கீழடியில் தமிழர் தொன்மம்

– நிலவளம் கு.கதிரவன்

    ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பார்கள். மிக சமீபத்தில் எனது நகரம் சார்ந்த தமிழ் அமைப்பின் செயற்குழுவில் கலந்துகொண்டபோது இவ்விடயம் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். ஆதாரமாக 02.02.1835-ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மெக்காலே ஆற்றிய உரையை மேற்கோளாகக் கூறினேன்.  மெக்காலே இப்படி பேசியிருந்தார். ”இந்தியா வளமான நாடு. தார்மீக மதிப்பும், சிறப்பும் கொண்ட அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கை, கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் முதுகெலும்பை முறித்தாலன்றி அந்த நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என நான் நினைக்கவில்லை”. பிறகு பேச்சு கீழடி அகழாய்வு தொடர்பில் சென்றது.

      தமிழர்களின் தொன்மையையும், நகரிய வாழ்க்கை முறையையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வண்ணம் கீழடி அகழாய்வில் அரிய சான்றுகள் கிடைத்து வருவது தமிழராகிய நாமெல்லாம் கர்வமும், பெருமையும் அடையக் கூடிய ஒன்றாகும்.  இத்தகைய பெருமையில் நாம் தொடர்ந்து திளைப்போமா என்பது ஆய்வு தொடர்ந்து நடைபெறுவதில்தான் உள்ளது.

       சிவகங்கை மாவட்டம் கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்டு மத்தியத் தொல்லியல் துறை உதவியுடன் அகழாய்வு தொடங்கப்பட்டது.  தொடங்கப்பட்ட சில நாட்களிலிலேயே, கி.மு.3-ம் நுற்றாண்டு தொடங்கி கி.பி.10ஆம் நுற்றாண்டு வரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதற்கான தடயங்கள் ஆய்வில் கிடைத்துள்ளன.  இதுவரை 5300 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.  அதில் தமிழ்பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள், தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள், பாசன வாய்க்கால்கள், ஆப்கானிஸ்தான் கலைப் பொருட்கள், வட மாநில முத்து மணிகள் குறிப்பிடத் தகுந்தவையாகும்.இவையெல்லாம் அன்றே பெரு வணிகம் நடந்ததற்கான சாட்சியாகும்.

       இதன் மூலம் சிந்துசமவெளி நாகரிகம் மட்டுமே நகர நாகரிகம் என்பது புறந்தள்ளப்பட்டு, சங்க காலத்திலேயே தமிழன் நகர நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறான் என்பது புலனாகிறது.

       முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி அவர்கள்,  ”கீழடி ஆய்வின் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள்  கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.  சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல் இங்கும் நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.  இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது.  புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன” என்று ஏற்கெனவே கூறியுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

                   தவிரவும் தமிழர் தொல்லியல் வரலாற்றில் அதிகமான செங்கல் கட்டடங்கள் உள்ளதும் கீழடியில்தான். செங்கற்களைக் கொண்டு நுட்பமான முறையில் திறந்தநிலைக் கால்வாய், மேற்புறம் செங்கற்கள் கொண்டு மூடப்பட்ட கால்வாய், சுடுமண் உருளைகள் கொண்டு அமைக்கப்பட்ட கால்வாய் என வெவ்வேறு கோணங்களில் இருந்து ஓரிடத்தில் வந்து சேரும்படியான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டிருந்தது, சங்ககாலத்தில் தமிழர்களின் அறிவியல் மேன்மையை புலப்படுத்துகிறது.

          இவை மட்டுமின்றி, கிடைக்கப் பெற்ற தொல் பொருட்களில் வேந்தன், திசயன், இயணன், சேந்தன், அவதி முதலிய சொற்களும், ”வணிகப் பெருமூவர்” என்று குறிப்பிட்ட ( சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரே வணிகப் பெருமூவர்) ஆதாரங்களும் கிடைத்ததின் வழியாகச் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட பெயர்களோடு இவை பொருந்திப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

           மேலும் தமிழறிஞர் ம.ராசமாணிக்கனார் தனது நீண்ட சங்க இலக்கிய ஆராய்ச்சியில், சங்ககால மதுரை தற்போதைய மதுரை இல்லை என்றும், அது திருபுவனத்திற்கு மேற்காகவும், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்காகவும் அமைந்திருக்கக் கூடும் எனக் கூறினார்.  தற்போதைய கீழடி அகழாய்வும் அதை உறுதிப்படுத்தும் வண்ணமே உள்ளது.

            110 ஏக்கர் கொண்ட கீழடியின் மொத்த அகழாய்வு இடத்தில் 50 சென்ட் இடத்தில் மட்டுமே தற்பொழுது இரண்டு கட்டங்களாக ஆய்வுகள் நடைபெற்று நிறைவுபெறும் நிலையில் உள்ளது.  மூன்றாம் கட்ட அகழாய்வு தொடர்ந்து நடைபெறுமா? என்ற ஐயம் கல்வியாளர்கள், தொல்லியல் வல்லுநர்கள், வரலாற்றாய்வாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.  இது தவிர, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் வழக்கமாகக் கொண்டு செல்லப்படும் மைசூர் அருங்காட்சியகத்திற்கே கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படிச் சென்றால் ஆதிச்சநல்லூர் ஆய்வுக்குக் கிடைத்த கதிதான் கீழடிக்கும் ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

 ஏற்பட்டுள்ள ஐயங்களையும், அச்சங்களையும் போக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.  தமிழர்களின் தொன்மை நாகரிகத்தைக் கண்டெடுத்து, உலகிற்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமது தமிழக அரசிற்குக் கூடுதலாக உள்ளது.  எனவே கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை அருங்காட்சியகம் அமைத்துப் பராமரிக்க ஏதுவாக மாநில அரசு உறுதியளித்தது போல் உடனடியாக 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்.  தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி உடனடியாக அறிக்கை வெளியிட ஆவனசெய்து தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உறுதி செய்ய வேண்டும்.  இதுவே அனைத்துத் துறை வல்லுநர்களின் எதிர்பார்ப்பாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *