Blog

  • கே.ஜெ வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும் – 2

     

    கோ.ஆலாசியம்

     

    val4

    சிலிர்த்த மணித்துளிகள்

    அதைக்

    களித்த பொழுதில்

    வலைவீசிப் பிடித்தேன்

    வண்ணப் படம் ஒன்றை.

     

    அழகாய் கவர்ந்த சிப்பியை

    அலகால் தாங்கியே

    அதனுள் இருக்கும் பூச்சியை

    அமுதமாக்க….

     

    val5

    அந்தோ!…

    அருகில் இருந்த பாறையில்

    அப்படியே வீழ்த்திய

    அறிவினை எண்ணி

    அதிசயித்துப் போனேன்

     

    அதை அருகிலே நின்று

    அண்ணாந்து பார்க்கும்

    அருமை நண்பனும்

    லொள்! லொள்! லொள்ளென்று

    குரைத்து…

     

    ஆமாம், நானும் தான்

    என்று

    நயமாக கூறினான்…

     

    ரம்மியமானக் காட்சியதை

    ரசிக்கும் போதே

    ரகசியமாக

    எனது கருவிக்குள்

    அனுப்பிடவும்

    மறக்கவில்லை நான்.

     

    தாமதிக்க வில்லை

    தாமாக நடந்த

    எனது கால்களின் போக்கை…

     

    தாமாகப் புரிந்து கொண்டு

    ஆமோதிப்பவனாய்

    அருகிலேய

    அவனும் வந்தான்…

     

    வேறு யாரு

    நம்மப் பைரவன் தான்….

     

    தகரம் அங்கே

    தாமிரமானது..

    ததும்பி பெருகிய

    மலைத்தேனைப் போன்று

     

    நினைவா…

    கனவா…

    கண்ணைக் கவரும்

    வண்ணங்கள்

    வகை வகையாக

    வானில் வந்துக்

    கொட்டிக் கிடக்கின்றனவே…

    val6

    என்ற எண்ணமேவ

    என்னெதிரில் பறந்த

    பறவைகளையும் படமெடுத்தேன்…

     

    ஆகா, இன்னொன்றை

    இங்கே கூற மறந்தேன்

    வெள்ளியை படமெடுக்க

    விரைந்து வந்த பொழுது

     

    இன்னும் எத்தனை

    நேரமாகுமோ

    இந்தச் சூரியன் மறைய

    என்றிருந்த அப்பொழுதில்….

     

    நான் நிற்கும்

    இப்பாலத்தை

    நல்லதொரு படமு மெடுத்தென்.

     

    (தொடரும்)

    Share
  • நம்பிக்கை .. அதானே எல்லாம்!

    சங்கர் ராமன்

    அலாரத்தை எழுப்புங்கள்

    “சிலருக்கு இந்துமதம் பிடிக்கும்

    சிலருக்குப் பிடித்தமதம் கிறித்துவம்

    எப்போதுமே எனக்குப் பிடித்த மதம்

    தாமதமே!”

    இது கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்ன வார்த்தைகள். ஒரு திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவிற்கு எதிர்பாராத விதமாக தாமதமாக வந்துவிட்டார். அந்த கூட்டத்தைக் கலகலப்பாக்க அவர் சொன்ன வார்த்தைகள் இவை. கவியரசரே சொல்லிவிட்டார் என்று சொல்லி நம்மில் பலரும் இன்று அந்த தாமதத்தையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

    குறித்த நேரத்தில் எந்த இரு மனிதர்களும் சந்தித்ததாக வரலாறு இல்லை. அதைவிட மிகப்பெரிய உண்மை ஒன்று நாம் எல்லோரும் அறிந்ததே… இந்த உலகில் அதிகாலையில் அலாரம் வைத்து எழ வேண்டும் என்று படுத்தவர்கள் யாரும் அலாரம் அடித்தவுடன் எழுந்ததாகவும் வரலாறு இல்லை. மூன்று வேலைகளை நாம் சரியாகச் செய்து விடுவோம்.

    அலறும் அலாரம்

    அலாரம் அடிப்பதற்கு முன்னதாகவே எழுந்து அதனை அணைத்து விட்டுப் படுப்பது.

    அலாரம் அடித்தவுடன் எழுந்து அதனை இன்னும் சற்று நேரம் கழித்து அடிப்பதற்காக மாற்றி வைப்பது.

    இது இன்னும் கொஞ்சம் மோசமானது. அடித்த அலாரத்தை திருப்பி அடிப்பது.

    இந்த மூன்று வேலைகளை நம்மில் பலர் தவறாமல் செய்து கொண்டிருப்போம்… வெற்றிக்கு எத்தனையோ விஷயங்கள் தேவை. உழைப்பு ஆர்வம், புத்திசாலித்தனம், விடா முயற்சி, வித்தியாசமாகச் செய்வது, நேர்மை என அந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் அவை எல்லாவற்றிலும் மேலானது காலம். ஆம். நம் வயதினையொத்த நபர்கள், நமக்குத் தெரிந்தவர்கள், நம்மோடு பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள் எல்லாம் இன்று எந்த நிலைமையில் இருக்கிறார்கள்? நம்மோடு வேலைக்குச் சேர்ந்தவர்கள், நம்மோடு வியாபாரம் தொடங்கியவர்கள் இப்போது எப்படியிருக்கிறார்கள். நாம் எப்படி இருக்கிறோம்? வசதிகளில், வாய்ப்புகளில் வாழ்க்கை நிலைகளில் வேறுபாடுகள் உள்ளனவா?

    இருக்கும் நிச்சயம் இருக்கும். சிலர் உயர்ந்தும், வேறு சிலர் சுமாராகவும் இருக்கலாம். காரணம். அவர்களுடைய திறமை, உழைப்பு, பின்புலம் எனப் பலவாக இருக்கலாம். இந்தத் திறமை, உழைப்பு, பின்புலம் ஆகிய அனைத்தும் இருந்தும் கூட ஒரு சிலர் முன்னேறாதவர்கள் இருக்கலாம். இந்த மூன்றில் ஏதேனும் குறைவாக இருந்தும்கூட முன்னேறியவர்கள் இருக்கலாம். காரணம் அவர்கள் வாழ்க்கையை எப்படி அணுகினர் என்பதுதான். அதைவிட முக்கியம் அவன் காலத்தை எவ்வாறு செலவிட்டான் என்பதுமே ஆகும்.

    அறுபது வயது வரை சராசரியாக வாழும் மனிதன் செலவழிக்கும் நேரத்தைப் பட்டியலிட்டால் நமக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் மிஞ்சுகிறது. தினம் தினம் தூக்கத்திற்கு 8 மணி நேரம், சாப்பிட, குளிக்க என்ற அன்றாட வேலைகளைச் செய்ய 4 மணிநேரம் சம்பாதிக்க நாம் செய்யும் பணி அல்லது தொழிலுக்குச் சராசரியாக 8 மணிநேரம் இவைபோக மீதமுள்ள 4 மணிநேரம் மட்டுமே தான் சொந்த வளர்ச்சிக்குச் செலவிடுகிறான் என்றால் 60 ஆண்டுகள் உயிர் வாழும் மனிதன் மொத்தத்தில் உறங்குவதற்கு 20 ஆண்டுகளும் மற்ற தினசரி வேலைகளுக்கு 10 ஆண்டுகளும் உழைப்பதற்கு 20 ஆண்டுகளும், தன் வளர்ச்சிக்கு 10 ஆண்டுகளும் செலவழிக்கிறான். அதாவது மொத்தத்தில் நமக்கான நேரம் 10 ஆண்டுகள்தான்.

    இந்த 10 ஆண்டுகளில் நாம் செய்யும் சாதனைச் செயல்களோ நம்மை வரலாற்றில் ஒருவனாக இடம்பெறச் செய்யும் தகுதியடையச் செய்கின்றன. காலத்தை எப்படிப் பயன்படுத்துவது? நாம் தினசரி செய்யும் செயல்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

    புதுயுகம் படைப்போம்;

    சில காரியங்கள் நமக்கு முக்கியமானவை . அதே சமயம் அவை அவசர அவசரமாக செய்து முடிக்க வேண்டியவை.
    (எ.கா) : ஒருவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகத் தெரிகிறது, அதனை அகற்ற அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும். இது தவிர்க்க இயலாத செயல். இதற்கு நேரம் செலவழிக்க வேண்டியது முக்கியமானவை. அதைவிட அவசரமானதும் கூட.

    வேறு சில வேலைகள் அதே அளவு அவசரமான வேலைதான். ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடித்தாக வேண்டும். ஆனால் அறுவை சிகிச்சை போல முக்கியமானதாக இல்லை.
    (எ.கா) : இந்த மாதம் கரண்ட் பில் கட்டுவது, நிச்சயம் கட்டியாக வேண்டும். ஆனால் இது வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கப் போவது இல்லை. எனவே இது அவசரம் ஆனால் முக்கியமில்லை.

    மூன்றாவது வகை செயல்கள் முக்கியமும் இல்லை. அவசரமும் இல்லை.
    (எ.கா) : பழைய பேப்பர்கள் போடுவது. அரட்டை அடிப்பது, வேடிக்கை பார்ப்பது போன்ற பல வேலைகளைச் சொல்லலாம்.

    நான்காவது வகை சற்று வித்தியாசமானது. அந்த செயல்கள் அவ்வளவு அவசரமில்லை. ஆனால் அவை முக்கியமானது.
    (எ.கா) : எதிர்காலத்திற்கு திட்டமிடுதல் புதிய விஷயங்களைச் சிந்திப்பது, உறவுகளைப் பேணுவது, ஆரோக்ய விஷயங்கள் கற்றுக்கொள்வது போன்றவைகள்.

    இவற்றில் தினசரி எதில், எதுபோன்ற செயல்களில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம்? இதனைச் சரியாக யோசித்து, கவனமாகச் செய்ய கூடுதல் பலன்கிடைக்கும். ஒவ்வொரு நாளும், அன்றைக்குச் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிடுங்கள்… அதில் முடிக்க முடிந்ததை மட்டும் உடனடியாக செய்துவிடுங்கள். காலத்தின் அருமை நமக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு விநாடியும் வெற்றி நமக்காக காத்திருக்கிறது. நாம் சரியானபடி செயல்பட வேண்டும்.

    “திட்டமிடாத எவரும்

    வெற்றிபெறமுடியாது”

    என்பது முதுமொழி.

    ஒலிம்பிக்போட்டிகளில் தோற்றவருக்கும் ஜெயித்தவருக்கும் அதிகவித்தியாசம் இருப்பதில்லை. மைக்ரோ விநாடிகளில்தான் வெற்றி காத்திருக்கிறது. விநாடிகளில் பல்வேறு நிகழ்வுகள் நம்மை ஆட்டிப்படைத்துள்ளன.

    1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் நாளை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. உலக சரித்திரத்தில் ஒரு கருப்பு நாள் அது. ஹரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது இரு கதிரியக்க குண்டுகள் வீசப்பட்டன. 30 விநாடிகளில் 2 லட்சம் பேர்கள் கொல்லப்பட்ட பரிதாபம் விநாடிகளின் விபரீதத்தை நமக்கு உணர்த்தி விட்டது. இலக்கை நோக்கி செல்லும் ஏவுகணைகளுக்கு இரண்டு நாளுக்கு முன்பிருந்த கவுண்ட் டவுண்-ஐ ஆரம்பித்து விடுகிறோம். நம்முடைய நிலை என்ன? பொதுவாகத் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் நம் மாணவர்கள் ஒரு சபதத்தை ஆக்ரோஷமாகச் செய்வார்கள்… “நாளையில் இருந்து அன்னன்னக்கு பாடத்த அன்னக்கே படிச்சிரனும்…” ஆனால் மறுநாள். ஏற்கனவே பலமுறை பார்த்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதையே வெறித்துப்பார்க்கும் பழக்கம் நம்மிடையே, நம் மாணவர்களிடம் காணப்படுகிறது. ஒரு அழகான கவிதை எனக்கு ஞாபகம் வருகிறது. யார் எழுதியது என்பது எனக்குத் தெரியாது. நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ள வேண்டியதுதானே.

    ஓடாத கடிகாரம்கூட

    ஒரு நாளில்

    இருமுறை

    சரியான நேரத்தைக்

    காட்டுகிறது

    என்றன அழகான கவிதை!. இக்கவிதை பல உண்மைகளை நமக்குக் கற்றுக்கொடுத்து விடுகிறது.

    எம்.ஜி.ஆர். சமாதி

    இனி நீங்கள் அலாரத்தை எழுப்புபவராக இருங்கள். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் சமாதியில் அவரோடு புதைக்கப்பட்ட அவரது கைக்கடிகாரம் இன்று வரை ஓடிக்கொண்டிருப்பதாக இன்னும் சிலர் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்… அவரின் சமாதிக்குச் செல்லும் பலரும் கடிகாரம் ஓடுகிறதா என்பதனை அறிய காதுவைத்து கேட்கிறார்கள்… இது பரவாயில்லை. இன்னும் சிலபேர் ஓடாத கடிகாரத்திற்கு சாவி கொடுப்பதற்கு அந்தச் சமாதியினை உடைக்க முயற்சி செய்ததையும் நாம் அனைவரும் அறிவோம்…

    சமாதியில் இருக்கும் கடிகாரம் கூட ஓடவேண்டும் என்ற அக்கறை கொண்ட நாம் நம்முடைய காலக்கடிகாரத்தை சுழல விடவேண்டாமா?.

    திரு லேனா. தமிழ்வாணன் அவர்கள் ஒரு கூட்டத்தில் சொன்ன அருமையான செய்தியைச் சொல்கிறேன். ஒரு மாதத்தின் அருமை தெரிய வேண்டும் என்றால் குறைப்பிரசவத்தில் பிள்ளை பெற்ற குணவதியிடம் கேட்டறியலாம். அவள் படும்பாடு எத்தகையது. எத்தகைய கடினமானது என்பது புரியும். ஒரு வாரத்தின் அருமை யாருக்குத் தெரியும்? வாரப்பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும். ஒரு நாளின் அருமை யாருக்குத் தெரியும்? ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைப் பார்த்த பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.

    ஒரு மணி நேரத்தின் அருமையை நுழைவுத்தேர்வு எழுதும் மாணவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒரு விநாடியின் அருமை யாருக்குத் தெரியும்? விபத்தில் அசந்து போனவனுக்கு விவரமாய்த் தெரியும்… ஒரு மைக்ரோ செகண்டின் அருமை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை தவறவிட்ட வீரனுக்குத் தெரியும். என்ன அருமையான செய்தி. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு செய்தியைச் சொல்கிறது. தமிழ் இலக்கியத்திலும் ஒரு அழகான செய்தி நேரத்தைப் பற்றி உள்ளது.

    “ஒன்றே செய்

    ஒன்றும் நன்றே செய்

    நன்றும் இன்றே செய்

    இன்றிலும் இப்போதே செய்துவிடு”

    என்பார் திருமூலர். நாம் செய்ய வேண்டிய நல்ல செயல்களை உடனடியாகச் செய்துவிட வேண்டும். ஏனெனில் நம்முடைய மனது மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு புத்தாண்டின் போதும் ஏதாவது ஒரு புது சபதம் ஏற்போம். இந்த ஆண்டில் இதைச் செய்ய வேண்டும். அந்த வருட இறுதியில் நாம் செய்த சபதத்தை நிறைவேற்றி இருக்கிறோமா?… நிறைவேற்றி இருந்தால் நாம் வெற்றிக்கு மிக அருகிலே இருப்பதாக அர்த்தம்.

    சாதனை நாயகர்கள்

    உலகிலேயே மிக அதிகமாக சம்பாதிக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும், கேப்டன் தோனிக்கும் அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை மதித்து அவர்களுக்கு இறைவன் 48 மணிநேரம் கொடுத்திருக்கானா? இல்லையே. பிறகு எப்படி ஜெயித்தார்கள்? அவர்கள் காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்… நேரம் எவ்வளவு பெரிய பொக்கிஷம். அதனை நாம் உணர்ந்து கொண்டாட வேண்டாமா?.

    ஓரு சின்ன உதாரணம். ஓரு சிறிய இரும்புத்துண்டு. அதை அப்படியே விற்றோம் என்றால் 10 ரூபாய் கிடைக்கும். அதையே சற்று வடிவம் மாற்றி ஒரு குதிரையின் லாடமாக மாற்றினால் 20 ரூபாய் கிடைக்கும். அதையே குண்டூசிகள் ஆக்கினால்… தொடர்ந்து பாருங்கள்.

    ஒரு பொருளின் மதிப்பு அதன் நுட்பத்திலேதான் அமைந்திருக்கிறது. அது போலத்தான் காலமும், ஒரு மணி நேரத்தில் பத்து ரூபாய் சம்பாதிப்பதும் லட்ச ரூபாய் சம்பாதிப்பதும் அவரவர் காலத்தைப் பயன்படுத்தும் முறையிலே அமைகிறது. நிறைவாக இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். ஒத்திப்போடாதீர்கள்.

    ஒத்திப்போட்டவர்களை உலகம் புறக்கணித்து விடும். நம்முன் இருக்கும் வேலைகளை அவசரமானவை, முக்கியமானவை என்று பிரித்துக்கொண்டு முன்னர் சொன்னபடியே செய்யுங்கள். இரண்டும் இல்லாத வேலைகளை செய்யாதீர்கள். ஒன்றுமே வேலை இல்லையா? நாளை என்ன வேலை செய்யலாம் என்று பட்டியல் போடும் வேலையைச் செய்யலாமே. அதுவும் இல்லை என்றால் சின்ன தூக்கம் போடலாம். தப்பில்லை. உடல் நலம் பெறும். தூக்கம் வேண்டாம் என்றால் தியானத்தில் இருங்கள். தியானத்தில் நிறைய நன்மை உண்டு.

    இந்த அத்தியாயத்தில் கதை ஒன்றும் சொல்லவில்லையே என்ற குறை உள்ளது. நேரம் கருதி ஒரு கதை சொல்கிறேன். ஒரு ஊரில் ஒரு தொழிலதிபர் இருந்தார். ஒருநாள் காலையில் அவரது வங்கி மேலாளரிடமிருந்து ஒரு போன் வந்தது. “சார் உங்க கணக்கில யாரோ ஒருவர் 86,400 ரூபாய் டெபாஸிட் போட்டிருக்கிறார். என்ன பண்ணலாம் என்றார். அவர் யார் என்று தெரியுமா?’என்று கேட்டால் தெரியாது’ என்றார் வங்கி மேலாளர். ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஒரு ரூபாயா? இரண்டு ரூபாயா? 86,400 ரூபாய். சும்மாவா? தலைகால் புரியவில்லை மனிதருக்கு.

    இரவு மறுபடியும் தொலைபேசி அலறுகிறது. “சார் அந்த 86,400 ரூபாயை யாரோ எடுத்துட்டாங்க () சார்” என்றார் வங்கி மேலாளர். “அதெப்படி முடியும்” என்று இவர் அலற பெரிய ஆர்ப்பாட்டமே நடந்துவிட்டது. 86,400 டெபாஸிட் செய்தபோது யார் செய்தது என கவலைப்படாதவர் பணம் போனதும் கவலையோடு அலறுகிறார். நாள்தோறும் பெயர் தெரியாத ஒருவர் நம் கணக்கில் 86,400 டெபாஸிட் செய்து இரவே அதை எடுக்கவும் செய்தால் வருத்தம் வராதா?

    என்ன அந்த 86,400 ரூபாய்…? ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணிநேரம். ஒரு மணிக்கு அறுபது நிமிடம். ஒரு நிமிடத்திற்கு அறுபது விநாடிகள். அப்படியானால் 86,400ரூபாய். அதாவது ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்திக் கொள்ள 86,400 விநாடிகளைக் கடவுள் நமக்காக டெபாஸிட் செய்கிறார். அன்று இரவே அதை எடுத்தும் விடுகிறார். அந்தப் பணத்தை, அதாவது காலத்தை நாம் வீணாக விடலாமா? பயன்படுத்த வேண்டாமா?

    ஒவ்வொரு ரூபாயையும் எண்ணி, எண்ணி செலவழிக்கிற மாதிரி அல்லது யோசித்து முதலீடு செய்து சம்பாதிக்கிற மாதிரி ஒவ்வொரு விநாடியையும் பத்திரமாக செலவழிக்க வேண்டும். காலக்கெடு வைத்தே எந்த வேலையையும் செய்யுங்கள். காலம் முடிவதற்குள் வேலையைச் செய்துவிடுங்கள்.

    காலத்தைக் கொண்டாடுங்கள்

    காலம் உங்களைக் கொண்டாடும்.

    Share
  • மலேசிய இந்து சங்கம் 2013 ஆண்டுக்கான சங்கரத்தினா மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    மலேசியாவில் இந்துத் தொண்டுக்கான உயர்விருது. மலேசிய இந்து சங்கம் வழங்கிய விருது – சங்கரத்தினா விருது

    mhs08130913

    15.09.2013 மதியம், கோலாம்பூர் பெற்றாலிங்கு செயா குடிமக்கள் மண்டபம் மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் சண் வழங்குகிறார். உடனிருப்பவர் மலேசிய இந்து சங்கத் துணைத் தலைவர் கந்தசாமி. நிகழச்சி முதலாவது உலகத் திருமுறை மாநாடு 36ஆவது திருமுறை விழா

    ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தம் வாழ்நாள் முழுவதையுமே இறைப்பணிக்காகவும், மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நல்ல எண்ணத்தோடு துயருற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி உன்னத வாழ்க்கை வாழ்பவர் ஐயா திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். இவ்வரிய விருதினை ஐயாவிற்கு வழங்கும் விதமாக இவ்விருது பெருமை கொள்கிறது. வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள். ஐயாவின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, அவர் பெற்ற விருதுகள் பற்றி அறிய:

    1941 திசம்பர் 5இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தந்தையார் நல்லாசிரியர், சைவசிகாமணி முருகேசு கணபதிப்பிள்ளை, சைவ சமய நூல்களை 30 ஆண்டுகளாகப் பதிப்பித்து வந்தவர். தாயார் தங்கம்மா. மனைவி இராசேசுவரி, மக்கள் கயல்விழி, சிவகாமி, முருகவேள், பிஞ்ஞகன்.

    கல்வி

    1945 மறவன்புலவு சகலகலா வித்தியாசாலை,

    1949 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,

    1959 சென்னை பச்சையப்பன் கல்லூரி,

    1969 யப்பான் தோக்காய் சுவிசங்கு கேங்கிசோ ஆய்வகம்,

    1973 சிங்கப்பூர் நன்யாங்கு பல்கலைக்கழகம்,

    1976 இங்கிலாந்து சதாம்பரன் பல்கலைக்கழகம்

    1988 சென்னைப் பல்கலைக்கழகம்.

    விருதுகள்

    1963 இலங்கை அறிவியல் வளர்ச்சிச் சங்கப் புலமைப் பரிசில் விருது.

    1964 இந்திய அரசின் புலமைப் பரிசில் விருது.

    1969 யப்பானிய அரசின் புலமைப் பரிசில் விருது.

    1973 யூனெஸ்கோவின் புலமைப் பரிசில் விருது.

    1976 பிரித்தானிய கழகத்தின் சதாம்பரன் பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் விருது.

    1976 ஆத்திரேலிய அறிவியல் கழகத்தின் வங்காள தேச வளர்ச்சிப் பயணத்துக்கானன புலமைப் பரிசில் விருது.

    1986 சீசெல்சு இந்துக் கோவில் சங்கப் பாராட்டு விருது.

    1987 சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்கம், பாவேந்தர் பாரதிதாசன் விருது.

    1995 சென்னைக் கம்பன் கழகம் சிறந்த பதிப்பாளர் விருது.

    2000 திருவாவடுதுறை ஆதீனம் சிவநெறித்தொண்டர் விருது.

    2008 அறவாணன் அறக்கட்டளை சாதனையாளர் விருது.

    2010 சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு விழாவில் பாராட்டு.

    2012 கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முதுமுனைவர் பட்டம்.

    2013 காரைக்குடிக் கம்பன் கழகத்தார், தமிழ்த் தாய்க் கோயிலில் பரிவட்டப் பாராட்டும் முடிசூடல் விருதும்.

    தொழில்

    1963 கொழும்பு இறக்குதிக் கட்டுப்பாட்டுத் திணைக்கள உதவியாளர்,

    1966 யாழ்ப்பாணக் கல்லூரி விரிவுரையாளர்,

    1966 கொழும்பு உள்ளூராட்சி அமைச்சரின் தனிச் செயலர்,

    1967 கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலைய அறிவியல் ஆய்வாளர்,

    1977 யாழ்ப்பாணம் காந்தளகம் பதிப்பாளர்,

    1977 யாழ்ப்பாணப் பல்கைலக்கழகப் பேராசிரியர்,

    1979 ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பாக 23 அரசுகளுக்கு ஆலோசகர்,

    1986 சென்னை காந்தளகம் பதிப்பாளர்,

    1999 மின்னம்பலத்தில் கலைமாமணி பா. சசிரேகா மேற்பார்வையில் உலகெங்கும் 62 நாடுகளில் தமிழ்நூல் www.tamilnool.com விற்பனையாளர்,

    2000 சத்தியமங்கலம், தாம்பரம், இராமநாதபுரம், நாகர்கோயில், சிதம்பரம், சேலம் காந்தளம் புத்தக விற்பனை நிலையங்களின் அமைப்பாளர்,

    2013 யாழ்ப்பாணம் காந்தளகம் மீளமைத்துப் பதிப்பாளர்.

    சைவ சமயப் பணி

    1950 ஆறுமுக நாவலர் விழா, திருமுறைப் போட்டியிலும், பேச்சுப் போட்டியிலும் பங்கேற்றவர்.

    1954, 1955, 1956 தவத்திரு யோகர் சுவாமியின் நேரடி வழிகாட்டலில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் புராண படனர்.

    1959 சென்னையில் சைவப் பேரறிஞர், பேரா. அ. ச. ஞானசம்பந்தன் வழிகாட்டலில், பாதுகாப்பில் வாழத் தொடங்கியவர்.

    1962 சென்னை சைவசித்தாந்தப் பெருமன்ற இளஞ் சைவப் புலவர் மாணவர்.

    1963 யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் திருக்கோயில் – திருக்குள மீளமைப்பாளர்.

    1965 தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானத்திடம் திருமுறைத் தொடக்கப் பதிப்புகள் பெற்றவர், பயின்றவர்.

    1966 யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் திருக்கோயில் – திருத்தேர் மீளமைப்பாளர்.

    1968 கொழும்பு இந்து வாலிபர் சங்கத் துணைச் செயலாளர்.

    1969 மார்கழியில் சுங்கைப் பட்டாணியில் டத்தோ வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற மலேசிய இந்து இளைஞர் பேரவை மாநாட்டில் பங்கேற்றவர்.

    1971 சிங்கப்பூரில் திரு. ஈ. வி. சிங்கனுடன் இணைந்து ஞாயிறு திருக்குறள் வகுப்புகளில் ஆசிரியர்.

    1971 பிஜித்தீவில் தென் இந்திய ஐக்கிய சன்மார்க்க சங்கம் மற்றும் இலவுற்றோக்கா, விவேகானந்தர் பாடசாலையில் திருமுறை ஆசிரியர்.

    1971 சாவகத்துக்கு அருகே, பாலித்தீவுச் சிவன் கோயில்களில் வழிபாடு, சாவகத்தில் சொக்சகார்த்தாவில் பெரும்பாணண் சிவன்கோயிலில் வழிபாடு.

    1971 இலங்கை இந்து இளைஞர் பேரவை அமைப்பாளர், 60 அமைப்புகளின் கூட்டமைப்பின் தொடக்கத் தலைமைச் செயலாளர் 1977 வரை. ஆண்டு தோறும் கொழும்பு, நீர்கொழும்பு, வவுனியா, இலுப்பைக்கடவை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இந்து இளைஞர் மாநாடுகள் நடத்தியவர்.

    1973 இலங்கை இந்து இளைஞர் பேரவை தலைமைச் செயலாளராகத் தீவு முழுவதும் இந்து இளைஞர் கொடிநாள் 1975இல் நடத்தத் தொடங்கி 1977 வரை நடத்தி வந்தவர்.

    1973 மதுரையில் நடைபெற்ற சைவ மாநாட்டிற்கு இலங்கை இந்து இளைஞர் பேரவை சார்பில் இலுப்பைக்கடவை, திரு. கணேசமூர்த்தி பேராளராகச் செல்ல வழிவகுத்தவர்.

    1974 யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்திய அமைப்புக் குழுத் துணைச் செயலாளர்.

    1975 இப்பைக்கடவை இந்து இளைஞர் மன்ற உறுப்பினர் இளைஞர் பணிப் பயிற்சிக்காகக் கனடாவுக்கும் கொழும்பு இந்து வாலிபர் சங்க உறுப்பினர் யப்பானுக்கும் செல்ல ஏற்பாடு செய்தவர்.

    1976 மலேசிய, மொரிசியசு, பிஜி நாடுகளின் பேராளர்கள் கலந்துகொண்ட உலக இந்து இளைஞர் மாநாட்டைக் கொழும்பில் நடத்தியவர். டத்தோ வைத்தியலிங்கம் மலேசியவில் இருந்து வந்திருந்த பேராளர்.

    1977 விசுவ இந்து பரிசத்தின் காசி மாநாட்டுக்கு இலங்கை இந்து இளைஞர் பேரவைப் பேராளர்களை அனுப்பியவர்.

    1979 யாழ்ப்பாணம், கைதடி, பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழாவில் அனைவரும் வடம் பிடிக்க முடியாத நிலையில், அவர் தலைமையில் அறவழிப் போராட்டம், தேர்த்திருவிழா நிறுத்தம், பின் அனைவரும் கோயிலில் அனைத்து நிலைகளிலும் வழிபடும் உரிமை.

    1980 மொரிசியசு தமிழ்க்கோயில் கூட்டமைப்புக்கு ஆலோசகர், கருத்துரை வழங்கி வந்தவர்.

    1984 சீசெல்சு இந்துக் கோயில் சங்க நிறுவனர். 200 ஆண்டுகாலமாகச் சீசெல்சில் வாழும் தமிழருக்கான முதலாவது கோயில் அமைக்கக் கால்கோளிட்டதால் பிள்ளையார் நகர் நடுவே அருள் இன்றும் பாலிக்கிறார்.

    1985 சீசெல்சு இந்துக்களுக்குத் தைப் பொங்கல், தீபாவளி நாள்கள் பகுதி விடுப்புகளாகச் சீசெல்சு இந்துக் கோயில் சங்கம் வழியாக அரசிடம் ஆணை பெற்றவர்.

    1988 முருகன் பாடல்கள் நூல், 12 பகுதிகள் 4,800 பக்கங்கள் கொண்ட தொகுதியைக் கொழும்பு தெட்சணத்தார் வேளாளர் மகமைக்காகத் தயாரித்தவர்.

    1989 சிதம்பரம் ஆருமுகநாவலர் அற்க்கட்டளைக் குழுவில் யாழ்பாணம் சைவபரிபாலன சபையின் சார்பில் இரு ஆண்டுகள் உருப்புரிமை.

    1994 மலேசிய சைவநெறித் திருக்கூட்டத்தினருக்காகச் சிவருமோத்திரம் நூலைப் பதிப்பித்தவர்.

    1994 மலேசிய சைவ நெறித் திருக்கூட்டம், மலேசியச் சைவப் பெரியார்கள் தான்சிறீ சோமசுந்தரம், ஆறுமுகம், குலவீரசிங்கம் ஆகியோர் ஆதரவுடன் பெரியபுராணம் மூலமும் ஆறுமுகநாவலர் மற்றும் ஏழாலை மு. கந்தையா எழுதிய சூசனங்களைப் பதிப்பித்தவர். கோலாலம்பூர் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்.

    1996 தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானத்தின் ஆசியுடன் மலேசியச் சைவப் பெரியார்கள் ஆறுமுகம், குலவீரசிங்கம் வழிகாட்டலில், தருமபுரம் ஆதீனம் பன்னிரு திருமுறைப் பதிப்பு மீண்டும் வெளிவரப் பணிபுரிந்தவர். 12 திருமுறைகள் 16 பகுதிகளாக வெளிவரும் திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர். செம்பதிப்பாக, 18,600 பக்கங்கள் கொண்ட அப்பதிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருபவர்.

    1997 இலங்கையில் இந்துக் கோயில்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகத் தமிழகத்தில் அரசியலாருடன் தொடர்புகொண்ட முயற்சிகளால் சென்னைச் சிறையில் ஒருமாதம் இருந்தவர்.

    2003 திருக்கயிலாயப் புனிதப் பயணம் மேற்கொண்டவர். ஆவணி நான்காம்பிறை நாளில் திருக்கயிலாயக் காட்சி பெற்றவர்.

    2005 மின்னம்பலத்தில் தருமபுரம் ஆதீனம் பன்னிரு திருமுறை முழுவதையும் www.thevaaram.org தளத்தில் ஏற்றி உலகெங்கும் 72 நாடுகளில் 720 நகரங்களில் நாள்தொறும் சராசரியாக 20,000 தட்டித் திறப்பாளர் பார்த்துப் பயனுறச் செய்தவர்.

    2007 திருமலை திருப்பதி தேவத்தானத்தின் பன்னிரு திருமுறைத் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கான ரூ. 13 இலட்சம் நிதி ஒதுக்கீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்.

    2009 பன்னிரு திருமுறையின் 18,268 பாடல்களில் 10,585 பாடல்களைத் தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசையாகப் பாடி முடித்திருக்க, குரலிசையாகப் பாடி முடிக்காத எஞ்சிய பாடல்களைப் பதிவுசெய்யச் சிங்கப்பூர்த் திருமுறை அன்பர்களின் நிதி உதவியுடன் பொற்றாளம் துரை. ஆறுமுகம் மேற்பார்வையில் ஓதுவார் பா.சற்குருநாதன் பாடி முடிக்கும் திட்டத்தை ஒருங்கிணைப்பவர்.

    2010 பன்னிரு திருமுறையின் மியன்மார், சிங்களம், மலையாளம், கன்னடம், வடமொழி, இந்தி மொழிபெயர்ப்புகள் வெளிவருவதற்காக 25 மொழிபெய ர்ப்பாளரின் பணிகளை ஒருங்கிணைப்பவர். மலாய் மொழிபெயர்ப்பு வெளிவர ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுபவர்.

    2011 பன்னிரு திருமுறையில் உள்ள தமிழ் ஒலிகளை ஞால மொழியொலி நெடுங்கணக்குடன் இயைந்து ஒப்பு நோக்கிய மொழியியலாளர் பேரா. புனல் க. முருகையன் முயற்சியை நூலாக்கி, கணிணி மொழியியலாளர் பேரா. வினோதராசன் வழியாகப் பன்னிரு திருமுறையின் 18,268 பாடல்களையும் 20 மொழியாளர் ஒலிபெயர்ப்பாகப் பயிலுமாறு ஒருங்கிணைப்பவர்.

    2011 தாய்லாந்து அரச குருவான தவத்திரு வாமதேவ முனிவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தாய்லாந்து அரசரின் திருக்கோயிலில் மார்கழி 30 நாள்களும் திருவெம்பாவைப் பாடல்களைச் செம்மையாக ஓத உதவியாக, கிரந்தம், சீயம் ஆகிய வரிவடிவங்களில் நூலாக்கிக் கொடுத்தவர்.

    2011 மியன்மாரில் மாநிலங்கள் தோறும் தேவாரம் மின்னம்பலத் தளப் பரப்புரையாளர். மியம்மா மொழிக்குத் திருமுறை மொழிபெயர்ப்புக்குத் தளம் அமைத்தவர். மியம்மா மொழிபெயர்பாகத் திருவெம்பாவை நூல் வெளியீட்டை ஒருங்கிணைத்தவர்.

    2011 கம்போடியாவில் காரைக்காலம்மையார் சிலைகள் தாங்கிய கோயில்கள் சென்று காணொலிகளாக்கியவர், கம்போடியாவின் 1008 சிவலிங்கத் திருமேனிகளின் கோயில்கள் சென்று காணொலிகளாக்கியவர்.

    2011 சிங்கப்பூர் செண்பகப் பிள்ளையார் கோயிலாரின் திருமுறை வகுப்பு மாணவர்களுக்காக நூல்கள், சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு அமைப்பாளரின் மாநாடுகளுக்காக நூல்கள் தயாரித்தவர்.

    2012 ஆத்திரேலியாவின் மாநிலத் தலைநகர் தோறும் சென்று தேவாரம் மின்னம்பல தளம் பரப்புரைத்தவர்.

    2012 ஆறுமுகநாவலர் தயாரித்த 71 நூல்களையும் மின்னம்பலம் வழி எவரும் படிக்குமாறான செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர். இத்திட்ட முன்னோடி ஆத்திரேலியா மெல்போர்ண் வாழ் பொறியியலாளர் திரு. சிறீஸ்கந்தராசா.

    2012 சிலாங்கூர், பெராக், பினாங்கு, கெடா, மலாக்கா, சரவாக்கு, சபா மாநிலங்களிலும் கோலாம்பூர் மற்றும் இலபுவான் நகரங்களிலும் மலேசிய இந்து சங்கத்தின் கிளைகள் தோறும் சென்று தங்கி, திருமுறை வளர்ச்சிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர்.

    mhs11130913mhs10130913

    2013 ஓராயிரம் ஆண்டுகளாக மறவன்புலவில் தம் முன்னோர் அறங்காத்துத் தொண்டாற்றி வரும் திருக்கோயில் இலங்கையின் 30 ஆண்டுகாலப் போரினால் சிதைந்து போக, புதுப்பித்து மீளமைக்கும் திருப்பணியாளர்.

    Share
  • உன்னதமான ஒரு சமூகத்திற்கான கரைதல்…..

    எஸ் வி வேணுகோபாலன்

    ஒரு திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை இப்படி நேரடியாக அதனோடு தொடர்பு படுத்திக்கொண்டு விலக முடியாமல் தவித்த அனுபவம் மிக அண்மைக் காலத்தில் ஏற்படவில்லை.

    thanga_meengal_tamil_movie_first_look_posters_wallpapers_75ac354

    திரைக் கதையோடும் அதன் ஓட்டத்தோடும் பின்னிக் கொள்ள நேர்ந்ததற்கு பளீர் என்று தெற்றுப் பல் தெரியச் சிரிக்கும், சட்சட் என்று முக பாவங்களை மாற்றத் தெரியும், அகலக் கண்கள் விரித்து இயற்கையின் ரகசியங்களை விழுங்கக் காத்திருக்கும் செல்லம்மா பாத்திரம் ஒரு காரணம். வாழ்த்துக்கள், சாதனா! பாத்திரப் படைப்போடு சங்கமம் ஆகிவிட்ட கல்யாணியாக நடித்த ராம் அடுத்தது. அருமை, ராம்!

    தங்க மீன்கள் ஒரு சமூக, பொருளாதார விஷயத்தை, ஆளுமை பிரச்சனை, உளவியல் அம்சங்களின் பின்புலத்தில் பேசுகிறது. அதன் வெற்றி, தோல்வியைக் காட்டிலும் இன்றைய தமிழக பண்பாட்டுச் சூழலில் இத்தகைய ஒரு திரைக் கதையின் தேவை என்ன, அதன் தாக்கம் என்ன என்பதை விவாதிப்பது முக்கியமாகிறது.

    மிகச் சிறு வட்டத்திற்குள், மிகக் குறைவான பாத்திரங்களின் தேர்வுக்குள், அதிக நிலப்பரப்பை நோக்கி கவனத்தைச் சிதறடிக்காமலும், காட்சி-வசனம் என்ற சாதனங்களை நேர்த்தியான கலவையிலும் வழங்க இயக்குனர் ராம் எடுத்துக் கொண்டிருக்கும் பாடுகள் உள்ளபடியே வணக்கத்திற்குரியவை. வேறு மாதிரி அலைந்து திரிந்து களைத்துப் போயே பழக்கப்பட்டுவிட்ட இன்றைய சராசரி திரை ரசிகருக்கு இதில் ஒவ்வாமை ஏற்பட்டிருக்குமாயின் அதற்கு சரியான மருந்து என்ன என்பதைச் சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.

    தேடலில் இருக்கும் நடுத்தர வயது மகன், அவனது காதலுக்கு ஆட்பட்டு வாழ்க்கைத் துணையாக (இணையாக அல்ல என்பது படத்தின் போக்கில் புரிகிறது) வந்துவிடும் மனைவி, நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வும் பெற்றுவிட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அப்பா, அவரை அனுசரித்து, அவரது கசப்பைப் பகிர்ந்து கொள்ளும் அம்மா, பள்ளியால் மந்தம் என்று புறக்கணிக்கப்படும் சூட்டிகைக் குழந்தை என்று கை அடக்கமான வீடு. (இல்லம் என்ற சொல்லைப் பயன்படுத்த இயலாது).

    குழந்தைக்கான பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத தனது தந்தையினது பாசத்தின் ஊற்றில் தனியே ஒரு பள்ளிக்கூடத்தை மானசீகமாக உருவாக்கிக் கொண்டு அந்தக் கல்வியில் தேர்ச்சி பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது குழந்தை. வீட்டில் உள்ளோரும் சரி, பள்ளியைச் சார்ந்தோரும் சரி குழந்தையை அறிய முயற்சி மேற்கொள்வதில்லை என்பது ஒரு முக்கியமான உளவியல் கூறாக படத்தில் வெவ்வேறு நிகழ்வுகள், காட்சிகள், வசனங்களின் மூலம் எடுத்து வைக்கப் படுகிறது.

    தனது குழந்தைக்கு மேலான கல்வி தர வேண்டும் என்று தனியார் நிறுவனத்திற்கு சைக்கிளில் அவளை வைத்துக் கொண்டு விரையும் கல்யாணி, கடைசி காட்சியில் அவளை அரசுப் பள்ளியில் பெருமிதம் பொங்க சேர்த்துவிட்டு அவள் குவிக்கும் வெற்றியை ரசிப்பதோடு நிறைவு பெறுகிறது படம்.

    இதனிடையே பேசப்படும் செய்தி, நிலையான வருமானம் அற்ற ஒரு மனிதனின் அலைக்கழிப்பு. சம்பாதிக்க முடியாதவனுக்கு சுய மரியாதையோ, மதிப்போ இருக்கக் கூடாது என்கிறது சமூகம். டிகிரி கூட (!) படிக்காத பெற்றோரின் குழந்தையை இங்கே சேர்த்தது எங்கள் தப்பு என்கிறது தனியார் ஆங்கில வழிக் கல்வி நிறுவனம்.

    தன்னை பள்ளிக்கூடம் எதற்கு இப்படி ஒதுக்கி வைக்கிறது, சக மாணவர்கள் ஏன் தன்னை பரிகசித்து சிரிக்கின்றனர், தனக்குச் சரியாகப்படும் விடைகள் ஏன் எப்போதும் ஆசிரியர்களுக்குத் தவறாகவே படுகின்றன என்று நிலைகுலையும் ஒரு சிறுமிக்கு வீட்டில் நிபந்தனை மேலிட்ட அன்பும், சலிப்பில் ஊறிய கவனிப்பும், பெருமூச்சோடு உதிரும் ஆசியும் கிடைக்கின்றன. தனக்கான அங்கீகாரத்தை அவள் தன்னைப் போலவே நிராகரிக்கப் பட்ட தந்தையிடம் மட்டும் தான் கோராமலே பெறமுடிகிறது. மிக நுட்பமான இடம் இது இந்தக் கதையில்.

    தந்தை – மகள் உறவு ஆரோக்கியமான விதத்தில் பேசப்படுகிறது. அதில் மற்றவர்கள் செய்யும் குறுக்கீடுகள் நம்மை மேலும் ஊன்றிக் கவனிக்க வைக்கின்றன. “நீ எதுக்குடா பள்ளிக்கூடத்துக்குப் போய் நிக்கிற…அவளுக்கு எதற்கு ரெண்டு அம்மா…?” என்று குழந்தையின் தாத்தா தனது பையனிடம் கேட்கும் கேள்வி, பொதுவாக நடுத்தர குடும்பங்களில் வேலைப் பிரிவினை குறித்த ஆழமான பரிமாணங்களை எடுத்து வைக்கிறது. பொதுவாக குழந்தை பராமரிப்பு, பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களைச் சென்று பார்ப்பது, பாட்டு கிளாஸ், பண்டிகை பலகாரம், துணிமணி, வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல்…. இன்னபிற பொறுப்புகள் ஒரு தாயினுடையவை. அந்த இடத்தை ஓர் அப்பா எடுத்துக் கொள்வது தேவையற்றது என்ற கருத்தாக்கம் தொக்கி நிற்கும் கேள்விகள் அவை.

    கற்றலின் இனிமை மறுக்கப்பட்ட வகுப்பறை, ஒரே ஒரு காட்சியிலேயே சாட்டையடி மாதிரி எடுத்து வைக்கப் படுகிறது. ஆங்கில எழுத்து W எப்படி என்பதில் குழப்பம் இருக்கிறது செல்லம்மாவுக்கு. அதையும் M என்ற எழுத்தையும் குழப்பிக் கொண்டிருக்கிற அவள் சிக்கிக் கொண்டு விடுகிறாள். இந்த எழுத்துக்களை கரும்பலகையில் எழுதச் சொல்லி ஏவும் ஆசிரியையின் தீப்பொறி உமிழும் கண்கள், நடுங்க வைக்கும் தடித்த சொற்கள், நொடிக்கு நொடி உத்தரவுகளாக பிறப்பிக்கப்படும் அச்சுறுத்தல்கள், அதிர வைக்கும் உடல் மொழி…….இவை எதுவுமே வகுப்பறைக்குரிய இலக்கணங்களுக்குள் வராது. இந்த வன்முறையின் உச்சகட்டம், அவளுக்கு எழுத வராத எழுத்தின் பெயரை வைத்தே அவளைக் கூப்பிடுமாறு மற்ற மாணவர்களுக்கு ஆசிரியை பிறப்பிக்கும் உத்தரவு. மலை வாழை அல்லவோ கல்வி, அதை வாயார உண்ணுவாய் போ என் புதல்வி என்று பாவேந்தர் சொன்ன கல்வி இதுவா?

    இளம் வயதிலேயே அந்தக் குழந்தைக்கு தங்க மீன்கள் பற்றிய கனவை ஊட்டிவிட்டிருக்கிறார் தந்தை. அது பின்னர் கல்விக்கான குறியீடாக இறுதிக் காட்சியில் குழந்தையின் கட்டுரை வாசகங்கள் மூலம் அடையாள படுத்தப் படுகிறது. எங்கே நீச்சல் தெரியாத குழந்தை, தகப்பனும் அருகில் இராத அந்த சோக நாட்களில் தனது எதிர்பார்ப்புகள் எல்லாம் நொறுங்கிய தருணமொன்றில் தங்க மீன்களைத் தேடி ஆழமான குளத்திற்குள் சென்றடைந்து விடுவாளோ என்ற பதைபதைப்பை முதல் காட்சியிலேயே பார்வையாளரின் புத்தியில் விதைத்துவிடுகிறார் இயக்குநர்.

    ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் இப்படியாகத் தத்தமது தங்க மீன்களைத் தேடப் போய் தாங்களே தங்க மீனாக அந்தந்த குடும்பங்களின் வீட்டுச் சுவர்களில் படமாகி விட்டார்கள் என்ற புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியானவை. தமிழ் வழிக் கல்வி பயின்று கல்லூரியில் ஆங்கிலம் மூலம் கற்க வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்ள இயலாது தூக்கில் தொங்கினார் ஒரு மாணவி. தேர்வில் தோல்வி பயம் காரணமாக முடிவுகள் வருவதற்கு ஒரு நாள் முன்பு விஷம் குடித்தவர்களில் சிலர் அடுத்த நாள் தேர்ச்சி பெற்ற செய்தி வந்திருந்தது. வேலைக்கான கேம்பஸ் தேர்வில் முதல் பட்டியலில் பெயரில்லை என்பதற்காக மிக அண்மையில் ஒரு மாணவர் ரயிலின் குறுக்கே விழுந்து தம்மை மாய்த்துக் கொண்டார்.

    சமச்சீர் கல்வியை வரவிடாது மெட்ரிகுலேஷன் கல்வி வள்ளல்கள் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதை தமிழக கல்விச் சூழல் பார்த்தது. தாய்மொழியில் படிப்பது அவமானம், ஆங்கிலமே அறிவின் வெளிச்சம் என்று பெற்றோரை மூளைச் சலவை செய்திருக்கும் மிகப் பெரிய வர்த்தகம் இன்றைய கல்விமுறை. ஈவிரக்கமற்ற தண்டனை கொட்டடிகளாக (ஹிட்லரின் கான்சென்ட்ரேஷன் கேம்ப்) உருவாக்கி வளர்த்தெடுக்கப்படும் போர்டிங் பள்ளிகள் இன்று சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதன் காரணம் என்ன, உலகமயத்தின் சந்தைமயம், போட்டி உலகம், இருளாக சித்தரிக்கப் படும் எதிர்காலத்தின் மீதான அச்சம் ! உரையாடல்கள் அற்ற வெளியாக நமது வீடுகள் இருப்பதை கல்யாணியின் வீடும் காட்டுகிறது.

    வோடஃபோன் நிறுவன விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டி தனக்கு வேண்டும் என்று கேட்கும் செல்லம்மாவுக்கு அதன் விலை தெரியாது. வாக்கு கொடுத்துவிடும் தந்தை கல்யாணிக்கும் தெரியாது. அசாத்திய கற்பனையாகத் தோன்றும் ஒரு முயற்சியை மேற்கொண்டு அந்த நாய்க்குட்டியை வாங்கவும் செய்துவிடுகிறான் கல்யாணி. எனக்கென்னவோ, வெவ்வேறு முறையில் தங்களைப் பணயம் வைத்தும், வருத்திக் கொண்டும், வெளியே சொல்ல இயலாத இன்னல்களை உட்கொண்டும் தங்களது குழந்தைகளின் கல்விக்காக அலைவுறும் பெற்றோர் குறித்த குறியீடாக அது பிறகு யோசிக்கையில் பட்டது.

    நடுங்க வைக்கும் ஸ்டெல்லா மிஸ் சித்தரிப்புக்கு நேரெதிராக, அரவணைக்கும் ஆசிரியையாக வரும் எவிட்டா நேரடியாக இடம் பெறும் காட்சிகள் மிக மிகக் குறைவு என்றாலும் பார்வையாளருக்கு எளிதில் விளங்கிவிடும் பாத்திரமாகி விடுகிறார். தனியார் நிறுவனத்தில் தத்தளிக்கும் அந்தத் தங்க மீன் பிறகு அரசு பள்ளியில் உற்சாக நீச்சல் அடிப்பதோடு, செல்லம்மாவின் கை தொடுதலுக்கு அருகே காத்திருக்கவும் செய்கிறது.

    படத்தில் யாரும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை என்ற தத்துவம் எதார்த்த உலகை மதிப்போடு அணுகத் தூண்டுகிறது. நல்ல தாத்தா ஆனா அவரு கெட்ட அப்பா என்று தனது பாட்டனைக் காண்கிறாள் செல்லம்மா. தொழிலாளிக்கு பாக்கி வைக்கும் சிறு தொழில் உடைமையாளர் உள்ளபடியே அவரும் நலிவுற்ற தொழிலில் நசிந்து கொண்டிருப்பவராக இருக்கிறார். வெளிநாட்டில் வசதியான வாழ்க்கையில் இருக்கும் தனது மகள் கோபித்துக் கொண்டுவிடக் கூடாதென ஏழை மகன் வயிற்று பேத்தியிடம் கெட்டவளாக நடந்து கொள்ளும் பாட்டி, தன தவறுக்கு வெட்கமுறும் நல்லவளாகவும் இருக்கவே செய்கிறாள். தன்னை மிக கேவலமாக நடத்தும் மாமியாரே ஆனாலும், தன்னை மதிக்கும் கணவனின் கடுமையான வற்புறுத்தலுக்குச் செவி மடுக்காது இருந்துவிடும் மனைவி, அவன் வீட்டைவிட்டு வெளியேறிப் போன பிறகும் குழந்தைக்காக எல்லாம் பொறுத்துப் போகிறவளாக இருக்க வேண்டியிருக்கிறது.

    ஸ்டெல்லா மிஸ் போன்றவர்கள் ஏன் குழந்தைகளிடம் அப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை, பின்னர் எவிட்டா, “நிறைய மாணவர்கள், அதிகமான வேலை பளு, குறைவான சம்பளம்…. அவங்களும் பாவம் என்ன செய்வாங்க” என்று சொல்லும்போது நிஜ வில்லன்கள் யார் என்று சிந்திக்கச் செய்துவிடுகிறது. தனது மகன் நல்லவன், அவனை திரும்ப வீட்டுக்கு வரச் சொல்லுங்களேன் என்று வேண்டும் தனது மனைவியிடம், கல்யாணியின் அப்பா, அவன் ரொம்பவும் நல்லவன், கொஞ்சம் கெட்டவனாத் தான் திரும்பட்டுமே என்று சொல்லும் இடம் நிறைய கேள்விகளுக்கு விடையாகிறது. புதிய கேள்விகளை முன்வைக்கிறது.

    சம கால சமூக சூழல் மனிதர்களை எப்படி புரட்டிப் போடுகிறது, உணர்வுகளை எப்படி கொச்சை செய்கிறது, உறவுகளை எவ்விதம் சின்னாபின்னமாக்கிச் சீரழிக்கிறது என்பதை ராம் பல விதமாக நுட்பமாக காட்சிப் படுத்துகிறார்.

    தனது குழந்தை பள்ளியில் திருடி இருக்கிறாள் என்று சொல்லும் மனைவியிடம், கல்யாணி, “அந்த ஸ்கூலே திருட்டு ஸ்கூல் தான் ” என்று சொல்லும் இடம். காசு இல்லாதவங்க பாக்காதீங்க என்று விளம்பரம் போடும் போது சொல்றாங்களா என்று குமுறும் இடம். ஒரு கேள்விக்கு இரண்டு, மூன்று, பத்து பதில் வைத்திருக்கும் ஒரு சிறுமியை எப்படி முட்டாள் என்று சொல்ல முடியும் என்று செல்லம்மா கேட்கும் இடம் என்று பளீர் வசனப் பொறிகள் படத்தில் பொருத்தமாக ஒலிப்பது கவனிக்க வேண்டியது.

    பொண்ணுக்கு மட்டும் தான் கால் பிடிச்சு விடுவீங்களா என்று கொஞ்சலோடு கேட்கும் போதும், இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே காத்திருந்து என்னை எங்காவது அழைத்துச் சென்று கொஞ்சம் பேச மாட்டீர்களா என்று ஏங்கும் போதும் சமதையாக சித்தரிக்கப் படும் கல்யாணியின் மனைவி பாத்திரம், முடிவெடுக்கும் எந்த விஷயத்திலும் தலையிட முடியாதவளாக காட்டப்படுவதும், கல்யாணி மனைவியையும், பெண் குழந்தையையும் ‘டி’ போட்டே பேசுவதும் நெருடலாக எனக்குப் பட்டவை. அது கல்யாணியின் பாத்திர வார்ப்பு அப்படி என்றாலும். பெண் குழந்தைக்கான கல்விக்காக எதையும் செய்யப் புறப்படும் ஒரு தந்தை குடும்ப விஷயத்தில் தனது அடுத்த தலைமுறைக்கு இது விஷயத்தில் சொல்ல ஏதும் வைத்திருக்கக் கூடாதா என்ன?

    படிப்பில் மந்தமாக இருப்பதாகப் பேசப்படும் தனது பெண் குழந்தை காலச் சுழற்சியில் பெரிய மனுஷியாக வேறு ஆகிவிடுவாளோ என்று பதறும் தாயின் சித்திரம் போன்ற பல நுண்மையான காட்சிப்படுத்தல் உள்ள படத்தில் இந்த எதிர்பார்ப்பு கூடுவதைத் தவிர்க்க முடிவதில்லை…

    ஆனந்த விகடனில் கடந்த பல வாரங்களாக மறக்கவே நினைக்கிறேன் தொடரில் வெவ்வேறு நிகழ்வுகளை எழுதிக் கொண்டுவரும் மாரி செல்வராஜ் பெயரை இந்தப் படத்தில் உதவி இயக்கம் என டைட்டிலில் ஆர்வத்தோடு பார்த்து மகிழ்ந்தேன். “பூ” ராமு, ரோகிணி என மிகையற்ற நடிப்பை கலைஞர்கள் நல்கி இருப்பது படத்தின் வலு. செல்லம்மாவின் தோழியான ‘பூரி’ ரசிகை அசத்தல் நடிப்பு. மெட்ரிகுலேஷன் பள்ளியின் பலவிதமான கொடுமைகள், அபத்தங்களை பரிகசிக்கும் நையாண்டிப் பாடல் இடம் பெற்றிருக்கிறது. இயற்கையோடு ஒன்றி நகரும் சிறப்பான ஒளிப்பதிவும், ரயில் சத்தத்தையும், படகுத் துறை சங்கு ஒலியையும் காட்சிப்படுத்தலுக்கு ஏற்ப அமைந்திருக்கும் பின்னணி இசையும் பேசப்பட வேண்டியவை.

    படத்தின் தொடக்கத்தில் வண்ணதாசன், கே வி ஷைலஜா, பவா செல்லதுரை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் நிறைவில், தன்னலமற்று தன்னார்வத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்கள் யாவருக்கும் அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது.

    தங்க மீன்கள், உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு பார்க்க இயலாத கனமிக்க அனுபவமாகத் தான் எனக்கு இருந்தது. அதிலிருந்து தப்பி ஓட இயலாதபடிக்கு. ‘ஆனந்த யாழிசை மீட்டுகிறாள்..’ என்ற அருமையான நா முத்துக்குமார் பாடலின் இதமான இசையோட்டத்தினை அப்பா-மகள் அன்பு பரிமாற்றத்தின் கட்டுமானத்திற்குச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார் ராம். வானில் இருந்து நிலவுப் பந்தை எடுத்து விளையாடும் தந்தையும், மகளும் மறுபடி வெண்ணிலவை உரிய இடத்தில் திருப்பி வைத்துவிட்டு அடுத்த ஆட்டத்திற்குச் செல்கின்றனர். அதன் ஒளியில் ஒளிரும் அவர்களது மகிழ்ச்சியான முகங்கள் எப்போதும் அப்படி இருக்கும் ஒரு காலத்திற்கான கரைதலே இந்தப் படம் என்று தான் தோன்றுகிறது.

    *******

    படத்திற்கு நன்றி:

    http://idiotirosh.blogspot.in/2013/05/blog-post.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    kamaladevi_aravindan_silk_sபொதுவாக பூக்கள் கொடுத்து வரவேற்பது என்பது தமிழரின் பண்பாடு. பூக்களின் விதம்விதமான பலன்களை நன்றாக அறிந்தவர்கள் சங்ககால தமிழர்கள். காதலியை வர்ணிப்பதில் என்றில்லாமல், வாசனைக்காகவும், பெண்களின் கூந்தலின் அலங்கரிப்பதும், இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுவதற்காகவும் மட்டுமல்லாமல் ஆண்களின் கழுத்துக்கும் மரியாதைக்குரியதாய் அலங்கரிக்க பூக்கள் பயன்பட்டது. ( கூந்தல் மணத்துக்குக் காரணம் ஒரு வாசனைப்பூவாக இருக்குமா என்பதாக இறைவனுக்கும் மனிதனுக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தது தமிழகத்தில் மட்டும்தான்) இப்படித்தான் என்னுடைய வம்சதாரா கதையில் சபையில் ஒரு பூச்செண்டு ஒன்று ஒரு நாட்டின் மன்னரின் முடிசூட்டுவிழாவின் போது கொடுத்ததாக எழுதியதை மிகவும் சிலாகித்து எழுதினார் டாக்டர் முனைவர் பிரேமா நந்தகுமார். பூவோடு இறைவனை அர்ச்சிக்கப்படுவது பூஜை என்பது தமிழிலிருந்துதான் ‘பூ-செய்’ என்பதாக வடமொழிக்கே சென்றிருக்கவேண்டும் என்று ஆங்கிலேயர் ஜி.ஸ்வெல், குறிப்பிட்டிருப்பதை ஆந்திர பல்கலைக்கழக தெலுங்கரான பேராசிரியர் சுந்தரம் அவர்கள் தனது ‘சிம்மாசலம்’ புத்தகத்தில் எழுதியுள்ளதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இப்படியாகப் புகழ்பெற்ற இந்த வண்ண வண்ணப் பூக்கள் நிரப்பப்பட்ட பூங்கொத்தை அவ்வப்போது ’விசுவலாக’ இணையத்தில் கொடுத்து ஊக்குவித்துவந்த திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்களைப் பற்றிதான் இந்தப் பதிவு.

    வல்லமையில் வாரம் ஒரு வல்லமையாளர் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டபோது இதற்கு முன்னோடியாக கமலம் எழுதிய கட்டுரைகள்தான் நினைவுக்கு வந்தன என்பதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். கமலம் இரண்டு திராவிட பாஷைகளில் சிறந்து விளங்கும் மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இரண்டு பாஷைகளில் இலக்கிய திறமை என்பது இரண்டு விதமாக நோக்கவேண்டும். சான்றோர் பலர் வடமொழி-தமிழ் என்பதிலும், ஆங்கிலம்-தமிழ் என்பதிலும் இலக்கியத் திறமை உள்ளவர்களாக இருந்தார்கள். இவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இரண்டு திராவிட பாஷை இலக்கியங்களில் சமமாக திறமை பெற்று விளங்குவோர் வெகு சிலரே.. அந்த வெகு சிலரில் ஒருவர் கமலம் என்பது அவரது இலக்கிய திறமைக்கு முக்கியமான சான்றுதான். ஏனெனில் கமலம் இந்த இரு மொழிகள் (தமிழ், மலையாளம்) தோன்றிய இடத்திலிருந்து பிறந்து வளர்ந்தவர் இல்லை. மலேஷிய நாட்டில் வளர்ந்து கல்வி பயின்று சிங்கையில் குடியேறியவர் என்று பார்க்கும்போது இவர் திறமையின் ஒளி இன்னும் அதிகமாகப் பளிச்சிடுவதைக் காணலாம்

    எண்பதுகளில் விஸ்கி பாட்டிலைப் பேயாகப் பாவித்து சுவாரஸியமான ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை எடுத்திருந்தார்கள். பல நாள் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவன் நான். அதே போல கமலம் சமீபத்தில் எழுதிய கதை ஒன்று இன்னமும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு கண்ணாடி (டிரெஸ்ஸிங் டேபிள்) பேய் ஒன்றைப் பற்றிய வித்தியாசமான கற்பனைக் கதை. . இந்த வித்தியாசமான கற்பனைகள்தான் ஒவ்வொரு எழுத்தாளரையும் காலம் கடந்து வாழச் செய்கிறது.

    இன்று (15 செப்டெம்பர்) கமலம் அவர்கள் சிங்கையில் தமிழ் இலக்கியச் சேவைக்காக பாரதியார்-பாரதிதாசன் விருது பெறுகிறார்கள். இதே முகூர்த்தத்தில் நம் ‘இந்த வார வல்லமையாளராக’வும் அவருக்கு கௌரவம் செய்து பெருமை கொள்கிறோம். சிங்கை சென்றபோது ஒரு மதிய விருந்தில் மிக எளிமையான, கள்ளங்கபடமற்ற, படபடப்பான கமலத்தைக் கண்டு மகிழ்ந்தவன்.. பூச்செண்டு கொடுக்கும் மனது பூவைப் போன்று மென்மையானதாகத்தான் இருக்கும் என்றும் நினைத்தவன். இப்படிப்பட்ட சாகித்ய வல்லுநர்கள் உலகெங்கிலும் கவனிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தையும் தெரிவித்தவன். இவரைப் பற்றியும் இவரது சாகித்யத்தைப் பற்றியும் நிறைய எழுதலாம், காலம் மறுபடி வரும்போது எழுதுவோம். கமலத்துக்கு அன்பான வாழ்த்துகள்..

    கடைசி பாரா: திரு ஆர்.எஸ். மணி அவர்களின் பாடலிலிருந்து

    சுற்றம் என்ன, சூழல் என்ன,

    நிலையானதாகுமோ?

    சொந்தம் என்ன, பந்தம் என்ன

    செல்லாமலே நில்லுமோ?

    ஒருநாள் இன்பம், ஒருநாள் துன்பம்,

    மாறாதே இக்கோலம்

     www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : பெர்காமோன் கோயில் – பெர்காமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி (6)

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இஸ்லாமிய கலைப்பொருட்கள் கண்காட்சி கூடத்திலிருந்து மீண்டும் உங்களை பெர்காமான் கோயில் பிரகாரப் பகுதிக்கு அழைத்து வருகின்றேன். இந்த அருங்காட்சியகத்திலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சேகரிப்பாகவும் உலகப் பிரசித்தி பெற்ற அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புக்களின் வரிசையில் இடம்பிடிப்பதுமாகிய பெர்காமோன் கோயிலைப் பற்றிச் சொல்லாமல் அடுத்த அருங்காட்சியகத்திற்குச் செல்வதற்கு எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.  ஆக இந்த அருங்காட்சியகத்திற்குப் பெயராகவும் அமைந்துள்ள இந்தக் கோயிலைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் காண்போமே.

     

    பெர்காமோன் கோயில் இடப்பக்க பிரகாரமும் அதில் உள்ள சிற்பங்களும் (ஆகஸ்ட் 2013)
    பெர்காமோன் கோயில் இடப்பக்க பிரகாரமும் அதில் உள்ள சிற்பங்களும் (ஆகஸ்ட் 2013)

    1878ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் கார்ல் ஹூமன் பெர்காமோன் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டார்.  இந்த ஆய்வு 1888 வரை தொடர்ந்தது.  அது போது கண்டெடுக்கப்பட்ட கோயில் சுவர்கள்,  தூண்களோடு அமைந்த வாயில்புறச் சுவரில் அலங்கரித்திருந்த சிற்பங்கள் என அனைத்தும் சேகரிக்கப்பட்டன.  அப்போதைய ஓட்டோமான் அரசிடம் (துருக்கி) கலந்து பேசி இப்பொருட்களை ஜெர்மனிக்குச் சொந்தமாக்கி பெர்லினுக்கு அவை கொண்டு வரப்பட்டன.  முதலில் போட அருங்காட்சியகத்தில் பாதுகாக்கபப்ட்டு பின்னர் பெர்காமோன் அருங்காட்சியகம் 1932ம் ஆண்டில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்ட போது இங்கு கொண்டுவரப்பட்டு அன்றிலிருந்து இந்த அருங்காட்சியகத்திலேயே முதல் அறையில் இக்கோயில் பகுதி வீற்றிருக்கின்றது.

    ஏறக்குறைய கி.மு 2ம் நூற்றாண்டு கோயிலாகக் கருதப்படும் இதனைக் கட்டியவர் பெர்காமோம் அரசர் 2ம் ஈமுனெஸ்(Eumenes II) .  இங்கிருப்பது முழுமையான கோயிலா என்றால் இல்லை என்பதே விடையாகின்றது. கோயிலின் பகுதிகளில் பெறும்பாலானவை இன்னமும் வடமேற்கு துருக்கியில் பெர்காமோம் நகரில் இன்றும் உடைந்து சிதிலமடைந்த நிலையில் காணக்கிடைக்கின்றது.  இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பகுதி 35.64 மீ அகலமும் 33.4 மீ ஆழமும் உடையது.  முன்பக்க படிக்கட்டு மட்டுமே 20 மீ அகலம் கொண்டது.

    பெர்காமோன் கோயில் சிற்பங்கள் (ஆகஸ்ட் 2013)
    பெர்காமோன் கோயில் சிற்பங்கள் (ஆகஸ்ட் 2013)

    இக்கோயிலின் நீண்ட சுவரில் 113மீ நீளத்திற்கு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கோயிற் சுவரில் பதிக்கப்பட்டிருந்த சிற்பங்கள் உடைந்த நிலையில் இருந்தாலும் அவை சொல்லும் கதையை விளக்கங்களுடன் வாசிக்கும் பொழுது நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தச் சிற்பங்களில் பெரும்பாலானவை அரக்கர்களும் அவர்களை எதிர்த்து போரிடும் கடவுளர்களுமாக சிற்பி வடித்திருக்கின்றார். அரக்கர் வாழும் சூழலாக பெரும் நாகங்களுடனும் பல கைகள் கொண்ட விரிந்த மரங்களின் பின்னனியிலும் இருப்பது போல இச்சித்திரங்கள் இருக்கின்றன. அரக்கர்களின் கொடூரமான பார்வையும் பாம்பின் வடிவிலமைந்த கீழுடல் பகுதியும் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும் தன்மையுடயவை.

     

    பெர்காமோன் கோயில் சிற்பங்கள். அரக்கனும் அவனைக் கொல்லும் கடவுள் ஹீராவும் (ஆகஸ்ட் 2013)
    பெர்காமோன் கோயில் சிற்பங்கள். அரக்கனும் அவனைக் கொல்லும் கடவுள் ஹீராவும் (ஆகஸ்ட் 2013)

    கடவுளர்கள் எனும் போது எத்தகைய கடவுளர்களின் வழிபாடு அக்காலத்தில் இப்பகுதியில் வழக்கில் இருந்தது என்பது கேள்வியாக பலருக்கு எழலாம். இக்கோயில் கட்டப்பட்ட காலம் கி.மு. 2 அல்லது அதற்கு சற்றே முந்திய காலக்கட்டம்.  அக்காலகட்டத்தில் இப்போது இப்பகுதியில் விரிவாக வழக்கில் இருக்கும் இஸ்லாம் மதமோ அல்லது கிறிஸ்துவமோ தோன்றாத காலகட்டமது.  பழமையான பேகன் வழிபாடும் கிரேக்க தெய்வங்களின் வழிபாடுமே வழக்கில் இருந்தன.  அந்த வகையில் இங்கு கடவுளர்களாக அமைந்திருப்போர் கிரேக்க கடவுளர்களாவர்.  ஒலிம்பிக் கடவுளர் (Olympian Gods)  என பொதுப்பெயரில் அழைக்கப்படும் ஸீயூஸ், அப்போலோ, ஹீரா, பொஸைடன்  போன்றவர்களை இப்படியலில் குறிப்பிடலாம்.  இந்த ஒலிம்பிக் கடவுளர்களில் ஆண் பெண் இருபாலரும் உண்டு.  இக்கடவுளர்களின் தலைவர் ஸீயூஸ்.  ஸீயூஸ் என்பது கிரேக்க மொழிச் சொல். பொதுவாக தற்சமயம் ரோமானியப் பெயர்களே பரவலாகி விட்டமையால் ரோமன் மொழியின் ஜூப்பிட்டர் என அழைக்கப்படுபவரே இந்தக் கிரேக்க ஸீயூஸ் கடவுள்.  இவர் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என அறியப்படுபவர்.

    பெர்காமோன் நகர் கி.மு.1ம் நூற்றாண்டு கால கட்டத்தில் தொடர்ச்சியாக பல போர்களைச் சந்தித்தது.  பல அழிவுகள் இப்பகுதியில் தொடர்ந்து நிகழ்ந்தன. இதனால் இக்கோயில் சாத்தான் குடியிருக்கும் கோயில் என்று அக்காலத்தில் குறிப்பிடப்பட்டது.   இக்கோயில் பேகன் வழிபாட்டு மையமாகவும் அமைந்திருந்தது என்பதை மறுக்கலாகாது. இப்பகுதியில் பிற்காலத்தில் செழித்து நிலைத்த இஸ்லாமும் கிறிஸ்துவமும் பேகன் வழிபாடுகளை அவை உருவ வழிபாடுகளாக அமைந்தமையால் சாத்தானின் வழிபாடுகள் என்றும் கூறுவது வழக்கில் உருவானது. இதுவும் இக்கோயிலை பிற்காலத்தில் சாத்தான் வாழும் இடம் எனக் குறிப்பிடுவதற்குக் காரணமாகியது என நான் கருதுகின்றேன்.

    1933ல் அடோல்வ் ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் அவரது கட்சியின் தலைமையகத்தை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது.  1932ல் பெர்காமோன் அருங்காட்சியத்தில் இக்கோயிலைக் கண்ட பொழுதில் அவருக்கு இக்கோயிலில் ஸெப்பலின் ட்ரிபியூனின் மேல் இருந்த மோகத்தை அறிந்த ஆர்க்கிடெக்ட் ஆல்பெர்ட் ஸ்ப்பியர் (Albert Speer)  ஸெப்பலின் ட்ரிபியூனின் வடிவத்தில் தலைமையகத்தின் மையப்பகுதியை வடிவமைத்தார்.  இம்மண்டபம் 1934 முதல் 1937 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டு நாஸி கட்சியின் தலைமையகம் இவ்விடத்திலேயே இயங்கி வர ஆரம்பித்தது.  நாஸி கட்சியின் பல குறிப்பிடத்தக்க மாநாடுகள் இங்கு நிகழ்ந்தன.

    ஸெப்பலின் ட்ரிபியூன் (1942). நன்றி. ஜெர்மனி தேசிய ஆர்க்கைவ்
    ஸெப்பலின் ட்ரிபியூன் (1942).
    நன்றி. ஜெர்மனி தேசிய ஆர்க்கைவ்

    ஜெர்மனியின் ஆட்சிபுரிந்த தலைமை பீடத்தில் இருந்தவர்களிலேயே அடோல்வ் ஹிட்லர் ஒருவரே சாத்தானின் குணம் கொண்ட ஒருவர் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.  இவரது ஆட்சியில் இவரது சித்தாந்தத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் ஒரு புறமென்றால் இவரது ஆட்சியை அழிக்கத் தோன்றிய 2ம் உலகப்போரால் இன்னும் மில்லியன் கணக்கான உயிர் சேதங்கள் நிகழ்ந்தன.  சாத்தானை அழிக்கும் வகையில் அமைந்த இக்கோயிலை 2ம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் சாத்தானின் நிலையை ஜெர்மானியின் பெர்லின் நகர மக்களுக்கு அளித்த ரஷ்யப் படைகள் இந்த பெர்காமோன் கோயில் பிரகாரப்பகுதியைத் தங்கள் சோவியத் ரஷ்யாவின் லெனிங்க்ராட்(Leningrad)  நகருக்கு 1948ம் ஆண்டு கொண்டு சென்றன.  மீண்டும் இந்தக் கோயில் 1958ம் ஆண்டில் பெர்காமோன் அருங்காட்சியகத்துக்கே திரும்பியது.

    எத்தனை பிரயாணங்களை இந்தக் கோயிற் பகுதி சந்தித்திருக்கின்றது பாருங்கள்.  இக்கோயிலைக் கட்டிய ஈமுனெஸ் கூட இக்கோயில் இப்படி ஐரோப்பிய,  ரஷியப் பயணம் செய்யும் என சற்றும் நினைத்திருக்க மாட்டார். 🙂

    பெர்காமோன் கோயிலின் வெண்மையான பளிங்குத் தூண்களும் வெண்பளிங்குச் சிற்பங்களும் வரலாற்றுப் பிரியர்களின் மனதைக் கொள்ளைக் கொள்வன.  இப்பெரிய கோயிலுக்கென பெர்காமோன் அருங்காட்சியகம் மிகப் பெரிய மண்டபப்பகுதியையே ஒதுக்கியிருக்கின்றது.  இங்கு அமர்ந்து ஓவ்வொரு சிற்பங்களையும் பார்த்து ரசித்து அதன் விளக்கங்களைச் செவிமடுத்து குறிப்பெழுதிக் கொள்ள குறைந்தபட்ஷம் ஒன்றரை மணி நேரம் தேவைப்படும்.  அவசரமாக இக்கோயிலைப் பார்த்து அருங்காட்சியகத்தைப் பார்த்துச் செல்ல விரும்புபவர்கள் கூட ஆக மொத்தம் இந்த அருங்காட்சியகத்திற்கு 2 மணி நேரங்களைக் கட்டாயமாக ஒதுக்கித் தான் ஆக வேண்டும்.

    பெர்காமோன் கோயிலைப் பற்றி இப்பதிவில் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.  இவ்வருங்காட்சியகத்தில் இந்தக் கோயில் இருக்கும் பகுதிக்குப் பின்புறம் கிரேக்க காவிய நாயகன் டெலிஃபஸ் கதையைக் கூறும் கோயிலும், கோயிற்சிற்பங்களும் அருமையாக காட்சிக்கு ஒரு முழு நீள அறையில் வைக்கப்பட்டிருக்கின்றன.  இக்கதையைப் பற்றி சொல்ல எனக்கு விருப்பமென்றாலும் பிரிதொரு சமயம் வேறொரு கட்டுரையில் இதனைப் பற்றி எழுதுகிறேன்.

     

    பெர்காமோன் கோயிலின் உள்ளே (ஆகஸ்ட் 2013)
    பெர்காமோன் கோயிலின் உள்ளே (ஆகஸ்ட் 2013)

    பெர்காமோன் அருங்காட்சியகத்தையும் அதன் உள்ளே பாதுகாக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்சிப்பொருட்களையும்  உங்களுக்கு ஓரளவு  அறிமுகம் செய்து விட்டேன்.  என்னைப் பொருத்த அளவில் நான் நேரில் பார்த்து என் மனதில் நிற்கும் அருங்காட்சியகங்களின் வரிசையில் முதல் 10 அருங்காட்சியகங்களில் இந்தப் பெர்காமோன் அருங்காட்சியகமும் இடம் பிடிக்கின்றது.

    சரி.  ஜெர்மனியின் பெர்லினில் ஏனைய அருங்காட்சியகங்களுக்கு நாம் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் வேறொரு நாட்டில் வேறொரு ஊரில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா?

    அடுத்த திங்கள் நாம் செல்வதற்கு முன்னர் எங்கு செல்லவிருக்கின்றோம் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன்.  🙂

    தொடரும்….

    சுபா

     

    — 
    Suba Tremmel
    http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com – Suba’s Musings
    http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
    http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி
    Share
  • அமைச்சர் கோவிந்த தீட்சதர்.

    தஞ்சை வெ.கோபாலன்

    Govinda Dikshidarதஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரின் கடைசி நாட்கள் தொடங்கி அச்சுதப்ப நாயக்கர் காலம் முழுவதும் இருந்து பிறகு ரகுநாத நாயக்கர் காலம் வரை அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் இருந்து வழிகாட்டி, நல்ல பல காரியங்களை மக்கள் நலனுக்காக செய்தவர் கோவிந்த தீட்சதர். சோழ நாட்டின் தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவர் பெயரை இன்றும் சொல்லக்கூடிய எத்தனை இடங்கள்? ஐயன் கடைத் தெரு, ஐயன்பேட்டை, ஐயன் வாய்க்கால், ஐயன் குளம் இதுபோன்ற இடங்களில் ஐயன் என்பது இவரைக் குறிக்கும் சொல். இவர் அந்த காலத்தில் செய்த செயற்கரிய சாதனைகளின் சரித்திரச் சான்றுகள் இவை.

    ஒரு மன்னன் தன் குடிமக்களுக்கு என்னவெல்லாம் செய்து தரவேண்டும், தான் சுகபோகங்களோடு வாழ்க்கை நடத்துவதும், எதிரிகளோடு போர் புரிந்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிடுவதும், தன் மக்கள், தன் சுற்றம் இவர்களின் நல்வாழ்வை மட்டும் பேணிப் பாதுகாப்பது மட்டும் ஆட்சி அல்ல. பின் என்ன செய்ய வேண்டும்? மக்கள் பயன்பாட்டுக்கான தர்ம காரியங்களைச் செய்வது, கல்விக்காக, உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக, ஒரு இடம் விட்டு வேறொரு இடம் பயணம் செய்ய நல்ல சாலைகளை அமைப்பதற்காக, நீர் நிலைகளை நல்ல முறையில் பேணி பாதுகாக்கவும், புதிய நீர் நிலைகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுத்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது ஒரு அரசின் தலையாய பணி அல்லவா? அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் செய்து தந்தவர் இந்த கன்னடத்து பிராமண அமைச்சர். எழுபத்தைந்து ஆண்டுகள் இவர் அமைச்சராக மூன்று மன்னர்கள் காலத்தில் இருந்து தொண்டாற்றியவர் கோவிந்த தீட்சதர்.

    இதில் என்ன புதுமை இருக்கிறது. வரலாற்றுப் பாடங்களைப் படிக்கும்போது எல்லா மன்னர்களுமே செய்த பணிகள் எவை என்பதைக் குறிப்பிடுகையில், அவர்கள்Mahamaham tank சாலைகளைப் போட்டார், வழிநெடுக மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார் என்றுதானே எழுதுகிறார்கள் என்று சொல்வதும் புரிகிறது. ஆனால் இவர் சாதனை அவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல செயல்பாடுகள் இவர் செய்திருக்கும் சாதனை. கும்பகோணம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது மகாமகம். கும்பேஸ்வரன் கோயிலின் இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த விழாவில் மக்கள் மூழ்கி எழும் மகாமகக் குளத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பீர்கள். அந்த மாபெரும் குளத்தையும், சுற்றிலும் படிக்கட்டுகளையும், அதனைச் சுற்றி பதினாறு சிவலிங்கங்கள் அதற்குரிய மண்டபங்கள் இவை அத்தனையையும் கட்டிமுடித்தவர் இந்த கோவிந்த தீட்சதர்.

    இவரது இந்த சாதனையைப் பாராட்டி நாயக்க மன்னர் ஒருவர் இவருக்கு துலாபாரம் செய்து தராசில் ஒரு தட்டில் இவரை உட்காரவைத்து மற்றொரு தட்டில் பொன்னை அள்ளிக் கொட்டி இவருக்கு அளித்தாராம். அந்த சிலையை மகாமகக் குளக் கரையிலுள்ள ஒரு மண்டபத்தில் இப்போதும் பார்க்கலாம்.

    Patteeswaram templeகும்பகோணம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பது, குறிப்பாக பெரிய கடைத்தெருவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது இராமசாமி கோயில். இதனைக் கட்டியவர் கோவிந்த தீட்சதர். இந்த கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா? இங்கு இராமாயணக் காட்சிகள் அனைத்தையும் பிரகாரச் சுவற்றில் வண்ணத்தில் தீட்டிவைத்தது இவரது சாதனை. கும்பகோணத்தில் மங்களாம்பிகா அம்மன் கோயில், பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரர் கோயில், பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆலயம் இவைகள் அனைத்துமே இவரது அர்ப்பணிப்புகள்.

    புதிதாக உருவாக்கிய கோயில்கள் தவிர, மிகப் பழமையான சில கோயில்களை இவர் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார். அவை விருத்தாச்சலம், திருவண்ணாமலை, சிதம்பரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள புகழ்மிக்க ஆலயங்கள்.

    வரலாற்றில் புகழ்பெற்ற எந்தவொரு நகரமும் ஒரு நதிக்கரையில் அமைந்ததாக இருக்கும். தஞ்சாவூர் பழம்பெரும் நகரமாக இருந்தபோதும், காவிரிக் கரையில் அது இல்லை; வடவாறு எனும் சிறிய ஆற்றின் கரையில் இருக்கிறது. அதனால்தான் நாயக்கர் காலத்திலும், பின்னர் வந்த மராத்தியர் காலத்திலும் தஞ்சை அரசர்களின் ஆளுமைக்குள் இருந்த கலைஞர்கள், வேத விற்பன்னர்கள், இசைக் கலைஞர்கள் போன்றோர் இங்கிருந்து சிறிது தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருவையாற்றில் குடியிருந்திருக்கின்றனர். அப்படி தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்வதானால் அவர்கள் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என ஐந்து ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆற்றையும் கடந்து செல்ல படகுகளை நம்பியிருக்க முடியுமா? இவற்றின் மீது பாலங்களைக் கட்டியதும் இவர்கள் காலத்தில்தான். இப்பொழுதுதான் இவற்றில் சில பாலங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டிருக்கின்றன, குறிப்பாக திருவையாறு காவிரிப் பாலம், குடமுருட்டி பாலம், வெண்ணாற்று பாலம், வெட்டாறு பாலம் இவை புதிதாகக் கட்டப்பட்டு விட்டன.

    காவிரி ஒரு புனித நதி. கரையெங்கும் காவிரித்துப் புகழ் பரப்பி ஓடும் ஜீவநதி. அந்த காவிரியின் கரையெங்கும் படித்துறைகள். புனிதத் தலங்களில் புஷ்ய மண்டபங்கள்,Ramasamy koil அவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை என்று இன்றும் மக்கள் பயன்பாட்டுக்குக் காணக்கிடைப்பவை. மயிலாடுதுறையிலும், திருவிடைமருதூரிலும் மகாதானத் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். மகாதானம் என்றால் என்ன? வேத விற்பன்னர்களுக்குத் தானமாக வீடுகளைக் கட்டிக் கொடுத்து புகழ்மிக்கத் தலங்களான இந்த ஊர்களில் மக்கள் நன்மைக்காக யாகங்களை செய்துவர வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட வீதிகள் இவை. இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் சில ஊர்களை முழுவதும் தானமாகக் கொடுத்திருந்தார், அவை மூவலூர், தேப்பெருமநல்லூர், சூலமங்கலம், ஊத்துக்காடு, சாலியமங்கலம் முதலியவை.

    தெருக்கள் மட்டுமா இவர் மகா தானமாகக் கொடுத்தவை, அல்ல, சில ஊர்களும் கூட இதில் அடங்கும். குறிப்பாக திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ள ஈச்சங்குடி, கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள வரகூர், கந்தமங்கலம் ஆகிய ஊர்கள் இதே காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு மகா தானமாக அளிக்கப்பட்டவை. இங்கு குறிப்பிடும் ஈச்சங்குடி கிராமத்தில்தான் காஞ்சி பரமாச்சாரியார் என வழங்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமியின் தாயார் அவதரித்தார். எங்கும் எப்போதும் மக்கள் வளத்தோடும், மனமகிழ்ச்சியோடும் வாழ வேதங்கள் ஓதப்படவேண்டும் எனும் எண்ணத்தில் எங்கும் வேத கோஷம் முழங்குவதற்காக இத்தனை ஊர்களை, தெருக்களை தானமாகக் கொடுத்து வந்திருக்கிறார் கோவிந்த தீட்சதர்.

    Ramasamy koil Uthsavar“மக்கள் நலனும் வாழ்வும் அமைதியும் சதாசர்வ காலம் வேதகோஷம் முழங்குவதில்தான் இருக்கிறது” என்கிறது மனுஸ்மிருதி. வேதங்கள் ஓதப்படுவதோடு, இளைய பிரம்மச்சாரிகளுக்கு அதனைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். அதற்காக வேத பாடசாலைகளையும் அவர் உருவாக்கிவைத்தார். கும்பகோணம் ராஜா பாடசாலை என்ற அமைப்பு இன்றும் உயிர்ப்போடு இயங்கி வருவதை நாம் அறிவோம். இந்த ராஜா பாடசாலையில் ரிக், யஜுர், சாம வேதங்களோடு, ஆகம சாஸ்திரமும் பயிற்றுவிக்கப் படுகிறது. இதுபோன்றதொரு பாடசாலை இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு வேதத்தை அத்யாயனம் செய்து முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகும். இந்த பாடசாலையில் படித்துப் பின் இசைத் துறையில் பிரபலமடைந்தவருள் ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் முக்கியமானவர்.

    வேதம் படித்த ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் இசைத் துறையில் கர்நாடக சங்கீத மூவருள் ஒருவராக ஆனாரா என்று வியப்பாக இருக்கும். வியப்படைய வேண்டாம். காரணம் இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த கோவிந்த தீட்சதர் இசையிலும் வல்லவர். “அத்வைத வித்யா ஆச்சார்ய” என்ற பட்டப்பெயரோடு விளங்கிய இவர் கர்நாடக சங்கீதத்தில் “சங்கீத சுதாநிதி” எனும் அற்புதமான இசை நூலையும் இயற்றியிருக்கிறார். அதுமட்டுமல்ல “திருவையாறு புராணம்” சம்ஸ்கிருத மொழியில் இருந்ததை ஒரு புலவரைக் கொண்டு இவர் தமிழில் மொழியாக்கம் செய்யச் செய்திருக்கிறார்.

    கோவிந்த தீட்சதருடைய மூத்த மைந்தன் யக்ஞநாராயண தீட்சதர். இவர் வேத சாஸ்திரங்களில் படித்துத் தேர்ந்தவர் என்பதுகூட இவர் பல இலக்கியங்களையும் படைத்திருக்கிறார். அவை ரகுநாத நாயக்கர் மீதான “ரகுநாத பூபால விஜயம்”, “ரகுநாத விலாஸ நாடகம்”, “சாஹித்ய ரத்னாகரம்” ஆகியவை.Tirupalaithurai temple and Granary

    இவருடைய இளைய மைந்தன் வேங்கடமகி என்பார் பல இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். சம்ஸ்கிருத இலக்கியங்கள் தவிர இசைத் துறையில் “சதுர்தண்டி பிரகாசிகா” எனும் நூலையும் இயற்றியிருக்கிறார். இவருக்கும் பல மகா பண்டிதர்கள் சீடர்களாக இருந்திருக்கின்றனர்.

    காஞ்சி மகாபெரியவருடைய தாயார் பிறந்த ஊர் ஈச்சங்குடி என்று முன்பு குறிப்பிட்டோம் அல்லவா? அது தவிர 1814 முதல்1857 வரை காஞ்சி மடத்து ஆச்சாரியாராக இருந்த மற்றொரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த தீட்சதர் வம்சத்தில் பிறந்தவர். கோவிந்த தீட்சதரின் இளைய மகன் என்று குறிப்பிட்ட வேங்கடமகி என்பவரின் பேரன் இந்த ஆச்சார்யார்.

    இத்தகு பெருமைமிகு அமைச்சர் கோவிந்த தீட்சதரின் சிலை அவருடைய துணைவியார் நாகம்மாள் உருவத்துடன் கல் சிற்பமாக பட்டீஸ்வரம் ஆலயத்தில் பார்க்கலாம். ராமேஸ்வரம் கோயிலிலும் இவர்கள் சிலையை நிறுவியிருக்கிறார்கள். கும்பகோணத்தையடுத்த பட்டீஸ்வரத்தில் மிக எளிய இல்லத்தில் வாழ்ந்த இவர் யோகநித்திரையில் இருக்கும்போதே உயிர் நீத்தார்.

    இத்தகைய மதியூகியாகவும், நிர்வாகத் திறன் கொண்டவராகவும், தர்மத்தின்பால் பற்று கொண்டவராகவும் இருந்து நீண்ட நெடுங்காலம் தஞ்சை நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்து பணியாற்றிய கோவிந்த தீட்சதரால் நாயக்கர் வம்சம் புகழ்பெற்றதா, நாயக்க மன்னர்கள் கொடுத்த வாய்ப்பினால் தீட்சதர் தன் திறமையை வெளிப்படுத்தினாரா என்பது பட்டிமன்றத்துக்குரிய தலைப்பாக இருக்கும்.

    Share
  • உத்தமன் அலெக்ஸாண்டர்!…(8)

    ராமஸ்வாமி சம்பத்

    statue-alexander-great-skopje-26348088

    மாசிடோனிய மக்களும் அரசாங்க அதிகாரிகளும் மகத்தான திக்விஜயம் செய்து நாடு திரும்பிய அலெக்சாண்டருக்கு ஒரு மாபெரும் வரவேற்பினை ஏற்பாடு செய்திருந்தனர். தலைநகர் எங்கும் வெற்றித் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

    ‘மாவீரன் அலெக்சாண்டர் வாழ்க’ எனும் மக்களின் கோஷம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மாவீரன் எனும் வார்த்தையை எப்போது கேட்டாலும் கையசைத்து பெருமையாக ஏற்றுக் கொள்பவன் இப்போது அதைக்கேட்டதுமே முகம் சுளித்தான். தன் அந்தரங்க தளபதியை அழைத்து அந்த கோஷத்தை நிறுத்த ஆணையிட்டான். தளபதிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இது மாமன்னருக்குப் பிடித்த கோஷம் அல்லவா? அவரிடம் என் இந்த மாற்றம்?’ என வியந்தான். அவன் குழப்பத்தை புரிந்துகொண்ட அரசன், அவன் காதில் “நான் இன்னும் மாவீரன் ஆகவில்லை. அவ்வாறு ஆனதும் நானே சொல்கிறேன். அப்போது மக்கள் இந்த கோஷத்தை முழங்கட்டும். அதுவரை நான் வெறும் மன்னன் மட்டுமே” என்றான்.

    மகாராணியான அன்னை ஒலிம்பியா அந்த வரவேற்புக்  குழாத்தின் முன்னணியில் இருந்தாள். அடிபணிந்த தன்மகனை வாரி அணைத்துக் கொண்டாள். “மகனே! உன் தந்தையார் பிலிப் மாமன்னர் இன்று இருந்திருந்தால், அளவிடர்க்கரிய ஆனந்தத்தை அடைந்திருப்பார்” என்று கூறி அவன் அருகில் நின்றிருந்த ரொக்ஸானாவைப் பார்த்து வியப்புடன் ”யார் இந்த பேரழகி?” என்று வினவினாள்.

    “என் வணக்கத்திற்குரிய அன்னையே! இவள் பெயர் ரொக்ஸானா. இவள் எனக்கு பாரசீக நாட்டில் கிடைத்த போர்ப்பரிசு.  தங்கள் ஒப்புதலுடன் இவளை மணம்புரிய விரும்புகிறேன்” என்றான்.

    மலர்ந்த முகத்தோடு ஒலிம்பியா ரொக்ஸானாவை அணைத்துக் கொண்டு. “இந்த சுட்டிப் பெண் உனக்கு எல்லாவகையிலும் ஏற்றவள்தான்” என்றாள்.

    சில நாட்களுக்குப் பின், அலெக்சாண்டர் ரொக்ஸானா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. மாசிடோனிய மக்களும் மிக்க மகிழ்ச்சி கொண்டனர். புதுமண தம்பதிகள் ஆனந்த அலைகளில் திளைத்தனர்.

    இல்வாழ்க்கை இப்படி ஒருபுறம் மகிழ்வாக இருந்தாலும் அலெக்சாண்டரின் மனத்தில் ஆன்மீக பலம் பெறுவதில் கொண்ட நாட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகியது. ஆசுதோஷர் கற்றுக் கொடுத்த தறிகெட்டு ஓடும் மனத்தை அடக்கும் தியானப் பயிற்சிகளை தினம் இருமுறை செய்து வந்தான். நாளடைவில் மனம் அவன் வழிக்கு வந்தது. ஆன்மா பலம் பெற்றது. பிறவியின் பயனை வெகு விரைவில் புரிந்து கொண்டான்.

    மாசிடோனியா திரும்பிய நாளிலிருந்து அலெக்சாண்டரின் அன்னை, உற்றார், உறவினர் மற்றும் நெருங்கிய அரசாங்க ஆலோசகர்கள் அவனது நடை, உடை, பாவனையில் பல மாற்றங்களைக் கண்டனர். அவனது ராஜ நடையில் கம்பீரம் இருந்தது, கர்வம் இல்லை. அவனது உடை பகட்டாக இல்லை, எளிமையாகவும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது. அவன் பாவனைகளும் போற்றத் தக்கவையாக மாறி இருந்தன. முன்போல் அவனுக்கு இப்போது முன்கோபம் வருவதில்லை. பேச்சிலும் ஆணையிடும் போதும் ஆணவம் காணப்படவில்லை. மற்றவர் கூற்றுக்கு செவிமடுத்து மதிப்பு கொடுக்கும் தன்மையை அவனிடம் கண்ட அவர்கள் ‘இது என்ன புதுமை?’ என வியந்தனர். ஆச்சர்யம் அடைந்த அன்னை ஒலிம்பியாவின் கேள்விக்கு, அலெக்சாண்டர் ”இது பரத கண்டத்தின் மகத்துவம்” என்றான். ஆசுதோஷ முனிவரின் அறிவுரைகளையும் அவளுக்கு விவரித்தான்

    நாடு திரும்பிய நாளன்று அரண்மனையில் அவனுக்குச் ஒரு சிறப்பு விருந்தினை ஒலிம்பியா ஏற்பாடு செய்திருந்தாள். வழக்கம் போல் அலெக்சாண்டரின் மெய்க்காப்பாளர்கள் தங்கள் சேவையைத் துவங்கினர். அவர்களை நோக்கி ”இனி நீங்கள் நான் புசிக்கும் உணவையோ அருந்தும் தண்ணீரையோ மதுபானத்தையோ மருந்தினையோ முன் ருசி பார்க்க வேண்டிய அவசியமில்லை. என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக உங்கள் உயிரைப் பணயம் வைப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை” என்றான்.

    “அப்படியானல் எங்களை பதவி நீக்கம் செய்கிறீர்களா” என்று ஏக்கத்தோடு அவர்கள் கேட்டனர்.

    “கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வேறு உயர்ந்த பதவிகளை அளிக்கிறேன்” என்று அவர்களுக்கு உறுதி கூறினான்.

    images0000நாட்கள் உருண்டோடின. முனிவரின் உபதேசப்படி, அலெக்சாண்டர் ஒற்றர்கள் மூலமும் மாறுவேடம் தரித்து தானே மக்களிடையே கலந்தும் அனைவர் குறைகளையும் கண்டறிந்து அவற்றிற்குத் தீர்வு கண்டு அவர்களை மகிழ்வித்தான். மாசிடோனிய மாமன்னனின் நல்லாட்சியை அவன் வெற்றி கொண்ட நாடுகளின் பிரஜைகளும் போற்றிப் புகழ்ந்தனர்.

    ஒருநாள் புருஷோத்தமன் தன் உடன்பிறவா சகோதரியைக் காண மாசிடோனியத் தலைநகருக்கு வந்தான். அலெக்சாண்டரும் ரொக்ஸானாவும் ஒலிம்பியாவும் மிக்க மகிழ்ச்சி கொண்டனர்.

     

    “மாவீரரே! மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் உங்கள் திருமணத்திற்கு வருகை தர முடியாமல் போய்விட்டது. முனிவர் ஆசுதோஷர் தன் ஆசிகளை தங்களுக்கு வழங்கச் சொன்னார்” என்று சொல்லி அவர் கொடுத்து அனுப்பியிருந்த பழங்களை ரொக்ஸானாவிடம் சமர்ப்பித்தான்.

    அலெக்சாண்டர் திகைப்புடன், “போரஸ், நீயா என்னை ‘மாவீரன்’ என அழைக்கிறாய்!” என்றான்

    “ஆம் மாவீரரே! ஆன்ம பலம் பெற்ற தாங்கள் மஹா வீரர் தான். நான் வரும் வழியில் உங்கள் வெண்கொற்றக் குடையின் கீழ் உள்ள நாட்டுமக்கள் பலரை சந்தித்துப் பேசினேன். எல்லாரும் உங்களை ஏகமனதாக ’நீங்கள் ஒரு மாவீரன் மட்டும் அல்ல. ஒரு உத்தம அரசனும் கூட’ எனப் புகழாரம் சூட்டுகிறார்கள். இது உங்கள் ஆன்மீக பலத்திற்குக் கிடைத்த வெற்றி” என்று கூறிய புருஷோத்தமனை அலெக்சாண்டர் ஆலிங்கனம் செய்து கொண்டான்.

    “போரஸ், இது என் வெற்றி மட்டும் அல்ல. உன்னுடையதும் கூட. ஆசுதோஷ முனிவரை உன்னால் அல்லவோ நான் சந்திக்க முடிந்தது. அந்த மெய்சிலிர்க்கும் சந்திப்பால் அல்லவா என் வாழ்க்கை நெறி மெருகேறி இருக்கிறது. அவர் ஆசிகளால் அல்லவா ‘உத்தம அலெக்சாண்டர்’ எனும் என் உள்ளத்துக்கு உகந்த பட்டம் எனக்கு இன்று கிடைத்திருக்கிறது” என்று மகிழ்ச்சியோடும் கண்ணீர் சொரியும் கண்களோடும் அவன் பகர்ந்தான்.

    ‘வெறும் முரட்டு பலத்தினால் பெறமுடியாத பெருமையை ஆன்மீக பலம் வெகு எளிதாக எனக்குப் பெற்றுத் தந்துவிட்டது!’ என்ற மன நிறைவையும் அடைந்தான் உத்தமன் அலெக்ஸாண்டர்.

    தொடரும்.

    Share
  • வார ராசிபலன்!…16-09-13 – 22-09-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: உங்கள் வசம் வரும் பூர்வீகச் சொத்து, வீடு முதலியவற்றை முறையாகப் பராமரித்து வாருங்கள்.உறவுகளின் மத்தியில் பெருமை யோடு வலம் வரலாம். மாணவர்கள் எதிர் கொண்ட சிக்கல்கள் யாவும் தன்னால் விடுபடுவதால், மந்த நிலை மாறி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கலைஞர்கள் அவப்போது எட்டிப்பார்க்கும் சஞ்சலம், சபலம் இரண்டுக்கும் அணை போட்டால், அருமையான வாழ்வைப் பெறலாம். பெண்கள் உணவு, ஓய்வு இவை இரண்டிலும் முறையாக இருந்தால், வேலையும், மகிழ்ச்சியும் ஒன்றுக்கொன்று மோதாமலிருக்கும். சுயதொழில் புரிபவர்கள் அதிகமாக கடன் வாங்குவதைக் குறைக்கவும். .

    ரிஷபம்: பெண்களின் ஏற்றத்திற்கு கணவரும் உறுதுணையாய் இருப்பதால், இல்லம் புது பொலிவு டன் விளங்கும். மனதில் இருந்த பயம், மறதி யாவும் விலகுவதால், மாணவர்கள் சுறுசுறுப்புடன் வளையவருவர். கலைஞர்கள் அவ்வப்போது தலை காட்டும் உடற் சோர்வு, உள்ளச்சோர்வு,இரண்டையும் விரட்டி அடித்து விட்டால், மேலும் சிறப்பான முறையில் உங்கள் திறமை பரிமளிக்கும். வேலையில் இருப்பவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று எவரையும் நம்பி பண உதவி செய்வதைக் குறைத்துக் கொண்டால், ஏமாற்றமுமிராது. ஏமாளியாய் இருக்கும் நிலையும் இராது.

    மிதுனம்:கலைஞர்கள் தங்கள் திறமையால் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி, புதிய ஒப்பந்தங்களை பெறுவார்கள். இயந்திரங்களை இயக்கும் இடங்களில் பணி புரிபவர்கள் இயந்திரங்களின் பராமரிப்பில், தகுந்த கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.பதவியில் இருப்பவர்கள் பாரபட்சமின்றி பிறர்க்கு உதவிசெய்வதை மேற்கொண்டால், பணியாளர்களின் ஆதரவு குறையாமலிருக்கும். அலைச்சலின் நடுவேயும் பெண்கள் சில பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் வேலையாட்களிடம் பங்குதாரர்களைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்கவும்.

    கடகம்: இந்த வாரம் திருப்திகரமான பணப் புழக்கம் இருப்பதால், சேமிப்பில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்களை முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதியவர்கள் உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டாம். பெண்கள் கலைப் பொருட்கள், பொழுது போக்கு சாதனங்கள், ஆகியவற்றை வாங்கி மகிழ்வீர்கள். சில சமயம் சக கலைஞர்களிடம் கருத்து வேறுபாடும், பிணக்கும் தோன்றி மறையும். எந்த சூழலிலும் சுடு சொற்களை சிந்தாமலிருந்தால், உறவுகள் சுமூகமாகவே இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தன்மையாகப் பழகி வந்தால், அவர்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வும் தானே புலப்பட்டு விடும்.

    சிம்மம்: பெண்கள் பேச வேண்டியவற்றை இனிமையாகப் பேசினால் குடும்ப ஒற்று மையிலும், அன்பிலும் விரிசல் விழாமலிருக்கும். வியாபாரத்தில் முன்பின் அறியாதவர் களின் பேச்சை நம்பி அதிக முதலீடு செய்வதைத் தவிர்த்தால், நஷ்டம் குறைந்து லாபம் கூடும். கடன் நிலவரம் கலக்கத்தை தரும் விதமாக இருந்தாலும், கலைஞர்கள் தங்களின் சாமர்த்தியத்தால் நிலைமையை சமாளித்து விடுவார்கள். மாணவர்கள் ஞாபகமறதிக்கு இடம் தராமல், கருத்தூன்றி படித்துவந்தால், அதிக மதிப் பெண்கள் பெறுபவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெற்றிருக்கும். விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள் புதிய சாதனை படைப்பார்கள்.

    கன்னி: மாணவர்கள் தேர்வு நேரங்களில், ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத் துங்கள். உங்கள் உழைப்பு வீணாகமலிருக்கும். நிர்வாகத் துறையில் உள்ளவர்கள், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டியிருப்பதால், விழிப்புடன் இருத்தல் அவசியம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் நிதானமாகச் செயல்பட்டால், எந்த சிரமமும் இராது. இந்த வாரம் கலைஞர்கள் தங்கள் கடின உழைப்பால் சவால்களை ஜெயிக்கும் சூழல் இருக்கும். குடும்பத்தில் அபிப்ராய பேதங்கள் தோன்றினாலும், பெண்கள் உறவுகளிடம் பழகும் போது கவனமாக இருந்தால், எந்தப் பிரச்னையும் தலை தூக்காமலிருக்கும்.

    துலாம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் பாராட்டை எதிர்பாராமல், உறுதியாக உழைத்தால், அந்த உழைப்பே உன்னதமான பதவியில் உங்களை அமர வைத்து விடும்.அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவதில் சில தடங்கல்கள் நிலவினாலும், பணியில் இருப்பவர்கள் கவனமாய் இருந்தால், நிம்மதியாய் வேலைகளை செய்ய இயலும். கலைஞர்கள் தொழில் சார்ந்த பழக்க வழக்கங்களை ஓர் எல்லைக்குள் வைத்தால், குடும்ப மகிழ்ச்சி கெடாமல் இருக்கும். உறவினர் வருகையால் பெண்களுக்கு மகிழ்ச்சியும், செலவுகளும் கூடும். மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை குடியேற இடம் கொடுக்க வேண்டாம்.

    விருச்சிகம்: பணி புரியும் இடங்களில் நாவடக்கத்தை மேற்கொண்டால், கருத்து வேற்றுமை ,கசப்பான அனு பவம் ஆகியவை தலைகாட்டாமல் இருக்கும். பகைமை கொண்டு விலகிய சொந்தம் மீண்டும் உங்களைத் தேடி வருகையில், ஏற்றுக் கொண்டால், பெண்கள் பெறும் ஆதாயம் அதிக மாகும். முதியவர்கள் உடல் நலனில் எவ்வளவுக்கெவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்ீகளோ அவ்வளவுக்களவு அனைத்து வேலைகளையும் அனாயாசமாய் செய்து முடிக்க முடியும். வியாபாரிகள் செலவு என்னும் பட்டியலில் கவனம் செலுத்தி வந்தால், வரவிற்குள் வாழ்வது என்பது எளிதாகும்.

    தனுசு: சுப நிகழ்ச்சிகளின் பட்டியலால் பதுங்கிக் கிடந்த பரபரப்பு மீண்டும் பெண்களைத் தொற்றிக் கொள்ளும். சொந்த மனை வாங்கும் எண்ணம் சடுதியில் நிறைவேறும். எதிரிகள் அவ்வப்போது சில தடைகளைத் தந்து கொண்டிருந்தாலும், பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் மன உறுதியால் அனைத்தும் தாண்டி விடுவார்கள். வியாபாரிகள் பணப் பெட்டி சாவி, பத்திரங்கள் முதலியவற்றை உங்கள் நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்வது அவசியம். வேலை தேடச் சென்ற பிள்ளைகள் பெருமையையும், பொருளையும் அள்ளி பெற்றோர்களை மகிழ்விப்பார்கள்

    மகரம்: மாணவர்கள் எங்கு சென்றாலும் கவனமாக இருந்தால், எந்தப் பிரச்னையும் உங்கள் கவனத்தை திசை திருப்பாமலிருக்கும். மன உற்சாகமும் மங்காமலிருக்கும், பெண்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்டு வாருங்கள். உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய் சுழல்வீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் வாக்கில் நிதானம், செயல்களில் பணிவும் இரண்டும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், சங்கடம் ஏதும் வராமலிருக்கும். கலைஞர்கள் ஒப்பந்தங்கள் செய்து கொள்கையில் நேர்மையின் அடிப்படையில் செயல்படும் நிறுவனங்களைத் தேர்வு செய்வது நல்லது.

    கும்பம்: பெற்றோர்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளை கோபத்தால் திருத்துவதை விட, அன்பால் திருத்துவது நல்லது. பணியில் இருப்பவர்கள் அன்றாட அலுவல்களை அன்றே முடித்து விட்டால் எந்த பணியும் சுமையாகவும் மாறாது, சுமையாகவும் தோன்றாது. குடும்ப விஷயங்களில் உறவினரின் தலையீடு பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், ஒற்றுமை குலையாமலிருக்க பெண்கள் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் தொழிலமைப்பில் புதுப்புது மாற்றங்களைப் புகுத்துவதன் மூலம் மேலும் அதிக லாபம் பெறலாம். மாணவர்கள் தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால், உங்கள் நிம்மதி குலையாமலிருக்கும்.

    மீனம்: பொதுச் சேவையில் ஈடுபடும் பெண்கள் பின் விளைவுகளை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. உறவினர்களின் வீண் பணத் தேவைகளுக்கு பொறுப்பேற்கும் நிலையைத் தவிர்ப்பதால் வீண்சிக்கல்கள் விலகும். வழக்கமாகச் செய்யும் பணியில் ஏற்படும் மாற்றத்தால் பணியில் இருப்பவர்களின் அலைச்சலும், அங்கலாய்ப்பும் கூடும். மாணவர்கள் நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மூலம் நல்ல நட்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். , புதிய சொத்து வாங்குகையில் சொத்தின் முழு விபரம் அறிந்து வாங்குதல் நல்லது.

    Share
  • கே.ஜெ வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும் – 1

     

    கோ.ஆலாசியம்

     

    வல்லமையில் இதற்கு முன்னமே வெளிவந்த காட்சியும் கதையுமாக வெளி வந்த “வால் நட்சத்திரமும் சீகல் பறவையும்” என்றப் பதிவை கவிதை கதையாக்க முயன்று இருக்கிறேன்.

     

    ‘பான் ஸ்டார்’ எனுமந்த

    வால் நட்சத்திரம்

    வான் மீது உதிப்பதை படமாக்கிட

    எனது சிற்றூந்து

    வண்டியொன்றின் மீதொருப் பயணம்…

     

    ஒண்டியாகப்போக

    எண்ணியபோது வந்து

    ஒண்டிக் கொண்டது

    வீட்டுக்காரரின் நாயொன்று!

     

    val1

    வெளுத் திருந்த வானம்

    காணும்

    கடற்கரை யோரம்

    வந்து நின்றது என்வா கனம்

     

    சீக்கிரமே வந்ததால்

    பொழுது போக்கும்

    அக்கரையில்

    சின்னதாக ஒரு நடை …

     

    கூட வந்த நாயோ

    குதித்து ஆடி

    அங்கும் இங்கும்

    ஓடி …

     

    சிந்திக் கிடக்கும்

    சிப்பிகளை கொண்டு

    பல்லாங் குழியாடி

    குட்டியாய் ஒருக்

    குளியலையும் போட்டு

    குஷியில்

    பரவசத்தில்

    குரைத்தது…

     

    val2

    அக்கரையிலே

    சிப்பிகளை பொறுக்கி

    சிறு மணல் வீடு கட்டி

    கரையில் ஆடும் அலைகளென

    அலைகளில் ஆடும்

    ஆம்பல் மலர்கள் என

    அங்கும் இங்கும் ஓடி

    விளையாடிக் கொண்டிருந்த …

     

    மின்னும் பொன்குழல்

    பூஞ்ச்சிட்டுகள் அன்ன

    சின்னஞ்சிறு வெள்ளை

    முத்துக்கள்…

     

    குளித்து குதித்து

    குஷியில் களிக்கும் போது

    குரைக்கும்

    பைரவரின் குரலில்

     

    கொலை நடுங்கிய

    மான் குட்டிகளாய்

    பயந்து தயங்கி

    பதுங்கின தனது

    தாய்களின் பின்புறமே…

     

    கொஞ்சும் மொழிகள்

    குறைந்து ஒலிக்கும் -அக்

    குழந்தைகளிடம் எனது

    வருத்தம் கூறி…

     

    நடக்கலானோம்

    நானும்

    அந்த வாலாட்டியும்

    வானில் வரும்

    வால்நீட்டி மீனைப்

    வண்ணப் படமெடுக்க…

     

    வெள்ளை வானம்

    சிறிதே மஞ்சள் பூசிட

     

    val3

    எங்கிருந்தோ வந்து

    இறங்கிய தொரு

    வண்ணப் பறவை….

     

    தெளிந்த நீர்…

     

    தென்றலென வந்த

    குளிர்ந்தக் காற்று…

     

    சிந்தை கவரும்

    வண்ணப் பறவை…

     

    சிறகடித்து பறந்துக் கொண்டே

    சிலாக்கியமாக சிப்பிகளைக்

    கவர்ந்திட…

     

    (தொடரும்)

     

    Share
  • வடமுல்லைவாயில் வைஷ்ணவி

     

    சு. ரவி

    வணக்கம், வாழியநலம்,

    வடமுல்லைவாயில் தலத்து வைஷ்ணவி என்னைப் பலவேறு தருணங்களில் தன்பால் ஈர்த்துக்கவிதை கேட்பவள்.

    அவளோடு கவிதையாடிய சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்:

    இணைப்பாக வைஷ்ணவியின் கோட்டோவியம் ஒன்று
    பார்க்க, ( பாட) ரசிக்க,,,

     

    ராகம்: பூபாளம்


    VAISHNAVI  2
    ஈரைந்து மாதங்கள் தாய்கொண்ட சூலெனும்

    இருட்சிறை வாசத்திலும்
    இளமைப் பிராயத்தை எடுப்பார்கைப் பிள்ளையாய்
    இகவுலக நேசத்திலும்
    ஓரைந்து புலன்வழியி லேநைந்துருக்குலைந்
    தேதளர்ந்தேன் அம்மணீ!
    ஓசைகளாய்க் கவியும் ஆசை அலைக் கடலில்
    உள்மறையின் ஒலிகேட்கிலேன்!
    சீரைந்தெழுத் தோதி ஜீவன் கடைத்தேற
    சிறிதும் முயன்றதில்லை
    சிவனிலொரு பாதியே அவனியிதன் ஆதியே
    சிங்கார அகராதியே!
    வார்குழலில் மலர் சூடி மலரில்வண் டினம்பாடி
    வாழ்த்திசைக்கும் வண்ணமே,
    வடமுல்லைவாயிலில் படர்முல்லையே எனை
    வாழ்விக்க வரும் அன்னையே

    சு.ரவி

    Share
  • பிள்ளைக்காக…

    செண்பக ஜெகதீசன்umbrella

    அரைகுறை நம்பிக்கையுடன்

    ஆர்ப்பாட்டமாய்

    மழைக்காகக்

    கூட்டுவழிபாடு செய்வோரைவிட,

    நம்பிக்கையுடன்

    குதூகலமாய்க்

    குடை எடுத்துவந்தக்

    குழந்தையை நேசிப்பவன்தான்

    இறைவன்..

     

    பெய்கிறது மழை

    அந்தப்

    பிள்ளைக்காக…!

    படத்துக்கு நன்றி

    http://www.thisnext.com/browse/pink/rain/ 

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 89 (16.09.13)

    மலர் சபாthalavi thozhi

    *புகார்க்காண்டம்- 09. கனாத்திறம் உரைத்த காதை*
    **
    *தேவந்தி கூறிய தேறுதல் உரை*
    **
    கண்ணகி மொழி கேட்ட
    தேவந்தி கூறினாள்:

    “பொன்னாலான வளையணிந்தவளே!
    நீ உன் கணவனால்
    வெறுக்கப்பட்டவள் அல்லள்;
    நின் முற்பிறப்பில் நின் கணவனுக்காய்க்
    காத்து நின்றிருக்க வேண்டிய
    நோன்பு ஒன்றினைச்
    செய்யத் தவறிவிட்டாய்!

    அதன் காரணமாய்
    இன்று அவனைப் பிரிந்திருக்கின்றாய்;
    அக்குற்றம் இன்றே நீங்கி விடட்டும்;
    காவிரி கடலுடன் கலக்கும்
    சங்கமத் துறையில்
    பூக்கள் மடலவிழ்க்கும்
    நெய்தல் நிலக் கானலிடத்துச்
    சோமகுண்டம் சூரியகுண்டம் என
    இரு பொய்கைகள் உள்ளன.

    அவற்றின் துறைகளில் மூழ்கியெழுந்து
    மன்மதக்கோட்டம் சென்று காமதேவனை
    வழிபடும் மகளிர்
    இப்பிறவியில் தம் கணவனைப் பிரியாது
    கூடி வாழ்ந்து இன்புற்று,
    மறு பிறவியிலும் இன்பம் தரும் பூமியில் பிறந்து
    கணவனுடன் இன்புற்று மகிழ்வர்.
    எனவே நாம் இருவரும்
    அங்கு ஒரு நாள் சென்று
    நீராடி வருவோம்” என்றாள்.

    *கண்ணகியின் மறுமொழி*

    அது கேட்ட கண்ணகி,
    “அத்தகைய செயல்
    எமக்குப் பெருமை தருவதன்று”
    எனக்கூறி மறுத்துவிட்டாள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 55 – 63
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    ‘நான்கு குருடர்களும், ஒரு யானையும்’ என்ற கதையை பள்ளியில் படித்தது நினைவிருக்கும் இல்லையா? ஒரு ஊரில் நான்கு குருடர்கள் இருந்தார்கள். பிறவிக் குருடர்களான அவர்களுக்கு யானையைப் பார்க்க ஆசை. எதிர்பாராத விதமாக ஒரு யானை அங்கேயே வந்து பிளிருகிறது.. சத்தம் கேட்டு நான்கு பேரும், ‘அட யானை வந்துடிச்சின்னு’ சந்தோசப்படுகிறார்கள். சத்தம் கேட்டாச்சு. தொட்டுப் பார்த்து எப்படி இருக்கிறதென்று தெரிஞ்சுக்கலாம் என்ற ஆவலில் ஒரு குருடன், காலைத் தொட்டுப்பார்த்து, ‘தூணாட்டம் இருக்கு’ என்கிறான்.. வாலைத் தொட்டுவிட்டு, ‘யானை கயிறு போல இருக்கு’ என்கிறான் மற்றொருவன். தும்பிக்கையைத் தொட்டவன், ‘யானை நீட்டமா உலக்கையாட்டம் இருக்குது’ என்கிறான்.. நான்காவதாக வந்தவன் வயிறைத் தொட்டுப்பார்த்து ‘யானை மலையாட்டம் இருக்கு’ என்கிறான்.. நான்கு பேரும் சொன்னது ஒவ்வொரு விதத்தில் சரிதான் என்றாலும், மொத்தமாகப் பார்த்தால் யானையின் உருவத்திற்கான இந்த விளக்கம் சரிதானா?

    இன்று நம் இந்திய நாட்டின் பொருளாதாரம்தான் யானை.. நம்மோட ரிசர்வ் வங்கி கவர்னர், நிதியமைச்சர், பாரதப் பிரதமர், (பொருளாதார வல்லுநர்) மத்தியில் உள்ள பொருளாதாரச் செயலாளர் என இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான கருத்துக்களையல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் திட்டமிட்டு செய்த செயல்களால்தான் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்து, தங்கத்தின் இறக்குமதியும் குறைந்ததா? தெளிவற்ற அணுகு முறைகளும், திறமையற்ற நிர்வாகமும் ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கும், அதன் தொடர்பாக நடந்த மற்ற நிகழ்வுகளுக்கும் காரணம் இல்லையா? இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் சரியாகத்தான் திட்டமிடப்பட்டது என்றால் இதை ஏன் முன்னமேயே செயல்படுத்தவில்லை? இப்படிப்பட்ட கேள்வி சாமான்யனுக்கும் தோன்றக்கூடிய ஒன்றுதானே? துக்ளக் தர்பார் போன்றல்லவா இருக்கிறது இது. 2 மாதம் முன்னால் பஞ்சை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார்கள். மீண்டும் திடீரென்று டன்னுக்கு 10,000 ரூபாய் வரி விதித்தார்கள். இது யாரை திருப்திபடுத்துவதற்காக செய்யப்படுகிறது என்று புரியவில்லை. நம்முடைய ரூபாய் மதிப்பு குறைந்ததற்கான மூல காரணம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியால்தான் அல்லவா, நம்முடைய அன்னியச் செலாவணி பெருமளவில் கரைகிறது? இதற்காக என்ன திட்டங்களைத் தீட்டி, செயல்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கிறோம்? நேற்று மாலை தெருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருந்தபோது, படிப்பறிவில்லாத இருவர் சர்வ சாதாரணமாக பேசிக்கொண்டு போவதைக் கேட்க முடிந்தது. “சிங்கப்பூர்ல இருக்கற மாதிரி நகருக்குள் எந்த வாகனமும் ஓட்டக்கூடாது என்று சட்டம் போட்டால் இவ்வளவு நெரிசல் இருகாதில்லையா, முக்கியமான இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் அரசு போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தலாமே. இப்படியே போனால், சாதாரண நகரங்களில் கூட நாளடைவில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு செல்லும் நிலை அல்லவா ஏற்படக்கூடும்? ” என்று அவர்கள் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது. உண்மைதானே இது. இப்படிச் செய்வதால் அன்னிய செலாவணியும் பாதிக்குப் பாதியாகக் குறையக்கூடிய வாய்ப்பும் இருக்கிறதே. இதையெல்லாம் விட்டுவிட்டு, பஞ்சை ஏற்றுமதி செய்து , உள் நாட்டில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பிரச்சனையை அதிகப்படுத்திக் கொண்டல்லவா இருக்கிறோம்?

    தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதித்தது நல்ல திட்டம் என்றாலும்.. ஏற்றுமதி செய்ய என்ன திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது? தங்க நகை ஏற்றுமதிக்கு எந்த விதமான ஊக்குவிப்பும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லையே. யானை போன்ற பொருளாதாரத்தை சரியான நோக்கில் கண்டறிந்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் இன்று. நாளுக்கு நாள் குறைந்து கொண்டுவரும், நம்முடைய ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்வதற்கும் மற்றும் இரஷ்யாவில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும், இந்திய ரூபாயை பரிவர்த்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது போல, மற்ற இறக்குமதி பொருட்களுக்கும் பரிவர்த்தனைப் பொருளாக நம்முடைய பணத்தையேக் கொடுப்பதாக இருந்தால் மட்டுமே ரூபாயின் மதிப்பு உயரக் கூடிய வாய்ப்பு இருக்கும் அல்லவா? நெஞ்சு பொறுக்குதில்லையே!

    Share