குறுந்தொகை நறுந்தேன் – 4
-மேகலா இராமமூர்த்தி
”நாளை எங்குச் சந்திக்கலாம்?” என்று ஒவ்வொருநாளும் விடைபெறுமுன் தலைவியையும் அவளுயிரன்ன தோழியையும் தவறாது கேட்பது தலைவனின் வழக்கம். அவ்வாறே அன்றும் வினவினான்.
அதற்குத் தோழி பதிலுரைக்கலானாள்…
”அன்ப! எம் ஊருக்கு அணித்தே பொய்கையொன்று உண்டு; அதனருகே ஓடுகின்றது ஒரு காட்டாறு; அக்காட்டாற்றுக்கு அருகே அமைந்துள்ளது அழகிய பூம்பொழிலொன்று. இரைதேரும் குருகுகளன்றி அப்பகுதி நாடி வேறாரும் வாரார். எம் கூந்தலை அலசுதற்கு வேண்டிய எருமண்ணைக் (களிமண்/ வண்டல்மண்) கொணர்வதற்காகத் தலைவியும் நானும் ஆண்டு வருவோம். நீவிர் அங்குவந்தால் தலைவியைச் சந்தித்து அளவளாவலாம்” என்று காதலரின் நாளைய சந்திப்புக்கு ஏற்றதோர் இடத்தைச் சொன்னாள்.
பெண்கள் எண்ணெய்க் குளியலின்போது தம் கூந்தலில் தேய்த்துள்ள எண்ணெயின் பிசுக்கைப் போக்குதற்கு அற்றை நாளில் களிமண்ணை (இன்று சிகைக்காய் அல்லது ஷாம்பு பயன்படுத்துவதுபோல்) பயன்படுத்தியுள்ளமை இதன்மூலம் அறியக் கிடைக்கின்றது. இற்றை நாளிலும் இவ்வழக்கம் சில கிராமப்புறப் பெண்களிடம் இருத்தல் கூடும். இஃது ஆய்தற்குரியது.
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே. (குறுந்: 113 – மா(தி)தீரத்தன்)
தோழியின் விருப்பப்படியே மறுநாள் பகற்போதில் எழிலார் பொழிலின்கண் தலைவனும் தலைவியும் சந்தித்தனர். தலைவியின் நெடுங்கூந்தலின் நறுமணம் தலைவனைச் சுண்டியிழுத்தது. ”மலரினும் நறியவோ உன் கூந்தல்…சொல் அரிவையே!” என்று கேட்டான்.
“யானறியேன் அன்பரே! மலர்கள்தோறும் தேனைத் தேடியுண்ணும் தும்பியொன்று இதோ… நம்மருகே சிறகுவிரித்துப் பறக்கிறது பாருங்கள்! அதனிடம் உங்கள் ஐயத்தைக் கேளுங்கள்!” என்றாள் தலைவி வேடிக்கையாக.
”அப்படியா…இதோ கேட்டுவிடுகின்றேன்” என்று நகைத்த தலைவன், தும்பி ஒன்றைத் தன் கையில் ஏந்தி, “பூந்தாதைத் தேர்ந்துண்ணும் எழிற் சிறகமைந்த தும்பியே! நீ என் நிலத்தைச் சேர்ந்த வண்டாகையால் எனக்கு விருப்பமானதை உரைக்கவேண்டும் என எண்ணாது, உண்மையை உரை! என்னொடு கெழுமிய நட்புடை
இவ்வரிவை கூந்தல் மணத்தினும் மிக்க மணமுடை மலர்கள் இந்நானிலத்தில் உண்டோ நவில்!” என்று கேட்டான். தும்பியொடு தலைவன் நிகழ்த்திக்கொண்டிருக்கும் உரையாடல் கண்ட தலைவி நகையாடி அதனை இரசித்தாள்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே. (குறுந்: 2 – இறையனார்)
இப்பாடலைத் தருமி எனும் பிரமசாரிக்குப் பாண்டிய மன்னனிடம் பொற்கிழி பெற்றுத்தருவதற்காக ’ஆலவாய் இறையனார்’ பாடியதாய்த் ’தமிழ் நாவலர் சரிதை’ எனும் நூல் புகல்கின்றது. இதே கருத்தையே திருவிளையாடற்புராணம், கடம்பவன புராணம் போன்ற பின்னாளைய சைவசமயப் புராண நூல்களும் வழிமொழிகின்றன.
தலைவன், ’தலைவியின் நலம் பாராட்டல்’ என்ற அடிப்படையிலேயே இப்பாடல் குறுந்தொகையில் அமைந்துள்ளது. கடவுட் கதைகள் ஏதும் இதனோடு இணைத்துச் சொல்லப்படவில்லை என்பதை அறிக. எனவே, இறையனார் எனும் பெயரிய மானுடப் புலவர் ஒருவர் இயற்றிய பாடலை, ’இறையனார்’ எனும் பெயர்கண்டு இஃது இறைவனே பாடியது என்று மக்கள் எண்ணியதன் விளைவாய் இத்தகு புராணக் கதைகள் பின்னர்த் தோற்றம் பெற்றிருத்தல் கூடும் என்று நினையவேண்டியுள்ளது.
இப்பாடலில் தும்பியொடு தலைவன் நிகழ்த்திய நயமான உரையாடல் பிற்றைநாளைய புலவோர் உள்ளத்தையும் வெகுவாய்க் கவர்ந்திருக்க வேண்டும். ஆதலால்தான் இப்பாடலை அடியொற்றி வேறுசில பாடல்களும் எழுதப்பட்டிருக்கின்றன என எண்ணுகிறேன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று நம்மாழ்வாரின் பின்வரும் திருவிருத்தப் பாசுரம்.
வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ
உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள வோநுல் வியலிடத்தே. (திவ். பிரபந்தம் – திருவிருத்தம் – 55)
தலைவனையும் தலைவியையும் பொழிலிடத்து விட்டுவந்தோமே…அவர்களை இப்போது கவனிப்போம்!
தன் செயல்கண்டு நகையாடிய தலைவியின் சிரிப்பில் தலைவனும் இணைய, காதலரின் சிரிப்பொலி கேட்டுச் சோலை மரங்களிலிருந்த பறவைகளும் ஆரவார ஒலியெழுப்பி அவர்கள் மகிழ்ச்சியில் தாமும் பங்குகொண்டன.
அப்போது பதற்றமாய்ப் பொழிலுக்குள் நுழைந்தாள் தோழி. அதுகண்ட தலைவி, ”என்னவாயிற்று… ஏனிந்தப் பதற்றம்?” என்றாள் மிரட்சியோடு.
”அதை ஏன் கேட்கிறாய்? சோதனையாய் இன்றுபார்த்து நம் அண்டைவீட்டுப் பெண்கள் பலரும் இந்தப் பொய்கைக் கரைக்கு எருமண் எடுக்க வந்துவிட்டனர். கரையோரம் நின்றிருந்த எனைப் பார்த்து,
“நீ ஏன் இங்கே தனியே நிற்கிறாய்? உன் ஆருயிர்த்தோழியான தலைவி எங்கே?” என்று கேள்விக் கணைகளால் என்னைத் துளைத்தெடுத்துவிட்டனர். அவர்கள் நம்புகின்ற வகையில் விடைசொல்லித் தப்பிவருவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது” என்று பெருமூச்செறிந்தாள் தோழி.
தலைவி அவளைக் கவலையோடு பார்த்திருக்க, தொடர்ந்த தோழி, “இனியும் இந்தப் பொழில் உங்கள் சந்திப்புக்கு உகந்ததன்று. இவ்விடம் மட்டுமன்று…இப்பகுதியிலுள்ள எவ்விடமுமே பகற்குறிக்கு உகந்ததன்று. ஆம், பகற்பொழுதில் திகிரிக்குப் போட்டியாய்த் திரிந்துகொண்டிருக்கும் நம்மூர் மக்களின் கழுகுக் கண்களிலிருந்து காதலர் நீங்கள் தப்பவே முடியாது” என்று கூறிநிறுத்தினாள்.
தலைவி விக்கித்து நின்றாள்.
”அப்படியானால் இதற்கு என்னதான் தீர்வு? என் உடம்பொடு உயிரிடையன்ன தலைவியைக் காணாது நான் இருப்பது எவ்வாறு?” என்றான் தலைவன் வேதனை மீதூர.
தோழி சற்று யோசித்துவிட்டு, ”இதற்கு ஒரு வழியிருக்கின்றது என்று கூறவும், தலைவனும் தலைவியும் ஏககாலத்தில் ”என்ன வழி?” என்றனர் பரபரப்போடு.
”பகலில்தானே நீங்கள் சந்திக்க இயலாது; இரவில் சந்திக்கலாமே! என்றாள்.
தலைவியின் நிலவு முகத்தை மறைத்திருந்த கவலை மேகம் மெல்ல விலக, அவள் பவளச் செவ்வாயிலிருந்த முத்துப் பல்வரிசை பளீரிட்டது.
“அப்படியானால் நானும் தலைவியும் நாளைமுதல் இரவில் சந்திக்கப் போகிறோமா? என்றான் தலைவன் உற்சாகமாக.
”ஆம்” – தோழி.
”எங்கே?” – தலைவன்.
“நண்ப! தாழை பொருந்திய வளைந்த கழியானது இழுமென ஒலிக்கும் பெருங்கடலை வேலியாகவுடைய எம் சிறிய நல்லூரிலே, பொன்னணி புனைந்து கொடுஞ்சியொடு பொலியும் உம் நெடுந்தேரை (மலையொத்த) உயர்ந்த மணல்மேட்டிலே நிறுத்திவிட்டு, அதனருகே சற்றே இளைப்பாறி, தழையுடை அணிந்த இவ்வேந்திழையின் தனிமைத் துயர்தீர இவளோடு இனிதாய்த் தங்குவீர்” என்று இரவுக்குறிக்கான (இரவுநேரச் சந்திப்பு) இடத்தை உரைத்து அவனுக்கு விடைகொடுத்தாள் தோழி.
இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர்
வரைமருள் நெடுமணல் தவிர்த்துநின் றசைஇத்
தங்கினி ராயின் தவறோ தகைய
தழைதாழ் அல்குல் இவள்புலம் பகலத்
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலியெஞ் சிறுநல் லூரே. (குறுந்: 345 – அண்டர்மகன் குறுவழுதியார்)
விண்ணோடும் முகிலோடும் வெண்ணிலவு விளையாடும் நல்லிரவு நேரத்தில் பெண்ணிலவைச் சந்திப்பது தனக்கு இனியதோர் அனுபவமாக இருக்கும் என்றெண்ணி உவந்தபடி, தேரைத் தன் ஊர்நோக்கித் திருப்பினான் தலைவன்!
[தொடரும்]
