க. பாலசுப்பிரமணியன்

கற்றலின் நோக்கமும் வருங்காலமும்

education-1-1-1-1-1

கற்றலைப் பற்றிய பல பரிமாணங்களை இதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்றோம். ஒரு தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுதிலிருந்து கற்றல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்துகொண்டிருக்கின்றது. ஒருவர் இப்படித்தான் கற்றுக்கொள்வாரென்றோ இவ்வளவுதான் கற்றுகொள்வாரென்றோ இந்தச் சூழ்நிலையில் தான் கற்றுக்கொள்வாரென்றோ சொல்லமுடியாது. கற்றல் உணர்வோடு ஒன்றி தொடர்ந்து நடக்கின்ற ஒரு செயல்.

நாம் பள்ளிகளில் ஒரு கதை படித்திருக்கின்றோம். கண் பார்வை இல்லாத பத்து பேர்கள் ஒரு யானையை தொட்டுப் பார்த்துவிட்டு தங்கள் அனுபவத்திற்கேற்ப  அதை எவ்வாறு வர்ணனை செய்தார்களோ அது போல் கற்றலைப் பற்றி பல பார்வைகள் உள்ளன. எல்லாப் பார்வைகளிலும் உண்மையும் குறைகளும் இருக்கின்றன. ஆகவே தற்போதைய மூளை நரம்பியல் வல்லுநர்கள் கருத்துப்படி கற்றல் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட செயல் என்றும் அதில் மற்றவர்களால் தாக்கத்தை மட்டும் ஏற்படுத்த முடியும் என்றும் கூறுகின்றனர். எனவே “கற்பித்தல்” (Teaching) என்ற செயலுக்கு ஒரு புதிய பார்வை ஏற்பட்டுளளது. அது “கற்றலை” ஊக்குவிக்கும் வளப்படுத்தும் மற்றும் வழிகாட்டும் செயல் மட்டுமே என விளக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பிக்கும் முறைகளில் மாற்றங்களும் புதிய பார்வைகளும் தேவைப்படுகின்றது. ஆசிரியர்கள் கூட்டுக் கற்றலில்(Cooperative and participative learning ) பங்குதாரர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும் அவர்கள் மாணவர்களிடையே உணர்வுசார் கற்றலை ஏற்படுத்தி கற்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். மேலும் மூளையின் நெகிழ்தன்மை (Neuro-plasticity) காரணமாக கற்றலின் திறனையும் அளவையும் காலத்தையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன. மூளை வல்லுநர்கள் கருத்துப்படி கடைசி மூச்சு வரை கற்றல் தானாக நடந்துகொண்டுதானிருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக, நாம் கற்றலைப் பள்ளிச்சுவர்களுக்குள்ளேயும் கல்லூரிக் கட்டிடங்களுக்குள்ளேயும் மற்றும்  புத்தகங்களுக்குள்ளேயும் சில தேர்வுகளுக்கு விளக்கமாக வரும் பதிவேடுகளிலும் சிறைப்படுத்திவிட்டோம். இவைகளுக்கு அப்பாலும் கற்றல் சிறப்பாகவும் வலுவாகவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. கற்றல் என்பது மனிதனின் ஒரு உயிர் ஆற்றல். நம் உயிர் மூச்சின் பதிவேடு. நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதற்கு ஒரு பதிவில்லாத சான்று.

கற்றலில் எத்தனை விழுக்காடு ‘நினைவாக’ மாறுகின்றது என்று செய்யப்பட ஆராய்ச்சிகளில் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கும் பாடங்களில் கிட்டத்தட்ட அறுபது முதல் எழுபது விழுக்காடு வரை கேட்கப்பட்ட நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் மறக்கப்படுகின்றது என்றும், (Volatile Memory) கிட்டத்தட்ட தொண்ணூறு விழுக்காடு நான்கு நாட்களுக்குள் மறக்கப்படுகின்றது என்றும் அறியப்பட்டுள்ளது.  மூளையில் பதிவாகும் கருத்துக்களில் அதிகமானவை தற்காலிக நினைவாகவே (Short term memory) இருந்து மறைந்து விடுகின்றன. அதில் சிறிதளவு மட்டும் அந்தத் தனி நபரின் ஆர்வம், தேவை, மற்றும் ஈடுபாடுகளுக்கேற்ப நீண்ட கால நினைவாக மாறி பதிவாகின்றது. இதில் ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் எப்பொழுது ஒரு கற்றலுக்குக் கிடைக்கும் உள்ளீடுகள் உணர்வுசார்ந்ததாக அமைகின்றனவோ,(Emotionally Competent Stimuli) அப்பொழுது விரைவில் நீண்டகால நினைவாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அறிந்துள்ளனர்.

தற்காலத்தில் தொழில்நுட்பங்களாலும் (Technology) மற்றும் கணினியின் தாக்கத்தாலும் கற்றலின் முறைகள், பாதைகள் மற்றும் தாக்கங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நேர்முகக் கற்றலிலிருந்து மறைமுக மற்றும் தொலைதூரக் கல்வி முறையில் (Distance learning) கல்வி கற்கும் முறைகள் வளர்ந்தும் முக்கியத்துவம் அடைந்தும் வருகின்றன. அத்துடன் வலைத்தளங்களின் ஆதிக்கத்தால் எல்லாவிதமான அறிவு உள்ளீடுகளும் விரைவிலும் நல்ல தரத்திலும் அதிக அளவிலும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாக கற்றலுக்கான துணை உள்ளீடுகள் அதிகரித்து வரும் நிலையில் கற்றல் தாற்காலிகத் தேவைகளை ஈடுகட்டுவதற்கான ஒரு கருவியாக மட்டும் அமைந்துவிட்டது. இதனால் கல்வியின் தரத்திலும் மேன்மையிலும் மாற்றங்களும் தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன. இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாத நிலைக்கு நாம் ஏற்கனவே வந்துவிட்டோம்.

இந்த வலைத்தள உள்ளீடுகளால் சில நேரங்களில் மாணவர்களின் கற்றலின் போக்கில் கவனச் சிதறல்களும் கவனச் சிதைவுகளும் ஏற்பட வாய்ப்புக்களும் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமின்றி, தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள், செய்தி ஊடுருவல்கள், வியாபாரத் தாக்கங்கள் ஆகியவற்றால் மாறுபட்ட சிந்தனைகளும் உறவுப் பார்வைகளும் கற்றலின் ஆழம், வளமை மற்றும் வலிமையின் அடித்தளங்களை ஆட்டிக்கொண்டிருக்கின்றன. இது நல்லதா இல்லையா என்பதைக் காலம்தான் நிர்ணயிக்க முடியும். ஏனென்றால்  மாற்றம் என்பது இயற்க்கையின் வழி. காலந்தொட்டு மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருப்பதால் தான் சிந்தனைகளில் வளர்ச்சியும் வாழ்வாதாரங்களில் முன்னேற்றங்களும் சமூக நீதியில் புதிய பார்வைகளும் தோன்றிக்கொண்டிருக்கின்றன. “மாற்றம் என்பது நிரந்தரமானது. அதை மாற்றமுடியாது” என்று சமூகவியல் வல்லுநர்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர்.

கற்றல் ஒரு தனிமனிதனின் தன்னிச்சையான செயல் என்பதால் இதற்கு பள்ளிக்கூடங்கள் தேவையா ஆசிரியர்கள் தேவையா அப்படியானால் அவர்களின் வருங்காலச் செயல்பாடுகள் எப்படியிருக்கும் எப்படியிருக்கவேண்டும் என்ற கேள்விகளும் அவ்வப்போது மேடை விவாதங்களுக்கு ஒரு கருத்தாக முன்வைக்கப்படுகின்றது. பல மேலை நாடுகளில் ஆசிரியர் தட்டுப்பாடுகளை நீக்கவும் கற்றலின் தரத்தை சமப்படுத்தவும் ரோபோ இயந்திரங்களை ஆசிரியர்களாக பயன்படுத்தும் சிந்தனையும் வளர்ந்துள்ளது. இது வியப்பாக மட்டுமின்றி  வேதனையளிப்பதாகவும் இருக்கின்றது. ஆனால் முன் கூறியபடி மாற்றங்களின் பாதைகள் எப்படி இருக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே நிர்ணயிக்க முடியாது.

கற்றல் வாழ்வின் முழு வளமைக்கா அல்லது பொருளீட்டலுக்கு தயார் செய்யப்படவேண்டிய ஒரு வழிமுறையா என்ற கருத்துக்களை  காலந்தொட்டு கல்வியாளர்கள் உலகளவில் விவாதித்துள்ளனர்  ஆனால் கல்வியின் குறிக்கோளை மிக அழகாகக் கூறியுள்ள வள்ளுவர் பெருந்தகை

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

என்று சொல்லி கற்றலுக்கும்  வாழ்விற்கும் உள்ள நெருக்கமான உறவை தெள்ளத்  தெளிவாக விளக்கியுள்ளார். ஆகவே கற்றலில் ஒரு மனிதனின் நல்வாழ்க்கைக்கும் பண்புகளுக்கும் மேன்மையான சமூகச் சிந்தனைகளுக்கும் தேவையான உள்ளீடுகள் இருத்தலின் அவசியம் தென்படுகின்றது. இந்தக் கருத்தை அரசும் பள்ளி நிர்வாகங்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் சமூகச் சிந்தனையாளர்களும் நினைவில் நிறுத்துதல் மிக்க அவசியம். அது நம்முடைய கல்விக்கொள்கைகளில் உள்ள சில தவறுகளை சீர் செய்ய உதவியாக இருக்கும்.

ஆனால் இதே நேரத்தில் வள்ளுவப் பெருந்தகையின் மற்றொரு குறளையும் நாம் மனதில் கொள்ளுதல் அவசியமாகின்றது.

உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லான் அறிவிலாதான் .

உலகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களைத் தன்னடக்கி  நமது கல்வி முறைகள் மாணவச் செல்வங்களை உலகளவில் பெருமைசேர்க்கும் நல்ல மனிதர்களாக உருவாக்க ஒரு கருவியாக இருக்கவேண்டும்.

“கற்றல் என்ற ஆற்றல்” – இதில் பல கோணங்களைக் கண்ட நாம் விரைவில் மற்றொரு தலைப்பின் கீழ் சந்திப்போம் !

இந்தத் தொடருக்கு உறுதுணையாக இருந்த வல்லமை ஆசிரியர் குழுவிற்கும் நிர்வாக ஆசிரியராக இதற்கு உதவி செய்த திருமதி பவள சங்கரிக்கும் என் உளங்கனிந்த நன்றி.

(நிறைவு)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.