பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

20645670_1399832240070971_952874295_n

பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு   ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி (125)

 1. ஊஞ்சல்

  பண்பட்ட கலையா பண்பாட்டுக் கலையா
  வீரம் சொல்லும் மண்ணில்
  விவேகம் தரும் விளையாட்டு
  விஞ்ஞானம் கூறுகிறது முதுகு தண்டு பலம்பெறுமாம்
  வித்தைகள் புரியாமலே
  பிள்ளைத் தமிழின் பத்தாம் பருவமதில்
  விளையாடினோம் ஊசலாய்
  கண்ணாமூச்சி விளையாடி
  கைகோர்த்தாடி கதைத்த காலமெல்லாம் நிழலாடும் மனதில்
  தீராத தாகமாய் நினைவரிசை
  பட்டாம் பூச்சியாக வலம்வரும் பருவம்
  நினைவில் கடிவாளம் போட மறுக்கும் கனவு
  மின்னல் பொழுதாய் பருவம் கடந்தேன்
  இம்மண்ணில் இருக்கும் ஈர்ப்பால்
  இப்பெண்ணில் புதையும் நினைவை
  வானவில் கொடியில் உலர்த்தி வண்ணமேற்றும் மனது
  ஊஞ்சலில் குதித்தாடி
  உலகம் மறந்த பொழுதுகளை ஊரறிய பேசுகிறேன்
  ஆலவிழுதுகளில் விளையாடினோம்
  குழந்தை பருவமதில்
  தாயின் சேலையே ஊஞ்சலாய்
  தாய் மணம் நுகர்ந்து தொட்டிலாடினோம்
  கயிற்றூஞ்சல் காற்றில் நலம் கேட்க
  கன்னிப் பருவமதில் கனவில் களித்திட்டோம்
  இறையவன்இறைவி களித்திட்ட பொன்னூஞ்சல்
  இல்லறச் சடங்கிலும் இணைபிரியாமலே
  கன்னியவள் கரம் பிடித்தக் காளையுடன்
  கவினுறவே ஊஞ்சலாடினோம்
  பாரம்பரிய ஊஞ்சல் பாங்குடனே பல பொருளில்
  இந்நூற்றாண்டில்….
  வாகன சக்கரமதில் வாகாய் வளைந்தாட

  பொன்னூஞ்சல் ஆடுமகளே!
  காலமிது காலம் கண்மணியே!
  சிறுவர் பெரியவர் பேதமின்றி
  நல்லவர் கெட்டவர் பேதமின்றி
  ஆட்டுவிக்கும் ஊஞ்சலில் நாளும் விளையாடு
  பேதமை மறந்து சமத்துவ வானில் ஊஞ்சலாடு
  பிறர் ஊக்க முன்னேறு கண்ணே!
  உன்முயற்சியும் வேண்டுமடி பெண்ணே!
  ஊஞ்சல் சொல்லும் பாடம் அதுவே
  நிமர்ந்தாடு கண்ணே நெகிழ்ந்தாடு கண்ணே!
  விளையாட்டுக் காலமிது விரைந்தாடு கண்ணே!
  வரவேற்பறையைப் பிடித்திட்ட ஊஞ்சல்
  வரவேற்பாரற்றுப் பரணில் …..
  காரணத்தைக் கவனமதில் கொள்ள வேண்டும் காரிகையே!
  கணிப்பொறி விளையாட்டில் மூழ்கிய பிஞ்சுகளை
  கரம்பிடித்து நடத்துவோம் உடலியக்க விளையாட்டிற்கு

 2. ஆடிவிடு இப்போதே…

  சின்னப் பெண்ணே ஊஞ்சலாடு
  சிரித்து மகிழ்ந்தே ஊஞ்சலாடு,
  அன்னை ஆடிய ஆட்டமிது
  அப்பா கட்டிய ஊஞ்சலிது,
  பின்னை நாளில் கிடைக்காது
  பொழுதும் அதற்கே இருக்காது,
  உன்னலம் பேண முடியாது
  உழைத்திடும் அன்னையாய் ஆனபின்னே…!

  -செண்பக ஜெகதீசன்…

 3. ஆனந்தக் கூத்தாடும் அரும்பிற்குத் தெரியாது அளவோடு நலம்காணும் நிலையென்றும் மகிழ்வென்று
  ஆசைகள் வார்த்தெடுக்கும் புதுமைகள் புரியாது அனுபவத்தால் வரும்வரையில் அதற்கென்ன எனுமனத்தால்
  கருப்புவெள்ளைக் காலமென்றால் களித்திடலாம் தினந்தோறும் உருமாறும் போதுதான் உள்ளவையே வெளிப்படும்பார்
  துருப்பென்று ஏதுமிலா வேட்டைக்குச் செல்வதுபோல் வருங்காலம் வந்துநிற்கும் வாசலது தெரியாமல்!

  தெரியாமல் வந்ததுகாண் இதுவென்று வெதும்பாமல் தெள்ளிய மனத்தோடு வளர்ந்து வரவேண்டும்
  புரியாத புதிரெல்லாம் அறிவோடு வென்றிட்டு புதுவுலகம் படைத்திடவே பூண்டிடுவாய் உறுதியையும்
  நிலவொன்று வானில்காண் தேய்ந்தென்றும் வளர்வதுபோல் தோல்விகண்டு துவளாமல் நீயென்றும் நடைபோட
  நீரென்றும் விலகாது நிலத்தோடு காய்வதுபோல் உலகிலுந்தன் புகழிணைய யானுன்னை வாழ்த்துகிறேன்!

 4. இளம் பெண்ணே! உன் இளமையை ஊஞ்சலாக்கி விளையாடு,

  உன் எண்ண சிறகினை விரித்து மகிழ்வுடன் விளையாடு

  ஊஞ்சல் ஆடும் போது உனது உடலும், கூந்தலும் ஆடுதே

  உனது எண்ணமும், உள்ளமும், சிரிப்பினை வெளிப்படுத்துதே !

  சிறு வயதில் அன்னையின் கழுத்தை கட்டிக்கொண்டு ஆடிய ஊஞ்சல்

  வளர்ந்தவுடன், பூங்காவில் நண்பர்களுடன் விளையாடிய ஊஞ்சல்

  வீட்டின் முற்றத்தில் விளையாடிய சங்கிலியால் ஆன ஊஞ்சல்

  உனது தலைமுறை காலம்காலமாக வீட்டினுள்ளே ஆடிய ஊஞ்சல்!

  திருமணத்தின் போது, கைபிடித்தவுடன் சேர்ந்து ஆடும் ஊஞ்சல்

  வாழ்வின் ஏற்ற இறக்கங்களை காட்டுவதே ஊஞ்சலின் நோக்கம்

  பின் நாளில் உனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற ஏக்கம்

  உன் ஏக்கம் தீர திறந்த வெளியில் மரக்கிளையில் ஊஞ்சலாடுகிறாயா!

  ரா.பார்த்தசாரதி

 5. ஆடுது பெண்ணூஞ்சல்: ஊஞ்சலாடும் சின்னப் பெண்ணே!
  உன்னதக் காலமிது என் கண்ணே!
  ஆடும் வரை ஆடி விடு அழகுப் பொன்னே!
  நீ வளர்ந்த பின்,உன்னை ஆட விடாது,
  இவ்வுலகம் என் அருமைப் பெண்ணே!
  ஆடும் உரிமை ஆணுக்கு மட்டும் என்று
  அம்பலத்தான் சொல்லியதாய்!
  கதை ஒன்று சொல்லிடுவார்!
  பெண்ணை அடக்கி வைத்திடுவார்!
  அடக்கம் என்னும் பெயர் சூட்டி
  பெண்கள் வளராமல் செய்திடுவார்!
  பெண்ணே ஊஞ்சலில் ஆடிப் பார்!
  உனக்குள் துணிவு வரும்!
  உள்ளம் உறுதி பெறும்!
  உடலும் வலிமை பெறும்!
  உயர்வுற வழி தோன்றும்!
  வானம் தொட்டுவிடும் தூரம்
  எனும் உண்மை புரிந்து விடும்!
  ஊஞ்சலாட உடனே வருவாய்
  என் அருமைப் பெண்ணே!

 6. ஊஞ்சலாடும் பெண்ணே உஷார்..!
  ===========================

  இங்கும் அங்குமாக ஆடியசைந்தாடும் ஊஞ்சல்தானது..
  ……….ஓய்ந்திடும்போது உதைத்தாடுவதினால் இன்பம் தரும்.!
  மங்காதபுகழுடன் வாழத்தான் நானிலத்தில் மாந்தர்கள்..
  ……….மன்றாடி வாழ்க்கையிலுயர ஊஞ்சல்போல ஆடுவர்.!
  தொங்கும் சங்கிலியே ஆடுமூஞ்சலுக்கு ஆதாரமதுபோல..
  ……….தொடருமுமின்ப துன்பபிணைப்பே நமக்குப் பிடிமானம்.!
  தங்குமுலகில் முன்னேற தடைகற்கள் பலவுண்டாமதை..
  ……….தக்கசமயம் வரும்போது தாண்டிவரப் பழகவேண்டும் .!

  பிஞ்சும்பூவும் காயும்கனியும் நிழல்தரும் மரத்தினிலே..
  ……….பிஞ்சு மனதுடன் ஆடிக்களிக்கும் வயதுதானெனினும்..
  ஊஞ்சலாடும் உல்லாசச்சிறுமியே உலகை மறந்தாடும்..
  ……….உனக்கொரு உபதேசம் சொல்லவந்தேன் கேட்பாயா..?
  நஞ்சில்லாப் பாம்புபோல் நட்புலகில் நடிப்போருண்டு..
  ……….நட்பாகப் பழகினாலும் யாரையுமெளிதில் நம்பிவிடாதே.!
  வஞ்சகமாந்தர்கள் செய்யும் சூழ்ச்சிவலையு மிருக்குமதில்..
  ……….வீழ்ந்திடாமல் போராடவும் தெரியவேண்டும் பாப்பா..!

  அஞ்சுதல் ஆருக்கும் கூடாதாம்..அறிமுகமில்லாநபரை..
  ……….அருகில்சேர்க்கா விலகியிருக்க வாழ்வில்நீ கற்றுக்கொள்.!
  சஞ்சலமென்பதும் வாழ்க்கையில் எப்போதும் வேண்டாம்..
  ……….சபலபுத்தி கொண்டோரை சற்றும்கிட்ட நெருங்கவிடாதே.!
  நெஞ்சை நிமிர்த்திநேரான பார்வையொடு கூர்ந்துநோக்கி..
  ……….நட்பெனும் போர்வையோடுவரும் நஞ்சைநீயறியவேணும்.!
  அஞ்சாமல் அவர்களைநீ எதிர்த்தாடப் பழகவெண்டும்..
  ……….அந்தகனை அடையாளம் கண்டொதுக்க வேண்டும்.!

 7. உலகென்னும் ஊஞ்சல்.

  சி. ஜெயபாரதன், கனடா

  உலகென்னும் ஊஞ்சலில்
  பலயுக மாய் ஆடி,
  பந்துகளை
  அம்மானை ஆடுகிறாள் அன்னை !
  நில்லாமல் ஆடுகிறாள்,
  நம்மோடு,
  பல்லாங் குழிகளில்
  பளிங்கு களை இட்டு !
  ஊஞ்சல் ஆட்டம் நின்றால்
  உலகே ஓடிவிடும்
  அண்டவெளி நோக்கி !
  பல்லாங் குழி ஆட்டம்
  நின்றால்
  படைப்பு வேலை
  நிறுத்தம் அடையும் !
  உன்னை ஊஞ்சலில் ஆட்ட
  அன்னையைக்
  கூப்பிடு !
  பல்லாங் குழி விளையாட
  பக்கத்து வீட்டுப்
  பாவையை அழைத்திடு !
  ஓடி விளையாடு
  பாப்பா ! நீ
  ஓய்திருக்க லாகாது
  பாப்பா !
  கூடி விளையாடு
  பாப்பா !
  காலை எழுந்ததுடன்
  படிப்பு ! பிறகு
  கனிவு கொடுக்கும் நல்ல
  தோழியர் நட்பு !
  செய்யும் தொழிலால்
  நாட்டுக்கு
  நலம் புரியச் செல் !
  பெற்றோர் ஈன்ற பொழுதினும்
  பெரிது மகிழச் செய் !

  ++++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.