சக்தியா.. சாபமா?

6

பவள சங்கரி

தலையங்கம்

வழமையாக வரும் மகளிர் தினம் இந்த ஆண்டும் வந்துவிட்டது. சென்ற ஆண்டைக் காட்டிலும் வன்கொடுமைகள் மலிந்து போய் உள்ளன. சாதனைப் பட்டியலைக் காட்டிலும் சோதனைப் பட்டியலே நீண்டு கிடக்கிறது! திரும்பிய புறமெல்லாம், பாலியல் வன்கொடுமை, அமில வீச்சு, என்று நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. அண்ணல் காந்தியடிகள்  சொன்ன அந்த சுதந்திரம் என்றுதான் வரப்போகிறது என்ற புலம்பல் தீரும் காலம்தான் எப்போது என்று தெரியவில்லை. முட்டி, மோதி  மேன்மையடைய போராடிக் கொண்டிருக்கும் இளம் பெண்களின் நிலை வேதனைக்குரியதாக இருக்கிறது. வக்கிரம் தலை விரித்து ஆடுகிறது.

ஊடகங்கள் பெண்களை போகப்பொருளாக வெளிச்சமிட்டுக் காட்டுவதும், பெண்ணே இன்னொரு பெண்ணிற்கு பெருங்கொடுமை செய்வதையும், அன்றாட தொடர்க் காட்சிகளாக வீட்டின் வரவேற்பறையிலேயே கொண்டுவந்து காட்டி, பண்பாடு, கலாச்சாரத்தைக் குட்டிச் சுவராக்கும் செயல்களைத் தட்டிக்கேட்போரும் இல்லை. விவாகரத்துகள் சர்வ சாதாரணமாகிப் போனதற்கு முக்கியக் காரணமாக  இந்த ஊடகங்களைக் கூறலாம். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஊடகங்களை தணிக்கைத் துறைகள் கண்டு கொள்ளாதது ஏன் என்றும் தெரியவில்லை.

திரும்பிய புறமெல்லாம் மதுபானக்கடைகள். வருமானம் குறைந்துவிட்டது என்று வருத்தப்படும் அரசாங்கம் இளம் பிராயத்தினரும் மதுவிற்கு அடிமையாக ஆரம்பிப்பதைக் கண்டு கவலை கொண்டதாகத் தெரியவில்லையே. பெண்களின் வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சட்டத் திருத்தம் பெரிய தீர்வாக அமைந்ததாகத் தெரியவில்லை. மேலும், மேலும் குற்றங்கள் பெருகிக் கொண்டுதானிருக்கிறது. இந்த நேரத்தில் மகளிரே முழுதும் நடத்தும் வங்கிகளுக்காக பெரும் நிதி ஒதுக்குவதாக நம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்  அறிவித்திருப்பது எந்த அளவில் நன்மை பயக்கும் என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.

நாகரீகம் என்ற பெயரில் நம் இந்தியக் கலாச்சாரமும் பண்பாடும் சீர்குலைந்து கொண்டிருப்பதும் வேதனையான விசயம். குழந்தைகள் சுய கட்டுப்பாடு இன்றி தான்தோன்றித்தனமாக நடக்கும் போக்கை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும். காதலுக்குச் சம்மதிக்கவில்லை என்றும், விவாகரத்திற்கு சம்மதிக்கவில்லையென்றும் அமிலத்தை எடுத்து வீசும் அளவிற்கு ஒருவனுக்கு துணிச்சல் வருகிறதென்றால் இளம் வயதிலிருந்தே உள்ளத்தில் ஊறிப்போன நஞ்சாகவல்லவா விளைந்திருக்க வேண்டும் அது

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகளின் மீது பைக்கில் வந்த மூன்று  மாணவர்கள் அமிலத்தை வீசிச் சென்றார்கள்.  காவல் துறை அதிகாரிகளால் என்கவுண்டரில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது சக மாணவிகள் அச்செயலை மலர்கொத்து கொடுத்து அந்த அதிகாரிகளைப் பாராட்டியது நினைவில் இருக்கலாம். இன்று வர்மா கமிஷன்  5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  சதையையும், எலும்பையும்கூட சிதைக்கச் செய்யும் இந்த அமிலம் வெகு எளிதாக கிடைப்பதுதான் கொடுமை.  இதன் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தும் அரசாங்கம் இன்னும் தயங்கிக் கொண்டிருப்பது சரியல்ல. உடனடியாக அமிலம் விற்பதற்கான கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது.

தங்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை வெளியில் சொல்லத் தயங்கிய காலம் மாறி இன்று பெரும்பாலான் பெண்கள் அதனை எதிர்த்துப் போராடும் பொருட்டு துணிந்து நீதிமன்றங்களுக்குச் செல்லத் தயங்குவதில்லை. இதனால் ஏற்படுகிற விழிப்புணர்வு இந்தப்பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவர உதவலாம். குடும்பத்திலேயே நெருங்கிய உறவுகளால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி அதனை வெளியில் சொல்லக்கூட முடியாமல் தவிக்கும் சிறுமிகள் பிற்காலங்களில் மனநலம் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படலாம். மேலை நாடுகளைப் பார்த்து இப்போது நம் நாடுகளிலும் முறையற்ற திருமணங்களும், விவாகரத்துகளும் சர்வ சாதாரணமாகிவிட்டது இதற்கெல்லாம் தீர்வு என்றால் முதன்மையாக நிற்பது பெற்றோரின் கண்காணிப்புதான். இன்றைய இயந்திர வாழ்க்கையில் குழந்தைகளுடன் அன்பையும், பாசத்தையும் முழுமையாகப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு குறைந்து கொண்டு வருகிறது. குழந்தைகளின் நடவடிக்கைகள் பற்றி எதுவுமே அறியாதவர்களாகக் கூட பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு அதன் சுமையோடு சேர்த்து குடும்பப பொறுப்பையும் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போகிறது. ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்ற வியாக்கியானமெல்லாம் குழந்தை வளர்ப்பில் பரிசீலிப்பது முதலுக்கே மோசம் என்ற நிலையில்தான் போய்சேரும். குழந்தைகள் நலனில் முழுமையான அக்கறை செலுத்த வேண்டிய அவசரத் தேவையில் உள்ளோம் என்பதற்கான பல சான்றுகள் கண் முன்னே தெரிகிறது., இன்று இரண்டில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். 12 வயதிலேயே இளம் பாலகர்கள் மற்றும் பெண்களும் கூட மதுப்பழக்கம் கொள்வதாகக் கருத்துக் கணிப்புகள் பேரதிர்ச்சியைக் கிளப்புகின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பெற்றோரும், சமூக நல அமைப்புகளும், அரசாங்கமும் அதற்கான விழிப்புணர்வையும், தீர்வையும் உடனடியாகக் காண வேண்டிய தேவையில் இருக்கிறோம் என்பதே நிதர்சனம்.

மதுவிலக்கைக்கோரி 32-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி திரு சசி பெருமாள் . அவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளது என்றும் அடுத்தடுத்து அவர் ரத்த வாந்தி எடுத்து வருகிறார் என்றும் அறியும் போது நெஞ்சு பொறுக்கவில்லை. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கும் இவருடைய  சாத்வீகப் போராட்டம் வெற்றிபெறவும் அவர் நல்லபடியாக உயிர் பிழைத்து வரவும் நம்முடைய பிரார்த்தனையையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம். கண்ணை விற்று ஓவியம் வாங்குவது போல டாஸ்மாக கடைகளைத் திறந்துவிட்டு இலவசங்களை வழங்குவது தர்மமா? இலவசங்கள் வேண்டும் என்பதைவிட, நம் வருங்காலச் சந்ததியினர் நலமாக வாழ வேண்டும் என்பதுதான் அவசியத்தேவை இன்று. அதை உணர்ந்து அரசாங்கம் நியாயமான முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “சக்தியா.. சாபமா?

  1. மிக அருமையான கட்டுரை. இந்த நூற்றாண்டிலும் பெண்கள் தொடர்ந்து போராடியே நீதியைப் பெற வேண்டியிருப்பதும், அல்லது போராடிப்  போராடி வாழ்க்கையையே இழப்பதும் வேதனைக்குரியது.  பெண் குழந்தைகளைத் துணிச்சல்காரிகளாக, தனது காலில் சுயமாக நிற்கும் தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது இக்காலத் தாய்மார்களின் கடமை, அதற்கு துணை செய்வது தந்தையரின் கடமை.
    நல்லதொரு கட்டுரைக்கு நன்றி.

    ….. தேமொழி 

  2. இன்றைய பெற்றோர்களில் பலருக்குத் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள், அவர்களுடைய நண்பர்கள் யார் என்பது போன்ற விஷயங்கள் கூடத் தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. அதுமட்டுமா? வீட்டிலிருக்கும் நேரத்தில் கூடப் பெற்றோர் பிள்ளைகளோடு பேசுவதில்லை. பெரியவர்கள் தொ(ல்)லைக்காட்சியில் மூழ்கப் பிள்ளைகள் கணினி விளையாட்டுகளில் மூழ்கச் சமூக அக்கறை கொண்டவர்களெல்லாம் இந்த நிலை என்று மாறுமோ எனக் கவலைக் கடலில் மூழ்க வேண்டிய அவலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
    பெண்கள் தன்னப்பிக்கையும், துணிச்சலும் கொண்டவர்களாக இருப்பது நல்லதே. ஆயினும், பாதுகாப்பற்ற இன்றைய சமூகச் சூழலில் தனியாய் இரவு நேரங்களில் பயணம் செய்வதைத் தவிர்ப்பதும், ஆண் நண்பர்களின் தொடர்பை அளவோடும், ஆபத்தில்லாமலும் வைத்துக்கொள்வதும் பெண்களுக்கு மிகவும் நல்லது. உடை உடுத்தும் விஷயத்திலும் பெண்கள் (கவனத்தோடு) கண்ணியமாக இருப்பது பல்வேறு பாலியல் தொல்லைகளைத் தவிர்க்க உதவும்.
    இன்றைய பெண்களின் பாதுகாப்பற்ற அவல நிலையைத் தெளிவாய்த் தன் கட்டுரையில் படம்பிடித்துக் காட்டியுள்ள ஆசிரியர் பவள சங்கரிக்குப் பாராட்டுக்கள் பல. சரியான தருணத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரை. மிக்க நன்றி!

    -மேகலா

  3. ஆழ்ந்த சலிப்பு. ஊடுருவும் வார்த்தைகள்.  சக்தி ஆதி சக்திதான் ! அவளை அவமதிப்பதுதான் சாபம். அதன் வினைதான் இத்தனை அட்டூழியங்களும். மகிடன் வீழுவான் ! மங்கை ஆளுவாள்.  நான் தில்லியில் வசிக்கிறேன். இங்கு நடந்த போராட்டங்கள் நேரில் பார்த்தன. அவைகள் தேர்வெனத் தளர்ந்துவிட்டன. ஆனால் வெறியர்களின் களியாட்டம் நாளொன்றுக்கு ஒவ்வொன்றாய். இங்குள்ள என் போன்ற பெற்றோரும், இளம் 
    மகள்களும் ஒருவித அச்சத்துடன் தான் இருக்கிறார்கள். என் முதற்
    கவிதைகள் பொங்கிடு பாரதமே! கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!
    இரண்டும் பாலியல் கொடுமைக்காக எழுதப்பட்டவையே! காலமொருநாள் மாறும்…
    காலம் விரைவில் மாறும்

  4. உண்மையை வெட்ட வெளிச்சமாகக் கொட்டும் கட்டுரை. ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?’ என்ற பாரதியின் பாடலைப் பாட வேண்டிய நிலையில் தான் இன்றும் பெண்ணினம் இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனம் பேசுகிறது. பாராட்ட வார்த்தைகளில்லை. எழுத்தாளர் மேகலா இராமமூர்த்தி அவர்களின் கருத்துரையை நான் அப்படியே வழிமொழிகிறேன். மிக்க நன்றி.

  5. பாலியல் கல்வி முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டால் பெண்களுக்கு எதிரான வான் கொடுமைகள் குறைய வாய்ப்பு இருக்கிறதோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *