உன்னதமான ஒரு சமூகத்திற்கான கரைதல்…..
எஸ் வி வேணுகோபாலன்
ஒரு திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை இப்படி நேரடியாக அதனோடு தொடர்பு படுத்திக்கொண்டு விலக முடியாமல் தவித்த அனுபவம் மிக அண்மைக் காலத்தில் ஏற்படவில்லை.
திரைக் கதையோடும் அதன் ஓட்டத்தோடும் பின்னிக் கொள்ள நேர்ந்ததற்கு பளீர் என்று தெற்றுப் பல் தெரியச் சிரிக்கும், சட்சட் என்று முக பாவங்களை மாற்றத் தெரியும், அகலக் கண்கள் விரித்து இயற்கையின் ரகசியங்களை விழுங்கக் காத்திருக்கும் செல்லம்மா பாத்திரம் ஒரு காரணம். வாழ்த்துக்கள், சாதனா! பாத்திரப் படைப்போடு சங்கமம் ஆகிவிட்ட கல்யாணியாக நடித்த ராம் அடுத்தது. அருமை, ராம்!
தங்க மீன்கள் ஒரு சமூக, பொருளாதார விஷயத்தை, ஆளுமை பிரச்சனை, உளவியல் அம்சங்களின் பின்புலத்தில் பேசுகிறது. அதன் வெற்றி, தோல்வியைக் காட்டிலும் இன்றைய தமிழக பண்பாட்டுச் சூழலில் இத்தகைய ஒரு திரைக் கதையின் தேவை என்ன, அதன் தாக்கம் என்ன என்பதை விவாதிப்பது முக்கியமாகிறது.
மிகச் சிறு வட்டத்திற்குள், மிகக் குறைவான பாத்திரங்களின் தேர்வுக்குள், அதிக நிலப்பரப்பை நோக்கி கவனத்தைச் சிதறடிக்காமலும், காட்சி-வசனம் என்ற சாதனங்களை நேர்த்தியான கலவையிலும் வழங்க இயக்குனர் ராம் எடுத்துக் கொண்டிருக்கும் பாடுகள் உள்ளபடியே வணக்கத்திற்குரியவை. வேறு மாதிரி அலைந்து திரிந்து களைத்துப் போயே பழக்கப்பட்டுவிட்ட இன்றைய சராசரி திரை ரசிகருக்கு இதில் ஒவ்வாமை ஏற்பட்டிருக்குமாயின் அதற்கு சரியான மருந்து என்ன என்பதைச் சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.
தேடலில் இருக்கும் நடுத்தர வயது மகன், அவனது காதலுக்கு ஆட்பட்டு வாழ்க்கைத் துணையாக (இணையாக அல்ல என்பது படத்தின் போக்கில் புரிகிறது) வந்துவிடும் மனைவி, நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வும் பெற்றுவிட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அப்பா, அவரை அனுசரித்து, அவரது கசப்பைப் பகிர்ந்து கொள்ளும் அம்மா, பள்ளியால் மந்தம் என்று புறக்கணிக்கப்படும் சூட்டிகைக் குழந்தை என்று கை அடக்கமான வீடு. (இல்லம் என்ற சொல்லைப் பயன்படுத்த இயலாது).
குழந்தைக்கான பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத தனது தந்தையினது பாசத்தின் ஊற்றில் தனியே ஒரு பள்ளிக்கூடத்தை மானசீகமாக உருவாக்கிக் கொண்டு அந்தக் கல்வியில் தேர்ச்சி பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது குழந்தை. வீட்டில் உள்ளோரும் சரி, பள்ளியைச் சார்ந்தோரும் சரி குழந்தையை அறிய முயற்சி மேற்கொள்வதில்லை என்பது ஒரு முக்கியமான உளவியல் கூறாக படத்தில் வெவ்வேறு நிகழ்வுகள், காட்சிகள், வசனங்களின் மூலம் எடுத்து வைக்கப் படுகிறது.
தனது குழந்தைக்கு மேலான கல்வி தர வேண்டும் என்று தனியார் நிறுவனத்திற்கு சைக்கிளில் அவளை வைத்துக் கொண்டு விரையும் கல்யாணி, கடைசி காட்சியில் அவளை அரசுப் பள்ளியில் பெருமிதம் பொங்க சேர்த்துவிட்டு அவள் குவிக்கும் வெற்றியை ரசிப்பதோடு நிறைவு பெறுகிறது படம்.
இதனிடையே பேசப்படும் செய்தி, நிலையான வருமானம் அற்ற ஒரு மனிதனின் அலைக்கழிப்பு. சம்பாதிக்க முடியாதவனுக்கு சுய மரியாதையோ, மதிப்போ இருக்கக் கூடாது என்கிறது சமூகம். டிகிரி கூட (!) படிக்காத பெற்றோரின் குழந்தையை இங்கே சேர்த்தது எங்கள் தப்பு என்கிறது தனியார் ஆங்கில வழிக் கல்வி நிறுவனம்.
தன்னை பள்ளிக்கூடம் எதற்கு இப்படி ஒதுக்கி வைக்கிறது, சக மாணவர்கள் ஏன் தன்னை பரிகசித்து சிரிக்கின்றனர், தனக்குச் சரியாகப்படும் விடைகள் ஏன் எப்போதும் ஆசிரியர்களுக்குத் தவறாகவே படுகின்றன என்று நிலைகுலையும் ஒரு சிறுமிக்கு வீட்டில் நிபந்தனை மேலிட்ட அன்பும், சலிப்பில் ஊறிய கவனிப்பும், பெருமூச்சோடு உதிரும் ஆசியும் கிடைக்கின்றன. தனக்கான அங்கீகாரத்தை அவள் தன்னைப் போலவே நிராகரிக்கப் பட்ட தந்தையிடம் மட்டும் தான் கோராமலே பெறமுடிகிறது. மிக நுட்பமான இடம் இது இந்தக் கதையில்.
தந்தை – மகள் உறவு ஆரோக்கியமான விதத்தில் பேசப்படுகிறது. அதில் மற்றவர்கள் செய்யும் குறுக்கீடுகள் நம்மை மேலும் ஊன்றிக் கவனிக்க வைக்கின்றன. “நீ எதுக்குடா பள்ளிக்கூடத்துக்குப் போய் நிக்கிற…அவளுக்கு எதற்கு ரெண்டு அம்மா…?” என்று குழந்தையின் தாத்தா தனது பையனிடம் கேட்கும் கேள்வி, பொதுவாக நடுத்தர குடும்பங்களில் வேலைப் பிரிவினை குறித்த ஆழமான பரிமாணங்களை எடுத்து வைக்கிறது. பொதுவாக குழந்தை பராமரிப்பு, பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களைச் சென்று பார்ப்பது, பாட்டு கிளாஸ், பண்டிகை பலகாரம், துணிமணி, வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல்…. இன்னபிற பொறுப்புகள் ஒரு தாயினுடையவை. அந்த இடத்தை ஓர் அப்பா எடுத்துக் கொள்வது தேவையற்றது என்ற கருத்தாக்கம் தொக்கி நிற்கும் கேள்விகள் அவை.
கற்றலின் இனிமை மறுக்கப்பட்ட வகுப்பறை, ஒரே ஒரு காட்சியிலேயே சாட்டையடி மாதிரி எடுத்து வைக்கப் படுகிறது. ஆங்கில எழுத்து W எப்படி என்பதில் குழப்பம் இருக்கிறது செல்லம்மாவுக்கு. அதையும் M என்ற எழுத்தையும் குழப்பிக் கொண்டிருக்கிற அவள் சிக்கிக் கொண்டு விடுகிறாள். இந்த எழுத்துக்களை கரும்பலகையில் எழுதச் சொல்லி ஏவும் ஆசிரியையின் தீப்பொறி உமிழும் கண்கள், நடுங்க வைக்கும் தடித்த சொற்கள், நொடிக்கு நொடி உத்தரவுகளாக பிறப்பிக்கப்படும் அச்சுறுத்தல்கள், அதிர வைக்கும் உடல் மொழி…….இவை எதுவுமே வகுப்பறைக்குரிய இலக்கணங்களுக்குள் வராது. இந்த வன்முறையின் உச்சகட்டம், அவளுக்கு எழுத வராத எழுத்தின் பெயரை வைத்தே அவளைக் கூப்பிடுமாறு மற்ற மாணவர்களுக்கு ஆசிரியை பிறப்பிக்கும் உத்தரவு. மலை வாழை அல்லவோ கல்வி, அதை வாயார உண்ணுவாய் போ என் புதல்வி என்று பாவேந்தர் சொன்ன கல்வி இதுவா?
இளம் வயதிலேயே அந்தக் குழந்தைக்கு தங்க மீன்கள் பற்றிய கனவை ஊட்டிவிட்டிருக்கிறார் தந்தை. அது பின்னர் கல்விக்கான குறியீடாக இறுதிக் காட்சியில் குழந்தையின் கட்டுரை வாசகங்கள் மூலம் அடையாள படுத்தப் படுகிறது. எங்கே நீச்சல் தெரியாத குழந்தை, தகப்பனும் அருகில் இராத அந்த சோக நாட்களில் தனது எதிர்பார்ப்புகள் எல்லாம் நொறுங்கிய தருணமொன்றில் தங்க மீன்களைத் தேடி ஆழமான குளத்திற்குள் சென்றடைந்து விடுவாளோ என்ற பதைபதைப்பை முதல் காட்சியிலேயே பார்வையாளரின் புத்தியில் விதைத்துவிடுகிறார் இயக்குநர்.
ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் இப்படியாகத் தத்தமது தங்க மீன்களைத் தேடப் போய் தாங்களே தங்க மீனாக அந்தந்த குடும்பங்களின் வீட்டுச் சுவர்களில் படமாகி விட்டார்கள் என்ற புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியானவை. தமிழ் வழிக் கல்வி பயின்று கல்லூரியில் ஆங்கிலம் மூலம் கற்க வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்ள இயலாது தூக்கில் தொங்கினார் ஒரு மாணவி. தேர்வில் தோல்வி பயம் காரணமாக முடிவுகள் வருவதற்கு ஒரு நாள் முன்பு விஷம் குடித்தவர்களில் சிலர் அடுத்த நாள் தேர்ச்சி பெற்ற செய்தி வந்திருந்தது. வேலைக்கான கேம்பஸ் தேர்வில் முதல் பட்டியலில் பெயரில்லை என்பதற்காக மிக அண்மையில் ஒரு மாணவர் ரயிலின் குறுக்கே விழுந்து தம்மை மாய்த்துக் கொண்டார்.
சமச்சீர் கல்வியை வரவிடாது மெட்ரிகுலேஷன் கல்வி வள்ளல்கள் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதை தமிழக கல்விச் சூழல் பார்த்தது. தாய்மொழியில் படிப்பது அவமானம், ஆங்கிலமே அறிவின் வெளிச்சம் என்று பெற்றோரை மூளைச் சலவை செய்திருக்கும் மிகப் பெரிய வர்த்தகம் இன்றைய கல்விமுறை. ஈவிரக்கமற்ற தண்டனை கொட்டடிகளாக (ஹிட்லரின் கான்சென்ட்ரேஷன் கேம்ப்) உருவாக்கி வளர்த்தெடுக்கப்படும் போர்டிங் பள்ளிகள் இன்று சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதன் காரணம் என்ன, உலகமயத்தின் சந்தைமயம், போட்டி உலகம், இருளாக சித்தரிக்கப் படும் எதிர்காலத்தின் மீதான அச்சம் ! உரையாடல்கள் அற்ற வெளியாக நமது வீடுகள் இருப்பதை கல்யாணியின் வீடும் காட்டுகிறது.
வோடஃபோன் நிறுவன விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டி தனக்கு வேண்டும் என்று கேட்கும் செல்லம்மாவுக்கு அதன் விலை தெரியாது. வாக்கு கொடுத்துவிடும் தந்தை கல்யாணிக்கும் தெரியாது. அசாத்திய கற்பனையாகத் தோன்றும் ஒரு முயற்சியை மேற்கொண்டு அந்த நாய்க்குட்டியை வாங்கவும் செய்துவிடுகிறான் கல்யாணி. எனக்கென்னவோ, வெவ்வேறு முறையில் தங்களைப் பணயம் வைத்தும், வருத்திக் கொண்டும், வெளியே சொல்ல இயலாத இன்னல்களை உட்கொண்டும் தங்களது குழந்தைகளின் கல்விக்காக அலைவுறும் பெற்றோர் குறித்த குறியீடாக அது பிறகு யோசிக்கையில் பட்டது.
நடுங்க வைக்கும் ஸ்டெல்லா மிஸ் சித்தரிப்புக்கு நேரெதிராக, அரவணைக்கும் ஆசிரியையாக வரும் எவிட்டா நேரடியாக இடம் பெறும் காட்சிகள் மிக மிகக் குறைவு என்றாலும் பார்வையாளருக்கு எளிதில் விளங்கிவிடும் பாத்திரமாகி விடுகிறார். தனியார் நிறுவனத்தில் தத்தளிக்கும் அந்தத் தங்க மீன் பிறகு அரசு பள்ளியில் உற்சாக நீச்சல் அடிப்பதோடு, செல்லம்மாவின் கை தொடுதலுக்கு அருகே காத்திருக்கவும் செய்கிறது.
படத்தில் யாரும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை என்ற தத்துவம் எதார்த்த உலகை மதிப்போடு அணுகத் தூண்டுகிறது. நல்ல தாத்தா ஆனா அவரு கெட்ட அப்பா என்று தனது பாட்டனைக் காண்கிறாள் செல்லம்மா. தொழிலாளிக்கு பாக்கி வைக்கும் சிறு தொழில் உடைமையாளர் உள்ளபடியே அவரும் நலிவுற்ற தொழிலில் நசிந்து கொண்டிருப்பவராக இருக்கிறார். வெளிநாட்டில் வசதியான வாழ்க்கையில் இருக்கும் தனது மகள் கோபித்துக் கொண்டுவிடக் கூடாதென ஏழை மகன் வயிற்று பேத்தியிடம் கெட்டவளாக நடந்து கொள்ளும் பாட்டி, தன தவறுக்கு வெட்கமுறும் நல்லவளாகவும் இருக்கவே செய்கிறாள். தன்னை மிக கேவலமாக நடத்தும் மாமியாரே ஆனாலும், தன்னை மதிக்கும் கணவனின் கடுமையான வற்புறுத்தலுக்குச் செவி மடுக்காது இருந்துவிடும் மனைவி, அவன் வீட்டைவிட்டு வெளியேறிப் போன பிறகும் குழந்தைக்காக எல்லாம் பொறுத்துப் போகிறவளாக இருக்க வேண்டியிருக்கிறது.
ஸ்டெல்லா மிஸ் போன்றவர்கள் ஏன் குழந்தைகளிடம் அப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை, பின்னர் எவிட்டா, “நிறைய மாணவர்கள், அதிகமான வேலை பளு, குறைவான சம்பளம்…. அவங்களும் பாவம் என்ன செய்வாங்க” என்று சொல்லும்போது நிஜ வில்லன்கள் யார் என்று சிந்திக்கச் செய்துவிடுகிறது. தனது மகன் நல்லவன், அவனை திரும்ப வீட்டுக்கு வரச் சொல்லுங்களேன் என்று வேண்டும் தனது மனைவியிடம், கல்யாணியின் அப்பா, அவன் ரொம்பவும் நல்லவன், கொஞ்சம் கெட்டவனாத் தான் திரும்பட்டுமே என்று சொல்லும் இடம் நிறைய கேள்விகளுக்கு விடையாகிறது. புதிய கேள்விகளை முன்வைக்கிறது.
சம கால சமூக சூழல் மனிதர்களை எப்படி புரட்டிப் போடுகிறது, உணர்வுகளை எப்படி கொச்சை செய்கிறது, உறவுகளை எவ்விதம் சின்னாபின்னமாக்கிச் சீரழிக்கிறது என்பதை ராம் பல விதமாக நுட்பமாக காட்சிப் படுத்துகிறார்.
தனது குழந்தை பள்ளியில் திருடி இருக்கிறாள் என்று சொல்லும் மனைவியிடம், கல்யாணி, “அந்த ஸ்கூலே திருட்டு ஸ்கூல் தான் ” என்று சொல்லும் இடம். காசு இல்லாதவங்க பாக்காதீங்க என்று விளம்பரம் போடும் போது சொல்றாங்களா என்று குமுறும் இடம். ஒரு கேள்விக்கு இரண்டு, மூன்று, பத்து பதில் வைத்திருக்கும் ஒரு சிறுமியை எப்படி முட்டாள் என்று சொல்ல முடியும் என்று செல்லம்மா கேட்கும் இடம் என்று பளீர் வசனப் பொறிகள் படத்தில் பொருத்தமாக ஒலிப்பது கவனிக்க வேண்டியது.
பொண்ணுக்கு மட்டும் தான் கால் பிடிச்சு விடுவீங்களா என்று கொஞ்சலோடு கேட்கும் போதும், இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே காத்திருந்து என்னை எங்காவது அழைத்துச் சென்று கொஞ்சம் பேச மாட்டீர்களா என்று ஏங்கும் போதும் சமதையாக சித்தரிக்கப் படும் கல்யாணியின் மனைவி பாத்திரம், முடிவெடுக்கும் எந்த விஷயத்திலும் தலையிட முடியாதவளாக காட்டப்படுவதும், கல்யாணி மனைவியையும், பெண் குழந்தையையும் ‘டி’ போட்டே பேசுவதும் நெருடலாக எனக்குப் பட்டவை. அது கல்யாணியின் பாத்திர வார்ப்பு அப்படி என்றாலும். பெண் குழந்தைக்கான கல்விக்காக எதையும் செய்யப் புறப்படும் ஒரு தந்தை குடும்ப விஷயத்தில் தனது அடுத்த தலைமுறைக்கு இது விஷயத்தில் சொல்ல ஏதும் வைத்திருக்கக் கூடாதா என்ன?
படிப்பில் மந்தமாக இருப்பதாகப் பேசப்படும் தனது பெண் குழந்தை காலச் சுழற்சியில் பெரிய மனுஷியாக வேறு ஆகிவிடுவாளோ என்று பதறும் தாயின் சித்திரம் போன்ற பல நுண்மையான காட்சிப்படுத்தல் உள்ள படத்தில் இந்த எதிர்பார்ப்பு கூடுவதைத் தவிர்க்க முடிவதில்லை…
ஆனந்த விகடனில் கடந்த பல வாரங்களாக மறக்கவே நினைக்கிறேன் தொடரில் வெவ்வேறு நிகழ்வுகளை எழுதிக் கொண்டுவரும் மாரி செல்வராஜ் பெயரை இந்தப் படத்தில் உதவி இயக்கம் என டைட்டிலில் ஆர்வத்தோடு பார்த்து மகிழ்ந்தேன். “பூ” ராமு, ரோகிணி என மிகையற்ற நடிப்பை கலைஞர்கள் நல்கி இருப்பது படத்தின் வலு. செல்லம்மாவின் தோழியான ‘பூரி’ ரசிகை அசத்தல் நடிப்பு. மெட்ரிகுலேஷன் பள்ளியின் பலவிதமான கொடுமைகள், அபத்தங்களை பரிகசிக்கும் நையாண்டிப் பாடல் இடம் பெற்றிருக்கிறது. இயற்கையோடு ஒன்றி நகரும் சிறப்பான ஒளிப்பதிவும், ரயில் சத்தத்தையும், படகுத் துறை சங்கு ஒலியையும் காட்சிப்படுத்தலுக்கு ஏற்ப அமைந்திருக்கும் பின்னணி இசையும் பேசப்பட வேண்டியவை.
படத்தின் தொடக்கத்தில் வண்ணதாசன், கே வி ஷைலஜா, பவா செல்லதுரை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் நிறைவில், தன்னலமற்று தன்னார்வத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்கள் யாவருக்கும் அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது.
தங்க மீன்கள், உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு பார்க்க இயலாத கனமிக்க அனுபவமாகத் தான் எனக்கு இருந்தது. அதிலிருந்து தப்பி ஓட இயலாதபடிக்கு. ‘ஆனந்த யாழிசை மீட்டுகிறாள்..’ என்ற அருமையான நா முத்துக்குமார் பாடலின் இதமான இசையோட்டத்தினை அப்பா-மகள் அன்பு பரிமாற்றத்தின் கட்டுமானத்திற்குச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார் ராம். வானில் இருந்து நிலவுப் பந்தை எடுத்து விளையாடும் தந்தையும், மகளும் மறுபடி வெண்ணிலவை உரிய இடத்தில் திருப்பி வைத்துவிட்டு அடுத்த ஆட்டத்திற்குச் செல்கின்றனர். அதன் ஒளியில் ஒளிரும் அவர்களது மகிழ்ச்சியான முகங்கள் எப்போதும் அப்படி இருக்கும் ஒரு காலத்திற்கான கரைதலே இந்தப் படம் என்று தான் தோன்றுகிறது.
*******
படத்திற்கு நன்றி:
http://idiotirosh.blogspot.in/2013/05/blog-post.html