செல்வன்

இவ்வார வல்லமையாளராக திரைப்பட நடிகர் அல்வா வாசு எனப்படும் வாசுதேவன் அவர்களை தேர்வு செய்கிறோம்.

1970களில் மதுரையைச் சேர்ந்த வாசுதேவன் எனும் இளைஞர் சும்மா சென்னையை சுற்றிபார்க்கலாம் என சொல்லி வந்து சேர்கிறார். அவரது உறவினர் திரைத்துறையில் இருந்ததால் வந்து சேர்ந்த சில மணிநேரத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு கூட்டி சென்றுவிட்டார். அதன்பின் எடிட்டிங் பயிற்சி எடுத்து பெரிய இயக்குனர் ஆகும் கனவில் இயக்குனர் மணிவண்ணனின் உதவி இயக்குனராக பணியில் சேர்கிறார் அல்வா வாசு.

இவருடன் மணிவண்ணனின் உதவி இயக்குனராக இருந்தவர்கள் விக்கிரமன், ஆர்.கே.செல்வமணி, சுந்தர் சி, சீமான், சசிகுமார் போன்றவர்கள் பெரிய இயக்குனர்களாக ஜொலிக்க, அவர்கள் பாணியில் தானும் படம் இயக்காது மணிவண்ணனுடன் இருப்பதே போதும் என நினைத்து அப்படியே உதவி இயக்குனராக இருந்துவிட்டார் வாசுதேவன்.

அமைதிப்படையில் சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் சிறுவேடத்தில் நடித்ததால் அல்வா வாசு என்ற பட்டம் வந்து ஒட்டிக்கொண்டது. அதன்பின் மணிவண்ணனின் மார்க்கட்டு சரிய, வடிவேலுவுடன் சேர்ந்து சிறு,சிறு காமடி வேடங்களில் நடித்தார் அல்வா வாசு. “எல்லாம் அவன் செயல்” திரைப்படத்தில் “ஜாமீன்” வாங்கப் போகும் வக்கீல் வேடமும் அதில் வரும் “கடல்லெயே இல்லையாம்” வசனமும் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால் அதை பேசிய நடிகர் அல்வா வாசு என்பது யாருக்கும் நினைவிருக்காது.

1

துணைநடிகர், அதிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வந்துபோகும் அள்ளக்கை வேடத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் வாழ்வில் வரும் அனைத்து இன்ப துன்பங்களும் வாசுவுக்கும் வந்து போயின. என்றாவது பெரிய நடிகர் ஆவோம், இயக்குனர் ஆவோம் எனும் கனவில் திரையுலகில் தனக்கான இடத்திற்காக போராடினார். சம்பளம் பெரிதாக வரவில்லை, பெயர் யாருக்கும் தெரியவில்லை என்றாலும் அவரது முகம் பலருக்கும் நினைவிருந்தது. சாலையில் அவரை பார்ப்பவர்கள் நிறுத்தி “உங்களை இந்த படத்தில் பார்த்திருக்கிறேன்” என சொல்வதே அவர்களை பொறுத்தவரை ஆஸ்கார் விருதுக்கு சமம்.

வடிவேலுவே முன்பு இப்படி கவுண்டமணியிடம் அடி வாங்கும் அள்ளக்கை வேடத்தில் நடித்தே பெரிய ஆளானார். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு எல்லாருக்கும் அமைவது இல்லை. அல்வா வாசுவுக்கும் அமையவில்லை. வடிவேலு 2011ல் அரசியலில் சிக்கி வாய்ப்பை இழந்தார். அவரை நம்பி இருந்த அல்வா வாசுவும் வாய்ப்புகளை இழந்தார்.

அதன்பின் அடுத்த தலைமுறை நகைச்சுவை நடிகர்களுடன் அவரால் இணைய முடியவில்லை. புதிய இயக்குனர்களும் 1979ல் இருந்து திரையுலகில் இருக்கும் இவரை கண்டுகொள்ளவில்லை. திரையுலகம் புதியவர்கள் தலைமையில் பயணித்தது. பழைய மனிதரான அல்வா வாசு வாய்ப்புகளை இழந்தார். அத்துடன் கல்லீரல் நோயும் அவரை தாக்கியது. பல சினிமா நடிகர்களை அழித்த கல்லீரல் வியாதி இவரையும் தாக்கியது.

கடைசிகாலத்தில் நடிகர் சங்கம், பொன்வண்ணன், விஷால், கார்த்தி முதலானோர் உதவிய நிலையிலும், பலனின்றி தன் கனவுகள் நிறைவேறாமல் உயிரிழந்தார் அல்வா வாசு.

அவரால் ஏன் பொருளாதார ரீதியில் வெற்றிபெற முடியவில்லை எனும் ஆராய்ச்சி நமக்கு அவசியம் இல்லை. ஆனால் ஒரு கலைஞனாக வடிவேலுவுடன் அவர் நடித்த வேடங்கள் காலாகாலத்துக்கும் அவரின் நடிப்பின்வெற்றிக்கான உதாரணமாக விளங்கும், எளிய கிராம மனிதனாக, சாதாரணனாக தான் நடிக்கும் பாத்திரத்தில் ஒன்றி நடித்த அவரின் நடிப்புத்திறனே இவர் யார் என யாரும் கேட்கவாய்ப்பின்றி செய்துவிட்டது. சாலைகளில், கிராம டீக்கடைகளில், சந்தைகளில் காணக்கூடிய எளிய மனிதராக படங்களில் தோன்றினார் வாசு. அந்த எளிமையே இவரை தனிமைப்படுத்தி பார்க்கமுடியாத நிலைக்கு ரசிகனை கொண்டுசென்றுவிட்டது.

இறந்தபின் இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி, அவர் நடித்த படங்களை ரசிகர்கள் சிலாகித்து எழுதி, வாழும் காலத்தில் அடையாத புகழை தான் இறந்தபின் அடைந்து மறைந்தார் அல்வா வாசு.

நிறைவேறாத கனவுகளுடன், அவை என்றாவது நிறைவேறும் எனும் ஆவலுடன் ஆண்டுக்கணக்கில் போராடிக்கொண்டிருக்கும் அனைத்து தொழிலாளிகளுக்கும் செலுத்தும் வணக்கமாக அல்வா வாசு அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து நம் எல்லோரையும் சிரிக்க வைத்த அக்கலைஞனுக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறோம்.

அடுத்த தலைமுறை திரைவிமர்சகர்கள் அல்வா வாசுவின் கதாபாத்திரங்களை ஆராய்ச்சி செய்ய இவ்விருது உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்.

இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *