கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

170927  Sharada -Devi series 08-lr

படிகமணி மாலை, படிப்புணர்த்தும் ஓலை,
மடிதவழும் வீணை, மருங்கின்(இடையின்) -பிடிபடாமை,
கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
வேலொத்து பாய்ச்சும் வசவு….

வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
ஞானத்தை நானுற நல்கு….

அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
மாற்றுத் துணியாய் மனது….

கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
தலைவானில் நிற்கும் திமிர்ந்து….

வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….

துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
நடத்தெனது நாடகத்தை நன்கு….

சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
வித்தை சிருங்கேரி வாய்த்து….

கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
கிரகங்கள் கூப்பும் கரம்….

வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
முளைத்திடு முண்டக மா….

உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
ஓசை சதங்கையொலி ஓம்….

நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….கிரேசி மோகன்….!

About கிரேசி மோகன்

எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க