க. பாலசுப்பிரமணியன்

அன்பே வழி 

திருமூலர்-1

“எவ்வாறு தன் நாபியின் உள்ளிருந்து வருகின்ற மணத்தை அறியாது ஒரு மான் இங்கும் அங்கும் அந்த மணத்தைத் தேடி அலைகின்றதோ அது போல் நான் அலைகின்றேன்” என்று கபீர்தாசர் தன்னுடைய கவிதையிலே அங்கலாய்க்கின்றார். பல நேரங்களில் அன்பின் வடிவாக அந்த இறைவன் நம் உள்ளிருந்து அருள்பாலிக்கின்றான் என்று நாம் அறிந்தாலும், அகத்திற்கும்  புறத்திற்கும் உள்ள இடைவெளி காரணமாக அந்த அன்பின் வடிவானவனை அறியாமல் தவிக்கின்றோம்.

உள்ளதொருவனை உள்ளுறு சோதியை

உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை

உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்

உள்ளம் அவனை உருவறி யாதே

என்று திருமூலரும் அந்த நிலையை நம்முன் வைக்கின்றார்.

இதை அறியாமை என்று சொல்வதா? அல்லது அகத்தில் படிந்த மாசினால் ஏற்பட்ட இருள் என்று சொல்வதா?

வாழ்க்கையின் மாய வலைகளில் சிக்கி இந்த அன்பின் வடிவை நாம் உணராமல் இருக்கும் நிலையில் என்னென்ன துன்பத்தைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது? வழி தடுமாறிச் செல்கின்ற ஒரு வழிப்போக்கனைப் போல் ஆகிவிடுகின்றோமே! இதிலிருந்து எப்படி மீள்வது? மாணிக்க வாசகருக்கும் ஏற்பட்ட  நிலையன்றோ இது?

புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து

இங்கு ஒரு பொய்ந் நெறிக்கே

விலங்குகின்றேனை விடுதி கண்டாய்

விண்ணும் மண்ணும் எல்லாம்

கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்

கருணாகரனே

துலங்குகின்றேன் அடியேன் உடையாய்

என் தொழுகுலமே !

என்று அவர் வாடும் பொழுது அவர் உள்ளிருக்கும் வேதனையும் இறை பால் இருக்கும் மாசற்ற அன்பும் வெளிப்படுகின்றது.

இந்த  உயந்த அன்பின் பிணைப்பினை அறியாத நெஞ்சம் எங்கெங்கெல்லாமோ அலையும் பொழுது அதை எப்படி கட்டுப்படடுத்துவது? அதற்கு எப்படி அறிவுரை வழங்குவது? இந்த அவல நிலையிலிருந்து மாற இந்த நெஞ்சம் என்ன செய்ய வேண்டும்?

பட்டினத்தார் தன் நெஞ்சுக்கு அளிக்கும் அறிவுரை மிகவும் உண்மையானது; சிறப்பானது .. இதை விடச் சிறந்த ஒரு அறிவுரை நெஞ்சுக்குத்தான் கிடைக்குமோ?

ஒழியாப் பிறவி டுத்தேங்கி தேங்கி யழுகின்றநெஞ்சே

அழியாப் பதவிக் கவுடதங் கேட்டி  யநாதியனை

மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்திலுன்னி

விழியாற் புனல்சிந்தி விம்மி யழுநன்மை வேண்டுமென்றே.

இந்த அன்பின் வடிவத்தோடு இணைகின்ற முயற்சியில் எங்காவது தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்ற ஐயத்தால்தான் திருவாசகத்தில் மாணிக்க வாசகரோ

இம்மையே உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன்”

என்று சிவபெருமானிடம் தன்னுடைய அளவற்ற அன்பை வெளிப்படுத்துகின்றார்.

இதே கருத்தை வெளிப்படுத்தும் திருமூலரோ எவ்வாறும் அன்பெனும் ஒளியை, சோதியை உள்ளத்தில் ஏற்றி அதிலே நாம் உருக வேண்டும். எவ்வாறு அந்த ஈடில்லா அன்பே இறைவனின் பாதங்களில் நம்மைச் சேர்க்கும் என்பதை எடுத்துரைக்கின்றார்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போற் கனலிற் பொரிய வருப்பினும்

அன்போ டுருகி அகங்குழைவார்க்கன்றி

என்போல் மணியினை யெய்தஒண் ணாதே .

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *