கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்
தூளியில் ஆடித் தூங்க வருகவே….!
முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….
எந்தவேலை செய்தாலும் தொந்தரவாய்த் தோணுதே
இந்தநிலை ஏனெனக்கு நந்தலாலா -அந்தநாளில்
ஆளாள் குறைதீர்க்க ஆதரித்தோய் இன்றுமட்டும்
வாளா(து)(சும்மா) இருப்பதேன் வா….
சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
சீராக ஆடிடும் சேய்….
அற்புதம் செய்ய அவதரித்த ஆய்க்குலத்தோன்
பொற்பதம் போற்றிப் பணிந்திட -கற்பூரம்
மூச்சில் மணத்திடும் மூடக் கழுதைக்கும்
ஆச்சரியம் கண்ணன் அருள்…
ஒன்பது ஓட்டை உடலே உடனேநீ
தின்பது தூக்கம் தவிர்த்தாயர் -நண்பனின்
ஊது குழலாய் உருமாறி என்நாளும்
கீதகோ விந்தமதைக் கூவு….கிரேசி மோகன்….!