Blog

  • ஏன் இப்படி?

    பவள சங்கரி

    சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதிய கதை. இளகிய மனம் படைத்தவர்கள் படிக்காமல் இருப்பது நல்லது. இப்படியும் நடக்குமா? உண்மையாக இருக்குமா? அல்லது வணிக நோக்கில் இப்படி ஒரு தந்திரமோ என்ற எண்ணம் கூட தோன்றலாம்.. இல்லைங்க.. இது சத்தியமாக நடந்த ஒரு சம்பவம். நடக்கக்கூடிய சம்பவம்தான்.. படிப்பினை ஊட்டும் சம்பவம்தான்.. வாசித்துப் பாருங்கள் புரியும்!

    “என்னங்க, உங்க அம்மாகிட்ட இருந்து இன்னைக்கும் தபால் வந்திருக்கு. இந்த வாரத்தில் மட்டும் இது இரண்டாவது தபால்.  பாவங்க அத்தை, அவுங்களுக்கு ஒரு பதில் தபால்கூட போட முடியாதா உங்களுக்கு?  நாம பதில் போடாட்டியும், அவங்க தவறாம வாரம் இரண்டு தபால் போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த தடவை ரொம்ப விசனமா எழுதியிருக்காங்க. அந்த டேபிள் மேலதான் இருக்கு, எடுத்துப்பாருங்க. ஒரு நாலு வரி பதில் கடுதாசியாவது எழுதிப் போடுங்க”

    “போடலாம். என்னத்த எழுதறது. நாம எழுதப்போற எதுவும் அவங்கள சந்தோசப்படுத்தப் போறதில்ல.. அதுக்கு சும்மாவே இருக்கலாம்னு தோணுது சந்திரா.”

    “அதுக்குத்தான் பேசாம அவங்களையும் இங்கேயே கூட்டிக்கிட்டு வந்துடலாம்னு சொல்றேன். அந்தம்மா, வயசான காலத்துல பாவம் ஒண்டியாளா அங்க அல்லாடிக்கிட்டு கிடக்கறாங்க. வயசாவுதில்ல.. ஏதாச்சும் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா, நம்ம மனசும் தாங்காதில்ல.. பேசாமப்போயி வீட்டை காலி பண்ணிப்புட்டு அவங்கள இங்கேயே கூட்டிக்கிட்டு வந்திடுங்க. அடுத்த மாசம் காளிப்பட்டி தேரு வருது. அதுக்கு நம்மள கட்டாயம் வரணும்னு எழுதியிருக்காங்க. நாமளும் ஊரு பக்கம் போயி வருசம் 2 ஆவுது. தேருக்கு  ஒரெட்டு போயிட்டு, உங்க அம்மாவையும் கூட்டிக்கிட்டு வந்துடலாம்”

    “எனக்கு மட்டும் எங்கம்மாவை நம்மகூட கொண்டாந்து வச்சிக்க ஆசை இருக்காதா .. பாவம் இங்க இந்த ஒண்டு குடித்தனத்துல அவங்களும் கஷ்டப்படணுமானுதான் தயக்கமா இருக்கு. அவசரத்துக்கு ஒதுங்கக்கூட இங்க வழியில்ல. இந்த கக்கூசு பக்கம் போகணும்னா கூட பம்ப்புல தண்ணி அடிச்சு எடுத்துக்கிட்டு ஓடணும்.. பாவம் அவங்களால அதெல்லாம் முடியுமா. என்னமோ நமக்குத்தான் தலையெழுத்து, இப்படி கஷ்டப்படணும்னு. அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும்ணுதானே அங்கேயே விட்டு வச்சிருக்கேன்.  பஞ்சம் பொழைக்க வந்த இடத்துல, பட்ற பாட்டுல, அவங்களையும் ஏன் வாட்டி வதைக்கணும்னு பாக்கிறேன் சந்திரா”

    “இல்லைங்க, அவங்களை இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டோம்னா நான் வேலைக்குப் போற நேரத்துல புள்ளைங்க தனியா இருக்க வேண்டாமே. பொட்டைப் புள்ளைங்க. காலம் கெட்டு கிடக்கு. நீங்களும் கடையை சாத்திப்புட்டு வீட்டுக்கு வர மணி பத்தாவுது.  நான் வர்றதுக்குள்ளேயும் இருட்டிப் போவுது. அதுக பாவம் பசியோட தனியா கிடக்குதுங்க. ஏதோ இன்னும் கொஞ்ச நாளைக்காவது நமக்கும் ஆதரவா இருக்கட்டுமே”

    “எல்லாம் சரிதான் சந்திரா. அவங்களுக்கு அங்கயாவது அக்கம் பக்கத்துல நாலு நல்ல மனுசங்களாவது உதவிக்கு இருக்காங்க. எதுனாலும் உடனே ஓடியாந்து நிப்பாங்க. இங்க என்ன சத்தம் போட்டாலும் ஏன்னு கேக்க நாதியில்ல. அதான் பட்டணம். நம்ம பொழப்பும் இன்னும் தேறின பாட்டைக் காணோம். ஏதோ வாயுக்கும், வவுத்துக்கும் போதுமானதா இருக்கு. அம்மாவுக்கு அனுப்பற அந்த கொஞ்ச பணத்துலயே அதுவும் பாவம் சந்தோசமாத்தான் இருக்கேன்னு சொல்லுது. இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படியே ஓட்டலாம்னு பாக்குறேன்”

    “இந்த தடவையாவது காளிப்பட்டி தேருக்கு ஒரெட்டு போயிட்டு வரலாம்ங்க.. புள்ளைங்களும் ஆசைப்படுதுங்க. இந்த இயந்திர வாழ்க்கையிலருந்து இரண்டு நாளாவது ஓய்வு வேணும் போல இருக்கு.. என்னங்க…..   என்னங்க……. ”

    குறட்டை சத்தம் மட்டுமே பதிலாக வந்தது சாமியப்பனிடமிருந்து. பாவம் விடியற் காலையில் மூன்று மணிக்கு எழுந்து மார்க்கெட் போய் காய் வாங்கிவந்து, ஆறு மணிக்கெல்லாம் கடை திறந்தால்தான் காலை வியாபாரம் சூடு பிடிக்கும்.  வேலைக்குப் போகிறவர்கள் அந்த நேரத்திற்குள் காய்கறியும், மளிகையும் வாங்க அவசரமாக வருவார்கள். இல்லையென்றால் வேறு கடைக்குப் போய்விடுவார்கள்.  இரவு கடை பூட்டிவிட்டு வீடு வந்து சேர பத்து மணி ஆகும். நிம்மதியான சாப்பாடு அந்த ஒரு நேரம்தான். உண்ட களைப்பில் 10 நிமிடத்தில் குறட்டை சத்தம் வீட்டைத் தூக்கும். உழைத்துக் களைத்துப்போன கணவனின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சந்திராவும் தூங்கிப் போனாள்.

    அன்று வேலைக்குப் போயிருந்த இடத்தில் ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லை சந்திராவிற்கு. கார்மெண்ட்ஸ் கம்பெனியில் அட்டெண்டர் வேலை என்றாலும், ஒரு நொடிக்கூட ஓய்வு எடுக்க முடியாது. உள்ளே நுழைந்தது முதல் வெளியில் வரும்வரை பம்பரமாகச் சுழல வேண்டும். மணிக்கூலி என்பதால் அத்தனைக் கறாராக வேலை வாங்குவார்கள். குவிந்து கிடக்கும் துணிகளை ரகம் வாரியாகப் பிரித்து தனித்தனியாக மடித்து அடுக்கி வைக்க வேண்டும். இடையில் சூப்பர்வைசர் ஏதேனும் வேலை சொன்னால் ஓட வேண்டும். தையல் வேலை பார்ப்பவர்களுக்கு ஏதேனும் தேவையென்றால் ஸ்டோர் ரூமில் போய் எழுதி வைத்துவிட்டு வாங்கி வர வேண்டும். 15 நிமிட சாப்பிட ஓய்வு எடுக்கும் நேரத்தில் மட்டும்தான் வீட்டு நினைவு வரும். இன்று என்னமோ வேலையில் நாட்டம் செல்லாமல் வீட்டிற்கு நேரமாகச் செல்ல வேண்டும் என்று மனசு கிடந்து அடித்துக்கொள்கிறது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இன்று காலை கணவனையும்,  குழந்தைகள் சிநேகா, தாரணி இருவரையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும்போது வெளியில் ஏதோ சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டுப் பெரியவர் அந்த லைன் வீட்டின் காம்பவுண்ட்டின் அருகில்  நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பவனிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக அவ்வப்போது வந்து நின்று நோட்டம் பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.  அந்த ஆளைப் பார்த்தாலே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. திருட்டு முழி நன்றாகத் தெரிந்தது. மூத்தவள் சிநேகா இந்த பத்து வயதிற்கு, மதமதவென்று உடல் வளர்ந்த அளவிற்கு விவரம் இல்லை. இன்னும் மழலை மாறாமல் இருக்கிறாள். அவளை நம்பி ஆறு வயது கடைக்குட்டி தாரணியையும் விட்டுவிட்டு வீட்டைப் பூட்டி சாவியை எறவானத்தில் சொருகிவிட்டு வந்திருக்கிறாள். காலம் கெட்டுக்கிடக்கும் இந்த வேளையில் இப்படிச் செய்வது சரியில்லைதான் என்றாலும் வேறு வழியில்லையே. எப்படியோ மாலை ஐந்து மணி வரை பொழுதை ஓட்டியாகிவிட்டது. இதற்குமேல் பொறுமை இல்லை. சூப்பர்வைசரிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான். முன்னாடியே கிளம்புவதென்றால் முன்கூட்டியே சொல்ல வேண்டும் என்ற அவருடைய நிபந்தனையை இன்று நிறைவேற்ற முடியாதலால் திட்டு வாங்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

    பஸ் பிடித்து நசுங்கி, நெளிந்து, நொந்து நூலாகி வீடு வந்து சேருவதற்குள் மணி ஆறைத் தாண்டியிருந்தது. அவசர, அவசரமாக வீடு நோக்கி ஓடி வந்தாள். கடவுளே.. ஏதும் அசம்பாவிதமாக நடந்திருக்கக் கூடாது. இன்று மட்டும் நம் மனம் ஏன் இப்படி அலைக்கழிக்கிறது, இதற்கு முன்பு இப்படி ஆனதில்லையே என்று தோன்றியது. ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையத்திலிருந்து வீடு நோக்கி ஓடி வந்தாள் மூச்சிரைக்க. வீட்டின் அருகில் வந்தபோது வீடு திறந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் ஒரு கணம் நெஞ்சு அடைக்க நின்றுவிட்டாலும், மறுகணம் வேகமாக வீட்டிற்குள் சிநேகா என்று கத்திக் கொண்டே ஓடினாள். கண்ணு சிநேகா, தாரணி என்று மூச்சிரைக்க ஓடி வந்தவளைப் பார்த்து சாமியப்பன் பதறிப்போய் ‘என்ன.. என்னாச்சுமா, ஏன் இப்படி ஓடியாற’ என்றான் பதட்டத்துடன். கணவனைப் பார்த்தவுடன் அத்தனை பாரமும் இறங்கியது போல லேசாக இருந்தது. அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டவள், காலையில் நடந்ததையும், அதனால் பதறியடித்துக்கொண்டு வீடு திரும்பியதையும் சொன்னாள். அந்த நேரத்தில் கணவன் வீட்டிற்கு வந்திருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கவில்லை அவள். கடைக்கு அருகில் யாரோ முக்கியமான புள்ளி ஒருவர் இறந்துவிட்டதால் கடையை மூடச் சொல்லிவிட்டார்களாம். அதனால் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இதற்கு எப்படியும் ஒரு தீர்வு தேட வேண்டும் என்று இருவரும் நினைத்துக் கொண்டார்கள்.

    மளமளவென்று சமையலை முடித்து, குழந்தைகளுக்கும், கணவனுக்கும் கொடுத்துவிட்டு , தானும் சாப்பிட்டு, சமையல்கட்டை ஏறக்கட்டிவிட்டு வந்தாள்.  இன்று எப்படியும் கணவனிடம் பேசி, மாமியாரை கூட்டிவந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் மெல்ல பேச்சை ஆரம்பித்தாள். மனைவியின் இந்தப் பதட்டத்திற்கு  அர்த்தம் இருப்பதை உணர்ந்துதான் வைத்திருந்தான் சாமியப்பன். அதனால் பேச்சை ரொம்பவும் வளர்க்காமல், இருவரும் ஒரு வழியாக மாமியாரைக் கூட்டிவந்துவிடுவது என்று பேசி முடிவெடுத்தார்கள். அம்மாவிற்கு அடுத்த நாள் கடிதம் எழுதிப் போட்டுவிட்டு, காளிப்பட்டி தேருக்குப் போய் மனதார வழிபாடு செய்துவிட்டு அம்மாவை கூட்டிவந்துவிட வேண்டியதுதான். ஏனோ தன் சொந்த ஊரின் உறவு அத்தோடு விட்டுப்போய்விடுமோ என்று இனம் புரியாத ஒரு ஏக்கம் இதயத்தைக் கவ்விப் பிடித்தது.

    அடுத்த நாள் ஊருக்குக் கிளம்பப் போகிறோம் என்பதில் குழந்தைகளுக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. காளிப்பட்டி கந்தசாமித் திருக்கோவில் தைப்பூசத் தேர் திருவிழாவில், சேலம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், ராசிபுரம், குருசாமிபாளையம், திருச்செங்கோடு, சங்ககிரி, இடைப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம்  சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து  காவடி சுமந்தபடி அலைஅலையென நடைப்பயணமாக திரண்டு வருவார்கள். கந்தசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,  கோவிலில் உள்ள வழிவிடு கணபதி, இடும்பன், வேலாயுதசாமி, மூலவராக வீற்றிருக்கும் கந்தசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். தைப்பூசத் திருவிழாவில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிலில் திரண்டு, அவரவர்  பங்களிப்புத்  தொகை செலுத்தி, 10 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் செய்து, கந்தசாமிக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். காலை முதல் மாலை வரை கோவிலில்  நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.  மதியம் 3 மணிக்கு விநாயகர் தேரோட்டமும்,  மாலை 4 மணிக்கு கந்தசாமி சமேத வள்ளி-தெய்வானை அலங்காரத்தில் முருகன் தேரோட்ட நிகழ்ச்சியும் வழக்கமாக நடக்கும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், “அரோகரா’ கோஷம் எழுப்பி இறைவனை வழிபட்டு, கோவில் வளாகத்தைச் சுற்றி தேரை இழுத்துச் செல்லும்போது பக்திப் பரவசத்தில் உடலெல்லாம் சிலிர்த்துப்போகும். தேருக்கு முன்னே, யானை செல்ல, தொடர்ந்து காவடி, கரகாட்டம் ஆடியபடி பக்தர்கள் மேள தாளம் முழங்க தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்த முறை குழந்தைகள் இருவரையும் மயில் காவடி எடுக்கச் சொல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை இந்நேரம் அத்தை செய்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்தாள். ஒரு வழியாக எல்லாம் முடிந்து அலுத்துப்போய் படுக்கைக்குச் செல்லும் போதும், சென்று படுத்த பின்பும் ஏதோ ஒரு வேலை பாக்கியிருப்பதாக உறுத்திக் கொண்டேயிருந்தது. உடல் அசதியில் எழுந்து போகமுடியாமல் , காலை பார்த்துக்கொள்ளலாம் என்று கண்ணயர்ந்து விட்டாள்.

    குழந்தைகளை பள்ளிக்கு அவசரமாக தயார் செய்து கொண்டிருந்தாள். வழக்கம்போல கடைக்குட்டி சாப்பிடுவதற்கு அடம் பிடித்தது. இன்று சற்று அதிகமாகவே அடம் பிடித்தாள். தோசை ஊற்றி, அவளுக்குப் பிடித்த தேங்காய்ச் சட்னி வைத்துக் கொடுத்தும் வாங்க மறுத்தவளை கோபத்தில் கன்னத்தில் ஒரு தட்டு தட்டியதுதான் தாமதம் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டு பின்பு சிணுங்கிக் கொண்டே ஒரு தோசை சாப்பிட்டு முடித்து இருவரும் ஒரு வழியாக வேனில் ஏறினார்கள். அடுத்து கணவன் அவசரமாக வந்து நின்றுகொண்டு நேரமாகிவிட்டது என அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். தானும் சீக்கிரம் கிளம்ப வேண்டுமே என பரபரப்பாக இயங்க ஆரம்பித்தாள்.

    “இன்னைக்கும் மாவிலருந்து கரண்டியை எடுக்காம அப்படியே அரைகுறையா மூடி வச்சியா. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தி வராது. இங்க பாரு எப்படி மாவு காய்ந்து போயிருக்கு. அரிசி விக்கிற விலைக்கு எப்படி நாசம் பன்னறே நீ.. உள்ளுக்குள்ள எதுனாச்சும் ஊறிக்கிட்டு போனாக்கூட தெரியாது”

    “அப்பப்பா, ஆரம்பிச்சாச்சா.. மாமியார் இல்லைங்கற குறையே தெரியாம உங்க டியூட்டியை ஒழுங்கா செய்துடறீங்க.. சரி, சரி எல்லாம் இன்னைக்கோட முடிஞ்சி போச்சே. நம்ம ஆட்டம் க்ளோஸ். நாளையிலருந்து எனக்கும் ஒரேடியா ரெஸ்ட்.. அத்தை வந்தா இந்த பொறுப்பெல்லாம் எடுத்துக்குவாங்களே..…  அப்பாடி..”

    தட்டை எடுத்து வைத்து, அருகில் தண்ணீரும் சட்னி கிண்ணமும் வைத்துவிட்டு தோசைக்கல்லை அடுப்பில் போட்டாள். கல் காய்ந்தவுடன் மாவை எடுத்து ஊற்றினாள். அடுத்த கரண்டி மாவை உள்ளிருந்து எடுத்தவள்.. ஏதோ கறுப்பாக சுண்டு விரல் மொத்தத்தில் மொழு மொழுவென்று… தூக்கினால் அரை அடி நீளத்திற்கு .. என்னது இது. எப்படி மாவுக்குள்ள வந்தது.. முழுவதும் தூக்கினால் வாயைத் திறந்து கொண்டு இறந்து கிடந்தது.. ஐயோ.. என்னது இது.. கடவுளே குட்டிப் பாம்பு. எப்படி இதுக்குள்ள..

    ஏய் சந்திரா.. என்னடி இது? ஐயோ குழந்தைகளுக்கு இந்த மாவுலயா தோசை ஊத்திக்குடுத்தே.. அடிப்பாவி..

    சாமியப்பனின் செல்போன் சிணுங்க ஆரம்பித்தது..  ஓடிச்சென்று எடுத்தவன் மறு முனையில் வந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் அலறியபடி பிதற்றினான். பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் திடீரென்று வாயில் நுரை தள்ளி மயங்கி சரிந்துவிட்டனராம். உடனே வரச்சொல்லி பள்ளி ஆசிரியை போன் செய்தார். அப்படியே எழுந்து தன் யமகாவை உதைத்து, ஏறி உட்கார்ந்தது மட்டுமே தெரியும் அவனுக்கு.. தெருவில் போவோர் வருவோர் யாரும் கண்ணிற்கு புலப்படவில்லை. ‘டேய், சாவு கிராக்கி, ஊட்டுல சொல்லிட்டு வந்துகிணியாடா பேமானி, உங்கப்பன் ஊட்டு ரோடாட்டம் நீ பாட்டுக்கு கண்ணை மூடிக்கினு போறயேடா’ என்று ஆட்டோகாரன் கத்துவது கூட காதில் விழாமல் போய்க்கொண்டிருக்கிறான் சாமியப்பன்…

    குழந்தைகள் வாயில் நுரை தள்ளியது என்றால், என்ன நடந்ததோ தெரியலியே.. பாம்பு விசம் தலைக்கு ஏறியிருக்குமோ. ஐயோ சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிச்ச குழந்தையைக்கூட கட்டாயப்படுத்தி விசத்தை கொடுத்துப்பிட்டேனே.. என் செல்வங்களை இனி பார்க்க முடியுமா.. நானே அவங்களுக்கு எமனாயிட்டேனே..  இனிமேலும் எதையும் கண்ணுல பார்க்கக்கூடாது. போதுமடா சாமீ… இந்த பிழைப்பு… மளமளவென மர அலமாரியைத் திறந்தவள் ஒரு நூல் சேலையை உருவினாள். அங்கேயே மேலே உத்திரத்தில் தொங்கிய ஃபேனில் அந்தச் சேலையைக் கட்டி, தலையை உள்ளே விட்டு… தூக்கில் தொங்கிவிட்டாள்..  கைகால் வெட்டி இழுக்க, நாக்கு வெளியே தள்ளி அப்படியே அடங்கிவிட்டாள்.

    சுய நினைவே துளியும் இல்லாத நிலையில் யமகா போன திசையில் அப்படியே போய்க்கொண்டிருந்தவன் எதிரில் வேகமாக வந்த தண்ணீர் லாரியைக் கவனிக்காமல் போய்க்கொண்டிருந்தான். திருப்பத்தில் திரும்பும்போது எதிரில் வந்து நேருக்கு நேர் மோதியது அந்த லாரி. பத்து அடித் தள்ளி தூக்கி வீசியது சதைப்பிண்டமாய். இரத்தச் சகதியில் துடிதுடித்து அடங்கினான் சாமியப்பன்.

    பெற்றோர் வரும்வரை காத்திருந்தால் ஆபத்து என்று உணர்ந்த பள்ளி முதல்வர், குழந்தைகளை பள்ளி வேனில் எடுத்துப் போட்டுக்கொண்டு இரண்டு ஆசிரியைகளையும் உடன் அனுப்பினார். மயங்கிக் கிடந்த குழந்தைகளிடம் கொஞ்சமும் அசைவு இல்லை. உடல் சில்லிட்டுக் கொண்டிருந்தது. உடலெல்லாம் நீலம் பூத்துக்கிடந்தது. மருத்துவமனையில் எடுத்துச் சென்றபோது, உயிர் பிரிந்துவிட்டது என்ற பதில்தான் வந்தது. ஆசிரியைகள் அதிர்ச்சியில் செய்வதறியாது உறைந்து நின்றார்கள்.

    இது எதுவுமே தெரியாமல், அடுத்த நாள் வரப்போகும் தன் பேரக் குழந்தைகளுக்காக  பாட்டி, அவர்களுக்குப் பிடித்த காளிப்பட்டி கை முறுக்கும், அதிரசமும் வாங்கி வைத்துக்கொண்டு, மகனுக்குப் பிடிக்குமே என்று வீட்டில் லட்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்.

    Share
  • புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் – பகுதி 1

    -மேகலா இராமமூர்த்தி

    (அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் நான் ஆற்றிய உரை)

    சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள மேரிலாந்தில் (Maryland) நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் உரையாற்றக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்தியாவிலிருந்து வந்திருந்த அறிவுசால் தமிழறிஞர்களுக்கு இணையாக மேடையில் உரை நிகழ்த்துவதற்குக் கிடைத்த அவ்வாய்ப்பினை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவே கருதுகின்றேன்.

     அம்மாநாட்டில் ‘புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் என் சொற்பொழிவு அமைந்திருந்தது. அதில் பேசப்பட்ட கருத்துக்களை நம் ’வல்லமை’ வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

    mekala1           கருத்தரங்கில் பங்குபெற்ற முனைவர் சிவயோகநாதன், கவிஞர் அறிவுமதி, மருத்துவர் சரோஜா இளங்கோவன் ஆகியோரோடு நான்….        

      இனி என் உரை….

    சங்க இலக்கிய நூல்களாக அறியப்படுபவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவற்றில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக வைத்தெண்ணப்படுவது புறநானூறு. பண்டைத் தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாறுகளையும், அவர்தம் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நாகரிகம் போன்ற அனைத்தையுமே அறிந்துகொள்ள உதவும் ஓர் சிறந்த ஆவணமாக, காலக் கண்ணாடியாக இன்றும் திகழ்வது வீரத்தையும், ஈரத்தையும் ஒருங்கே போற்றுகின்ற புறநானூறு. மிகப் பழைய நூல்களெல்லாவற்றிற்கும் பழையதெனக் கருதப்படும் தொல்காப்பியத்திற்கு முன்னே தோன்றிய செய்யுட்களையும் அதற்குப் பின்னே தோன்றிய செய்யுட்களையும் தன்னகத்தே கொண்டு, தமிழ் நாகரிகத்தின் தொன்மையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பது இந்நூல் என்பது தமிழர்களாகிய நாம் அனைவருமே பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்று.

    புறநானூற்றுப் பாடல்கள் அனைத்திலுமே அரசனின் புகழும், வீரமும் கொடைத்தன்மையும், அவன் பெற்ற வெற்றிகளுமே பேசப்படுகின்றன என்ற தவறான கருத்து நம் மக்கள் மத்தியில் (பரவலாக) நிலவி வருகின்றது; அஃது உண்மையில்லை. போரின் அவலம், வாழ்வின் நிலையாமை, கையறுநிலை, கைம்மைத் துன்பம், கைக்கிளை (ஒருதலைக் காதல்), மறக்குடி மகளிரின் வீரம் போன்ற பலதரப்பட்ட செய்திகளையும் புறநானூறு பரக்கப் பேசுகின்றது என்பதே உண்மை.

    சங்கப் புலவர்கள் பலர் வறுமையில் உழன்றவர்கள்தாம்; பொன்னையும் பொருளையும் வள்ளல்களிடமும் அரசர்களிடமும் பெற்றுத் தம் வாழ்வை வளமாக்கிக் கொள்ளவே (பெரும்பாலும்) பாப்புனைந்தனர் என்பதும் உண்மையே. ஆயினும் அரசனோ, வள்ளலோ தம்மை மதியாது, அலட்சியமாகத் தருகின்ற பொருளை/பரிசிலை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை; அதனைப் புறக்கணித்தனர். ‘வறுமையிலும் செம்மையாய்’, சுயமரியாதை மிக்கோராய், மனிதப் பண்புக்கே முதன்மை தருபவர்களாகவே இருந்திருக்கின்றார்கள் இப்புலவர் பெருமக்கள் என்பது புறநானூற்றை ஊன்றிப் படிப்போர்க்கு நன்கு புலனாகும் செய்தியாகும்.

    இனி, புறநானூற்றில் புலப்படுகின்ற அரசியல் சிந்தனைகள் சில நம்  கவனத்திற்கு….

    mekala2உரையாற்றும்போது……

     பாண்டிய நாட்டின் மேற்குப் பகுதியில் கடும் வறட்சி, தண்ணீர்ப் பஞ்சம். குடிப்பதற்குக்கூட நீரின்றி மக்கள் வாடுகின்ற அவலமான சூழ்நிலை. இதற்கெல்லாம் காரணம் மன்னன் மக்கள் நலனில் அக்கறை காட்டாததே என்று மக்களுக்கு மன்னன்பால் கோபம்; ஆயினும் அதனை அவனிடம் எடுத்துச் சொல்வதற்கோ அவர்களுக்குத் துணிவில்லை. ஏனெனில் அப்போது மதுரையை ஆண்டவனோ பெருவீரன்; மிக இளம் வயதிலேயே அரசுக் கட்டில் ஏறி ஆட்சி செய்யத் தொடங்கிய பெருமைக்குச் சொந்தக்காரன்.

    ஏழு அரசர்களைப் (தலையாலங்கானத்துப்) போர்க்களத்தில் தனியொருவனாய் வீழ்த்தித் ’தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்ற அடைமொழியோடு ஆட்சி செய்பவன். எழுவரை வென்ற  இளையோனாகிய அவனுடைய போர் வெற்றியைக் கண்டு வியந்த ‘இடைக்குன்றூர் கிழார்’ எனும் புலவர் ’இச்செழியனோ இப்போதுதான் காலில் அணிந்த கிண்கிணி (ஆண் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் கொலுசு) நீக்கி வீரக் கழல் அணிந்துள்ளான். இதுநாள்வரைப் பால் பருகிக் கொண்டிருந்தவன்(!) இன்றுதான் முதன்முறையாகச் சோறு உண்டான்; அவன் வெற்றி வாழ்க!’ என்று (சற்று மிகையாகத்தான்) புகழ்கின்றார்.

    அத்தகைய மாவீரனிடம் பேசுவதற்கு யாரை அனுப்புவது என்று யோசித்துத் துணிவும், தமிழ்ப்புலமையும் ஒருங்கே கொண்ட புலவர் பெருந்தகையான ‘குடபுலவியனாரைத்’ தேர்ந்தெடுத்தனர் மக்கள். அவர் சொல்வன்மையும், அறிவு முதிர்ச்சியும் மிக்க தமிழ்ச்சான்றோர் ஆவார். மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நெடுஞ்செழியனைக் காணச் செல்கின்றார் அவர். மன்னனிடம் செல்வாக்கு மிக்கவராய் அவர் விளங்கிய காரணத்தினால் எளிதில் அவனைக் காணக்கூடிய வாய்ப்பமைந்தது. அந்த வாய்ப்பைச் சரியாய்ப் பயன்படுத்திக்கொண்ட அவர், மிகச் சிறந்த அறிவுரைகளை அரசனுக்கு வழங்குகின்றார்.

    “மன்னா! மேலுலகத்தில் நீ மறுமை இன்பத்தைப் பெற விரும்பினாலும் சரி அல்லது பகைவர்கள் அனைவரையும் ஒழித்து இந்நிலவுலகிலே நீ ஒருவனே பேரரசனாய்ப் புகழ்பெற்று வாழ விரும்பினாலும் சரி….அதற்கான தகுதி என்ன தெரியுமா? சொல்கிறேன் கேள்! ’நீரின்றி அமையா இம்மானுட வாழ்வில் உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தவர்கள் ஆவர். உணவினால் ஆனதுதானே இம்மானுட உடம்பு! உணவெனப்படுவது நிலத்தொடு கூடிய நீர். (நிலத்திலிருந்து கிடைப்பது அரிசி உணவு; பருகுவதற்கு இன்றியமையாதது நீர்; ஆகவேதான் இப்புலவர் பெருந்தகை உணவெனப்படுவது நிலத்தொடு கூடிய நீர் என்கின்றார்.) எவனொருவன் நிலத்தையும் நீரையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கின்றானோ அவனே இவ்வுலகத்தின் உடம்பையும் உயிரையும் ஒன்றாய் இணைத்தவன் ஆகின்றான். (போற்றத்தக்க புதிய சிந்தனை அல்லவா!).

    ஆகவே, போரிலே பெருவிருப்பம் கொண்ட செழியனே! நீர்நிலைகளிலெல்லாம் நீண்ட கரையெடுத்து அந்நீரைத் தேக்கி வைப்பாயாக. அப்போதுதான் உன்னுடைய புகழும், காலத்தை வென்று நிலைத்து வாழும் என்கின்றார்.

     இப்புலவரின் அறிவுரை எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கின்றது. ‘Conservation of water resources’ என்று நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோமே, இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இப்புலவர் பாண்டிய நெடுஞ்செழியனிடம் வலியுறுத்துகின்றார். அவர் இந்த அறிவுரையை மன்னனுக்கு வழங்கி இருபது நூற்றாண்டுகள் கடந்த பின்னும்கூட அது இன்றுவரைச் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதே வரலாறு காட்டும் உண்மை. ஆம்…இன்றுவரை நம் தமிழகத்தில் போதிய அணைகள் கட்டப்படவில்லை. நீர் மேலாண்மையில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம் என்பதை வருத்தத்தோடு ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்.

    அற்புதமான கருத்துக்களை அரசனுக்கு அறிவுறுத்திய ’குடபுலவியனாரின்’ அப்பாடல் இதோ..

    ”………………………………………………  வயவேந்தே
    செல்லு  முலகத்துச்  செல்வம்  வேண்டினும்

    ஞாலங்  காவலர்  தோள்வலி  முருக்கி

    ஒருநீ  யாகல்  வேண்டினுஞ்  சிறந்த

    நல்லிசை  நிறுத்தல்  வேண்டினு  மற்றதன்

    தகுதி  கேளினி  மிகுதி  யாள

    நீரின்  றமையா  யாக்கைக்  கெல்லாம்

    உண்டி  கொடுத்தோ  ருயிர்கொடுத்  தோரே

    உண்டி  முதற்றே  யுணவின்  பிண்டம்

    உணவெனப்  படுவது  நிலத்தொடு  நீரே

    நீரும்  நிலனும்  புணரி  யோரீ  ண்டு

    உடம்பு  முயிரும்  படைத்திசி  னோரே

    …………………………………………………………………

    —————————————————————–

    அடுபோர்ச்  செழிய  இகழாது  வல்லே

    நிலனெளி  மருங்கின்  நீர்நிலை  பெருகத்

    தட்டோ  ரம்ம  இவண்தட்  டோரே

    தள்ளா  தோரிவண்   தள்ளா  தோரே. (புறம் – 18)

    படித்து இன்புறவேண்டிய அருமையான பாடல் இல்லையா?

    அடுத்து, ஓர் அரசன் குடிமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதனைச் சற்றுக் கடுமையாகவே (அரசனுக்கு) அறிவுறுத்துகின்றார் ஓர் புலவர். அரசர்களிடம் தாம் காணுகின்ற குறைகளைப் புலவர்கள் சற்றுக் கடுமையான மொழிகளில் கூறித் திருத்த முயல்வதனைச் ‘செவியறிவுறூஉ’ என்கின்றது தமிழிலக்கிய மரபு. ஒரு சாதாரணப் புலவர் அரசனையே கண்டிக்கின்றார் என்றால் அதற்கு எத்துணை துணிச்சல் வேண்டும். அந்த வீரப்புலவர் அரசனிடம் அப்படி என்னதான் கூறியிருப்பார்?

    (தொடரும்)

    Share
  • மறுவளர்ச்சி மருத்துவச் சிகிச்சை முறை சாத்தியமா?

    தேமொழி

    அசுரனின் தலையை வெட்ட வெட்டப் புதிய தலை முளைப்பது, அல்லது கையை வெட்டினால் புதிய கை முளைப்பது போன்ற நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் உள்ள புராணக்கதைகளில் நாம் படித்திருக்கலாம். ஆனால் உண்மையில் இது சாத்தியமா? சில உயிரினங்களிடம் இந்தப் பண்பு காணப் படுகிறது. காட்டாக, கடலில் வாழும் நட்சத்திர மீன்கள் சேதமடைந்த பகுதியைப் புதுப்பித்துக் கொள்வதையும், வாலை இழந்த பல்லிக்கு புது வால் முளைப்பதையும் நாம் அறிவோம்.

    எனினும் பரிணாம வளர்ச்சியில் மிகவும் மேம்பட்ட, சிக்கலான உடலமைப்பைப் பெற்றுள்ள மனித இனத்திற்கு இது சாத்தியமல்ல. சேதமடைந்து இழந்த உடலுறுப்பு இழந்ததுதான், மீண்டும் அதனை வளரவைக்க முடியாது. உறுப்பு தானமாக வழங்கப்பட்டால், பதிலுக்கு அது பொருத்தப்பட்டு குறையை நீக்கும் வகையில் தற்கால மருத்துவம் முன்னேறியுள்ளது. ஆனால், நம்மால் இழந்த உறுப்பை புராணக் கதைகள் குறிப்பிடப்படுவது போல வளர்த்துக் கொள்ள இயலாது. இருப்பினும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ‘மறுவளர்ச்சி மருத்துவம்’ (regenerative medicine) என்ற முறையை வெகு முனைப்புடன் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.

    மனிதர்கள் இருவரின் உடலமைப்பும், அதற்கேற்ற மருத்துவ சிகிச்சைத் தேவைகளும் ஒரே போன்று ஒத்திருப்பதன் வாய்ப்பு மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் நமக்குத் தேவையான உடல்நலம் மற்றும் சுகாதாரத் தேவைகள் ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறாகவே அமைந்திருப்பதே. அறிவியல் அறிஞர்களும் மருத்துவர்களும் மருத்துவச் சிகிச்சைகளை ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு வடிவமைக்க விரும்பித் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றனர்.

    இந்த முயற்சிக்கு அடிப்படையாக விளங்குவது ‘மூலஉயிரணுக்கள்’ ஆராய்ச்சி (Stem Cells Research) . இந்த மூலஉயிரணுக்கள் கொண்ட பண்பின் சிறப்பு, உயிரினங்களின் உடல் செயல்பாட்டில் அவைகளின் பங்கு என்ன என்பது வரையறுக்கப்படாததே. இவ்வாறு வேறுபடுத்தப்படாத மூலஉயிரணுக்கள் குறிப்பிட்ட எந்த வேலையையும் அவற்றிற்கு என்று நிர்ணயிக்கபடாத நிலையில் இருக்கின்றன.

    தோலின் உயிரணுக்கள் (skin cells), தசை உயிரணுக்கள் (muscle cells), நரம்பு உயிரணுக்கள் (nerve cells), என உடலின் ஒவ்வொரு வகை உயிரணுக்களுக்கும் முறையே பாதுகாப்பு, சுருங்கிவிரிதல், சமிக்கைகளைக் கடத்துதல் என்ற செயல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் மூலஉயிரணுக்களின் செயல்கள் இவையிவை என வரையறுக்கப்படாததால், மற்ற எந்த உயிரணுவாகவும் மாற்றம் கொண்டு அந்தப் பணிகளை அவைகளால் செய்ய இயலும். அதனால் உடலின் மற்ற உயிரணுக்கள் பழுதடைந்தோ அல்லது இறந்தோ போகும் பொழுது மூலஉயிரணுக்கள் அவற்றினை ஈடு செய்யும் வகையில் அந்த உயிரணுக்களாக மாற்றம் அடைந்து செய்ய வேண்டியப் பணியை தொடர்ந்து மேற்கொள்ளும்.

    காட்டாக, நம் சிறுகுடலின்(intestine) சுவரின் உயிரணுக்கள் நான்கு நாட்களுக்கொருமுறை முற்றிலும் புதியதாக மாற்றியமைக்கப்படுகிறது. சிறுகுடலின் சுவரின் அடியில் அமைந்திருக்கும் மூலஉயிரணுக்கள், சிறுகுடலின் சுவரின் உயிரணுக்கள் பழுதடைய பழுதடைய அந்த உயிரணுக்களாக மாறி அச்சுவரினைப் புதுப்பிக்கிறது. இது போலவே தினமும் பல்லாயிரக் கணக்கான இரத்த உயிரணுக்களும் புதுப்பிக்கப் படுகின்றன.

    மூலஉயிரணுக்களின் இத்தகைய பண்பினால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அவற்றைக் கொண்டு ‘தனித்துவம் கொண்ட சிறப்பு மருத்துவச்சிகிச்சை’ (individualized treatment) முறையை மேற்கொள்ள ஆராய்ந்து வருகிறார்கள். தேவையேற்பட்டால் பழுதடைந்த நமது உடலுறுப்புக்களை நீக்கிவிட்டு, பதிலுக்கு நம் உடலுறுப்புக்களையே வைத்து செயற்படுத்தும் ‘மறுவளர்ச்சி மருத்துவம்’ என்ற முறையைப் பயன்படுத்த முயல்கிறார்கள்.

    சுருங்கச் சொல்லின், பழுதடைந்த உடல் உறுப்புக்களின் பகுதிகளில் உள்ள சேதமடைந்த திசுக்களுக்குப் (tissues) பதில், மூலஉயிரணுக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய திசுக்களைக் கொண்டு மாற்றியமைக்கும் முயற்சியே மறுவளர்ச்சி மருத்துவம் ஆகும்.

    stem cells

    இப்பொழுது இரத்தத்தின் வெள்ளையணுப் புற்றுநோய்க்கு (leukemia, blood cancer) மூலஉயிரணுக்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது. வெள்ளையணுப் புற்றுநோய் நம் உடலின் எலும்பு மஞ்ஞையைத் (bone marrow) தாக்குகிறது. எலும்பு மஞ்ஞையில் இருந்து இரத்ததிற்குத் தேவையான உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெள்ளையணுப் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி உற்பத்தியாகி வெள்ளையணுப் புற்றுநோய் கொண்டவரின் எலும்பு மஞ்ஞையில் உள்ள மூலஉயிரணுக்களைச் சூழ்ந்து கொண்டு அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. இந்நோய் கண்டவர்களுக்கு புதிய மூலஉயிரணுக்கள் உடலினுள் செலுத்தப்படுகிறது (stem cells transplant). இவை உடலுக்குத் தேவையான இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன.

    மூன்று வகையான மூலஉயிரணுக்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளில் பயன் படுத்துகிறார்கள். அவை:
    1. திசு நிர்ணயிக்கப்பட்ட மூலஉயிரணுக்கள் (Adult/Tissue specific stem cells)
    2. பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள் (Embryonic stem cells/ Pluripotent stem cells)
    3. பல்லாற்றல் தூண்டப்பெற்ற மூலஉயிரணுக்கள் (Induced Pluripotent stem cells)

    1. திசு நிர்ணயிக்கப்பட்ட மூலஉயிரணுக்கள்:
    இந்த மூலஉயிரணுக்கள் இயற்கையிலேயே நம் உடலுறுப்புகளின் திசுக்களில் குறைந்த எண்ணிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன. இவை உடலுறுப்புகளின் திசுக்கள் தேய்ந்து அழியும் பொழுது அத்திசுவின் உயிரணுக்களாக மாற்றம் பெற்று உடலுறுப்புகளைப் புதுப்பித்து அவற்றின் பணியை மேற்கொள்ளும்.

    2. பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள்:
    இவை கருவில் உள்ள மூலஉயிரணுக்கள் ஆகும். செயற்கைமுறைக் கருத்தரிப்பு நிலையங்களில் (fertility clinic) பயன்படுத்தப்படாத கருக்கள் அவற்றின் உரிமையாளர்களால் ஆராய்சிகளுக்கு மனமுவந்து நன்கொடையாக வழங்கப்படும். இது போன்ற கருவில் உள்ள மூலஉயிரணுக்களின் பண்பு, அவை எந்த உயிரணுவாக செயல் பட வேண்டும் என்பதோ அதன் பணி என்ன என்பதோ நிர்ணயிக்கப் படாததால் இவை எந்த ஒரு திசுவாகவும் வளர்சியடைந்து அந்தத் திசுவின் பணியை மேற்கொள்ளும் ஆற்றல் கொண்டதாகும். அதனால் பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள் என அவை அழைக்கப்படுகின்றன (pluripotent stem cells /iPS cells).

    3. பல்லாற்றல் தூண்டப்பெற்ற மூலஉயிரணுக்கள்:
    இயற்கையாக தோல், நரம்பு, தசை போன்ற உடலுறுப்புகளின் திசுக்களில் உள்ள உயிரணுக்களே இவை. ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக அறிவியல் முறைப்படி இவ்வுயிரணுக்களைத் தூண்டி, பல்வேறு திசுக்களின் உயிரணுக்களாகவும் மாறும் பண்புள்ள மூலஉயிரணுக்களாக இவற்றை மாற்றமுறச் செய்கிறார்கள். இவை கருவில் உள்ள மூலஉயிரணுக்கள் போன்றே எந்த ஒரு திசுவாகவும் உருவெடுத்து அதன் பணிகளை மேற்கொள்ளும் பண்பினைப் பெற்றுவிடுகின்றன.

    மருத்துவ, உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் மறுவளர்ச்சி மருத்துவ முறைகளுக்கு மூலஉயிரணுக்களைப் பயன்படுத்துவதுடன், இவற்றின உதவியுடன் மேலும் ஆராய்ந்து உடலின் செயல்பாடுகளையும் நன்கு அறிந்து கொள்ளவும் முடியும். மேலும், மூலஉயிரணுக்கள் திசுவாக வளர்ந்து குறிப்பிட்ட ஒரு உடலுறுப்பாக மாறுவதையும், அவ்வாறு அவை மாறும் செயல்முறைகளையும் பற்றி கண்காணிப்பு நிறைந்த ஆய்வுக் கூட ஆராய்சிகளின் வழியாக அறிவியல் அறிஞர்கள் அறிந்து கொள்ள இந்த ஆராய்சிகள் வழி வகுக்கிறது.

    இவ்வாறு ஆராய்ச்சி வழி பெரும் தகவல்கள்: 1. மறுவளர்ச்சி மருத்துவச் சிகிச்சை முறை, 2. தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை, 3. நோயுற்றிற்கும் பொழுதோ அல்லது உடல் நலத்துடன் இருக்கும்போழுதோ உடல் இயங்கும் விதம் பற்றி அறிந்து நோய் தடுக்கும் முறைகளை வடிவமைக்க உதவி செய்யும்.

    இவ்வாரத்தில் வெளியான செய்திகளின் படி (செப்டம்பர் 11, 2013), ஆராய்ச்சியாளர்கள் உயிருள்ள எலிகளின் உடல்களிலேயே, அவற்றின் வளர்ச்சியடைந்த உயிரணுக்களை மூலஉயிரணுக்களாக மாற்றமடையச் செய்ய மேற்கொண்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. ஆராய்ச்சிக் கூடத்தில் கலன்களில் வளர்க்கப்படாது, உயிரினங்களின் உடலிலேயே மூலஉயிரணுக்களை தேவைகேற்ப வளரச் செய்வது மறுவளர்ச்சி மருத்துவத் துறையில் ஒரு முக்கியமானத் திருப்புமுனையாகும். எதிர்காலத்தில் சேதமடைந்த இதயத்தின் தசையையோ, தண்டுவடத்தையோ மாற்றியமைத்து மனிதர்களின் இதய, தண்டுவட நோய்களைக் குணப்படுத்தும் முறைக்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நம்பிக்கைத் தருவதாக அமைந்திருக்கிறது.

    மனித குல உயர்வுக்காக வளர்ச்சியடைந்து வரும் இந்த மூலஉயிரணுக்கள் ஆராய்ச்சித் துறை, நன்னெறி வழிகளைச் சார்ந்ததா என்ற கேள்விகளையும், சர்ச்சைகளையும், போராட்டத்தையும் எதிர்கொண்டே வளர்ந்து வருகிறது.

    References:
    [1]
    New possibilities in regenerative medicine: Researchers grow new stem cells in living mice, September 11, 2013, Kate Kelland, Reuters News.
    http://medcitynews.com/2013/09/new-possibilities-in-regenerative-medicine-researchers-grow-new-stem-cells-in-living-mice/

    [2]
    Scientists Force Mature Cells to Revert to Stem Cells, September 11, 2013, Elizabeth Lopatto, Bloomberg.
    http://www.bloomberg.com/news/2013-09-11/scientists-force-mature-cells-to-revert-to-stem-cells.html

    [3]
    A step closer to regenerative medicine, September 12, 2013, R. Prasad, The Hindu.
    http://www.thehindu.com/sci-tech/science/a-step-closer-to-regenerative-medicine/article5117603.ece

    [4]
    Stem Cell Information, National Institutes of Health, U.S. Department of Health and Human Services – http://stemcells.nih.gov/info/basics/pages/basics1.aspx

    [5]
    What are stem cells? Craig A. Kohn. TED-Ed – http://ed.ted.com/lessons/what-are-stem-cells-craig-a-kohn

    [6]
    Regenerative medicine – http://en.wikipedia.org/wiki/Regenerative_medicine

     

     

    படம் உதவி:
    http://www.news-medical.net/health/What-are-Stem-Cells.aspx

     

     

    அறிவியல் கலைச்சொற்கள் உதவி:
    மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், மணவை முஸ்தபா.
    (http://www.tamilvu.org/library/nationalized/pdf/MaanavaiMustappa/009-MARUTHUVAKKALAICHOLKALANCHIYAM.pdf)

     

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (74)

    சக்தி சக்திதாசன்doctorlaw sym

    அன்பினியவர்களே !

    அடுத்த மடலில் உங்களோடு இணையும் போதுதான் வாரத்தின் கால்களின் வலிமை புரிகிறது.

    குழந்தை  இறைவனது வரப்பிரசாதம். குழந்தைப் பேறு எனும் மகத்துவம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் தாய்மார்கள் இவ்வகிலத்தில் எத்தனையோ ஆயிரம். .

    மற்றொருபுறத்தில் கிடைத்த குழந்தையைப் பறிகொடுத்துத் தவிக்கும் பெற்றோர் பலர். ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு சமுதாயமும் தம்மைப் அடையாளப்படுத்திக் கொள்ள தமது வருங்காலத்தை வளப்படுத்திக் கொள்ள அவர்களது சந்ததியிலேயே தங்கியுள்ளனர்.

    உலகத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்பதை எடுத்துக்காட்ட புராண இதிகாசங்களில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எந்த மதமும் , எந்த கலாச்சாரமும் வெளிப்படையாக ஆணுக்குப் பெண் சளைத்தவள் என்று சொல்லுவதில்லை, போதிப்பதில்லை அத்தகைய போதனைகள் சட்டவிரோதமாகப் பலநாடுகளில் பார்க்கப்படுகின்றன.

    எமது பின்புல நாடுகளிலே தமது வயோதிப கால வாழ்க்கைக்கு ஓய்வூதியமோ அன்றி காப்புறிச் சாசனங்களோ அந்த நாட்களில் இருந்திருக்கவில்லை. பெற்றோர்கள் தம் கையிருப்புகளை எல்லாம் தம் குழந்தைகளின்ன்ன்ன் முன்னேற்றத்துக்காக செல்வழித்து விடுவார்கள்.

    பின் தமது வயோதிப கால வாழ்க்கைக்கு .. . . . . ?

    தம்முடைய பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி தம்மைப் பார்த்துக் கொள்வார்கள் எனும் நம்பிக்கையே அவர்களை வாழ வைத்தது.

    அந்தக் காலங்களிலே பெண்கள் வேலைக்குப் போவது அரிது, ஆண்களே உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் நிலை இருந்தது.

    எனவே பெற்றோரின் கனவு தமது முதலாவது குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் எனும் வகையில் அமைந்தது.

    இதன்  தேவை காலப்போக்கில் ஒரு சமுதாய கெளரவமாக மாறுதலடைந்து விட்டது. இதனால் மிகவும் மோசமாக,  பெண் குழந்தைகளை வெறுக்கும் நிலைகூடத் தென்பட்டது.

    என்ன எதற்காக சக்தியின் இம்மடல் இந்தத் திக்கு நோக்கிப் பயணிக்கிறது என்று எண்ணுகிறீர்களா?

    சமீபத்தில் இங்கிலாந்துச் செய்திகளில் மிகவும் பிரபலமாக வலம் வரும் ஒரு செய்தியைப் பற்றிக் கூறவே இவ்விளக்கத்தினூடாகப் பயணித்தேன்.

    பத்திரிகைகள் சம்யங்களில் “விசாரணை ஊடகவியல் (Investigative Journalism)” எனும் ஒருவகை ஊடக விசாரணையை நடத்துவதுண்டு.
    அவ்வழியில் இங்கிலாந்தின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான “த டெய்லி டெலிகிராப் (The Daily Telegraph) “ எனும் பத்திரிகையின் ஒரு செய்தியாளர் இரு டாக்டர்களின் எதிர்காலத்தையே சின்னாபின்னமாக்கி விட்டுள்ளார். அந்த டாக்டர்களே தாம் வெட்டிய குழிக்குள் தாமே விழுந்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.

    இங்கிலாந்தில் கருவுற்று இருக்கும் ஒரு பெண்ணின் கருவை தகுந்த வைத்திய காரணங்கள் இல்லாமல் கலைப்பது சட்டப்படி குற்றமாகும்.

    ஆனால் இவ்விரு டாக்டர்களும்,  வேடமிட்டு வந்த பத்திரிகைச் செய்தியாளரிடம் தாம் “பெண் சிசு” எனும் காரணத்திற்காக அவரின் கருவைக் கலைக்கச் சம்மதித்துள்ளதை, அவர்களுக்கு  தெரியாமல் மறைத்து வைத்திருந்த வீடியோ கேமேரா மூலம் படம் பிடித்துள்ளார்.

    இது அனைத்துத் தரப்பிலிருந்தும் பயங்கரமான் எதிர்ப்பலைகளையும் , காரசாரமான விமர்சனங்களையும் கிளப்பி விட்டுள்ளன.

    அனைத்திற்கும் மேலாக இவ்விரு டாக்டர்களையும் சட்டத்தின் முன்னால் நிறுத்த எடுத்த முயற்சிகள்,  அரசு தரப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் மக்களின் நலனுக்கு எவ்வகையிலும் உதவ மாட்டா எனும் காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இச்செய்தி வெளிவந்ததும் இது பொதுமக்களிடையிலே இவ்விவாதத்தின் மீது மேலும் சூட்டைக் கிளைப்பி விட்டுள்ளது.

    இவையனைத்திற்கும் முடிசூட்டுவது போல இவ்விரு டாக்டர்களும் ஆசியர்கள், அதுவும் தமிழர்கள் என்பது மேலும் அதிக கவனயீர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டாக்டர்கள் பணி என்பது பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டும் கொண்ட ஒரு பணி அல்ல. இது சமுதாய நலனை முன்னெடுக்கும் பணியாகும். ஒரு டாக்டர் உயிர்களைக் காப்பாற்றுவதையே தனது தலையாய பணியாகக் கொண்டிருப்பது அவசியம். தர்க்கரீதியான “பெண் குழந்தை” வேண்டாம் எனும் காரணத்திற்காக ஒரு உயிரை அழிக்கும் செய்கையானது டாக்டர் எனும் அந்தப் புனிதமான பணியையே கொச்சைப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைகிறது.

    முக்கியமாக அந்த டாக்டர்கள் ஆசியக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டிருப்பவர்கள் என்றால் அவர்களது செய்கை ஆசியப் பின்னணியைக் கொண்ட எம் அனைவருக்குமே ஒரு ஏற்க முடியாத வெட்கித் தலைகுனியப் பண்ணும் செய்கையாகத் தென்படுகிறது.

    “பணம் பாதாளம் வரை பாயும்” என்று எம்முன்னோர்கள் இதற்காகத்தான் சொல்லி வைத்தார்களோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஆங்கொரு பொந்திடை வைத்த…

    கே.எஸ்.சுதாகர்

    “அரை மணித்தியாலத்துக்குள்ளைஅலுவலை முடிச்சிட வேணும்”

    முன்னாலே சைக்கிளில் போய்க்கொண்டிருந்த கோபாலர் சொன்னார்.

    “இப்ப ஐஞ்சேகால். ஐஞ்சரைக்கு முன்னம் வாசிகசாலையடிக்குப் போய் விடுவம். ஆறுமணிமட்டிலை திரும்பி விடவேணும்” ஏற்கனவே கதைத்துப் பேசி வந்திருந்த போதிலும் மீண்டும் ஞாபகமூட்டினார் கோபாலர். ஊரிலை இருக்கேக்கை பத்துப் பதினைந்து வீடுகள் இடைவெளி தூரத்திலை இருந்திருப்பம். இப்ப, இடம்பெயர்ந்த பின்பு இடைவெளி நெருக்கமாகி பக்கத்துப் பக்கத்து வீடுகளில் தஞ்சமடைந் திருக்கிறோம். கோபாலர் இதற்கு முன்பும் ஒருதடவை போய் வீட்டிலிருந்து பொருட்களை எடுத்திருக்கின்றார். அந்தத் துணிவு தந்த தைரியத்தில்தான் இன்று என்னையும் கூட்டிக் கொண்டு போகின்றார்.

    “பாத்தியேடா தம்பி! மூண்டு கிழமைக்கு முதல் எவ்வளவு சொர்க்கபுரியா இருந்தது எங்கட ஊர். இப்ப நரகமாப் போச்சு.”

    சைக்கிள்கள் இரண்டும் பிரதானவீதியிலிருந்தும் விலகி, குறுகலான பாதையில் விரைந்து கொண்டிருந்தன. தெரு வெறிச்சோடிக் கிடந்தது. கோபாலரை முன்னாலே போகவிட்டு நான் பின்னாலே போய்க் கொண்டிருந்தேன். மழை பெய்த தெருவில் சைக்கிள் ஓடும்போது ஏற்படும் ‘சர சர’ ஒலியைத்  தவிர வேறு ஒரு சத்தமு மில்லை. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த பேப்பரை எடுத்துப் பார்த்தேன்.

    1. என்னுடையதும் தங்கைச்சியினதும் சேர்ட்டிபிக்கேட்ஸ்

    2. அப்பா சொன்ன சுவாமிப் படங்கள்

    3. கொத்து விறகு

    4. தேங்காய்

    5. புத்தகங்கள் (மு.வ இன் அகல்விளக்கு நாவல், ராஜகோபாலாச்சாரியார் எழுதிய வியாசர் விருந்து, தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய சமயக்கட்டுரைகள்)

    இவ்வளவும் நான் எழுதியிருந்தவை. இவற்றிற்குக் கீழே எனது தங்கை புதிதாக ஒன்றைச் சிவப்பு மையினால் சேர்த்திருந்தாள்.

    6. ரேணு போய்

    ‘ரேணு போய்’ எங்கடை நாயின் பெயர். அவளுக்கு நாய் என்றால் கொள்ளை ஆசை. நாலைஞ்சு வருஷம் இருக்கும் எண்டு நினைக்கிறன், ஒருநாள் ‘சமய பாடப் பரீட்சை’ முடிந்து வரும்போது வழியிலை இருந்து பிடிச்சுக் கொண்டு வந்தாள். வரும்போது ஒரு நோஞ்சானாக இருந்தது, பிறகு கொழு கொழுவெண்டு கொழுத்து விட்டது. அந்த நாய், நாங்கள் இடம்பெயர்ந்து ஓடி வரும்போது எங்களுடன் கூட வரவில்லை. அதிகாலையில் எழுந்த ‘ஷெல்’லடிச் சத்தத்துக்குப் பயந்தோ என்னவோ எங்கேயோ ஒடி ஒளித்து விட்டது.

    வாசிகசாலை வந்ததும் கோபாலர் சைக்கிளின் வேகத்தைத் தணித்தார். அதிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் போனால் அவர் வீட்டிற்குப் போய் விடலாம். கை விரல்களினால் ‘ஆறு’ என்று காட்டினார். பின் சைக்கிளை ஒழுங்கைக்குள் வேக வேகமாகச் செலுத்தினார். கோபாலரை நம்ப முடியாது. பொலிசுக்காரப் புத்தி. சரியாக ஆறுமணிக்குத் திரும்பாவிடில் என்னை விட்டுட்டும் போய் விடுவார். உவருக்குப் பொலிஸ் உத்தியோகந்தான் நல்ல பொருத்தம். ஏன் நீங்கள் பொலிசுக்கார உத்தியோகத்தை விட்டிட்டு வந்தனியள்? எண்டு கேட்டால் – ஏதோவெல்லாம் கதைகள் பல சொல்லி, பிறகு கொஞ்சம் சிரித்து, அது விசாலமாகி கண்ணீர் வரும் மட்டும் கெக்கட்டமாகப் போய், கடைசியில் ‘அதடா தம்பி! அவங்களோடை வேலை செய்ய முடியாதடா தம்பி!’ எண்டு முடிப்பார்.

    silhouette-of-a-man-riding-bicycle-with-a-cigarette-in-one-hand-at-sunset-sri-lanka

    கோபாலர் போய் விட்டார். இனி துணைக்கு ஒருவருமில்லை என்று தெரிந்த பின் சைக்கிளை வேகமாக அழுத்தினேன். அது மூன்று நிமிடங்களில் வீட்டு வாசலை அடைந்தது. ஊரில் ஒரு காக்கா குருவி கூட இல்லை. ஏன்? இரும்புக் கம்பிகளிலான ‘கேற்’கள், வீட்டின் கூரைக்குப் போடப்பட்ட ‘சீற்’கள், ஜன்னல் நிலைகள், கதவுகள் இன்னும் பலவும் இருக்கவில்லை. வீடு பூட்டியது பூட்டியபடி கிடக்கும் எண்டு நினைத்து அம்மா திறப்புத் தந்துவிட்டா. சைக்கிளை கொண்டுபோய் மறைப்பாக உள்ளே வளவினுள் விட்டேன்.

    கிணற்றடிப்பக்கமாக மறைப்பாகக் கட்டிய வேலியோரமாக சரசரத்து நாயொன்று ஓடியது. நிச்சயமாக அது எங்கள் நாய்தான். ‘ஏய்! ஏய் ரேணு போய். ஏய் ரேணுப் பெடியா நில்லடா’. அது கொஞ்சத் தூரம் ஓடி, பின் நின்று என்னை உற்றுப் பார்த்து முறைத்துவிட்டு மறுபடியும் ஓடியது. நான்கு வருடங்கள் நன்றியுடன் வளர்ந்தது. மூன்றே மூன்று வாரங்களில் என்னை மறந்து போய்விட்டது. மனம் விம்மித் தணிகிறது. போகட்டும். சிந்திப்பதற்கு இது நேரமில்லை. துரிதமாகச் செயற்பட வேண்டும்.

    முதலில் சுவாமிப்பட அறையினுள் நுழைந்தேன். அங்குதான் எங்கள் புத்தக அலுமாரி உள்ளது. அதற்குள்தான் எல்லாப் பொக்கிஷங்களும். வீட்டின் கூரை உடைந்து உள்ளே வெளிச்சம் பரவிக் கிடக்கின்றது. வெளிச்சம் பரவும் பாதையினால் ஏற்கனவே புகுந்த மழைநீரின் விசித்திரக் கோலம் தெரிகிறது. புத்தக அலுமாரி சரிந்து புத்தகங்கள் சிதறிக் கிடக்கின்றன. அவை மழை நீரில் ஊறி ஊதிப்போயிருந்தன. நல்ல காலம், அம்மா காணி உறுதியளை முதலிலேயே எடுத்துக் கொண்டு போனது. எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் அன்று ஓடினோம். அவற்றுள் எனது தேடுதல் முயற்சி பலன் தரவில்லை. மூலையில் சுவாமிப்படங்கள் விழுந்து உடைந்திருந்தன. ஒரே கண்ணாடித்துண்டுகள். அந்த வேலையைப் பாதியில் விட்டு விட்டு கட்டு விறகு வைத்திருந்த தாழ்வாரப் பக்கம் போனேன்.

    கட்டு விறகு கிடைத்தது. எடுத்து சைக்கிளில் பரவிக் கட்டினேன். ‘கரியரில்’ சாமான்களை கூடுதலாக ஏற்றுவதற்காக பெரிய தடிகளை இணைத்திருந்தேன். அம்மாவுக்கு ஒரே புளுகமா இருக்கும்.  பச்சை விறகை எவ்வளவு நாளுக்கெண்டுதான் புகை வர ஊதுறது. கடகமும் மண்வெட்டியையும் சரிந்து கிடந்தன. இண்டைக்குக் கொண்டு போகச் சரிவராது. இருக்கிற நிலமையைப் பார்த்தால் அடுத்த முறை வரும்போதும் கொண்டு போக முடியாது போலத்தான் உள்ளது. கள்ளரின் லீலைகள் படுமோசம்.

    மாவும் பலாவும் காய்த்துக் குலுங்கின. வாசனை தூக்குத் தூக்குகின்றது. இன்னும் கொஞ்ச நாட்களிலிலை இந்த மரங்கள்கூட கருகிப் போய்விடும். வளவு முழுக்கத் தேடியும் எட்டுத் தேங்காய்கள்தான் கிடைத்தன. மண்வெட்டியைக் கவிழ்த்து வைச்சு, மளமளவென்று உரித்து, கொண்டு வந்த சாக்கு முடிச்சுக்குள் போட்டு அதையும் சைக்கிள் கரியரில் கட்டியாயிற்று.

    உயிரைப் பணயம் வைத்து, ‘சேர்ட்டிபிக்கற்’ எடுக்கவெண்டு வந்து அது கிடைக்காமல் போனது கொஞ்சம் மனவருத்தம்தான். தற்காலிகமாக வேலை செய்த இடம், இடம்பெயர்ந்த வலயத்துக்குள் இருந்ததால் வேலையும் போய் விட்டது. கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரியிலை படிச்ச பட வரைஞர் (Draughtsman) படிப்புக்கு இனி ஒரு வேலை புதுக்கத் தேடுறது எண்டால் கல்லிலை நார் உரிக்கிறமாதிரித்தான். அதுவும் ‘சேர்ட்டிபிக்கற்’றும் இல்லையெண்டால் அடியடா சக்கைதான்.

    இன்னமும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன. மறுபடியும் சுவாமிப்பட அறைக்குள் நுழைந்தேன். இன்னுமொரு தடவை முயற்சி செய்து பார்ப்போம். முயற்சி மெய் வருந்தக் கூலி தரும். புத்தகங்கள் எல்லாம் இதழோடு இதழ் நீர் கோர்த்து கனமேறிப் போயிருந்தன. இதில் அரைவாசிப் புத்தகங்கள் பாடசாலையில் பரிசுப் பொருட்களாகக் கிடைத்தவை. சரிந்து கிடந்த அலுமாரிக்குக் கீழும் ஏதாகிலும் கிடைக்கலாம். அதைப் பிடித்து இழுத்தேன். அது சத்தம் போட்டுக் கொண்டு மேலும் உடைந்தது. குந்தியிருந்து தேடியதில் இடுப்பு விறைத்துப் போயிருந்தது. எழும்பி நாரிக்குக் கை ஊண்டும் போதுதான் அவனைக் கண்டேன்.

    அறை வாசலில் உட்புறமாக கதவோரத்தில் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தான். ஒரு கணம் நெஞ்சு திக்கென்றது. உடம்பு பயத்தினால் நடுங்கத் தொடங்கியது, சிங்களவனாக இருக்கலாம்.

    “என்ன அண்ணை, புத்தகங்கள் தேடுகிறியளோ?” தமிழில் அவன் கேட்ட போதுதான் போன உயிர் வந்தது.

    “இல்லை. என்னுடைய சேர்ட்டிபிக்கற் ஏதாகிலும் இருக்குதோவெண்டு பாக்கிறன்.”

    அவன் கலகலவெனச் சிரித்தான்.

    “சேர்ட்டிபிக்கற்றோ?” குரலில் ஏளனம் தொனித்தது. எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

    “படிச்சிருந்தால் தெரியும் அதன் அருமை” நான் சொன்ன அந்த வசனம் அவனைக் கடுப்பேற்றியிருக்க வேண்டும். மறுகணம் அவன் கத்தத் தொடங்கினான்.

    “உங்களையெல்லாம் ஆர் இஞ்சை வரச் சொன்னது? ஒருத்தரையுமல்லே இஞ்சை வரவேண்டாம் எண்டு அறிவிச்சனாங்கள்” சீறிப் பாய்ந்தான் அவன். சுவரில் சாத்தியிருந்த துப்பாக்கி என் நல்ல காலத்திற்கு என் கவனத்தை ஈர்த்தது. நான் வாய் திறக்கவில்லை. கண்களில் நீர் முட்டியது. அவனைப் பார்க்காமலே வேறு புறம் பார்வையைச் செலுத்தினேன். கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டு அவன் நின்றான்.

    “உங்களுக்கு ஏதாவது உதவி நான் செய்ய வேண்டுமா?” என்று என்னைக் கேட்டான். நான் தலையை இல்லையென்று ஆட்டினேன்.வெளியே எட்டிப் பார்ப்பதும், திரும்பவும் உள்ளே வருவதுமாக இருந்தான் அவன்.

    “ஏன் நான் சத்தம் போட்டனான் எண்டால், இந்த இடம் இப்ப பிரச்சனைக்குரிய இடம். எந்த நேரமும் சிறீலங்கா ஆமி வரலாம். சொல்ல முடியாது. போனகிழமை ஒருக்காப் புகுந்து கலைச்சு விட்டனாங்கள். அவங்கள் வாற நேரம் நீங்களும் இஞ்சை நிண்டால் எப்பிடியிருக்கும். வீணா அநியாயமாக சாக வேண்டி வரும்” திரும்பவும் வெளியே எட்டிப் பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தான்.

    “நாங்கள் இஞ்சை மூண்டுபேர் மட்டிலைதான் இருக்கிறம். அதுவும் நாங்கள் இந்த இடத்துக்குப் புதுசு. துணைப்படைக்கு உங்களைப் போல ஆக்களும் வந்து உதவி செய்தால் எவ்வளவு நல்லா இருக்கும். எங்கட பிரச்சினையை நாங்கதான் தீர்க்க வேணும். எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிற சுமையை நாங்கள்தான் இறக்க வேணும்.”

    அங்கே ஒரு நிமிடம் அமைதி நிலவியது. அவனுடைய போதனைகள் ஒவ்வொன்றும் நெஞ்சினுள் பொறியாக விழுந்தன.

    தேடியதில் ஒண்டும் எனக்குக் கிடைக்கவில்லை. போவதற்கு ஆயத்தமானேன். சைக்கிளை ‘ஸ்ராண்’டில் இருந்து விடுவித்து மெல்ல உருட்டும் போது, மீண்டும் எங்கள் ‘ரேணு போய்’ முன்பக்க வாசலால் மூச்சிரைக்க ஓடி வந்தது.

    tumblr_mdjezaIgS61rxmk9jo1_500                “ரேணு போய்! டேய் ரேணுப் பையா!!” என்னையும் அறியாமல் கத்தினேன்.

    அதற்குப் பின்னால் திடுதிப்பென்று இன்னொரு இளைஞன் வாசலில் தோன்றினான்.

    “டாக்டர்! டாக்டர்!! எங்கையெல்லாம் உங்களை நான் தேடுறது? ‘டக்’கெண்டு வாறன் எண்டிட்டுப் போனியள்” என்று கூப்பிட்டபடியே எங்கள் வளவினுள் அவன் நுழைந்தான். என்னைக் கண்டதும் திகைத்து, தனது துப்பாக்கி முனைகளில் கைகளைப் பதித்தான். எல்லாம் கனவு மாதிரி. அந்த நிமிடத்தின் விலையை என்னால் எப்பிடிச் சொல்ல முடியும்.

    “டேய்! டேய், பொறடா பொறடா வாறன் ராமு” என்றபடியே உள்ளுக்கிருந்தவன் வெளியே ஓடி வந்தான். நான் தப்பிப் பிழைத்தேன்.

    “கொஞ்ச நேரத்துக்கு முன்னாலை ஏதோ துவக்குச் சத்தம் கேட்டமாதிரிக் கிடந்தது. அதுதான் ஓடி வாறன் டாக்டர்.”

    “கொஞ்ச நேரமெண்டால்?”

    “ஒரு இரண்டு மூண்டு நிமிஷம் இருக்கும்.”

    “உனக்கு எப்பவும் துவக்குச் சத்தம் கேட்டபடிதான் ராமு. அண்ணை உங்களுக்கு ஏதாவது கேட்டதா?” என்று என்னைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரித்தபடியே கேட்டான். நான் இல்லை என்று தலை ஆட்டினேன்.

    “அண்ணை, நீங்கள் ஏதோ ரேணுப்பையா என்று கூப்பிட்டமாதிரிக் கிடந்தது? யார் அது?”

    “அது! இப்ப கொஞ்சம் முன்னாலே ஓடிப்போச்சுதே ஒரு நாய். அது எங்கட நாய்.”

    “உங்கட நாயா? அந்த நாய் இஞ்ச எங்களுக்கு நல்ல உதவி. ஆராவது ஆக்கள் இந்தக் கிராமத்துக்கை நுழைஞ்சா உடனை எங்களுக்குக் காட்டிக் குடுத்திடும்” என்றான் அவன்.

    “அதை மாத்திரம் திருப்பித் தாங்கோ எண்டு கேட்டுப் போட வேண்டாம்” என்றான் ராமு. சில கேள்விகளுக்குக் கேட்பதற்கு முதலே பதில் கிடைத்து விடுகின்றது. தங்கைச்சிக்கு அதைப் பார்த்ததைப் பற்றி சொல்லாமல் விடுவதுதான் நல்லது.

    “டாக்டர் மணி என்ன ஆகுது?” என்றான் ராமு. அப்போதுதான் நான் என் மணிக்கூட்டைப் பார்த்தேன். மணி ஆறு ஐந்து.

    “ஒ! ஆறு ஐந்து!”

    இந்த நேரம் கோபாலர் வெளிக்கிட்டு இருப்பார். நான் அவசரமாக வெளிக்கிட்டேன். சிலவேளை என்னைப் பார்த்துக் கொண்டும் அவர் நிற்கலாம். ஆனாலும் மனதை ஏதோ ஒன்று குடைந்தது. ‘டாக்டர், டாக்டர்’ என்று ராமு அவனைக் கூப்பிடுகிறானே! ஒருவேளை உண்மையில் டாக்டரா, அல்லது பட்டப் பெயரா? கேட்டுவிட்டால் சந்தேகம் தீர்ந்தது.

    “உங்களை ஒன்று கேட்பேன். குறை நினைக்க வேண்டாம். நீங்கள் உண்மையில் ஒரு டாக்டரா?” சைக்கிளில் ஏறியபடியே கேட்டேன்.

    “ஏன் நான் டாக்டராக இருக்கக் கூடாதா?” என்று சிரித்தபடியே கேட்டுவிட்டு “அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்’ என்றான். எனக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது.

    “டாக்டர், தயவு செய்து நான் ஏதாவது தவறுதலாகப் பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் போட்டு வாறன்.”

    “போங்கள். மீண்டும் இங்கே வராதீர்கள்.”

    அவனது பேச்சு – எனக்கு ஏதோ போல் இருந்தது. மனதுக்குள் கவலை நெருட சைக்கிள் ஓடத் தொடங்குகின்றது.

    “நான் போட்டு வாறன்.” திரும்பவும் நான் சொன்னேன்.

    வாசிகசாலையடியில் கோபாலரைக் காணவில்லை. போய்விட்டார். ஒரு ஐஞ்சு நிமிஷம் என்னைப் பார்த்திருக்கலாம். மனிசன் இவ்வளவிற்கு பள்ளிக்கூடத்தைத் தாண்டியிருக்கும். இந்த வயசிலும் நல்ல சுறுசுறுப்பு. ஒரு நேரம் சும்மா இராது. ஒருவேளை இன்னமும் வீட்டிலையே நிண்டு கொண்டு ஏதேனும் பொறுக்கிக் கொண்டு நிற்பாரோ? மனம் ஒருதடவை அவரைப் பார்த்துவிட்டுப் போ என்றது. சைக்கிளை மெதுவாகத் திருப்பி, குறுகலான பாதை வழியே உள்ளே செலுத்தினேன். வீட்டு வாசலில் காலூண்டியபடியே அவரைக் கூப்பிட்டேன். சத்தமில்லை. மரங்கள் கூடலாக வளர்ந்து வளவு இருண்டு கிடந்தது. அந்த மரங்களின் இடுக்குகளினேடாக யாரோ என்னைப் பார்ப்பது போன்ற பிரமை. மளமளவென்று திரும்பி சைக்கிளை அழுத்தினேன்.

    பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. தலையளவு சுமையுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். தெரு மூலையில் திரும்பும்போது அம்மாவும் தேவகி அக்காவும் எங்கள் வீட்டு வாசலின் முன்னால் நிற்பது தெரிகிறது. என்னுடைய வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். கோபாலர் வேப்பமரத்து நிழலில் இருந்து கொண்டு சீனியையும் தொட்டுத் தொட்டுத் தேநீர் குடித்துக் கொண்டிருப்பார். என்னை விட்டிட்டு வந்ததுக்கு, தேவகி அக்காவிட்டை நல்ல ‘சமா’ வாங்கியிருப்பார். பேராசை பிடிச்ச மனிசன். எதிலும் அவசரம்.

    வேகத்தைத் தணித்து சைக்கிளை வீட்டிற்குள் செலுத்தினேன். வீடு தெருவிலிருந்து உள்ளுக்குள் இருந்தது. அம்மா என்னைப் பார்த்து ஏதோ கேட்கின்றா.

    “பொறம்மா வாறன். சைக்கிள் ஒரே பாரமா இருக்கு. இதிலை நிற்பாட்டேலாது.”

    “தம்பி இவர் எங்கை?” தேவகி அக்கா பின்னாலே கலைத்துக் கொண்டு வந்து கேட்கின்றா.

    “அவர் எப்பவோ வெளிக்கிட்டிட்டாரே!”

    “போகேக்கை ஒண்டாப் போனியள். இப்ப என்ன சொல்லுறாய்?” அம்மா கத்தினாள். அப்பிடியெண்டால்?

    என் தலை சுற்றுகின்றது. நெஞ்சுக்குள் ஒரு நடுக்கம் உருவாகி உடம்பெல்லாம் ஊடுருவுகின்றது. சடுதியாக சைக்கிளை நிற்பாட்டுகின்றேன். அது சமநிலை தவறி பொதியுடன் என் மேல் சரிகின்றது. என் மூளை நிதானத்தை இழக்கின்றது. ‘அத்தான்!” தேவகி அக்கா மூக்கால் சிணுங்கிக் கொண்டு தன் வீட்டிற்கு ஓடுகின்றா.

    மனமெனும் பொந்தினுள் விழுந்த ‘பொறி’ தீயாகப் பெருகி கொழுந்து விட்டு எரிகின்றது.

    படங்களுக்கு நன்றி: http://srilankapicture.com/

    http://www.tumblr.com/tagged/street-dog

     

    Share
  • “மந்திரமாவது நீறு”!…

    தமிழ்த்தேனீ 

     

    “மந்திரமாவது நீறு”

     

    மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி  வேப்பிலை, மஞ்சள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான். ஆகவே நாம் அவைகளை கையில் வைத்துக் கொண்டு மனமார ப்ரார்த்தனை செய்து அவகளை வணங்கிவிட்டு உபயோகித்தால் எப்படிப்பட்ட வியாதியும், திருஷ்டிகளும் விலகும் என்பது நான் கண்கூடாகப் கண்டவன் நான் என்  அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். மானசா என்கிற ஜரத்காரு தேவி என்கிற சக்தியின்  ஸ்லோகம் ஒன்று இருக்கிறது

    “ஓம் ஐம் ஹரீம் ஸ்ரீரீம் க்லீம் ஜம் மனஸா தேவ்யை நமஹ“

    கையில் கொஞ்சம் திருநீறு வைத்துக் கொண்டு, இந்த  ஸ்லோகத்தை  மானசீகமாக, ஜரத் காரு தேவியைப்  ப்ரார்த்தித்து  108 தடவைகள் உச்சரித்து பயத்தால் அல்லது த்ருஷ்டியால் அழும் குழந்தைகளுக்கு, நெற்றியில் இந்த திருநீற்றினை இட்டுப் பாருங்கள், உடனே பலன் கிடைக்கும் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு விளையாடத் துவங்கும். இது என் அனுபவ பூர்வமான உண்மை.

    “மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்சள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான்”. மந்திர ஒலிகள் அமைதி, சாந்தம், ஆழ்நிலை உட்ப்ரயானம், இவை அத்தனைக்கும் முந்தைய படிதான் ஒலி,சப்தம், மொழி, எல்லாமே ஒவ்வொரு மனிதனும் பிறப்பதிலிருந்து  பயபக்தி, இறை கானங்கள், உச்சாடனங்கள் இவைகள் போதிக்கப் பட்டு வளர்க்கப் படுகிறான்.

    இறைவனை நம்புவோர்கள் மட்டுமே இதை நம்புவார்கள் ஆனால் இவை எல்லாமே ஒவ்வொரு படிக்கட்டுக்கள். ஒவ்வொன்றாக தாண்டவேண்டும், அமைதியாக, சாந்தமாக, ஆழ்நிலை உட்ப்ரயாணம் செய்ய, மந்திர உச்சாடனத்துக்கு நிச்சயமாக பலன் இருக்கிறது.

    அதன் ஒலி அதிர்வுகள் ஏற்படுத்தும் ஒன்று கூடிய மஹாசக்தி, எப்படிப்பட்ட நல்ல விளைவுகளையும் மிக எளிதாக ஏற்படுத்தும்.

    நம்முடைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அத்தனை விஞ்ஞான முன்னேற்றமும் “கண்டு பிடிக்கப் பட்டவையே, உருவாக்கப்பட்டவை அல்ல” ஆக  ஏற்கெனெவே இந்த ப்ரபஞ்ஜத்தில்  இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள் அல்லது மெய்ஞானிகள்  உணர்கிறார்கள்  அவ்வளவே

    ஒவ்வொரு விஞ்ஞானி ஒவ்வொருகண்டுபிடிப்பை நிகழ்த்தும் போதும் அவர்களுடைய அறிய செயல் திறன் அதிர்வுகளும் ப்ரபஞ்சத்தின் இயற்கையான அதிர்வுகளும் அல்லது அலை வரிசைகளும் ஒரு இணையாக சந்திக்கும் போது  நிகழ்வதுதான் கண்டுபிடிப்புகள் அல்லது  மெய்ஞானிகள் தங்களுடைய  ஆசார அனுஷ்டான வழிமுறைகளால் தம்மை உணர்ந்து உள்ளுக்குள்ளே இருக்கும்  ஆன்ம சக்தியை அடைந்து அந்த ஆத்ம சக்தியின் மூலமாக  ப்ரபஞ்சத்தின் உன்னதமான  சக்தியின் அலைவரிசையை தொடர்பு கொண்டு தம்முடைய ஆத்ம சக்தியை அந்த அலைவரிசையோடு ஒத்துப் போகச் செய்து  அதன் மூலமாக தாம் உணர்ந்த அற்புதங்களை  கண்டு பிடிப்பாக மக்களுக்கு சொல்லி அவர்களை  உய்யச்செய்வது.

    இவை தான், மந்திர அல்லது தந்திர அல்லது விஞ்ஞான அல்லது, மெய்ஞான வழிகள் ப்ரசாதம் இறைவனை நம்புகிறவர்கள் மட்டுமே ப்ரசாதம் என்னும் சொல்லையே நம்புவர். ப்ரசாதம்  என்பது நாம் அதாவது மானிடர்களாகிய  நாம்  நம்மைப் படைக்கும் முன்னரே நாம் உயிர் வாழ்வதற்காக, பிணியில்லாமல் இருப்பதற்காக,அப்படியும் மீறி பிணிகள் வந்தால்  அவற்றைப் போக்கிக் கொள்வதற்காக அனைத்து  வழிகளையும் படைத்த இறைவனுக்கு  நாம் செலுத்தும் நன்றிக் கடன்தான் அதிலும் குறிப்பாக ப்ரசாதம் என்கிற வார்த்தையை  நம்புகிறவர்களிடம் நான் நகைச் சுவையாக ஒரு கேள்வி கேட்பதுண்டு ப்ரசாதமாக  படைக்கும் உணவை நீங்கள் எந்த தெய்வத்துக்குப் படைக்கிறிர்களோ அந்த தெய்வம் உண்மையிலேயே உண்டு மிகுதியை உங்களுக்கு ப்ரசாதமாக  தருகிறது என்று நம்புகிறீர்களா…….?  என்று ஆமாம் நம்புகிறோம் என்று பதில்  சொன்னவர்களிடம்  நகைச்சுவையாக மீண்டும்  அப்படியானல் சரி நீங்கள் படைக்கும் உணவுப் பொருட்களை  உண்மையிலேயே  இறைவன்   உண்பதானால் நீங்கள் அளித்த  உணவின் அளவு கொஞ்சமாவது குறைந்திருக்க  வேண்டுமே என்று அதற்கு இதுவரை  பதிலளித்தவர்கள்  இல்லை, நட்ட  கல்லும் தெய்வமே  நம்முள் நாதன் இருந்தால் ,நம்பிக்கைதான் வாழ்க்கை  மேலும் நாம் அளிக்கும் எதுவாக இருந்தாலும் சரி  நம்மைப் படைத்த இறைவனுக்குநாம் செலுத்தும்  நன்றிக் கடனாக நாமே ஏற்படுத்திக் கொண்ட  விஷயங்கள்தான்.

    ப்ரசாதம் படைப்பது என்பது  உண்மையிலேயே நாம் படைப்பதை இறைவன்  ஏற்றுக் கொண்டு இறைவன் அதை உண்ண  ஆரம்பித்து விட்டால்  நாம் அடுத்தமுறை  படைப்போமா என்பது சந்தேகமே ப்ரசாதம்  என்பதன் தாத்பரியமே நாம் செலுத்தும் நன்றிக் கடன், மேலும் நம் நம்பிக்கை  சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு படைத்துவிட்டு  நாம் சாப்பிட்டால் அந்த உணவு வகைகளில் ஏதேனும்  தோஷங்கள்,அல்லது  மருத்துவ நிபுணர்கள்  கூறுவது போல ஏதேனும் ஒவ்வாமையான விஷயங்கள்  இருக்குமானால் அவைகளை இறைவன் நீக்கிவிடுவான்  என்னும் நம்பிக்கை.

    இவ்வவளவே “மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி,வேப்பிலை, மஞ்சள், இவைகள்  அனைத்துக்கும்  இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான்  “அதே இறைவன் இவை எல்லாவற்றையும் உபயோகித்து பலன் அடையும் சக்தியையும் நமக்களித்திருக்கிறான்

    ஆகவே  நம்பிக்கை உள்ளவர்கள், அல்லது இறைவன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் யார் உபயோகித்தாலும் இவை நிச்சயமாக பலன் தரும் வண்ணம் அருள் செய்திருக்கிறான் கருணை மனம் கொண்ட இறைவன்                திரு நீறு + திருநாமம் திரு  நீறு என்பதே  பசுமாட்டின் சாணம் அதைக் காய வைத்து  அதை நெருப்பிலிட்டு அதன் மூலமாக வரும் சாம்பல்  பசுமாட்டின் சாணம் ஒரு கிருமி நாசினி என்று  விக்ஞான பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம்  அதனால்தான் நம் முன்னோர்கள்  சுகாதாரம் கருதி பசுமாட்டின் சாணத்தை தண்ணீரிலே  கலந்து தாங்கள் வாழும் பகுதிகளில் தெளித்து  நோய்க் கிருமிகளிடமிருந்து  ஓரளவு தப்பித்து வாழ்ந்தனர்  நம்முடைய மூத்தோர்களால் மெய்ஞானம் என்று  சொல்லப் பட்ட அனைத்துமே விஞ்ஞானம்தான்

    அக்காலத்தில் மக்களுக்கு விஞ்ஞானம் என்றால் புரியாது அதனால் மெய்ஞானம் என்று சொல்லி வைத்தனர்  நான் ஒரு கவிதையில்”  வேதியல் படித்தால் தெரியும்,  வேதம் படித்தாலும் புரியும்,  வேதியல் விந்தை, வேதம் தான்  வேதியலின் தந்தை,  வேதம், வேதியலின் வர்க மூலம்,  என்று எழுதி உள்ளேன்

    இயற்கையாகவே கிருமி நாசினியாக செயல் படும் விபூதி,திருநீறு இவைகளை நாம் கையில் வைத்துக் கொண்டு மந்திர உருவேற்றினால் இன்னும் கூடுதலாக சக்தி பெற்று நம்மை பல நோய்களிலிருந்து  காப்பாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை .

    அதே போல் வைணவர்கள் தரிக்கும் நாமம் என்று சொல்லப்படும் வெள்ளை கட்டி அதைக் குழைத்து நெற்றியிலே  இட்டுக் கொள்ளும் போது நாமக்கட்டி என்று சொல்லப்படுகின்ற அதில் சுண்ணாம்பும் கலந்திருக்கின்ற காரணத்தால் நாமமும் அதன் நடுவிலே இட்டுக் கொள்ளும் ஸ்ரீ சூர்ணம் என்னும் சிவப்புக் கோடு மஞ்சள் என்னும் கிருமி நாசினியை உபயோகித்து உருவாக்கப்பட்டிருப்பதால்  நாம் நம் நெற்றியில் இவைகளைத் தரிக்கும் போது நெற்றியின் நடுப் பகுதியான முக்கியமான சைனஸ் என்னும் நரம்புகளில் அனாவசியமாக சேரும் தண்ணீர் நமக்கு ஏற்படுத்தும் தலைவலி கழுத்து வலி போன்ற நோய்களை தடுக்கும் கிருமி நாசினியாக செயல் படுவதால் நம் முன்னோர்கள் முன்னரே அறிந்து  தீர்கதரிசனத்துடன் கண்டு பிடித்து வைத்திருக்கும் இவைகளை இறைவன் ப்ரசாதமாக  நாம் நினைத்து அணிவதனால் செயற்கையாக தயாரிக்கும் மாத்திரைகளை உபயோகிக்கும் நிலை நிச்சயமாக குறையும்.

    அரசமரம், வில்வ மரம் இவைகள் வெளியிடும் காற்று இயல்பாகவே மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்க வல்லது என்று விஞ்ஞானிகளே ஒத்துக் கொண்டுள்ளனர்.

    புற்று நோய் என்னும் கொடிய நோய் வில்வ இலைகளை தினமும் சேர்த்துக் கொண்டால் தீர்ந்துவிடும் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்வர்.

    சூட்டுக்கு சூடு தான் நல்வினை பயக்கும் மருந்து, ஆகவே நம் உடல் சூடுஅதிகமாகும்போது வில்வ இலையின் சூடு நம் உடலில் சேரும்போது இயல்பாகவே நாம் சமனப் பட்டு நோய் தீரும்.

    அதை இறைவனுக்கு அவன் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு ப்ரசாதமாக சேர்த்துக் கொண்டால் அவன் அருளும்  சேர்ந்து நாம் பூரண குணமடைவோம் எனபதில்  என்ன சந்தேகம்….? அரச மரத்தின் காற்று பெண்களின்  கர்பஸ்தானத்தில் இருக்கும்.

    பல ஒவ்வாமைகளை சரி செய்து அவர்களுக்கு. மகப் பேறு அளிக்க வல்லது அதனால்தான் பெரியவர்கள். மகப் பேறு கிட்டாதவர்களை அரச மரத்தை ப்ரதட்ஷனமாக வரச் செய்வர் . அவர்கள் ப்ரதட்ஷணமாக வரும்போது அந்த அரச மரக் காற்றில் இருக்கும் நல்ல விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய வாசம் அப் பெண்களுக்கு குறைகளை களைந்து புத்திரபாக்கியத்தை ஏற்படுத்தும் என்று சொல்லுகிறார்கள்.

    “துளசி, வேப்பிலை, மஞ்சள் “சைவ ஆலயங்களில் திருநீறு,மற்றும் வில்வ இலைகள் அவைகளை ப்ரசாதமாக கொடுக்கும் வழக்கமும் வைணவ ஆலயங்களில் துளசிகலந்த தீர்த்தமும் மஞ்சள் கலந்த குங்குமமும் ப்ரசாதமாக அளிக்கும் வழக்கமும் மிகவும் யோசித்து பெரியோர்களால்  ஏற்படுத்தப்பட்டது “முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு ” என்கிற கண்ணதாசனின் கவிதை வரிகள் நமக்கு வலுவூட்டுகிறது

    சைவம், வைணவம் அதன் பின்னே  சாக்தம் என்று சொல்லக்கூடிய சக்தி வழிபாட்டுக் காரர்கள்  வேப்பிலையில் மஞ்சளைப் பூசி அதை அம்மனாகிய சக்திக்கு அணிவித்து ,அதையே ப்ரசாதமாக வாங்கி தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

    நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் வேப்ப மரத்தை நட்டு வளர்ப்பார்கள். நல்ல வெய்யில் காலத்தில் வேப்ப மரத்தடியின் கீழ் அமர்ந்து பாருங்கள் எவ்வவளவு குளிர்ச்சியாய் இருக்கிறதென்று. மஞ்சளும் வேப்பிலையும் குளிர்ச்சி  ஆகவேதான் வேனல் காலங்களில் வரும் கட்டிகள் அம்மை போன்ற நோய்கள்தீர வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து தடவுகின்றனர் வேப்பிலையும் மஞ்சளும் கருணையோடு நம்மைக் காக்கும் உலகமாதா வான அன்னையின் அருளும்  அதில் சேரும்போது நோய்கள் தீரும் என்பதில் என்ன சந்தேகம்….?

    “சிவன் “ சிவன்  அபிஷேகப் பிரியன் ஏனென்றால் ஒரு கையில் அக்னி உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பல் என்று நம்முடைய  பாபங்களைத் தீர்க்க பெற்ற தாய் போல அவன் தாங்கிக் கொண்டிருக்கிறான்  அத்தனை வெப்பத்தையும்.  அந்த வெப்பம் தணிய அவன் அபிஷேகப் பிரியனாயும் வில்வ இலை தரித்தும் பசுஞ்சாணத்தல் செய்யப்பட்ட திருநீறையும், குளிர்ச்சியான சந்திரனையும் கங்கையையும் தலையிலே அணிந்து கொண்டு பனிமலையிலே,அதாவது கையிலாயத்திலே வாசம் செய்கிறான்

    “மஹாவிஷ்ணு” மஹாவிஷ்ணு படுத்துக் கொண்டிருப்பதே பாற்க்கடலில்.  அவன் மிகக் குளிர்ச்சியானவன், இல்லையென்றால் எப்படி அவன் நாபிக் கமலத்திலிருந்து தாமரை முளைக்கும் அதில் எப்படி நான்முகன் அமரமுடியும்….? அதனால்தான் பக்தர்களின் குளிர் கால நோய்கள் தீர்க்க எல்லாக் குளிரையும் தான் தாங்கிக் கொண்டு இருப்பதால் அதைச் சமன் செய்ய அவன் திருமகளை மார்பிலே தாங்கிக் கொண்டு

    ஆடை ஆபரணங்கள் பூண்டு, சுகவாசி போல் தோற்றமளித்துக் கொண்டு நம் பாவங்கள், பிணிகள் இவைகளைப் போக்க நெய், தேன், பால், பலகாரங்கள் இன்ன பிற வசதிகளைச் செய்து கொண்டு நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறான் ஆம் விஷ்ணு அலங்காரப் பிரியன் என்று சொல்வார்கள்

    “சக்தி” அது மஹா விஷ்ணுவாக இருக்கட்டும் ஈசன் சிவனாக இருக்கட்டும்  அனைவருக்கும் சக்தியாய் ஒளிர்பவள் சக்தி அதனால்தான்  சக்தியானவள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் படியாக  மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம், துளசி வேப்பிலை, மஞ்சள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் என்று சொல்லக் கூடிய  இறைவனுக்கே சக்தி கொடுப்பவள் அன்னை .

    ஆதலால் தான் அவள் திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்சள், குங்குமம் இவைகள் அனைத்துக்கும் சக்தி கொடுப்பவளாக அத்தனையையும் தான் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு ப்ரசாதமாக அளித்துக் காக்கிறாள்.

    என்னை இந்த உன்னதமான கட்டுரையை எழுதவைத்த சக்தி, அன்னையின் அருள் அவள் திருவடி தொழுது இக்கட்டுரையை அளிக்கிறேன். அன்னை அருள் பாலிக்கட்டும்.

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    http://thamizthenee.blogspot.com

    Share
  • குறவன் பாட்டு – 10

    
    சச்சிதானந்தம்
    
    
    களிறுகளும் குறவனும் 

     

    அருவியில் நீர்பருக வருகின்ற யானைகள்,

    அருகிலே செல்லாமல் கவனித்து நின்றான்,

    தொலைவிலே தெரிகின்ற யானைகள் கூட்டம்,

    கலைந்திடும் மெதுவாகப், பிளிறிடும் பெரிதாக!                                                                                  77

     

    யானையின் பிளிறலால் அருவியும் படபடக்கும்,

    ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் நடைநடக்கும்,

    களிறுகள் கடந்தபின்னர் அருவிமீண்டும் சலசலக்கும்,

    வெளிரிடும் நதியில் கலந்து கதிரதன் ஒளிதெறிக்கும்!                                                  78

     

    யானை மயிர் சேகரித்தல்

     

    களிறுதிர்த்த மயிரெடுத்து அருவிநீரில் நனைத்தெடுத்து,

    கயிறுபோலத் திரித்தெடுத்துச் சுற்றி வைத்தான்,

    வெதுவெதுப்புக் குறைந்திடாத சாணம் அள்ளிக்,

    கொண்டுவந்த பையில் வைத்தான் குறவன்!                                                                                       79

     

    யானை நகம் சேகரித்தல்

     

    கன்றாயிருந்த களிறு ஓடோடிருந்த ஆமை உதைத்துக்,

    குதித்துக்குதித்து ஆடிய நினைவில், பின்நா ளொருசிறு

    குன்றாயிருந்த பாறைகண்டு, ஆமையெனவே காலாலுதைக்க,

    முன்னாலிருந்த நகங்கள்விண்டு சிப்பியைப் போலச் சிதறினவே!                              80

     

    சிப்பியைப் போலச் சிதறிய நகங்களை,

    முத்தென மதித்துச் சேகரம் செய்து,

    பத்திரப் படுத்திப் பையினில் வைத்து,

    சத்தியக் குறத்திக்குக் கொடுக்க நினைத்தான்!                               81
    
    
    யானைக் கன்றுக்கு உதவுதல்

     

    யானைக் கன்றொன்றைத் தனியே கண்டான்,

    தாயைப் பிரிந்ததுயர் கண்ணில் கண்டான்,

    உணவுண்ணத் தெரியாத கன்றுக்குத் தேனள்ளித்,

    தனதன்புப் பிள்ளைக்குக் கொடுப்பதுபோல் கொடுத்தான்!                                                            82

     

    தாயோடு சேய்சேர வழியொன்று கண்டான்,

    களிறைப்போல் பிளிறிக் கணநொடியில் மறைந்தான்,

    பிளிறல் ஒலிகேட்ட பிடியின் கூட்டம்,

    எளிதில் சேய்கண்டு ஒன்றாகச் சேரும்!                                                                                                    83

     

    Share
  • ஆனந்த விநாயகன்!

     

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

    நமக்குத் தெற்கில் நவராத்திரி போல, மஹாராஷ்ட்ராவில் குறிப்பாக புனே நகரின் நாயகன் விநாயகன் தான். விநாயக சதுர்த்தி தொடங்கி 10 நாட்கள், காணும் திசையெல்லாம் கணபதி!

    Dancing-Binayakar rotated

    பிறந்தநாள்கொண்டாட்டத்தில் குஷியாக ஆடிக்களிக்கும் இந்த விநாயகரையும் ரசிப்போமா…?

     

    Share
  • வாழ்க்கை நலம் – 26

    குன்றக்குடி அடிகள்

    26. பொறுமை போற்றுக!

    இந்த உலகில் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்; நியதியும்கூட! ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லையே! என்ன செய்வது? நாம் விரும்பாதன பல நடக்கின்றன! நன்மைகளைப்போலக் காட்டித் தீமைகள் செயல்படுகின்றன. பொய்யர்களின் மெய் அரங்கேறுகிறது. பழிதூற்றும் படலமே ஓதப் பெறுகிறது.

    நண்பர்கள் பகைவர்களாகின்றனர்! மலடிகள் மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள் கூறுகின்றனர். அதுவும் கருவுயிர்க்கும் அறையில் அல்ல; அரங்கில்! என்ன செய்வது? ஆத்திரப்படுவதில் பயனில்லை. பொறுமையாக இருத்தல் வேண்டும்!

    பயன்படு வாழ்க்கைக்கு வாயில் பொறுமையே! மற்றவர்கள் தீயையே அள்ளிக் கொட்டினாலும் பொறையுடைய வாழ்க்கையை ஒன்றும் செய்யாது! கூளம், குப்பையாக இருந்தால் பற்றி எரியும்! இல்லையானால் தீ அவியும். இதுவே நடைமுறை!

    பொறுமைக்கும் எல்லையுண்டு என்பர் சிலர்! இது தவறு. பொறுமைக்கு எல்லையே இல்லை! அப்படியே எல்லை உண்டு என்று கருதினாலும் அந்த எல்லை, “தீங்கு செய்பவன் திருந்தி நலம் செய்பவனாக மாறுவதே பொறுமையின் எல்லை” என்றார் முகமது நபி.

    நிலம் பயன்பாடுடையது. பயன்படு பொருள்கள் பலப்பல தருவது. நிலமின்றேல் வாழ்வு இல்லை. இந்த நிலத்தையே நாம் அகழ்ந்தும் துன்புறுத்துகின்றோம். ஆயினும் நிலம் அக்ழ்வாருக்குத் தீங்கு தருவதில்லை. மாறாகப் பயன்களையே தந்து வாழ்விக்கிறது.

    அதுபோல் நாம் நம்மை இகழ்வார் மேல் கோபம் கொள்ளகூடாது. முடிந்தால் குற்றங்களைத் திருத்த வேண்டும் அல்லது பொறுக்க வேண்டும். பொறுத்தாற்றும் பண்பு ஒரு வலிமை; வெற்றிகளைத் தருவது; இன்பம் தருவது.

    “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

    (குறள் – 151)

     

     

     

     

    _________________________________
    REF:  http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share
  • வாழ்வே இதுதான்

     

    ஆர்.எஸ்.மணி

     

    vaazhvE idhudhaan- new

    (தேனிசையைக் கேட்டு மகிழ!)

     

    வாழ்வே இதுதான்: சுழலும்  உலகம்.

    இரவும், பகலும், வருமே மாறியே   (வாழ்வே இதுதான்)

    காலை ஒளியும், மாலை இருளும்,

    உறவும், முறிவும், வருமே மாறியே   (வாழ்வே இதுதான்)

     

    சுற்றம் என்ன, சூழல் என்ன,

    நிலையானதாகுமோ?

    சொந்தம் என்ன, பந்தம் என்ன

    செல்லாமலே நில்லுமோ?

    ஒருநாள் இன்பம், ஒருநாள் துன்பம்,

    மாறாதே இக்கோலம்.      (வாழ்வே இதுதான்)

     

    கன்னி என்ன, காதல் என்ன,

    வண்ணம் எல்லாம் மாறுமே!

    பாசம் என்ன, நேசம் என்ன,

    வந்து பின்னே போகுமே!

    ஒருநாள் இங்கே, ஒருநாள் அங்கே

    எங்கே எந்தன் வீடும்!    (வாழ்வே இதுதான்)

     

     

    —ஆர்.எஸ்.மணி

    (கேம்ரிஜ், ஆன்டேரியோ, கனடா)

    கிஷோர் குமாரின் “ஏ ஜீவன் ஹை” என்னும் ஹிந்தி பாட்டின் மெட்டில் எழுதி,

    என் குரலில் பதிவு செய்யப்  பட்டது..

    Share
  • ஆசிரியர் குழுவில் ஒரு புதிய முகம் அறிமுகம்!

    அன்பு நண்பர்களே,

    DSCF4667

    வணக்கம். நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இன்று பர்வத வர்தினி நம்மோடு இணைகிறார். இவர் ஏற்கனவே அறிமுகமானவர்தான். ‘கால இயந்திரம் ’, என்ற ஒரு தொடரின் மூலம் நம் அனைவரையும் கவர்ந்தவர். பல அரிய படைப்புகளை நம் வல்லமைக்கு வழங்கியுள்ள இவர், ஒரு பட்டயக் கணக்கர் (Chartered Accountant). இவரது ​சொந்த ஊர் ​சென்​னை. படித்து முடித்ததும் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக கணவர் மற்றும் குழந்​தைகளுடன் குவைத்தில் வசித்து வருகி​றார். சில காலம் குவைத்தில் பணிபுரிந்தாலும், தற்சமயம் முழு ​நேர இல்லத்தரசியாக இருக்கிறார். நாவல்கள், குறிப்பாக சரித்திர நாவல்கள் படிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார் இவர். பர்வத வர்தினியை வாழ்த்தி வரவேற்போம். வருக.. வருக வர்தினி!

     வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு (2013)

    அன்புடன்
    பவள சங்கரி

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 2

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு

    சமயங்கள் :

    உலகிலே உள்ள மதங்கள், சமயங்கள் பலப்பல ! இன்ன காலத்தில் உருவானவை என அறுதி இட்டுச் சொல்லக் கூடிய மதங்கள் உண்டு – கிறித்துவம், இசுலாமியம்…போல. தோன்றிய காலம் இது எனக் கூற இயலாமல் தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும் மதங்களும் உண்டு – யூத மதம் மாதிரி. இம் மதங்கள் அத்தனையும் ஆசியக் கண்டத்தில் தோன்றியவையே!

    அக் கண்டத்தில் உள்ள இந்தியாவில் தோன்றி வளர்ந்து வாழ்ந்த பெரிய மதங்கள் நான்கு எனலாம் : சமணம், புத்தம், சைவம், வைணவம்.

    ஒரு கால கட்டத்தில், தமிழகத்தில், முன்னவை இரண்டும் ஓங்கி இருந்தன.கி.பி 5 -ஆம் நூற்றாண்டுக்குப் பின் சமணமும் புத்தமும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டன ; தமிழ் நாட்டை விட்டே ஒழிக்கப்பட்டன. இவற்றை அழிப்பதிலும் ஒழிப்பதிலும் ஒன்றுபட்டு மும்முரமாக இருந்த சைவ வைணவச் சமயங்கள், பின்னர் தமக்குள் மோதிக்கொண்டன! இம் மோதலினால் சமயக் காழ்ப்பு பெருகி இருந்தாலும் தமிழுக்குப் பெரும் நன்மையே விளைந்தது. சமய இலக்கியங்கள் தோன்றின; ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழை வளர்த்தனர், போட்டி போட்டுக்கொண்டு. சிவனடியார் ஒரு கருத்தைப் பற்றிப் பாட அது போலவே வைணவக் கருத்தை அமைத்து ஆழ்வார் பாடல் பாடுவார். 7 -ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் “குனித்த புருவமும் கோவைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்….” எனச் சிவபெருமானின் திருக்கோலத்தைப் பாடினார். அதற்கு எதிர்ப்பாட்டுப் போல 8 -ஆம் நூற்றாண்டின் தொண்டரடிப் ஆழ்வார், “பச்சை மாமலை போல் மேனி பவள வாய்க் கமலச் செங்கண் …”என்று பாடுகிறார். 8 -ஆம் நூற்றாண்டு ஆண்டாள் ‘திருப்பாவை’ பாட அதே பாணியில் 9 ஆம் நூற்றாண்டு மாணிக்கவாசகர் ‘திருவெம்பாவை’ பாடுகிறார். 7 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தர்.இவர் சித்திரக் கவியில் ஒன்றான தேர்ப் பந்தத்தில் எழுகூற்றிருக்கை பாடினார். பின்னர் 8- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார் அது போலவே தாமும் பாடியதை என்னவென்று சொல்ல. ஆக இப்படிப் போட்டிபோட்டுக்கொண்டு சைவர்களும் வைணவர்களும் பக்தி இலக்கியங்களைப் பாடித் தமிழ் வளத்தைப் பெருக்கிச் சுவை கூட்டினர். (இதில் வரும் காலங்கள் விக்கிபீடியாவை அடிப்படியாகக் கொண்டவை ).

    இச் சமயங்களுள் சைவம் தமிழ் நாட்டுக்கே உரியது என்பர். அதனால்தான் போலும் மாணிக்கவாசகரும் “தென்னானுடைய சிவனே போற்றி” எனப் பாடினார்.(காச்மீர் சைவம் வேறு ; கர்நாடகச் சைவம் பிற்காலத்தது). சரி சைவம் வைணவம் எனும் இவை இரண்டினுள் எது காலத்தால் முந்தியதாக இருக்கக்கூடும்? “சிவமே” என்று சைவர் சாதிப்பர் ; “இல்லை, இல்லை, வைணவம்தான்” என்று மல்லுக் கட்டுவர் வைணவர்! இதில் எது உண்மை? (முதல் பகுதியில் இக்கேள்வி – எது உண்மை?- கொஞ்சம் அலசப்பட்டிருக்கும்). இதில், இந்தச் சமயக் கணக்கில், வழக்கில் உண்மையைக் காண உதவிக்கு வருகிறது ஓர் அறிவியல் துறை.அதன் பெயர் ‘Anthropolgy’ ; மாந்தனியல் எனத் தமிழில் கூறலாம். மனித இனம், அதன் தோற்றம், வளர்ச்சி… பற்றி ஆராய்வது. அதற்குமுன், கணிதத்தைப் போல ஓர் அடிப்படையை (axiom) ஏற்றுக்கொள்ளவேண்டி இருக்கும்.

    இறைவன் மனிதனைப் படைத்தானா?
    மனிதன் இறைவனைப் படைத்தானா?

    ஆண்டவன் ஐந்து நாள்களில் எல்லாவற்றையும் படைத்துவிட்டு ஆறாம் நாளில் ‘தன் சாயலாக’ மனிதனைப் படைத்தான் எனத் தோரா (Thora) ,திருமறை நூல் (Bible), திருக்குர்ஆன் சொல்லும். ஏனைய சமயங்களும் இறைவனே, மனிதனைப் படைத்தான் என்று கூறுகின்றன. ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் அடிப்படையை மறுத்து அதற்கு மாறான வேறொரு அடிப்படையை வைத்து அதன் அடிப்படையில் சமன்பாடுகளைக் கட்டி எழுப்புவது உண்டு, கணிதத்தில்.

    எளிமையாகச் சொல்லவேண்டுமானால், காட்டாக, யுக்ளிடின் வடிவ கணிதத்தில் இருந்து மாறுபட்ட வடிவ கணிதத்தைக் (non-Euclidean geometry) கூறலாம். யுக்ளிடின் வடிவ கணிதத்தில் முக்கோணம்; ஒன்றின் மூன்று கோணங்களின் கூட்டுத் தொகை 180 பாகை என்பது அடிப்படைக் கருத்து. கூட்டுத் தொகை 180 பாகைக்கு மிகையாகவோ குறைவாகவோ இருந்தால் என்ன ஆகும் என மாற்றி யோசித்தனர் சிலர்.(C. F. Gauss (1777-1855), N. Lobachevsky (1792-1856), J. Bolyai (1802-1860), and B. Riemann (1826-1866)).

    யுச்ளிடின் கருத்து சம தளத்துக்கு (plane) மட்டுமே உண்மையாகும் ; உ(ரு)ண்டை (sphere, spherical body) வடிவுக்குச் சரிப்பட்டு வராது எனக் கண்டனர். விளைவு உ(ரு)ண்டை வடிவக் கணிதம் பிறந்தது. இதில் இணைகோடுகளுக்கு இடம் இல்லை ; பூமி போன்ற உ(ரு)ண்டை வடிவத்தின் மேல் உள்ள முக்கோணங்களின் கூட்டுத்தொகை 180 பாகைக்கு மிகையாகவோ குறைவாகவோதான் இருக்கும். இடம் – காலம் (space-time) பற்றிய தன் கருத்தை விளக்க மாமேதை ஐன்ஸ்டீன் இந்த உ(ரு)ண்டை வடிவக் கணிதத்தைத்தான் பயன்படுத்திகொண்டார். இதனால்தான் அண்டம் கோள வடிவில் உள்ளது என அவரால் நிறுவ முடிந்தது. இக்கணித எடுத்துக் காட்டைப் பின் பற்றி நாமும் கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்ற கோட்பாட்டை மாற்றிப் பார்ப்போமே! இது ஒன்றும் புதுக் கருத்து இல்லை. மனிதன் தோன்றியதில் இருந்தே, இறை மறுப்பை இதயத்தில் ஏந்தியவர்களும் உண்டு ; இறை இருப்பைக் குருதியிலே கொண்டவர்களும் உண்டு. சரி, இனி, இறைவன் மனிதனைப் படைத்தான் என்பதை மாற்றி மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்று வைத்துக்கொள்வோம்.

    மிக மிக மிக…முற்காலத்தில் (10 000 ஆண்டுகள், 100 000 ஆண்டுகள்…ஏன் அதற்கும் முன்னால் என்று வைத்துக்கொள்ளுங்கள்!) ஆதி மனிதன் தனிமையில் வாழ்ந்தான் (சமூகம் இன்னும் உருவாகவில்லை). அவனுடைய முதல் உணர்ச்சி அச்சம்தான். இதனை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டுமானால் பிறந்த குழந்தையைக் கவனித்தால் போதும். தாயின் கருவறை என்ற பாதுகாப்பில் அவள் இதயத் துடிப்பையே லயமாக உணர்ந்து வாழ்ந்த குழந்தை கருப்பக் கால முடிவில் வெளியே தள்ளப் படுகிறது. இது வரை காணாத புதுச் சூழல்! இதுகாறும் உணர்ந்த லயத்தைக் காணோம்…எனவே அதன் முதல் உணர்ச்சி அச்சம். இந்த அச்சத்தின் காரணமாகவும் இது வரை தொப்புள் கொடி வழியாகக் கிடைத்து வந்த உயிர் வளி கிடைக்க வேண்டித் திணறியும் தன்னிச்சையாகக் குழந்தை அழுகிறது. தாயோ தாதியோ அதனைத் தூக்கி மார்போடு அணைக்கிறாள். குழந்தை மறுபடி அந்த லயத்தை உணருகிறது ; அதன் அச்சம் தணிகிறது. குழந்தை பிறந்தது முதல் 3 மாதம் வரை இப்படி மார்போடு அணைப்பது அதன் அழுகையை அமர்த்தும் என இக்கால மகப்பேற்றியல் அறிவுரை தருகிறது.

    அடுத்து இன்னொன்றைக் கவனிக்கலாம். எது கிடைக்கிறதோ அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் குழந்தையின் கை.. இந்த ஆதரவைத் தேடுவதற்குக் காரணம் அதன் அச்சமே. வளர்ந்த பிறகும் இந்தப் பழக்கம் தொடர்கிறது – அச்சம் தோன்றும் போது கை தானாகவே ஆதரவு தேடி அன்னை, தந்தை, காதலன், காதலி… கரத்தைத் தேடும். தன் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் ‘அவள்’ (தாய் அல்லது தாதி) எங்கே தன்னை விட்டுப் பிரிந்துவிடுவாளோ என்ற அச்சத்தின் காரணமாக அவளோடு ஒட்டிக்கொண்டு அவள் பின்னாலேயே சுற்றுகிறது குழந்தை!

    குழந்தையின் மனத்தில் உள்ளது போலவே, ஆதி மனிதனின் மனத்தில் அச்ச உணர்ச்சி வேரூன்றிக் கிடந்தது. இரவு வரும் போது, இருள் சூழும்போது காட்டு விலங்குகள் இரை தேடப் போகும் ஒலி, கொடிய விலங்குகள் எழுப்பும் ஒலிகள் (இத்தகு ஒலிகளை இளங்கோவடிகள் “கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் இடிதரும் உளியமும்…’ என வருணிப்பார்!)… அவன் அச்சத்தை அதிகம் ஆக்குகின்றன. மழையும் இடியும் அவனைக் கலக்குகின்றன! இப்படி நாலா புறமும் அச்சத்தால் சூழப்பட்ட மனிதனுக்கு ஏதாவது ஆறுதல் தேவைப்படுகிறது. ஆகவே, மகா சக்தி வாய்ந்த ஒன்றை அவன் கற்பனை செய்துகொள்கிறான். அது தன்னைக் காக்கும் என நம்புகிறான்.

    இரவு முழுதும் கடும் மழை, கிடுகிடுக்கும் இடி முழக்கம், கண்ணைப் பறிக்கும் மின்னல்… அஞ்சி நடுங்கும் மனிதன் தான் படைத்துக்கொண்ட ‘அதனை’ நோக்கிப் புலம்புகிறான் ; தன்னைக் காக்கும்படி மன்றாடுகிறான்; இரவுப் பொழுதை இப்படி அச்சத்தில் கழிக்கும் மனிதன் ஒரு வழியாகக் கண்ணயர்கிறான். காலையில் கண் விழிக்கும் அவனுக்கு வியப்பு காத்திருக்கிறது : ஆம், இடி முழக்கம் இல்லை! மழைத் தூறலைக் காணோம்! இதமான வெயில், பதமான காற்று… ஆகா, எல்லாம் வல்ல ‘அது’ தன் வேண்டுகோளை ஏற்று அச்சத்தைக் களைந்துவிட்டது! அவனுக்குள் மகிழ்ச்சி. தன்னைக் காத்த ‘அதனை’க் கூப்பிட ஏதாவது பெயர் வேண்டுமே! தெய்வம், இறைவன், கடவுள்… என்று எதோ ஒரு பெயரைச் சூட்டுகிறான். அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அல்லவா? தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியை (இறைச்சியோ, காய் கனியோ …)அதற்குத் தனியாக வைத்துப் பின் தான் உண்ணுகிறான். இப்படித் தெய்வம் ஒன்றைப் படைத்துக்கொண்ட மனிதன் நாளடைவில் வளருகிறான் ; உருவம் இல்லாமல் இருக்கும் தன் தெய்வத்துக்குத் தன்னைப் போலவே உருவம் தருகிறான். சிவந்த மண்ணில் உருவம் செய்ததால் அவன் இறைவன் அவனைப்போல் கருப்பாக இல்லாமல் சிவந்த நிறம் பெறுகிறது.

    நாகரிகப் படிகளில் மனிதன் ஏறத் தொடங்கும் நிலை. தனக்குத் துணையாகத் துணை, இணை ஒன்றைத் தேடிச் சேர்த்துக்கொள்கிறான். நிர்வாணத்தை மறைக்க இலை, தழைகள் உதவுகின்றன, நாளடைவில் இவை மர உரிகளுக்கு இடம் தருகின்றன! இவற்றையே தன் கடவுளுக்கும் உடுத்தி அழகு பார்க்கிறான். இதுவரை உணவுக்காக முயல், பன்றி, மான், பறவைகள்… என வேட்டை ஆடி வந்த மனிதன் பாதுகாப்புக்காகச சிங்கம், புலி, யானை …போன்றவற்றையும் வேட்டை ஆடுகிறான். இவற்றின் தோல்களை ஆடையாக அணியும் இவன் அவற்றையே தன கடவுளுக்கும் ஆடையாக அணிவிக்கிறான். தான் கண்டு நடுங்கும் பாம்பை அஞ்சா நெஞ்சனாகக் கற்பனை செய்துகொண்ட தன் கடவுள் மீது படர விடுகிறான். மேலும் பெண்டு பிள்ளை எனச் சமூகமாக வாழத் தலைப்படுகிறான். அவன் உருவாக்கிய கடவுளுக்கும் பெண்டு பிள்ளைகள் உண்டு என்று நம்பத் தொடங்குகிறான். இப்படியாக மனிதன் தன் கடவுளைத் தன் சாயலாகவே படைத்தான் என்கிறது மானிடஉருபியல் (Anthropomorphology).

    காண்க : http://en.wikipedia.org/wiki/Anthropomorphism
    கண்ணப்பர் புராணமே இதற்குச் சரியான சான்று.

    இப்படி உருவான கடவுள் சிவந்த நிறம் உடையவர் என்ற பொருளில் ‘சிவன்’ என அழைக்கப்படுகிறார். இவரை முதன்மையாகக் கொண்ட சமயம் சைவம் எனப் பெயர் பெறுகிறது.

    இதற்கிடையில், பல்லாண்டுக் கணக்கில் காலம் பறந்தோடுகிறது ; மனிதன் முன்னேறுகிறான் ! தோலாடைகள் மறைந்து பஞ்சாடைகள் தோன்றி அதன் பின் பட்டும் பீதாம்பரமும் நகையும் நட்டும் அவனை அலங்கரிக்கின்றன. செம்மண்ணால் ஆன கடவுள் இப்போது கருங் கல்லில் வடிக்கப்படுகிறார் ; கரிய நிறம் உள்ள திருமாலாக உருப்பெறுகிறார். இவரை முதன்மையாகக் கொண்ட சமயம் வைணவமாகப் பெயர் சூட்டப்படுகிறது.

    இந்த மானிடவுருபியல் கோணத்தில் பார்க்கும்போது, தமிழகத்தில் தோன்றி வளர்ந்து நின்ற சைவம் காலத்தால் முந்தியதாகவும் இங்குக் காலூன்றி வளர்ந்து வந்த வைணவம் பிந்தியதாகவும் விளங்குகின்றது புலப்படும். இந்தப் பழந்தமிழ்ச் சமயத்தைப்பற்றி இனிக் காண்போம்.

    தொடரும்

    Share
  • தொலைத்ததும் .. கிடைத்ததும் …! – 3

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    ஷீலாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா… என்ற குழப்பத்தில் மனது தவித்தாலும், கிராமத்து மண்ணுக்கே உரிய வெள்ளந்தியான மனோபாவத்தில் மலர் வேகமாக ஷீலா…ஷீலா என்று அவளை நோக்கி முகத்தில் பிரகாசத்துடன் ஓடுகிறாள்.

    என்னாச்சுடி…சம்பளம் வாங்கிட்டியா?…சந்தோசத்தப் பாரு..ம்ம்…சொல்லு…எவ்ளோ கொடுத்தான் அந்தத் திருட்டுப் பய.?

    தெரியுமாடி உனக்கு…? என்கிட்டே முன்னமே ஏன் சொல்லல. பாதிக்குப் பாதி தான் தந்துச்சு அந்தக் கொரங்கு. எனக்கு அப்பிடியே உடம்பெல்லாம் தீப்புடிச்சி எரிஞ்சிச்சு தெரியுமா? பண்றது திருட்டுத்தனம்…அதுல அதட்டல் வேற. நான் நல்லாக் கேட்டுபுட்டு தான் வந்தேன் என்ற மலர் பெருமையுடன் சொன்னவள் ஷீலாவிடம்…..ஆமா..அந்த மேனஜர் என்னிய பாக்கிங் ஆபீஸ்ல ஒரு சீரியல்ல நடிக்க அழைச்சாரு . ஒரு வாரத்துக்கு அஞ்சு ஆயிரமாம். நான் போகலாமுன்னு முடிவு செய்து வாரேன்னு சொல்லிப்புட்டேன். அதான் உன்கிட்டயும் சொல்லிப்புட்டு செய்யலாமே…என்று இழுக்கிறாள்.

    அது எங்கிட்டு டீ …..இவளே….எனக்கு சொல்லவேயில்ல. நானும் வருவேனில்ல. அந்தாளு ஏதோ கேம் ஆடுதுன்னு தோணுது. சாக்றதயா இருடி..

    ம்மம்ம்…என்று சொன்னவள் ,சிறிது நேரம் யோசித்து , என்ன உன் துட்ட அந்தப் பாண்டி பிடுங்கிடுச்சா..? என்று கேட்கிறாள்.

    அம்புட்டும் நான் தரல.ஒரு முன்னூறு கொடுத்தேன். அம்புட்டுதான். எல்லாம் என் நேரம்டி. அலுத்துக் கொள்கிறாள் ஷீலா.

    சரி வா…நாம போகலாம். நடக்க நடக்க ரோடு நீளமாவது போலிருந்தது மலருக்கு. பெரிய பெரிய கட்டிடங்கள் பயமுறுத்தியது. அங்கங்கே குழி தோண்டி வேலைகள் செய்து கொண்டிருக்க பக்கத்திலேயே கார்கள் பெருத்த ஹாரன் ஒலியோடு செல்லும் போது காதைப் பொத்திக் கொண்டு பயந்து நின்றாள் . தலைக்கு மேலே பெரிய பாலம் ஓட…அதற்கு பக்கத்தில் இரும்புக் கூண்டுகளோடு மனிதர்கள் நின்றிருப்பதை பார்த்து…இது என்ன சர்க்கஸ்ன்னு சொல்லுவாங்களே அதுவாடி…….!

    ….சீ.சீ…..அது ஒண்ணும் இல்லடி..இது மெட்ரோ ரயிலுக்கு வேலை நடக்குது. கீழ எடம் இல்லாங்காட்டிக்கு மேல கூட ரயிலு விடுவாங்களாம். பாண்டியன் தான் சொல்லுச்சு.

    அப்போது பயங்கற சத்தத்துடன் சத்தத்துடன் “ஸ்பைஸ்ஜெட்” பறந்து இறங்கிக் கொண்டிருந்தது….!

    அய்யே…..அய்யே….இதோ அங்கிட்டுப் பாரேன்…..விமானம்….விமானம்…..நான் இப்பத் தான் முத முத வாட்டிப் பாக்கறேன்…..எப்டி பறக்குதுடி..எங்கம்மாட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப் பட்டுகிடும்.. விமானம் எல்லாம் பார்த்திருக்காண்டு. ம்ம்ம்….என்று ஷீலாவை இடிக்கிறாள்.

    டி….இரு…இரு…கொஞ்சம் நிதானத்துக்கு வா….காலு கீழ தானே இருக்குது…என்று குனிந்து மலரின் காலைப் பார்க்கிறாள்.

    அடிப்போடி என்று வெட்கப் பட்டவள்….நாம இன்னைக்கே ரூம்ப காலி பண்ணீடலாமா..?

    அது அம்புட்டு சுலபமில்ல…முதல்ல நீ வேணா கெளம்பு. அப்பால நான் காலி பண்ணிக்கறேன்.

    மனசுக்குள் மகிழ்ந்தாள் மலர்விழி.இந்த கரப்பான்பூச்சி ரூம்புலேர்ந்து முதலில் தப்பிச்சால் போதும் என்றது அவளது மனம்.

    அதோ பாருடி..அந்தப் பையன் சோளப்பொறி விக்கிறான்…வாங்கலாமாடி…மலர் துள்ளுகிறாள் ..எனக்கு வவுறு திங்கக் கேக்குது.

    அது சோளப்பொறி இல்லடி…..பாப்புகானு ….! இங்கிட்டெல்லாம் அப்படித்தான் சொல்லுதுங்க.

    அதென்ன பாப்புகானோ…நூர்ஜகானோ….எனக்கு ஒரு பாக்கெட்டு வாங்கு. எம்புட்டு இருக்கும்.

    பத்து ரூவாடி….!

    அடிப்பாவி….எங்கூர்ல ரெண்டு ரூவா தாண்டி..இங்கிட்டு கொள்ளையடிக்கிரானுவ…இத்தினிகாண்டு சோளம்…பொரிச்சா பொங்கீட்டு வரப்போவுது..அதுக்கு இம்புட்டு துட்டு எதுக்கு..? சரி வாங்கித் தொலை.

    இதுக்கே இம்புட்டு இழுக்கறியே …..இம்புட்டுக்காண்டி வேகவெச்ச சோளத்தைக் கொடுத்து இருபத்தஞ்சு ரூபா கேட்ப்பான்…அத இன்னும் நீ பார்க்கலைன்னு வெளங்குது. ஒரு நாளு பாண்டியோட பாண்டிபஜார் போயிட்டு வந்தால் அம்புட்டும் வெளங்கும் .

    அதென்னாடி …பாண்டிக்கு தனியா பஜாரு கூட அதும் பேருல இருக்குதா? நீ பெரியாள்டி .

    மண்ணாங்கட்டி…….மொதல்ல அது ஏதாச்சும் வேலை வெட்டி பார்க்காதான்னு நான் கெடந்து தவிக்கிறேன்.

    ஆமா…உன் ஆளு பாண்டிக்கு வேலை வெட்டி ஏதும் இல்லையா? அதான் சும்மாச் சும்மா இங்கிட்டே சுத்தி சுத்தி வராப்பல. அவனப் பாத்தா நல்லவனாவே தெரியல. எதுக்கும் தள்ளியே வெய்யி. இவன்லாம் உன் கழுத்துல தாலி கட்டி…நீ குடும்பம் நடத்தி……வாயில் பாப்கார்னை போட்டுக் கொண்டே ‘சவக் சவக் ‘ என்று மென்று கொண்டே பேசிக் கொண்டு நடக்கிறாள் மலர்.

    அடி….பார்த்து வாடி எரும மாடு…! என்று ஷீலா மலரின் கைகளைப் பற்றி இழுக்கிறாள் .

    எருமை மாடு ஒன்று நடந்து இவர்களைக் கடந்து சென்றது.

    நீ என்னமோ என்னியத் தான் சொல்லுறேன்னு நெனைச்சு சுள்ளுன்னு எனக்கு எகிறிச்சு பாரு…!

    பழையபடி குப்பைகளைக் கடந்து அந்த இருட்டு ரூம்புக்குள் நுழைந்து , தப்பித்தால் போதும் என்று தனது பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறிய மலர்விழி, அப்ப நான் அந்த மேனஜரை பார்த்து பேசி அந்தாளு எங்கிட்டு அழைச்சிட்டுப் போகுதோ அங்கன போய் இருக்கேன். இன்னும் பத்தே நாளு தான்..எம்புட்டு கெடைச்சாலும் எடுத்துக்கிட்டு ஊரைப் பார்த்து போயிடுவேன். அடுத்த மாசம் இந்நேரம் காலேஜுடி .

    அந்தாளு முன்னமே சொல்லிருந்தா இந்த வாரமே அஞ்சாயிரம் அள்ளிருக்கலாம். அதென்னடி..எப்பப் பாரு நம்மளப் பார்த்து ஈ ன்னு இளிச்சுக்கிட்டே நிக்குது.

    போட்டும் விடு மலரு. நா வேணா கூடத் தொணைக்கு வரட்டாடி ஷீலா கேட்கிறாள்.

    வேணாண்டி…எனக்கே வளி தெரியிது. நீ பாவம்..போய் படு. நா வாரேன்.

    மூச்சிரைக்க நடந்து வந்து ஆபீஸ் வாசல் படியில் பெட்டியை வைத்து விட்டு அங்கேயே மூச்சு வாங்க உட்காருகிறாள்.

    அந்த அறைகுள்ளிருந்து ஜன்னல் வழியாக அவளது கண்கள் எட்டிப் பார்க்கிறது. இந்தாளு பாண்டிக்கு இங்கிட்டு என்ன வேலை….? அப்படி என்ன தான் பேசுறாரு மேனேஜர் சாரு இவன்கிட்ட..அதும் ஷீலா இல்லாத போது ..? எழுந்து நின்று காதைத் திட்டுகிறாள். மனசு சொல்கிறது அடியே…ஒட்டுக் கேட்க்குறது தப்புடி ….! மனசாட்சி சொல்லுகிறது….கவனமா கேளு…அதுங்க என்ன பேசுதுங்கண்டு…மண்ணாந்தையா நிக்காதேன்னு.

    மனசாட்சிக்கு செவி சாய்த்து சுவரில் சாய்கிறாள் மலர்விழி.

    0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

    ஏண்டா….பாண்டி..நீ எப்பப்பாரு வந்து வந்து நிக்கறியே..வேலை வெட்டி ஒண்ணுமில்லியா? உத்தியோகம் புருச லட்சனம்டா..தெரியுமில்ல. மேனஜரின் கட்டைக் குரல் இவளின் காதை அடைத்தது.

    எல்லாம் தெரியும்பு….வேலை இல்லாமலா சுத்துறோம்…..திருவான்மியூர்ல தீயடைப்பு இருக்குல்ல அங்கனக்குள்ள தான் இருக்குறேன்.
    நமக்கு வேலை மென்னியப் பிடிக்கிறது தீவாளி சீசனப்பத்தான். எனக்கு தெனம் வேலை வேணும்முண்டா தெனம் எங்கிட்டாச்சும் தீ புடிச்சி எரியணும் . அது ஆவுற காரியமா…? அதான் அங்கிட்டுருந்து இப்படி ஒரு நடை வந்துட்டுப் போவேன்.

    அப்ப அந்தப் புள்ள ஷீலா….சும்மானாச்சும் டாவடிக்கிறியா?

    அய்யைய …..நான் கட்டிக்கப் போற பொண்ணுங்கன்னா…அது. நான் கழட்டி விட்டுட்டு போக பளகல. புரிஞ்சுக்கிடுங்க.

    அடப் போப்பா…..இந்தக் காலத்துல பொண்ணுங்களே அப்படிப் பளகறதில்லை. காசப் பாத்ததும் கழண்டுகிடுங்க.

    என்ன நீ ஒரு இருபதாயிரம் மாசம் தேத்துவியா..?

    அம்புட்டு எங்கிட்டு…! நல்லாக் கேட்டீங்க போங்க..! நான் அஞ்சுக்கும் பத்துக்குமே முழி பிதுங்கி நிக்கிறவன்.

    அப்ப ஒண்ணு செய்யி….நான் ஒரு அருமையான தொழில் சொல்லித் தரேன்…கமிஷனே களை கட்டும்….ஒரே வருஷத்தில .நீ எங்கிட்டோ போயிடுவே. எங்கன உனக்கு வேலையே இல்ல..பூரா பூரா வடக்குல தான். செல் போன் ல தான் பிசினெஸ் நடக்கும். நம்ம அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான் முதலாளி. மாட்டிக்கிடாம, மாட்டிவெக்காம காரியம் பண்ணி முடிச்சா…பணம் மூட்டைல வந்து எறங்கும் . இல்லாங்காட்டி…

    இல்லாங்காட்டி…..?

    நீயே பொணமா மூட்டைக்குள்ளார கட்டிவெச்சி கூவத்துக்குள்ளார எறங்கும்.

    அப்படி என்ன புதுசா கெடைச்சிருக்கா ‘மகாலட்சுமி..”..? பயமுறுத்துற லட்சுமி.

    இப்ப ஷீலா உங்கிட்ட மாட்டிச்சு பாரு, அதை அப்படியே மெதுவா நம்ப வெச்சு கிண்டி கூட்டியாந்துடு. அங்கிட்டிருந்து அப்படியே ஆந்திரா தள்ளி உட்றலாம் . அங்க நம்ப ஆளு இருக்கான். எப்டியும் அம்பது தேறும்.

    ச்சே……இதெல்லாம் ஒரு பொளப்பா ….? இதுக்கெல்லாம் தான் பேரு இருக்கே. நான் இந்தப் பாவம் பண்ண மாட்டேன் ஆள விடுங்க.
    பாண்டியனின் குரலில் நெகிழ்ந்தாள் மலர்விழி.

    இதெல்லாம் உனக்கு செட் ஆவாதுடா…தள்ளி விட்டுட்டு காசை எண்ணிக்கிட்டு என்ஜாய் பண்ணிட்டு போயிட்டே இருப்பியா…பாவம்…புண்ணியம்னு பேசிக்கிட்டு…அலுத்துக் கொண்டான் மனேஜர்.

    இந்தா….என்று டேபிளின் மீது தொப்பென்று விழுந்தது பணக்கட்டு. வேலையே பண்ணாதே….வெச்சுக்கோ அட்வான்ஸ்.இருபதாயிரம்..
    கட்டைக் குரல் பேரம் பேசியது. அதே சமயம் இங்கிட்டிருந்து உசுரோட போவமாட்டே என்று பயமுறுத்தியது.

    ரத்தம் உறைந்து போய் நாவுலர நடுங்கியபடி நின்றிருந்தாள் மலர்.

    அடுத்தது என்ன…யூகிப்பதற்க்குள்..

    பாண்டியன் பணத்துக்குள் விழுந்தான்…!

    அப்ப …என் கணக்குல ரெண்டு அயிட்டம் எழுதிக்கிருங்க….முதல்ல ஷீலா. பெறவு மலரு.

    வெளியில் நின்றிருத்த மலருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இருந்தும் அசட்டு தைரியம் நிற்க வைத்தது.

    அப்டி வா வளிக்கி ..இதெல்லாம் இன்னும் ஒரு வாரத்துல முடிஞ்சிரணம். அந்த ஷீலாவை ஆந்திராவுக்கு அனுப்பிடு. இந்தப் புள்ள மலரை பாம்பேக்கு தள்ளி விட்டுடு, எப்படியும் ஒண்ணத் தாண்டிடும் உன் கமிஷன். பாரேன்…ஒரே வாரத்துல நீ லட்சாதிபதி. ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான்….ராத்திரி இங்கன வந்துருறா கம்பெனிக்கி…..டாஸ்மாக்கே அந்த பீரோக்குளாற தான் இருக்கு.மேலும் ஆசை காட்டினான். பாண்டியனின் மனது நாயானது…..ரொட்டித் துண்டுக்கு வாலாட்டி குழைந்து நாக்கைத் தொங்கப் போட்டது.

    பாண்டி பணத்தை எடுத்து அழுக்கு கர்சீப்பில் கட்டிக்கொண்டு விசிலடித்தபடியே……’தலைவா …..சொன்னபடி நான் ஒரு வாரத்தில் லட்ச்சாதிபதி..’ ஏமாத்திற மாட்டியே…!

    நீ காரியத்த கவனிடா….உன்னிய நாங்க கவனிக்கிறோம்….வில்லனைப் போல சிரிக்கிறது கட்டைக் குரல் மேனேஜர் .

    சரிங்கண்ணா…….அங்கிருந்து கிளம்புகிறான் பாண்டியன்.

    அவசர அவசரமாக பையை எடுத்துக் கொண்டு தான் அப்போது தான் வந்தவள் மாதிரி உள்ளே நுழைகிறாள் மலர்.

    அவளைப் பார்த்தவன்…..”கும்பிடப் போன …தெய்வம். …குறுக்கே வந்ததம்மா…அடக் குறுக்கே வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா……”
    என்று பாடியபடியே…புருவத்தை உயர்த்திப் பார்க்கிறான்.

    (தொடரும் )

    Share
  • மஹாகவி பாரதியாருக்கு அஞ்சலி

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

    இன்று மஹாகவி பாரதியார் நினைவு தினம்.

    தமிழ் இலக்கியத்திற்குப் புத்துயிர் கொடுத்த கலைமகளின் தவப்புதல்வனை வணங்குவோம்!

    பாரதியின் பாதமலர் போற்றும் கவிதையும், அன்னாரின் திரு உருவ ஓவியமும் காண்க!

    பார்க்க, படிக்க, ரசிக்க…

    Mahakavi Bharathiyar 1

    மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்

    உலைப்பாகை ஊற்றியது போலே என்றும்

    ஒளிர்கின்ற விழிச்சுடர்கள், அதற்கு மேலே

    தலைப்பாகை கம்பீரம், தரைகா ணாத

    தருக்கோடு வான்நோக்கும் மீசை, நாட்டைக்

    குலைப்பார்கை ஒடித்தெறியத் துடித் தெழுந்த

    குமுறல்கள் ஊற்றெடுக்கும் நெஞ்சம்; அந்தக்

    கலைப்பாவை தவமிருந்து பெற்றுத் தந்த

    கவிச் செல்வம் பாரதியின் கழலே போற்றி!

    கடவுளிடம் வரம்கேட்டபோதும் கூடக்

    கைகட்டிக்கேட்காத தன்மானத்தன்

    இடர்களையும், தடைகளையும் இமைப்போதில் தன்

    இடர்களையும் கவிதைகளால் தகர்க்க வல்லான்

    சுடர்கின்ற சொற்களுக்குச் சொந்தக் காரன்

    ஸ்வரங்களிலே கவிதொடுத்த பாட்டுக் காரன்

    மடமைகளும், பழமைகளும் மலிந்த நாட்டை

    மலர்வனமாய் மாற்றவந்த தோட்டக் காரன்

    அரசியலோ, அறிவியலோ, ஆன்மீகத்தின்

    அடிவேரோ, அயல்மொழியில் கவிஞர் செய்த

    அரியபல இலக்கியமோ ஏதானாலும்

    அவன் தொட்டுப் பார்க்காத களமே இல்லை!

    விரல்தடவி வாணியவள் மீட்டிப் பாடும்

    வீணையவன்; கண்ணன் கைக் குழலும் ஆவான்!

    வரகவியாய் வந்துதித்த ஸுப்ரஹ் மண்ய

    பாரதியின் பாதமலர் போற்றி! போற்றி!

    Share
  • பாலின சமத்துவம் ஏற்பட வேண்டாமா?

    எஸ். கண்ணன்

    தில்லி மாணவி பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாகி இறந்த பின், உறைந்து கிடந்த பொதுப் புத்தியில் சில விமர்சனங் களும், கேள்விகளும் எழுந்தது. மக்கள் ஆவே சப் பட்டனர். அதைத் தொடர்ந்து வினோதினி, வித்யா, கோமதி என ஆசிட் வீச்சில் மரண மடைந்த செய்திகள் ஆறாவடுக்களாக, காட்சி யளிக்கிறது. இப்போது மும்பையில் ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்காரத் திற்கு ஆளாகியுள்ளார். பத்திரிக்கையாளர்க ளும், பொதுமக்களில் சிலரும் இடதுசாரி சிந் தனையாளர்களும், போராடி வருகின்றனர்.

    ஒருநாள் நடத்தும் ஆவேசப் போராட்டங்கள் கடந்து, சில நடவடிக்கைகளின் தேவைகள் குறித்து என்ன கருதுகிறோம்? சட்டம் செய் யும் கடமைகளையும், சட்டத்தை மீறாத மன நிலையையும் மக்கள் மனதில் உருவாக்கிட என்ன செய்யப் போகிறோம்? என்ற துணைக் கேள்விகள் விவாதிக்கப் படாமல் இப்பிரச் சனைக்குத் தீர்வு காணமுடியாது..ஜே.எஸ் வர்மா தலைமையிலான குழு வெகுவிரைவில், தனது பரிந்துரைகளை அளித்தது. வழக்கம் போல் அரசு தனது, இயந் திரங்களான ராணுவம், காவல்த் துறை ஆகி யோரின் பாலின அத்துமீறல்களை நியாயப் படுத்தும் விதத்தில், அவசரச் சட்டத்தை முன் வைத்து, வர்மா குழுவின் அறிக்கையை நீர்த் துப் போகச் செய்து விட்டது.

    ஏற்கனவே குழந் தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டத்தை, 2012 முதல் பாதியில் நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின்பும் கூட, சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளா வது குறையவில்லை என்பது கவலைக்குறி யது. இவை சொல்லும் செய்தி இந்தியாவில் சட்டங்களைக் கடந்த அணுகுமுறைத் தேவைப் படுகிறது என்பதாகும். இந்திய உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான் அரசுக்கும், விசாகா மற்றும் குழுவினருக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பு வழங்கி சில வழிகாட்டுதல்களையும் 1997 ன் போதே கொடுத்துள்ளது. பணிபுரியும் இடங்களில், பெண்கள் மீதான வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32 வது பிரிவு வழங்கியுள்ள “சுயமரியாதையுடன் கூடிய வேலை என்ற அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகை யில் பாலியல் பலாத்கார நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவும், அனைத்து விதத்திலும் பெண்கள் மீதான பாரபட்சத்தை ஒழித்திடும் வகையிலும், ஐ.நா. சபை நிறைவேற்றிய தீர் மானத்திற்கு, இந்திய அரசு 1993 ல் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, பெண்கள் சம உரிமை கொண்டவர்களாக மதிக்கப் பட வேண்டும்”, என உச்ச நீதிமன்றம் வலி யுறுத்தியுள்ளது.

    ஆனாலும் இந்தியாவில் பாலி யல் வன்கொடுமைகள் பணிபுரியும் இடங் களிலோ, இதர பகுதிகளிலோ குறையவில் லை, மாறாக அதிகரித்துள்ளது என்பதையே தொடர்ந்து வரும் செய்திகள் வெளிப்படுத்து கின்றன. இதற்குக் காரணம், சட்டங்கள் குறித்தும், தண்டனையின் காலம் மற்றும் தன்மை குறித்தும் நம் சமூகத்தில், பெரும் பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதை, திரைஅரங்குகளில் அரசு செய்திப்பிரிவின் விளம்பரமாகவோ அல்லது தொலைக்காட்சி மற்றும் எஃப். எம். ரேடியோக்களில் விளம்பரங் கள் செய்தோ மக்களைச் சென்றடையச் செய்திருக்க முடியும். அடுத்தடுத்த ஆண்டுக ளில் பாடத்திட்டங்களில் சேர்ப்பதன் மூலமும் இளம் தலைமுறையை நெறிப்படுத்த முயன் றிருக்க முடியும்.அரசுகள் இவை குறித்து கவலை கொள் வதில்லை.

    இதனால் ஒருநாள் செய்தி என்ற அளவில் மட்டும் பல சட்டங்கள் குறித்த விவா தம் நின்றுவிடுகிறது. தொடர்ந்து மக்கள் மன தில் நீடித்து நிற்கும் வகையில் இடம் பெறாமல் ஒதுக்கப் பட்டு விடுகிறது. குறிப்பாக பண் பாட்டு ரீதியில் பெண் ஆணுக்குக் கீழான, இரண்டாம் பாலினம் என்பதும், அவள் ஒரு நுகர்வுப் பொருள் என்ற கருத்தும் ஆழமாக வேர்பரப்பி நிற்கும் இந்திய சமூகத்தில், அரசுகள் எடுக்கும் மேற்குறிப்பிட்ட நடவடிக் கைகளுடன், மேலும் இரண்டு வித நடவடிக் கைகள் உடனடியாகத் தேவைப் படுகின்றன. ஒன்று பெண் ஆணுக்கு இணையானவள் என்ற கருத்தை நிலை நிறுத்துவது. இரண்டு ஆண், பெண் உடல் குறித்த பாலின புரி தலுக்கானக் கல்வி. இது குறித்து இன்றளவும் முழுமையான ஏற்பு மனப்பான்மை உருவாகவில்லை. அவ் வளவு எளிதானதும் அல்ல.

    ஆனால், உடல் கவர்ச்சி குறித்து விளம்பரங்கள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறைய, பாலினம் குறித்த அறிவு தேவைப் படுகிறது. விளம்பரம் மற்றும் திரைக்காட்சி அமைப்பு, தனிநபரின் அந்தரங் கங்களை, காட்சிப் படமாக்கி கையில் உள்ள செல்போன் மூலம் ஒளிபரப்புகிற ஏற்பாடு, ஆகியவை அதிகரித்துள்ளதை, அனைவரும் அறிவோம். ரெய்டில் ஆபாச சி.டிக்கள் பிடிபட் டன என்பதை ஊடகங்களில் தொடர்ந்து செய் தியாவதையும் கவனித்து வருகிறோம். இந்தச் செயல்களை மாற்றுவதற்கும், ஆரோக்கிய உறவை உருவாக்கவும், மனவிருப்பங்கள் எதிர் பாலின கவர்ச்சியைக் கடந்து நீடித்து நிற்கும் உறவு என்பதைப் புரிந்து கொள்வதற்கும், பாலியல் குறித்த கல்வித் தேவை படுகிறது.

    ஆண், பெண் உடல் குறித்து, உடலியல் இயக்கம் குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கல்விமுறையின் மூலம் தான் அதி கரிக்கும் என்பதே அனுபவம். ஆப்பிரிக்கக் கண்டத்தின் சகாரா பகுதி நாடுகளில் 33 சதமான பெண்கள் 18 வயதை அடைவதற் குள்ளாகவே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளா கினர் என்றும், பாலியல் கல்வி கொடுக்கத் துவங்கிய பின் ஓரளவு குறைந்துள்ளது என் றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.வளர்ந்த நாடுகளில் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக துவங்கிய பாலியல் கல்வி தற்போது, பல்வேறு வகையில் பதின் பருவ இளைஞர்களைப் பயிற்றுவிக்கப் பயன் படுகிறது, எனக் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக பாலினம் குறித்த புரிதலை மேம் படுத்துவதற்கான கல்வி கற்றுக் கொடுக்கப் படுகிறது. கேரியன் லிங்டோ என்ற அமெரிக்க ஆசிரியர், “பெண் என்ற முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஒரு பெண் உள்ளாகிறாள்.

    ஆண் என்ற முறையில் அந்த துன்புறுத்தலை செய்பவனாக ஒரு ஆண் உள்ளான். இதில் இருவரும் சமமான மனிதர்கள் என்ற புரிதல் இல்லாததன் விளைவே மேற்படி தவறு களுக்கு காரணமாக அமைந்துள்ளது, என் பதை எனது மாணவர்களுக்கு போதிக்கி றேன்” என்று கூறுகிறார். இது உடனடி பலனைத் தரவில்லை என் றாலும், ஒருசில ஆண்டுகளில் நல்ல பல னைத் தரும் என எதிர்பார்ப்பதாகக் கூறுகி றார். மேலும் மது இன்று பெண்கள் மீதான தாக் குதலுக்கு ஒரு காரணமாக இருப்பதையும் கணக்கில் கொண்டு செயலாற்ற வேண்டியுள் ளது, எனக் குறிப்பிடுகிறார். மும்பை பத்திரி கையாளர் மீதான தாக்குதலுக்கும் போதை ஒருகாரணம் எனக் கூறப்படுகிறது. புத்தாண் டுக் கொண்டாட்டத்தில், பண்டிகை நாள்க ளில், குடும்ப விழாக்களில், கோவில் திரு விழாக்களில் என எல்லா பொது நிகழ்வு களிலும், மது பானம் விற்பனை அதிகரித்துள் ளது.

    இக் கொண்டாட்டங்களில், பெண்கள் காணாமல் போவதும், வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் இடம் பெறுகிறது. இதில் இளை ஞர்கள் பெரும்பாலும் ஈடுபடுவது, எதிர்கா லத்தை மிகுந்த துயரத்திற்கு கொண்டு செல் லும். எனவே பாலியல் வன்முறைகளையும், மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிப் பதையும், இணைத்துப் பார்த்து செயல்பட வேண்டியதை அரசுகள் உணர வேண்டும்.பாலியல் கல்வி மற்றும் ஆலோசனை மையங்கள், வளர்ந்த நாடுகளில் பதின் பருவ இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது, என சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடுத்தர குடும்பங்கள் மற்றும் பெற்றோர் இருவ ரும் வேலை செய்யும் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள், வீடுகளில் பெரும் பாலும் தனி யாக இருப்பதும் ஒருவகையில் வக்கிர மன நிலையை ஏற்படுத்தத் துணை செய்கிறது, என்ற தகவலையும் கணக்கில் கொண்டு செய லாற்ற வேண்டியுள்ளது.

    சீனாவின் பள்ளிக ளில் பாலியல் கல்வி போதிக்கப்படுகிறது. இதன் மூலம் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறு கின்றனர். மேலும் 1972 காலங்களில் அறிமுகப் படுத்தப்பட்ட சில சட்ட நடவடிக்கைகள் 1997 காலங்களில் திருத்தப்பட்டு அமலாகிய நிலையிலும், பாலியல் கல்வி மற்றும் கவுன் சிலிங் காரணமாகவும், பாலியல் வன்கொடு மைகள், எண்ணிக்கை சீனாவில் குறைந்தது, என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் 1970 களுக்குப் பின் தான் பாலியல் கல்வி பள்ளிகளில் அறிமுகம் செய்யப் பட்டதாகவும், அது பாலியல் பலாத்கார நடவடிக்கைகளைக் குறைத்திட உதவி செய்ததாகவும் சொல்கின்றனர். இதே போன்று வேறு சில நாடுகளும் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளன.

    இத்தகைய அனுபவங்களில் இருந்தே, பாலியல் கல்வி மற்றும் ஆலோசனை மையங் கள் பள்ளிகளில் தேவைப் படுகிறது. இந்தியா வில், இதுவரை எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து அறிவதற்கான முறையில் தான் பாலியல் கல்வி குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. 2010 ல் மும்பையில் நடந்த ஆய்வு மூலம் 15-29 வயதுக்குற்பட்ட இளைஞர் பிரிவினரிடம் குறிப்பிடத் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டதாக தெரிவிக் கின்றனர். அதாவது இந்தியாவில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரில் 31 சதமானோர் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர் என்ற செய்தி தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

    ஆனாலும் ஆய்வின் அடிப்படையில் மேற் கொண்ட கவுன்சிலிங் (ஆலோசனைகள்) நல்ல பலனைத் தந்துள்ளது என்பது ஆறுத லான செய்தி.. விரிவான முறையில் உளவியல் வளர்ச்சிக்கான வகையில் பாலியல் கல்வி மற்றும் ஆலோசனைக்கான சூழலைப் பதின் பருவ இளைஞர்களுக்கு உருவாக்குவது அவசியம் என்பதையும் ஆய்வு குறிப்பிடுகிறது. அதேபோல் விசாகா வழக்கில் கொடுக்கப் பட்ட வழிகாட்டுதல் படி பாலின சமத்துவத் திற்கான நட்புரீதியிலான செயல்பாட்டை அனைத்து மட்டங்களிலும் அமலாக்குவது குறித்தும், மக்களின் எழுச்சிகள் உருவாகி யுள்ள இன்றைய சூழலில் திட்டமிட வேண் டும்.

    இல்லையென்றால் எதிர்பாலின கவர்ச் சியை உருவாக்கும் விளம்பரங்களும், பெண் ஒரு நுகர்வுப் பண்டம் என்ற எண்ணமும் மட்டுமே மேலோங்கி நிற்கும்.

    Share