நவராத்திரி 09
இசைக்கவி ரமணன்
நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம்
நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள்
பகராமல் எதையும்நான் செய்ததில்லை,
பகிராமல் எதையும்நான் மறைத்ததில்லை
சுகமென்றும் துயரென்றும் வருவதெல்லாம், சென்று
சொல்லாமல் ஒருநாளும் சென்றதில்லை
நகர்ந்துவிட்டாள் ஏனோ தெரியவில்லை! தவறு
நான்புதிதாய் என்செய்தேன் புரியவில்லை!
கணந்தோறும் எந்நலம் கேட்கின்றவள், நித்தம்
கண்ணார நேசத்தைப் பெய்கின்றவள், என்னைப்
பிணமாகப் பார்க்கின்ற பொருளென்னவோ? இந்தப்
பிச்சியின் நெஞ்சின் கருத்தென்னவோ?
ரணமாக உயிரெலாம் குடைகின்றதே, பல
ராகங்கள் ஸ்ருதியின்றி உடைகின்றதே!
மணமாலை பிணமாலை ஆகலாமா? தாய்
மகனைப்போய்ப் பகையென்று தள்ளலாமா?
கனவிலே நிலவுமுகம் காட்டுகின்றாள், காதல்
கண்களால் இன்னும்தா லாட்டுகின்றாள்
நனவிலோ தொலைவையே காட்டுகின்றாள்
நான்ராணி என்பதை நாட்டுகின்றாள்
மனதினை ஈயாக ஓட்டுகின்றாள், எனை
மல்லாந்த ஆமையாய் வாட்டுகின்றாள்
தினையளவும் என்மீதில் அன்பில்லையோ?
சென்றகதை மாற்றுவதும் வன்பில்லையோ?
அன்னையே! ஈதென்ன பரிசோதனை? காயும்
அனலிலே மஞ்சமாய் ஒருவேதனை?
வன்கொடுமை யால்வீழ்ந்த ஊமையாக, நான்
வாடநீ பார்ப்பதா உன் சாதனை?
உன்னில்நான் என்னில்நீ உண்மையன்றோ? அதை
உணரா திருக்கின்ற பெண்மை நன்றோ?
என்றென்றும் நீயென்றன் உயிரல்லவோ? நான் உன்
அன்பிலே வாழ்கின்ற பயிரல்லவோ?
போதுமம் மாயிந்தப் புதிய வேடம், பசும்
புல்லுக்குத் தீயைப் புகட்டும் பாடம்
தீதுநன் மையெலாம் தீர்த்தபின்பும், நான்
தீரா திருப்பதில் என்ன லாபம்?
ஆதரவுக் கேங்கிடும் அல்லிகண்டு, நிலவு
அசிங்கமென் றேவிலகிச் செல்வதுண்டோ?
காதலே யாவுமெனக் கற்றுத்தந்து, பின்
காலால் மிதிக்கின்ற காதலென்னே!
கன்னங் கருத்தசிறு பிள்ளையாக, மொத்த
ககனம் அதிர்ந்திடும் காளியாக, இடை
பின்னி நடக்கின்ற வஞ்சியாக,கிழப்
பீடிகை போட்டிடும் பிச்சியாக
என்னென்ன வடிவத்தில் வந்துநிற்பாய்! சுகம்
எத்தனை வண்ணத்தில் தந்துநிற்பாய்!
கன்னம் ஈரம்கண்டு காலமாச்சே! நீ
கட்டித் தழுவினால் கவலை போச்சே!
26.09.17 / செவ்வாய்