நவராத்திரி நாயகியர் (9)
க. பாலசுப்பிரமணியன்
சரஸ்வதி தேவி
வெள்ளைத்தாமரை விரித்து விடியும்வரை காத்திருப்பேன்
வீணையினைக் கையிலேந்தி விரைவாக வருவாயே
கரையில்லாக் கலைகளைக் கைகளில் எடுத்துவந்தே
தடையின்றித் தந்திடுவாய் தலைமகளே கலைமகளே !
அசைகின்ற இதழ்களிலே உயிரூட்டும் மொழியனாய்
அமுதான முத்தமிழில் அனுதினமும் இசையானாய்
அழகான கவிதையிலே கற்பனையின் கருவானாய்
அருளூற்றே! அலைபாயும் உள்ளத்தில் அமைதியானாய் !
நரம்பெல்லாம் நான்மீட்டி நாதங்கள் எழுப்பிடுவேன்
தசையெல்லாம் தாளமிட நின்நினைவே நடனமிட
இருளெல்லாம் நீக்கிடவே எழுந்தருள்வாய் எழிலரசி
இசையோடு மலர்தூவி இமைவிழித்துக் காத்திருப்பேன் !
குரல்வேண்டும் வளம்வேண்டும் குறைவில்லா மதிவேண்டும்
குலம்போற்றும் அறம்காக்க மறைசொன்ன மனம்வேண்டும்
நான்முகனின் படைப்பினிலே நாலோடுஒன்றாக நானின்றி
நாள்தோறும் உனைப்போற்றும் நல்லறிவு நீதரவேண்டும் !
எழுபிறப்பும் உன்னருளால் உயிரினங்கள் உயர்ந்திடவே
எழுத்தறிவுக்கும் ஆசானாய் இனியதொழில் செய்யவேண்டும் !
மடமைகள் மறைந்திடவே மாதங்கி அருளவேண்டும்
மறக்காமல் உன்நினைவில் உளம்மறந்து வாழவேண்டும் !
விடையமர்ந்த மலைமகளோடும் வேங்கடத்தான் திருமகளோடும்
நான்முகனின் நாவமர்ந்து நல்லவளே நீவருவாய் !
விண்ணமர்ந்த வானவரின் வாழ்த்துக்கள் சேர்த்திடுவாய்
மண்வாழும் மாந்தருக்கே மகிழ்வுடனே தந்திடுவாய் !