சங்கர் ராமன்

அலாரத்தை எழுப்புங்கள்

“சிலருக்கு இந்துமதம் பிடிக்கும்

சிலருக்குப் பிடித்தமதம் கிறித்துவம்

எப்போதுமே எனக்குப் பிடித்த மதம்

தாமதமே!”

இது கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்ன வார்த்தைகள். ஒரு திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவிற்கு எதிர்பாராத விதமாக தாமதமாக வந்துவிட்டார். அந்த கூட்டத்தைக் கலகலப்பாக்க அவர் சொன்ன வார்த்தைகள் இவை. கவியரசரே சொல்லிவிட்டார் என்று சொல்லி நம்மில் பலரும் இன்று அந்த தாமதத்தையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

குறித்த நேரத்தில் எந்த இரு மனிதர்களும் சந்தித்ததாக வரலாறு இல்லை. அதைவிட மிகப்பெரிய உண்மை ஒன்று நாம் எல்லோரும் அறிந்ததே… இந்த உலகில் அதிகாலையில் அலாரம் வைத்து எழ வேண்டும் என்று படுத்தவர்கள் யாரும் அலாரம் அடித்தவுடன் எழுந்ததாகவும் வரலாறு இல்லை. மூன்று வேலைகளை நாம் சரியாகச் செய்து விடுவோம்.

அலறும் அலாரம்

அலாரம் அடிப்பதற்கு முன்னதாகவே எழுந்து அதனை அணைத்து விட்டுப் படுப்பது.

அலாரம் அடித்தவுடன் எழுந்து அதனை இன்னும் சற்று நேரம் கழித்து அடிப்பதற்காக மாற்றி வைப்பது.

இது இன்னும் கொஞ்சம் மோசமானது. அடித்த அலாரத்தை திருப்பி அடிப்பது.

இந்த மூன்று வேலைகளை நம்மில் பலர் தவறாமல் செய்து கொண்டிருப்போம்… வெற்றிக்கு எத்தனையோ விஷயங்கள் தேவை. உழைப்பு ஆர்வம், புத்திசாலித்தனம், விடா முயற்சி, வித்தியாசமாகச் செய்வது, நேர்மை என அந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் அவை எல்லாவற்றிலும் மேலானது காலம். ஆம். நம் வயதினையொத்த நபர்கள், நமக்குத் தெரிந்தவர்கள், நம்மோடு பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள் எல்லாம் இன்று எந்த நிலைமையில் இருக்கிறார்கள்? நம்மோடு வேலைக்குச் சேர்ந்தவர்கள், நம்மோடு வியாபாரம் தொடங்கியவர்கள் இப்போது எப்படியிருக்கிறார்கள். நாம் எப்படி இருக்கிறோம்? வசதிகளில், வாய்ப்புகளில் வாழ்க்கை நிலைகளில் வேறுபாடுகள் உள்ளனவா?

இருக்கும் நிச்சயம் இருக்கும். சிலர் உயர்ந்தும், வேறு சிலர் சுமாராகவும் இருக்கலாம். காரணம். அவர்களுடைய திறமை, உழைப்பு, பின்புலம் எனப் பலவாக இருக்கலாம். இந்தத் திறமை, உழைப்பு, பின்புலம் ஆகிய அனைத்தும் இருந்தும் கூட ஒரு சிலர் முன்னேறாதவர்கள் இருக்கலாம். இந்த மூன்றில் ஏதேனும் குறைவாக இருந்தும்கூட முன்னேறியவர்கள் இருக்கலாம். காரணம் அவர்கள் வாழ்க்கையை எப்படி அணுகினர் என்பதுதான். அதைவிட முக்கியம் அவன் காலத்தை எவ்வாறு செலவிட்டான் என்பதுமே ஆகும்.

அறுபது வயது வரை சராசரியாக வாழும் மனிதன் செலவழிக்கும் நேரத்தைப் பட்டியலிட்டால் நமக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் மிஞ்சுகிறது. தினம் தினம் தூக்கத்திற்கு 8 மணி நேரம், சாப்பிட, குளிக்க என்ற அன்றாட வேலைகளைச் செய்ய 4 மணிநேரம் சம்பாதிக்க நாம் செய்யும் பணி அல்லது தொழிலுக்குச் சராசரியாக 8 மணிநேரம் இவைபோக மீதமுள்ள 4 மணிநேரம் மட்டுமே தான் சொந்த வளர்ச்சிக்குச் செலவிடுகிறான் என்றால் 60 ஆண்டுகள் உயிர் வாழும் மனிதன் மொத்தத்தில் உறங்குவதற்கு 20 ஆண்டுகளும் மற்ற தினசரி வேலைகளுக்கு 10 ஆண்டுகளும் உழைப்பதற்கு 20 ஆண்டுகளும், தன் வளர்ச்சிக்கு 10 ஆண்டுகளும் செலவழிக்கிறான். அதாவது மொத்தத்தில் நமக்கான நேரம் 10 ஆண்டுகள்தான்.

இந்த 10 ஆண்டுகளில் நாம் செய்யும் சாதனைச் செயல்களோ நம்மை வரலாற்றில் ஒருவனாக இடம்பெறச் செய்யும் தகுதியடையச் செய்கின்றன. காலத்தை எப்படிப் பயன்படுத்துவது? நாம் தினசரி செய்யும் செயல்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

புதுயுகம் படைப்போம்;

சில காரியங்கள் நமக்கு முக்கியமானவை . அதே சமயம் அவை அவசர அவசரமாக செய்து முடிக்க வேண்டியவை.
(எ.கா) : ஒருவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகத் தெரிகிறது, அதனை அகற்ற அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும். இது தவிர்க்க இயலாத செயல். இதற்கு நேரம் செலவழிக்க வேண்டியது முக்கியமானவை. அதைவிட அவசரமானதும் கூட.

வேறு சில வேலைகள் அதே அளவு அவசரமான வேலைதான். ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடித்தாக வேண்டும். ஆனால் அறுவை சிகிச்சை போல முக்கியமானதாக இல்லை.
(எ.கா) : இந்த மாதம் கரண்ட் பில் கட்டுவது, நிச்சயம் கட்டியாக வேண்டும். ஆனால் இது வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கப் போவது இல்லை. எனவே இது அவசரம் ஆனால் முக்கியமில்லை.

மூன்றாவது வகை செயல்கள் முக்கியமும் இல்லை. அவசரமும் இல்லை.
(எ.கா) : பழைய பேப்பர்கள் போடுவது. அரட்டை அடிப்பது, வேடிக்கை பார்ப்பது போன்ற பல வேலைகளைச் சொல்லலாம்.

நான்காவது வகை சற்று வித்தியாசமானது. அந்த செயல்கள் அவ்வளவு அவசரமில்லை. ஆனால் அவை முக்கியமானது.
(எ.கா) : எதிர்காலத்திற்கு திட்டமிடுதல் புதிய விஷயங்களைச் சிந்திப்பது, உறவுகளைப் பேணுவது, ஆரோக்ய விஷயங்கள் கற்றுக்கொள்வது போன்றவைகள்.

இவற்றில் தினசரி எதில், எதுபோன்ற செயல்களில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம்? இதனைச் சரியாக யோசித்து, கவனமாகச் செய்ய கூடுதல் பலன்கிடைக்கும். ஒவ்வொரு நாளும், அன்றைக்குச் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிடுங்கள்… அதில் முடிக்க முடிந்ததை மட்டும் உடனடியாக செய்துவிடுங்கள். காலத்தின் அருமை நமக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு விநாடியும் வெற்றி நமக்காக காத்திருக்கிறது. நாம் சரியானபடி செயல்பட வேண்டும்.

“திட்டமிடாத எவரும்

வெற்றிபெறமுடியாது”

என்பது முதுமொழி.

ஒலிம்பிக்போட்டிகளில் தோற்றவருக்கும் ஜெயித்தவருக்கும் அதிகவித்தியாசம் இருப்பதில்லை. மைக்ரோ விநாடிகளில்தான் வெற்றி காத்திருக்கிறது. விநாடிகளில் பல்வேறு நிகழ்வுகள் நம்மை ஆட்டிப்படைத்துள்ளன.

1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் நாளை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. உலக சரித்திரத்தில் ஒரு கருப்பு நாள் அது. ஹரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது இரு கதிரியக்க குண்டுகள் வீசப்பட்டன. 30 விநாடிகளில் 2 லட்சம் பேர்கள் கொல்லப்பட்ட பரிதாபம் விநாடிகளின் விபரீதத்தை நமக்கு உணர்த்தி விட்டது. இலக்கை நோக்கி செல்லும் ஏவுகணைகளுக்கு இரண்டு நாளுக்கு முன்பிருந்த கவுண்ட் டவுண்-ஐ ஆரம்பித்து விடுகிறோம். நம்முடைய நிலை என்ன? பொதுவாகத் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் நம் மாணவர்கள் ஒரு சபதத்தை ஆக்ரோஷமாகச் செய்வார்கள்… “நாளையில் இருந்து அன்னன்னக்கு பாடத்த அன்னக்கே படிச்சிரனும்…” ஆனால் மறுநாள். ஏற்கனவே பலமுறை பார்த்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதையே வெறித்துப்பார்க்கும் பழக்கம் நம்மிடையே, நம் மாணவர்களிடம் காணப்படுகிறது. ஒரு அழகான கவிதை எனக்கு ஞாபகம் வருகிறது. யார் எழுதியது என்பது எனக்குத் தெரியாது. நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ள வேண்டியதுதானே.

ஓடாத கடிகாரம்கூட

ஒரு நாளில்

இருமுறை

சரியான நேரத்தைக்

காட்டுகிறது

என்றன அழகான கவிதை!. இக்கவிதை பல உண்மைகளை நமக்குக் கற்றுக்கொடுத்து விடுகிறது.

எம்.ஜி.ஆர். சமாதி

இனி நீங்கள் அலாரத்தை எழுப்புபவராக இருங்கள். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் சமாதியில் அவரோடு புதைக்கப்பட்ட அவரது கைக்கடிகாரம் இன்று வரை ஓடிக்கொண்டிருப்பதாக இன்னும் சிலர் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்… அவரின் சமாதிக்குச் செல்லும் பலரும் கடிகாரம் ஓடுகிறதா என்பதனை அறிய காதுவைத்து கேட்கிறார்கள்… இது பரவாயில்லை. இன்னும் சிலபேர் ஓடாத கடிகாரத்திற்கு சாவி கொடுப்பதற்கு அந்தச் சமாதியினை உடைக்க முயற்சி செய்ததையும் நாம் அனைவரும் அறிவோம்…

சமாதியில் இருக்கும் கடிகாரம் கூட ஓடவேண்டும் என்ற அக்கறை கொண்ட நாம் நம்முடைய காலக்கடிகாரத்தை சுழல விடவேண்டாமா?.

திரு லேனா. தமிழ்வாணன் அவர்கள் ஒரு கூட்டத்தில் சொன்ன அருமையான செய்தியைச் சொல்கிறேன். ஒரு மாதத்தின் அருமை தெரிய வேண்டும் என்றால் குறைப்பிரசவத்தில் பிள்ளை பெற்ற குணவதியிடம் கேட்டறியலாம். அவள் படும்பாடு எத்தகையது. எத்தகைய கடினமானது என்பது புரியும். ஒரு வாரத்தின் அருமை யாருக்குத் தெரியும்? வாரப்பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும். ஒரு நாளின் அருமை யாருக்குத் தெரியும்? ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைப் பார்த்த பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.

ஒரு மணி நேரத்தின் அருமையை நுழைவுத்தேர்வு எழுதும் மாணவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒரு விநாடியின் அருமை யாருக்குத் தெரியும்? விபத்தில் அசந்து போனவனுக்கு விவரமாய்த் தெரியும்… ஒரு மைக்ரோ செகண்டின் அருமை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை தவறவிட்ட வீரனுக்குத் தெரியும். என்ன அருமையான செய்தி. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு செய்தியைச் சொல்கிறது. தமிழ் இலக்கியத்திலும் ஒரு அழகான செய்தி நேரத்தைப் பற்றி உள்ளது.

“ஒன்றே செய்

ஒன்றும் நன்றே செய்

நன்றும் இன்றே செய்

இன்றிலும் இப்போதே செய்துவிடு”

என்பார் திருமூலர். நாம் செய்ய வேண்டிய நல்ல செயல்களை உடனடியாகச் செய்துவிட வேண்டும். ஏனெனில் நம்முடைய மனது மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு புத்தாண்டின் போதும் ஏதாவது ஒரு புது சபதம் ஏற்போம். இந்த ஆண்டில் இதைச் செய்ய வேண்டும். அந்த வருட இறுதியில் நாம் செய்த சபதத்தை நிறைவேற்றி இருக்கிறோமா?… நிறைவேற்றி இருந்தால் நாம் வெற்றிக்கு மிக அருகிலே இருப்பதாக அர்த்தம்.

சாதனை நாயகர்கள்

உலகிலேயே மிக அதிகமாக சம்பாதிக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும், கேப்டன் தோனிக்கும் அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை மதித்து அவர்களுக்கு இறைவன் 48 மணிநேரம் கொடுத்திருக்கானா? இல்லையே. பிறகு எப்படி ஜெயித்தார்கள்? அவர்கள் காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்… நேரம் எவ்வளவு பெரிய பொக்கிஷம். அதனை நாம் உணர்ந்து கொண்டாட வேண்டாமா?.

ஓரு சின்ன உதாரணம். ஓரு சிறிய இரும்புத்துண்டு. அதை அப்படியே விற்றோம் என்றால் 10 ரூபாய் கிடைக்கும். அதையே சற்று வடிவம் மாற்றி ஒரு குதிரையின் லாடமாக மாற்றினால் 20 ரூபாய் கிடைக்கும். அதையே குண்டூசிகள் ஆக்கினால்… தொடர்ந்து பாருங்கள்.

ஒரு பொருளின் மதிப்பு அதன் நுட்பத்திலேதான் அமைந்திருக்கிறது. அது போலத்தான் காலமும், ஒரு மணி நேரத்தில் பத்து ரூபாய் சம்பாதிப்பதும் லட்ச ரூபாய் சம்பாதிப்பதும் அவரவர் காலத்தைப் பயன்படுத்தும் முறையிலே அமைகிறது. நிறைவாக இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். ஒத்திப்போடாதீர்கள்.

ஒத்திப்போட்டவர்களை உலகம் புறக்கணித்து விடும். நம்முன் இருக்கும் வேலைகளை அவசரமானவை, முக்கியமானவை என்று பிரித்துக்கொண்டு முன்னர் சொன்னபடியே செய்யுங்கள். இரண்டும் இல்லாத வேலைகளை செய்யாதீர்கள். ஒன்றுமே வேலை இல்லையா? நாளை என்ன வேலை செய்யலாம் என்று பட்டியல் போடும் வேலையைச் செய்யலாமே. அதுவும் இல்லை என்றால் சின்ன தூக்கம் போடலாம். தப்பில்லை. உடல் நலம் பெறும். தூக்கம் வேண்டாம் என்றால் தியானத்தில் இருங்கள். தியானத்தில் நிறைய நன்மை உண்டு.

இந்த அத்தியாயத்தில் கதை ஒன்றும் சொல்லவில்லையே என்ற குறை உள்ளது. நேரம் கருதி ஒரு கதை சொல்கிறேன். ஒரு ஊரில் ஒரு தொழிலதிபர் இருந்தார். ஒருநாள் காலையில் அவரது வங்கி மேலாளரிடமிருந்து ஒரு போன் வந்தது. “சார் உங்க கணக்கில யாரோ ஒருவர் 86,400 ரூபாய் டெபாஸிட் போட்டிருக்கிறார். என்ன பண்ணலாம் என்றார். அவர் யார் என்று தெரியுமா?’என்று கேட்டால் தெரியாது’ என்றார் வங்கி மேலாளர். ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஒரு ரூபாயா? இரண்டு ரூபாயா? 86,400 ரூபாய். சும்மாவா? தலைகால் புரியவில்லை மனிதருக்கு.

இரவு மறுபடியும் தொலைபேசி அலறுகிறது. “சார் அந்த 86,400 ரூபாயை யாரோ எடுத்துட்டாங்க () சார்” என்றார் வங்கி மேலாளர். “அதெப்படி முடியும்” என்று இவர் அலற பெரிய ஆர்ப்பாட்டமே நடந்துவிட்டது. 86,400 டெபாஸிட் செய்தபோது யார் செய்தது என கவலைப்படாதவர் பணம் போனதும் கவலையோடு அலறுகிறார். நாள்தோறும் பெயர் தெரியாத ஒருவர் நம் கணக்கில் 86,400 டெபாஸிட் செய்து இரவே அதை எடுக்கவும் செய்தால் வருத்தம் வராதா?

என்ன அந்த 86,400 ரூபாய்…? ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணிநேரம். ஒரு மணிக்கு அறுபது நிமிடம். ஒரு நிமிடத்திற்கு அறுபது விநாடிகள். அப்படியானால் 86,400ரூபாய். அதாவது ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்திக் கொள்ள 86,400 விநாடிகளைக் கடவுள் நமக்காக டெபாஸிட் செய்கிறார். அன்று இரவே அதை எடுத்தும் விடுகிறார். அந்தப் பணத்தை, அதாவது காலத்தை நாம் வீணாக விடலாமா? பயன்படுத்த வேண்டாமா?

ஒவ்வொரு ரூபாயையும் எண்ணி, எண்ணி செலவழிக்கிற மாதிரி அல்லது யோசித்து முதலீடு செய்து சம்பாதிக்கிற மாதிரி ஒவ்வொரு விநாடியையும் பத்திரமாக செலவழிக்க வேண்டும். காலக்கெடு வைத்தே எந்த வேலையையும் செய்யுங்கள். காலம் முடிவதற்குள் வேலையைச் செய்துவிடுங்கள்.

காலத்தைக் கொண்டாடுங்கள்

காலம் உங்களைக் கொண்டாடும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.