அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : பெர்காமோன் கோயில் – பெர்காமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி (6)
சுபாஷிணி ட்ரெம்மல்
இஸ்லாமிய கலைப்பொருட்கள் கண்காட்சி கூடத்திலிருந்து மீண்டும் உங்களை பெர்காமான் கோயில் பிரகாரப் பகுதிக்கு அழைத்து வருகின்றேன். இந்த அருங்காட்சியகத்திலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சேகரிப்பாகவும் உலகப் பிரசித்தி பெற்ற அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புக்களின் வரிசையில் இடம்பிடிப்பதுமாகிய பெர்காமோன் கோயிலைப் பற்றிச் சொல்லாமல் அடுத்த அருங்காட்சியகத்திற்குச் செல்வதற்கு எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. ஆக இந்த அருங்காட்சியகத்திற்குப் பெயராகவும் அமைந்துள்ள இந்தக் கோயிலைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் காண்போமே.
1878ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் கார்ல் ஹூமன் பெர்காமோன் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டார். இந்த ஆய்வு 1888 வரை தொடர்ந்தது. அது போது கண்டெடுக்கப்பட்ட கோயில் சுவர்கள், தூண்களோடு அமைந்த வாயில்புறச் சுவரில் அலங்கரித்திருந்த சிற்பங்கள் என அனைத்தும் சேகரிக்கப்பட்டன. அப்போதைய ஓட்டோமான் அரசிடம் (துருக்கி) கலந்து பேசி இப்பொருட்களை ஜெர்மனிக்குச் சொந்தமாக்கி பெர்லினுக்கு அவை கொண்டு வரப்பட்டன. முதலில் போட அருங்காட்சியகத்தில் பாதுகாக்கபப்ட்டு பின்னர் பெர்காமோன் அருங்காட்சியகம் 1932ம் ஆண்டில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்ட போது இங்கு கொண்டுவரப்பட்டு அன்றிலிருந்து இந்த அருங்காட்சியகத்திலேயே முதல் அறையில் இக்கோயில் பகுதி வீற்றிருக்கின்றது.
ஏறக்குறைய கி.மு 2ம் நூற்றாண்டு கோயிலாகக் கருதப்படும் இதனைக் கட்டியவர் பெர்காமோம் அரசர் 2ம் ஈமுனெஸ்(Eumenes II) . இங்கிருப்பது முழுமையான கோயிலா என்றால் இல்லை என்பதே விடையாகின்றது. கோயிலின் பகுதிகளில் பெறும்பாலானவை இன்னமும் வடமேற்கு துருக்கியில் பெர்காமோம் நகரில் இன்றும் உடைந்து சிதிலமடைந்த நிலையில் காணக்கிடைக்கின்றது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பகுதி 35.64 மீ அகலமும் 33.4 மீ ஆழமும் உடையது. முன்பக்க படிக்கட்டு மட்டுமே 20 மீ அகலம் கொண்டது.
இக்கோயிலின் நீண்ட சுவரில் 113மீ நீளத்திற்கு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிற் சுவரில் பதிக்கப்பட்டிருந்த சிற்பங்கள் உடைந்த நிலையில் இருந்தாலும் அவை சொல்லும் கதையை விளக்கங்களுடன் வாசிக்கும் பொழுது நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தச் சிற்பங்களில் பெரும்பாலானவை அரக்கர்களும் அவர்களை எதிர்த்து போரிடும் கடவுளர்களுமாக சிற்பி வடித்திருக்கின்றார். அரக்கர் வாழும் சூழலாக பெரும் நாகங்களுடனும் பல கைகள் கொண்ட விரிந்த மரங்களின் பின்னனியிலும் இருப்பது போல இச்சித்திரங்கள் இருக்கின்றன. அரக்கர்களின் கொடூரமான பார்வையும் பாம்பின் வடிவிலமைந்த கீழுடல் பகுதியும் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும் தன்மையுடயவை.
கடவுளர்கள் எனும் போது எத்தகைய கடவுளர்களின் வழிபாடு அக்காலத்தில் இப்பகுதியில் வழக்கில் இருந்தது என்பது கேள்வியாக பலருக்கு எழலாம். இக்கோயில் கட்டப்பட்ட காலம் கி.மு. 2 அல்லது அதற்கு சற்றே முந்திய காலக்கட்டம். அக்காலகட்டத்தில் இப்போது இப்பகுதியில் விரிவாக வழக்கில் இருக்கும் இஸ்லாம் மதமோ அல்லது கிறிஸ்துவமோ தோன்றாத காலகட்டமது. பழமையான பேகன் வழிபாடும் கிரேக்க தெய்வங்களின் வழிபாடுமே வழக்கில் இருந்தன. அந்த வகையில் இங்கு கடவுளர்களாக அமைந்திருப்போர் கிரேக்க கடவுளர்களாவர். ஒலிம்பிக் கடவுளர் (Olympian Gods) என பொதுப்பெயரில் அழைக்கப்படும் ஸீயூஸ், அப்போலோ, ஹீரா, பொஸைடன் போன்றவர்களை இப்படியலில் குறிப்பிடலாம். இந்த ஒலிம்பிக் கடவுளர்களில் ஆண் பெண் இருபாலரும் உண்டு. இக்கடவுளர்களின் தலைவர் ஸீயூஸ். ஸீயூஸ் என்பது கிரேக்க மொழிச் சொல். பொதுவாக தற்சமயம் ரோமானியப் பெயர்களே பரவலாகி விட்டமையால் ரோமன் மொழியின் ஜூப்பிட்டர் என அழைக்கப்படுபவரே இந்தக் கிரேக்க ஸீயூஸ் கடவுள். இவர் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என அறியப்படுபவர்.
பெர்காமோன் நகர் கி.மு.1ம் நூற்றாண்டு கால கட்டத்தில் தொடர்ச்சியாக பல போர்களைச் சந்தித்தது. பல அழிவுகள் இப்பகுதியில் தொடர்ந்து நிகழ்ந்தன. இதனால் இக்கோயில் சாத்தான் குடியிருக்கும் கோயில் என்று அக்காலத்தில் குறிப்பிடப்பட்டது. இக்கோயில் பேகன் வழிபாட்டு மையமாகவும் அமைந்திருந்தது என்பதை மறுக்கலாகாது. இப்பகுதியில் பிற்காலத்தில் செழித்து நிலைத்த இஸ்லாமும் கிறிஸ்துவமும் பேகன் வழிபாடுகளை அவை உருவ வழிபாடுகளாக அமைந்தமையால் சாத்தானின் வழிபாடுகள் என்றும் கூறுவது வழக்கில் உருவானது. இதுவும் இக்கோயிலை பிற்காலத்தில் சாத்தான் வாழும் இடம் எனக் குறிப்பிடுவதற்குக் காரணமாகியது என நான் கருதுகின்றேன்.
1933ல் அடோல்வ் ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் அவரது கட்சியின் தலைமையகத்தை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. 1932ல் பெர்காமோன் அருங்காட்சியத்தில் இக்கோயிலைக் கண்ட பொழுதில் அவருக்கு இக்கோயிலில் ஸெப்பலின் ட்ரிபியூனின் மேல் இருந்த மோகத்தை அறிந்த ஆர்க்கிடெக்ட் ஆல்பெர்ட் ஸ்ப்பியர் (Albert Speer) ஸெப்பலின் ட்ரிபியூனின் வடிவத்தில் தலைமையகத்தின் மையப்பகுதியை வடிவமைத்தார். இம்மண்டபம் 1934 முதல் 1937 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டு நாஸி கட்சியின் தலைமையகம் இவ்விடத்திலேயே இயங்கி வர ஆரம்பித்தது. நாஸி கட்சியின் பல குறிப்பிடத்தக்க மாநாடுகள் இங்கு நிகழ்ந்தன.
ஜெர்மனியின் ஆட்சிபுரிந்த தலைமை பீடத்தில் இருந்தவர்களிலேயே அடோல்வ் ஹிட்லர் ஒருவரே சாத்தானின் குணம் கொண்ட ஒருவர் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. இவரது ஆட்சியில் இவரது சித்தாந்தத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் ஒரு புறமென்றால் இவரது ஆட்சியை அழிக்கத் தோன்றிய 2ம் உலகப்போரால் இன்னும் மில்லியன் கணக்கான உயிர் சேதங்கள் நிகழ்ந்தன. சாத்தானை அழிக்கும் வகையில் அமைந்த இக்கோயிலை 2ம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் சாத்தானின் நிலையை ஜெர்மானியின் பெர்லின் நகர மக்களுக்கு அளித்த ரஷ்யப் படைகள் இந்த பெர்காமோன் கோயில் பிரகாரப்பகுதியைத் தங்கள் சோவியத் ரஷ்யாவின் லெனிங்க்ராட்(Leningrad) நகருக்கு 1948ம் ஆண்டு கொண்டு சென்றன. மீண்டும் இந்தக் கோயில் 1958ம் ஆண்டில் பெர்காமோன் அருங்காட்சியகத்துக்கே திரும்பியது.
எத்தனை பிரயாணங்களை இந்தக் கோயிற் பகுதி சந்தித்திருக்கின்றது பாருங்கள். இக்கோயிலைக் கட்டிய ஈமுனெஸ் கூட இக்கோயில் இப்படி ஐரோப்பிய, ரஷியப் பயணம் செய்யும் என சற்றும் நினைத்திருக்க மாட்டார். 🙂
பெர்காமோன் கோயிலின் வெண்மையான பளிங்குத் தூண்களும் வெண்பளிங்குச் சிற்பங்களும் வரலாற்றுப் பிரியர்களின் மனதைக் கொள்ளைக் கொள்வன. இப்பெரிய கோயிலுக்கென பெர்காமோன் அருங்காட்சியகம் மிகப் பெரிய மண்டபப்பகுதியையே ஒதுக்கியிருக்கின்றது. இங்கு அமர்ந்து ஓவ்வொரு சிற்பங்களையும் பார்த்து ரசித்து அதன் விளக்கங்களைச் செவிமடுத்து குறிப்பெழுதிக் கொள்ள குறைந்தபட்ஷம் ஒன்றரை மணி நேரம் தேவைப்படும். அவசரமாக இக்கோயிலைப் பார்த்து அருங்காட்சியகத்தைப் பார்த்துச் செல்ல விரும்புபவர்கள் கூட ஆக மொத்தம் இந்த அருங்காட்சியகத்திற்கு 2 மணி நேரங்களைக் கட்டாயமாக ஒதுக்கித் தான் ஆக வேண்டும்.
பெர்காமோன் கோயிலைப் பற்றி இப்பதிவில் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. இவ்வருங்காட்சியகத்தில் இந்தக் கோயில் இருக்கும் பகுதிக்குப் பின்புறம் கிரேக்க காவிய நாயகன் டெலிஃபஸ் கதையைக் கூறும் கோயிலும், கோயிற்சிற்பங்களும் அருமையாக காட்சிக்கு ஒரு முழு நீள அறையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கதையைப் பற்றி சொல்ல எனக்கு விருப்பமென்றாலும் பிரிதொரு சமயம் வேறொரு கட்டுரையில் இதனைப் பற்றி எழுதுகிறேன்.
பெர்காமோன் அருங்காட்சியகத்தையும் அதன் உள்ளே பாதுகாக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்சிப்பொருட்களையும் உங்களுக்கு ஓரளவு அறிமுகம் செய்து விட்டேன். என்னைப் பொருத்த அளவில் நான் நேரில் பார்த்து என் மனதில் நிற்கும் அருங்காட்சியகங்களின் வரிசையில் முதல் 10 அருங்காட்சியகங்களில் இந்தப் பெர்காமோன் அருங்காட்சியகமும் இடம் பிடிக்கின்றது.
சரி. ஜெர்மனியின் பெர்லினில் ஏனைய அருங்காட்சியகங்களுக்கு நாம் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் வேறொரு நாட்டில் வேறொரு ஊரில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா?
அடுத்த திங்கள் நாம் செல்வதற்கு முன்னர் எங்கு செல்லவிருக்கின்றோம் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன். 🙂
தொடரும்….
சுபா
http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி
ஏதோ காய்கறிக் கூடையைத் தூக்கிக்கொண்டு போவது போல பழம்பெரும் கோயிலின் ஒரு பகுதியை இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா என்று எடுத்துச் சென்றதை அறிந்தால் வியப்பாக இருக்கிறது. தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன். நன்றி
மிக அரிய செய்திகளைத் தொகுத்தளித்து வருகிறீர்கள். கற்பனை ஸ்டார்ட் பண்ணியாச்!!..(எதுனா க்ளூ கொடுங்க ப்ளீஸ்..)
காய்கறிக் கூடை என்ற உங்கள் உவமானம் சிரிக்க வைத்து விட்டது. ஒரு வகையில் உண்மைதான்.
முக்கியமான வரலாற்றுச் சான்றுகளை வைத்திருப்பதையே பல நாடுகள் மிகப் பெருமையாக க் கருதுகின்றன.
சுபா
கற்பனை சரியான பாதையில் ஓட ஒரு க்ளூ தருகிறேன்..
இது வரலாற்றுச் சிறப்புகளுக்கும் பாரம்பரிய சின்னங்களுக்கும் வழிபாட்டு தலங்களுக்கும் சிறப்பு பெற்ற ஒரு நாடு.. யோசித்துக் கொண்டிருங்கள் பார்வதி..:-)
சுபா
அடுத்தது நாம் ஜெர்மனுக்கு பக்கத்தில் போக இருக்கிறோம் என நினைக்கிறேன்.சரியா. நான் ஈரோப் நாடுகளுக்கு இது வரை போனதில்லை.அது உங்கள் மூலம் நிறைவேறுகிறது.