வார ராசிபலன்!…16-09-13 – 22-09-13
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: உங்கள் வசம் வரும் பூர்வீகச் சொத்து, வீடு முதலியவற்றை முறையாகப் பராமரித்து வாருங்கள்.உறவுகளின் மத்தியில் பெருமை யோடு வலம் வரலாம். மாணவர்கள் எதிர் கொண்ட சிக்கல்கள் யாவும் தன்னால் விடுபடுவதால், மந்த நிலை மாறி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கலைஞர்கள் அவப்போது எட்டிப்பார்க்கும் சஞ்சலம், சபலம் இரண்டுக்கும் அணை போட்டால், அருமையான வாழ்வைப் பெறலாம். பெண்கள் உணவு, ஓய்வு இவை இரண்டிலும் முறையாக இருந்தால், வேலையும், மகிழ்ச்சியும் ஒன்றுக்கொன்று மோதாமலிருக்கும். சுயதொழில் புரிபவர்கள் அதிகமாக கடன் வாங்குவதைக் குறைக்கவும். .
ரிஷபம்: பெண்களின் ஏற்றத்திற்கு கணவரும் உறுதுணையாய் இருப்பதால், இல்லம் புது பொலிவு டன் விளங்கும். மனதில் இருந்த பயம், மறதி யாவும் விலகுவதால், மாணவர்கள் சுறுசுறுப்புடன் வளையவருவர். கலைஞர்கள் அவ்வப்போது தலை காட்டும் உடற் சோர்வு, உள்ளச்சோர்வு,இரண்டையும் விரட்டி அடித்து விட்டால், மேலும் சிறப்பான முறையில் உங்கள் திறமை பரிமளிக்கும். வேலையில் இருப்பவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று எவரையும் நம்பி பண உதவி செய்வதைக் குறைத்துக் கொண்டால், ஏமாற்றமுமிராது. ஏமாளியாய் இருக்கும் நிலையும் இராது.
மிதுனம்:கலைஞர்கள் தங்கள் திறமையால் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி, புதிய ஒப்பந்தங்களை பெறுவார்கள். இயந்திரங்களை இயக்கும் இடங்களில் பணி புரிபவர்கள் இயந்திரங்களின் பராமரிப்பில், தகுந்த கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.பதவியில் இருப்பவர்கள் பாரபட்சமின்றி பிறர்க்கு உதவிசெய்வதை மேற்கொண்டால், பணியாளர்களின் ஆதரவு குறையாமலிருக்கும். அலைச்சலின் நடுவேயும் பெண்கள் சில பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் வேலையாட்களிடம் பங்குதாரர்களைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்கவும்.
கடகம்: இந்த வாரம் திருப்திகரமான பணப் புழக்கம் இருப்பதால், சேமிப்பில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்களை முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதியவர்கள் உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டாம். பெண்கள் கலைப் பொருட்கள், பொழுது போக்கு சாதனங்கள், ஆகியவற்றை வாங்கி மகிழ்வீர்கள். சில சமயம் சக கலைஞர்களிடம் கருத்து வேறுபாடும், பிணக்கும் தோன்றி மறையும். எந்த சூழலிலும் சுடு சொற்களை சிந்தாமலிருந்தால், உறவுகள் சுமூகமாகவே இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தன்மையாகப் பழகி வந்தால், அவர்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வும் தானே புலப்பட்டு விடும்.
சிம்மம்: பெண்கள் பேச வேண்டியவற்றை இனிமையாகப் பேசினால் குடும்ப ஒற்று மையிலும், அன்பிலும் விரிசல் விழாமலிருக்கும். வியாபாரத்தில் முன்பின் அறியாதவர் களின் பேச்சை நம்பி அதிக முதலீடு செய்வதைத் தவிர்த்தால், நஷ்டம் குறைந்து லாபம் கூடும். கடன் நிலவரம் கலக்கத்தை தரும் விதமாக இருந்தாலும், கலைஞர்கள் தங்களின் சாமர்த்தியத்தால் நிலைமையை சமாளித்து விடுவார்கள். மாணவர்கள் ஞாபகமறதிக்கு இடம் தராமல், கருத்தூன்றி படித்துவந்தால், அதிக மதிப் பெண்கள் பெறுபவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெற்றிருக்கும். விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள் புதிய சாதனை படைப்பார்கள்.
கன்னி: மாணவர்கள் தேர்வு நேரங்களில், ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத் துங்கள். உங்கள் உழைப்பு வீணாகமலிருக்கும். நிர்வாகத் துறையில் உள்ளவர்கள், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டியிருப்பதால், விழிப்புடன் இருத்தல் அவசியம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் நிதானமாகச் செயல்பட்டால், எந்த சிரமமும் இராது. இந்த வாரம் கலைஞர்கள் தங்கள் கடின உழைப்பால் சவால்களை ஜெயிக்கும் சூழல் இருக்கும். குடும்பத்தில் அபிப்ராய பேதங்கள் தோன்றினாலும், பெண்கள் உறவுகளிடம் பழகும் போது கவனமாக இருந்தால், எந்தப் பிரச்னையும் தலை தூக்காமலிருக்கும்.
துலாம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் பாராட்டை எதிர்பாராமல், உறுதியாக உழைத்தால், அந்த உழைப்பே உன்னதமான பதவியில் உங்களை அமர வைத்து விடும்.அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவதில் சில தடங்கல்கள் நிலவினாலும், பணியில் இருப்பவர்கள் கவனமாய் இருந்தால், நிம்மதியாய் வேலைகளை செய்ய இயலும். கலைஞர்கள் தொழில் சார்ந்த பழக்க வழக்கங்களை ஓர் எல்லைக்குள் வைத்தால், குடும்ப மகிழ்ச்சி கெடாமல் இருக்கும். உறவினர் வருகையால் பெண்களுக்கு மகிழ்ச்சியும், செலவுகளும் கூடும். மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை குடியேற இடம் கொடுக்க வேண்டாம்.
விருச்சிகம்: பணி புரியும் இடங்களில் நாவடக்கத்தை மேற்கொண்டால், கருத்து வேற்றுமை ,கசப்பான அனு பவம் ஆகியவை தலைகாட்டாமல் இருக்கும். பகைமை கொண்டு விலகிய சொந்தம் மீண்டும் உங்களைத் தேடி வருகையில், ஏற்றுக் கொண்டால், பெண்கள் பெறும் ஆதாயம் அதிக மாகும். முதியவர்கள் உடல் நலனில் எவ்வளவுக்கெவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்ீகளோ அவ்வளவுக்களவு அனைத்து வேலைகளையும் அனாயாசமாய் செய்து முடிக்க முடியும். வியாபாரிகள் செலவு என்னும் பட்டியலில் கவனம் செலுத்தி வந்தால், வரவிற்குள் வாழ்வது என்பது எளிதாகும்.
தனுசு: சுப நிகழ்ச்சிகளின் பட்டியலால் பதுங்கிக் கிடந்த பரபரப்பு மீண்டும் பெண்களைத் தொற்றிக் கொள்ளும். சொந்த மனை வாங்கும் எண்ணம் சடுதியில் நிறைவேறும். எதிரிகள் அவ்வப்போது சில தடைகளைத் தந்து கொண்டிருந்தாலும், பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் மன உறுதியால் அனைத்தும் தாண்டி விடுவார்கள். வியாபாரிகள் பணப் பெட்டி சாவி, பத்திரங்கள் முதலியவற்றை உங்கள் நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்வது அவசியம். வேலை தேடச் சென்ற பிள்ளைகள் பெருமையையும், பொருளையும் அள்ளி பெற்றோர்களை மகிழ்விப்பார்கள்
மகரம்: மாணவர்கள் எங்கு சென்றாலும் கவனமாக இருந்தால், எந்தப் பிரச்னையும் உங்கள் கவனத்தை திசை திருப்பாமலிருக்கும். மன உற்சாகமும் மங்காமலிருக்கும், பெண்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்டு வாருங்கள். உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய் சுழல்வீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் வாக்கில் நிதானம், செயல்களில் பணிவும் இரண்டும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், சங்கடம் ஏதும் வராமலிருக்கும். கலைஞர்கள் ஒப்பந்தங்கள் செய்து கொள்கையில் நேர்மையின் அடிப்படையில் செயல்படும் நிறுவனங்களைத் தேர்வு செய்வது நல்லது.
கும்பம்: பெற்றோர்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளை கோபத்தால் திருத்துவதை விட, அன்பால் திருத்துவது நல்லது. பணியில் இருப்பவர்கள் அன்றாட அலுவல்களை அன்றே முடித்து விட்டால் எந்த பணியும் சுமையாகவும் மாறாது, சுமையாகவும் தோன்றாது. குடும்ப விஷயங்களில் உறவினரின் தலையீடு பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், ஒற்றுமை குலையாமலிருக்க பெண்கள் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் தொழிலமைப்பில் புதுப்புது மாற்றங்களைப் புகுத்துவதன் மூலம் மேலும் அதிக லாபம் பெறலாம். மாணவர்கள் தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால், உங்கள் நிம்மதி குலையாமலிருக்கும்.
மீனம்: பொதுச் சேவையில் ஈடுபடும் பெண்கள் பின் விளைவுகளை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. உறவினர்களின் வீண் பணத் தேவைகளுக்கு பொறுப்பேற்கும் நிலையைத் தவிர்ப்பதால் வீண்சிக்கல்கள் விலகும். வழக்கமாகச் செய்யும் பணியில் ஏற்படும் மாற்றத்தால் பணியில் இருப்பவர்களின் அலைச்சலும், அங்கலாய்ப்பும் கூடும். மாணவர்கள் நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மூலம் நல்ல நட்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். , புதிய சொத்து வாங்குகையில் சொத்தின் முழு விபரம் அறிந்து வாங்குதல் நல்லது.