திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி

 

unnamed
வானைக்கா வையம்கா தூணை துரும்பைக்கா
மோனை எதுகைக்கா மோஹனைக்கா -ஆனைக்கா
ஆத்தா அகிலாண்ட அம்மைபோல் வேறேகாப்
பாத்த எவரோ பகர்….!

சுனையாக வாழும் சிவனிட பாகத்தில்
அணையாத சக்தீயே, அம்மே -வினையான
மண்வாழ்வின் மாருதமாம் ஆனைக்கா அம்பிகை
விண்ணாகா சத்தின் விளைவு….

யானைக்(கு) ஒருகாலம் பூனைக்(கு) ஒருகாலம்
ஆனைக்கா அன்னை அடியார்க்கோ -வானம்தீ
மண்காற்று நீர்காலம் மற்றுள்ள பூதமிவன்
முன்தோற்று மண்டியிடு மாம்….!

தேனுக்காய் வண்டேபோல் தாவி அடைக்கலமாய்
ஆனைக்கா அன்னை அடிபணிய -பானைத்தோல்
பிண்டத்தால் பட்டகடன் பாரம் குருவித்தலை 
சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….

பானைத்தோல் பாரத்தால் பட்டகடன் போக்கிட
ஆனைக்கா அம்மை அடிக்கமலம் -தேனைப்போய்
வண்டுண்ணும் வேகத்தில் வந்துநீ மொய்த்திட
சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….

கூன்பிறையும் மான்மழுவும் தேனொழுகும் பூவிதழும்
பூணிறையின் ஊனுறையும் ஆணுமையை -நான்மறையும்
வானவரும் மாலயனும் காணஅரி தானவளைக்
காணத் திருவானைக் கா….

தானே தனக்குவமை ஆன உமையாளை
வீணே வர்ணிப்பதேன் வெண்பாவில் -ஆனை
தனையன்று காத்த அகிலாண்ட வல்லி
துணையென்(று) அவளைத் துரத்து….கிரேசி மோகன்….!

 

 

About கிரேசி மோகன்

எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க