நவராத்திரி 10
இசைக்கவி ரமணன்
சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும்
நில்லா திமைக்கின்ற சுந்தரீ!
முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே
மெளனத்தை சுவாசிக்கும் அந்தரீ!
எல்லைகள் இல்லா நிரந்தரீ! நெஞ்சுள்
எங்கோ த்வனிக்கின்ற மந்த்ரிணீ!
தொல்லைகள் நீக்கியெனைத் தொய்வின்றித் தூக்கவே
தோட்டத்தில் பாடிடும் பைங்கிளீ!
வற்றாத ஊற்றையே வார்க்கிறாய்! தக்க
வார்த்தையே தருணத்தில் சேர்க்கிறாய்!
முற்றாத புத்தியின் முன்னிலும், கட்டி
முக்தியை வெண்ணையாய் வைக்கிறாய்!
பற்றேது மற்றவன் ஆக்குவாய், தெருவில்
படும்பா டனைத்தையும் பார்க்கிறாய்!
கற்றென்றும் வாராத கவிதையெனும் விந்தையைக்
கலைவாணி தந்துன்னுள் ஈர்க்கிறாய்!
செல்வந்தர் பலபேரைக் கண்டனம், கலை
தேர்ந்தவர் சிலரையும் கண்டனம்
புல்லர்புகழ் பெறுவதைக் கண்டனம், ஏதும்
புரியா விமர்சகரைக் கண்டனம்
நல்லவர் நலிவதும் கண்டனம், யார்க்கும்
நல்லசிரிப் பில்லையதைக் கண்டனம், என்னை
வல்லமை தரும்தமிழைப் பாடுமொரு கவிஞனாய்
வாழ்வித்த தாயே என் வந்தனம்!
உயிரெனும் உலையூதும் போதுன் – தோளில்
ஒருகரம் வைத்துற்றுப் பார்க்கிறேன் – உலையில்
உயிரைநீ வாட்டிடும் போதுன் – தாளில்
போதுமடி என்றுவா திடுகிறேன்
உயிரைஉய் விக்கும் போதுன் – முன்னில்
ஓங்கியுன் புகழ்பாடு கின்றேன்
உயிருக்குள் உயிராக சேய்வயிறில் தாயாக
உற்றகலை வாணியே வந்தனம்!
வாணிநீ! தேனிநீ! வற்றாத கேணிநீ!
வார்த்தைகளின் தாயகம்!
ராணிநீ! அறியாத ரகசியம் நீ அங்கு
ராகங்களின் சேவகம்!
மாணிக்க வீணையுன் மார்பில் படும்போது
மனமெங்கும் பூங்காவனம்!
தோணித் துறைமூலை பொன்னந்தி மாலையெதிர்
தோன்றும்தாயே வந்தனம்!
27.09.2017 / புதன் / காலை 9.21