க. பாலசுப்பிரமணியன்

மொழிசார் நுண்ணறிவு (Linguistic Intelligence)

education-1-1-1-1

நுண்ணறிவுகளின் தன்மைகளையும் இயல்புகளையும் பல ஆண்டுகள் ஆராய்ச்சிசெய்து அதன் விளக்கங்களை அளித்துள்ள அறிவியல் மேதை ஹோவர்ட் கார்ட்னர் மனிதர்களிடம் பரவலாக உள்ள நுண்ணறிவு “மொழிசார் நுண்ணறிவு” (Linguistic Intelligence) என்று கண்டுபிடித்துள்ளார். இதன் ஆங்கில சொல்லாடலுக்கு உகந்த தமிழாக்கம் “மொழியியல் நுண்ணறிவு” என்று எடுத்துக்கொள்ளப்பட்டால் அது சில தவறான கருத்துக்களுக்கு இடம் கொடுக்க வகையுண்டு. ஏனெனில், இந்த வல்லமைக்குத் தேவையானது மொழியறிவும் மொழிசார்ந்த அறிவின் மேலாண்மையே தவிர, ஒருவருக்கு “மொழியியலில்” திறன் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. எனவே இதை நாம் “மொழி சார்” நுண்ணறிவாகவே கருதுவோம்.

இந்த நுண்ணறிவு ஒரு சாதாரண பாமரனுக்குக் கூட இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. வார்த்தைகளின் கையாடல், அதனைத் திறம்பட உபயோகித்தல், வார்த்தைகளின் மேலாண்மை, வார்த்தைகளின்  பல்வேறு பொருள்களுக்குத் தகுந்தவாறும், இடம் பொருள் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறும் அவைகளை உபயோகித்தல், உருவாக்குதல் போன்ற பல திறன்கள் வெளிப்படுகின்றன.

இந்த நுண்ணறிவைத் திறமையாக உபயோகிப்பவர்களை “Word Smart” மனிதர்கள் என்று அழைக்கின்றனர். பொதுவாக இந்தத் திறனில் வல்லமை பெற்றவர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், அரசியல்வாதிகள், மனநல மருத்துவர்கள் போன்ற பல துறையைச் சார்ந்தவர்களாக இருக்க அதிகம் வாய்ப்பு உண்டு.

கவிஞர்கள் வார்த்தைகளைக் கையாளும் பொழுதும் அதன் கருத்துக்களைக் கையாளும் பொழுதும் தங்களுடைய மொழிசார்ந்த நுண்ணறிவின் திறனால் அவைகளுக்கு வலு சேர்ப்பதுமட்டுமின்றி அதற்கு ஒரு புதிய உயிரையும் அளிக்கின்றனர். உதாரணமாக, அனுமன் வாயிலாகக் கம்பன் “கண்டேன் சீதையை” என்று சொல்லுப்பொழுது அந்த சொல்லாடலில் இருக்கும் மேன்மையை நம்மால் காண முடிகின்றது.

வள்ளுவர்  திருக்குறளில் எழுதிய குறள் “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” என்று சொன்னது வார்த்தை மற்றும் மொழியின் வளமையை அவர் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு முன்னுதாரணமாக அமைகின்றது.

கவிஞர் கண்ணதாசனின் எத்தனையோ பாடல்களில் சொல்லாட்சியின் திறன் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இதே போல் ஆயிரக்கணக்கான கவிதைகளில் மொழிசார்ந்த நுண்ணறிவுக்கான எடுத்துக்காட்டுகள் நமக்கு கிடைக்கின்றன.

இது தமிழ் மொழி மட்டுமின்றி பிற மொழிகளிலும் பல வடிவங்களில் நமக்குத் தென்படுகின்றது. இந்தக் கவிஞர்களில் பலரும் இதற்காகக் கல்லூரிகளிலோ அல்லது பயிற்சி நிலையங்களிலோ பயின்றவரல்லர். எனவே மொழிசார் நுண்ணறிவுக்கும்  ஒரு தனி மனிதனின் கற்றலுக்கும் நேரிடையான நெருக்கமான தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் மொழி கற்றலும், மொழி வல்லமையும், மொழித்திறன்களும் ஒருவரின் மொழிசார் நுண்ணறிவை மேன்மைப்படுத்தவும் வளப்படுத்தவும் பெரிதும் உதவி செய்கின்றன.

இவர்களைப் போல மேடைப்பேச்சாளர்களுக்கு இந்தத்  திறன்  அதிகமாகத் தேவை படுகின்றது. சொற்களைத் தேர்ந்தெடுத்தல், அவைகளின் பயன்பாடு, அவைகளின் பொருளாதிக்கம், கேட்பவர்களின் மீது  அந்தச் சொற்களின் தாக்கம், சொற்களின் பயன்பாட்டின் பொழுது இருக்கின்ற உணர்வு நிலைகள் ஆகியவை அந்த நுண்ணறிவின் பரிமாணத்தில் சில பகுதிகளாகத் தென்படுகின்றன. அரசியல் மேடைப்பேச்சாளர்கள் பலரும் இந்த நுண்ணறிவுத் திறனில் தேர்வுபெற்று சொற்களால் மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்வதிலும் , தம் மீதும் தங்கள் கொள்கை மற்றும் கட்சிகளின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்தத் திறனை வெகுவாக உபயோகிக்கின்றனர். அதே போன்று பல பயிற்சியாளர்கள் திறன்களை வளர்ப்பதற்கும் சில கோட்பாடுகளின் மீது “நம்பிக்கையை” உருவாக்கவும், மேன்மைப்படுத்தவும் இந்தத் திறனை பயன்படுத்துகின்றனர்.

வழக்குரைஞர்கள் தங்கள் வழக்குகளுக்கு ஏதுவாக சட்டக் கோட்பாடுகளை வாதங்களால் இணைக்கவும், விளக்கவும், மேற்கோள்கள் காட்டவும் இந்தத் திறனை உபயோகிக்கின்றனர். வியாபாரிகளும்  விற்பனையாளர்களும் விளம்பரங்கள் செய்பவர்களும் மொழியின் நுண்ணறிவை தங்கள் தேவைக்கும் காலத்திற்கும் தகுந்தவாறு நடைமுறைப் படுத்துகின்றனர்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த நுண்ணறிவை வளர்ப்பதற்கான சூழ்நிலைகளை ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம். பொதுவாக மூளை நரம்பியல் ஆராய்ச்சி மற்றும் கற்றல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வல்லுனர்களின் கருத்து – கவிதை மற்றும் இசை மூலமாக இந்தத் திறனை வளர்ப்பது நல்ல பலன்களை அளிக்கும் என்பதே ஆகும்.  இயல், நாடகம், இலக்கணம் சார்ந்த பயிற்சிகள் அதிகமாக இடது மூளைத்   திறன்களைச் சார்ந்தவைகளாக இருப்பதால் அவைகளைக் காட்டிலும் கவிதை, இசை சார்ந்த கற்றலும் பயிற்சியும் வலது மூளைத் திறன்களையும் அதனைச் சார்ந்த கற்பனை வளத்தை ஆக்கப்பூர்வமாக இயக்கக்கூடிய, படைப்பாற்றல்களை வளர்க்கும் திறன்களையும் கொடுப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *