கல்லென்னும் ஓசையுண்டாக ஆரவாரிப்ப, அதனைக் கேட்டு உண்ணாமல் இருந்த இறைவனை வணங்கும் மக்கள்கூட்டம் குளிர்ச்சியான நீர்த்துறையில் நீராடும் வண்டுகள் ஒலிக்கும் மாலையினை அணிந்த திருமகள் பொருந்திய மார்பினை உடைய, காண்பவர் கவர்ந்திருக்கும் சக்கரப்படையினை ஏந்திய கையையும் நறுமணம்வீசும் பூங்கொத்துக்களையுடைய துவள மாலையை அணிந்த மார்பினையும் கொண்ட திருமாலினது திருவடிகளைப் புகழ்ந்து வணங்கித் துதித்து மனத்தின்கண் மிகுந்த மகிழ்ச்சியுடையவராக தாங்கள் வாழும் ஊர்களுக்குச் செல்வர் என்பது இப்பாடலின் பொருளாகும். திருமகள் பொருந்திய மார்பினையும், கையில் சக்கரப்படையினையும், துவளமாலையினையும்  உடையவர் திருமால் என்னும் தொன்மச்செய்தி  இடம்பெற்றிருப்பதை இப்பாடலின் வாயிலாக அறியலாம்.

    ஏழாம் பத்தின் பதிகத்தில்,

    மாய வண்ணனை மனன் உறப் பெற்று

    என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. இவ்வரியானது கரியநிறமுடைய திருமாலைத் தன் மனத்தில் பொருந்தப் பெற்றவன் என்னும் பொருளைத்தருகின்றது. கரிய வண்ணமுடைய திருமால் என்பது புராணத்தின் வாயிலாக அறியக்கூடிய தொன்மச்செய்தியானது இப்பாடலில் இடப்பெற்றிருப்பதை அறிகின்றோம்.

    தேவர்கள் பற்றிய தொன்மங்கள்

    பதிற்றுப்பத்தில் தேவர்கள் பற்றிய தொன்மச்செய்திகள் வென்றிச் சிறப்போடு பிற சிறப்புக்களையும் கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன.

    உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை

    இப்பாடல் வரிகளில் உயர்நிலை உலகம் என்னும் சொல் தேவர்கள் வாழுகின்ற உலகத்தினைக் குறிக்கின்றது. மேலும், ஐயர் என்னும் சொல் முனிவர் என்னும் பொருளைத் தருகின்றது. எனவே, தேவர்கள் உலகத்தில் வாழுகின்ற முனிவர்கள் என்னும் புராணச்செய்தியை இப்பாடல் வரிகளின் வாயிலாக அறியலாம்.

    மாடோர் உறையும் உலகமும் கேட்ப

    இப்பாடல் வரிகளில் மாடோர் என்னும் சொல்லானது தேவர்களைக் குறிக்கின்றது. காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, சங்கநிதி, பதுமநிதி முதலிய செல்வங்களைப் பெற்றுப் பொன்னுலகில் வாழ்வதால் தேவர்கள் மாடோர் என அழைக்கப்பட்டனர் எனும் தொன்மச்செய்தியை  இப்பாடலின் வாயிலாக அறிகின்றோம்.

    முடிவுரை

    பதிற்றுப்பத்தில் பெண் தொன்மங்கள் என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையானது, பெண் தெய்வத் தொன்மங்களான கொற்றவை, கொல்லிப்பாவை, அருந்ததி, துர்க்கை, திருமகள் ஆகியாரைப் பற்றி பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள தரவுகளை வெளிப்படுத்தி உள்ளது. திரு என்னும் சொல் திருமகளைளையும், மீன் என்னும் சொல் அருந்ததியையும், பாவை என்னும் சொல் கொல்லிப்பவையையும், சால் என்னும் சொல் கொற்றவையையும் குறிக்கும் நிலையினையும், இத்தொன்மங்களைப் பயன்படுத்திய நிலையில் பதிற்றுப்பத்து இலக்கியம் கொண்டுள்ள தொன்மை வளம் குறித்தும் அறிகின்றோம்.

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(189)

    செண்பக ஜெகதீசன்

     

     

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோ னெனக்கேட்ட தாய்.

    -திருக்குறள் -69(புதல்வரைப் பெறுதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    அன்னைக்கு ஆனந்தம்

    தன்னை

    அம்மாவென அழைக்க

    மகன் பிறந்தபோது..

     

    அதைவிடப் பேரானந்தம்,

    அவனை அடுத்தவர்

    சான்றோன் என

    சொல்வதைக் கேட்கும்போதுதான்…!

     

    குறும்பாவில்…

     

    பெற்ற பொழுதைவிடப் பேரானந்தம்

    பெற்ற தாய்க்கு, மற்றவரவனைச்

    சான்றோனென்பதைக் கேட்கையில்தான்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அன்னை யென்றே அழைத்திடத்தான்

    அன்பு மகனைப் பெற்றவுடன்

    அன்னை யடைவாள் ஆனந்தமே,

    அகில வாழ்வில் அவளுந்தான்

    இன்னும் மேலாய் மகிழ்ந்திடுவாள்

    இந்தப் பிள்ளைக் கற்றுயர்ந்தே

    மன்றம் மெச்சிடும் சான்றோனென

    மற்றவர் சொல்லக் கேட்கையிலே…!

     

    லிமரைக்கூ..

     

    தாய்மகிழ்வாள் தன்மகன் பிறப்பில்,

    அதைவிட அதிகமாய் மகிழ்ந்திடுவாள்

    அம்மகன் சான்றோனெனும் சிறப்பில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    சந்தோசம் சந்தோசம்

    சம்சார வாழ்க்கயில

    புள்ளபொறப்பு சந்தோசம்..

     

    அம்மாண்ணு கூப்புடத்தான்

    மகன்பொறந்தா

    பெத்தவளுக்கு சந்தோசம்..

     

    அதுலயும்

    அவன்வளந்து பெரியவனா

    நாலெழுத்து படிச்சி

    நல்லவண்ணு

    நாலுவரு சொல்லக்கேட்டா

    பெத்தவளுக்கு அது பெரும்சந்தோசம்..

     

    சந்தோசம் சந்தோசம்

    சம்சார வாழ்க்கயில

    புள்ளபொறப்பு சந்தோசம்…!

     

     

    Share
  • வ.சுப.மாணிக்கனாரின் ‘மாமலர்கள்’ வீசும் மணம் – 2

    -முனைவர் ச.அருள்

    தமிழ் வளர்த்த சான்றோரைப் பாராட்டல்

    19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய அறிஞர்கள் பலர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் எனப் பல நூற்றாண்டுகளாக பிறமொழி ஆதிக்கத்தால் தொய்வுற்றிருந்த தமிழ் மொழியை மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுறச் செய்த தமிழ் அறிஞர்கள் பலர். அவர்களுள் தலைசிறந்த தமிழ் அறிஞராக இன்றும் என்றும் போற்றத்தக்கவர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள். இவர் மட்டும் தமிழ்நாட்டில் பிறந்திருக்காவிடில் எத்தனையோ இலக்கியங்கள் தமிழர்களுக்குக் கிட்டாமலேயே போயிருக்கும். ‘ஏடு காத்த ஏந்தல்’ என்று இவரைச் சிறப்பிக்கின்றார்கள். பல்வேறு ஆசிரியர்களிடமும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமும் பயின்றவர்.  உ.வே.சாமிநாத ஐயர் சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், பெருங்கதை முதலிய இலக்கியங்களை ஓலைச்சுவடியில் இருந்து தொகுத்து, உரைகளைச் சரிபார்த்து தொகுத்து தமிழ் உலகத்திற்குத் தருவதற்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

    கவிஞர் வைரமுத்து, ‘மொழி காத்தான் சாமி’ என்னும் பொருண்மையில் உ.வே.சா. குறித்து எழுதிய கட்டுரையில், “தமிழ் என்பது விழுமியம், பெருமிதம், வீரம், ஈரம், காதல், பண்பாடு, தத்துவம் என எல்லாம் கூடிக் கலந்த ஒரு பெரிய கலாசாரக் கடல். இத்தனை கருவிகளுக்கும் சான்று தந்தவர்தாம் உ.வே.சாமிநாதையர். அவர் இல்லையெனில் தமிழின் தொன்மைக்கும், தமிழினத்தின் பெருமைக்கும் தடயங்களும் சான்றுகளும் ஆவணங்களும் இல்லை. ஊர் ஊராய் ஏடு தேடி அந்த அந்தணக் கிழவன் சந்தனமாய்த் தேய்ந்திராவிடில் ஒரு செம்மொழியின் முதல் தகுதியான தொன்மை என்பதற்கு நாம் ஆதாரமற்றுப் போயிருப்போம்” என்று கூறியுள்ளார்.

    வ.சுப.மாணிக்கனார், ‘மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்க்கு’ என்னும் கவிதையில்,

    ”பார்காத்தார் ஆயிரம்பேர் பசித்தார்க்காகப்
    பயிர்காத்தார் ஆயிரம்பேர் பாலர்க் காக
     மார்காத்தார் ஆயிரம்பேர் வாழ்ந்த நாட்டில்
    மனங்காத்த தமிழ்த்தாய் “என் உடைமை யெல்லாம்
    யார்காத்தார்” எனக்கேட்க ஒருவன் அம்மா
    யான்காப்பேன் எனவெழுந்தான்
    சாமி தான்!
    நீர்காத்த தமிழகத்தார்
    நெஞ்சின் உள்ளான்
    நிலைகாத்த மலையிமய நெற்றி மேலான்.
       பொய்யாத தமிழ்க்குமரி ஈன்ற சாமி!
    போகாத புகழ்க்கன்னி மணந்த நாத!
    செய்யாத மொழித்தொண்டு செய்த ஐய!
    சிறுகாத நெஞ்சத்தேம் வணங்கு செம்மல்!
    எய்யாத திருவடியால் எண்பத் தாண்டும்
    இளையாத உள்ளத்தால் எங்குஞ் சென்று
    நெய்யாத தொன்னூல்கள் நிலைக்க வைத்த
    நீங்காத தமிழ்க்குயிரே! நின்தாள் வாழ்க!”             – (மாமலர்கள், .72)

    என்று வாழ்த்துகிறார். உலகினைக் காத்தவர்கள் பசித்தோர்க்கு உணவு கொடுக்கப் பயிர் செய்து அந்தப் பயிரைக் காத்தவர்கள்; குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்காக தாய்மடி காத்தவர்கள்; இவர்கள் மத்தியில் தமிழ்த்தாயின் உடைமைகளை, தமிழ் இலக்கியங்களைக் காப்பதற்காக தன்னார்வத் தொண்டராக வந்தவர்தாம் உ.வே.சாமிநாதையர். இவர் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்தவர். எண்பது ஆண்டுகளுக்கு மேல் ஓய்வில்லாமல் தமிழ்த் தொண்டாற்றி தமிழர்கள் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறார். தமிழைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டவர் தமிழுக்கு உயிரானவர் உ.வே.சா.சாமிநாதையர் அவர்தம் தாள் வாழ்க என்கிறார் வ.சுப.மாணிக்கனார்.

    அண்ணாமலை செட்டியார்

     செட்டி நாட்டு அரசர் சர் ராஜா அண்ணாமலை தமிழ் இசைக்காக தமிழ் மொழிக்காக உழைத்த உத்தமர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினை நிறுவி பலருக்குக் கல்வி வழங்கிய அண்ணாமலை செட்டியார் சிறந்த கொடை உள்ளம் படைத்தவர். தமிழ் இசை மீது ஈடுபாடு கொண்ட அண்ணாமலை செட்டியார் தமிழிசையை ஆய்வு செய்வதற்காக 1941– இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தார். இந்த நிதியானது தமிழிசை இயக்கத்திற்கு ஓர் உந்துதலாக இருந்தது. வ.சுப.மாணிக்கனார் ‘வள்ளல் அண்ணாமலையரசர்’ என்னும் கவிதையில்,

    நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்தான்;
    நீங்காத கலைப்புரட்சி நிரம்பச் செய்தான்;
    கல்லாத இனமெல்லாம் கற்க வைத்தான்;
    காணாத பெருங்கழகம் களத்து வைத்தான்;
    இல்லாத புலவர்களை இருப்போர் ஆக்கி
    இணையாத தமிழ்ப்புகழை ஈட்டிக் கொண்டான்;
    வெல்லாத செயலில்லை என்று போற்ற                                    விளங்கியவன் மன்அண்ணா மலையன் வாழ்க.” – (மாமலர்கள், 76)

    என்று அண்ணாமலை செட்டியாரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். நிலைத்து நிற்காத செல்வத்தை நிலைக்கச் செய்து, கலைகளில் புரட்சி செய்தவர் அண்ணாமலையரசர். மிகப்பெரும் பல்கலைக்கழக்தை உருவாக்கி, கல்லாத மக்களே இல்லாத நிலையை உருவாக்கியவர். தமிழறிஞர்களை ஊக்குவித்து தமிழின் புகழை உலகறியச் செய்தவர். அண்ணாமலை அரசர் தம் பல்கலைக்கழகத்தில் (மீனாட்சி, தமிழ்க்கல்லூரி) தலைவராக உ.வே.சாமிநாதையரை நியமித்து, விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.ராகவையங்கார், அ.சிதம்பரநாதன், கோ.சுப்பிரமணியப் பிள்ளை, மு.அருணாசலம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை முதலிய தமிழ் அறிஞர்களைப் பணியில் அமர்த்தியவர். இவர்களைப் பற்றி விரிவாக மேற்கண்ட கவிதையில் மேலும் வரிகள் நீட்சி பெறுகின்றன.

    தமிழ்சூடி

    ஔவையார் எழுதிய ஆத்திசூடியின் பாயிரம் ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே’ என்று அமைந்திருந்ததால் பாடலின் முதல் சொல்லையே இந்த இலக்கியத்திற்கு உரிய பெயராக அமைத்துக் கொண்டனர். ஔவையாருக்குப் பின்னர் ஆத்திசூடிகள் எழுதியவர்களில் பாரதியார் – புதிய ஆத்திசூடி, பாரதிதாசன் ஆத்திசூடி, வாணிதாசன், சுத்தானந்த பாரதி, ந.சஞ்சீவி, மு.வரதராசன் ஆகியோரின் புதிய ஆத்திசூடி, ந.ரா.நாச்சியப்பன் – நெறிசூடி, ச.மெய்யப்பன் – அறவியல்சூடி, தமிழண்ணல் – ஆய்வு சூடி, ரெ.முத்து கணேசன் – முத்துசூடி, புலவர் சோம.இளவரசு – நீதி சூடி எனத் தங்கள் விருப்பத்திற்கேற்ப பெயர்களை அமைத்துக் கொண்டனர். இவர்களைப் போல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்சூடி என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூலில் சிறுவர்கள் சிந்திக்கத்தக்க 118 சிறந்த அறக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்சூடி பாயிரத்தில்,

    “தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய்
    தாய்மொழி தவறாது கற்பாய் குழந்தாய்
    திருக்குறள் கண்போலத் தெளிவாய் குழந்தாய்
    தீமைகள் மனத்தினும் தீண்டாய் குழந்தாய்
    துடிபோலப் பள்ளிக்குத் தொடர்வாய் குழந்தாய்
    தூய்தமிழ் எங்குமே சொல்வாய் குழந்தாய்
    தென்றலில் நன்றாகத் திளைப்பாய் குழந்தாய்
    தேனினிய நூலகம் செல்வாய் குழந்தாய்
    தைத்திங்கள் பொங்கலில் தளிர்ப்பாய் குழந்தாய்
    தொண்டுகள் பலசெய்யத் துடிப்பாய் குழந்தாய்
    தோலாத தமிழ்நூல்கள் தொகுப்பாய் குழந்தாய்
    தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய்”                               – (மாமலர்கள், ப.140)

    என்று வ.சுப.மாணிக்கனார் பாடியுள்ளார். தாய்மொழியாம் தமிழ் மொழியைத் தவறாமல் கற்றுத் திருக்குறளில் தெளிவு பெற்றால் மனத்தில் தீமைகள் அண்டாது என்கிறார். துடிப்போடு பள்ளிக்குச் சென்று தூய தமிழில் பேச சொல்கிறார். இயற்கைக் காற்றை சுவாசித்து, நூலகத்தில் நல்ல நூல்களை வாசித்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நன்றாகக் கொண்டாடப் பணிக்கின்றார். வாண்டுகள் தொண்டுகள் பல செய்து, தமிழ் நூல்களைத் தொகுத்து தமிழை மாலையாகச் சூடி வழிபடச் சொல்கின்றார்.

    வ.சுப.மாணிக்கனார் தமிழ் சூடியில் தமிழ்மொழி, தமிழ் நூல்கள், தமிழ் இனம் குறித்துப் பேசுகிறார். செந்தமிழ் பயில் (50), சொல்லைக் கலவேல் (53), இந்தியை விலக்கு (21), தாய்மொழி முதன்மொழி (62), அகத்தமிழ்படி (1), புறத்திணை படி (88), தொல்காப்பியம் படி (70), திருக்குறள் வரப்பண் (63), சங்க நூல் போற்று (44), ஔவையைப் போற்று (12), குறுந்தொகை படி (36), முத்தமிழ் பரப்பு (100), தமிழிசை பரப்பு (61), யாப்புப் பழகு (108), தேவாரம் பாடு (68), விவிலியம்படி(113), மொழிபல கல் (104), நூல்கள் எழுது (77), கண்ணகி வழிநட (19), சிலம்பை நடி (46), பூம்புகார் போற்று (89), பேகனைப் புகழ் (91), ஆழ்வார் நெறிநில் (2) எனத் தமிழ்சூடி உரைக்கின்றது. தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்று, அதற்கு ஏற்ப வாழுமாறு வலியுறுத்துகின்றார். மேலும், தீண்டாமை யொழி (64), போரையொழி (94), மதுவை விலக்கு (96), கையூட்டு மறு (40), கிளர்ச்சி எதற்கு (34) எனச் சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். நெஞ்சை உயர்த்து (78), உன்னைத் திருத்து (31), ஏனென்று கேள் (8), சாவிலும் மகிழ் (45), பிறவியை மதி (86), மக்களை மதி (14), யமனைப் புறங்காண் (45), மாற்றம் விரும்பு (97) என தன் முன்னேற்றச் சிந்தனைகளை விதைத்துச் சென்றுள்ளார்.

    பெண்மையைப் போற்றிய வ.சுப.மாணிக்கனார்

    இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்டோதரி, அரக்க மன்னன் தேவதச்சன் மயனின் மகள். அழகு, கடமை, கண்ணியம், நேர்மை பண்புகள் நிறைந்தவள். இராவணன் பிறன் மனையாளாகிய சீதையைக் காமுற்று அசோகவனத்தில் கொண்டு வந்து சிறை வைத்திருக்கிறான் என்ற செய்தி கேட்டு மண்டோதரி மனம் உடைந்து கலங்குகிறாள். அவனைத் திருத்தத் துணிவு கொள்கிறாள். இராவணன் நள்ளிரவில் அசோகவனம் சென்று இரந்து சீதையின் காலடியில் விழ முற்பட்டபோது, அங்கு முன்னரே சென்றிருந்த மண்டோதரி எதிரே நிற்கிறாள். தன் மனைவியைக் கண்ட இராவணன் நடுங்குகிறான். மண்டோதரி அவனுக்கு அரசு நெறியையும் ஒழுக்க நெறியையும் இடித்துச் சொல்லிச் சீதைக்கு உடனே, விடுதலை அளிக்கிறாள். கணவனைத் திருத்திய மண்டோதரியின் கற்புப் புரட்சியை,

    நுழையாத குடிசைக்குள் நோன்பிருப்பார்
      விட்டகன்ற நொடிமை பார்த்து
    விழையாத முனிவேடம் மேற்கொண்டு
      பிறனுடலை விரும்பித் தூக்கி
    இழையாத துயர்வனத்தில் இல்லாள்கள்
      செவிகேட்க வைத்தான் என்றால்
     பிழையாத மனைவியர்க்கும் பிழைசெய்ய
       இடங்கொடுத்த பிசடு போமே
    களித்தாடுங் கணவனையும் கழிகாமக்
      கணவனையும் கன்று சூதல்
    விளித்தாடுங் கணவனையும் வினைசுருக்கித்
       தசைபெருக்கி வீம்பே பேசி
    நெளித்தாடுங் கணவனையும் நெஞ்சரிக்கும்
       புகைகுடித்து நீள ஊதித்
     திளைத்தாடுங் கணவனையும் திருத்துகின்ற
      பொறுப்புடையாள் தீமை யில்லாள்                               – (மாமலர்கள், பக்.147-148)

    என்று ‘புரட்சி மண்டோதரி’ பாடல் பாடுகின்றார். இராமன் இல்லாத கவிதையில் நேரத்தில் முனிவர் வேடத்தில் சீதையைத் தூக்கி வந்த இராவணனைத் திருத்தும் கற்புடையாளாக மண்டோதரியைக் காட்டியுள்ளார் வ.சுப.மாணிக்கனார். இந்தப் படைப்பில் இராவணணின் கயமை, பேதைமை, கீழ்மை, சூழ்ச்சி பேசப்படுகிறது. மண்டோதரியை புரட்சிப் பெண்ணாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

    வீரச்செல்வி செம்மலர்

    ‘கொல்லாச் சிலம்பு’ என்னும் கவிதையில், பொற்கொல்லன் மனைவி செம்மலர் என்பவள் தன் வீட்டின் உள்ளறைக்குள் விலை உயர்ந்த சிலம்பு ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதைத் திடீரென காண்கிறாள். பாண்டிமாதேவி தன் ஒரு சிலம்பு காணாமல் போயிற்று என்று சொன்ன செய்தி நினைவுக்கு வருகிறது. குடுகுடுப்பைக்காரனுக்குப் பொற்கொல்லன் கொடை செய்த அருமையும் அவள் நினைவுக்கு வருகிறது. உடனே, பாண்டியன் தேவியைப் பார்க்கிறாள். புகாரிலிருந்து மனைவியொடு வந்த ஒரு வணிகன் தன் சிலம்பைக் களவாடினான் எனவும் பெருந்தண்டனை பெறுவான் எனவும் தேவி வெளிப்படுத்துகிறாள். இவருவரும் அரசவைக்குச் சென்ற சமயம் கள்வனைக் கொன்று சிலம்பினைக் கொண்டு வருக என்று பாண்டியன் ஊர்க் காவலர்க்குக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறான். அரசனை இடைமறித்துச் செம்மலர் இத்தீர்ப்பு முறையற்றது எனக் கூறித் தான் அன்று எதிர்பாராது ஓரிடத்துக் கண்ட சிலம்பினைக் காட்டுகிறாள். அதுதான் காணாமல் போன பாண்டிமாதேவியின் காற்சிலம்பு.

                    நிகழ இருந்த கொலையைத் தவிர்த்து செங்கோலையும் தங்கள் உயிர்களையும் காத்து அளித்த செம்மலர் நல்லாளைப் பாண்டியன் அரசவையில் பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டுகிறான். அவளது பெருந்தொண்டினையும் துணிச்சலையும் உலகத்தார் அறிய வேண்டிய ‘செம்மலர்’ என்ற நாடகம் அரசு விழாவாக ஆண்டு தோறும் நடைபெற வேண்டும் என்று ஆணையிடுகிறான். பாண்டியன் அன்புப் பரிசாக வழங்கிய முத்து மாலையைச் செம்மலர் தன் தொண்டின் பரிசாக வாங்க மறுத்து விடுகிறாள். தங்களுக்கு வர இருந்த தீய விளைவுகள் செம்மலரின் கடமை வீரத்தால் மாறி விட்டன என்ற நிலையறிந்த கோவலனும் கண்ணகியும் ‘வீரச்செல்வி’ என்று செம்மலராளை மனத்தில் வைத்துப் போற்றுகின்றனர். செம்மலர் நங்கையின் நற்புகழினை,

    ”சோலை மலருட் சுருண்ட பாம்புபோல்
      சேலை யடுக்கினுட் சிலம்பணி கண்டாள்
    பொன்செய் கொல்லன் பொன்னன் மனையாள்
    நன்செய் போலும் நல்வரம் புடையவள்
    பைங்கலன் கொழிக்கும் பட்டினம் பிறந்தவள்
    செம்மலர் என்னும் செல்லப் பெயரினள்
     நாற்பது வயதினும் நலியா இளமையள்
     ஏற்பதை ஏற்பாள் எதிர்ப்பதை எதிர்ப்பாள்
    திண்ணைப் பள்ளியிற் சிறுதமிழ் கற்றாள்
    எண்ணல் பெருக்கல் இளங்கணக் கறிவாள்
    உண்மைக் கதைகளை உள்ளங் கொள்வாள்
    அரிய தாயினும் உரியதைப் பேணி
    உரிய தாயினும் ஊர்வம்பு பேசாள்
    அன்புடைக் கணவன் அரண்மனைக் கொல்லன்
     என்ற தொடர்பால் இல்லற முதலே
     பாண்டிய தேவியொடு பழகி வருவாள்”    – (மாமலர்கள், ப.153)

    என்று வ.சுப.மாணிக்கனார். புகழ்ந்துப் போற்றியுள்ளார். செம்மலர் என்பவள் நல்லவற்றை ஏற்பவளாகவும் அல்லவற்றை எதிர்ப்பவளாகவும் படைக்கப்பட்டிருக்கிறாள். பாண்டியனைக் கொலைப் பழியில் இருந்து காப்பாற்றியதற்காக,

        “எதிரது அறிந்துடன் எல்லாம் தடுத்த
           முதுக்குறை நங்கைக்கு முடிதாழ் வணக்கம்!
          கொலையும் பழியும் கொடுமையும் தவிர்த்து
          நிலையும் புகழும் நேர்மையும் காட்டி
          உற்ற காலத்துள் ஓடோடி வந்து
          குற்றம் புகாமல் கோன்மை காத்துப்
          பெற்ற தாயினும் பேரன்பு செய்த
          வெற்றிச் செம்மலர் வீரியை வணங்குதும்”           – (மாமலர்கள், பக்.157-158)

    என்று செம்மலரைப் புகழ்ந்து வணங்குகிறார். பெற்ற தாயினும் சிறந்தவளாக செம்மலரை பாண்டிய மன்னன் உயர்த்திப் போற்றியுள்ளான். கண்ணகியைப் புலம்ப வைத்த பொல்லாச் சிலம்பை கொல்லாச் சிலம்பு என்று வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். சிலம்புக்கு உரியவளான கண்ணகியையும் அவளது கணவன் கோவலனையும் கொல்லாச் சிலம்பு புகழ்ந்து பேசுகிறது. பாண்டிய மன்னனின் தீர்ப்பு இந்தப் படைப்பில் ரத்து செய்யப்படுகிறது. கோவலன் மீது சுமத்தப்பெற்ற குற்றம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னன் நல்லவனாகவும் குடிமக்களுக்கான நீதியை நிலை நாட்டக் கூடியவனாகும் கடமை தவறாதவனாவும் காட்சிப்படுத்தபட்டிகிறான். இந்தப் படைப்பை வ.சுப.மாணிக்கனார் சிலப்பதிகாரத்தின் மாற்றுச் சிந்தனைக்கான விதையாக ஊன்றியுள்ளார்.

    முடிவுரை

    வ.சுப.மாணிக்கனார் படைப்பாளர், பேராசிரியர், தமிழ்ப் பற்றாளர், பதிப்பாளர், உரைநடை ஆசிரியர், உரை ஆசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர், ஆய்வாளர், ஆங்கிலப் புலமையாளர் எனப் பன்முக ஆற்றல் வாய்ந்தவராக ஒளிர்கின்றார். இவரது கவிதை நூல்கள் இவரை மிகச் சிறந்த கவிஞராக அடையாளப்படுத்துகின்றன. தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், திருவாசகம், இராமாயணம், பாரதியம் ஆகியவற்றில் தனித்த ஈடுபாடு கொண்டவர் என்பதை இவரது கவிதைகள் மெய்ப்பித்துக்காட்டுகின்றன. குறிப்பாக, மாமலர்கள் என்னும் கவிதை நூல் இவரை மாபெறும் கவிஞராகவும், சிந்தனையாளராகவும் வெளிக்காட்டியுள்ளது. இந்நூலினைப் பல்வகைச் செய்யுளோடு பல்வகைப் பொருண்மைச் சார்ந்ததாகப் படைத்திருக்கிறார்.

    பழைமையில் பிடிப்பும் புதுமையில் வேட்கையும் கொண்டவராகத் திகழ்கின்றார். இந்தியை எதிர்த்தும் தாய்மொழியாம் தமிழ்மொழிக் கல்வியை ஆதரித்தும் எழுதியுள்ளார். தாய்மொழியைக் கற்க வலியுறுத்தும் வ.சுப.மாணிக்கனார் மொழிக்கலப்பினால் தாய்மொழியான தமிழ்மொழிக்குக் கேடு விளையும் என்பதையும் தெளிவுற உரைக்கின்றார்.

    எழுத்துச் சீர்திருத்தத்தை பெரிதும் ஏற்றுக் கொள்ளாதவர் என்பதை இவரது கவிதைகள் புலப்படுத்துகின்றன. தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் இனம் பற்றிய சிந்தனைகள் இவரது கவிதைகளில் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

    தமிழர்கள் ஆங்கிலத்தின் பால் கொண்ட மோகத்தைச் சாடியுள்ளார். இந்தி இந்தியாவின் பொதுமொழி இல்லை என்பதைத் தம் கவிதை வழி நிறுவியுள்ளார். தமிழ் மொழி, தமிழ் இசை, தமிழ்க் கல்வி, தமிழர் கலை வளர்த்த சான்றோரை உச்சி முகர்ந்து புகழ்ந்துள்ளார்.

    வ.சுப.மாணிக்கனார் உள்ளம், சொல், செயல்களால் தூய்மையானவர் என்பதால் நாடு நலம் பெற நற்கருத்துக்களை நாளும் சிந்தித்து எழுதியுள்ளார். சிறார் மனங்களில் நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆத்திசூடி அமைப்பில் தமிழ்சூடி இயற்றிச் சிறுவர் உள்ளமும் வாழ்வும் செழிப்புற வழிவகைக் கண்டுள்ளார். ‘புரட்சி மண்டோதரி’, ‘கொல்லாச் சிலம்பு’ என்னும் இரண்டு கவிதைகளும் இராமாயணம், சிலப்பதிகாரம் சார்ந்த காப்பியங்களாகவும், இவை பெண்மைக்கும் பெண்களின் புரட்சிப் பண்புக்கும் மதிப்பளிக்கும் புதிய படைப்புகளாக மிளிர்கின்றன.

    தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்துத் தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் செய்து தானே தமிழாகி விட்ட தமிழ்ப் பேராசானுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (78)

    நிர்மலா ராகவன்

    இல்லறத்தில் இன்பம் சூழ

    நலம்

    பணம் மட்டும் மகிழ்ச்சியைத் தருமா?

    என் சக ஆசிரியை மிஸஸ் சின்னின் கதையைக் கேளுங்கள். பதில் கிடைக்கும்.

    முப்பத்தைந்து வயதான மிஸஸ் சின் மலேசியாவிலுள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவள்.

    “நான் மிகவும் மகிழ்ச்சியானவள், இல்லை?” அடிக்கடி இப்படிக் கேட்பாள். இன்னாரிடம் என்றில்லை.

    “திருமணத்துக்கு முன்பு, நாங்கள் காதலர்களாக இருந்தபோது, எப்போது அவரை மீண்டும் பார்ப்போம் என்றிருக்கும் எனக்கு. இப்போதோ!” என்று தலையில் அடித்துக்கொள்வாள்.

    அவனது வேலையிலேயே முழுகிப்போயிருந்த ஒரு பணக்காரன் அவளுடைய அழகிற்காக அவளைக் கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டும். நண்பர்களிடையே பெருமையாகக் காட்டிக்கொள்ள அப்படி ஒரு மனைவி தேவைப்பட்டிருப்பாள். அதன்பின், அவளை அதிகம் கவனிக்கத் தோன்றவில்லை.

    அப்படி ஒரு ஏமாற்றத்தை, பராமுகத்தை, எந்தப் பெண்தான் தாங்குவாள்! `அவள் வீட்டுக்கு எந்த வேளையில் போனாலும், சாப்பிட ஒன்றும் இருக்காது!’ என்று ஒரு சில ஆசிரியைகள் தெரிவித்ததுண்டு.

    ஒரு முறை, எங்கள் பள்ளிக்கூட ஆசிரியைகளுக்கு மட்டும் என்று நடந்த ஒரு விருந்தில் அவளுடைய கணவன் விரைந்து வந்து சாப்பிட ஆரம்பித்தான். எவ்வளவு பணம் இருந்தென்ன!

    மிஸஸ் சின் சொல்வதைக் கேட்டு, `அவளுக்கு மகிழ்ச்சிக்கு என்ன குறை! கணவன் கைநிறைய சம்பாதிக்கிறார்! பெரிய கார் வைத்திருக்கிறாள்!’ என்பார்கள் பிறர்.

    நான் மட்டும், “உண்மையில் அவளுக்குச் சந்தோஷமே கிடையாது. மகிழ்ச்சியாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் அவளுக்கே வந்துவிட்டது. அதனால்தான் அடிக்கடி பிறரிடம் அப்படிக் கேட்கிறாள்!” என்பேன்.

    “எதனால் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை?” என்று ஒருத்தி கேட்டபோது, “அவள் எதிர்பார்த்த இல்லற வாழ்க்கை கிடைத்திருக்காது. கணவன் தன் வேலையிலேயே ஆழ்ந்துபோகிறான். இவளுக்காகத் தனியாக நேரம் ஒதுக்குவது கிடையாது. இதெல்லாம் அவள் சொல்வதுதானே! அவள் எப்படி கணவரைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் என்று கவனியுங்கள். புரியும்,” என்று பதிலளித்தேன்.

    `என்னையும் கொஞ்சம் கவனிக்கக்கூடாதா!’ என்று கணவரிடம் கேட்டால், அவர் என்ன சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் அவளைப் போன்றவர்களுக்கு.

    `பெரிய வீடு வாங்கியிருக்கிறார், நான் என்ன செலவு செய்தாலும் கண்டுகொள்வதில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு?’ என்று சமாதானம் செய்துகொள்ள முயற்சித்து, தோல்வி கண்டவள் அவள்.

    அவர் கொடுக்கும் பணத்தால் அவள் விரும்பும் ஆடையணிகளையும், கைப்பைகளையும் வாங்க முடியும். அதனால் மட்டும் நிறைவு கிடைத்துவிடுமா?

    `இன்னுமா உனக்குப் பேராசை?’ என்று கேட்டுவிட்டால்?

    `நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்!’ என்று சொல்லிக்கொண்டவள், பிறரும் அப்படியே நினைக்கவேண்டும் என்பதுபோல் இருந்தது அவள் பேச்சும் நடத்தையும்.

    தனக்குத்தானே தடை விதித்துக்கொண்டாள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் பொறுக்க முடியாமல் போய்விட்டது. சமைக்கத் தோன்றவில்லை. தான் பெற்ற சிறு பிள்ளைகளை வேலை வாங்குவதுபற்றி பெருமையாகப் பேசிக்கொள்வாள்.

    இப்படி ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க ஒரே வழி தம்பதிகள் மனம்விட்டுப் பேசுவதுதான். சாதாரணமாக ஆரம்பித்த உரையாடல் சண்டையில் முடியலாம். ஆனாலும் வேறு வழியில்லை. இருவரில் ஒருவருக்கு மனத்தாங்கல் என்றாலும், அதை மற்றவரிடம் தெரிவித்தால்தானே மற்றவருக்குப் புரிய வைக்க முடியும்? நிலைமையில் மாற்றம் ஏற்படுகிறதோ, இல்லையோ, தனது குறையைச் சொல்லிக்கொள்பவருக்கு `முயற்சி செய்து பார்த்துவிட்டோம்,’ என்ற ஆறுதலாவது கிடைக்கும்.

    பல தம்பதியர் ஒருவர்போலவே மற்றவரும் இருப்பதுதான் காதலின் அடையாளம் என்று எண்ணுகிறார்கள். மாறுகிறார்கள், அல்லது மாற்றுகிறார்கள். உண்மையில், அன்பைத் தகர்க்கும் வழி இது.

    நொந்துவிட்டதுபோல் நயமாகப் பேசி (`நான் சொல்வதைக் கேட்காவிட்டால், உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்’), அது பலிக்காவிட்டால் வசவுகளால், அல்லது வன்முறையால் தாம் நினைத்தபடி வாழ்க்கைத்துணையை நடக்க வைப்பார்கள் சிலர்.

    கதை

    கீதா இயல்பிலேயே கலகலப்பானவள். தந்தையின் பரிபூரணமான அன்பிற்குப் பாத்திரமாகி இருந்ததால், எல்லா ஆண்களுடனும் தயக்கமின்றி பழக முடிந்தது.

    அவளுக்கு நேர் எதிரிடையானவன் முரளி. பாசமற்ற பெரிய குடும்பத்தில் வேண்டாத மகனாகப் பிறந்தவன். பிறருடன் பேசவே வெட்கம் தடுக்க, தயக்கப்பட்டவன்.

    கீதாவின் கலகலப்பு அவனை அயரவைத்தது.

    அவளுக்கு அவனது வாழ்க்கைப் பின்னணி தெரிந்திருந்தபோதும், தன்னால் அவனை மகிழ்விக்க முடியும், சமூகத்தில் பிறர் மதிக்கும் நிலைக்குக் கொண்டுவர முடியும் என்று நம்பினாள்.

    கல்யாணமாகி ஓரிரு மாதங்களிலேயே புரிந்தது, முரளியால் மாற முடியாது என்று. ஏனெனில், அவளை அவன் மாற்ற முயன்றான். கீதாவின் குணம் புரிந்திருந்தும், பிற ஆண்களைப்பற்றிப் பேசினாலே சந்தேகம் வந்துவிடும். வார்த்தைகளாலேயே அவளை வதைத்தான்.

    அவளோ, பிடிவாதமாக, `என்னால் அவரை மாற்றிக்காட்ட முடியும். என்னைப் பழையபடி சுதந்திரமாக இருக்க விடுவார்!’ என்று நம்பினாள். எல்லாவற்றையும் பொறுத்துப்போனாள். இதனால் அவளுக்கு மன அழுத்தம் அதிகரிக்க, உடல் உபாதைகள் ஏற்பட்டதுதான் கண்ட பலன்.

    இம்மாதிரியான சில பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பிறர் பக்கபலம் அளிக்க, பழைய தன்மையைப் பெறுவார்கள் – அப்படி மாறுவது குடும்ப மகிழ்ச்சியை ஓரளவு குறைக்கும் என்பதை ஏற்று.

    விட்டுக்கொடுப்பதால் யாருக்கு மகிழ்ச்சி?

    தன் சுக துக்கங்களைவிட தனக்குத் தாலி கட்டிய கணவரின் மகிழ்ச்சியே முக்கியமானது என்று போதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், `விட்டுக்கொடுப்பதுதான் நல்ல மனைவிக்கு அடையாளம்!’ என்று நம்புகிறார்கள். அப்படியானால், ஒரு பெண்ணின் மன நிலை, இன்ப துன்பம் இதெல்லாம் மறைக்கப்பட வேண்டியனவா, இல்லை, முக்கியம் கிடையாதா?

    கணவர் என் குழந்தை

    `என் கணவருக்கு ஒவ்வொன்றையும் நான்தான் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். அவர் ஒரு சிறு குழந்தைபோல!’ என்று பெருமை பேசிக்கொள்ளும் பெண்களைப் பார்த்திருக்கிறேன்.

    கணவர் எந்த விதத்திலாவது தன்னை நாட வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தம் கணவருக்குச் சுயேச்சையாக எதையும் செய்துகொள்ளத் தெரியாதபடி ஆக்கிவிடுகிறார்கள். நாளடைவில் அம்மாதிரியான நடப்பே இரு தரப்பினருக்கும் எரிச்சலை மூட்டிவிடும்.

    `நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்!’ என்று தம்பதியரில் ஒருவர் கேட்பது மற்றவருக்குப் பெருமையில்லை.

    ஒருவர் சொன்னார், “நான் கல்யாணம் செய்துகொண்டால், மனைவி என் சட்டையில் பிய்ந்துபோன பித்தான்களை தைத்துத் தருவாள் என்று நம்பினேன்!” என்று.

    அப்போது அவர் அக்காரியத்தைத் தானேதான் செய்துகொண்டிருந்தார்.

    புரிந்தும், “என்ன ஆச்சு?” என்று நான் சிரித்தேன்.

    “`நீங்களே தைத்துக்கொள்ளுங்கள்,’ என்றுவிட்டாள்!” ஏமாற்றத்துடன், பெருமூச்சு விட்டார்.

    அவருக்கு அப்போது புரியவில்லை, தன்னைச் சுதந்திரமாக வாழப் பழக்குகிறாள் மனைவி என்று.

    ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்வது என்றால் அது ஒருவரின் விருப்பத்திற்கு எல்லாம் மற்றவரும் செவிசாய்க்க வேண்டும் என்பதில்லை.

    அதிகாரம் செலுத்துபவர் ஆரம்பத்தில் பெருமையாக உணரலாம். ஆனால், `என் மனைவி நான் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள்!’ என்று பெருமை பேசுகிறவர் சில வருடங்களுக்குப்பின் அவளுக்கு அடங்கிப்போவதுதான் நடக்கிறது.

    தொடருவோம்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171022 - tvameva -lr

    ”பாவனை எண்ணங்கள், பாவனை செய்கைகள்,
    பாவனை பெற்றதோர் பேரின்பம்: -பாவனை
    அற்ற பசுவைப்போல் ஆயர்தம் பாடிமடி
    உற்ற மனமே உறவு’’….கிரேசி மோகன்….!

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (14)

    மீ.விசுவநாதன்
    பகுதி: 14

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1
    தாடகையின் பிறப்பு
    பிரும்மாவின் வரம்பெற்றுப் பிறந்தவளே இந்த
    பிரும்மாண்ட பலங்கொண்ட தாடகைப்பெண் என்பாள் !
    விரும்பித்தான் “சுந்தனை”யே திருமணமும் செய்தாள் !
    விவேகமிலா கோபத்தால் அகத்தியரைச் சீண்ட
    திரும்பியவர் சாபமிட வீழ்ந்திட்டான் சுந்தன் !
    தீராத ஆத்திரத்தில் தெய்வமுனி செய்யும்
    பெருமைமிகு வேள்விகளைச் சீர்கெடுத்து வந்தாள்
    பெயருக்குப் பெண்னென்ற பேரரக்கிப் பேயாள் !

    தீயோரைத் தீர்த்துவிட தெய்வபலங் கொண்ட
    ஸ்ரீராமா உன்னால்தான் திடமாகக் கூடும் !
    மாயோனாம் திருமாலே வதம்செய்தான் நன்கு
    மதிப்புள்ள பிருகுமுனி பத்தினியை அன்று !
    ஓயாது யோசித்தால் ஒருநாளும் எண்ணம்
    ஒளிபெற்றுத் திகழாது ! உடன்நீயும் அந்தப்
    பேயான தாடகையைப் பிணமாக்கி வீசு
    பெரும்பேர் சேருமென்றார் விசுவாமித் ரர்தான்!

    தாடகை வதம்
    குருவினது வார்த்தையைக் கும்பிட்டுக் கேட்டு
    குறிபார்த்து அம்பொன்றால் கொன்றிட்டான் அந்த
    உருபெரிய தாடகையை உயர்வீர ராமன் !
    உத்தமர்கள், தேவர்கள் ஓதினரே ஆசி !
    “வரும்நாளில் உன்காட்டில் மகத்தான வெற்றி
    மழைகொட்டும்! மனிதருக்குள் மாணிக்கம் உன்னால்
    பெருமைபெறும் ரகுவம்சம் ! பீடித்த துன்பம்
    விலகியோடும் நம்பிக்கை பெற்றோமே” என்றார் !

    விசுவாமித்திரர் வழங்கிய அத்திரங்கள்

    ராஜரிஷி மகிழ்ச்சியுடன் ராமனிடம் வந்து,
    “ராகவனே உன்பெருமை ரகசியங்கள் யாவும்
    ஆனமுதல் மூவருக்கும் அறியவொண்ணா தென்றார் !
    அளப்பில்லா அத்திரங்கள் அத்தனையும் தந்தேன்
    போனவுடன் அத்தனையும் திரும்பியுனைச் சேரும்
    பொல்லாரைக் கொன்றதனால் புகழ்பரணிப் பாடும் !
    வானவரின் துன்பத்தை மாயத்திடுக நன்றாய் !
    வருங்காலம் உன்பெயரை மறக்காது வைக்கும் !
    (தர்ம சரிதம் வளரும்)

     
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 25, 26, 27, 28,ம் பகுதி நிறைந்தது)

    Share