Blog

  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும்

    செல்வன்

     இந்தக் கட்டுரை தொடர் கொல்ஸ்டிரால், ரத்த அழுத்தம், டயாபடீஸ் முதலிய நாகரிக மனிதனின் வியாதிகளுக்கும் நம் உணவு வாழ்க்கை முறைக்கும் இருக்கும் தொடர்பை அலசி ஆராயும் தொடர். கட்டுரையின் நோக்கம் யாரையும் சைவம் அல்லது அசைவத்துக்கு மாற்றுவது அல்ல. சைவம் அல்லது அசைவம் இரண்டிலும் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள் உண்டு. அதை உங்கள் மருத்துவர் ஆலோசனையுடன் நீங்களே முடிவு செய்துகொள்வது நல்லது. இந்தக் கட்டுரையை எழுதும் நான் மருத்துவர் அல்ல. மருத்துவத் துறையில் எந்தத் தேர்வும் பயிற்சியும் எனக்கு இல்லை. என் உடல் நலனை மேம்படுத்த உணவு முறையில் கவனம் செலுத்தத் துவங்கினேன். அதன் விளைவாக அறிந்தவற்றை பகிரவே இந்தத் தொடர்.

    பிளட் பிரஷர், கொலஸ்டிரால், சர்க்கரை வியாதி இவை மூன்றும் நாகரிக மனிதனின் வியாதிகள் என அழைக்கப்படுபவை. 19, 20ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாகரிகம் பரவிய சமூகங்களில் கூட இந்த வியாதிகளும் பரவின. உதாரணமாக எஸ்கிமோக்களை கூறலாம். எஸ்கிமோ உணவு 100% மாமிசம். முழுக்க முழுக்க சீல், வால்ரஸ், பனிக்கரடி என அதிகக் கொழுப்பு நிரம்பிய உணவுகளை உண்பவர்கள் எஸ்கிமோக்கள். பால், காய்கறிகளை அவர்கள் பார்ப்பதே அபூர்வம்.

    இத்தனை கொழுப்பு நிரம்பிய உணவுகளை உண்டும் பருமனாக இருக்கும், சர்க்கரை வியாதியால் அவதிப்படும் எஸ்கிமோக்களை யாரும் பார்க்க முடியாது. ஆனால் இப்போது அவர்களும் ரொட்டி, பர்கர், பன்களை உண்ணத் துவங்கியதும் நாகரிக மனிதனின் வியாதிகள் அவர்களையும் வந்து அடைந்துள்ளன.

    அமெரிக்காவில் இருக்கும் பிமா பழங்குடி இந்தியர்களின் கதை குறிப்பிடதக்கது. பிமா இந்தியர்கள் பெரும்பாலும் வேட்டை, மீன் பிடித்தல், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உண்டு வந்தவர்கள். சிறு அளவில் விவசாயம் செய்து வந்தார்கள். ஐரோப்பிய குடியேற்றம் நிகழும் வரையில் மிக ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஐரோப்பியர் அவர்களின் நிலங்களில் குடியேறி இருந்த மிருகங்களை வேட்டையாடி அழித்ததும் பிமாக்கள் உணவின்றி தவிக்கும் நிலைக்குச் சென்றார்கள். அமெரிக்க அரசு அவர்களுக்கு உணவளிக்க ரேஷன் முறையை அறிமுகப்படுத்தியது. வெள்ளை ரொட்டியும், மாவும், சர்க்கரையும் ரேஷன் முறையில் வழங்கப்பட்டன.

    இதனால் பசி ஒழிந்தாலும் வேறு பின்விளைவுகள் தோன்றின. பிமா இந்தியர்களிடயே அதுநாள்வரை காணப்படாத நாகரிக மனிதனின் வியாதிகளான டயபடீஸ், உடல்பருமன், கொலஸ்டிரால் அனைத்தும் தோன்றின.

    ஐரோப்பிய குடியேற்றத்துக்கு முந்தைய பிமா இந்தியர்கள் உணவு

    19ம் நூற்றாண்டு பிமா இந்திய பெண்கள்

    21ம் நூற்றாண்டு பிமா இந்தியர்கள்

    பெரும்ம்பாலான அமெரிக்கர்களுக்கு கொலஸ்டிரால், ஹார்ட் அட்டாக் பற்றி தெரிந்தது ஜனாதிபதி ஐசந்கோவருக்கு இதய அடைப்பு வந்தபின்னர் தான். ஐசந்கோவர் முன்னாள் படைத்தளபதி. ஜனாதிபதி ஆன பின்னரும் தினசரி கடும் உடற்பயிற்சிகள் செய்து உடலை மிகக் கட்டுப்பாட்டுடன் வைத்து இருப்பார். அவரது உடல் எடை 172 பவுண்டுகள் (78 கிலோ). ஐந்தடி பத்து அங்குல உயரத்தில் இந்த எடைக்கான பி.எம்.ஐ (BMI) 24.7. அதாவது நார்மல் வெயிட். ஒபிசிட்டியோ அல்லது ஓவர் வெயிட்டோ கூட அல்ல. அவர் குடும்பத்தில் ஹார்ட் அட்டாக் வரலாறு இல்லை. புகைப்பிடிப்பதை பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திவிட்டார். அவருக்கு அட்டாக் வருமுன் இருந்த கொலஸ்டிரால் லெவெல் 165. நார்மல் கொலஸ்டிரால் லெவெல் என்பது 200க்கு கீழ்.

    64வது வயதில் ஜனாதிபதியாக இருக்கையில் முதல் அட்டாக் ஐசந்கோவருக்கு வந்தது. அப்போது எழுதப்பட்ட பத்திரிக்கை செய்திகள் மூலம் அமெரிக்கர்கள் இதய அடைப்பு பற்றி அதிகமாக கவனம் செலுத்த துவங்கினர்.

    கட்டுப்பாட்டுக்கு பெயர் போன ஐசந்கோவர் இதய அடைப்புக்கு பின் உணவில் இருந்த கொழுப்புக்களை சுத்தமாகக் குறைத்தார். கலோரிகளைக் குறைத்தார். வெண்னெய்க்கு பதில் சோயாபீன் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகளை உண்டார். முழுக் கொழுப்பு இருக்கும் பாலை நிறுத்திவிட்டு கொழுப்பு இல்லாத பாலை குடிக்கத் துவங்கினார். காலை உணவாக ஆம்லட் உண்பதை நிறுத்தி கொழுப்பு எடுத்த பால் மற்றும் சீரியல்களுக்கு மாறினார்.

    கொழுப்பு குறைந்த உணவுகளுக்கு மாறியதும் ஐசந்கோவரின் எடையும், கொலஸ்டிரால் அளவும் மட, மட என ஏறியது. அவர் எடை 172ல் இருந்து 176 ஆனதும் வெறுத்துப் போன ஐசந்கோவர் காலை உணவாக சில பழங்களை மட்டும் உட்கொண்டார். மேலும் அதிகமாக உடற்பயிற்சி செய்தார். கொலஸ்டிரால் மேலும் ஏறியது. வெறுத்துப்போய் மதியமும் பழங்கள்,காய்கறிகளை உண்டும் உபவாசம் இருக்கவும் துவங்கினார். அரைப் பட்டினி இருந்ததன் விளைவு எல்லாரிடமும் அடிக்கடி எரிந்து விழுவார். 165 ஆக இருந்த கொலஸ்டிரால் இப்படி கொழுப்பு குறைந்த உணவுகளை உண்ணத் துவங்கியதும் 259 ஆக ஏறியது.,

    கொழுப்பு மிகவும் குறைந்த உணவு,  கலோரிகளைக் குறைத்தல், உடற்பயிற்சி மூலம் கொலஸ்டிராலை கட்டுப்படுத்த கடுமையாகப் போராடியும் முடியாமல் இறுதியில் ஐசந்கோவர் இதய அடைப்பால் உயிர் இழந்தார்.

    அந்தக் காலகட்டத்தில் தான் அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் கொலஸ்டிராலைக் குறைக்க மக்களுக்கு கொழுப்பு குறைந்த உணவுகளை உண்ணவும், ஸ்கிம் மில்க்கை உட்கொள்ளவும், நெய்க்கு பதில் சோயாபீன் எண்னெயை உட்கொள்ளவும், கலோரிகளைக் குறைக்கவும் பரிந்துரைத்தது. அதாவது ஐசந்கோவர் என்னென்ன வழிகளைக் கடைப்பிடித்தாரோ அதே வழிகள் மக்களுக்கு வேதமாக பரிந்துரைக்கபட்டன. சீரியல் கம்பெனிகளான கெல்லாக் முதலியவை அதன்பின் “இதயத்துக்கு நன்மை அளிப்பது” என்ற முத்திரையுடன் உலா வந்தன. கொழுப்பைக் குறைக்க பெருமளவில் மக்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டது.

    விளைவுகள்? அடுத்த வாரம்

    References:




    Share
  • கீதை உரைக்க வந்தேனே

     

    சத்தியமணி

    கொடுப்பதும் நானே கொள்வதும் நானே
    இடையினில் உமதென்று சொல்வது வீணே
    மறைப்பதும் நானே தெரிவதும் நானே
    மறந்தாய் மனிதா! உன் மனதிலும் நானே()

    விண்ணாய் பரந்து இருப்பவன் நானே
    மண்ணாய் கலந்து உண்டவன் நானே
    எண்ணம் சுரந்து கொடுத்தவன் நானே
    எளிதாய் எதிலும் கிடைப்பவன் நானே ()

    அன்பாய் இருந்தால் இருப்பவன் நானே
    அசுரத் தனங்களை அழிப்பவன் நானே – எதையும்
    என்பால் விடுத்தால் காப்பவன் நானே
    உன்மேல் கீதை உரைக்க வந்தேனே ()

    Share
  • வால்ட் விட்மன் வசனக் கவிதை -14

    என்னைப் பற்றிய பாடல் – 7

     (Song of Myself)

     

    (1819-1892)
    (புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட்   விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
    +++++++++++++++++++++++++++++

    மனிதன் என்பவன் யார் ?

    நான் யார் ? நீ யார் ?

    என்னைப் பற்றிக்
    குறிப்பாய்ச் சொல்வேன்

    தனித்து நீ

    உன்னைப் பற்றி உரைத்திடு !

    இன்றேல் வீணாய்ப் போகும் நேரம்

    என்னை மட்டும் அறிந்து !

    எதற்கு நான் வழிபட வேண்டும் ?

    எதற்கு மதிப்பளித்து நான்

    மதச் சடங்கைப் பின்பற்ற வேண்டும் ?

    மக்கள் எல்லா ரிடமும் நான்

    பார்ப்ப தென்னைத் தான் !

    நல்லவரோ, தீயவரோ

    நான் சொல்வது என்னைப் பற்றித்தான்

    அவரைப் பற்றித்தான் !

    தெரியுது எனக்கு

    தெளிவாய் இருப்பதும் நான்

    வலுவுடன் இருப்பதும் !

    வாய்ப்புகள் குவிகின்றன எனக்கு !

    இந்தப் பிரபஞ்சம் தொடர்ந் தோடி

    இயங்கி வருகிறது !

    எல்லாம் எழுதப் பட்டுள்ளன

    என்னவென் றெனக்கு !

    கற்றுக் கொள்ள வேண்டியது

    என் கடமை !

    எனக்கென்றும் மரண மில்லை

    என்பதை நான் அறிவேன்

    என் சுற்றியக்க வீதியை

    ஒரு தச்சனின் கோணம் அளக்கும்

    கருவி வரையாது !

    என் ஆன்மா வுக்குத் தொல்லை

    ஈந்திட மாட்டேன்

    தன்னை  மெய்பித்துக் கொள்ள,

    இன்றேல்

    புரிந்து கொள்ள !

    அடிப்படை விதிகள் ஒருபோதும்

    மன்னிப்புக் கேட்ப தில்லை !

    நான் நானாக வாழ்கிறேன்

    போதும் அது எனக்கு !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman   [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (March 5, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • ’வனசாட்சி’ நாவல் அறிமுக விழா

    அன்பு நண்பர்களே,

    வனசாட்சி நாவல் அறிமுகவிழா கோவையில் நடைபெறுகிறது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இவ் விழாவில் மூத்த விமர்சகர்கள், எழுத்தாளர்கள் எஸ்.வி. ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், கவிஞர் நிர்மால்யா,  திலகபாமா,மு.சி.கந்தையா, பால நந்தலாலா உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.
    வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் வர வேண்டும் என அழைக்கிறேன்.

    -‍தமிழ்மகன்

    Share
  • அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை – பகுதி (1)

    சாகர் 

    1.பயண ஏற்பாடு

    எகிப்து என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது காலங்களைக் கடந்து கம்பீரமாக நிற்கும் பிரமிட்கள் தான். பண்டை எகிப்தியர்களின் கல்வி கலை மற்றும் கட்டிடத்திறனை உலகத்திற்கு பறைசாற்றும் பாறை படைப்புக்கள், பண்டை உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றானவை இந்த பிரமிடுகள். அப்படிப் பட்ட தொன்மையான தேசத்திற்கு போவது என்பது வெகு நாள் கனவு.

    எகிப்து என்னை ஈர்த்ததற்கு இதை அல்லாமல் இன்னும் பல காரணங்களும் உண்டு. தமிழகத்தில் சோழ தேசத்தின் தலை நகரான தஞ்சையில் பிறந்த எனக்கு, சோழரும் தமிழ் மக்களும் திரை கடலோடி திரவியம் தேடிய தேசங்களில் ஒன்றான பண்டை எகிப்து தேசத்தை பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் எப்பொழுதும் உண்டு. அந்த ஆவலைத் தூண்டியது தமிழ் சரித்திரமும் கல்கி மற்றும் சாண்டில்யனின் வரலாற்று புதினங்களும் தான்.

    கொற்கை, தொண்டி, நாகை மற்றும்  மாமல்லபுரம் துறைமுகங்களில் எப்படி எகிப்தியர்களும் யவனர்களும் குவிந்தனர் என்பது வரலாறு சொல்லியது, அதை பார்க்க மனம் ஏங்கியது. மருத்துவம் பயின்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆனபோது நமது சுஸ்ருதருக்கு இணையாக அறுவை சிகிச்சை செய்முறைகள் கொண்ட நாடு என்பதால் தொழில் ரீதியாக அந்த தேசத்தை பார்க்க ஒரு ஈர்ப்பு..

    அராபிய வசந்தம்(Arab Spring) என்ற புயல் ஆட்சியை மாற்றி இஸ்லாமிய சகோதரர் (Muslim brotherhood) ஆட்சிக்கு வந்தபோது ஏற்பட்ட அமளியில் போகமுடியாது என்று தோன்றியது. என்றாலும் மக்களாட்சி ஏற்பட்டு அமைதி ஆட்சி அமைந்ததால் இந்த வருடம் செல்லலாம் என்று யோசித்தபோது மீண்டும் அங்கே கொந்தளிப்பு. எங்கே நாம் அந்த அற்புத தேசத்தை பார்க்க இயலாமல் போய்விடுமோ என்ற பதட்டம். பாபிலோன் உள்ள இராக்கிற்கு போவது பற்றி யோசிக்க கூட முடியுமா ?

    நிறைய எகிப்திய நண்பர்களை கலந்தாலோசித்து கடைசியில் போவது என்று முடிவெடுத்தோம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை தான் சீதோஷணம் நாம் சகிக்கும்படி இருக்குமாம் அதன் பிறகு வெயில் ஆதிக்கம் அதிகம்தான்.

    எங்கு சென்றாலும் அந்த ஊரை பற்றி ஆராய்ந்து எல்லா ஏற்பாட்டையும் நானே செய்வதுதான் என் பழக்கம். என்றாலும் பாஷை தெரியாத ஊரில் அதுவும் இப்பொழுதுதான் கலவரம் அடங்கி இருக்கும் இடத்திற்கு குடும்பத்தோடு செல்வது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். விமான பயணச்சீட்டு வாங்கிய உடன் எகிப்தில் உள்ள ஒரு பயணஉதவி நிறுவனத்தை(Tour operator) அணுகினேன், முன்னம் அதே நிறுவனத்துடன் என் நண்பர் குடும்பம் சென்றுவந்து மகிழ்ச்சியுடன் சிபாரிசு செய்தது நினைவுக்கு வந்தது.

    மெம்பிஸ் டூர்ஸ்(Memphis tours) என்ற அந்த நிறுவனத்தினை அணுகினேன். அந்த நிறுவனத்தின் முஸ்தபா என்ற பயண உதவியாளர் மிகவும் துரிதமாக தொடர்பு கொண்டு எனக்கு சில பயணத் திட்டங்களை கொடுத்தார். இந்த நிறுவனம் எகிப்துக்கு வந்து சேர்ந்தது முதல் திரும்ப செல்லும் வரை சில உணவு செலவைத் தவிர எல்லாவற்றையும் மொத்தமாக பார்த்துக்கொண்டு நம்மிடம் மொத்தமாக பணம் பெற்றுகொள்ளும் ஒரு நிறுவனம். ஏழு இரவும் எட்டு நாட்களுக்கு ஒரு பயண த்திட்டமும் நன்றாக இருந்தது, விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் நாம் மெனக்கட்டு எகிப்தில் உள்ளுக்குள் பயணச்சீட்டுகளும்,கப்பல், விமான பயணச்சீட்டுக்களும் வாங்கும் பிரச்னை இல்லாமல் ஒரே இடத்தில் எல்லாம் முடியும் என்கிற மனசாந்தி இருக்கும் என்பதால் ஒப்புக்கொண்டேன். மேலும் எகிப்தில் உள்நாட்டு ரயில் மற்றும்  விமானச் சீட்டுக்கள் வாங்குவதும் சுலபமாக இல்லை எல்லாம் அரபிக் மொழியில் இருந்தது, அப்படி ஆங்கிலத்தில் இருந்தாலும் சீட்டு வாங்குவது மிகவும் கடினமாக இருந்தது. மேலும் நாங்கள் கிருஸ்துமஸ் புதுவருடப் பிறப்பு  நேரத்தில் செல்வதால் சொகுசு படகு விலையும்(Cruise) அதிகமாக இருந்தது. மொத்தத்தில் மெம்பிஸ் டூர் குழுமத்தின் விலை நல்ல விலை என்று பட்டது.

    அது சரி என்று வாங்கலாம் என்று முடிவு செய்தபோது மேலும் ஒரு சிறிய பிரச்சனை. நான் வாங்கிய பயணச்சீட்டு பத்து நாள் எகிப்தில் தங்குவதாக ஏற்பாடு, ஆனால் மெம்பிஸ் டூர் ஏழு நாட்கள் தான்.

    யோசித்ததில் நான் முன்னமே வாங்கியிருந்த விடுமுறை பங்கில்(holiday package(www.qnet.net)) உள்ள ஹோட்டலில் ஒன்றான மொவேன்பிக்(movenpick) எகிப்தில் கீசாவில் உள்ளது நினைவுக்கு வந்தது, ஏற்கனேவே பணம் கட்டிய அந்த பங்கு நாங்கள் உபயோகிக்காமலேயே கிடந்தது. சரி இரண்டையும் சேர்த்து ஒரு பயணமாக பண்ணுவது என்று முடிவு செய்தோம். மெம்பிஸ் டூர்ஸ் அந்த மூன்று நாட்களுக்கும் வேறு இடங்கள் காட்டமுடியும் (கூடுதல் தொகை) என்றனர். சரியென்று ஒரு வழியாக முன்பணம் செலுத்தினேன்.

    எல்லாம் செய்து முடித்த பிறகு திடீர் என்று ஒரு திருப்பம். எகிப்திய ஜனாதிபதி முசிரி(Musri) தனக்கு சாதகமான சில விதி மாற்றங்களையும் சட்டங்களையும் அமுல் செய்தார். மீண்டும் தஹிரிர் சதுக்கத்தில் (Tahrir Square) போராட்டம்! தினமும் தொலைகாட்சியும் செய்தித்தாளையும் பார்த்து பார்த்து சலித்து தான் மிச்சம் ஒரு வழியாக வந்தால் விடுமுறை போனால் காசு என்ற மனோபக்குவம் வந்தது.

    மெம்பிஸ் டூர்ஸ் எங்கள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் வேறு அளித்தது. கைரோ (Cairo) விமானநிலையத்தில் எங்களை சந்தித்து நேரே ஹோட்டலுக்கு  அழைத்துக்கொண்டு சென்று சேர்க்க ஆள் வரும் என்றனர். மேலும் எந்த நேரமும் கூடவே ஒரு பயண வழிகாட்டி (Guide) கூடவே இருப்பார்  என்றனர். கைரோவில் இரண்டு நாள், இரவு ரயிலில் லக்சருக்கு(Luxor) பயணம் பின்னர் நைல் நதி சொகுசு படுகு பயணம்(Nile Cruise), வழியில் லக்சர், எட்பு (Edfu), கொம் அபோ (Kom Abo) எல்லாம் பார்த்துவிட்டு கடைசியில் அஸ்வான்(Aswan) போய் சேர்ந்து அங்கிருந்து கைரோவிற்கு திரும்புவதற்கு இரவு ரயிலில் ஏற்பாடு செய்தார்கள். மேலும் அபுசிம்பல் (Abu Simbel) செல்வதற்கு ஒரு வாய்ப்பு வேறு இருந்தது (தனி கட்டணம்). அபு சிம்பல் சூடான் (Sudan) எல்லையிலிர்ந்து சுமார் ஐம்பது மைல்தான். கைரோ திரும்பியதும், மெம்பிஸ்(Memphis), சகாரா(Sakkaara) மற்றும் அலேக்சண்ட்ரியா (Alexandria) செல்வதாக முடிவுசெய்தோம்.

    கிட்டத்தட்ட எகிப்தின் வடகோடியில் தொடங்கி தென் எல்லை வரை நைல் நதி தீரத்தில் எல்லாவற்றையும் பார்ப்பது என்று நினைக்கும் போது ஒரே ஆவல் மற்றும் எதிர்பார்ப்பு. இடையில் எந்த குழப்பமும் ஏற்படக் கூடாது என்கிற பயமும் கூடவே இருந்தது.

    முஸ்தபாவிற்கு நிறைய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி உரையாடல் என்று எல்லா சிறு விஷயங்களும் அலசினேன். மிக முக்கியமாக சைவ உணவு கிடைக்குமா என்று. ஏன் என்றால் என் மனைவி சைவம். ஹோட்டலிலும் ரயில் மற்றும் படகில் இரண்டு அறை தேவை என்றனர்.  எட்டு மற்றும் பதினொன்று வயது குழந்தைகளோடு செல்லும் பொழுது இரண்டு அறை என்பது கொஞ்சம் விசித்திரமாகப் பட்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஒரு குடும்பத்திற்கு ஒரு அறைதான் தேவை. நிறைய பேசிய பிறகு ஹோட்டலில் தங்கும்போது ஒரு அறை ஆனால், கப்பல் மற்றும் ரயிலில் இரண்டு அறைதான் எடுக்க வேண்டும் என்றனர். குளிசாதன இரவு ரயிலில் இரண்டு அறைகளும் ஒன்று சேரும் வசதி உண்டு என்றும் சாந்தி செய்தனர்.

    நான் எனது விடுமுறை பங்கு நிறுவனத்திற்கு எனது தேதிகளை அனுப்பியதும் அவர்கள் நான் கேட்ட விடு முறை   சொகுசு விடுதியில் இடம் இருப்பதாக உத்திரவாதம் தந்தனர்.

    கிளம்புவதற்கு ஒரு வாரம் முன் எனது சிநேகிதி என்னை அழைத்து பிள்ளைகளுக்கும் தடுப்பு ஊசி போட்டுவிட்டாயா என்று கேட்டார். சுத்தமாக மறந்துவிட்டது, ஹெப்படைடிஸ்(Hepatitis) மற்றும் டைபாய்டு(Typhoid) காய்ச்சல் ஊசிகள் போட்டிருக்க வேண்டும் என்றார். யோசித்தோம் .ஊசி போடுவதற்கு அவகாசம் இல்லை மேலும், இந்த தடுப்பு ஊசியில்லாமல் தான் இந்தியா மற்றும் துருக்கி சென்று வந்தோம் என்று ஒரு அசட்டு தைரியம். எகிப்து போய்வருவோர் எல்லாம் வாந்தி பேதியோடு வருவதாக இன்னுமோர் அன்பர் பயமுறுத்தினார். சரி நாம் சுத்தமாக் இருந்து சுகாதாரமாக சாப்பிடுவோம், செய்வதெல்லாம் முன் எச்சரிக்கையோடும் செய்வோம் அதற்கு மேல் இறைவன் விட்ட வழி என்று முடிவு செய்தோம்.

    புறப்படுவதற்கு முன் வீட்டிலிருந்து இணையதளத்தில் முன்பதிவு(online check-in) செய்வோம் என்று ஆரம்பித்தேன். பயண உதவி நிறுவனம் எனக்கு, மனைவி மற்றும் பெரிய பையனை ஒரு குழுமமாகவும் , சிறிய பிள்ளையை தனி நபர் என்றும் பதிவுசெய்ததது இப்போது பிரச்சினை தந்தது. கணிணி சிறுவன் தனியாக செல்லும் போது இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாது என்றது. புதிய சோதனை. விமான நிலையத்தில் முன்பாக சென்று அங்கு பயணபதிவு செய்யவேண்டும். கொஞ்சம் முன்பாக புறப்படவேண்டும் வேறு என்ன செய்வது. எகிப்திய பவுண்டு போய் வாங்கி  வந்தோம், கொஞ்சம் மனசை நெருடியது ஒரு பிரிட்டிஷ் பவுண்டிற்கு ஒன்பது எகிப்திய பவுண்டு என்ற பணமாற்று(Foreign Exchange) கணக்கு. என்ற(ஒரு பிரிட்டிஷ் பவுண்டிற்கு எண்பது இந்திய ருபாய்) எப்போது இந்திய ரூபாய் இந்த அளவு உயருமோ  என்ற ஏக்கம்.

    நாங்கள் வசிக்கும் ரக்பியிலிருந்து(Rugby) லண்டன் ஹீத்ரோ(London Heathrow) விமானநிலையம் சுமார் ஒன்றரை மணி நேர பயணம், பர்மிங்காம்(Birmingham) அரை மணி நேர தூரத்திலிருந்தாலும் நேரடி விமானங்கள் ஹீத்ரோவிலுருந்துதான் சென்றன. எங்கள் விமானம் மாலை ஐந்து மணிக்கு, எனவே பன்னிரண்டு மணிக்கு கிளம்புவதாக முடிவு. கிளம்பும் முன் மின்னஞ்சல் பார்த்தபோது இன்னும் ஒரு புது பிரச்னை. எங்கள் விடுமுறை பங்கு நிறுவனம் நாங்கள் விண்ணப்பித்த மொவன்பிக் ஹோட்டலில் ஒரு அறைக்கு மூன்று பேர் தான் தங்கமுடியும் எனவே நாங்கள் எங்கள் பங்கை உபயோகிக்க முடியாது என்றது.

    காரில் பயணித்தவாறு எகிப்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்கள் குழந்தைகள்  பன்னிரண்டு வயதுக்குள் இருந்தால் தாராளமாக தங்கலாம் என்றனர். சிங்கப்பூரில் உள்ள விடுமுறை பங்கு நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டால் அங்கு யாரும் அலுவலகத்தில் இல்லை. அவர்களுக்கு இதனை ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு மெம்பிஸ் டூர்ஸ் முஸ்தபாவை அழைத்து எனக்கு மேலும் மூன்று நாட்களுக்கு அறை வசதி தேவைப் படலாம் என்று எச்சரித்தேன். அவர் அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை என்றார். இருந்தாலும் முன்னே பணம் செலுத்திய பங்கு உபயோகிகாமலே வீண் போய்விடும் என்ற ஆதங்கம்.

    விமானநிலையத்திற்கு சுமார் முப்பது மைல் தொலைவில் திடீரென்று போக்குவரத்து வேகம் குறைந்தது, மணி அப்போது ஒன்றரை, இங்கிலாந்தின் பெரும் நெடுஞ்சாலைகளில்(motorway) மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ளவை M1 மற்றும் M25யும்தான் . நாங்கள் அந்த இரண்டும் இணையும் இடத்தில் தவழும் வேகத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். நேரம் வேகவேகமாக சென்றது ஆனால் எங்கள் முன் இருந்த கார்கள் மட்டும் நத்தை வேகத்தில் ஊர்ந்தன. நேரம் ஆகஆக எகிப்து போய் சேருவோம் என்ற நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இரண்டடி பனியில்(snow) ஊர்ந்து விமானநிலையம் அடைந்து துருக்கி சென்றதும் விமானநிலயம் வரை சென்றும் கனடா போக முடியாததும் மனதில் நிழலாடியது…மணி மூன்றரை…..

    வேறு ஏதாவது வழியில் செல்லலாம் என்றால் எல்லா இடத்திலும் அதே பிரச்னை. குழந்தைகள் முகத்தில் ஈயாடவில்லை. நான்கு தடமும் கார் நிறுத்துமிடம்(car park) போல காட்சியளித்தது.

    ஒரு வழியாக நாலு மணிக்கு விமான நிலையத்தில் நுழைந்தோம். சர்வதேச பயணம் என்பதால் குறைந்த பட்சம் 90 நிமிடம் முன்னராவது வரவேண்டும். வேகமாக பயண மேஜைக்கு(check in desk) சென்று பையனை பயண பதிவு செய்வவேண்டும் என்றோம். நேரமாகிவிட்டது முடியாது என்று சொல்லுவார் அந்த பெண்மணி என்றது மூளை, இல்லை பிரயாணிக்க முடியும் என்றது மனது. “புன்னகையுடன் இன்று சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் நாங்கள் இன்னமும் பயண பதிவு செய்கிறோம், சுகமான பிரயாணம் மேற்கொள்ளுங்கள்” என்றார். அந்த நிமிடம் அந்த மகராசி ஒரு தேவதையாக கண்ணில் தென்பட்டாள். மிகுந்த சந்தோஷமாக எங்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வந்து அமர்ந்தோம்..

    (தொடரும்)

    Share
  • வாழ்க்கை நலம் – 1

    குன்றக்குடி அடிகள்

    1. அறிவியலும் அருளியலும்

    அறிக அறிவியலை! விஞ்ஞானத்தின் விளக்கங்கள் பெருக! “அறிவு” என்றாலே ஒன்றை அணுகும் முறையையே குறிக்கும்.

    அறிவியலும் அருளியலும் தம்முள் முரண்பட்டனவும் அல்ல, எதிரெதிர் செல்வனவும் அல்ல.

    ஒன்றிலிருந்து பிரிதொன்று காரண காரியத் தொடர்ச்சியுடன் இயங்குந்தன்மையது.   இந்த உலகம் எப்படி இயங்குகிறது?

    என்று சுற்றுப்புறச் சூழ்நிலையை ஆராய்ந்து அறிவது அறிவியல்.  நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்று அகநிலைகளை ஆராய்ந்தறிவது அருளியல்.

    இன்பம் எது? துன்பம் எது? என்று ஆராய்வது அருளியல்.  நன்மை எது? தீமை எது? என்று ஆராய்ந்தறிவது அறிவியல்.

    அகமும் புறமும் சேர்ந்ததே வாழ்க்கை.  உடலும் ஆன்மாவும் சேர்ந்ததே வாழ்க்கை.

    “ஆன்மிகம்” என்றொரு வழக்கு சமயத்திற்கு உண்டு.  ஆன்மிகம், ஆன்மாவின் வாழ்க்கை என்று பொருள் படும்.  உலகியத்தின் பல்வேறு துறைகளுக்கும் தனித்தனியே இன்று அறிவியல் வளர்ந்துள்ளது.  வளர்ந்துகொண்டே இருக்கிறது, அதுபோலவே ஆன்மாவைப் பற்றிய அறிவும் வளர வேண்டும்.   ஆன்மாவைப் பற்றிய அறிவியல் 19 ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வளராமல்
    தேக்கம் கண்டுவிட்டது.  ஆன்மாவைப் பற்றி அறிவியலைக் கடவுளுடன் சம்பந்தப்படுத்தி “மதம்” என்ற அமைப்புக்குள்  சிறைப்படுத்திய பிறகு ஆன்மாவைப் பற்றிய அறிவியல் வளர்ச்சி நின்றுவிட்டது.  கடைசியாக  ஆன்மாவைப் பற்றி ஆன்மாவின் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்தவர் காரல் மார்க்ஸ்.  “ஆன்மா”  “ஜீவன்”  என்ற சொல் வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளார்

    என்பது உண்மையானாலும்  “ஆன்மா”வை ஏற்றுக்கொண்டதாக கூற முடியாது.

    ஆன்மாவைப் பற்றி அறிவியல் பார்வையில் ஆய்வு செய்ய வேண்டும்.  ஆன்மா என்பது என்ன?  ஆன்மா இயற்கையிலிருந்து முகிழ்த்ததா? அல்லது பிறிதொரு பொருளால் படைக்கப்பட்டதா?  ஆன்மா தோற்றமும் அழிவுமுடையதா? ஆன்மா, அறிவுப்பொருளா?  அறிவிக்க அறியும் அறிவுப் பொருளா?  ஆன்மாவின் இலட்சியம்தான் என்ன?

    ஆன்மாவின் வாழ்க்கையில் நன்றும் தீதும் — இன்பமும் — துன்பமும் குறிக்கிடுவது எப்படி? எதனால்?  ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?  இன்னோரன்ன வினாக்களுக்கு விடை காணும் ஒருவகையான அறிவியலே ஆன்மவியல்.

    அறிவே வாழ்க்கைக்கு ஆக்கம் தரும்.  ஆதலால், அறிவியலும் அருளியலும் ஒருசேர ஆராயத்தக்கன! அறியத்தக்கன!

    அருளியலின் முடிவுகளே அறிவியலுக்கு வாயில்கள்!  அறிவியலின் முடிவுகள் அருளியளுக்கு ஆக்கமாக ஆவன.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • சக்தியா.. சாபமா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    வழமையாக வரும் மகளிர் தினம் இந்த ஆண்டும் வந்துவிட்டது. சென்ற ஆண்டைக் காட்டிலும் வன்கொடுமைகள் மலிந்து போய் உள்ளன. சாதனைப் பட்டியலைக் காட்டிலும் சோதனைப் பட்டியலே நீண்டு கிடக்கிறது! திரும்பிய புறமெல்லாம், பாலியல் வன்கொடுமை, அமில வீச்சு, என்று நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. அண்ணல் காந்தியடிகள்  சொன்ன அந்த சுதந்திரம் என்றுதான் வரப்போகிறது என்ற புலம்பல் தீரும் காலம்தான் எப்போது என்று தெரியவில்லை. முட்டி, மோதி  மேன்மையடைய போராடிக் கொண்டிருக்கும் இளம் பெண்களின் நிலை வேதனைக்குரியதாக இருக்கிறது. வக்கிரம் தலை விரித்து ஆடுகிறது.

    ஊடகங்கள் பெண்களை போகப்பொருளாக வெளிச்சமிட்டுக் காட்டுவதும், பெண்ணே இன்னொரு பெண்ணிற்கு பெருங்கொடுமை செய்வதையும், அன்றாட தொடர்க் காட்சிகளாக வீட்டின் வரவேற்பறையிலேயே கொண்டுவந்து காட்டி, பண்பாடு, கலாச்சாரத்தைக் குட்டிச் சுவராக்கும் செயல்களைத் தட்டிக்கேட்போரும் இல்லை. விவாகரத்துகள் சர்வ சாதாரணமாகிப் போனதற்கு முக்கியக் காரணமாக  இந்த ஊடகங்களைக் கூறலாம். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஊடகங்களை தணிக்கைத் துறைகள் கண்டு கொள்ளாதது ஏன் என்றும் தெரியவில்லை.

    திரும்பிய புறமெல்லாம் மதுபானக்கடைகள். வருமானம் குறைந்துவிட்டது என்று வருத்தப்படும் அரசாங்கம் இளம் பிராயத்தினரும் மதுவிற்கு அடிமையாக ஆரம்பிப்பதைக் கண்டு கவலை கொண்டதாகத் தெரியவில்லையே. பெண்களின் வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சட்டத் திருத்தம் பெரிய தீர்வாக அமைந்ததாகத் தெரியவில்லை. மேலும், மேலும் குற்றங்கள் பெருகிக் கொண்டுதானிருக்கிறது. இந்த நேரத்தில் மகளிரே முழுதும் நடத்தும் வங்கிகளுக்காக பெரும் நிதி ஒதுக்குவதாக நம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்  அறிவித்திருப்பது எந்த அளவில் நன்மை பயக்கும் என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.

    நாகரீகம் என்ற பெயரில் நம் இந்தியக் கலாச்சாரமும் பண்பாடும் சீர்குலைந்து கொண்டிருப்பதும் வேதனையான விசயம். குழந்தைகள் சுய கட்டுப்பாடு இன்றி தான்தோன்றித்தனமாக நடக்கும் போக்கை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும். காதலுக்குச் சம்மதிக்கவில்லை என்றும், விவாகரத்திற்கு சம்மதிக்கவில்லையென்றும் அமிலத்தை எடுத்து வீசும் அளவிற்கு ஒருவனுக்கு துணிச்சல் வருகிறதென்றால் இளம் வயதிலிருந்தே உள்ளத்தில் ஊறிப்போன நஞ்சாகவல்லவா விளைந்திருக்க வேண்டும் அது

    சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகளின் மீது பைக்கில் வந்த மூன்று  மாணவர்கள் அமிலத்தை வீசிச் சென்றார்கள்.  காவல் துறை அதிகாரிகளால் என்கவுண்டரில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது சக மாணவிகள் அச்செயலை மலர்கொத்து கொடுத்து அந்த அதிகாரிகளைப் பாராட்டியது நினைவில் இருக்கலாம். இன்று வர்மா கமிஷன்  5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  சதையையும், எலும்பையும்கூட சிதைக்கச் செய்யும் இந்த அமிலம் வெகு எளிதாக கிடைப்பதுதான் கொடுமை.  இதன் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தும் அரசாங்கம் இன்னும் தயங்கிக் கொண்டிருப்பது சரியல்ல. உடனடியாக அமிலம் விற்பதற்கான கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது.

    தங்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை வெளியில் சொல்லத் தயங்கிய காலம் மாறி இன்று பெரும்பாலான் பெண்கள் அதனை எதிர்த்துப் போராடும் பொருட்டு துணிந்து நீதிமன்றங்களுக்குச் செல்லத் தயங்குவதில்லை. இதனால் ஏற்படுகிற விழிப்புணர்வு இந்தப்பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவர உதவலாம். குடும்பத்திலேயே நெருங்கிய உறவுகளால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி அதனை வெளியில் சொல்லக்கூட முடியாமல் தவிக்கும் சிறுமிகள் பிற்காலங்களில் மனநலம் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படலாம். மேலை நாடுகளைப் பார்த்து இப்போது நம் நாடுகளிலும் முறையற்ற திருமணங்களும், விவாகரத்துகளும் சர்வ சாதாரணமாகிவிட்டது இதற்கெல்லாம் தீர்வு என்றால் முதன்மையாக நிற்பது பெற்றோரின் கண்காணிப்புதான். இன்றைய இயந்திர வாழ்க்கையில் குழந்தைகளுடன் அன்பையும், பாசத்தையும் முழுமையாகப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு குறைந்து கொண்டு வருகிறது. குழந்தைகளின் நடவடிக்கைகள் பற்றி எதுவுமே அறியாதவர்களாகக் கூட பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு அதன் சுமையோடு சேர்த்து குடும்பப பொறுப்பையும் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போகிறது. ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்ற வியாக்கியானமெல்லாம் குழந்தை வளர்ப்பில் பரிசீலிப்பது முதலுக்கே மோசம் என்ற நிலையில்தான் போய்சேரும். குழந்தைகள் நலனில் முழுமையான அக்கறை செலுத்த வேண்டிய அவசரத் தேவையில் உள்ளோம் என்பதற்கான பல சான்றுகள் கண் முன்னே தெரிகிறது., இன்று இரண்டில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். 12 வயதிலேயே இளம் பாலகர்கள் மற்றும் பெண்களும் கூட மதுப்பழக்கம் கொள்வதாகக் கருத்துக் கணிப்புகள் பேரதிர்ச்சியைக் கிளப்புகின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பெற்றோரும், சமூக நல அமைப்புகளும், அரசாங்கமும் அதற்கான விழிப்புணர்வையும், தீர்வையும் உடனடியாகக் காண வேண்டிய தேவையில் இருக்கிறோம் என்பதே நிதர்சனம்.

    மதுவிலக்கைக்கோரி 32-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி திரு சசி பெருமாள் . அவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளது என்றும் அடுத்தடுத்து அவர் ரத்த வாந்தி எடுத்து வருகிறார் என்றும் அறியும் போது நெஞ்சு பொறுக்கவில்லை. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கும் இவருடைய  சாத்வீகப் போராட்டம் வெற்றிபெறவும் அவர் நல்லபடியாக உயிர் பிழைத்து வரவும் நம்முடைய பிரார்த்தனையையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம். கண்ணை விற்று ஓவியம் வாங்குவது போல டாஸ்மாக கடைகளைத் திறந்துவிட்டு இலவசங்களை வழங்குவது தர்மமா? இலவசங்கள் வேண்டும் என்பதைவிட, நம் வருங்காலச் சந்ததியினர் நலமாக வாழ வேண்டும் என்பதுதான் அவசியத்தேவை இன்று. அதை உணர்ந்து அரசாங்கம் நியாயமான முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 61

     

    மலர் சபா
    புகார்க் காண்டம் -07. கானல் வரி
     
    (25)

    ஆற்றுவரி
    காவிரியை நோக்கிப் பாடியன
     

    இரண்டு பக்கங்களிலும்
    வண்டுகள் ஆர்த்து ஒலிக்க,
    அழகுப் பூக்களால் ஆன
    ஆடையைப் போர்த்திக் கொண்டு
    கரிய கயல் போன்ற விழிகள் விழித்து.
    நீ அசைந்து அசைந்து நடக்கின்றாய்!
    காவிரியே, நீ வாழ்கவே!

    இங்ஙனம் நீ அசைந்து அசைந்து
    களித்து நடந்திடக் காரணம்
    நின் கணவனாம் சோழமன்னன் கையிலுள்ள
    வளையாத திருத்திய செங்கோலே காரணம்
    இதை நானும் அறிந்து கொண்டேன்;
    காவிரியே, நீ வாழ்கவே!

    (26)

    பூக்கள் நிறைந்த சோலையில்
    மயில்கள் ஆடவும்
    குயில்கள் விரும்பி இசை பாடவும்
    அணிந்திருக்கும் அழகிய மாலைகள்
    அசைந்து ஆடவும்
    இவற்றினூடே புகுந்து செல்லும் காவிரியே!

    இவ்வாறு நீ செல்லக் காரணம்
    நின் கணவன் சோழமன்னனின்
    பகைவர்க்கு அச்சம் தரும்
    வேலின் ஆற்றலை நீ அறிந்ததால்தான் என
    நானும் அறிந்து கொண்டேன்.
    காவிரியே, நீ வாழ்கவே!

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram20.html
    Share
  • இந்தவார வல்லமையாளர்

    திவாகர்

    ’காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி’ என்றொரு நகைச்சுவை நிறைந்த ஆங்கிலத் திரைப்படம், நிறைய பேர் பார்த்தே இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆதிவாசிகளின் இல்லற வாழ்வையும் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு சுமுகமாகவும் கவலையில்லாத வாழ்வையும் காலம் காலமாக அனுபவித்து வருபவர்கள். அப்படிப்பட்டோரில் இனிய வாழ்க்கையில் வானில் பறந்த ஒரு குட்டி விமானி தான் காலி செய்த கோகோ கோலா பாட்டில் வீசப்பட்டு அது உடையாமல் இவர்களுக்குக் கிடைப்பதன் மூலம் இந்த எளிய மக்கள் வாழ்வில் கலவரத்தை உண்டு பண்ணுவதையும், தங்கள் சண்டைகளுக்கெல்லாம் காரணம் இந்த பாட்டில் எனும் பிசாசுதான் என்று அவர்கள் தலைவர் அந்த காலி பாட்டிலை தொலைவில் உள்ள கடலில் எறிந்து வர முடிவு செய்வதும், அவர் அப்படி காட்டில் செல்லும்போது இந்த நாகரீக மக்கள் மூலம் ஏற்படும் கூத்துகளும்தான் படம்.

    இந்தப் படம் பார்க்கிற (பகுதி 1,2) அத்தனை பேரும் அந்த காட்டுவாசிகள் வாழ்க்கையின் நேர்த்தியினைப் பார்த்து பொறாமைப் படுவார்கள். அத்தனை ஒற்றுமை. அதுவும் அந்தப் படத்தின் இரண்டாவது பகுதியில் (காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி -2) சிறு ஆதிவாசிக் குழந்தைகள் இருவர் ஒருவரை ஒருவர் ஒவ்வொருமுறையும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும்போதும் சரி, முடிவில் பிரிந்த குடும்பத்தினர் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து தங்கள் பாசத்தைக் காட்டும் விதத்திலும் சரி, அந்தக் கணங்கள் நம் கண்களை நனைக்கும்.

    நாகரீகம் அடைந்து விட்டோம் என்று சொல்கிற நாம்தான் இன்னமும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டும், அடுத்தவர் பற்றி அக்கறை கொள்ளாமல் சுயநலமிக்கோராகவும் அன்பு, பண்பு,  பாசமிழந்து, நல்லுணர்ச்சிகள் ஒவ்வொன்றாக மறந்து கொண்டும் நம் நல் வாழ்க்கையை  வீணாக்கிக் கொள்கிறோம் என்றுதான் படுகிறது. நாம் தற்சமயம் வாழும் வாழ்க்கையால் யாருக்குதான் என்ன பயன் என்ற கேள்வியும் கேட்கத் தோன்றுகிறது.

    இந்தக் கேள்வி திரு சத்தியமணிக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்றுதான் படுகிறது. இல்லாவிட்டால் இத்தகைய கேள்விகளை அவர் எழுப்பியிருப்பாரா..

    பார்வை முன்னால் நடக்கும் கொடுமை
    பாராதிருப்பதில் பயன் என்ன ?
    சால்வை மூடிட வலம்வர கொடியோர்
    சாடாதிருப்பதில் பயன் என்ன?
    வேர்வை சிந்திட உழைத்தார் வறுமை
    வீழாதிருப்பதில் பயன் என்ன?
    போர்வை போர்த்திட ஒளிந்தார் கோழை
    வாழ்க்கை நடத்திட பயன் என்ன?

    படிப்பை கொடுத்தோ சொத்தை சேர்த்தோ
    அடுத்த தலைமுறை வாழ்ந்திடவே
    சிறப்பை காட்டும் பெற்றோர் முயற்சி
    எடுத்த வழிமுறை வீணாமோ
    பாதி வஞ்சம் மீதி இலஞ்சம்
    வளர்ந்திட‌ சமைத்தார் தன்காலம் ?
    நீதி நேயம் நியாயம் தர்மம்
    அழித்திட கொடுத்தார் வருங்காலம் ??

    இதில் வேடிக்கை என்னவென்றால் நாம் கெட்ட வார்த்தையாக ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று காட்டுவாசிகளின் வாழ்க்கையைப் பயன் படுத்துகிறோம். ஆனால் என்ன பயன்.. நாம்தான் உண்மையில் பயனில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

    சிந்தனையைத் தூண்டும் நல்ல கேள்விகளைத் தொகுத்து எழுப்பிய திரு சத்தியமணியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து வல்லமை குழுவினர் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    கடைசி பாரா: வருணன் எழுதிய பூக்களுதிர்காலம்

    உதிர்ந்து கருகிய பூக்களின் சாம்பலுக்கிடையே
    முட்டித் துளிர்த்தது
    நட்பெனும் ஒரு பூ
    வையம் பூக்களின் காடானது
    மீண்டும்.

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 10.

    திவாகர்

    தேவனின் ’துப்பறியும் சாம்பு’ கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று . ‘முந்திரிப் பருப்பு – பருப்புத் தேங்காய்’ . இதை கல்யாணத்தில் சீர் பட்சணமாக வைப்பது வழக்கம் உண்டு. இந்தப் பட்சணம் என்றால் சாம்புவுக்கு உயிர். ’ராவ்சாகிப்’ நடராஜய்யர் வீட்டுக் கல்யாணத்தில் ஒரு தற்காப்புக்காகவும் திருட்டு ஏதும் நடக்காமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கென்றே சாம்பு வரவழைக்கப்படுகிறான் (சாம்பு உள்ள இடத்தில் திருடன் வரமாட்டானே!) ஆனால் அப்படியும் ஒரு இரட்டை வடம் கடிகாரச் சங்கிலி தவறிவிட்டது. இது சாம்புவுக்கும் அறிவிக்கப்பட்டு விட்டதால் கல்யாண வீட்டார் சற்று நிம்மதியோடு இருக்கிறார்கள்.

    ஆனால் சாம்புவுக்கு இந்தத் திருட்டுப் போன பண்டத்தை விட அந்தப் பட்சணத்தின் மீதே ஒரு கண்.  எப்படியாவது யாருக்கும் தெரியாமல் அந்த முந்திரிப் பருப்புத் தேங்காயை சாப்பிட்டுவிடவேண்டும் என நாக்கில் எச்சில் ஊற துடியாய் துடிக்கிறான். அதற்கும் சமயம் வாய்த்தது. எல்லோரும் நள்ளிரவு நேரத்தில் சற்று கண் அயர்ந்த சமயத்தில் சாமான் அறையில் வைக்கப்பட்டுள்ள அந்த பட்சணத்திற்காக திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து அந்த பட்சணத்தையும் கையில் தொட்டபோதுதான் கல்யாண வீட்டின் ஒரு தூரத்து உறவுக்காரியான தர்மாம்பாள் அவன் கையை பற்றித் தடுக்கிறாள். சாம்புவுக்கு பயம் உண்டாகிற்து.

    ‘விடு அதை’ தர்மாம்பாள் அதட்டுகிறாள்.

    ‘நீதான் விடு’ இது சாம்பு.

    இப்படி சண்டை நடப்பதற்குள் பலரும் அங்கு வந்துவிட, அவர்களுள் ஒருவர் அந்த முந்திரிப் பருப்பு தேங்காய் பட்சணத்தில் விரிசல் இருப்பதையும் அதற்குள் அந்த இரட்டை வடம் சங்கிலி பளபளப்பதையும் பார்த்து விட்டு ‘ ஆஹா! சாம்பு திருட்டுப் பொருளைக் கண்டுபிடுத்துவிட்டார்.. இதோ இந்த தர்மாம்பாள்தான் திருடி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்’ என்றும் கூவுகிறார்.

    அதை தர்மாம்பாளும் அழுதபடி ஒப்புக்கொண்டாள்.

    ‘நான் யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில்தான் நகையைத் திருடி இந்த பட்சணத்தில் வைத்தேன். இந்த சாம்பு அதை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து பிடித்துவிட்டார்.. அவர் மந்திரவாதியோ..இட்சிணியோ.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. இந்த சாம்பு முகத்தில் விழிக்காமல் கொண்டு போங்கள்’ ….

    அதிர்ஷ்டம் அதிர்ஷம் அதிர்ஷடம்தான் எப்போதும் சாம்புவுக்கு கைகொடுக்கும். தகுந்த சமயத்தில் சாம்புவின் முட்டாள்தனத்தையே பலமான ஆயுதமாகக் காண்பிப்பதும் இந்த அதிர்ஷ்டம்தான் அது யார் மூலம் வேண்டுமானாலும் வரலாம். ‘காணாமல் போன கணவன்’ எனும் கதையில் ஒரு அல்ப சபலத்தால் எங்கேயோ போய் சரியாக மாட்டிக்கொள்ள வேண்டியவனுக்கு அவன் மனைவி வேம்புவால் கூட அதிர்ஷ்டம் அடிக்கிறது. இதோ சாம்பு வேம்பு வேடிக்கையை தேவன் எழுத்தால் படியுங்களேன்.

    நம் இரண்டு பேரில் யாருக்கு யாரிடம் பிரியம் ஜாஸ்தி? என்று கேட்டான் சாம்பு ஒரு நாள் மாலை.

    எட்டுமாத கர்ப்பிணியான வேம்பு ஒரு கம்பளியைத் தரையில் விரித்துக் கொண்டு, ரவிவர்மாவின் படத்தில் கன்வ ரிஷியின் புதல்வி துஷ்யந்தனுக்குக் கடிதம் எழுதும் நிலையில் காணப்படுவது போல், படுத்துக் கொண்டிருந்தாள்.

    “இதென்ன அசட்டுக்கேள்வி, போங்கோ, யாராவது ஒரு பொம்மனாட்டி வந்து இளித்தால் உடனே பதிலுக்கு இளிக்காமல் இருந்து விடுவேளாக்கும் நீங்கள்? புருஷா எல்லாம் ஒரே மாதிரிதான்” என்றாள் அவள்

    “அப்படி நான் இளித்தால் நீ பொறாமைப்பட்டு மாய்ந்து போகாமல் இருந்து விடுவாயோ? ஹி..ஹி..” என்றான் சாம்பு.

    “நான் ஒண்ணும் மாட்டேன்! எனக்குக் கோபமே வராது. புருஷன் சந்தோஷமாய் இருக்க வேண்டியதுதான் உத்தம பத்தினியின் தர்மம் என்பார் எங்கப்பா”

    “அப்படியானால் உனக்கு பிள்ளை பிறக்கப் போகிறதா, பெண் பிறக்கப் போகிறதா?

    “உங்களுக்கு எது வேண்டும்?”

    “எனக்குப் பெண் தான் வேண்டும்” என்று வேம்புவின் பக்கம் சிறிது நகர்ந்தான் சாம்பு.

    “வெட்கமாயில்லை? யாரேனும் வந்து நிக்கப்போறா! போங்கோ உங்க ரூமுக்கு” என்றாள் அவள்.

    சாம்பு தன் அறைக்குப் போனபோது பட்டுப்புடவையை உடுத்தி முகத்தைப் பாதிக்கு மேல் மூடிக்கொண்டு ஒரு ஸ்திரீ அவன் மேஜையின் முன்னால் நாணமே உருவமாக நின்று கொண்டிருந்தாள்.

    “உட்காருங்கள்.. நீங்கள் யார்?” என்றான் சாம்பு

    மெல்ல, காது கேட்டதும் கேட்காதுமாக அவள் பதில் சொன்னாள். “உங்களை எப்படிப் பார்ப்பது என்று பயமாக உள்ளது, சங்கோஜமாகவும் இருந்தது. நான் செங்கல்பட்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருப்பவள். மேலே சொல்லட்டுமா?” என்றாள். சொல்கிறபோதே இருமுறை நாஸூக்காக மேலாக்குப் புடவையை வீசிப் போர்த்திக் கொண்டாள்.

    “சொல்லுங்கள்! கேட்கிறேன்!”

    “என் தங்கையும் நானும்தான் எங்கள் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் காலமாகி எட்டு வருஷமாகிவிட்டன. நான் கல்யாணமே செய்துகொள்ளாமல் பள்ளிக்கூடத்தில் உத்தியோகம் ஏற்றுக்கொண்டேன். என் தங்கை, ஷண்முகசுந்தரம் என்பவரை மணந்து கொண்டு இரண்டு வருஷம் முன்புவரையில் பம்பாயில் இருந்தாள். புருஷன்மனைவி அந்நியோந்யத்தைப்பற்றி

    சொல்லவேண்டியதில்லை. நான்கு நாளைக்கு முன்பு அவர் வெளியே புறப்பட்டுப் போனவர் திரும்பி வரவில்லை. மறுநாள் காலை எனக்கு சொல்லி அனுப்பினாள் என் தங்கை. ஓடி வந்தேன். மேலும் மூன்று நாளாகிவிட்டது. இன்னும் அவர் திரும்பவில்லை.”

    “அவருக்கு என்ன உத்தியோகம்?”

    “உத்தியோகம் என்று ஒன்றுமில்லை. பம்பாயில் ‘பிஸினஸ்’ செய்து கொண்டிருந்தார். நல்ல லாபம் கிடைத்தது. இப்போ இங்கே வந்து சௌகரியமாக இருக்கிறார்”

    “போகிறபோது எங்கே போகிறேன் என்று சொல்லவில்லையோ?”

    “இல்லையே! வழக்கம்தான் வெளியே போவதும் வருவதும். ஆனால் ஒரு தினமாவது திரும்பாமல் இருந்ததில்லை. என் தங்கை கவலையிலேயே குன்றிவிட்டாள்” அவள் கண்ணில் அப்போது நீர் நிரம்பியது.

    சாம்புவுக்கு அனுதாபம் பிறந்து விட்டது. “உஸ்.. வருத்தப்படாதீங்கோ.. வந்து விடுவார்!”

    “நீங்கள் கவனித்து எங்களுக்குச் சொன்னால் தேவலை. நீங்கள் பார்க்க ஆரம்பித்தாலே அவர் அகப்பட்டு விடுவார் என்று எங்களுக்கு திடமான நம்பிக்கை”

    “போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதோ?”

    “ஐயோ, வேண்டாம்.. பத்திரிகையில் வந்து சிரித்துப்போயிடும். தவிர அவர் வந்துவிட்டால், ஏன் அமர்க்களம் செய்து விட்டீர்கள் என்று கோபிப்பார் என்றும் என் தங்கை பயப்படுகிறாள். நீங்கள் கொஞ்சம் பார்க்கிறீர்களா?”

    “பார்க்கிறேன்”

    “அப்போ காலையில் எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா?”

    “ஆகட்டும்”

    அவள் எழுந்திருந்தாள். வெளியே ஹாலுக்கு வரும்போது சாம்புவும் பின் தொடர்ந்தான். “நான் வரட்டுமா? கோட்ஸ் ரோடு, 345ஆம் நம்பர், என் பேர் சகுந்தலா” என்று திரும்பின அந்த ஸ்திரீ, சாம்புவின் கையைப் பிடித்து, ஹிதமாக அதை ஒரு அழுத்து அழுத்தி அவன் கண்களை பிரேமையுடன் நோக்கினாள்.

    பகீரென்றது சாம்புவுக்கு. ‘இதென்ன சங்கடம், இப்படி ஏன் பார்க்கிறாள் இவள்!’

    ஒரு க்ஷணகாலம் தயங்கினாள் அவள். பிறகு விசுக்கென்று வாசலில் போய்விட்டாள்.

    ஏதோ பேச்சுக்குரல் கேட்கிறதே, யாராக இருக்கும் என்று வெகு நேரம் யோசனை செய்தவாறு படுத்திருந்த வேம்பு மெல்ல எழுந்து வந்ததும், சகுந்தலா சாம்புவின் கையைப் பிடித்து வீட்டு விலாசத்தைச் சொல்வதும் சரியாக இருந்தன. பளிச்சென்று அவள் கண்களில் ஒரு பொறி பறந்தது. மறு க்ஷணம் ‘சரி, இருக்கட்டும்!’ என்று உள்ளே போய்விட்டாள்.

    சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு இன்னும் இரண்டு பேர் சாம்புவைத் தேடிக்கொண்டு வந்தார்கள். இரண்டுபேரும் வந்து உட்கார்ந்ததும், “ஓர் உதவி செய்ய வேண்டும்” என்றார்கள்.

    “சௌகரியப்படாது எனக்கு!” என்றான் சாம்பு.

    “தகுந்த மரியாதை செய்வோம் ஸார், நாங்கள். எங்கள் சிநேகிதர் ஒருவர் – ஷண்முகசுந்தரம் என்பது அவர் பெயர். திடீரென்று நான்கு நாட்களாகக் காணப்படவில்லை. வீட்டைவிட்டுக் கிளம்பி எலெக்ட்ரிக் ரயிலில் ஏறினவர்தான். அப்புறம் திரும்பவில்லை. அவர் குடும்பத்தார்கள் அவரைக் கண்டுபிடிக்க என்ன ஏற்பாடு செய்கிறார்களோ, எங்களுக்குத் தெரியாது. அவர் ஜாக்கிரதையாக திரும்பவேண்டும் என்பது ஒன்றே எங்கள் கவலை. என்ன செலவானாலும் பரவாயில்லை. நாங்கள் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் தெரியவேண்டியதில்லை.. நீங்கள் மட்டும் தயவு செய்யவேண்டும்”

    “போலீஸில் சொல்லுங்கள்”

    “அதுதான் வேண்டாம் சார்.. உங்களிடம் காதில் போட்டுவைத்தால் காதும் காதும் வைத்தாற்போல் காரியம் நடக்கும்”

    சாம்புவின் முன்னால் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் நகர்ந்தன.

    சரி, கதை உங்களுக்குப் பாதிதான் சொல்லி இருக்கிறேன். இரண்டும் ஒரே கேஸ்தானே என்று ஒப்புக்கொன்டு அந்த இருவரையும் அப்புறமாக வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுகிறான் சாம்பு. அன்று ராத்திரி இன்ஸ்பெக்டர் கோபாலன் இவன் வீட்டுக்கு வந்து அப்போதுதான் அசந்து தூங்க ஆரம்பித்தவனை எழுப்புகிறார். ஜார்ஜ் டவுன் அம்பாள் கோயிலில் நகைகளும் வைரக்கற்களும் திருடுபோய்விட்டன என்றும், குருக்கள்  வீட்டில் சோதனை போட்டதில் ஒரு சின்ன நகை மட்டும் கிடைத்தாலும் அவர் தனக்குத் தெரியாது என்று சாதிக்கிறார், அழுகிறார் என்றும் சொல்லிய இன்ஸ்பெக்டர் எப்படியாவது சாம்பு உடனடியாக இந்த கேஸில் தலையிட்டு நகைகளையும் கண்டுபிடித்து இந்த அபவாதத்தில் ஒரு நல்ல குருக்களை விடுவிக்கவேண்டுமென்றும் சொல்கிறார். ஆனால் சாம்பு மறுக்கிறான். எப்படியாவது நாளைக்காவது வந்து பாருமேன்’ என்கிறார். ‘நாளைக்கு தான் பிஸி’ என்று பிகுவுடன் உள்ளே ஓடிவிடுகிறான்.

    அடுத்தநாள் காலை சகுந்தலா வீட்டில் அந்த ஒய்யார ஸ்திரீயைக் கண்டு மயங்கிக்கொண்டே அசடு வழிந்து கொண்டே ஏதோ பரிசோதிப்பது போல வீடெல்லாம் பார்க்கிறான். தங்கையுடன் இருக்கும் அவளும் அவனுடன் ‘ஈஷி’க்கொண்டே இவனை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டே இருக்கிறாள். மறுபடியும் அன்று இரவு  வருமாறு அவள் சாம்புவை ‘அன்போடு’ அழைக்கிறாள். அப்படியே எனச் சொல்லி வீடு திரும்புகிறான். வேம்புவுக்கு ஏதோ சந்தேகம் உள்ளுக்குள் இருந்தாலும் அவளும் காண்பித்துக் கொள்ளவில்லை. இதன் மத்தியில் மத்தியில் இவன் வீட்டுக்கு முதல்நாள் வந்து இருநூறு ரூபாய் கொடுத்த அந்த இருவரும் அவனிடம் ஏதாவது துப்பு துலங்கியதா என்று கேட்கிறார்கள். ஆனால் என்ன சொல்வது அவர்களிடம். இன்ஸ்பெக்டர் இரவு கூறிய ஜார்ஜ் டவுன் அம்பாள் கோயில் கொள்ளை கேஸ் ஞாபகம் வருகிறது. தான் அந்தக் கேஸ்’ இல் பிஸியாக நடத்துவதாகவும், இவர்கள் விஷயத்தையும் கவனிப்பதாகவும் பொய் சொல்லி கழட்டி விடுகிறான். மத்தியானம் ஒரு தூக்கம் போடும்போது போன் வருகிறது. வேம்பு எடுக்கிறாள். எதிர் போனில் அந்த சகுந்தலா எப்படியாவது இரவு வரவேண்டுமென்று அழைப்பு விடுப்பதைக் கேட்டு வேம்புவுக்கு ஏதோ புரிகிறது. குறட்டையுடன் தூங்கிக் கொண்டிருந்த கணவன் பேசுவது போன்ற குரலில் ‘அப்படியே’ என்று சொல்லி போனை வைத்து விடுகிறாள். மாலை ஷோக்காக டிரஸ் செய்து கொண்டு ஒரு தலைப்பாகையும் வைத்துக்கொண்டு, வேம்புவிடம் ஒரு நாடகம் போகிறேன், நடிக்கப்போகிறேன் என்று பொய் சொல்லி ஜாலியாக சகுந்தலா வீட்டுக்கு நடையைக் கட்டுகிறான். கணவன் புளுகுகிறானே என்று பயப்பட்ட வேம்பு உடனே போனில் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் ‘கம்ப்ளைண்ட்’ அவனைப் பற்றிப் போட்டு வைக்கிறாள். மனைவி கணவனிடம் சொல்ல இன்ஸ்பெக்டர் கோபாலனும் அவளுக்கு உதவுவதாகவும், சாம்பு அப்படிப்பட்டவன் இல்லையென்றும் ஆறுதல் சொல்கிறார். இனி தேவன் எழுத்தால் தொடரலாமா..

    சூர்யா பவன் ஹோட்டலைத் தாண்டும்போது சாம்பு தயங்கி நின்றான். அதனுள்ளிருந்து இரண்டு பேர்வழிகள் இறங்கி வெளியே வந்தார்கள். பெரிய விளக்கொளியில் அவர்கள் முகத்தைச் சாம்பு நிமிஷத்தில் கண்டுகொண்டான் (200 ரூபாய் கொடுத்த பழைய ஆசாமிகள்தான்). டவாலி உடையிலிருந்த சாம்புவைக் கவனிக்காமலே அவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள்.

    “கிடக்கிறான் சாம்பு! அவன் எதையும் கண்டுபிடிப்பான் என்று தோன்றவில்லை. என்னைக் கேட்டால் ஏதானும் தொந்தரைதான் வருமென்று இருக்கிறது”

    “பின் என்னதான் செய்யலாம்?”

    “இனிமேல் உழப்புவதில் பிரயோசனம் இல்லை. இன்றைக்கு ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு அந்த ஷண்முகசுந்தரம் வீட்டிலே புகுந்து இரண்டு பெண்பிள்ளைகளையும் கட்டிப்போடுகிறேன். விரலில் பந்தம் கட்டிக்கொண்டு கேட்டேனானால் கதறிக்கொண்டு விஷயத்தைக் கக்கி விட மாட்டார்களா?”

    சாம்பு அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. கோட்ஸ் ரோடுக்குப் பறந்தான். போனதுமே விஷயத்தை சகுந்தலாவிடம் சொன்னான். “சாமான்கள் கிடக்கிறபடிம் கிடக்கட்டும்! நீங்கள் நம்ம வீட்டுக்கு வாருங்கள். முக்கியமானதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றும் யோசனை வேண்டாம்!” என்றான்.

    தங்கை ஸ்டவ்வை மூட்டி கொஞ்சம் ஓவல்டின் போடுவதாகச் சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

    சகுந்தலா சாம்புவை நெருங்கினாள். “உங்கள் அன்புக்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை” என்றாள் உணர்ச்சியுடன்.

    சாம்பு அவளை அணைத்தாற்போல் நின்றான். ஒருபுறம் நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. ஒருபுறம் விவரிக்க முடியாத ஆனந்தம். “சகுந்தலா! அவசியமானால் உனக்கு ஆண் வேஷம் போட்டுக்கூட உன்னைக் கொண்டு போவேன்! பயப்படாதே!” என்றான் சாம்பு.

    சகுந்தலா சாம்புவை விறைக்கப் பார்த்தாள். அவன் முகத்தில் வழிந்த அசட்டைப் பார்த்து, கபகபவென்று சிரித்து விட்டாள். தங்கை ஓவல்டினைக் கொண்டு வைத்துவிட்டு கதவைச் சார்த்திக்கொண்டு மாடிக்குப் போனாள்.

    சகுந்தலாவுடன் நெருக்கமாக ஹாலிலிருந்த ஸோபாவில் உட்கார்ந்துகொண்டான் சாம்பு. வேம்புவின் நினைவு மாறி மாறி வந்தது. பரமசாதுவாச்சே அவள்! அவளுக்கு துரோகம் செய்வதா? ஆனால் சகுந்தலாவின் கண்களோ அவன் மூளையை மயக்கின. ஒரு கையை அவள் கழுத்தில் அணையவிட்டு, பவுடர் பூசின கன்னத்தை இச்சையுடன் வருடினான். இதென்ன கூத்து. சொரசொர என்கிறது கன்னம்! வேம்புவின் கன்னம் இப்படி இராதே!

    வெடுக்கென்று அவன் கையை உதறி எறிந்துவிட்டு எழுந்தாள் சகுந்தலா. “போக்கிரி கழுதை! உன் அயோக்கியத்தனத்தைக் காட்டுகிறாயா?” என்று கர்ஜித்தாள். குரல் முற்றும் மாறி இருந்தது. சாம்பு நடுநடுங்கிப் போனான. ‘ஏதோ ஆபத்து நெருங்கிவிட்டது.. ஓடிவிடு! என்று அந்தராத்மா கூறிற்று. ஒரே பாய்ச்சலில் ஓடி வாசற்கதவைத் திறந்துவிட்டான்.

    மின்சார விளக்கு வெளிச்சத்தில் பளபளவென்று மின்னல் வேகத்தில் ஒரு சூர்க்கத்தி அவனைத் தாண்டி வாசலில் விழுந்தது. அப்போதுதான் நுழைந்த இன்ஸ்பெக்டர்  கோபாலன் குனிந்து அதை எடுத்தார். “என்ன ஓய்! கத்தி விளையாட்டு நடக்கிறதோ இங்கே! ஹூம்..” என்றார்.

    சாம்புவின் நா குழறிற்று. “அவள் கன்னம் சொர சொரவென்றிருக்கிறது என்று தொட்டேன்.. கோவிச்சுண்டுட்டாள்” என்று உளறினான்.

    கோபாலன் புருவத்தை நெரித்துக்கொண்டு பார்த்தார். சகுந்தலா ஸ்தம்பித்துப் போய் நின்றாள். அந்தச் சமயத்தில் தங்கை, ஷண்முகசுந்தரத்தின் படத்துடன் வந்தவள் கல்லாகச் சமைந்து போய் விட்டாள்.

    “ஏன் சாம்பு! யாரையோ காணோமென்று வந்தீராமே.. எனக்கானால் வைரத்தைப் பார்த்துத் தருகிறேன் என்கிறீர். ஹூம்..” என்று கேட்டார்.

    “அதோ! அந்தப் படத்தை முதலில் கையில் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றான் சாம்பு.

    “அடப் பாவி மனுஷா! என்றாள் சகுந்தலா. அவள் குரல் இப்போது புருஷக் குரலாக இருந்தது.

    “ஓஹோ! அப்படியா?” என்று இன்ஸ்பெக்டர் சகுந்தலாவின் ஜடையைப் பிடித்து இழுத்தார். பின்னல் கையோடு வந்துவிட்டது. சாம்பு மூக்கைத் தடவிக்கொண்டு அசட்டு விழி விழித்தான். போட்டோவிலிருந்த ஷண்முகசுந்தரம்தான் அது. அவனைக் காதலித்த’ சகுந்தலா ஆண்பிள்ளையா?’

    “ஓய் சாம்பு! இது பெண்பிள்ளை அல்ல என்பதை ஊர்ஜிதம் பண்ணிக்கொள்ளத்தான் மெல்ல மோவாய்க்கட்டையைத் தடவிக்கொடுத்தீரோ? அதில் கோபம் வந்துவிட்டதாக்கும் இவருக்கு!” என்று சிரித்தார் கோபாலன்.

    போட்டோவின் ஃபிரேமை பிரித்தபோது, மெழுகை உள்ளே சமமாக ஊற்றி அதில் எல்லா வைரக் கற்களையும் பதித்திருந்தது. சாம்புவுக்கு ஓவல்டினில் மயக்க மருந்தைக் கொடுத்திருப்பாள் என்றே தைரியமாக தங்கை படத்தைக் கொண்டு வந்திருக்கிறாள். ஆனால் நடந்திருந்தது வேறு.

    (கோயில்) திருட்டுக்குக் காரணமாய் இருந்தவர்கள் இரண்டு பக்தர்கள்தான். பக்கத்து பிரகாரத்தில் ‘பஜனை’ பண்ணி ஜனங்கள் கவனத்தை ஒருபுறமாக இழுத்துவிட்டு அந்தச் சமயத்தில் ஷண்முக சுந்தரத்தைக் கொண்டு எல்லா கற்களையும் திருடவைத்திருக்கிறார்கள். தங்கள் மீது சந்தேகமே வராமல் இருப்பதற்காக குருக்கள் வீட்டில் ஒரே ஒரு நகையை மட்டும் வீசியிருக்கிறார்கள். ஆனால் ஷண்முகசுந்தரத்துக்கு எல்லாக் கற்களையும் சேர்ந்தாற்போல பார்த்த போது தானே அவற்றை வைத்துக் கொள்ளவேணுமென்ற ஆசை வந்துவிட்டது. தான் ஓடி விட்டதைப் போல பாசாங்கு செய்து பெண் வேஷம் போட்டுக்கொண்டு திரும்பி வந்து மனைவியுடன் ஓடிவிட யத்தனம் செய்திருக்கிறான். சாம்புவிடம் கேஸ் வந்துவிடுமென்று பயந்து, அவனை முதலில் மடக்கிப் போடவே இந்தக் காதல் நாடகம் நடத்தி இருக்கிறான்.

    “அந்த பக்தர்களுக்கு என்ன ஏற்பாடு? என்றார் கோபாலன்.

    “அவர்களையும் இங்கே பன்னிரெண்டு மணிக்கு வரவழைக்க இந்த மனுஷன் சூழ்ச்சி செய்திருக்கிறான்” என்றான் ஷண்முகசுந்தரம் குரோதமாக.

    ”ஏன் காணும்! சாம்பு! என்னை இப்போ இங்கே வரவழைக்கக்கூட சூழ்ச்சிதான் செய்தீரோ வேம்புவிடம் சொல்லி!” என்றார் கோபாலன்.

    அன்றிரவு சாம்பு வேம்புவிடம் தான் ஏகபத்தினி விரதத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்கு நிகர் என்று மன்றாடிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

    “எனக்குத் தெரியாதா.. நீங்கள் சொல்லவேண்டுமா? எனக்கு சந்தேகமே கிடையாதே” என்றாள் வேம்பு.

    ஒவ்வொரு சாம்பு கதையும் ஒவ்வொரு மாதிரிதான். இந்த சாம்புவை முதல் முதல் சித்திரமாக வரைந்தவர் ராஜு என்றும் பின்னால் வந்த சித்திரக் கதைக்கு ‘கோபுலு’வும் என்று முன்பேயே குறிப்பிட்டிருந்தேன் இல்லையா. ஆனால் சாம்புவுக்கு எத்தனை அதிர்ஷ்டமோ.. நிறைய சித்திரக் காரர்கள் மிகவும் இஷ்டப்பட்டு வரையப்பட்டவன் என்று தெரிகிறது. பின்னால் (1991 ஆம் ஆண்டில்) சாம்பு வை முழுநீளப் புத்தகமாகக் கொண்டு வந்த அல்லையன்ஸ் கம்பெனி, துப்பறியும் சாம்பு அட்டைப்படத்தில் பிரபல ஓவியர் நடனம் அவர்களின் கைவண்ணத்தில் சாம்புவைக் காட்டினர். சாம்புவின் ஒவ்வொரு கதைக்கும் ஓவியர் ‘கலா’ மூலம் கருப்பு வெள்ளைப் படத்தில் சாம்புவைக் காட்டி மகிழ்வித்தனர்.  தேவன் கல்கி காலங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இன்னொரு முக்கியமான ஓவியர் சில்பி. இத்தனைக்கும் இவரும் தேவனும் நண்பர்கள் என்பதால் இவர் சாம்புவை ஓவியமாக வரைந்திருக்கிறாரா என்று பார்க்கவேண்டும். ஆனால் சில்பியுடன் தேவன் இணைந்து ஆனந்த விகடனில் தொடராக வழங்கிய அந்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கட்டுரைகளை எத்தனை போற்றினாலும் கலைத்தாயானவள் திருப்தி அடையமாட்டாள்தான்.. இதைப் பற்றியும் ஒரு சுற்று வருவோம்.

    (தொடர்ந்து வரும்)

    படங்கள்: சாம்பு வண்ணப்படம் : நடனம்

    சாம்பு கருப்பு வெள்ளை படங்கள் : கலா

    நன்றி : அலையன்ஸ் கம்பெனி.

    Share
  • அங்குசம் காணா யானை

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    நிலைத்தது

    எது என்று தெரியாதவர்கள்

    நினைத்தபடி

    ஆடி முடித்துவிடுகிறார்கள்

     

    தெரியாதவர்கள்

    தெரிந்துகொள்ள விழைந்தால்

    திருந்திவிடுவார்கள் (more…)

    Share
  • கலையாத கனவொன்று …

    -கவிநயா

     

    கலையாத கனவொன்று தந்தாய் – நீயே

    நிலையாக வந்தென்றன் நெஞ்சிலே நின்றாய்!

    மலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்

    மழைபோல அன்பினைப் பொழிந்தென்னை வென்றாய்!

     

    வனமான என்வாழ்வில் வந்தாய் – வந்து

    வளம்தந்து வசந்தமாய் எனையேந்திக் கொண்டாய்!

    மனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன் – பூ

    மணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி வைத்தேன்!

     

    சுனைபோலப் பெருகு மென்னன்பு – என்

    வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு!

    உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உன்னை

    நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!

     

    படத்துக்கு நன்றி: http://armanoluk.blogspot.com/2010/06/radha-krishna-by-mahima-3.html

    Share
  • நிசங்களின் காடு

    வருணன்

    வழிதடங்கள் யாவும்
    முற்றிலும் சிக்கலானவை
    எளிமையான வினோதங்களையுடையவை
    நிசங்களின் காட்டில் உலவுதல்
    மெய்யர்களுக்கெ சாத்தியம்.
    அவர்களுக்கே தெரியுமதன் இருள் கவிந்த
    ரகசிய பாதைகளும் மர்மத் தடங்களும்
    காடு புதர்கள் மண்டியதோ இல்லையோ
    புதிர்கள் மண்டியது.
    கடப்பவரை விழுங்கிச் செரித்திடும்
    புதைகுழிகள் ஏராளம்
    தன் புதிர் முகத்தினை மட்டுமே
    காட்டிடும் காடு எல்லா பொழுதுகளிலும்
    எல்லையைக் கண்டவர் எவருமில்லை
    கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

    படத்துக்கு நன்றி

    http://www.indianetzone.com/30/dahragni_indian_sage_agastya.htm

    Share
  • வாருங்கள் அடை தின்ன!!

    பழமைபேசி

    சமைத்திட விரும்பி
    தாய்த்தமிழின் எண்ணிலடங்கா
    ஈடுகளில் கொஞ்சத்தையள்ளி
    இட்டரைத்தேன் மெல்லென
    சிந்தையம்மியில் நான்!
    சரியாய்த் துலங்கின
    சிறுகதை ஒன்றும்
    சொல்லடை இரண்டும்!
    உருசியாய் இருக்கிறதாம்
    எதிரில் நின்று பகர்ந்தாள்
    சிறுகதையைத் தின்ற
    என்வீட்டுக் கண்ணாட்டி!
    சுவையாய் இருக்கிறதாம்
    சொல்வது யாரெனில்
    அடையில் ஒன்றைத் தின்ற
    தமிழ்ச்சங்கத் தலைவன்
    செவலை மாடன்!
    அந்த எஞ்சிய அடையும்
    எப்படியிருக்கிறது
    சொல்லிவிடலாமே
    அதைத் தின்னும் நீங்கள்?!

    Share
  • “மறுபடியும் ஒருமுறை”

    சந்திரன் அருள்செல்வம்

    லேட்டாகிப் போனதையிட்டு மனம் நொந்து கொண்டது..

    ‘சீ…இவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்திருக்கத் தேவையில்லை…’ என்று சலித்தேன். இனி வரப்போகிற பிரச்சனைகளை மனம் ஒவ்வொன்றாக அடுக்க ஆரம்பித்தது.

    யாருமே இல்லாமல் பொறளை பஸ்ராண்ட் வெறித்துக்கிடந்தது. ஒரு நாய் மட்டும் சிலரை அசிங்கம் பண்ணிவிட்டு நின்று ‘கடித்து விடுமோ’ என்ற எண்ணம் எனக்கு தோன்றும் வரை என்னை முறைத்து பார்த்துவிட்டு ‘இவனிடம் எதுவும் கிடைக்காது..’ என்ற தோரணையில் விலகிச் சென்றது.

    ஒரு மணிக்கு பஸ் வரும் என்று எனக்கு தோன்றவே இல்லை. இதுவரைக்கும் இந்த நேரத்தில் பயணப்பட்டதும் இல்லை. ஆனாலும் ஏதோ ஓர் நம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தேன். ‘வை எம் பி ஏ’ பில்டிங் இருண்டு கிடந்தது. மேலே 75வது வருஷத்து ஏதோ நினைவாக சிங்களத்தில் எழுத்துக்கள் சிவப்பு மஞ்சள் பச்சை வெள்ளை போன்ற நிறங்களில் மின்னிக் கொண்டிருந்தன. கீழே ஆரியபவனுக்கும் ஆனந்த பவனுக்கும் இடையே இருந்த நோலிமிற் சற்று உயிர்ப்புடன் இருந்தது.தெருவின் மௌனம் பயங்கரமானது என்பதை மனம் உணர்ந்து கொண்டிருந்தது.
    சிகரட் ஒன்று பற்றினால் நன்றாக இருக்கும் கையில் இல்லை…துணைக்கு தெருக் கரையில் பிச்சைக்காரர்கள் கூட இல்லை.

    செல்வாவுக்காக காத்துக் கொண்டிருந்ததில் களிந்து விட்டது நேரம். ‘திரைக்கதையை முடித்து வையுங்கள் கறக்சன் பண்ண வாறன்’ என்று விட்டு வெளியே போனவன் தான் என்னுடைய கம்பனி சீ ஓ…திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதும் மறந்து பசி வந்த போது மணியை பார்த்து இனியும் செல்வா வரமாட்டார் என்பதை உணர்ந்து கம்பனியை காத்துக் கொண்டிருக்கிற மோகனிடம் சொல்லி விட்டு அவரிடம் கையில் இருந்த ஒரு சிகரட்டை கடன் வாங்கிப் பற்றிக்கொண்டே தெருவில் இறங்கி தனியே நடந்து கடந்து போன காரை வெறித்து விட்டு பஸ்ராண்டுக்கு வந்து மணியை பார்த்தால் 1.08.

    ரேடியோ மட்டுமே வேலை செய்யக் கூடிய என்னுடைய டப்பா போணில் சக்தி ‘எவ் எம்’ கேட்டேன். புதுப்பாடல்கள் போய்க்கொண்டிருந்தது.

    படிப்பதற்கு எதுவும் இல்லாமல் பஸ்ராண்டை பார்த்தேன். அதுவும் நோலிமிற்றின் தயவுதான். பொறளை சந்திக்கு மேலே ஒரு பில்டிங்கில் நச்சென்று ஞாபகத்தில் நிக்காத ஏதோ மூன்றெழுத்துக்கள் ஆங்கிலத்தில் எழுதி இருந்தது பார்வை கீழே வர ஒரு சிங்களப்படத்தின் கட்டவுட். அதிலிருந்த எழுத்துக்களைப் பார்த்ததும் ‘எனக்கு சிங்களம் தெரியாதே’ என்ற எண்ணமும் பொலிஸ் வந்தால் என்ன செய்வது என்ற பயமும் வர சிந்தனையை மாற்ற விரும்பி என்னுடைய படத்துக்காக வைத்திருந்த கதையை நினைத்தேன்.

    பொறளையின் வெறுமையும் என்னுடைய தனிமையும் தான் மனம் முளுவதையும் ஆக்கிமித்திருந்தது.
    135 வர வேண்டும் ஏறி கிருலப்பனை போய் ரூமில் சாப்பிட்டு…தூங்கிவிட்டு…பஸ் வருமா..? தேவா தூங்கிப் போயிருப்பான்…நாளைக்கு காத்திருந்ததை செல்வாவிடம்….ரூம் கதவு மூடியிருக்குமே…?
    தொடர்ச்சியற்ற சிந்தனைகளால் மனம் அலைக்களிந்தது.

    அப்போது தான் அவள் வந்தாள்……

    வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் நான் நிற்கிற இடத்தை நோக்கி. எனக்கு பின்னாலிருக்கிற தெருவிலிருந்து தான் அவள் நடந்து வரவேண்டும். அவளைப் பற்றிய சுருக்க குறிப்பு…பெயர் தேவதை அல்லது மோகினி என்று வைத்துக்கொள்ளலாம்..அவளைப்பார்த்ததும் எனக்கு நான் யாரோ ஒரு பெண்ணை எதேர்ச்சயாக பார்த்துவிட்டு எப்போதோ எழுதி மறந்து போன..
    ‘ஒரு முறை தெருவால்
    நடந்து போ…
    கவிஞர்கள் தொகையில்
    முதலிடம் வரும்
    நம் நாடு…’
    என்ற கவிதை சட்டென்று ஞாபகத்தில் வந்தது…பொக்கட்டுக்குள் கையை விட்டு ‘எப் எம்’ சவுண்டை குறைத்தேன். கையில் சரியாக நான் பஸ்ஸில் போவதற்காக மட்டும் வைத்திருந்த பன்னிரெண்டு ரூபா சில்லறை தட்டுப்பட்டது. வெறும் பன்னிரெண்டு ரூபாய் தான் இப்போது என்னிடம் இருக்கின்றது என்பதும் ஞாபகத்தில் வந்தது. அருகில் வந்தாள் நின்று தெருக்களை திரும்ப திரும்ப இரண்டு மூன்று முறை பார்த்தாள். அந்த நிசியில் அவளது தோல் வெள்ளை வெளேர் என்றிருந்தது. தெருவை பார்த்துவிட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் ‘கொய்த யன்ன..?’ என்றாள்… ‘போச்சுடா…’ எதுவும் கேட்காதவன் போல மறுபக்கம் திரும்பினேன். ஒரு நாள் இரவு தேவா சொன்னான்

    ‘லேடடாச்சுண்ணா பொரள புல்லா சாமானுங்க தாண்டா திரியும்…’

    இவளும் அவளாய்த்தான் இருக்க வேண்டும் என மனம் சொல்லியது. என்னிடம் வெறும் பன்னிரெண்டு ரூபாய் மட்டும் தான் இருக்கிறதென்பது மறுபடியும் ஞாபகத்தில் வந்தது..’சிங்களம் தெரியாதா…?’

    வெடுக்கென்று அவள் பக்கம் திரும்பினேன் சாதாரணமாகவே என்னை பார்த்து சிரித்துக்கொண்டு நின்றது தேவதை. என்னை அறியாமலே ஏதோ ஓர் பதட்டம் தொற்றிக்கொண்டது நா தடுமாறியது. மறுபடியும் என்னிடம் ‘எங்க போறீங்க…?’ என்றாள்.
    ‘கிருலப்பன..’
    திரும்பி ஒரு முறை மௌனம் காக்கும் அந்த தெருவை பார்த்தாள்.
    ‘நான் உங்க கூட வரவா…?’
    கேட்டுக் கொண்டே திரும்பினாள். நான் புரிந்து கொண்டு விட்டேன் இவள் அவளே தான். மௌனம் காத்தேன் அந்த தெருவைப் போல. எதற்காக இவள் இப்படி ஆகி விட்டாள் என்று கேட்க வேண்டும் போல இருந்தது.
    என்ன அழகு ‘எங்க போறீங்க..?’ என்று கேட்டதற்கு பதிலாக ‘என்ன கட்டிக்கிறியா..?’ என்று கேட்டிருந்தால் தயங்காமல் கையை நீட்டி இருப்பேன் என்று தோன்றிற்று.
    தேவா சொன்னான்
    ‘இங்க நிறயப்பேருக்கு எயிற்ஸ்சுடா..’ என்று.
    இவளால் எயிற்ஸ் வந்தாலும் பரவாயில்லை என்று தான் சொல்லலாம்.
    தூரத்தில் ஒரு வெளிச்சம் வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவளும் பார்த்திருக்க வேண்டும். வெளிச்சம் இரண்டாகி மூன்றாகி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.
    ‘ஓட்டோ ஒண்ணு போவமா..?’
    மறுபடியும் என்னிடம் கேட்டாள். அவளைப் புரிந்து கொண்டு விட்டதால் வெளிப்படையாகவே சொன்னேன்
    ‘எங்கிட்ட காசில்ல…’
    ‘பரவால்ல..’ என்றாள்.
    பணத்துக்கு கிடைக்கவில்லை என்றால் சும்மாவே கூட்டிச் செல்வாள் போல இப்படியெல்லாம் பெண்களா என்றிருந்தது.
    ‘எங்கிட்ட பஸ் காசு பன்ரெண்டு ரூபா தான் இருக்கு..’ என்றேன்.
    என்னை பார்த்து உதட்டுக்குள் சிரித்து விட்டு
    ‘பரவால்ல வாறீங்களா..’ என்றாள்.
    அந்த சிரிப்புக்கே சாகலாம்.
    ‘நீ மச்சக் காரண்டா…’
    என்று என்னை ஒரு பெண் பார்த்த போது தேவா சொன்னான். அந்த மச்சம் எங்கேயாவது இருந்து தொலைத்திருக்கும்.
    ‘எங்க போகணும்…?’ என்றேன்.
    ‘வெள்ள வத்த..’
    சொல்லி விட்டு தன் உதடுகளை நாவின் நுணியால் நனைத்தாள் எனக்கு ஏதோ செய்தது.
    ‘வெள்ள வத்த ..எங்க..?’
    ‘வீட்டுக்கு…’
    என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்த ஆட்டோவை கையை காட்டி நிறுத்தி விட்டு ஆட்டே காரனிடம் சிங்களத்தில் ஏதோ கதைத்தாள். அவனும் கதைத்தான். பின்னால் கூட பேரளகாய்த்தான் இருந்தாள். திரும்பி என்னிடம்
    ‘வாங்க போவம்..’ என்றாள்.

    ஆட்டோவை நோக்கி நடந்தேன். அவள் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆட்டோக்காரன் என்னை பார்த்து விட்டு அவளைப்பார்த்து மறுபடி என்னை பார்த்தான் ‘ஆந்தை அன்னம் ஆந்தை ‘போன்ற பறவைகளை பார்க்கிற வேறுபாடு அவன் முகத்தில் தெளிவாய் தெரிந்தது.

    தெரு பேச ஆரம்பித்திருந்தது. அவள் தன் பையை மடியில் வைத்து தெருவை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் காலும் இடது பக்க தோள்ப்பட்டையும் என்மேல் சாதாரணமாக பட்டுக் கொண்டிருந்தது. அடிக்கடி காற்றில் அலையும் முடியை இடது கை சுட்டு விரலால் சரி செய்து கொண்டிருந்தாள். முடியை சரி செய்வதற்கு கையை மேலே தூக்குகிற பொழுதெல்லாம் மார்புகள் தனியாய் தெரிய எனக்கு பெயர் தெரியாத ஹோர்மோன்களெல்லாம் சுரக்க ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்து அயன் பண்ண ஆரம்பித்த விட்டேன். என்னை பார்த்து உதட்டுக்குள் சிரித்து விட்டு தெருவையே பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். மனம் இப்போது எப்படி ஆரம்பிப்பது முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஒழுங்கு படுத்தினாலும் அவளின் கறுப்பு நிற ரொப்பின் மேல் அடிக்கடி ஆத்திரம் கொள்ளவும் செய்தது.

    எப் எம்மில் ‘வாழ்க்கைய யோசிங்கட…’ என்ற ‘சென்னை-28’ பாடல் போக அந்தப்படத்தில் அரவிந் அவன் காதலி பற்றி நண்பர்களிடம் சொல்லுகிற சீன் அந்த டயலக்
    ‘அவளப் பாத்தா அப்பிடியே டிங்கிண்ணு நிண்டுக்கிண்டா…’
    ஞாபகம் வர நான் தேவாவிடம் இதை சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
    அவள் மேனியில் இருந்து தனியான ஒரு வாசம் அந்த நிமிடங்களில் கிறங்கிப் போயிருந்தேன்.
    வெடுக்கென்று ஆட்டோ பிறேக் பிடித்து நிற்க நினைவு தப்பி அவளைப்பார்த்த போது சற்று இடைவெளி விட்டுத்தான் உட்கார்ந்திருந்தாள். உதட்டுக்குள் அதே சிரிப்புடன் சொன்னாள்
    ‘கிருலப்பன வந்திரிச்சு…’
    வெளியே தலையை நீட்டிப்பார்த்தேன் கிருலப்பனை மயூராபதி அம்மன் கோவிலில் மின் குமுழ்கள் மின்னிக் கொண்டிருந்தன.
    இரண்டு பக்கமும் குடிசைகள் நிரம்பியும் உறங்கிக் கொண்டிருக்கிற எனது ரூம் தெருவில் நடக்கும் போது
    ‘மறுபடியும் ஒரு முற அவள சந்திக்கனும் …தாங்ஸ் சொல்லனும்…’
    என்று நினைத்துக் கொண்டேன்.

    Share