Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 250 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலிலே உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். ஏதேதோ எண்ணங்களுடன் நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்வினுள் புகுந்து கொள்கிறோம். எதை எமது இலக்காகக் கொண்டு வாழ்வைத் தொடங்குகிறோமோ அந்த இலக்கை அடைந்து விட்டோம் எனும் பெருமையோடு வாழ்வை முடித்துக் கொள்பவர்கள் சிலரே! அதற்காக வாழ்வின் முடிவில் நாமடைந்த நிலையைப் பற்றி மற்றையோர்கள் பெருமைப்படக்கூடாது என்பதல்ல பொருள். நாமடைந்தவற்றைப் பெருமையாக எடுத்துக் கொள்ளும் பண்பு வாழ்வின் எமது வளர்ச்சியோடு வளர்ந்துள்ளதா என்பதுவே கேள்வி. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எமது ஆரம்பப் புள்ளியிலிருந்து நாமடையப் போகும் புள்ளிக்கு இரண்டு மூன்று வழிகள் இருக்கும் அதை முன்கூட்டியே அறிந்து வைத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிப்பதுவே எம்மில் அனுபவமிக்கவர்கள் செய்யும் செயல். ஏனெனில் ஒரு வழியில் தடையேற்பட்டால் மற்றொரு வழி மூலம் எமது இலக்கை அடையலாம் என்பதினாலேயே.

    ஆனால் வாழ்க்கைப் பயணம் அத்தகைய இலகுவானது அல்ல. எமது இலக்குக்கான பாதைகள் பல ஆரம்பிக்கும்போதே எமது கண்களுக்குத் தெரிவதில்லை. போகும் வழியில் எங்கோ ஓரிடத்தில் ஒரு தடையேற்படுகிறது. எமது இலக்குக்கான மாற்றுவழி தென்படாவிட்டால் நாம் இலக்கையே மாற்ற வேண்டிய தேவையேற்படுகிறது. இது நாம் வாழ்வில் தோல்வியடைந்து விட்டோம் என்று அர்த்தமாகுமா ? இங்கிலாந்துக்கு முதன் முதலில் வரும்போது ஐந்து வருடத் திட்டத்துடன் நுழைந்தவன் நான். ஐந்தே ஐந்து வருடங்களின் பின்னால் என் தாய்நாட்டிற்குத் தேர்ச்சி பெற்ற பொறியியலாளனாகத் திரும்பி எனது தாய்நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் என்பது அன்றைய இலட்சியமாக இருந்தது. ஆனால் காலம் போட்ட கணக்கே வேறு.  இன்று ஏறத்தாழ 43 வருடங்களின் பின் அதே இங்கிலாந்தில் இருந்து மடல் வரைந்து கொண்டிருக்கிறேன். எனது பொறியியல் அனுபவங்கள் இங்கிலாந்து நாட்டின் நிறுவனத்துக்கு ஏறத்தாழ முப்பது வருடங்கள் சேவையாற்றியுள்ளது. என் வாழ்வினை நான் தோல்வி எனவும் எடுக்கலாம் அன்றி வெற்றி என்றும் எடுக்கலாம். ஒரு தோல்வியின் பின்னால் மறைந்துள்ள வெற்றி என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

    விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்புவது ஒன்றே மனத்துக்கு அமைதியைக் கொடுக்கும்.  ஓர் ஓட்டப்போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக முன்னதாக இலக்கை அடைந்த முதல் மூன்று பேருக்கு மட்டுமே பரிசு கிடைக்கிறது. அவ்வோட்டப் போட்டியில் பங்குபற்றி இலக்கைத் தொட்ட அனைவருமே வெற்றி பெற்றவர்கள் எனும் உண்மையை இலகுவாக மறந்து போய்விடுகிறோம். வாழ்க்கையை ஓர் ஓட்டப்போட்டி என்று எடுத்துக் கொள்வோம். அதன் இறுதி இலக்கு அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் அதை யார் முதலில் தொடுவார்கள் என்பதை எம்மால் அறுதியிட்டுக் கூறி விட முடியுமா? ஒரு எண்பது வயதுப் பெரியவர் இன்னமும் ஓடிக் கொண்டேயிருப்பார் ஒரு முப்பது வயது இளைஞன் அவருக்கு முன்னாலேயே இலக்கைத் தொட்டு விட்டிருப்பான். இங்கு வெற்றி பெற்றவர் யார் ? எனது நல்ல நண்பர் ஒருவர். இங்கிலாந்தில் வாழும் வேளையில் தனக்கும், ஈழத்தில் வசிக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை கனடாவில் அமைத்துக் கொள்ள விரும்பினார் அதற்காக ஏறத்தாழ நான்கு முறைகள் முயற்சித்து நாலாம் தடவையே தன் முயற்சியில் வெற்றி கண்டார். இன்றோ கனடாவில் ஒரு நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதலாவது தோல்வியிலேயே மனம் தளர்ந்து போயிருப்பாரேயாகில் இன்றைய நல்ல வாழ்க்கையை அவர் அனுபவித்திருப்பாரா என்பது கேள்விக்குறியே!

    பூரணமான கணத்தைத் தேடுவதை விடுத்து எமக்குக் கிடைக்கும் கணங்கள் ஒவ்வொன்றையும் எவ்வாறு பூரணப்படுத்துவது என்று எண்ணுவதே சாலச்சிறந்ததாகும். எனது நாற்பதாவது வயதுவரை நான் ஒரு எழுத்தாளானாவேன் என்று கனவு கூடக் கண்டதில்லை. ஆனால் இன்று எழுத்து இல்லையேல் நானில்லை எனும் அளவுக்கு எழுவதை நேசிக்கும் ஒரு மனிதனாக வாழ்கிறேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் ஒவ்வொருவருடைய பாதையும் அவர்களின் ஆரம்ப இலக்கை அடையவில்லை எனினும் நாம் பயணிக்கும் பாதையை ரசிக்கவும், விரும்பவும் கற்றுக்கொள்ளும்போது அது ஒரு வெற்றிகரமான இலக்கையே எமக்குப் பரிசளிக்கிறது என்பதனை என் வாழ்வின் அடிப்படையில் இருந்து சுட்டிக்காட்டுவதற்காகவே! கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகள், “மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று” இவ்வுண்மையை எமக்கு அழகுறவே எடுத்துக்காட்டுகிறது.

    உங்களுடனான எனது மடல் உறவாடலில் 250 வாரங்களை எட்டிப்பிடித்து விட்டேன் என்று எண்ணும்போது கால ஓட்டத்தின் வேகத்தை உணர முடிகிறது. ஒரு நீண்ட பயணத்தை நடத்தும் ஒருவன் இடையிடையே சில மைல் கற்களில் அமர்ந்து தான்வந்த பாதையின் அனுபவங்களையும் இனித்தான் எட்ட வேண்டிய தூரத்தின் நீளத்தையும் அலசுவது போல இத்தகைய மைல் கற்களில் நானும் எனது இந்த எழுத்துப் பயணத்தின் நீளத்தையும், நோக்கத்தையும் அலசும் முகமாகவே இந்த மடல் வரைவு.

    இந்தப் பிரபஞ்சத்தின் காலத்தோடு ஒப்பிடுகையில் ஒரு நீர்க்குமிழி போன்ற எனது வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்களின் நீளம் இத்தனை பெரிதா? என்று எண்ணும் போது “எறும்பும் தன் கையால் எண்சாண்” எனும் முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது. எழுத்து என்பது புனைவு எனும் காலத்தை மாற்றியவர்களில் கவியரசர் வகித்த பாத்திரமும் முக்கியமானது. அவர் எழுத்துக்குக் கொடுத்த வடிவம் ஒரு புதுவகை அர்த்தத்தைத் தந்தது. சுய அலசல் எத்தனை தூரம் ஒரு மனிதனின் மனத்தின் அழுக்குகளைக் களைய உதவுகிறது எனும் உண்மை புலர ஆரம்பித்தது.

    எங்கோ பிறந்தேன் இன்று எங்கோ வாழ்கிறேன். ஆனால் நான் வாழும் இந்தப் புலம்பெயர் மண்ணில் நான் காணும் அன்றிக் கேட்கும் விடயங்களின் தாக்கங்களை ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையிலும் அந்நிய நாட்டிலிருந்து இங்கு வந்து இந்நாட்டின் குடியுரிமை பெற்றவன் எனும் வகையிலும் என் உடன்பிறவா உறவுகள், தமிழன்னை ஈந்த சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்வது அதுவும் தெரிந்தவற்றை எதுவித மாற்றமுமில்லாமல் அப்படியே பகிர்ந்து கொள்வது எனும் எனது நோக்கில் எத்தனை தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதைத் தீர்மானிப்பவர்கள் என் அன்பு உள்ளங்களாகிய நீங்களே!

    ஒன்று மட்டும் எனது உள்ளத்துக்கு உறுதியாகத் தெரிகிறது. என் கையில் வலுவிருக்கும்வரை, எனது மனத்தின் உணர்வுகளை நான் காணும், கேட்கும், அனுபவிக்கும் விடயங்களை மடலாக பகிர்ந்து கொள்வேன் என்பதே அது.

    உங்கள் அன்பிற்கும் , ஆதரவுக்கும் அனைத்துக்கும் மேலாக பொறுமைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கழல்பணிந்து நிற்போமே !

       ( எம் .ஜெயராமசர்மா . …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    நலமான உடல்வேண்டும்

    நல்லகல்வி வரவேண்டும்

    வளமான செல்வமெங்கள்

    வாழ்வினுக்கு வேண்டுமம்மா

    விலைபோகா மனம்வேண்டும்

    வீண்பழிகள் அறவேண்டும்

    நிலையான வாழ்வமைய

    நின்னருளை வேண்டுகின்றோம் !

     

    செல்வத்தைச் சேர்பதற்கு

    சேராதவிடம் சேர்ந்து

    அல்லல்பட்டு அல்லல்பட்டு

    அலைகின்றார் மாநிலத்தே

    தொல்லுலகில் செல்வமதை

    நல்லபடி சேர்ப்பதற்கு

    வல்லமையைக் கேட்டிடுவோம்

    வரம்தருவாள் லட்சுமியும் !

     

    வீரமென்னும் பேராலே

    கோரம்மிங்கே நடக்கிறது

    வீரத்தின் தூய்மையெலாம்

    விபரீதம் ஆகிறது

    உடல்வீரம் உளவீரம்

    உண்மைவீரம் ஆவதற்கு

    துர்க்கையது பாதமதை

    துணையெனவே பற்றிடுவோம் !

     

    கற்றறிந்த பெரியோர்கள்

    கபடமுடன் நடக்கின்றார்

    கல்வியினைக் காசாக்கி

    களங்கத்தை ஊட்டுகிறார்

    கற்றபடி நடக்காமல்

    மற்றவரை வதைக்கின்றார்

    கல்விதரும் சரஸ்வதியே

    காப்பாற்று கல்விதனை !

     

    அறிவில்லா வீரத்தால்

    ஆவது ஒன்றுமில்லை

    ஆற்றலில்லா கல்வியினால்

    ஆருக்கும் நன்மையில்லை

    கல்வியொடு வீரம்செல்வம்

    கைகோர்த்து நிற்பதற்கு

    கருணைநிறை சக்திகளின்

    கழல்பணிந்து நிற்போமே !

     

     

     

    Share
  • இழக்கப் போறாய் நீ அவளை!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 

    ++++++++++++++

     jaya

     

    இழக்கப் போறாய் நீ அவளை!
    இழக்கப் போறாய் அவளை!
    இன்றிரவு நீ அவளைக் கூட்டிச் செல்லாவிடில்
    தன்மனதை மாற்றிக் கொள்வாள்;
    நானவளை அழைத்துச் செல்வேன்
    இன்றிரவு! மேலும்
    நானவளைக் கனிவுடன்
    நடத்துவேன்;

    நீ அவளை இழக்கப் போறாய்!
    நீ அவளை இழக்கப் போறாய்!
    கண்ணியமாய் நீ அவளை நடத்தா விடில்,
    திண்ணமாய் காணப் போறாய்
    அவள் இழந்து போவதை!
    ஏனெனில் கண்ணிய மாய் நடத்துவேன்
    நானவளை!
    பிறகு நீதான் தனித்துக் கிடப்பாய்!

    நீ அவளை இழந்தாய்! இன்று
    நீ அவளை இழந்தாய்!
    உன்னை விட்டு நானவளைப் பிரிப்பதென
    முடிவுக்கு வந்து விட்டேன்!
    நீ படுத்தும் கொடுமைக்கு
    வேறென்ன செய்வது நான்?

     

     

    Share
  • தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

    இசைத்தமிழின் தொன்மை – 79
    ***********************************************
     
    பழந்தமிழிசையில் பண்கள்
    **********************************

    புரந்தரதாசர் (1484 – 1564)
    ********************************

    purandara-dasa

    சாஸ்திரிய சங்கீதம் ஏன் சிறுபான்மையினருக்கான பகுதியாக மாறியது என்பது என்னவோ புரியாத புதிராக இருக்கிறது.

    இசையானது பக்திமார்க்கமாகவே நம் கலாச்சாரத்தினுள் நுழைந்திருக்கிறது.

    சங்கத்தமிழ் இலக்கியங்களை நோக்கினாலும் அவை செய்யுள் அல்லது பாடல்களின் வடிவத்தில் திகழ்கின்றன.

    மற்றுமொரு பார்வையில் பழங்குடியினங்களின் அல்லது தொன்மை வாய்ந்த நாட்டுப்புற பாடல்களாக இருந்திருக்கின்றன.

    இவற்றிலிருந்து பக்திக்கு இசை மாறும் போது கடவுளின் வழிப்பாட்டிற்கு பாடல் வடிவம் தேவைப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் பாடல் என்றாலே அது கடவுளை வழிபடுதல் என்னும் நிலை தமிழகத்தில் நிலவியிருக்கிறது.

    அப்போது புரந்தரதாஸர் என்றொருவர் இருந்திருக்கிறார்.

    சங்கீதத்தின் வேர்கள் தமிழகத்தில் ஊன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இந்த புரந்தரதாஸர் தான்.

    இசை வழிப்பாட்டிற்கு மட்டுமல்ல அது தனியானதொரு அனுபவம் என்பதை உணர்ந்திருக்கிறார்.

    சில ராகங்களை உருவாக்கவும் செய்திருக்கிறார்.

    ஆனால் அவரது காலத்தில் முன்னெடுப்பாக மட்டுமே
    அவை அமைந்திருக்கின்றன.

    புரந்தரதாசர் (1484 – 1564) கருநாடக இசையின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

    இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான
    ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள்,
    அலங்காரங்கள், கீதங்கள்
    முதலியவற்றை இயற்றியுள்ளார்.

    மாயாமாளவகௌளை என்னும் இராகம் தான்
    ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம்
    எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே.

    புரந்தரதாசர் 1484 ஆம் ஆண்டு கன்னட மாநிலத்தில் புரந்தடகட எனும் ஊரில் மத்மதோஸ்த பிராமண குலத்தில் பிரபல்யமான செல்வந்தரான வரதப்பநாயக்கருக்கும் கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார்.

    இவரின் இயற்பெயர், ஸ்ரீனிவாச நாயக் ஆகும்.

    இவர் இளமையில் சீனப்பா என்ற பெயராலும் பின்பு திம்மப்பா, திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.

    பிற்காலத்தில் பண்டரிநாதன் மீது பக்தி ஏற்பட்டதால் புரந்தரவிட்டலர் எனும் பெயரும் வழங்குதலாயிற்று.தனது பெற்றோரை இருபதாம் வயதில் இழந்தார்.

    தனது பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    தன் தகப்பனாரின் இரத்தின வியாபாரத்தையே தானும் தொடர்ந்து பெரும் செல்வம் ஈட்டி நவகோடி நாராயணன் என்னும் பெயருடன் விளங்கினார்.

    இவர் தொடக்கத்தில் மிகவும் கருமியாகவும் பணமீட்டுவதிலேயே எண்ணமாகவும் இருந்தார்.

    இப்படியிருந்த இவரை பக்தி வழிக்கு திருப்பியது ஒரு முக்கிய சம்பவமாகும்.

    ஒரு சமயம் இவர் வயிற்று வலியால் அல்லலுற்றார்.
    இதைப் போக்க யாராலும் முடியவில்லை.

    பண்டரிநாதன் மீது நம்பிக்கை வைத்து மூன்று முறை தீர்த்தயாத்திரை செய்தார்.

    வயிற்று வலி நீங்கியது.

    தனது முப்பதாவது வயதில் ஞானோதயம் பெற்று பின்பு 1525 ம் ஆண்டு விஜயராச சுவாமிகளினதும்,சத்திய தர்மதீர்த்த சுவாமிகளினதும் அருள் பெற்று புரந்தரதாசர் எனும் பெயர் பெற்றார்.

    இவர் சங்கீத பிதாமகர், ஆதி குரு எனவும் அழைக்கப்படுகிறார்.

    இவர் 475,000 கிருதிகளை செய்துள்ளதாக வாசுதேவ நாமாவளிய என்னும் உருப்படியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்போது 8000 உருப்படிகள் தான் எஞ்சியுள்ளது.

    இவரின் உருப்படிகள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன.

    இவரின் உருப்படிகளை தாசர்வாள் பதங்கள் என்றும் தேவர் நாமாக்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு.

    இவரது முத்திரை புரந்தரவிட்டல என்பது ஆகும்.

    இலகுவான மொழியில் உள்ள இவரின் உருப்படிகளின் நடை மிகவும் எளிது.

    இவர் கீர்த்தனைகளில் வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சத்தைக் காணலாம்.

    மாஞ்சிபைரவி, மாரவி, வசந்தபைரவி, சியாமகல்யாணி போன்ற அபூர்வராகங்களிலும் இவர் உருப்படிகள் செய்துள்ளார்.

    இந்துஸ்தானி இசையிலும் சிறந்து விளங்கினார்.

    இவரது கடைசிக்காலத்தில் சந்நியாச ஆசிரமத்தை அடைந்து  1564 ம் ஆண்டு தை மாதம் இரண்டாம் திகதி அமாவாசையன்று இப்பூவுலகை நீர்த்தார்.

    ***********************************************

    சிறீ சிறீஸ்கந்தராஜா
    28/09/2017

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_3842

    “கஜங்கள் குளிர்விக்க ,கையம் புஜங்கள்
    நிஜம்கொள் அபயவரம், நீள்அம்-புஜங்கள்
    தரிக்கப்பச் சையணிந்த தாய்கஜ லஷ்மி
    பரத்தினும் மேலாம் பணி”…

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
    ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
    மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
    முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சரஸ்வதி மஹா யாகம்

    சரஸ்வதி துதி

    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை “ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்” ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் “ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்” ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டும் மாணவ மாணவியர்களின் கல்வித்தரம் உயரவேண்டியும், ஞானத்தின் பிறப்பிடமான கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் அருள்பெற வருகிற 29.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மஹா சரஸ்வதி யாகம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று சரஸ்வதி தேவியை வணங்கி ஞான தெளிவை பெறுவோம்.

    கல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானதுதான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்குத் தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி.

    சரஸ்வதி தேவி பிரம்மாவை மணம் புரிய ஊசியின் முனை மேல் நின்று உத்த தவம் செய்ததாகக் கூறுவர். சரஸ்வதிக்குப் பெரும்பாலும் நிறைய கோயில் இல்லை. தமிழகத் தில் கூத்தனூரில் மட்டுமின்றி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இல்லம்தோறும் சரஸ்வதி பூஜையன்று கோலோச்சுபவள் சரஸ்வதியே. வெண் தாமரையில் வீற்றிருப்பவள் சரஸ்வதி. வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். தன் கரங்களில் வீணையை யும் புத்தகத்தையும் தாங்கிய கலாவாணி. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சரஸ்வதி தேவிக்கு வருகிற 29.09.2017 ல் சரஸ்வதி பூஜையன்று வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் மஹாசரஸ்வதி யாகத்தில் பங்கேற்று சரஸ்வதியை வணங்குவதால் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிலை உயரப் பெறுவார்கள். சரஸ்வதியின் பாதங்களிலும் யாகத்திலும் வைத்து பூஜித்த எழுது பொருட்களான நோட்டு புத்தகம், பேனாக்களை பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்வாமிகள் திருக்கரங்களால் அருட்பிரசாதமாக வழங்கவுள்ளார். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மேலும் தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
    கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
    வாலாஜாபேட்டை-632513
    தொலைபேசி : 04172-230033 / 09443330203
    www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in
    Email : danvantripeedam@gmail.com

    Share
  • நவராத்திரி 10

    இசைக்கவி ரமணன்

    f05b0d62a058d1566368fe0ba06abfeb

    சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும்
    நில்லா திமைக்கின்ற சுந்தரீ!
    முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே
    மெளனத்தை சுவாசிக்கும் அந்தரீ!
    எல்லைகள் இல்லா நிரந்தரீ! நெஞ்சுள்
    எங்கோ த்வனிக்கின்ற மந்த்ரிணீ!
    தொல்லைகள் நீக்கியெனைத் தொய்வின்றித் தூக்கவே
    தோட்டத்தில் பாடிடும் பைங்கிளீ!

    வற்றாத ஊற்றையே வார்க்கிறாய்! தக்க
    வார்த்தையே தருணத்தில் சேர்க்கிறாய்!
    முற்றாத புத்தியின் முன்னிலும், கட்டி
    முக்தியை வெண்ணையாய் வைக்கிறாய்!
    பற்றேது மற்றவன் ஆக்குவாய், தெருவில்
    படும்பா டனைத்தையும் பார்க்கிறாய்!
    கற்றென்றும் வாராத கவிதையெனும் விந்தையைக்
    கலைவாணி தந்துன்னுள் ஈர்க்கிறாய்!

    செல்வந்தர் பலபேரைக் கண்டனம், கலை
    தேர்ந்தவர் சிலரையும் கண்டனம்
    புல்லர்புகழ் பெறுவதைக் கண்டனம், ஏதும்
    புரியா விமர்சகரைக் கண்டனம்
    நல்லவர் நலிவதும் கண்டனம், யார்க்கும்
    நல்லசிரிப் பில்லையதைக் கண்டனம், என்னை
    வல்லமை தரும்தமிழைப் பாடுமொரு கவிஞனாய்
    வாழ்வித்த தாயே என் வந்தனம்!

    உயிரெனும் உலையூதும் போதுன் – தோளில்
    ஒருகரம் வைத்துற்றுப் பார்க்கிறேன் – உலையில்
    உயிரைநீ வாட்டிடும் போதுன் – தாளில்
    போதுமடி என்றுவா திடுகிறேன்
    உயிரைஉய் விக்கும் போதுன் – முன்னில்
    ஓங்கியுன் புகழ்பாடு கின்றேன்
    உயிருக்குள் உயிராக சேய்வயிறில் தாயாக
    உற்றகலை வாணியே வந்தனம்!

    வாணிநீ! தேனிநீ! வற்றாத கேணிநீ!
    வார்த்தைகளின் தாயகம்!
    ராணிநீ! அறியாத ரகசியம் நீ அங்கு
    ராகங்களின் சேவகம்!
    மாணிக்க வீணையுன் மார்பில் படும்போது
    மனமெங்கும் பூங்காவனம்!
    தோணித் துறைமூலை பொன்னந்தி மாலையெதிர்
    தோன்றும்தாயே வந்தனம்!

    27.09.2017 / புதன் / காலை 9.21

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170927  Sharada -Devi series 08-lr

    படிகமணி மாலை, படிப்புணர்த்தும் ஓலை,
    மடிதவழும் வீணை, மருங்கின்(இடையின்) -பிடிபடாமை,
    கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
    வேலொத்து பாய்ச்சும் வசவு….

    வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
    தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
    மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
    ஞானத்தை நானுற நல்கு….

    அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
    பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
    ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
    மாற்றுத் துணியாய் மனது….

    கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
    வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
    கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
    தலைவானில் நிற்கும் திமிர்ந்து….

    வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
    சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
    பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
    பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….

    துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
    சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
    கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
    நடத்தெனது நாடகத்தை நன்கு….

    சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
    துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
    சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
    வித்தை சிருங்கேரி வாய்த்து….

    கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
    சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
    கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
    கிரகங்கள் கூப்பும் கரம்….

    வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
    மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
    அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
    முளைத்திடு முண்டக மா….

    உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
    களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
    ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
    ஓசை சதங்கையொலி ஓம்….

    நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
    ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
    படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….கிரேசி மோகன்….!

    Share
  • திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி

     

    unnamed
    வானைக்கா வையம்கா தூணை துரும்பைக்கா
    மோனை எதுகைக்கா மோஹனைக்கா -ஆனைக்கா
    ஆத்தா அகிலாண்ட அம்மைபோல் வேறேகாப்
    பாத்த எவரோ பகர்….!

    சுனையாக வாழும் சிவனிட பாகத்தில்
    அணையாத சக்தீயே, அம்மே -வினையான
    மண்வாழ்வின் மாருதமாம் ஆனைக்கா அம்பிகை
    விண்ணாகா சத்தின் விளைவு….

    யானைக்(கு) ஒருகாலம் பூனைக்(கு) ஒருகாலம்
    ஆனைக்கா அன்னை அடியார்க்கோ -வானம்தீ
    மண்காற்று நீர்காலம் மற்றுள்ள பூதமிவன்
    முன்தோற்று மண்டியிடு மாம்….!

    தேனுக்காய் வண்டேபோல் தாவி அடைக்கலமாய்
    ஆனைக்கா அன்னை அடிபணிய -பானைத்தோல்
    பிண்டத்தால் பட்டகடன் பாரம் குருவித்தலை 
    சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….

    பானைத்தோல் பாரத்தால் பட்டகடன் போக்கிட
    ஆனைக்கா அம்மை அடிக்கமலம் -தேனைப்போய்
    வண்டுண்ணும் வேகத்தில் வந்துநீ மொய்த்திட
    சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….

    கூன்பிறையும் மான்மழுவும் தேனொழுகும் பூவிதழும்
    பூணிறையின் ஊனுறையும் ஆணுமையை -நான்மறையும்
    வானவரும் மாலயனும் காணஅரி தானவளைக்
    காணத் திருவானைக் கா….

    தானே தனக்குவமை ஆன உமையாளை
    வீணே வர்ணிப்பதேன் வெண்பாவில் -ஆனை
    தனையன்று காத்த அகிலாண்ட வல்லி
    துணையென்(று) அவளைத் துரத்து….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • நவராத்திரி 09

    இசைக்கவி ரமணன்

     

    Navaratri

    நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம்
    நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள்
    பகராமல் எதையும்நான் செய்ததில்லை,
    பகிராமல் எதையும்நான் மறைத்ததில்லை
    சுகமென்றும் துயரென்றும் வருவதெல்லாம், சென்று
    சொல்லாமல் ஒருநாளும் சென்றதில்லை
    நகர்ந்துவிட்டாள் ஏனோ தெரியவில்லை! தவறு
    நான்புதிதாய் என்செய்தேன் புரியவில்லை!

    கணந்தோறும் எந்நலம் கேட்கின்றவள், நித்தம்
    கண்ணார நேசத்தைப் பெய்கின்றவள், என்னைப்
    பிணமாகப் பார்க்கின்ற பொருளென்னவோ? இந்தப்
    பிச்சியின் நெஞ்சின் கருத்தென்னவோ?
    ரணமாக உயிரெலாம் குடைகின்றதே, பல
    ராகங்கள் ஸ்ருதியின்றி உடைகின்றதே!
    மணமாலை பிணமாலை ஆகலாமா? தாய்
    மகனைப்போய்ப் பகையென்று தள்ளலாமா?

    கனவிலே நிலவுமுகம் காட்டுகின்றாள், காதல்
    கண்களால் இன்னும்தா லாட்டுகின்றாள்
    நனவிலோ தொலைவையே காட்டுகின்றாள்
    நான்ராணி என்பதை நாட்டுகின்றாள்
    மனதினை ஈயாக ஓட்டுகின்றாள், எனை
    மல்லாந்த ஆமையாய் வாட்டுகின்றாள்
    தினையளவும் என்மீதில் அன்பில்லையோ?
    சென்றகதை மாற்றுவதும் வன்பில்லையோ?

    அன்னையே! ஈதென்ன பரிசோதனை? காயும்
    அனலிலே மஞ்சமாய் ஒருவேதனை?
    வன்கொடுமை யால்வீழ்ந்த ஊமையாக, நான்
    வாடநீ பார்ப்பதா உன் சாதனை?
    உன்னில்நான் என்னில்நீ உண்மையன்றோ? அதை
    உணரா திருக்கின்ற பெண்மை நன்றோ?
    என்றென்றும் நீயென்றன் உயிரல்லவோ? நான் உன்
    அன்பிலே வாழ்கின்ற பயிரல்லவோ?

    போதுமம் மாயிந்தப் புதிய வேடம், பசும்
    புல்லுக்குத் தீயைப் புகட்டும் பாடம்
    தீதுநன் மையெலாம் தீர்த்தபின்பும், நான்
    தீரா திருப்பதில் என்ன லாபம்?
    ஆதரவுக் கேங்கிடும் அல்லிகண்டு, நிலவு
    அசிங்கமென் றேவிலகிச் செல்வதுண்டோ?
    காதலே யாவுமெனக் கற்றுத்தந்து, பின்
    காலால் மிதிக்கின்ற காதலென்னே!

    கன்னங் கருத்தசிறு பிள்ளையாக, மொத்த
    ககனம் அதிர்ந்திடும் காளியாக, இடை
    பின்னி நடக்கின்ற வஞ்சியாக,கிழப்
    பீடிகை போட்டிடும் பிச்சியாக
    என்னென்ன வடிவத்தில் வந்துநிற்பாய்! சுகம்
    எத்தனை வண்ணத்தில் தந்துநிற்பாய்!
    கன்னம் ஈரம்கண்டு காலமாச்சே! நீ
    கட்டித் தழுவினால் கவலை போச்சே!

    26.09.17 / செவ்வாய்

    Share
  • பறவையின் மனசு..!

    பெருவை பார்த்தசாரதி

     

    கற்றால்தான் உலகுபயன் மிகுமென்பதை மக்களும்..

    ……….கற்றபின்தான் உணர்ந்தறிய முடிகிறது.!…ஆனால்

    கற்காமலேயுலகில் வாழுமரிய உயிரினங்கள் பலவும்..

    ……….கற்றவருக்கு தன்செயலால் மேலும்கற்க வைக்கிறது.!

     

    பரந்துதிரியும் பறவைமனசை ஆராய்ந்து பார்த்தால்..

    ……….பாடம்பல சொல்லுமது…ஆறறிவுபெற்ற மனிதனுக்கே.!

    பரபரப்பான இயற்கைச் சூழலில் அழகுகொஞ்சும்..

    ……….பறவைக் கூட்டத்தைக் கண்டால்மனம் அமைதியுறும்.!

     

    பெற்றவள் ஒருவளிருக்க மற்றொரு பறவையதற்கு..

    ……….பெருமையுடன் உணவீந்தும் உயர்ந்த குணமுண்டு.!

    வேற்றுமை நிறமிலிருப்பினுமது ஒற்றுமையாகக் கூடிப்..

    ……….பற்றுடன் வாழ்வதற்கு பறவையெங்கே கற்றனவோ.!

     

    பகுத்துண்ணும் குணம்கொண்ட பறவையைப் பார்த்து..

    ……….படித்த மாந்தர்கள் கற்கவேண்டியது பலவுண்டாமதை..

    தொகுத்துப் பார்க்கின் புரியாதபல ஆச்சரியங்களதில்..

    ……….தொக்கி நிற்குமது மனிதனுக்குச் சாத்தியமில்லையாம்.!

     

    உச்சாணி மரக்கிளையிலோரம் ஒடிந்துவிழும் நிலையில்..

    ……….உறுதியுடன் தொங்கியாடும் தூக்கணாங் குருவிக்கூடும்.!

    பச்சிலையைச்சேர்த்து பசையிலாமலே இலைக்கூட்டை..

    ……….பசுஞ்சிட்டால் கட்டுமாற்றலு மிவைநமக்குச் சாத்தியமா.?

     

    உண்ணாமல் வெகுதூரம் பறக்கும் தன்னினத்துடன்சேர..

    ……….ஓராயிரம் மைல்கடக்கு மபாரசக்தி அதனிடமுண்டு.!

    உண்ணத்துடிக்கும் தன்குஞ்சுகளுக்கு ஓயாமல் இரை..

    ……….ஊட்ட உண்டதையுமிழ்ந்து தரும் பெரியமனசுண்டு.!

     

    பறவைத்தேடல் என்பதொரு வாழ்க்கைத் தேடலாகுமாம்..

    ……….பிரபஞ்சத்தில் பிரமிக்குமொரு படைப்பே பறவையினம்.!

    பறவைமனசு மிகப்பரந்த மனசாக அமைந்ததினாலந்தப்..

    ……….பறவையைத்தன் வாகனமாகக் கொண்டானோ இறைவன்.!

     

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 4

    -மேகலா இராமமூர்த்தி

    ”நாளை எங்குச் சந்திக்கலாம்?” என்று ஒவ்வொருநாளும் விடைபெறுமுன் தலைவியையும் அவளுயிரன்ன தோழியையும் தவறாது கேட்பது தலைவனின் வழக்கம். அவ்வாறே அன்றும் வினவினான்.

    அதற்குத் தோழி பதிலுரைக்கலானாள்…

    ”அன்ப! எம் ஊருக்கு அணித்தே பொய்கையொன்று உண்டு; அதனருகே ஓடுகின்றது ஒரு காட்டாறு; அக்காட்டாற்றுக்கு அருகே அமைந்துள்ளது அழகிய பூம்பொழிலொன்று. இரைதேரும் குருகுகளன்றி அப்பகுதி நாடி வேறாரும் வாரார். எம் கூந்தலை அலசுதற்கு வேண்டிய எருமண்ணைக் (களிமண்/ வண்டல்மண்) கொணர்வதற்காகத் தலைவியும் நானும் ஆண்டு வருவோம். நீவிர் அங்குவந்தால் தலைவியைச் சந்தித்து அளவளாவலாம்” என்று காதலரின் நாளைய சந்திப்புக்கு ஏற்றதோர் இடத்தைச் சொன்னாள்.

    பெண்கள் எண்ணெய்க் குளியலின்போது தம் கூந்தலில் தேய்த்துள்ள எண்ணெயின் பிசுக்கைப் போக்குதற்கு அற்றை நாளில் களிமண்ணை (இன்று சிகைக்காய் அல்லது ஷாம்பு பயன்படுத்துவதுபோல்) பயன்படுத்தியுள்ளமை இதன்மூலம் அறியக் கிடைக்கின்றது. இற்றை நாளிலும் இவ்வழக்கம் சில கிராமப்புறப் பெண்களிடம் இருத்தல் கூடும். இஃது ஆய்தற்குரியது.

    ஊர்க்கும்  அணித்தே  பொய்கை  பொய்கைக்குச்
    சேய்த்தும்  அன்றே  சிறுகான்  யாறே
    இரைதேர்  வெண்குரு  கல்ல  தியாவதும்
    துன்னல்போ கின்றாற்  பொழிலே  யாமெம்
    கூழைக்  கெருமண்  கொணர்கஞ்  சேறும்
    ஆண்டும்  வருகுவள்  பெரும்பே  தையே.  (குறுந்: 113 – மா(தி)தீரத்தன்)

    தோழியின் விருப்பப்படியே மறுநாள் பகற்போதில் எழிலார் பொழிலின்கண் தலைவனும் தலைவியும் சந்தித்தனர். தலைவியின் நெடுங்கூந்தலின் நறுமணம் தலைவனைச் சுண்டியிழுத்தது. ”மலரினும் நறியவோ உன் கூந்தல்…சொல் அரிவையே!” என்று கேட்டான்.

    “யானறியேன் அன்பரே! மலர்கள்தோறும் தேனைத் தேடியுண்ணும் தும்பியொன்று இதோ… நம்மருகே சிறகுவிரித்துப் பறக்கிறது பாருங்கள்! அதனிடம் உங்கள் ஐயத்தைக் கேளுங்கள்!” என்றாள் தலைவி வேடிக்கையாக.

    ”அப்படியா…இதோ கேட்டுவிடுகின்றேன்” என்று நகைத்த தலைவன், தும்பி ஒன்றைத் தன் கையில் ஏந்தி, “பூந்தாதைத் தேர்ந்துண்ணும் எழிற் சிறகமைந்த தும்பியே! நீ என் நிலத்தைச் சேர்ந்த வண்டாகையால் எனக்கு விருப்பமானதை உரைக்கவேண்டும் என எண்ணாது, உண்மையை உரை! என்னொடு கெழுமிய நட்புடைhoneybee இவ்வரிவை கூந்தல் மணத்தினும் மிக்க மணமுடை மலர்கள் இந்நானிலத்தில் உண்டோ நவில்!” என்று கேட்டான். தும்பியொடு தலைவன் நிகழ்த்திக்கொண்டிருக்கும் உரையாடல் கண்ட தலைவி நகையாடி அதனை இரசித்தாள்.

    கொங்குதேர்  வாழ்க்கை  அஞ்சிறைத்  தும்பி
    காமம்  செப்பாது  கண்டது  மொழிமோ
    பயிலியது  கெழீஇய  நட்பின்   மயிலியல்
    செறியெயிற்  றரிவை  கூந்தலின்
    நறியவும்  உளவோ  நீயறியும்  பூவே.   (குறுந்: 2 – இறையனார்)

    இப்பாடலைத் தருமி எனும் பிரமசாரிக்குப் பாண்டிய மன்னனிடம் பொற்கிழி பெற்றுத்தருவதற்காக ’ஆலவாய் இறையனார்’ பாடியதாய்த் ’தமிழ் நாவலர் சரிதை’ எனும் நூல் புகல்கின்றது. இதே கருத்தையே திருவிளையாடற்புராணம், கடம்பவன புராணம் போன்ற பின்னாளைய சைவசமயப் புராண நூல்களும் வழிமொழிகின்றன.

    தலைவன், ’தலைவியின் நலம் பாராட்டல்’ என்ற அடிப்படையிலேயே இப்பாடல் குறுந்தொகையில் அமைந்துள்ளது. கடவுட் கதைகள் ஏதும் இதனோடு இணைத்துச் சொல்லப்படவில்லை என்பதை அறிக. எனவே, இறையனார் எனும் பெயரிய மானுடப் புலவர் ஒருவர் இயற்றிய பாடலை, ’இறையனார்’ எனும் பெயர்கண்டு இஃது இறைவனே பாடியது என்று மக்கள் எண்ணியதன் விளைவாய் இத்தகு புராணக் கதைகள் பின்னர்த் தோற்றம் பெற்றிருத்தல் கூடும் என்று நினையவேண்டியுள்ளது.

    இப்பாடலில் தும்பியொடு தலைவன் நிகழ்த்திய நயமான உரையாடல் பிற்றைநாளைய புலவோர் உள்ளத்தையும் வெகுவாய்க் கவர்ந்திருக்க வேண்டும். ஆதலால்தான் இப்பாடலை அடியொற்றி வேறுசில பாடல்களும் எழுதப்பட்டிருக்கின்றன என எண்ணுகிறேன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று நம்மாழ்வாரின் பின்வரும் திருவிருத்தப் பாசுரம்.

    வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ
    உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம் ஏனமொன்றாய்
    மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
    விண்டுகள் வாரும் மலருள வோநுல் வியலிடத்தே.
    (திவ். பிரபந்தம் – திருவிருத்தம் – 55)

    தலைவனையும் தலைவியையும் பொழிலிடத்து விட்டுவந்தோமே…அவர்களை இப்போது கவனிப்போம்!

    தன் செயல்கண்டு நகையாடிய தலைவியின் சிரிப்பில் தலைவனும் இணைய, காதலரின் சிரிப்பொலி கேட்டுச் சோலை மரங்களிலிருந்த பறவைகளும் ஆரவார ஒலியெழுப்பி அவர்கள் மகிழ்ச்சியில் தாமும் பங்குகொண்டன.

    அப்போது பதற்றமாய்ப் பொழிலுக்குள் நுழைந்தாள் தோழி. அதுகண்ட தலைவி, ”என்னவாயிற்று… ஏனிந்தப் பதற்றம்?” என்றாள் மிரட்சியோடு.

    ”அதை ஏன் கேட்கிறாய்? சோதனையாய் இன்றுபார்த்து நம் அண்டைவீட்டுப் பெண்கள் பலரும் இந்தப் பொய்கைக் கரைக்கு எருமண் எடுக்க வந்துவிட்டனர். கரையோரம் நின்றிருந்த எனைப் பார்த்து,

    “நீ ஏன் இங்கே தனியே நிற்கிறாய்? உன் ஆருயிர்த்தோழியான தலைவி எங்கே?” என்று கேள்விக் கணைகளால் என்னைத் துளைத்தெடுத்துவிட்டனர். அவர்கள் நம்புகின்ற வகையில் விடைசொல்லித் தப்பிவருவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது” என்று பெருமூச்செறிந்தாள் தோழி.

    தலைவி அவளைக் கவலையோடு பார்த்திருக்க, தொடர்ந்த தோழி, “இனியும் இந்தப் பொழில் உங்கள் சந்திப்புக்கு உகந்ததன்று. இவ்விடம்  மட்டுமன்று…இப்பகுதியிலுள்ள எவ்விடமுமே பகற்குறிக்கு உகந்ததன்று. ஆம், பகற்பொழுதில் திகிரிக்குப் போட்டியாய்த் திரிந்துகொண்டிருக்கும் நம்மூர் மக்களின் கழுகுக் கண்களிலிருந்து காதலர் நீங்கள் தப்பவே முடியாது” என்று கூறிநிறுத்தினாள்.

    தலைவி விக்கித்து நின்றாள்.

    ”அப்படியானால் இதற்கு என்னதான் தீர்வு? என் உடம்பொடு உயிரிடையன்ன தலைவியைக் காணாது நான் இருப்பது எவ்வாறு?” என்றான் தலைவன் வேதனை மீதூர.

    தோழி சற்று யோசித்துவிட்டு, ”இதற்கு ஒரு வழியிருக்கின்றது என்று கூறவும், தலைவனும் தலைவியும் ஏககாலத்தில் ”என்ன வழி?” என்றனர் பரபரப்போடு.

    ”பகலில்தானே நீங்கள் சந்திக்க இயலாது; இரவில் சந்திக்கலாமே! என்றாள்.

    தலைவியின் நிலவு முகத்தை மறைத்திருந்த கவலை மேகம் மெல்ல விலக, அவள் பவளச் செவ்வாயிலிருந்த முத்துப் பல்வரிசை பளீரிட்டது.

    “அப்படியானால் நானும் தலைவியும் நாளைமுதல் இரவில் சந்திக்கப் போகிறோமா? என்றான் தலைவன் உற்சாகமாக.

    ”ஆம்” – தோழி.

    ”எங்கே?” – தலைவன்.

    “நண்ப! தாழை பொருந்திய வளைந்த கழியானது இழுமென ஒலிக்கும் பெருங்கடலை வேலியாகவுடைய எம் சிறிய நல்லூரிலே, பொன்னணி புனைந்து கொடுஞ்சியொடு பொலியும் உம் நெடுந்தேரை (மலையொத்த) உயர்ந்த மணல்மேட்டிலே நிறுத்திவிட்டு, அதனருகே சற்றே இளைப்பாறி, தழையுடை அணிந்த இவ்வேந்திழையின் தனிமைத் துயர்தீர இவளோடு இனிதாய்த் தங்குவீர்” என்று இரவுக்குறிக்கான (இரவுநேரச் சந்திப்பு) இடத்தை உரைத்து அவனுக்கு விடைகொடுத்தாள் தோழி.

    இழையணிந்  தியல்வருங்  கொடுஞ்சி  நெடுந்தேர்
    வரைமருள்  நெடுமணல்  தவிர்த்துநின்  றசைஇத்
    தங்கினி  ராயின்  தவறோ  தகைய
    தழைதாழ் அல்குல்  இவள்புலம்  பகலத்
    தாழை தைஇய  தயங்குதிரைக்  கொடுங்கழி
    இழுமென  ஒலிக்கும்  ஆங்கண்
    பெருநீர்  வேலியெஞ்  சிறுநல்  லூரே.  (குறுந்: 345 – அண்டர்மகன் குறுவழுதியார்)

    விண்ணோடும் முகிலோடும் வெண்ணிலவு விளையாடும் நல்லிரவு நேரத்தில் பெண்ணிலவைச் சந்திப்பது தனக்கு இனியதோர் அனுபவமாக இருக்கும் என்றெண்ணி உவந்தபடி, தேரைத் தன் ஊர்நோக்கித் திருப்பினான் தலைவன்!

    [தொடரும்]

     

    Share
  • நவராத்திரி நாயகியர் (9)

    க. பாலசுப்பிரமணியன்

    சரஸ்வதி தேவி

    images (2)

    வெள்ளைத்தாமரை விரித்து விடியும்வரை காத்திருப்பேன்

    வீணையினைக் கையிலேந்தி விரைவாக வருவாயே

    கரையில்லாக் கலைகளைக் கைகளில் எடுத்துவந்தே

    தடையின்றித் தந்திடுவாய் தலைமகளே கலைமகளே !

     

    அசைகின்ற இதழ்களிலே உயிரூட்டும் மொழியனாய்

    அமுதான முத்தமிழில் அனுதினமும் இசையானாய்

    அழகான கவிதையிலே கற்பனையின் கருவானாய்

    அருளூற்றே! அலைபாயும் உள்ளத்தில் அமைதியானாய் !

     

    நரம்பெல்லாம் நான்மீட்டி நாதங்கள் எழுப்பிடுவேன்

    தசையெல்லாம் தாளமிட நின்நினைவே நடனமிட

    இருளெல்லாம் நீக்கிடவே எழுந்தருள்வாய் எழிலரசி

    இசையோடு மலர்தூவி இமைவிழித்துக் காத்திருப்பேன் !

     

    குரல்வேண்டும் வளம்வேண்டும் குறைவில்லா மதிவேண்டும்

    குலம்போற்றும் அறம்காக்க மறைசொன்ன மனம்வேண்டும்

    நான்முகனின் படைப்பினிலே நாலோடுஒன்றாக நானின்றி

    நாள்தோறும் உனைப்போற்றும் நல்லறிவு நீதரவேண்டும்  !

     

    எழுபிறப்பும் உன்னருளால் உயிரினங்கள் உயர்ந்திடவே

    எழுத்தறிவுக்கும் ஆசானாய் இனியதொழில் செய்யவேண்டும் !

    மடமைகள் மறைந்திடவே மாதங்கி அருளவேண்டும்

    மறக்காமல் உன்நினைவில்  உளம்மறந்து வாழவேண்டும் !

     

    விடையமர்ந்த மலைமகளோடும் வேங்கடத்தான் திருமகளோடும்

    நான்முகனின் நாவமர்ந்து நல்லவளே நீவருவாய் !

    விண்ணமர்ந்த வானவரின் வாழ்த்துக்கள் சேர்த்திடுவாய்

    மண்வாழும்  மாந்தருக்கே மகிழ்வுடனே  தந்திடுவாய் !

     

     

     

     

     

    Share
  • கீழடியில் தமிழர் தொன்மம்

    – நிலவளம் கு.கதிரவன்

        ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பார்கள். மிக சமீபத்தில் எனது நகரம் சார்ந்த தமிழ் அமைப்பின் செயற்குழுவில் கலந்துகொண்டபோது இவ்விடயம் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். ஆதாரமாக 02.02.1835-ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மெக்காலே ஆற்றிய உரையை மேற்கோளாகக் கூறினேன்.  மெக்காலே இப்படி பேசியிருந்தார். ”இந்தியா வளமான நாடு. தார்மீக மதிப்பும், சிறப்பும் கொண்ட அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கை, கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் முதுகெலும்பை முறித்தாலன்றி அந்த நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என நான் நினைக்கவில்லை”. பிறகு பேச்சு கீழடி அகழாய்வு தொடர்பில் சென்றது.

          தமிழர்களின் தொன்மையையும், நகரிய வாழ்க்கை முறையையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வண்ணம் கீழடி அகழாய்வில் அரிய சான்றுகள் கிடைத்து வருவது தமிழராகிய நாமெல்லாம் கர்வமும், பெருமையும் அடையக் கூடிய ஒன்றாகும்.  இத்தகைய பெருமையில் நாம் தொடர்ந்து திளைப்போமா என்பது ஆய்வு தொடர்ந்து நடைபெறுவதில்தான் உள்ளது.

           சிவகங்கை மாவட்டம் கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்டு மத்தியத் தொல்லியல் துறை உதவியுடன் அகழாய்வு தொடங்கப்பட்டது.  தொடங்கப்பட்ட சில நாட்களிலிலேயே, கி.மு.3-ம் நுற்றாண்டு தொடங்கி கி.பி.10ஆம் நுற்றாண்டு வரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதற்கான தடயங்கள் ஆய்வில் கிடைத்துள்ளன.  இதுவரை 5300 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.  அதில் தமிழ்பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள், தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள், பாசன வாய்க்கால்கள், ஆப்கானிஸ்தான் கலைப் பொருட்கள், வட மாநில முத்து மணிகள் குறிப்பிடத் தகுந்தவையாகும்.இவையெல்லாம் அன்றே பெரு வணிகம் நடந்ததற்கான சாட்சியாகும்.

           இதன் மூலம் சிந்துசமவெளி நாகரிகம் மட்டுமே நகர நாகரிகம் என்பது புறந்தள்ளப்பட்டு, சங்க காலத்திலேயே தமிழன் நகர நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறான் என்பது புலனாகிறது.

           முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி அவர்கள்,  ”கீழடி ஆய்வின் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள்  கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.  சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல் இங்கும் நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.  இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது.  புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன” என்று ஏற்கெனவே கூறியுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

                       தவிரவும் தமிழர் தொல்லியல் வரலாற்றில் அதிகமான செங்கல் கட்டடங்கள் உள்ளதும் கீழடியில்தான். செங்கற்களைக் கொண்டு நுட்பமான முறையில் திறந்தநிலைக் கால்வாய், மேற்புறம் செங்கற்கள் கொண்டு மூடப்பட்ட கால்வாய், சுடுமண் உருளைகள் கொண்டு அமைக்கப்பட்ட கால்வாய் என வெவ்வேறு கோணங்களில் இருந்து ஓரிடத்தில் வந்து சேரும்படியான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டிருந்தது, சங்ககாலத்தில் தமிழர்களின் அறிவியல் மேன்மையை புலப்படுத்துகிறது.

              இவை மட்டுமின்றி, கிடைக்கப் பெற்ற தொல் பொருட்களில் வேந்தன், திசயன், இயணன், சேந்தன், அவதி முதலிய சொற்களும், ”வணிகப் பெருமூவர்” என்று குறிப்பிட்ட ( சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரே வணிகப் பெருமூவர்) ஆதாரங்களும் கிடைத்ததின் வழியாகச் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட பெயர்களோடு இவை பொருந்திப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

               மேலும் தமிழறிஞர் ம.ராசமாணிக்கனார் தனது நீண்ட சங்க இலக்கிய ஆராய்ச்சியில், சங்ககால மதுரை தற்போதைய மதுரை இல்லை என்றும், அது திருபுவனத்திற்கு மேற்காகவும், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்காகவும் அமைந்திருக்கக் கூடும் எனக் கூறினார்.  தற்போதைய கீழடி அகழாய்வும் அதை உறுதிப்படுத்தும் வண்ணமே உள்ளது.

                110 ஏக்கர் கொண்ட கீழடியின் மொத்த அகழாய்வு இடத்தில் 50 சென்ட் இடத்தில் மட்டுமே தற்பொழுது இரண்டு கட்டங்களாக ஆய்வுகள் நடைபெற்று நிறைவுபெறும் நிலையில் உள்ளது.  மூன்றாம் கட்ட அகழாய்வு தொடர்ந்து நடைபெறுமா? என்ற ஐயம் கல்வியாளர்கள், தொல்லியல் வல்லுநர்கள், வரலாற்றாய்வாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.  இது தவிர, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் வழக்கமாகக் கொண்டு செல்லப்படும் மைசூர் அருங்காட்சியகத்திற்கே கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படிச் சென்றால் ஆதிச்சநல்லூர் ஆய்வுக்குக் கிடைத்த கதிதான் கீழடிக்கும் ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

     ஏற்பட்டுள்ள ஐயங்களையும், அச்சங்களையும் போக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.  தமிழர்களின் தொன்மை நாகரிகத்தைக் கண்டெடுத்து, உலகிற்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமது தமிழக அரசிற்குக் கூடுதலாக உள்ளது.  எனவே கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை அருங்காட்சியகம் அமைத்துப் பராமரிக்க ஏதுவாக மாநில அரசு உறுதியளித்தது போல் உடனடியாக 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்.  தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி உடனடியாக அறிக்கை வெளியிட ஆவனசெய்து தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உறுதி செய்ய வேண்டும்.  இதுவே அனைத்துத் துறை வல்லுநர்களின் எதிர்பார்ப்பாகும்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    புத்தாண்டு அன்று பத்மாவதித் தாயார்(திருச்சானூர்) தரிசனம்….கீழ் திருப்பதியில் நாடகம்….தாயார் சந்நிதியில் தோன்றிய வெண்பா….

    170926 Padmavathi - Devi series 07 - lr

    “மலைமேல் மால்மணாளர் மேவிட, மங்கா,
    அலமேல் அடிவாரம் ஆள்வோய், -கலைமேவி,
    நாடக பாக்கியத்தை, நாங்கள் அடைந்திட,
    ஆடகச்செம் பொன்னே அருள்”….!
    “உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
    பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
    மாலின் மரகத மார்பில்பத் மாவதி
    பாலின் நிறத்தில் பொலிவு”….!
    “சீதையாய் ராமன்பின் சென்றளித் தாள்ஜெயத்தை
    கோதையாய் கோவிந்தன் கைப்பிடித்தாள்-ராதை
    யாகி ரசித்தாள் யதுகுலக் கண்ணனை
    பாகிபத்மா பாதாம் புஜம்”….கிரேசி மோகன்….!

    Share