செல்வன்

இவ்வார வல்லமையாளராக தொழிலதிபர் திரு குமார் துரைசாமி அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

குமார் துரைசாமி அவர்களின் சொந்த ஊர் திருப்பூர். பின்னலாடை தொழில் செய்து வருபவர். டாலர் சிட்டி என பெயர் பெற்றிருந்தாலும் சுற்றுச்சூழல் பிரச்சனை திருப்பூரை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தினமலர் நாளிதழ் மற்றும் தமிழக வனத்துறை ஆகியோர் உதவியுடன் திருப்பூர் மாநகர மக்கள் இணைந்து வனத்துக்குள் திருப்பூர் எனும் ஒரு முயற்சியை முன்னெடுத்தனர்.

இதன்படி அப்துல்கலாம் ஐயா அவர்கள் கனவை நிறைவேற்றும் வகையில் திருப்பூர் எங்கும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகளில் மரக்கன்றை நட்டுவிட்டுப் போய்விடுவார்கள். மரம் விரைவில் பட்டுப்போய்விடும். ஆனால் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினர் மரங்களை நடுவதுடன் நில்லாமல் அவற்றுக்கு தினமும் தண்ணீர் லாரிகளை கொண்டு நீர் பாய்ச்சி மரங்களை கண்காணித்து வளர்த்தார்கள்.

பல தனியார் நிறுவனங்கள், கம்பனிகள் ஆகியோரை தொடர்புகொண்டு தொழிலகங்களின் நிலங்களில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டுகோள் விடுத்தார்கள். திருப்பூர் தொழிலதிபர்களும், பொதுமக்களும் இதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உதவி செய்தார்கள். சில ஆண்டுகளில் இது திருப்பூரா, கானகமா எனக் கேட்கும் அளவு திருப்பூர் பசுமை பொருந்திய மாநகர் ஆகிவிட்டது.

இரண்டுகட்டமாகத் துவங்கிய இத்திட்டம் 1 .40 இலட்சம் மரங்களை நடுதல் என்ற இலக்குடன் ஆகஸ்ட் 15 ‘2017 அன்று மூன்றாம் கட்டமாக விரிவடைந்தது. இரு மாதங்களில் 75 ,000 மரக்கன்றுகள் நிறைவு பெற்று இலக்கின் பாதியை எட்டவுள்ளது.

இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் தலைவரும் ஆன தொழிலதிபர் குமார் துரைசாமி அவர்கள் இது குறித்து கூறுகையில் “இன்றைய வனத்துக்குள் திருப்பூர் 3.0 நிகழ்வின் வெற்றி அனைவருக்கும் மகிழ்வளிக்கிறது. குக்கிராமமாக இருந்த இந்த திருப்பூர் இன்று மாவட்டத் தலைநகராக உருவெடுத்துள்ளதென்றால் அதற்கான முழு காரணம் உழைப்பு மட்டுமே, இன்றைய முதலாளிகள் அனைவருமே நேற்றைய தொழிலாளிகள், உழைக்கும் வர்க்கம் இல்லையென்றால் இந்த ஊரின் வளர்ச்சி கேள்விக்குறியே, பல்வேறு இன்னல்களை இந்த நகரம் குறிப்பாக பின்னலாடை தொழில் சந்தித்தபோதெல்லாம் அனைவரோடும் தோளோடு தோள்கொடுத்து வளர்ச்சியை சீராக்கிய பங்கு இங்குள்ள தொழிலாளர்களையும் அவர்கள் சார்ந்த அனைத்து தொழில்சங்கங்களையும் சாரும்.
தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் எங்கள் கரங்களை கோர்ப்போம்” எனக் கூறினார்.

மரங்களை நடுவதுடன் நில்லாமல் நீர்நிலைகளை மேம்படுத்தவும் இவ்வமைப்பு பாடுபட்டு வருகிறது. இது குறித்து பேசிய குமார் துரைசாமி அவர்கள் “தான் உண்பதைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் தொகுத்துக் கூறிய அரங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த அறமாகும்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப வாழாமல் தொடர்ந்து தான் வாழ பிற உயிர்களை தெரிந்தும் தெரியாமலும் அழித்து வந்ததால் ஏற்பட்ட வினையின் நீட்சி பருவமழை பொய்த்தல், அதன் விளைவாக நீர் நிலைகள் அழிந்து அதன் ஆதாரத்தில் வாழ்ந்த பல்வேறு உயிரினங்கள் அழிந்து அதன் காரணமாக ஏற்பட்ட இயற்கைக்கு முரணான நிகழ்வுகள், விழித்துக்கொண்ட தருணத்தில் இயற்கையைக் காக்கவும் மீட்கவும் இயன்ற அளவு,  தலைப்பட்டு வருகிறோம். அந்த வகையில் எங்கள் வெற்றி அமைப்பு திருப்பூர் மக்களோடு இணைந்து நீர்வழித் தடங்களை செப்பனிட்டு தூர்வாரிய ஆண்டிபாளையம் குளத்தில் பல்வேறு உயிரினங்கள் மீண்டும் வாழத் துவங்கி பதிமூன்று ஆண்டுகள், படத்தில் காண்பது ஆண்டிபாளையம் குளத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் விருந்தாளிகள், குளத்தின் நடுவே செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இரண்டு தீவுகளில் சர்க்கரை பழம் உள்ளிட்ட பல்வேறு சிறு பழங்களை தரும் மரங்களை நட்டோம், நன்கு வளர்ந்துள்ள இந்த மரங்களில் ஏராளமான பறவையினங்கள் வசிக்கின்றன. காலையிலும் மாலையிலும் அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

மாணிக்கபுரம் குளம், மூளிக்குளம், வேட்டுவப்பாளையம் குளம், அவிநாசி தாமரை குளம் என மாவட்டத்தின் பல்வேறு குளங்கள் பல்வேறு அமைப்புகளால் குறிப்பாக இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து தூர் வாரப்பட்டு பருவமழையின் காரணமாக நிரம்பியுள்ளது, அங்கெல்லாம் பல்வேறு உயிரினங்கள் மறுவாழ்வு பெற்றுள்ளன, பறவை இனங்கள் வந்த வண்ணம் உள்ளன, நாளது தேதியில் பல்வேறு அமைப்புகள் மாவட்டம் முழுவதும் மரங்களை நடுவது, அதனை பராமரித்து வளர்ப்பது, நெகிழி ஒழிப்பு, குப்பை மற்றும் கழிவு நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு என ஒரு எழுச்சியுடன் இளைஞர்கள் செயலாற்றுகிறார்கள்.

இன்னும் 10 வருடங்களில் நிச்சயம் திருப்பூர் மிகப் பசுமையான மாவட்டமாக உருவெடுக்கும் நிலப்பரப்பில் 34 % மரங்கள் , 50 அடியில் நிலத்தடி நீர், நீர் மேலாண்மை , மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் மேலாண்மை உள்ளிட்ட இயற்கை சார்ந்த அனைத்து பிரிவுகளிலும் முன்னோடியாகத் திகழும் , வலிமையான, வளமான, பசுமையான இந்திய தேசத்தை கட்டமைக்க திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் நிச்சயம் முன்னோடியாக இருப்பார்கள்” என்றார்

திருப்பூர் வணிகத்துக்கு மட்டுமல்ல, சுற்றுசூழலிலும் இந்தியாவுக்கே முன்னோடி என்பதை உணர்த்தும் வகையில் செயல்படும் வனத்துக்குள் திருப்பூர் மற்றும் வெற்றி அமைப்புகளை பாராட்டும் வகையில் குமார் துரைசாமி அவர்களை வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை இதழ் மகிழ்ச்சி அடைகிறது. இவரை கண்டு தற்கால இளைஞர் சமூகம் சுற்றுசூழல் மேம்பாட்டில் ஆர்வம் காட்டவேண்டும் என வல்லமை விரும்புகிறது

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்! (245)

  1. சிறந்த தேர்வு. சொந்தப் பணிகளுடன் சமூகப் பணியையும் சிரமேற் கொண்டு செவ்வனே ஆற்றி வரும் குமார் துரைசாமி அவர்களையும் அவருடன் இணைந்து பணியாற்றும் அனைவரையும் உளமாரப் பாராட்டுகிறேன். வனத்துக்குள் திருப்பூர் என்ற திட்டம், படிப்படியாக இதர பல நகரங்களுக்கும் பரவ வேண்டும். அதில் பறவையினங்கள் தங்கி இன்னிசை பாட வேண்டும்.

  2. பழகுதலில் இனிமை, செயலில் நேர்மை, சொல்லில் தூய்மை, சேவையில் வலிமை, மனதில் தூய்மை … அவரே நண்பர் குமார் துரைசாமி.

    வல்லமையாளர் என்பது சரியான தேர்வு. தங்களுக்கு நன்றியும், நண்பருக்கு பாராட்டும் உரித்தாகுக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *