”ஆடிவெள் ளிக்கிழமை அம்பாள் தினமதில்
கோடி மதயானை கும்பிட -ஓடும்
வினாயகர் தோன்றி வினைகள் அகற்றுவார்
வினாவிடை, வாழ்த்துமவர் வாக்கு’’….கிரேசி மோகன்….!
”ஆடிவெள் ளிக்கிழமை அம்பாள் தினமதில்
கோடி மதயானை கும்பிட -ஓடும்
வினாயகர் தோன்றி வினைகள் அகற்றுவார்
வினாவிடை, வாழ்த்துமவர் வாக்கு’’….கிரேசி மோகன்….!

’‘என்றும் புதியது, ஏகன் புதியது,
கன்றும் புதியது , கேசவ்ஜி- நன்றிதை
ஊரறியச் செய்திடும் உம்கை புதியது,
FOR-EVER கண்ணன்காப் பார்’’….கிரேசி மோகன்….!
லவ்லி கேசவ்….மாஸ்டர் ஃபீஸ்….
————————————————————————————————————————————–
மருமகன் வேலனோ தகப்பன்சாமி,
தாய்மாமன் மாலனோ தாய்ச்சாமி….குழந்தைகளிடமிருந்து INSPIRATION….!
கண்ணனுக்குப் பிடித மடிகள் ரெண்டு….1) தாய் மடி 2) தாய்ப்பசு மடி ….!
கண்ணன் புதியது, கன்று புதியது….குழந்தைகள் என்றும் புதியது….!
‘’தகப்பன் சுவாமி, தணிகை முருகன்,
அகப்பட்டு அன்னை அணைப்பு, -சுகம்பெற்றான்:
வெஞ்சிறை விட்டு, வெளிவந்(து) எசோதையின்,
மஞ்சம் துயின்றதாய்சா மி’’….கிரேசி மோகன்….
கங்காருநாடு என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலியா 200 வருட வரலாற்றினைக் கொண்டது. இங்குப் பல நாட்டினர், பல மொழிகளைப் பேசுபவர்கள், பல இன கலாசார பண்பாடுகளைக் கொண்டவர்கள் என 165 இனமக்களை அரவணைத்து அவர்களுக்கு அமைதியான ஆறுதலான வாழ்வினையும் வழங்கிக் கங்காருநாடு கண்ணியம் மிக்க நாடாக உலகில் விளங்குகிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
ஜனநாயகத்தை நூறுசதவிகிதம் நிலைநாட்டி வெற்றியுடன் திகழும் கண்ணியமும் இங்கு இருக்கிறது என்பது குறிப்பிடப்படவேண்டிய தொன்றேயாகும்.
இந்த நாட்டின் ஆதிகுடிகள் “அபோர்ஜினிஸ்” என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் கங்காரு மண்ணுக்கு உரியவர்கள் ஆவர். ஆனால் பிரித்தானிய ஆக்கிரமிப்பால் நிலைமாறி இப்போது கங்காரு மண்ணின் சொந்தக்காரர் வெள்ளையர் ஆகிவிட்டார்கள். என்றாலும் ஆதிகுடிகள் வரலாறு கங்காரு மண்ணுடன் ஒட்டியே இருக்கிறது. அவர்களின் நிறம், அவர்களின் மொழியில் காணப்படும் சில சொற்கள், அவர்களின் விழாக்கால கொண்டாட்ட அலங்காரம் இவற்றையெல்லாம் உற்று நோக்கும்பொழுது தமிழர்களின் சாயல் அவர்களிடத்துப் படிந்திருப்பதாகக் கருத முடிகிறது. இதனால்தான் தமிழர்களையும் கங்காரு நாடு கைகொடுத்து வரவேற்றதோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.
பல்லினக் கலாசாரத்தின் தொட்டிலாகக் கங்காரு நாடு திகழ்கிறது. மதம் கடந்தமக்கள் பலர் இங்கு இருப்பதனால் மதமென்னும் குணத்தை இங்கு காண்பது அரிதென்றே சொல்லலாம். அரசாங்கம் மதம்பற்றி எதுவுமே பேசுவதில்லை. அதே வேளை வழிபடும் சுதந்திரத்திலும் தலையிடுவதும் இல்லை. விரும்பியவர்கள் விரும்பியபடி தங்கள் சமயவழிபாடுகளை நிகழ்த்தும் உரிமையை இந்த நாடு வழங்கியிருக்கிறது. இதனால் வழிபாட்டில் மக்கள் தாம்விரும்பியவாறு ஈடுபடும்முழுச் சுதந்திரம் இங்கு காணப்படுகிறது. இதனால்தான் அவுஸ்திரேலிய மாநிலங்களில் பல இந்துக் கோவில்கள் எழுச்சிபெற்று இருக்கின்றன. படிக்கும் பாடசாலைகளிலும் மதம்பற்றிப் பேசப்படுவதில்லை. ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமியப் பாடசாலைகளில் அவரவர் மதக்கல்வி ஊட்டப்படுவதற்கும் எந்தவிதத் தடையும் போடப்படுவதும் இல்லை. அவுஸ்திரேலியர்களாக இருக்கின்றவர்கள் தங்களின் பெயர்களை கிறிஸ்தவப் பெயராக வைத்திருந்தும் அவர்கள் தாங்கள் எந்தமதம் என்று சொல்லிக்கொள்வதும் இல்லை. அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. இதனால் மதம் என்னும் பெயரால் இங்கு எந்தவிதச் சிக்கல்களோ மோதல்களோ ஏற்படுவதே இல்லை.
பல்லினக் கலாசார நாடாக விளங்குகின்ற காரணத்தல் கறுப்பு வெள்ளை என்று பார்க்கும் குறுகிய நோக்கும் இங்கு இல்லை என்றே கூறலாம். இதனால் ஆசியநாட்டவரோ ஆப்பிரிக்க நாட்டவரோ அமைதியாக ஆறுதலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனலாம். மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு இந்த நாட்டின் முக்கியப் பண்பாடாக விளங்குகிறது. அரசியல் பிரமுகர்கள் கூட எதுவித ஆடம்பரமும் இன்றிச் சாதாரண மக்கள் போன்றே சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவார்கள். மந்திரியாக இருந்தாலும் கடைகளில் பொருட்களை வாங்கினால் அதற்குரிய பணத்தைக் கொடுத்தே வாங்குவார். மந்திரிக்கென்று தனியான சலுகைகள் கிடையாது. அவரும் சாதாரண பிரசையாகவே நடந்துகொள்ளும் முறையானது ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பினையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.
முன்னேற விரும்பும் யாவருக்கும் இந்த நாடு நூறு சதவிகித ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. விரும்பியதைப் படிக்கலாம். விரும்பிய தொழிலைச்செய்யலாம். படிப்பதற்கு வயது இங்கு ஒரு தடையில்லை.எந்த வயதினரும் விரும்பியதைப் படிக்கும் வசதி இங்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
வேலைசெய்ய முடியாதவர் எனக் கணிக்கப்பட்டவர்கள், வயதுவந்தவர்கள், வேலையினை இழந்தவர்கள் யாவருக்கும் அவர்கள் அன்றாடம் வாழும் வகைக்கு ஏற்ற பண உதவிகளை இந்தநாடு சிறப்பாக வழங்கியும் வருகிறது. மூத்தோருக்குப் பல சலுகைகளையும் கொடுத்து வருகிறது. பெண்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு இந்தநாட்டில் கிடைக்கிறது. இந்த நாட்டுக்கு வந்த தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நாடு பல்கலாசாரத்தைப் பேணுவதால் தமிழர்தம் பண்பாடு கலாசாரங்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சமூக அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள சர்வ சுதந்திரமும் வழங்கி நிற்கிறது என்பது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.
தமிழை அரசாங்க அறிவித்தல்களில் கூட இந்தநாடு இடம்பெறச் செய்திருக்கிறது. தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் கூடத் தமது கருமங்களை ஆற்றுவதற்கு மொழிமாற்றுச் சேவையினையும் இலவசமாகக் கொடுத்து உதவி நிற்கிறது. தமிழ் அமைப்புகளுக்கு பண உதவிகளை வழங்குகிறது. தமிழ்ச் சங்கங்களின் விழாக்ககளுக்கு குறிப்பிட்டளவு பண உதவிகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதே.
கங்காரு நாட்டில் தேர்தலில் இந்தநாட்டின் பிரசையாகிவிட்ட எவருமே வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழர்கள் கலந்து வெற்றியீட்டி அரசியலில் கலந்த சேவையாற்றும் வாய்ப்பும் இங்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நாட்டில் இருந்து படித்து தொழில் பார்க்க ஆங்கிலம் அவசியம் என்பதனால் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் அதே வேளை சொந்த மொழியை, பண்பாட்டை விட்டுவிடத்தான் வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. இது இங்கு வந்த யாவருக்கும் பெரும் வரப்பிரசாதம் என்றுதானே எண்ணவேண்டும்.
இதனால் தமிழ் மொழி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. அவுஸ்திரேலிய அரசின் மொழிக்கொள்கையானது அவுஸ்திரேலியாவில் ஆங்கிலமும் பிற மொழிகளும் வளரப் பெருந்துணையாய் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. 1980ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கென்று ஒரு மொழிக்கொள்கை தேவை என்ற நோக்குடன் அரசின் மொழிக்கொள்கையை நடுவண் அரசு நான்கு முக்கியக் கோட்பாடுகளுடன் உருவாக்கி, தேசிய அளவில் அதை ஒழுங்குபடுத்தியது. அதில் ஆங்கில மற்ற மொழிகளைக் காத்தல், மற்ற மொழிகளிலும் அரசியல்சேவைகள் கிடைக்கப் பண்ணுதல், இரண்டாவது மொழி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.
இதன்படி 1987 ஆம் அவுஸ்திரேலியாவின் தேசிய மொழிக்கொள்கை நடுவண் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கொள்ளை அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் இப்படி ஒரு பன்மொழிக் கொள்கையை வகுத்த முதலாவது நாடாக அவுஸ்திரேலியா விளங்குகிறது என்பது இந்தநாட்டின் கண்ணியமான ஒரு செயற்பாடாக அமைகிறதல்லவா? தமிழை அரசாங்கம் ஒரு மொழியாக அங்கீகரிக்கும் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் முக்கியமான விஷயம் எனலாம்.
சில நாடுகளில் தங்கள் தாய் மொழியில் பேசவே பயப்படுகின்றனர். உதாரணமாக இலங்கையின் தலைநகரில் வாழும் தமிழ் மக்கள் வெளியிடங்களில் கூடியளவு தமிழில் பேசுவதை தவிக்கின்றார்கள். காரணம் அங்குள்ள பெரும்பான்மை இனத்தவர் தங்களை இனங்கண்டுவிடுவார்கள் என்னும் பயத்தினாலே. அப்படி இனங்காணப்பட்டால் தமக்குப் பாதுகாப்பு இல்லாமை வந்து விடலாம் என்று இன்றளவும் அஞ்சும் நிலை காணப்படுகிறது.
ஆனால் கங்காரு மண்ணில் மட்டும் இந்தப் பயத்துக்கு இடமே இல்லை. வீட்டிலோ, தெருவிலோ, வேலைசெய்யும் இடத்திலோ, போக்குவரவு செய்யும் பஸ்சிலோ, புகைவண்டியிலோ, சந்தைகளிலோ, விமான நிலையத்திலோ எங்கு வேண்டுமானாலும் இன்பத் தமிழில் இனிமையாகப் பேசக்கூடிய சுகம் இந்த நாட்டில் இருக்கிறது. அந்த அளவு வேற்று மொழிக்கும் அவர்களது பண்பாடுகளுக்கும் கெளரவம் வழங்கும் கண்ணியம் மிகவும் தாராளமாக இங்கு இருக்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.
இதனால்தான் தமிழ்விழாக்களையும், தமிழ் நூல்கள் வெளியீடுகளையும், இசை, நடன அரங்கேற்றங்களையும், தமிழ்ப் பத்திரிகைகளையும், தமிழ்ச் சங்கங்களையும் அமைத்துத் தமிழர்கள் தங்கள் சுயத்தினைத் தொலைக்காமல் கங்காரு நாட்டில் வாழ முடிகிறது என்றால் அதனை கங்காரு நாட்டின் கண்ணியம் என்று போற்றுவது பொருத்தமாக இருக்கிறதல்லவா!
முல்லைஅமுதன்
காயம்படாமல் பார்த்துக்கொள்
உன் விரல்களை..
தேவைப்படலாம்.
யாரையாவது விழிக்க..
உன் பிள்ளையை
அழைக்க..
கட்டளையிட.
அடிபணியா வாழ்விது
என…
புள்ளடியிடவென
உன் விரல்களை
வாடகைக்குக் கேட்கலாம்
மறுத்தால்
விரல்களையே
தறிக்கலாம்.
காலம்
ஒருநாள் கட்டளையிடலாம்
விசைகளை அழுத்த…
விரல்களை
காயம்படாமல்
பார்த்துக்கொள்.
க. பாலசுப்பிரமணியன்
அன்பே வழி
“எவ்வாறு தன் நாபியின் உள்ளிருந்து வருகின்ற மணத்தை அறியாது ஒரு மான் இங்கும் அங்கும் அந்த மணத்தைத் தேடி அலைகின்றதோ அது போல் நான் அலைகின்றேன்” என்று கபீர்தாசர் தன்னுடைய கவிதையிலே அங்கலாய்க்கின்றார். பல நேரங்களில் அன்பின் வடிவாக அந்த இறைவன் நம் உள்ளிருந்து அருள்பாலிக்கின்றான் என்று நாம் அறிந்தாலும், அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள இடைவெளி காரணமாக அந்த அன்பின் வடிவானவனை அறியாமல் தவிக்கின்றோம்.
உள்ளதொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே
என்று திருமூலரும் அந்த நிலையை நம்முன் வைக்கின்றார்.
இதை அறியாமை என்று சொல்வதா? அல்லது அகத்தில் படிந்த மாசினால் ஏற்பட்ட இருள் என்று சொல்வதா?
வாழ்க்கையின் மாய வலைகளில் சிக்கி இந்த அன்பின் வடிவை நாம் உணராமல் இருக்கும் நிலையில் என்னென்ன துன்பத்தைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது? வழி தடுமாறிச் செல்கின்ற ஒரு வழிப்போக்கனைப் போல் ஆகிவிடுகின்றோமே! இதிலிருந்து எப்படி மீள்வது? மாணிக்க வாசகருக்கும் ஏற்பட்ட நிலையன்றோ இது?
புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து
இங்கு ஒரு பொய்ந் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய்
விண்ணும் மண்ணும் எல்லாம்
கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்
கருணாகரனே
துலங்குகின்றேன் அடியேன் உடையாய்
என் தொழுகுலமே !
என்று அவர் வாடும் பொழுது அவர் உள்ளிருக்கும் வேதனையும் இறை பால் இருக்கும் மாசற்ற அன்பும் வெளிப்படுகின்றது.
இந்த உயந்த அன்பின் பிணைப்பினை அறியாத நெஞ்சம் எங்கெங்கெல்லாமோ அலையும் பொழுது அதை எப்படி கட்டுப்படடுத்துவது? அதற்கு எப்படி அறிவுரை வழங்குவது? இந்த அவல நிலையிலிருந்து மாற இந்த நெஞ்சம் என்ன செய்ய வேண்டும்?
பட்டினத்தார் தன் நெஞ்சுக்கு அளிக்கும் அறிவுரை மிகவும் உண்மையானது; சிறப்பானது .. இதை விடச் சிறந்த ஒரு அறிவுரை நெஞ்சுக்குத்தான் கிடைக்குமோ?
ஒழியாப் பிறவி டுத்தேங்கி தேங்கி யழுகின்றநெஞ்சே
அழியாப் பதவிக் கவுடதங் கேட்டி யநாதியனை
மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்திலுன்னி
விழியாற் புனல்சிந்தி விம்மி யழுநன்மை வேண்டுமென்றே.
இந்த அன்பின் வடிவத்தோடு இணைகின்ற முயற்சியில் எங்காவது தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்ற ஐயத்தால்தான் திருவாசகத்தில் மாணிக்க வாசகரோ
“இம்மையே உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன்”
என்று சிவபெருமானிடம் தன்னுடைய அளவற்ற அன்பை வெளிப்படுத்துகின்றார்.
இதே கருத்தை வெளிப்படுத்தும் திருமூலரோ எவ்வாறும் அன்பெனும் ஒளியை, சோதியை உள்ளத்தில் ஏற்றி அதிலே நாம் உருக வேண்டும். எவ்வாறு அந்த ஈடில்லா அன்பே இறைவனின் பாதங்களில் நம்மைச் சேர்க்கும் என்பதை எடுத்துரைக்கின்றார்.
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வருப்பினும்
அன்போ டுருகி அகங்குழைவார்க்கன்றி
என்போல் மணியினை யெய்தஒண் ணாதே .
(தொடரும்)
காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்
தூளியில் ஆடித் தூங்க வருகவே….!
முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….
எந்தவேலை செய்தாலும் தொந்தரவாய்த் தோணுதே
இந்தநிலை ஏனெனக்கு நந்தலாலா -அந்தநாளில்
ஆளாள் குறைதீர்க்க ஆதரித்தோய் இன்றுமட்டும்
வாளா(து)(சும்மா) இருப்பதேன் வா….
சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
சீராக ஆடிடும் சேய்….
அற்புதம் செய்ய அவதரித்த ஆய்க்குலத்தோன்
பொற்பதம் போற்றிப் பணிந்திட -கற்பூரம்
மூச்சில் மணத்திடும் மூடக் கழுதைக்கும்
ஆச்சரியம் கண்ணன் அருள்…
ஒன்பது ஓட்டை உடலே உடனேநீ
தின்பது தூக்கம் தவிர்த்தாயர் -நண்பனின்
ஊது குழலாய் உருமாறி என்நாளும்
கீதகோ விந்தமதைக் கூவு….கிரேசி மோகன்….!
செல்வன்
இவ்வார வல்லமையாளராக திரைப்பட நடிகர் அல்வா வாசு எனப்படும் வாசுதேவன் அவர்களை தேர்வு செய்கிறோம்.
1970களில் மதுரையைச் சேர்ந்த வாசுதேவன் எனும் இளைஞர் சும்மா சென்னையை சுற்றிபார்க்கலாம் என சொல்லி வந்து சேர்கிறார். அவரது உறவினர் திரைத்துறையில் இருந்ததால் வந்து சேர்ந்த சில மணிநேரத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு கூட்டி சென்றுவிட்டார். அதன்பின் எடிட்டிங் பயிற்சி எடுத்து பெரிய இயக்குனர் ஆகும் கனவில் இயக்குனர் மணிவண்ணனின் உதவி இயக்குனராக பணியில் சேர்கிறார் அல்வா வாசு.
இவருடன் மணிவண்ணனின் உதவி இயக்குனராக இருந்தவர்கள் விக்கிரமன், ஆர்.கே.செல்வமணி, சுந்தர் சி, சீமான், சசிகுமார் போன்றவர்கள் பெரிய இயக்குனர்களாக ஜொலிக்க, அவர்கள் பாணியில் தானும் படம் இயக்காது மணிவண்ணனுடன் இருப்பதே போதும் என நினைத்து அப்படியே உதவி இயக்குனராக இருந்துவிட்டார் வாசுதேவன்.
அமைதிப்படையில் சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் சிறுவேடத்தில் நடித்ததால் அல்வா வாசு என்ற பட்டம் வந்து ஒட்டிக்கொண்டது. அதன்பின் மணிவண்ணனின் மார்க்கட்டு சரிய, வடிவேலுவுடன் சேர்ந்து சிறு,சிறு காமடி வேடங்களில் நடித்தார் அல்வா வாசு. “எல்லாம் அவன் செயல்” திரைப்படத்தில் “ஜாமீன்” வாங்கப் போகும் வக்கீல் வேடமும் அதில் வரும் “கடல்லெயே இல்லையாம்” வசனமும் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால் அதை பேசிய நடிகர் அல்வா வாசு என்பது யாருக்கும் நினைவிருக்காது.
துணைநடிகர், அதிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வந்துபோகும் அள்ளக்கை வேடத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் வாழ்வில் வரும் அனைத்து இன்ப துன்பங்களும் வாசுவுக்கும் வந்து போயின. என்றாவது பெரிய நடிகர் ஆவோம், இயக்குனர் ஆவோம் எனும் கனவில் திரையுலகில் தனக்கான இடத்திற்காக போராடினார். சம்பளம் பெரிதாக வரவில்லை, பெயர் யாருக்கும் தெரியவில்லை என்றாலும் அவரது முகம் பலருக்கும் நினைவிருந்தது. சாலையில் அவரை பார்ப்பவர்கள் நிறுத்தி “உங்களை இந்த படத்தில் பார்த்திருக்கிறேன்” என சொல்வதே அவர்களை பொறுத்தவரை ஆஸ்கார் விருதுக்கு சமம்.
வடிவேலுவே முன்பு இப்படி கவுண்டமணியிடம் அடி வாங்கும் அள்ளக்கை வேடத்தில் நடித்தே பெரிய ஆளானார். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு எல்லாருக்கும் அமைவது இல்லை. அல்வா வாசுவுக்கும் அமையவில்லை. வடிவேலு 2011ல் அரசியலில் சிக்கி வாய்ப்பை இழந்தார். அவரை நம்பி இருந்த அல்வா வாசுவும் வாய்ப்புகளை இழந்தார்.
அதன்பின் அடுத்த தலைமுறை நகைச்சுவை நடிகர்களுடன் அவரால் இணைய முடியவில்லை. புதிய இயக்குனர்களும் 1979ல் இருந்து திரையுலகில் இருக்கும் இவரை கண்டுகொள்ளவில்லை. திரையுலகம் புதியவர்கள் தலைமையில் பயணித்தது. பழைய மனிதரான அல்வா வாசு வாய்ப்புகளை இழந்தார். அத்துடன் கல்லீரல் நோயும் அவரை தாக்கியது. பல சினிமா நடிகர்களை அழித்த கல்லீரல் வியாதி இவரையும் தாக்கியது.
கடைசிகாலத்தில் நடிகர் சங்கம், பொன்வண்ணன், விஷால், கார்த்தி முதலானோர் உதவிய நிலையிலும், பலனின்றி தன் கனவுகள் நிறைவேறாமல் உயிரிழந்தார் அல்வா வாசு.
அவரால் ஏன் பொருளாதார ரீதியில் வெற்றிபெற முடியவில்லை எனும் ஆராய்ச்சி நமக்கு அவசியம் இல்லை. ஆனால் ஒரு கலைஞனாக வடிவேலுவுடன் அவர் நடித்த வேடங்கள் காலாகாலத்துக்கும் அவரின் நடிப்பின்வெற்றிக்கான உதாரணமாக விளங்கும், எளிய கிராம மனிதனாக, சாதாரணனாக தான் நடிக்கும் பாத்திரத்தில் ஒன்றி நடித்த அவரின் நடிப்புத்திறனே இவர் யார் என யாரும் கேட்கவாய்ப்பின்றி செய்துவிட்டது. சாலைகளில், கிராம டீக்கடைகளில், சந்தைகளில் காணக்கூடிய எளிய மனிதராக படங்களில் தோன்றினார் வாசு. அந்த எளிமையே இவரை தனிமைப்படுத்தி பார்க்கமுடியாத நிலைக்கு ரசிகனை கொண்டுசென்றுவிட்டது.
இறந்தபின் இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி, அவர் நடித்த படங்களை ரசிகர்கள் சிலாகித்து எழுதி, வாழும் காலத்தில் அடையாத புகழை தான் இறந்தபின் அடைந்து மறைந்தார் அல்வா வாசு.
நிறைவேறாத கனவுகளுடன், அவை என்றாவது நிறைவேறும் எனும் ஆவலுடன் ஆண்டுக்கணக்கில் போராடிக்கொண்டிருக்கும் அனைத்து தொழிலாளிகளுக்கும் செலுத்தும் வணக்கமாக அல்வா வாசு அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து நம் எல்லோரையும் சிரிக்க வைத்த அக்கலைஞனுக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறோம்.
அடுத்த தலைமுறை திரைவிமர்சகர்கள் அல்வா வாசுவின் கதாபாத்திரங்களை ஆராய்ச்சி செய்ய இவ்விருது உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்.
இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
அழைக்கிறேன் செந்தமிழ் அருள் விழாவுக்கு, இணைப்புப் பார்க்க
திருப்பணி நிதி அனுப்புவோர்
If sending direct to the Bank please email details immediately. email: tamilnool@gmail.com
Sampath Bank PLC, Chavakachcheri, Sri Lanka, Account No. 116 961 000 901, Swift Code: BSAMLKLX
Name: Arulmiku Vallakkulam Veerakathy Pillaiyaar Koil
OR
HDFC Bank ITC Branch Chennai
Savings Account Number 00041000182519
IFSC code HDFC0000004
Name. K. Sachithananthan

ஒரு காலத்தில் காந்தசக்தி இருந்த நிலவு.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
++++++++++++++
https://www.space.com/37756-
+++++++++++++++++++++
பொங்கிவரும் பெருநிலவைப்
புலவர் புனைந்தார் !
மங்கிப் போன மதிமுகத்தில்
மனிதர் தடம் வைத்தார் !
முழு நிலவுக்கு
வெள்ளைத் தூள் பூசி
வேசம் போடுவது
பரிதி அன்னை !
அச்சில்லாமல் நகர்வது நிலவு !
அங்கிங் கெனாதபடி
எங்கும்
முகப் பருக்கள் ! பெருங்குழிகள் !
சுற்றியும் சுழலாத பம்பரம் !
ஒருமுகம் காட்டி
மறுமுகம் மறைக்கும் !
நிலவில்லை யென்றால் புவியில்
அலையேது, காற்றேது ?
கடல் நீருக்கு
ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
பூர்வ நிலவுக் காந்தம்
சீர்குலைந்து
மரித்த தேனோ ?
உருவானது எப்படிக்
கருநிலவு ?
++++++++++++++++++
நிலவின் மைய அடுக்கில் இடைத்தட்டு [Mantle] என்னும் திணிவுப் பாறை [Solid Rock] தீக்கனல் திரவக் கருவைக் கொந்தளிக்க வைக்கிறது. நிலவின் உட்கருவும் அதன் இடைத்தட்டும் சிறிது வேறுபட்ட அச்சுகள் மூலம் சுற்றி வந்தன. ஆதலால் அவற்றின் ஒப்பியல் வேக நகர்ச்சி உட்கருத் திரவத்தைக் கலக்கியது. இந்தக் கொந்தளிப்பு புவி-நிலவு இடைத் தூரத்தைப் பொருத்தது. ஏனெனில் புவி-நிலவு ஈர்ப்புகளின் கயிறிழுப்புப் போரில் [Tidal Gravitational Tug of War] நிலவின் உட்கருவும், இடைத் தட்டும் வெவ்வேறு விதத்தில் சுற்றுகின்றன. நிலவு புவியை விட்டுத் [ஆண்டுக்கு 1.5 அங்குலம்] தொடர்ந்து நகர்ந்து வருவதால், இந்தக் கொந்தளிப்புக் குறைந்து கொண்டே வந்து, பின்னர் முற்றிலும் நிலவு ஜனனியின் காந்தசக்தி நீங்கி விட்டது.
கிரிஸ்டீனா டையர் [Chrirstina Dwyer, University of Califonia]
1970 ஆண்டுகளில் நிலவில் தடம் வைத்த நாசா விண்வெளி விமானிகள் கொண்டுவந்த பாறை மாதிரிகள் சில காந்த சக்தி உற்றதாகவும், சில காந்த சக்தி அற்றதாகவும் இருந்தன. நிலவு பூர்வீகக் காலத்தில் காந்த சக்தி கொண்டிருந்தது என்பது, விஞ்ஞானிகளைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது ! இப்போது ஏன் காந்த சக்தியை நிலவு இழந்தது என்பது அடுத்த பெரு வியப்பாய் ஆனது !
ஜெனனியால் காந்த தளம் உண்டாக்கப் படுகிறது. திரவ இரும்பு போன்ற மின்கடத்தி உலோகம் ஒன்று, தனது திரவ சுழற்சி இயக்கத்தால் காந்த தளத்தை உண்டாக்கும். பூமியின் பூகாந்த தளத்தை எடுத்துக் கொண்டால், சுழற்சி இயக்கம், கோளின் வெளிக்கருவில் [Planet’s Outer Core] நிகழ்கிறது. நகர்ச்சியைத் தூண்டுவது கனல் சக்தி சுழல் ஓட்டம் [Convection Heat]. ஆனால் நிலவில் கனல்சக்தி ஓட்டம் நிகழப் போதிய வடிவம் இல்லை.
கருநிலவின் உட்கருக் கனல்சக்தி வற்றி வெப்பம் தணிந்து போய் வருகிறது. அதுபோல் அதன் காந்த சக்தியும் தேய்ந்து போய் மறைகிறது. நிறை குன்றிய நிலவின் ஈர்ப்பு விசை மெலிந்தது. நீர் வளமும் நிலவில் குறைவு. ஆகவே சூரிய வெப்பத்தைத் தணிக்கும் வாயுச் சூழ்வெளியோ, காந்த சக்தியோ நிலைபெற முடியவில்லை. உயிரின வளர்ச்சிக்குத் தேவையான மித வெப்பம் நிலவில் பூமியைப் போல் நிலைபெறாமல் போனது.
இதுவரை அப்பொல்லோ மாதிரிகள் மூலம் செய்த ஆராய்ச்சி களில் பூர்வத் தோற்ற நிலவின் காந்தசக்தி, 2.7 பில்லியன் – 4.2 பில்லியன் வருடங்களுக்கு முன்பு சுமார் ஒரு பில்லியன் ஆண்டு களாக நீடித்ததாகக் கணிக்கப் படுகிறது.
Moon Sample, brought by Apollo Astronauts.
“பிண்டங்கள் பிளந்து விழுகின்றன, நடுமையம் தாங்க முடியாமல்.”
வில்லியம் பட்லர் ஈட்ஸ், ஐரிஸ் கவிஞர் (1865-1939)
நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.
டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)
காலாக்ஸியிலும், பால்மய வீதியிலும் விண்மீன்கள் தூள்களாய்ச் சிந்திக் கிடக்கின்றன.
மில்டன், ஆங்கிலக் கவிஞன் “இழந்த சொர்க்கலோகம்” (1608-1674)
இருள்வெளியின் திமிங்கலப் பற்கள் அப்படியே அதை விழுங்கிவிடும்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடக் மேதை (1564-1616)

சூரிய மண்டலத்தில் நூதனப் புதிரான பூகோளம்
பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது ! அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது ! பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது ! ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது !
++++++++++++++++
பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.
சூரிய மண்டலத்தில் உள்வட்டக் கோள்களான புதன், வெள்ளி, பூமி (நிலவு), செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடப் பிண்டம் (Solid Matter) கொண்டவை. பூமியில் மட்டும் திடப் பிண்டமும் பெருவாரிக் கடல் நீரும் உள்ளன. ஆனால் வெளிவட்டக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ஏன் வாயுக் கோள்கள் ஆயின ? திடக்கோள்கள் பரிதியின் மூர்க்க ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நெருக்கமான நீள்வட்ட வீதியில் சுற்றுகின்றன. அதே சமயத்தில் வெளிவட்ட வாயுக் கோள்கள் உள்வட்டக் கோள்களுக்கு அப்பால் வெகு தொலைவில் சுற்றி வருகின்றன.

அப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிகள்
பரிதியின் உள்வட்டக் கோள்களில் புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக்கோள் எதுவும் இல்லை. செவ்வாய்க் கோளுக்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக் கோள்கள். பூமிக்கு ஒரு துணைக்கோள். வெளிவட்டத்தில் உள்ள வியாழனுக்கு 63 நிலவுகள், சனிக்கு 62 நிலவுகள், யுரேனசுக்கு 27 நிலவுகள், நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்பது வியப்பாக உள்ளன. பல ஆண்டுக் காலமாக வானியல் விஞ்ஞானிகள் பூமியும் சந்திரனும் தனித்தனியாகத் தோன்றிப் பிறகு ஈர்ப்பு மண்டலத்தில் சேர்ந்து கொண்டவை என்று கருதினார்கள். அதைக் “கூட்டுச் சேகரிப்பு” முறை (Co-Accretion) என்று வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுவர். கூட்டுச் சேகரிப்பு முறையில் உருவாகும் ஓர் அண்டம் அருகில் பரவிய பிண்டத் துணுக்குகளை ஈர்ப்பு விசையால் தன்வசம் இழுத்து உடல் பெருத்து ஈர்ப்பாற்றலும் மிகையாக்கிக் கொள்வது. இழுப்பு நியதி (Capture Theory) நிலவு உண்டான பிறகு, பூமி நோக்கி வந்து புவியீர்ப்பு மண்டலத்தில் இழுக்கப் பட்டுச் சுற்றி வருவதாகச் சொல்கிறது.
பிளவுக் கோட்பாடு (Fission Theory) சொல்கிறது: பரிதி மண்டலத்தில் தோன்றிய இளம்பருவக் காலத்தில் பூமி அரைத் திரவ நிலையில் (Semi-fluid State) இருந்து பிளவு ஏற்பட்டு சிறு கோளொன்று நிலவாகப் பிரிந்து பூமியைச் சுற்றியது. அடுத்தது “குளிர்த்திண்மை விதி” (Condensation Theory) எனப்படுவது. அந்த முறையில் பரிதி மண்டலக் கோள்கள் உண்டான “நிபுளாவிலிருந்து” (Nebula) தனித்தனியாக உருவாகிய இரண்டு கோள்களாக பூமியும், நிலவும் அனுமானிக்கப் படுகின்றன.
1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன. நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன. அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன ! அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது ! அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.

வானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள். ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது. தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது ! அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது. அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.
நிலவு தோன்றியதை முடிவு செய்ய மூன்று நிபந்தனைகள்
நிலவு எப்படி உண்டானது என்ற கேள்விக்குப் பதில் கூறும் எந்தக் கோட்பாடும் கீழ்க்காணும் மூன்று நிபந்தனை மெய்ப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் :
1. நிலவின் கீழான பிண்டத் திணிவு [(Moon’s Density 3.3 gram/c.c) (Earth’s Density 5.5 gram/c.c)] கூறுவது என்ன வென்றால், நிலவின் இரும்பு உட்கரு (Iron Core) பூமியை போல் கனமான தில்லை என்னும் கருத்து.
2. நிலவின் பாறைகளில் நீரைப் போல் ஆவியாகும் பொருட்கள் (Volatile Substances) இல்லை. அதாவது பூமியை விடப் பேரளவில் சூடாக்கப்பட்ட தளத்தைப் பெற்றுள்ளது நிலவு (Baking of Lunar Surface).
3. பூமியிலும் நிலவிலும் காணப்படும் ஆக்ஸிஜென் ஏகமூலத் தாதுக்கள் ஒரே ஒப்புமை வீதத்தில் இயற்கையாகப் படிந்துள்ளன (Relative Abundane of Oxygen Isotopes). அதாவது பரிதி மண்டலத்தில் ஒரே தூரப் பகுதியில் பூமியும், நிலவும் உண்டாகி உள்ளன.

நிலவு எப்படி தோன்றியது என்பதற்குக் கூறப்படும் கோட்பாடுகள்
பூமியின் இரட்டைக் கோள்போல் காணப்படும் நிலவு எப்படிப் பிறந்தது என்பதை விளக்க வானியல் விஞ்ஞானிகள் நான்குவிதக் கோட்பாடுகளை அனுமானம் செய்கிறார். முதல் மூன்று நியதிகளில் ஓரளவு மெய்யாடுகள் இருந்தாலும், நான்காவது “பூதத் தாக்கு நியதியே” (The Giant Impact Theory) பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
1. பிளவு நியதி (The Fission Theory)
இந்தக் கோட்பாட்டின்படி நிலவு ஒரு காலத்தில் பூமியின் ஒரு பகுதியாக ஒட்டியிருந்து பிறகு சூரிய மண்டலத்தின் துவக்க காலத்தில் எப்படியோ பிளந்து தனியாகப் பிரிந்தது என்று கருதப் படுகிறது. தற்போதுள்ள மாபெரும் பசிபிக் கடற்குழியே நிலவுக்குப் பூர்வீக இருப்பிடமாக இருந்திருக்க வேண்டு மென்று யூகிக்கப் படுகிறது ! அந்தப் பகுதியிலிருந்துதான் நிலவு பிரிந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு சித்தாந்தக் கருத்து. இதற்கு ஒரு காரணம். பூமியின் மேற்தளத் தட்டு (Earth’s Mantle) நிலவின் தளப்பகுதி இரசாயனப் பொருட்களை ஒத்துள்ளது. வேகமாகச் சுழலும் பூமியே, சுழல்வீச்சு விசையால் பிரிந்து போன சிறு கோளை வெளியே தள்ளிச் சுற்ற வைத்திருக்கும். அந்தக் கோட்பாடை மெய்யாக எடுத்துக் கொண்டால் பூமியிலும் நிலவிலும் ஏதாவது ஒத்திருக்கும் “பூர்வப் படிவச் சான்றுகள்” (Fossil Evidences) கிடைத்திருக்க வேண்டுமல்லவா ? ஆனால் அத்தகைய நிரூபணச் சான்றுகள் அப்பொல்லோ பயண விமானிகளுக்கு கிடைக்கவில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.
2. இழுப்பு நியதி (The Capture Theory)
இந்தக் கோட்பாடு மூலம் அறிவது: நிலவு சூரிய மண்டலத்தில் முதலில் வேறெங்கோ தோன்றியது என்றும், பின்னால் அதைப் பூமியின் ஈர்ப்பு விசை இழுத்துக் கொண்டது என்றும் அனுமானம் செய்யப் படுகிறது. நிலவில் காணப்படும் வெவ்வேறு விதமான இரசாயனப் பொருட்களுக்கு இவ்விதி உதவினாலும் பூகோள ஈர்ப்பில் கவரப்பட்டு, நிலவு சுற்றும் நீள் வட்டவீதிக்கு வந்தது என்பதை விளக்க முடியாவில்லை. காரணம் பூமியை நோக்கி இழுக்கப்படும் நிலவைக் கட்டுப்படுத்தி மெதுவாக்கும் ஓர் எதிர்ப்பு உந்தாற்றல் எதுவும் இல்லாமல் அப்படிச் செய்ய முடியாது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார். மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

3. குளிர்த்திண்மை நியதி (The Condensation Theory)
சூரிய மண்டலத்தை உருவாக்கிய மூல “நிபுளாவிலிருந்து” (Nebula) பூமியும், நிலவும் தனித்தனியாகத் தோன்றியவை என்றும் நிலவு பூமியைச் சுற்றும் கோண வட்டவீதியில் தள்ளப்பட்டது என்றும் இந்தக் கோட்பாடு அனுமானம் செய்கிறது ! அந்தக் கோட்பாடு மெய்யென்றால் அவை இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவு திணிவுள்ள “கன உலோக உட்கரு” (Same Dense Iron Core) அமைய வில்லை யென்னும் முரண்பாடு உண்டாகுகிறது. அத்துடன் அவை இரண்டும் ஒரே மாதிரி உட்பொருட்கள் (Composition of Materials) கொண்டிருக்க வில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.
தடம் வைத்த அப்பொல்லோ நிலவுப் பயணி
4. பூதத் தாக்கு நியதி அல்லது விலக்கு வளைய நியதி(The Giant Impact Theory or The Ejected Ring Theory)
பெரும்பான்மையான வானியல் விஞ்ஞானிகள் தற்போது ஏற்றுக் கொண்டை கோட்பாடு இது. இந்தக் கொள்கையின்படி செவ்வாய்க் கோள் அளவான குட்டிக் கோள் ஒன்று, சூரிய மண்டலம் உண்டான இளம்பருவத்தில் பூமியைத் தாக்கியதாகவும், மோதலின் விளைவில் இரண்டு கோள்களின் மேற்தளத் தட்டுப் பொருட்கள் பேரளவில் எறியப்பட்டன வென்று அனுமானம் செய்கிறது. சிதறிய துணுக்குகள் ஒன்துடன் ஒன்று சேர்ந்து. நிலவாக உருண்டு திரண்டு பூமியைச் சுற்றும் ஒரு கோளானது. மோதலில் எழுந்த கனல் வெப்பத்தால் நிலவின் பாறைகள் சூடாக்கப் பட்டன ! நிலாவின் பெரும்பகுதி ஏன் பாறைக் குன்றாக உள்ளது, அக்குன்றுகள் எப்படிக் கடுமையாகச் சூடாக்கப்பட்டன என்னும் கேள்களுக்கு விளக்கம் தருகிறது இந்தக் கோட்பாடு. சூரிய மண்டலம் உருவான பிறகு இத்தகைய மோதல்கள் பெருமளவில் நேர்ந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

உறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி
1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள். பூமி மீது மோதிய சிறிய கோள் முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது. அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது.
ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.
50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது ! அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.

[தொடரும்]
தகவல்கள்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By : Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
11 Wikipedia – Inner Structure of the Moon (January 31, 2008)
12. http://www.dailygalaxy.
13. https://en.wikipedia.org/
14. https://www.space.com/
15. https://sservi.nasa.gov/
******************
S. Jayabarathan [ jayabarathans@gmail.com ] [August 19, 2017] [R-1]
ஆலிலையில்
உண்டுமிழ்ந்த பின்னர் உருப்படியாய் உள்ளது
உண்டவனும் , உண்ட உலகு
—————————–
“நீலவான் மேனி, நட்ஷத் திரம்பசுக்கள்,
கோலத்தைக் வையக கோகுலம் : -ஆலிலையில்
உண்டுமிழந்த பின்னர் உருப்படியாய் உள்ளது
உண்டவனும், உண்ட உலகு (வையகம் அல்லது பசு )”….!
பசு கண்ணனை மேய்ந்து உண்டது ….
-மேகலா இராமமூர்த்தி
வாரிதியை நோக்கிநிற்கும் காரிகையைக் காண்கின்றோம் திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்தில். புகைப்படக்கருவி தந்த காவியமா, கை புனைந்த ஓவியமா என்று ஐயுறும் வண்ணம் திகழ்கின்றது இப்படம்!
மனங்கவரும் கடலரசி, தன் எண்ணங்களை அலைகளாக்கி மாந்தர்க்கு வரைகிறாளோ மடல்?
நீலமும் மஞ்சளும் இணைந்து கோலங் காட்டும் வானின் தோற்றமும் காணக் கவினே!
கண்கொள்ளாக் காட்சியிதனைத் தம் கவிதைகளில் பதமாய் வார்த்தெடுக்க வருகிறார்கள் கவிஞர் பெருமக்கள்!
***
”கடலழகு, கடல் தரும் அலையழகு; வானழகு, வான் வரும் நிலவழகு. மண்ணழகு, மண் வந்த அத்தனையும் பேரழகு; இவற்றையெல்லாம் தனித்துநின்று இரசிப்பதுமே ஓரழகு” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.
தனிமையின் மகிமை: கடல் அழகு !
கடல் வரும் அலை அழகு!
கடல் வாழ் மீன் அழகு!
கடல் தரும் முத்தழகு!
வான் அழகு!
வான் சேர் வண்ணங்கள் அழகு!
வான் தோன்றும் நிலவு அழகு!
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் தனி அழகு!
முகில் அழகு!
முகில் தரும் மழை அழகு!
மண் அழகு!
மண் தந்த அத்தனையும் பேரழகு!
இத்தனையும் ரசிக்கும் பெண் அழகு!
ரசிக்க வழி தந்த தனிமை தனி அழகு!
பிறந்தது தனியாக!
போவதும் தனியாக!
தனிமை ஞானம் தரும்!
தனிமை உனை உணர்த்தும்!
தனிமை, இனிமை எனும்
உண்மை, நீ உணர்ந்தால்!
மன அமைதி, உடனே கை கூடும்!
***
”விண்ணைப் படைத்தான்; விரிகதிர் மதியொடு விண்மீனும் படைத்தான்; மண்ணைப் படைத்தான்; மண்ணொடு தொடரும் மாமலைகள் படைத்தான்; இவற்றையெல்லாம் கண்டு இரசிக்கும் கண்ணைப் படைத்தான்” என்று இறைவனின் படைப்பாற்றலை வியக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.
இறைவனின் படைப்பாற்றல்..!
அற்புதக் காட்சியொன்றை கண்டுவிட்டால் அதன்
……….அழகைப் படம்பிடித்து மூளைக்கனுப்பும் நம்மனது.!
கற்பனைத் தேரிலேறி காட்சியோடது ஓடும்போது
……….கட்டுக்கடங்கா மகிழ்வும் புத்துணர்ச்சியு மதிலெழும்.!
சுற்றிலும் அலைபாயும் அம்மனத்தைக் கட்டுப்படுத்த
……….சுகமாயங்கே காட்சிதரும்கடலும் மேகமும் நிலவும்.!
பற்றுமிக்கப் புலவர்களதை பார்த்துவிட்டால் போதும்
……….பாட்டோடதைப் பண்ணுடன் பாமாலையாக்கி விடுவர்.!
விண்ணைப் படைத்தானிறைவன் தொடரும் அதனுடன்
……….விரிகதிர் மதியொடு விண்மீனும் மேகமும் படைத்தான்.!
மண்ணினைப் படைத்தான் மண்ணொடு தொடரும்
……….மலைகளும் மூவகை உயிர்களும் படைத்தான்..!
தண்ணீரைப் படைத்தான் தொடரும் அதனுடன்
……….பன்னெடும்நதி கொடுக்கும்மழை கொடுத்ததுடன் புவி..
மண்டலத்தில் காற்றைப் படைத்தான் அதனால்
……….பூங்காற்று தென்றலொடு உயிர்மூச்சைக் கொடுத்தான்.!
தணலென நெருப்பைப் படைத்தான் அதனால்
……….எதையும் இயங்கவைக்கும் எரிசக்தி படைத்தான்.!
எத்துணையோ நுண்ணுயிரும் மண்ணுயிரும் புவியுலகில்
……….இயற்கையாகத் தோன்றவொரு நெறிவகுத்தான் இறைவன்.!
வித்தாக அவையெல்லாம்….விதையொன்றைப் படைத்தான்
……….வியந்துநோக்க எவ்வுயிர்க்கும் கண்களைப் படைத்தான்.!
அத்தனையும் கண்டுகளித்து அனைத்தையும் பாதுகாக்க
……….பஞ்சபூத இயற்கையினைப் படைத்தனைத்தையும் காத்தான்.!
இத்தனையும் விண்மண் நீர்நெருப்பு காற்றென விரியும்
……….இறைவனின் படைப்பாற்றலை யதிசயித்துப் பாடுகிறேன்.!
***
”கருநிலவுக்கு ஒளியூட்டூம் கதிரோனின்றி இருண்டுவிட்டது மருள்மாலை. ஈதொப்ப, மனைக்கு விளக்காம் மனைவியில்லையேல் மனை பாழ்; ஒளிரும் கதிரோனொத்த கணவனில்லையேல் வாழ்வு பாழ்” என்பது திரு. சி. ஜெயபாரதனின் கருத்து.
அத்தமனம்!
கரு நிலவுதான் நாம்
காண்பது!
ஒருமுகம் காட்டி நிலவு
மறுமுகத்தை மறைக்குது!
கரு நிலவுக்கு ஒளியூட்டும்
கதிரோ னின்றி
இருளடைந் துள்ளது
இனிய மாலை பொழுது!
கணவன் அத்தமித்த கருவானம்
ஒளி மங்கி, இருள் மண்டி
மனம் பொங்கி
அழுகிறது!
விடிவு காலம் வருமா?
மனைக்கு விளக்கு வனிதை!
மனைவி இல்லாத
இல்லம் பாலை வனம்!
ஆயினும்
கதிரோன் இல்லாத
தரணி இடுகாடு!
***
படத்துக்குப் பொருத்தமாய்க் கருத்துள்ள கவிதைகளை அளித்துள்ள கவிஞர்களுக்கு என் பாராட்டு!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது இனி வருகின்றது…
விடியுமா…?
அலையே அலையே வருவாயே
அங்கே அவனைக் காண்பாயா?
சிலையாய் நானும் காத்திருக்கும்
சேதி நீயும் சொல்வாயே!
நிலையிலாச் செல்வம் போதுமென்பாய்
நிம்மதி தரவே வரச்சொல்வாய்!
கலைநிறை வானம் வெளுத்ததுவே
காரிகை யெனக்கு விடியாதோ…?!
தலைவனைப் பிரிந்து தவிக்கும் தலைவியொருத்தி தன் தாபத்தைக் கடலலைகளிடம் வெளிப்படுத்துகிறாள் இக்கவிதையில். நிலையில்லாச் செல்வத்தைத் தேடுவதில் முனைந்தால் இல்லறமாம் நல்லறமும் ஆடவர்க்கு மறந்துபோவதை நம் சங்கப்பாடல்கள் நிரம்பவே பேசுகின்றன. பொருளினும் தலைவனின் அருளே தலைவி என்றும் வேண்டுவது. அக்கருத்து இக்கவிதையில் வெளிப்படக் காண்கின்றேன்.
நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மையை மென்மையாய்ப் பகடிசெய்யும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.
ரா.பார்த்தசாரதி
மழை வேண்டாத மக்கள் உண்டோ !
மழைநீர் சேமிக்க வழியும் உண்டோ !
மழை வேண்டி யாகமும்,பூஜையும் நடக்கின்றதே!
ஒரு சிலர் செய்த பாவத்தால் மழை வர தயங்குதே !
மழைநீர் இன்று மக்கள் உயிரை காக்கும் உயிர் நீர்
மழைநீர் இல்லையெனில் பசும்புல்லையும் காணமுடியாது
மழைநீர் வெள்ளமாய் உருவெடுத்து பலவற்றை அழிக்கிறது
மழைநீர் இன்மையால் பல இடங்கள் வறட்சியாயிருக்கிறது
மழைநீரை தேக்கி வைக்க திட்டங்களை அரசு செய்யவேண்டும்
மழைநீர் வீணாவதை தடுக்க முயற்சி செய்யவேண்டும்
நதிநீர் வீணாகி கடலில் கலப்பதை தடுக்கவேண்டும்
ஆறுகளையும் குளங்களையும் தூர் வார வேண்டும்
மழைநீர் திட்டம் வீடு வரைக்கும் செயல் படுத்தியதே
வெள்ளம் வரும்போது மழை நீரை சேமிக்க மறந்ததே
மக்களுக்கு உதவியும், நிவாரணங்களும் அளிக்கப்பட்டதே
மழைநீர் நிலத்தடியில் சேர்க்காமல் கடலில் கலந்ததே!
மழைநீர் மக்களுக்கும், விவசாயத்திற்கும் இன்றியமையாததே
மழைநீரை அணையிலும், நிலத்தடியிலும் சேமிப்பது நல்லதே
நீரின்றி அமையாது உலகம் மக்கள் வாழ்க்கையும் சரிவர நடக்காதே
பருவ மழை பொய்த்ததாலே மழைநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதே !
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம
ரா.பார்த்தசாரதி
நிதி நீச்சலடிப்பதால், நீதி அதனை எதிர்த்து நிற்க தவிக்குது
அதிகாரம் எதையும் செய்ய துணிவதால்,அமைதி அல்லல்படுகிறது
பழக்க வழக்கங்கள் பாழானதால், தனிமனிதன் ஒழுக்கம் நிலைகுலைந்தது
காலில் விழுந்தாலே காரியம் முடிகிறது, இதில் மனிதநேயம் எங்கே?
நீதிநெறிகள் பித்தலாட்டமாய் இருப்பதால் தனிமனிதஒழுக்கம் மறைந்தது
காந்தி தேசம் என்று சொல்லி,பிராந்தி கடையால் வாந்தி தேசமாயிற்று
தனிமனிதன் ஒழுக்கம் ஏற்படின், காவலும்,நீதித்துறையும் குறையும்
தனிமனிதர்கள் சேர்ந்தாலே ஓர் கூட்டுவுறவு அமைப்பு உண்டாகும் !
தனிமனிதன் ஓட்டுரிமையை அட்சய பாத்திரமாக நினைத்துவிட்டான்
அதனையே பணத்திற்காக பிச்சையிட்டு, பிச்சைக்காரனாகி விட்டான்
பணத்தை கொண்டு மக்களை அடிபணியவைத்து அராஜகம் செய்கிறான்
எதிர்த்து கேட்போரை கட்டப்பஞ்சாயத்தை காட்டி பயமுறுத்துகின்றான் !
தனிமனித ஒழுக்கம் பணத்தால் சீரழிந்து மக்களை படுகுழியில் தள்ளும்
ஒன்று கூடி காந்திய வழியில் போராடினால் நமக்கு நன்மை கிடைக்கும்
ஒன்று கூடி எதிர்த்தால், நியாயமும், தீர்வும் விரைவில் கிடைக்கும்
நமது ஆன்மிகமும், பண்பாடும்,தனிமனிதன் ஒழுக்கதை நிலைநாட்டும் !
க. பாலசுப்பிரமணியன்
மொழிசார் நுண்ணறிவு (Linguistic Intelligence)
நுண்ணறிவுகளின் தன்மைகளையும் இயல்புகளையும் பல ஆண்டுகள் ஆராய்ச்சிசெய்து அதன் விளக்கங்களை அளித்துள்ள அறிவியல் மேதை ஹோவர்ட் கார்ட்னர் மனிதர்களிடம் பரவலாக உள்ள நுண்ணறிவு “மொழிசார் நுண்ணறிவு” (Linguistic Intelligence) என்று கண்டுபிடித்துள்ளார். இதன் ஆங்கில சொல்லாடலுக்கு உகந்த தமிழாக்கம் “மொழியியல் நுண்ணறிவு” என்று எடுத்துக்கொள்ளப்பட்டால் அது சில தவறான கருத்துக்களுக்கு இடம் கொடுக்க வகையுண்டு. ஏனெனில், இந்த வல்லமைக்குத் தேவையானது மொழியறிவும் மொழிசார்ந்த அறிவின் மேலாண்மையே தவிர, ஒருவருக்கு “மொழியியலில்” திறன் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. எனவே இதை நாம் “மொழி சார்” நுண்ணறிவாகவே கருதுவோம்.
இந்த நுண்ணறிவு ஒரு சாதாரண பாமரனுக்குக் கூட இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. வார்த்தைகளின் கையாடல், அதனைத் திறம்பட உபயோகித்தல், வார்த்தைகளின் மேலாண்மை, வார்த்தைகளின் பல்வேறு பொருள்களுக்குத் தகுந்தவாறும், இடம் பொருள் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறும் அவைகளை உபயோகித்தல், உருவாக்குதல் போன்ற பல திறன்கள் வெளிப்படுகின்றன.
இந்த நுண்ணறிவைத் திறமையாக உபயோகிப்பவர்களை “Word Smart” மனிதர்கள் என்று அழைக்கின்றனர். பொதுவாக இந்தத் திறனில் வல்லமை பெற்றவர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், அரசியல்வாதிகள், மனநல மருத்துவர்கள் போன்ற பல துறையைச் சார்ந்தவர்களாக இருக்க அதிகம் வாய்ப்பு உண்டு.
கவிஞர்கள் வார்த்தைகளைக் கையாளும் பொழுதும் அதன் கருத்துக்களைக் கையாளும் பொழுதும் தங்களுடைய மொழிசார்ந்த நுண்ணறிவின் திறனால் அவைகளுக்கு வலு சேர்ப்பதுமட்டுமின்றி அதற்கு ஒரு புதிய உயிரையும் அளிக்கின்றனர். உதாரணமாக, அனுமன் வாயிலாகக் கம்பன் “கண்டேன் சீதையை” என்று சொல்லுப்பொழுது அந்த சொல்லாடலில் இருக்கும் மேன்மையை நம்மால் காண முடிகின்றது.
வள்ளுவர் திருக்குறளில் எழுதிய குறள் “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” என்று சொன்னது வார்த்தை மற்றும் மொழியின் வளமையை அவர் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு முன்னுதாரணமாக அமைகின்றது.
கவிஞர் கண்ணதாசனின் எத்தனையோ பாடல்களில் சொல்லாட்சியின் திறன் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இதே போல் ஆயிரக்கணக்கான கவிதைகளில் மொழிசார்ந்த நுண்ணறிவுக்கான எடுத்துக்காட்டுகள் நமக்கு கிடைக்கின்றன.
இது தமிழ் மொழி மட்டுமின்றி பிற மொழிகளிலும் பல வடிவங்களில் நமக்குத் தென்படுகின்றது. இந்தக் கவிஞர்களில் பலரும் இதற்காகக் கல்லூரிகளிலோ அல்லது பயிற்சி நிலையங்களிலோ பயின்றவரல்லர். எனவே மொழிசார் நுண்ணறிவுக்கும் ஒரு தனி மனிதனின் கற்றலுக்கும் நேரிடையான நெருக்கமான தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் மொழி கற்றலும், மொழி வல்லமையும், மொழித்திறன்களும் ஒருவரின் மொழிசார் நுண்ணறிவை மேன்மைப்படுத்தவும் வளப்படுத்தவும் பெரிதும் உதவி செய்கின்றன.
இவர்களைப் போல மேடைப்பேச்சாளர்களுக்கு இந்தத் திறன் அதிகமாகத் தேவை படுகின்றது. சொற்களைத் தேர்ந்தெடுத்தல், அவைகளின் பயன்பாடு, அவைகளின் பொருளாதிக்கம், கேட்பவர்களின் மீது அந்தச் சொற்களின் தாக்கம், சொற்களின் பயன்பாட்டின் பொழுது இருக்கின்ற உணர்வு நிலைகள் ஆகியவை அந்த நுண்ணறிவின் பரிமாணத்தில் சில பகுதிகளாகத் தென்படுகின்றன. அரசியல் மேடைப்பேச்சாளர்கள் பலரும் இந்த நுண்ணறிவுத் திறனில் தேர்வுபெற்று சொற்களால் மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்வதிலும் , தம் மீதும் தங்கள் கொள்கை மற்றும் கட்சிகளின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்தத் திறனை வெகுவாக உபயோகிக்கின்றனர். அதே போன்று பல பயிற்சியாளர்கள் திறன்களை வளர்ப்பதற்கும் சில கோட்பாடுகளின் மீது “நம்பிக்கையை” உருவாக்கவும், மேன்மைப்படுத்தவும் இந்தத் திறனை பயன்படுத்துகின்றனர்.
வழக்குரைஞர்கள் தங்கள் வழக்குகளுக்கு ஏதுவாக சட்டக் கோட்பாடுகளை வாதங்களால் இணைக்கவும், விளக்கவும், மேற்கோள்கள் காட்டவும் இந்தத் திறனை உபயோகிக்கின்றனர். வியாபாரிகளும் விற்பனையாளர்களும் விளம்பரங்கள் செய்பவர்களும் மொழியின் நுண்ணறிவை தங்கள் தேவைக்கும் காலத்திற்கும் தகுந்தவாறு நடைமுறைப் படுத்துகின்றனர்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த நுண்ணறிவை வளர்ப்பதற்கான சூழ்நிலைகளை ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம். பொதுவாக மூளை நரம்பியல் ஆராய்ச்சி மற்றும் கற்றல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வல்லுனர்களின் கருத்து – கவிதை மற்றும் இசை மூலமாக இந்தத் திறனை வளர்ப்பது நல்ல பலன்களை அளிக்கும் என்பதே ஆகும். இயல், நாடகம், இலக்கணம் சார்ந்த பயிற்சிகள் அதிகமாக இடது மூளைத் திறன்களைச் சார்ந்தவைகளாக இருப்பதால் அவைகளைக் காட்டிலும் கவிதை, இசை சார்ந்த கற்றலும் பயிற்சியும் வலது மூளைத் திறன்களையும் அதனைச் சார்ந்த கற்பனை வளத்தை ஆக்கப்பூர்வமாக இயக்கக்கூடிய, படைப்பாற்றல்களை வளர்க்கும் திறன்களையும் கொடுப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
(தொடரும்)