வடமுல்லைவாயில் வைஷ்ணவி
சு. ரவி
வணக்கம், வாழியநலம்,
வடமுல்லைவாயில் தலத்து வைஷ்ணவி என்னைப் பலவேறு தருணங்களில் தன்பால் ஈர்த்துக்கவிதை கேட்பவள்.
அவளோடு கவிதையாடிய சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்:
இணைப்பாக வைஷ்ணவியின் கோட்டோவியம் ஒன்று
பார்க்க, ( பாட) ரசிக்க,,,
ராகம்: பூபாளம்
ஈரைந்து மாதங்கள் தாய்கொண்ட சூலெனும்
இருட்சிறை வாசத்திலும்
இளமைப் பிராயத்தை எடுப்பார்கைப் பிள்ளையாய்
இகவுலக நேசத்திலும்
ஓரைந்து புலன்வழியி லேநைந்துருக்குலைந்
தேதளர்ந்தேன் அம்மணீ!
ஓசைகளாய்க் கவியும் ஆசை அலைக் கடலில்
உள்மறையின் ஒலிகேட்கிலேன்!
சீரைந்தெழுத் தோதி ஜீவன் கடைத்தேற
சிறிதும் முயன்றதில்லை
சிவனிலொரு பாதியே அவனியிதன் ஆதியே
சிங்கார அகராதியே!
வார்குழலில் மலர் சூடி மலரில்வண் டினம்பாடி
வாழ்த்திசைக்கும் வண்ணமே,
வடமுல்லைவாயிலில் படர்முல்லையே எனை
வாழ்விக்க வரும் அன்னையே
சு.ரவி
சிலாகித்துப் போகிறேன்
சிலிர்க்கச் செய்யும் வரிகள்!
சிந்தையில் அமுதூர செய்கிறது!
தேனா! அமுதா! தித்திக்கும் கற்கண்டா!
மூவா மருந்தை ஏமாப்புடன் அருள்வாய்
தேவாதி தேவரையும் படைத்த
பராசக்தியே! பிரபஞ்ச இயக்கமே!
பரமே! பரமின் இடது புறமே -நினை
பாடும் இக்கலைஞரின் கலைக்கு
அகமகிழ்ந்து அளிப்பாய் வரமே!
சொல்லோவியமும் கோட்டோவியமும் பாராட்ட வார்த்தைகளில்லை. உருகி எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
தூரிகையில் கவிதை வரைகிறீர்கள். கவிதையில் ஓவியம் எழுதுகிறீர்கள். தங்களது ஒவ்வொரு படைப்பையும் கண்டு களித்து வருகிறேன். நன்றி!