-முனைவர். வே.மணிகண்டன்

 

சங்கச் சமுதாயத்தில் இடம்பெற்றுள்ள தொன்மங்கள் சங்ககால மாறுதல் நிலையையும் தொன்மையான சமுதாய எச்சத்தையும் வெளிக்காட்டுவனவாய் அமைந்துள்ளன. சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் பெண் தொன்மங்களாக கொற்றவை, கொல்லிப்பாவை திருமகள், அருந்ததி, துர்க்கை, கண்ணகி ஆகியோர் பற்றிய பதிவுகள் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. மேலும்,  ஆண் தெய்வங்களான முருகப்பெருமான், திருமால், தேவர்கள் குறித்த தொன்மச்செய்திகளும் இவ்விலக்கிய நூலில் இடம்பெற்றுள்ளது. பதிற்றுப்பத்தில் பெண் தெய்வங்கள் என்னும் இவ் ஆய்வுக்கட்டுரை பெண் தொன்மங்களுக்கு முதன்மை தந்து படைக்கப்படுவதுடன் ஆண் தொன்மங்களைப் பற்றியும் விவரிக்கின்றது.

கொற்றவை பற்றிய தொன்மம்

பதிற்றுப்பத்தில் பாலை நிலத்துத் தெய்வமாகிய கொற்றவை பற்றிய தொன்மம் மூன்றாம் பத்தின்  பதிகத்திலும், அரிசில் கீழார் பாடிய எட்டாம் பத்தில் மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலிலும்  இடம் பெற்றுள்ளது.

மூன்றாம் பத்தின்  பதிகத்தில்,

அயிரை பரைஇ ஆற்றல் சால் முன்போடு

என்னும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது. இவ்வரியில் சால் என்னும் சொல் கொற்றவை என்னும்  தெய்வத்தை குறிப்பதாகும். அயிரை என்னும் மலையில் இருக்ககூடிய தெய்வம் கொற்றவை என்னும் பொருள் தரக்கூடிய இப்பாடல் வரிகளின் வாயிலாகப் புராணச்செய்தியை அறிகின்றோம்.

அரிசில் கீழார் பாடிய எட்டாம் பத்தில் மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
 கடவுள் அயிரையின் நிலைஇ

கடவுள் அயிரை என்னும் சொல் கொற்றவையை குறிக்கும் சொல்லாகும். கொற்றவை வாழும் இடமாகிய அயிரைமலையைப் பற்றிய குறிப்புக்கள் இப்பாடலில் தொன்மச்செய்தியாக வெளிவந்துள்ளது.

கொல்லிப்பாவை பற்றிய தொன்மங்கள்

பதிற்றுப்பத்தில் கொல்லிப்பாவை பற்றிய தொன்மங்கள் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. கபிலர் பாடிய ஏழாம் பத்தில் வென்றிச் சிறப்போடு படுத்து அவன் கொடைச்சிறப்புக் கூறுதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்
பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்
   வாடை தூக்கும் நாடுகெழு பெருவிறல்
ஒவத்தன்ன வினைபுனை நல்இல்
பாவை அன்ன நல்லோள் கணவன்

இங்கே பாவை என்னும் சொல் கொல்லிப்பாவை எனும் தெய்வத்தைக் குறிப்பிடுகின்றது. கொல்லிப்பாவையானது புராணங்களில் வரக்கூடியது. எனவே, இப்பாடலில் கொல்லிப்பாவையைப்பற்றிய குறிப்புகள் உள்ளதால் தொன்மக்கருத்துள்ள பாடலாக அமைகின்றது.

பெருங்குன்றூர் கிழார் பாடிய ஒன்பதாம் பத்தில் கொடைச்சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

ஓவத்து அன்ன உருகெழு நெடுநகர்,
பாவை அன்ன மகளிர் நாப்பண்

பாவை என்னும் சொல்  புராணத் தொன்மமாகிய  கொல்லிப்பாவையை குறிக்கின்றது. சித்திரத்தைப் போன்ற அழகையுடைய பகைவர்க்கு அச்சம் பொருந்திய நீண்ட அவ்வரண்மனையில் கொல்லிப்பாவையைப் போன்ற வடிவழகையுடைய நின் உரிமை மகளிர் என்னும் கருத்தினை இவ்வரிகள் தருகின்றன.

திருமகள் பற்றிய தொன்மங்கள்

பதிற்றுப்பத்தில் திருமகள் பற்றிய தொன்மங்கள் நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளன. குமட்டூர்க்கண்ணணார் படைத்துள்ள இரண்டாம் பத்தில் மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை

என்னும் பாடல் வரிகளில் திரு என்னும் சொல் திருமகள் என்னும் தெய்வத்தை குறிக்கின்றது. வெற்றியைத் திருமகள் மிகவும் விரும்புபவள் என்னும் தொன்மச்செய்தியை இப்பாடலின் வாயிலாக அறியலாம்.

காப்பியாற்றுக்காப்பியனார் படைத்துள்ள நான்காம் பத்தில் மன்னர்க்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

வண்டுஊது பொலிதார் திருஞெமர் அகலத்து
கண்பொரு திகிரி கமழ்குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி,
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதி பெயர

திரு என்னும் சொல்லாவது திருமகளைக் குறிப்பதாக வந்துள்ளது. வண்டுகள் ஒலிக்கும் மாலையினை அணிந்த திருமகள் பொருந்திய மார்பினை உடைய, காண்பவர் கவர்திருக்கும் சக்கரப்படையினை ஏந்திய கையையும்

நறுமணம் வீசும் பூங்கொத்துக்களையுடைய துவள மாலையை அணிந்த மார்பினையும் கொண்ட திருமாலினது திருவடிகளைப் புகழ்ந்து வணங்கித் துதித்து மனத்தின்கண் மிகுந்த மகிழ்ச்சியுடையவராகத் தாங்கள் வாழும் ஊர்களுக்குச் செல்வர் என்பது இப்பாடலின் பொருளாகும். திருமகள் பொருந்திய மார்பினையும், கையில் சக்கரப்படையினையும், துவளமாலையினையும் உடையவர் திருமால் என்னும் தொன்மச்செய்தி  இடம்பெற்றிருப்பதை இப்பாடலின் வாயிலாக அறியலாம்.

காப்பியாற்றுக்காப்பியனார் படைத்துள்ள நான்காம் பத்தில் கொடைச்சிறப்பு என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்

எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து

என்னும் பாடல் வரிகளில் திரு என்னும் சொல் திருமகளைக் குறிப்பதாக வந்துள்ளது. இப்பாடலானது நன்னனது சிறப்பினை உரைக்கும் பொழுது திருமகளை மார்பில் பொருந்தியவன் நன்னன். வெற்றியைத் தன்னகத்தே பெற்றவர்களுக்குத் தக்க துணையாக திருமகள் இருப்பாள் என்னும் தொன்மச்செய்தி இப்பாடலில் பதிவுச்செய்யப்பட்டுள்ளது.

அரிசில் கிழார் பாடிய எட்டாம் பத்தில் நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக்கூறுதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
என்னும் பாடல் வரிகளில் திரு என்னும் சொல் திருமகளைக் குறிப்பதாக வந்துள்ளது. நுண்மையான கருமணலைப் போன்ற புறத்தே தாழ்ந்த பெரிய கூந்தலையுடையவளும், தெய்வமாகிய திருமகளில் இருந்து வேறுபட்டு இன்னொரு திருமகளாக உன் தலைவி இருக்கின்றாள் என்னும் பொருளில் இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன.

அருந்ததி பற்றிய தொன்மங்கள்

அருந்ததி பற்றிய தொன்மங்கள் பதிற்றுப்பத்தில் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளன. காப்பியாற்றுக்காப்பியனார் படைத்துள்ள நான்காம் பத்தில் மன்னர்க்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

வண்டுபட
ஒலித்த கூந்தல் அறம்சால் கற்பின்
குழைக்கு விளக்கு ஆகிய ஒள்நுதல், பொன்னின்
இழைக்கு விளக்கு ஆகிய அவ்வாங்கு உந்தி,
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொல்நகர்ச் செல்வி

செம்மீன் என்னும் சொல்லானது அருந்ததி  என்ற பெண் தெய்வத்தினைக் குறிக்கின்றது. வண்டுகள் ஒலிக்கும்படி தழைத்த கூந்தலினையும் அறக்கற்பினையுடைய காதிலே அணிந்திருக்கின்ற அணிக்கு விளக்கம் அளிப்பதாக அமைந்திருக்கின்ற ஒளிபொருந்திய நெற்றியினையும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு விளக்கம் அளிப்பவளாகிய அழகிய வளைந்த கொப்பூழினையுடைய நின்மனைவி வானுலகில் திரியும் தெய்வப் பெண்களுக்குள் சிறந்த அருந்ததியை போன்றவள். இப்பாடலில் அருந்ததி என்னும் தொன்மத்தினைப்பற்றிய செய்திகள் தரப்ப்பட்டுள்ளது.

கற்புத் தெய்வம் அருந்ததி எனும் தொன்மச்செய்தியானது அரிசில் கிழார் எழுதிய எட்டாம் பத்தில் வென்றிச் சிறப்புக் கூறி, மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

 மீனோடு புரையும் கற்பின்

என்னும் பாடல் வரிகளில் மீன் என்கின்ற சொல் அருந்ததியைக் குறிப்பதாக கூறப்பட்டுள்ளது.

முருகப்பெருமான் குறித்த தொன்மம் 

பதிற்றுப்பத்து இலக்கியத்தில் முருகப்பெருமான் குறித்த தொன்மம் இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளது.

வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
வளிபாய்ந்து அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணக்கும்
சூருடை முழுமுதல் தடித்த பேர்இசை
கடிஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு

இப்பாடலில் வேள் என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கின்றது. கடலிலே அலைகள் மலைப்போல்  பெரியனவாய் எழுகின்றன. அவ்வலைகள் சிறுசிறு துளிகளாக உடைந்து சிதறும் வகையில் காற்று பாய்ந்து அடிக்கின்றது. எனவே கடல் அசைகின்ற நிறைந்த நீரினைச் சூல்போலக் கொண்டு விளங்குகின்றது. இத்தகைய நீர்நிறைந்த பெரிய பரப்பினையுடைய கரிய கடலின் நடுவே சென்று உயிர்களை வருத்துகின்ற இயல்புடைய அசுரர்களுக்குச் பாதுகாவலைச் செய்யும் சூரபதுமனது தன்மையுடைய மாமரத்தின் அடியினை வெட்டிய பெரும்புகழையும் மிகுதியான சினத்தையும் வெற்றியினையும் கொண்ட முருகப்பெருமான் எனும் கருத்தினைக் கொண்ட இப்பாடலில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம்செய்த புராணச் செய்தி இடம்பெற்றுள்ளதை அறிகின்றோம்.

திருமால் பற்றிய தொன்மங்கள்

சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் திருமால் பற்றிய தொன்மங்கள் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பத்தில் வென்றிச் சிறப்பும் நாடு காத்தற் சிறப்பும் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

மண்ணுடை ஞாலத்து மன்உயிர்க்கு எஞ்சாது
ஈத்துக் கை தண்டாக் கை கடுந்துப்பின்
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
நெடியொன் அன்ன நல் இசை
ஒடியா மைந்தே நின்பண்பு பல நயத்தே

நெடியோன் என்னும் சொல் திருமாலைக் குறிப்பதாக இடம்பெற்றுள்ளது. மண்செறிந்த இந்நிலவுலகில் நிலைபெற்றுள்ள உயிர்களுக்கெல்லாம் குறைவில்லாத ஈகையும் குறைவில்லாத வலிய வலிமையையும் உடையாய். உயர்ந்த இடங்களாகிய இறைவன் உறையும் ஆலயங்களுக்கெல்லாம் சிறந்த அணிகலன்களை அளிப்பவனே. காண்பவருக்கு இன்பத்தைத் தருகின்ற திருமாலைப் போன்ற குறைவற்ற புகழ்உடைய உனது பண்புகளைக் காண விரும்புகின்றேன் என்பது இப்பாடலின் கருத்தாகும். குறைவற்ற புகழ் உடைய தெய்வம் திருமால் எனும் தொன்மச்செய்தியை இப்பாடலின் வாயிலாக அறிகின்றோம்.

நான்காம் பத்தில் மன்னர்க்கு உரிய மாட்சிமையேல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

குன்று தலைமணந்து, குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக்
கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனந்தலை ஒருங்குஎழுந்து ஒலிப்ப
தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென
உண்ணாப் பஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டுஊது பொலிதார், திருஞெமர் அகலத்து
கண்பொரு திகிரி கமழ்குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதி பெயர 

குன்றுகள் தம்மிடம் பொருந்தி நிற்க, பல்பொருள்களும் திரளுகின்ற கடலினை ஆடையாக உடுத்திய நிலவுலகத்து மக்கள். ஒரே நேரத்தில் ஒன்று போல் தம் கைகளைத் தலைமேல் தூக்கி வணங்கித் தம் குறையைக் கூறித் தீர்க்குமாறு வேண்டிக்கொள்ளும் ஆரவாரமானது வேறுபட்ட நான்கு திசைகளும் பரந்த இடத்தில் ஒன்றாக ஓங்கி ஒலித்தது போன்று இருந்தது. தெளிந்த ஓசையை உடைய மணியை அடிப்பவர் கல்லென்னும் ஓசையுண்டாக ஆரவாரிப்ப, அதனைக் கேட்டு உண்ணாமல் இருந்த இறைவனை வணங்கும் மக்கள்கூட்டம் குளிர்ச்சியான நீர்த்துறையில் நீராடும் வண்டுகள் ஒலிக்கும் மாலையினை அணிந்த திருமகள் பொருந்திய மார்பினை உடைய, காண்பவர் கவர்ந்திருக்கும் சக்கரப்படையினை ஏந்திய கையையும் நறுமணம்வீசும் பூங்கொத்துக்களையுடைய துவள மாலையை அணிந்த மார்பினையும் கொண்ட திருமாலினது திருவடிகளைப் புகழ்ந்து வணங்கித் துதித்து மனத்தின்கண் மிகுந்த மகிழ்ச்சியுடையவராக தாங்கள் வாழும் ஊர்களுக்குச் செல்வர் என்பது இப்பாடலின் பொருளாகும். திருமகள் பொருந்திய மார்பினையும், கையில் சக்கரப்படையினையும், துவளமாலையினையும்  உடையவர் திருமால் என்னும் தொன்மச்செய்தி  இடம்பெற்றிருப்பதை இப்பாடலின் வாயிலாக அறியலாம்.

ஏழாம் பத்தின் பதிகத்தில்,

மாய வண்ணனை மனன் உறப் பெற்று

என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. இவ்வரியானது கரியநிறமுடைய திருமாலைத் தன் மனத்தில் பொருந்தப் பெற்றவன் என்னும் பொருளைத்தருகின்றது. கரிய வண்ணமுடைய திருமால் என்பது புராணத்தின் வாயிலாக அறியக்கூடிய தொன்மச்செய்தியானது இப்பாடலில் இடப்பெற்றிருப்பதை அறிகின்றோம்.

தேவர்கள் பற்றிய தொன்மங்கள்

பதிற்றுப்பத்தில் தேவர்கள் பற்றிய தொன்மச்செய்திகள் வென்றிச் சிறப்போடு பிற சிறப்புக்களையும் கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன.

உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை

இப்பாடல் வரிகளில் உயர்நிலை உலகம் என்னும் சொல் தேவர்கள் வாழுகின்ற உலகத்தினைக் குறிக்கின்றது. மேலும், ஐயர் என்னும் சொல் முனிவர் என்னும் பொருளைத் தருகின்றது. எனவே, தேவர்கள் உலகத்தில் வாழுகின்ற முனிவர்கள் என்னும் புராணச்செய்தியை இப்பாடல் வரிகளின் வாயிலாக அறியலாம்.

மாடோர் உறையும் உலகமும் கேட்ப

இப்பாடல் வரிகளில் மாடோர் என்னும் சொல்லானது தேவர்களைக் குறிக்கின்றது. காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, சங்கநிதி, பதுமநிதி முதலிய செல்வங்களைப் பெற்றுப் பொன்னுலகில் வாழ்வதால் தேவர்கள் மாடோர் என அழைக்கப்பட்டனர் எனும் தொன்மச்செய்தியை  இப்பாடலின் வாயிலாக அறிகின்றோம்.

முடிவுரை

பதிற்றுப்பத்தில் பெண் தொன்மங்கள் என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையானது, பெண் தெய்வத் தொன்மங்களான கொற்றவை, கொல்லிப்பாவை, அருந்ததி, துர்க்கை, திருமகள் ஆகியாரைப் பற்றி பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள தரவுகளை வெளிப்படுத்தி உள்ளது. திரு என்னும் சொல் திருமகளைளையும், மீன் என்னும் சொல் அருந்ததியையும், பாவை என்னும் சொல் கொல்லிப்பவையையும், சால் என்னும் சொல் கொற்றவையையும் குறிக்கும் நிலையினையும், இத்தொன்மங்களைப் பயன்படுத்திய நிலையில் பதிற்றுப்பத்து இலக்கியம் கொண்டுள்ள தொன்மை வளம் குறித்தும் அறிகின்றோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *