Blog

  • திருமால் திருப்புகழ் (24)

     
    கிரேசி மோகன்

    சிவகுடும்பம்
    தனனதந்த தனனதான
    தனனதந்த தனனதான -தந்ததான….

    ————————————————————————————————

    “குறஅணங்கை மருவவேலர்DCF 1.0
    உதவவந்த உமைமகேசர் -கொஞ்சுவேழம்
    சுடர்மிகுந்த சுதர்சனாரை
    வயிறுகந்த பொழுதில்காதி -ரெண்டின்மேலும்

    கரமழுந்தி படியமேனி
    அமர்ந்தெழுந்து தொழுதுநேமி -கொண்டமாலை
    விடியல்கங்குல் மதியம்மாலை
    தொழுதுநின்று துயரிலாது -இங்குவாழ்க

    சிறுவனென்று வெகுளிமாமன்
    இடமிருந்து விரையுமானை -கொம்புசீவி
    துடையகன்ற வலியசாணு
    ரனைமலங்க தரையில்சாய -த்வந்தமாடி

    பிறவிதந்த உறவுமீள
    சிறைபுகுந்து தளைகள்வீழ -கஞ்சனாளும்
    மனைபுகுந்து அசுரமாமன்
    சபைநடுங்க முடிவுகாணும் -எம்பிரானே”

    ————————————————————————————————————

    Share
  • ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு

     

    ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
    தேதி: 23 மார்ச் 2014
    நேரம்: மாலை 5.00 – 8.30
    இடம்: விக்டோரியா ஸ்திரீட் நூலகம், தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்

    jeyanthi

    வரவேற்புரை

    முனைவர் சீதாலட்சுமி – முழுமையான ஒரு பார்வை
    இராம கண்ணபிரான் – குறுநாவல்கள் ஒரு பார்வை
    காயத்ரி – ஓர் இளம் வாசகியின் பார்வையில்
    திரு சுப்ரமணியம் நடேசன் – தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் பற்றி
    மாதரசி கண்ணன் – காட்சிகளும் கதாப்பாத்திரங்களும் உரையாடல்களும்
    நடராஜன் – மொழியாடல், கதை சொல்லல்
    ஜெயசுதா சமுத்திரன் – ஒரு மாணவியின் வாசிப்பில்
    M.K.குமார் – எனது பார்வையில்
    பாரதி மூர்த்தியப்பன் – கதைகளாகும் உள்ளுர் சமூகப் பிரச்சினைகள், கருக்கள், களன்கள்

    கலந்துரையாடல்/கேள்வி பதில் அங்கம்

    ஏற்புரை/நன்றியுரை

    நிறைவு

    Share
  • திருமால் திருப்புகழ் (23)

     

    கிரேசி மோகன்

    Asura Samhari

    தானதனத்த தானதனத்த தானதனத்த தானதனத்த
    தானதனத்த தானதனத்த -தனதான….

    —————————————————————————————————————————-

    “சீதையிருப்பை ராகவனுக்கு சேதியுரைத்த வானரஜித்தன் images (3)
    போலயெனக்கு, நானினிருப்பை -ரமணேசர்
    கூறுவிதத்தில் காணவிருப்பு, ஆழியையொத்த மேனியவஸ்த்தை
    தாவிகுதித்(து)இ ராவணபுத்தி -தெளிவாக,

    ஆதியிருப்ப சோகவனத்து ஆன்மசுகத்தில் ஆழநிலைக்க,
    பாரமொழித்து பூமிதனக்கு -எளிதாக,
    தேரைநடத்தி நூறையழித்து ஆளஐவர்க்கு (நாலொருவர்க்கு) வாழ்வையளிக்க
    போரைநிகழ்த்தி பாரதசத்தம் -இடுவோனே.

    தேதிகுறித்து தாமதமற்று வாகனபட்ஷி மீதுயிலக்மி
    கூடயிருக்க கீதையுரைக்க -திருமாலே,
    வாவியதற்குள் காளியனுச்சி மீதுகுதித்த பாதரசத்தை
    ஓதகவிக்குள் நேரில்நடத்த -வருவாயே

    சூதில்தொலைத்த மாதுஅழைக்க சேலையளித்து மானம்பிழைக்க
    வேகமுடைத்து ஞானமுகக்க -அருள்வாயே
    கேசவருக்கும் வாசவருக்கும் கூடிடும்பக்த கோடிகள்பெற்ற
    மாமயிலைக்கு மாதவமுக்தி -பெருமாளே”….கிரேசி மோகன்…..
    ———————————————————————————————————————–

    Share
  • அவளுக்கும் ஒரு பெயருண்டு!

    கீதா மதிவாணன்

    old-indexபட்டுத்தூளியிலிட்டு பாலாடையில் தேன்புகட்டி
    அந்நாளில் அவளுக்கும் ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.
    வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும்போதோ,
    ரேசன் அட்டை புதுப்பிக்கப்படும்போதோ அன்றி
    அவளுக்கென்று ஒரு பெயர் இருப்பது
    அவள் நினைவுக்கு வருவதேயில்லை.
    தங்கமே வைரமே பவுனே பச்சைக்கிளியே என்று
    கொஞ்சுமொழிகளால் கொண்டாடப்பட்டும்
    அம்மாடி, கண்ணு, செல்லம், பாப்பாவென்று
    ஆசையாயும் அன்பாயும் அழைக்கப்பட்டும்
    அடியேய் இவளே…. நாயே பேயே சனியனே என்று
    பின்னாளில் பேரெரிச்சலுடன் விளிக்கப்பட்டும்
    கடந்துபோன காலத்தின் எந்த முடுக்கிலும்
    தன்பெயர் புழங்கப்படாததில் அவளுக்குப் பெருவருத்தம்.
    பள்ளிக்குச் சென்று பழக்கப்படாவாழ்வில்
    அவள் பெயர் தாங்கியதொரு அஞ்சலட்டைக்கும்
    வழியற்றுப்போனவளின் அந்திமக்காலத்தில்
    ஏக்கத்தவிப்போடு ஊசலாடிக்கொண்டிருக்கிறது உயிர்க்கூடு,
    காலனேனும் அவளைப் பெயரிட்டு அழைக்க
    காலத்தே வருவானாவென்ற காத்திருப்போடு!

    http://www.shunya.net/Pictures/NorthIndia/Bishnupur/Bishnupur.htm

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    எஸ். பழனிச்சாமி

    அன்புள்ள மணிமொழிக்கு,

    உன் அப்பா எழுதும் மடல். இந்த மடல் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இதை எழுத வேண்டிய அவசியம் என்ன என்றும் கேட்கத் தோன்றலாம். ஆனாலும் பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக உன்னைப் பார்க்காமலும், பார்க்க முடியாமலும் இருக்கின்ற ஏக்கம் என் மனதை அரித்துக் கொண்டிருப்பது உண்மை. அதன் வெளிப்பாடுதான் இந்த மடல்.

    இத்தனை நாட்களாக நீயும் உன் தம்பிகளும் ஃபேஸ்புக்கில் எழுதுவதை மட்டுமே படித்து வந்திருக்கிறேன். அது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் அதில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். உன் தம்பிகள் படித்து முடித்து வேலையில் சேர்ந்திருப்பதையும், உனக்குத் திருமணம் ஆனதையும், குழந்தை பிறந்ததையும்கூட அதன் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.

    தாய்மை களை பொழியும் உன் அழகான முகத்தைப் பார்க்க வேண்டும், உன் மகனை என் மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும் என்று மனது துடிக்கிறது. ஆனால் அதற்குத்தான் எந்த வழியும் இல்லாமல் போய் விட்டதே!

    அன்பு மகளே, உன்னுடனும், உன் தம்பிகளுடனும் நாம் எல்லோரும் ஒன்றாக இருந்த நாட்களை மட்டுமே நான் பொக்கிஷமாக நினைத்து இப்போதும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு சந்தோஷமான, அற்புதமான நாட்கள் அவை.

    நீ நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாய். காலையில் எழுந்தவுடன் நான் உங்களுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுப்பேன். அப்போது உன் தம்பி செய்யும் சேட்டைகளை நான் விளையாட்டாகக் கிண்டல் செய்யும் போது, எல்லோரும் சிரிப்பீர்களே, அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? எவ்வளவு சந்தோஷமான நாட்கள்!

    ஐந்தாம் வகுப்பில் நீ படிக்கும் போது, உன்னுடைய வகுப்புத் தோழி திவ்யாதான் எப்போதும் முதல் ரேங்க் வாங்குவாள் என்று நீ சொன்னாய்; நீ நினைத்தால் உன்னாலும் முடியும் என்று, உனக்கு மனதை ஒரு நிலைப்படுத்த கற்றுக் கொடுத்தேனே ஞாபகம் இருக்கிறதா? அந்த மாத பரீட்சையில் நீ முதல் ரேங்க் எடுத்தபோது எவ்வளவு சந்தோஷம் அடைந்தாய்? அன்றிலிருந்து எப்போதும் நீதான் முதல் ரேங்க் எடுத்தாய். அதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது.

    அன்பு மகளே, அப்படியெல்லாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று உனக்கு சொல்லிக் கொடுத்த எனக்கு, இத்தனை நாட்களாக உன்னை நேரில் பார்க்கவும், பேசவும் ஒரு வழி தெரியாமல் போய் விட்டதே? என்னுடைய தலைவிதியை நினைத்து பரிதாபப் படுவதா, பச்சாதாபப் படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

    இத்தனைக்கும் நீ உன்னுடைய தோழி திவ்யாவைப் போல் எங்கோ அமெரிக்காவிலா இருக்கிறாய்? இதே தமிழ்நாட்டில் எட்டு மணி நேரப் பயண தூரத்தில் தானே இருக்கிறாய். அப்படி இருந்தும்கூட நான் உன்னைப் பார்க்கவோ, நீ என்னைப் பார்க்கவோ முடியாமல் போய் விட்ட இந்த காலத்தின் கொடுமையை என்னவென்று சொல்வது?

    அதிர்ச்சி தரக்கூடிய அந்தப் பிரிவு, நீ ஆறாவது படிக்கும்போதுதான் ஏற்பட்டது. அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளும் வயது அப்போது உங்களுக்கு இல்லை. இப்போது நீ வளர்ந்து பெரியவளாகி விட்டதால் உலக அனுபவம் உனக்குக் கிடைத்திருக்கும். அதுவுமில்லாமல் டிவி சீரியல்களில் எத்தனையோ வில்லிகளைப் பார்த்திருப்பாய். மனிதர்களின் குணாதிசயங்களைப் புரிந்து கொண்டிருப்பாய்.

    அன்பு மகளே, மனிதர்களை விட பணத்தை மட்டுமே பெரிதாக நினைக்கும், நேர்மையில்லாத, திடீர் பணக்காரியாகி விட்ட ஒரு மாமியாரின் புதிய வீட்டில் மருமகன் வாடகைக்கு குடியேறும் ஒரு நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. அதுவும் என் போன்ற தன்மானம் மிக்கவர்களுக்கு அந்த நிலை வரவே கூடாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். இல்லாவிட்டால் உங்களையெல்லாம் அன்றே பிரிந்து தனியே சென்றுவிட வேண்டும் என்றவகையில் மிரட்டப்பட்டேன்.

    வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட என்னைத் தரக்குறைவாக நடத்தி, தனிமைப் படுத்தி, அவமானப் படுத்தி என்னை வீட்டை விட்டு வெளியேற்ற அவர்கள் முடிவு செய்து விட்ட பிறகு, என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் உங்களையெல்லாம் பிரிவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

    எங்க ஊர் ராஜா படத்தில் வரும் யாரை நம்பி நான் பிறந்தேன் என்ற பாடலில்

    பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா

    சோதனையைப் பங்குவச்சா சொந்தமில்லே பந்தமில்லே

    என்றும்

    குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே

    பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்லே

    என்றும் கவியரசு கண்ணதாசன் என்னுடைய அப்போதைய நிலையை மிகப் பொருத்தமாக சொல்லியிருப்பார்.

    அம்மா, நான் கோழையல்ல. தன்னம்பிக்கையும், தன்மானமும் உள்ளவன். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியில் நம்பிக்கை கொண்டவன். கடவுள் மீது பக்தி உள்ளவன். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும் என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவன். அதனால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.

    நீங்கள் வீட்டில் இருக்கும்போது உங்களைப் பிரிந்துவர என்னால் முடியாது என்றுதான், நீங்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு வீட்டை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு உங்கள் நினைவால் நான் பட்ட அவஸ்தைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் அழுகை வெடித்துக் கிளம்பி விடும் என்ற நிலையில்தான் நான் இருந்தேன். அப்போது என் முக பாவம் அப்படித்தான் இருக்கும்.

    எப்படியோ பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. உள்ளத்தில் ஏதோ ஒரு சோகம் நிரந்தரமாகத் தங்கி விட்டது போல் தோன்றுகிறது. பலவீன மனம் கொண்டவனாக இருந்திருந்தால் உயிரையே மாய்த்துக் கொள்ளும் எண்ணம் தோன்றி இருக்கும். ஆனால் கடவுள் அருளால் என்றாவது ஒருநாள் உன்னையும், உன் தம்பிகளையும் மீண்டும் பார்ப்பேன் என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பைக் கொடுத்திருக்கிறது.

    பதினாலு வருடங்கள் ஸ்ரீராமனைப் பிரிந்த தசரதனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. தசரதனுக்கோ வேறு மனைவிகள் மூலம் மற்ற பல குழந்தைகள் இருந்தனர். ஆனால் எனக்கு குழந்தைகள் நீங்கள் மட்டும்தானே!

    இன்று என்னுடைய பொருளாதார நிலைமை அப்படி ஒன்றும் மோசமில்லை. நேர்மையான உழைப்பில் சம்பாதித்து, ஓரளவு வசதியான ஒரு நடுத்தர வாழ்க்கைக்கு தேவையான, குடியிருக்க ஒரு ஃப்ளாட், வாகனங்கள் என்று எல்லாமே இருக்கிறது, குழந்தைகளாகிய நீங்கள் என்னுடன் இல்லை என்பதைத் தவிர.

    நான்தான் முயற்சி செய்து உங்களைப் பார்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். ஃபேஸ்புக்கில் கூட ஃப்ரண்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுக்கலாம் என்று ஒரு நப்பாசை தோன்றும். ஆனால் என் மனம் வருந்தும்படி ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்க முடியாது என்பதால் என்னைக் கட்டுப் படுத்திக் கொள்வேன்.

    சரி, இப்போது இந்த மடல் எதற்கு என்று கேட்கிறாயா? சென்ற வாரம் நான் ஊருக்குப் போய் இருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்தவர்கள் உன்னைப் பார்த்ததாகவும், பேசியதாகவும் சொன்னார்கள். வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் பெற்று, நீயும் உன் தம்பிகளும் வளமான வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    நீங்கள் புத்திசாலி குழந்தைகள் என்பதை நானறிவேன். எனவே நீங்கள் என்னுடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப் படக்கூடாது. எல்லாம் விதித்தபடிதான் நடைபெறும் என்றால் பிறகு கவலைப்பட என்ன இருக்கிறது.

    இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்வது இதுதான். உன்னையும், உன் தம்பிகளையும் பார்ப்பதற்கு மனத்தில் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னைப் பார்க்கத் தடையில்லாத சூழ்நிலை இப்போது அங்கு இல்லை என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

    ஆனால் காலம் கனியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் வாழ்நாள் முடிவதற்குள் என்றாவது ஒரு நாள் நாம் எல்லோரும் ஒன்றாகச் சேருவோம். அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன்.

    இப்படிக்கு

    உன் அப்பா

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 8

    இவள் பாரதி

    AAA_2661

    வாழைப்பூவிரல்களை விரித்து

    பருப்புக்கடைய

    உள்ளங்கை காட்டும் குழந்தை

    நண்டூறுது

    நரியூறுது சொல்லி

    கிச்சுக் கிச்சு மூட்டுமுன்னே

    சிரித்துவிடுகிறது

     

    ====

     

    இருமல் சத்தத்தை

    இதயத்துக்குள்

    வலிந்தனுப்புகிறேன்

    உன் உறக்கம்

    கலைந்துவிடக் கூடாதென

    ====

     

    விவசாய நிலத்தில்

    விதைக்கப்பட்டு

    துளிர்த்திருக்கும்

    ஒருவார பயிர்களென

    ஒருசேர வளர்ந்திருக்கிறது

    உன் மொட்டைத் தலை

     

    =====

     

    ஒவ்வொருமுறையும்

    விளையாடுகிறேன்

    உன்னிடம் தோற்பதற்காகவே

     

    Share
  • தெய்வம் இருப்பது எங்கே

    கவிஞர் காவிரி மைந்தன்

    தெளிவாகத் தெரிவது ஒன்று! தெளிவின்றி மறைவது ஒன்று! எதை நாம் இருக்கிறது என்று உறுதி செய்ய முடியும்? எதை நாம் இல்லையென்று மறுத்திட முடியும்? கேள்விகள் பல எழலாம்! விடைகள் தான் எங்கே? அறிவுக் கண்ணில் பார்க்கும்போது அதற்கும் எல்லைகள் உண்டு! அகக்கண்ணால் பார்க்கும் போது அதற்கோர் உலகம் உண்டு! விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு பன்னெடுங்காலம் முன்பாகவே மெய்ஞானம் கண்ட உண்மைகள் கோடி! அறிவின்வழி எதுவுமே உறுதி செய்யப்பட வேண்டும்! ஆன்மீகம் கண்டவர்கள் யார்? அதன்வழியே நின்றவர்கள் யார்? வழிவழியாய் தொடரும் இந்தச் செவி வழிச்சங்கதிகளை செப்பேட்டிலும், பனை ஓலைச்சுவடிகளிலும் காணும்போது விஞ்ஞானத்தை மெய்ஞானம் விஞ்சியிருப்பதை உணரலாம்! சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவையெல்லாம்.. இந்த ஆண்டில்.. இன்ன தேதியில்.. இன்ன நேரத்தில் ஏற்படும் என்று நவீன உலகம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, ஞானிகளும் மேதைகளும் தவசிகளும் தங்கள் மெய்யுணர்வால் கணக்கிட்டுச் சொன்னது எப்படி?

    அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவியரசர் கண்ணதாசன் அழகாக குறிப்பிடுகிறார். மாதா.. பிதா.. குரு.. தெய்வம்.. என்கிற பழமொழியில்.. மாதா என்பது சர்வ நிச்சயமான ஒன்று! மாதா சொல்லித்தான் ‘பிதா’ அறிமுகாகிறார் – குழந்தைக்கு! அக்குழந்தையை பிதா – குருவிடம் கொண்டு சேர்க்கிறார்! குருவோ.. தெய்வத்தை உணரச் செய்கிறார்!

    இறைவன் இருப்பது எங்கே என்கிற கேள்வி எழுவது இன்று நேற்றல்ல.. மறைபொருளின் கீர்த்தி அறியாத வரையில்.. உள்ளத்தில் உள்ளது கடவுள் என்பது உணராத வரையில்.. தெய்வத்தைத் தேடும் மனிதனின் வாழ்வில் மாற்றமில்லை. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற நம் முன்னோர்கள் ஒவ்வொரு ஊரிலும் கோவிலை உருவாக்கினார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் பழமொழி தந்தார்கள். கற்பக் கிரகத்தில் கற்சிலையாய் இருந்தாலும் அங்கே கடவுளுக்கு நடத்தப்படும் ஆராதனையின்போது அந்த தீப ஒளி ஒருசில மணித்துளிகளுக்குள் .. சட்டென்று கண்ணில்பட்டு மறைந்தாலும் அங்கே காணும் தெய்வ தரிசனம் மனதில் நின்றுவிடும். ஆலயவழிபாட்டில்கூட அனுஷ்டிக்கப்படும் ஆராதனையிலும் சூட்சுமங்கள் பொதிந்தே உள்ளன. அவ்விடம் நின்று ஆண்டவன் எண்ணி அருளை வேண்டுவோர் உள்ளம் எப்படியிருக்க வேண்டும் என்பதைக்கூட கவியரசு கண்ணதாசன் இலக்கணம் வகுத்தாற்போல் ஒரு திரைப்பாடலில் தருகிறார் பாருங்கள்.. பாடலை மீண்டும் கேளுங்கள்..

    தெய்வம் இருப்பது எங்கே
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே
    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    தெய்வம் இருப்பது எங்கே

    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை

    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    தெய்வம் ஏற்கும் உனது தொண்டு

    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: K.V. மஹாதேவன்

    http://www.youtube.com/watch?v=vbwcFTkjtJI

    Share
  • அய்யனாரும், ஆட்டுக்குட்டியும்

    பாகம்பிரியாள்A-index

    கம்பீரமான முகம், களையான மீசை
    கையில் இருக்கும் பளபள கத்தி,
    கனைத்து நிற்கும் குதிரை -இவை யாவும்
    கொடுமை ஏதும் நிகழாது என்று
    கொடுத்த நம்பிக்கையை…….

    அவர் காலடியில் கிடக்கும்
    ஆட்டுக்குட்டி கொடுக்கும் தீனமான
    அலறலோடு கலந்த அமானுஷ்யம்
    அதை அவசரமாய் அழித்துச் செல்கிறது
    ஒவ்வொரு ஓங்காரமான வீச்சுக்கும்!
    படத்துக்கு நன்றி

    http://www.skyscrapercity.com/showthread.php?t=1034825

    Share
  • பிராத்தனை துளிகள் ..!

    கலைமகள் ஹிதாயா ரிஸ்விp-images

    பிறந்து வாழுகின்ற உயிர்களின் எதிர் பார்ப்புக்கள்
    இறந்து போகின்ற உள்ளங்களின் வேதனைகள்
    வேடிக்கைப் பார்க்கின்ற இரக்கமில்லா ஜீவங்கள் ..!

    உயிரற்ற சடலத்தை சுமப்பதற்கு
    நான்கு தோள்கள் கரம் கொடுக்க
    மறுமை வாழ்வை நிலையுருத்தி நிற்கும் மரணம் ..

    பிறப்பும் இறப்பும் இணைந்துவாழும் வாழ்க்கை .
    நிலையற்ற நினைவுகளைஉறிஞ்சியெடுக்கின்ற மனசு
    எல்லாம் மறைகின்றன இரவு பகல் மாற்றங்களில்

    இஸ்மாயில் நபியின் தாகத்தை தீர்க்க ,
    ஊற்றெடுத்த சம்ஷம் நீரினை குடிக்க
    போட்டி போடுகின்ற நல்லடியார்கள் மத்தியில்

    வாழ, எல்லையற்ற சோதனைகள் தொடர
    பல நல்ல இதயங்கள் நொந்து மறைந்தனர்
    அப்பாவி உள்ளங்கள் மானம் காத்து..

    எத்தியோப்பிய மண்ணில்
    எலும்புக் கூடுகளாய் வாழும் உறவுகளுக்கு
    இதயம் பிழிந்தோடும் பிராத்தனை துளிகள் ..!

     

    Share
  • பூதச் சூட்டுப் பிரளயம் !

    சி. ஜெயபாரதன்images

    சூட்டு யுகம் பூதமாகிப் புவிக்கு
    வேட்டு வைத்து மீளுது !
    நாட்டு நகரம், வீட்டு மக்கள்
    நாச மாக்கிப் போகுது !
    புயலை எழுப்ப மூளுது !
    பேய்மழை கொட்டி அழிக்குது !
    நீரை, நிலத்தை, வளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    இயற்கை சிதைக்க வருகுது !
    கடல் வெப்பம், மட்டம் ஏற்றி
    கரைப் பகுதி மூழ்குது !
    மெல்ல மெல்ல ஏறி உஷ்ணம்,
    மேலே மீறிப் போகுது !
    சூட்டு யுகப் பிரளயம்,
    வீட்டை நோக்கித் தாக்குது !
    உன்னை, என்னை, உலகின் கண்ணை
    இன்னும் பிதுக்கப் போகுது !

     

    ஓரிடத்தில் எரிமலை சீறி
    உலகெல்லாம் பரவுது
    கரும்புகை மூட்டமே !
    ஓஸோன் குடையில்
    ஓட்டை விழுந்து,
    பரிதிக் கதிர்கள் பொசுக்கும் புவியை !
    துருவப் பனிப் பாறைகள்
    உருகி, உருகி
    உப்புக் கடல் உயரம் ஏறும் !
    பருவக் காலச் சுழற்சி, சுதித்
    தாளம் மாறிப்
    வேளாண்மை தவறிப் போகும் ,
    கோடை நீடிக்கும்,
    குளிர்காலப் பனிப் பாறைகள்
    வளராமல் குள்ள மாகும்
    துருவ முனைகளில் !
    நிலப்பகுதி நீர்மய மாகும் !
    நீர்ப்பகுதி வறண்டு போகும் !
    மனித சமூகம் நாச மடைய,
    புனித வாழ்வு புழுதி யாக
    புகுந்து விட்டது,
    பூதச் சூட்டுப் பிரளயம் !

    http://mindblowingscience.com/latest-news/north-pole-ozone-hole-its-happening-again/

    Share
  • திருமால் திருப்புகழ் (22)

    கிரேசி மோகன் krishna3xp

     
    —————————————
    தனதன தத்தன தனதன தத்தன
    தனதன தத்தன….

    ———————————————————————————————–
    “மதுவன சுக்ரிவ அனுமகு ரக்கினம் scan0098
    விழுசர ணக்கழல்-உடையோனே
    மனைவியின் கற்பினில் மகிழ்வுற புட்பக
    மதில்மனை புக்கிடும் -ரகுராமா

    யதுகுல விக்ரக ,யமுனைந திக்கரை
    யவனவ னப்பென -இடையாயர்
    மகளிர்அ ணைத்திட மழலைமு கத்தோடு
    குழலைஇ சைத்திடும் -நவநீதா

    பதவிரல் நெற்றியை கனகுமு றித்திட
    படவிட மெத்தையில் -படர்வோனே
    ரமணரு ரைத்திடு ரகசிய வித்தையின்
    ரசிகனெ னக்கது -எளிதாக

    விதமருள் உக்கிர சுதர்சன சக்கிரம் ,
    வலம்புரி சத்தமும் -கதையோடு
    சிலையுடை கத்தியும் கமலசு பிட்சமும்
    கரமதில் உற்றிடு -பெருமாளே”….
    ————————————————————————————————————————

     

     படங்களுக்கு நன்றி:

    http://spiritualmessenger.forumotion.com/t484-the-ramayana-part-6  

    Share
  • திருமால் திருப்புகழ் (21)

     

    கிரேசி மோகன்

     

    திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள்
    திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள்

     

    தனத்தந்த தான தனத்தந்த தான
    தனத்தந்த தான -தனதான….

    —————————————————————————————————————————-

    “நரைத்தெங்கும் சோகை எழக்கம்பு தேவை images (2)
    விறைத்தங்கம் பாயில் -விழுநேரம்
    அரைக்கண்ணும் மூட அவச்சங்கு ஊத
    நடுச்சந்தி ஓலை -தனிலேகி

    அரிச்சந்த்ர கானில் அடைத்துன்னை போவார்
    அதற்கென்று வாடாய் -பரிகாரம்
    இதற்குண்டு, வானை அடைக்கின்ற சோணை
    சிவக்கன்று ராமன் -ரமணேசர்

    உரைக்கின்ற நானார் வழிச்சென்று மீள
    இடைக்கன்று மேய -குழலூதும்,
    மயிற்கொண்டை சூடி மழைக்கென்று கோவர்
    தனக்குன்று தாரி -அருள்வாயே

    அரிச்சிந்தை சேயின் அழைக்கின்ற போது
    வரக்கம்பம் வாழும் -நரசீயா
    மணப்பெண்மை ஜாம்ப வதிக்கென்று கோயில்
    திருத்தங்கல் மேவும் -பெருமாளே”

    ——————————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://wikimapia.org

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    உலகத்திலேயே மிகப் பெரிய வரத்தைப் பெற்றவர் யாரென்றால் உறக்கம் தேவைப்படும்போது அதை எளிதாக வரவழைத்துக்கொண்டு ஆனந்தமாக அனுபவித்து உறங்குபவர்தாம்.

    உறக்கம் பெரியதொரு சுகம்தான். உறக்கத்தில் மட்டுமே நாம், நம்மை மறக்கமுடியும். உறக்கம் இறைவன் உயிரினத்துக்குத் தந்த பரிசு.அதை சத்விநியோகம் செய்து கொள்வது கூட பெருங்கலைதான். ஏனெனில் மனிதகுலம் பெரும்பாலும் இந்தக் கலையைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல்தான் தவிக்கிறது. அதற்கேற்றாற்போலத்தான் இந்த நவீன காலமும் காலத்தின் மாற்றத்தில் தோன்றிய வசதிகளும் மனித குலத்தை உறக்கத்தின் பக்கம் போகாமல் அலைக்கழிக்கிறது. இயற்கை முறையில் வரவேண்டிய உறக்கம் செயற்கை முறையில் தருவிக்கப்பட்டு அதனால் கிறக்கம் மட்டுமே கிடைக்கிறது என்பதும் நிஜம்தானே..

    வாழ்க்கையில் எது குறைந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். உறக்கம் குறைந்தால் நிச்சயம் உடல்நிலைக்குக் கெடுதல்தான். உறக்கம் குறைந்தால் முதலில் எரிச்சல்தான் வரும். நம் மனநிலையும் கெடும்.. இப்படிப்பட்ட உறக்கத்தைப் பற்றி நந்திதா அவர்கள் வேறு வகையில் வல்லமையில் எழுதியது மிகச் சரியாக மனதுக்குப்பட்டது. இதோ நந்திதா அவர்களின் எழுத்தில் உறக்கத்தின் மகிமையைக் கொஞ்சம் படியுங்களேன்.

    உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டியது மலை போல் இருக்க என்னை சீண்டிப் பார்ப்பாய். உன் பிடியிலிருந்து விலக பல முயற்சிகள், பல உத்திகள், எல்லாம் பயன் அற்றுப் போயின.சில சமயம் எனது பலஹீனத்தைப் பயன் படுத்த உன் சாகசத்தில் பலியானேன்.

    பரிக்ஷை சமயத்தில் நான் இப்படி பலியாவதைக் கண்டு என் அம்மா பதறி எனக்கு காவலாக இருந்திருக்கிறாள். அவளைக் கண்டு நீ ஓடி ஒளிந்து கொண்டாய். பரிக்ஷைக்குப் பிறகு, பள்ளி திறக்கும் வரை நாம் இருவரும் உல்லாச பறவைகளாகி கனவு உலகில் பறந்து மெய் மறந்து இருந்தோம்.

    சே! மறுபடியும் பள்ளி திறந்து படிப்பு, அதன் பிறகு, மேல் படிப்பு. பட்டங்கள். பொறுப்புகள் சேர சாதிக்க நினைத்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கொஞ்சம் உன்னிடமிருந்து விலகினேன். ஏதாவது ஒன்றைப் பெற வேண்டுமானால் மற்றொன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது இயற்கையின் விதி. சத்தியமாக நிரந்தரமாக உன்னை விட்டு விலக நினைக்கவில்லை. தற்காலிகமாகத்தான். சாதனைகள் வெற்றிக​ளைக் குவித்தன. பெரிய வேலைகள் என் வீடு தேடி வந்தன. என் வேலையில் நான் கண்ட வெற்றி, அதைத் தொடர்ந்த பெருமைகள், பரிசுகள், ​கெளரவங்கள், பட்டங்கள் என்னை வெறியனாக்கியது. இப்பெருமைக​ளை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள பேராசைக் கொண்டேன். என் பதவி பணம், வீடு, வாகனம், ஆடம்பர வாழ்க்கையை அள்ளிக் குவித்தன. அதே சமயம் நமக்குள் ஏற்பட்ட விலகல், விரிசலாகி நிரந்தரமாக உன்னை முழுவதுமாக இழந்து தொலைத்தும் விட்டேன். உன்னை மதிக்காத என்னை உதறி விட்டு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு என்னைப் பழி வாங்குகிறாய். உன் அருமையை இப்பொழுது உணர்ந்து விட்டேன். நீ கொடுத்த தண்டனை போதும்.

    நீ முழுவதுமாக என்னை விட்டு விலக என் உடல் கெட்டு விட்டது. உணவு செரிப்பது இல்லை. முன் போல் அலுவலத்தில் வேலையைக் குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் மேலதிகாரிகள் என்னை விட்டு வேறு ஆட்களைத்தேடி செல்ல எனக்கு வேலைப் போய்விட்டது. நண்பர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.

    அம்மா பாவம். எவ்வளவோ முயற்சி எடுக்கிறாள். நான் பழைய நிலைக்கு வர தினமும் கோவில், அர்ச்சனை, சதா வீட்டில் மந்திர ஓசை, யாகம் ஏன் மாந்திரீகம் கூட பார்த்து விட்டாள். பெரிய பெரிய டாக்டர்களிடமும் சென்றேன். என்னைச் சுற்றி மருந்துகள். இப்பொழுது 24 மணி நேரம் படுக்கையில் புரளுகிறேன்.

    கண்ணாடியில் என் முகம்……. எனக்கே சகிக்கவில்லை. கண்கள் சிவந்து கன்னங்கள் ஒட்டி, தோல் சுருங்கி…நடந்தால் தள்ளாட்டம். சில சமயம் ஆள் மாறாட்டமாகத் தெரிகிறது. இதற்கு காரணம் நீதான். நீயேதான். உன்னை விட்டு விலகியதற்கு நீ கொடுக்கும் தண்டனை. கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்குப் பதில் ஒரே அடியாக கொன்று விடு.

    ஐய்யோ.. நான் படும் அவஸ்தையைப் பார். எங்கே போய் விட்டாய். உன்னை எங்கே போய் தேடுவது. என் ஆஸ்தி பூராவும் செலவு செய்தால்கூட உன்னைக் கண்டு பிடித்துக் கொடுக்க முடியாது போல் இருக்கிறதே…

    டாக்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் கூறுவது.. நான் படும் அவஸ்தைக்கு உன் பிரிவே காரணம். எனக்கும் புரிகிறது. ஆனால் உனக்குப் புரிய வில்லையே. அம்மாவின் மடிதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நீ இல்லாததால் அது கூட முள்ளாய்த் தெரிகிறது இப்பொழுது.

    கெஞ்சிக் கேட்கிறேன். வந்து விடு.

    அழகான எழுத்தில் உறக்கத்தின் பெருமையை வடித்த நந்திதா அவர்கள் இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: ஞா. கலையரசியின் –

    1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம் மிஸ் இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்றும் 1984 ல் கே பிரியான்ட் (Gay Bryant) என்பவர் தாம், ஓர் இண்டர்வியூவில் இவ்வாறு சொன்னார் என்றும்,இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

    கண்ணாடிக் கூரை என்றால் என்ன?

    பெரிய வணிக நிறுவனங்களிலும், கம்பெனிகளிலும் மிக உயர்ந்த பதவிகளுக்கான ஏணியில் ஓரளவுக்குப் மேல் ஆண்களுக்கிணையாக பெண்களால் ஏற முடியாமல், தடுக்கும் நிலையைத் தான் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.

    Share
  • புன்னகையை விற்பவளின் கதை

    திலினி தயானந்த

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.

    இரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன்? தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய ‘வணக்கம்’ சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.

    அதனை விருப்பத்துடன்தான் செய்கிறேனா என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அழகாகப் புன்னகைத்தபடியே இருந்த போதிலும் அப் புன்னகைக்குள் கண்ணீரும் வெளியே குதித்திடவென அலைபாய்கிறது. இச் சமூகத்தில் மிகவும் கௌரவமாக மதிக்கப்படும் ஒரு தொழிலை நான் செய்கிறேன். எனினும் சிலர் இதனை மோசமான கோணத்தில் பார்க்கிறார்கள். நிறுவனத்துக்குள் பிரவேசிக்கும் தலைவாசலிலிருந்து புன்னகையை விற்பது உண்மைதான். உங்களை எமது நிறுவனம் பக்கம் ஈர்க்க நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் எனது தொழில். இலகுவானதும் நிம்மதி தரக்கூடியதுமான தொழிலென நீங்கள் எண்ணிய போதிலும், இது உண்மையில் இலகுவானதா என்ன? புன்னகைக்கக் காசு செலவழியாது என ஒரு பேச்சுக்குச் சொல்வார்கள். எனினும் நான் புன்னகைக்க எனக்கு பணம் கொடுக்கப்படுகிறது. நான் புன்னகைத்தால் மாத்திரமே எனது நிலைப்பாடு உறுதியாகிறது. வாழ்க்கையை வாழ்ந்து செல்லவே இன்று நான் புன்னகைக்கிறேன்.

    சில மாதர்கள், தங்களது காரியங்களை ஆற்றிக் கொள்ளவென கனவான்களின் கைகளில் தொங்கிப் புன்னகைக்கிறார்கள். எனினும் எனக்குக் கவலையில்லை. நான் எனது தொழிலைச் செய்கிறேன். பொருளாதாரத்தை வளம் மிக்கதாக்கும் செயன்முறை இது. யார் எவ்விதத்தில் அதனை நோக்கிய போதும், மாதக் கடைசியில் கிடைக்கப் போகும் ஊதியத்தைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். அதற்காகத்தான் நான் புன்னகைக்கிறேன்.

    Share
  • வேஷஙகள்!…

    விமலா ரமணி

    காயத்திரி வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.வாசலில் ஒரு விநோதப் பிச்சை .ராமர் வேடம் போட்டுக் கொண்டு தலையில் அட்டை கிரீடம் இடையில் அட்டை வாள் பளப்பளா உடை ஜரிகை பஞ்சக்கச்சம் ….முகமெல்லாம் நீல நிறப்பூச்சு ராமர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
    வீதியில் போகிற சிலர் அந்த ராமனை வணங்கினார்கள். சிலர் ராமர் நீட்டிய கரத்தில் காசு போட்டார்கள்.
    அஞசன வண்ணன்,அயோத்தி ராமன் பாவம் அனாதையாய் நடுவீதியில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தார்.
    வில் ஏந்திய கரத்தில் பிச்சை பாத்திரம்,அபய ஹஸ்த முத்திரைக்குப் பதிலாக யாசிக்கும் முத்திரை….. கொடுமை…..
    இவளுக்குக் கோபமும் வேதனையும் ஒருங்கே வந்தன.
    மனிதர்களின் கடவுள் உணர்வை மத நம்பிக்கைகளை இப்படி தன் சுயநலத்திற்காகப் பயன் படுத்துவதா?பசி கொடியது தான். அதற்காகப் பரந்தாமனை அவமானப்படுத்துவதா?
    கம்பீரமான யானையை காசு வாங்க வைத்தேர்ம்.பிச்சை எடுக்க வைத்தோம்.யானைக்கு மட்டும் தன் பலம் தெரிந்திருந்தால் இப்படி அடிமைப் பட்டுக் கிடக்குமா?
    கடவுள் படைப்பில் மனிதன் புத்திசாலி,அதனால் தான் அவன் கடவுளையே காயப்படுத்துகிறான்.
    ”காயத்திரி ”
    விசுவின் குரல் கோபமாக ஒலிக்கிறது.
    ”எங்கே போய்த் தொலைஞ்சே?எனக்கு ஆபீஸுக்கு லேட்டாச்சு
    என் டை எங்கே?ஷர்ட்டுக்கு இஸ்திரி போட்டாச்சா?”
    வரிசையாகக் கேள்விகள்.
    இவனும் ஒரு விதத்தில் அதிகார வர்க்கம் தர்ன்.
    பெண் பார்க்க வந்தபோது என்ன சொன்னான்?
    ”எனக்கு என் மனைவி சம்பாதித்துப் போட வேண்டாம். குடும்பத் தலைவியாய் இல்லத்தரசியாய் இருந்தால் போதும்.”
    பெண்களுக்கு ரொம்பச் சுலபமான மலர்க் கிரீடம்.
    இவள் அம்மா தான் மகிழ்ந்து போனாள்
    .‘மாப்பிள்ளைக்கு ரொம்ப நல்ல மனசு.உன் உழைப்பை அவர் விரும்பல்லை.உன்னோட அன்பு தான் அவர் கேட்கறார்.”
    அப்போதே மாப்பிள்ளையாக்கி குதூகலித்தவள் அவள் தாய்.
    ”நீ வேலைக்குப் போக வேண்டாம். வேலையை ரிசைன் பண்ணிடு”
    என்றான் விசு
    இது அன்பா அல்லது இவள் பலத்தை முறியடிக்கும் முயற்சியா?
    இது அதிக சுதந்ததிரமா அல்லது இவள் சிறகுகளைப் பிய்த்தெறியும் சாமர்த்தியமா?
    ”நாலு பேர் எதிரே நீ கைகட்டிச் சேவகம் பாக்கறது எனக்குப் பிடிக்கல்லை…..”
    காயத்திரிக்குச் சிரிப்பு வந்தது. இவனுக்கு மட்டும் பணி புரிந்தால் போதுமா?
    ஆனாலும் இவள் தன் கருத்துக்களைச் சொல்லவில்லை.
    பெண்களக்குக் கல்விச் சுதந்திரமும் பொருளாதாரச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் தேவை என்று நினைப்பவள் இவள்.
    ஒரு பெண்ணின் இந்த அடையாளங்களை அழிக்கக் கூடாது என்று நினைப்பவள் இவள்.
    தன் அடையாளங்களை இழந்து வெறும் மனைவியாக மட்டும் வாழ முடியுமா ? என்று தோன்றியது.
    வண்ண வண்ணச் சிறகுகுளை வைத்திருக்கும் பறவைக்குச் சிறகுகள் ஒரு அடையாளம்.
    தன் வண்ணச்சிறகுகளை இழந்தால் அது பறவையல்ல வெறும் புழு…
    இவள் பறவையா அல்லது புழுவா?
    வானத்தில் பறக்கிற வல்லூறுகளிடமிருந்து இவளைக் காப்பாற்றப் போகிற சிபிச் சக்கிரவர்த்தியா இவன்?
    அல்லது அந்தப் பறவையையே பிரியாணி போடுகிற பரோட்டா
    மாஸ்டரா?
    தன் எதிர்காலக் கணவரைப் பற்றி இப்படித் தவறாக நினைப்பது கூடாது என்று இவள் பேசாமல் இருந்தாள்
    ஆரம்பத்தில்.திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்தபோது எல்லாமே நன்றாகத் தான் இருந்தது. மாமியாரின் அன்பும் கணவனின் நேசமும் இதயத்திற்கு இதமளித்தது.
    ஆனாலும் ஏதோ ஒன்று இடறுகிற மாதிரி….
    உள்ளூராக இருப்பதால் தன் மகளைப் பார்க்க இவள் தாய் அவ்வப்போது வருவதுண்டு.
    ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு கொஞசம் கொஞ்மாக மங்கிய உணர்வு.
    ”வாங்க சம்பந்தியம்மா ”என்று ஆரம்பத்தில் அழைத்த இவள் மாமியார் குரல் நாளடைவில் அடைத்துப் போயிற்று.
    அது கூடப் பரவாயில்லை.அவள் தாயின் தலையைக் கண்டதும்
    ”ஆ… வந்துட்டா பெரிய புள்ளைப் பாசம்…அப்படி பாசமா இருந்தா
    பொண்ணை ஏன் கட்டிக் கொடுத்தாங்க?”
    மாமியார்க்காரியின் கிசு கிசுத்த குரல்…
    இவளால் சொல்லவும் முடியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை…
    கரு சுமந்து உயிர் கொடுத்த தாயின் மனத்தை நோகச் செய்ய இவள் விரும்பவில்லை..
    ஒரே மகள் பாசம் கொட்டி வளர்த்தவள்,தனி மனுஷியாக இருந்து
    அத்தனை சங்கடங்களையும் சந்தித்தவள்.
    கணவனை இழந்தபின் புகுந்த வீட்டாரால் ஏமாற்றப் பட்டும் கூட அதைப் பற்றி கவலைப்படாமல் தன் தாய்மைக்குரிய பணியைச் செய்து முடித்தவள்.
    மாதந்தோறும் இவள் அலுவலகத்திலிருந்து வரும் போது தான் தாய்க்காக ஸ்வீட் வாங்கி வருவாள்.
    ”எதுக்கும்மா ஸ்வீட்?எனக்கு ஏற்கனவே ரத்தத்துலே சர்க்கரை இருக்கு.உன்னைப் பார்த்துட்டே இருந்தாப் போதும் வேற எதுவும்
    வேண்டாம்.”
    கன்றைத் தொடர்ந்து செல்லும் தாய்ப்பசு அவள்.
    அதனால் தான் தன் மகளை அடிக்கடி பார்க்க வேண்டும் என்பதற்காக உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்தவள்.
    எட்ட இருந்தாலும் கிட்ட இருந்தாலும் உறவுகள் என்பது உடல்களின் வெளி அடையாளம் மட்டும் அல்ல..
    அது உணர்வுகளின் சங்கமம்.
    இப்படிப் பட்ட தாயைப் பார்த்து இனி என்னைப் பார்க்க வராதே என்று கூற முயுமா என்ன?
    இவள் அலுவலகம் போனால் போகிற வழியில் தன் தாயைச் சந்தித்துவிட்டு வந்துவிட முடியும்…கோவிலுக்குப் போகிறேன் என்று கிளம்பினால் கூடவே மாமியாரும் கிளம்பி விடுகிறாள்.
    இவளுக்காக பூ பழம் வெற்றிலை பலகாரம் என்று பொருட்களைச் சுமக்க மாட்டாமல் சுமந்து வரும் தன் தாயைப் பார்க்க இவளுக்குப் பரிதாபமாக இருக்கும்.
    இந்தப் பொருட்களின் சுமையைவிட அவள் இதயம் சுமக்கும்
    சுமையை இவள் அறிவாள்.
    அது பாசச் சுமை அது இவளுக்கு மட்டுமே தெரியும்.
    அன்று…………
    வாசலைப் பார்ததபடி இவள் அமர்ந்ததிருந்த போது,,,,,
    அந்த ராமர் வேடப் பிச்சைக்காரன் வந்தான்.
    ”இந்தாப்பா” இவள் அவனைக் கூப்பிட்டாள்.
    ராமர் பிச்சை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் ஓடி வந்தார்.
    ’குகனோடு ஐவரானோம் குன்று சூழ்வான் மகனோடு அறுவரானோம் ’ என்று அனைவரையும் தன் சகோதரனாக அணைத்துக் கொண்ட அந்த அயோத்தி ராமன்,
    இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்யம் என்று ராஜ்யத்தைக் கொடுத்த ராமன்
    இன்று கை நீட்டி பிச்சை கேட்க வந்திருக்கிறான்.
    ”இந்தாப்பா ஐம்பது ரூபாய் இனிமே இப்படி சாமி வேஷம் போட்டுட்டு பிச்சை எடுக்காதே. நீ உன்னையும் தாழ்த்திட்டுக் கடவுளையும் கேவலப்படுததாதே.”
    ”என்னம்மா பண்றது வயத்துப் பிழைப்பு..”
    ”பிழைப்புன்னா உழைக்கணும் பிச்சை எடுக்கக் கூடாது…”
    ”நான் உழைக்கத தயார்..யார் வேலை கொடுப்பாங்க?
    ”கொடுப்பாங்க. முதல்லே உன் மேலே ஒரு நம்பிக்கையை நீ உருவாக்கணும்..’
    ” அம்மா நான் பத்தாவது வரை படிச்சிருக்கேன்.என்னை மேலே படிக்க வைக்க எங்க ஆத்தாவால முடியல்லை அப்பன் ஒரு குடிகாரன்.எங்கம்மாவை குடிக்கக் காசு கேப்பான். தரலேன்னா அடிப்பான்.அம்மா சம்பாரிச்சுட்டு வந்த பணத்தைத் திருடுவான்.எங்கம்மா அவனோட சித்திரவதை தாங்காம ஒரு நாள் அரளிவிதையை அரைச்சு குடிச்சு செத்துட்டா…எங்கப்பன் இன்னொருத்தியைக் கட்டிட்டு அவளோட இருக்கான்.எத்தனையோ இடத்துக்கு வேலை தேடிப் போனேன் கிடைக்கல்லை…எங்கம்மா எப்பவுமே சாமி சாமின்னு கோவில் கோவிலா சுத்தும்…சாமியை நம்பு அவர் காப்பாத்துவார்னு சொல்லும்…அதனாலே அதனாலே நானே நானே சாமி ஆயிட்டேன்.இந்த ராமர் வேசம் கட்டறப்போ நான் என்னை ஒரு குடிகாரனோட மகனா நினைச்சுக்கறதில்லை…ஒரு ராசாதி ராசாவாத் தான் நினைச்சுக்கறேன்.இது தான் என் பலம்.இந்த வேசம் .சும்மா..இதுக்குள்ளாற நிசமா ஒரு பக்தன் இருக்கான் தாயி…நான் கடவுளைக் கேவலப்படுத்தல்லை…என்னைக் கேவலமான நிலைக்குக் கொண்டு போன அந்தக் கடவுளை நான் எப்பவும் நினைச்சுட்டே இருக்கேன்.கடவுள் கிட்டே இந்த வேசத்தோட பேசிட்டுத் தான் இருக்கேன்…”
    காயத்திரி அவனை வியப்புடன் பார்த்தாள்.
    இவன் ஒரு வேடதாரி தான்.ஆனால் இவனுள் இருக்கும் அந்த மனிதனை அவள் இப்போது தான் பார்க்கிறாள்.
    ”சரி..ரெண்டு நாள் கழிச்சு வா..உனக்கு வேலைக்கு ஒரு ஏற்பாடு செய்யறேன்.”
    அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்த போது மாமியார் பிலுபிலுவென்று இவளைப் பிடித்துக் கொண்டாள்.
    ”கண்ட கண்ட திருடனையெல்லாம் வீட்டுக்குள்ளே கூப்பிட்டு வேலை தரப் போறியா?முதல்லே அவன் வருவான்.அப்பறம் அவனோட கூட்டாளி வருவான்.எல்லாரையும் கொன்னுட்டு
    பணத்தை எல்லாம் திருடிட்டுப் போவான்.”
    நிறைய திகில் சீரியல் எல்லாம் பார்ப்பவள். அவள் சிந்தனை அப்படித் தான் இருக்கும்
    ’‘அத்தை” என இவள் சொல்ல ஆரம்பிப்பதற்குள் போன் ஒலித்தது. இவள் ரிசீவரை எடுத்தர்ள்.
    ”ஆஸ்பத்திரியிலிருந்து பேசறோம்…’
    பகீர் என்றது..ஒரு வாரமாக அம்மா இவளைப் பார்க்க வரவில்லை.ஒரு வேளை….?
    இவள் நினைத்தது சரிதான்.அவள் அம்மா வீட்டில் மயங்கி விழுந்திருக்கிறாள்.பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டு இவளின் தொலைபேசி எண்ணைத் தந்திருககிறார்கள்.
    இவள் ஓடினாள்.
    ஒரு வாரம்….
    மரியாதைக்குக கூட விசுவோ அவன் தாயோ அவளை வந்து பார்க்கவில்லை…போன் செய்து விசாரிக்கவில்லை..
    தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போன கோபம் விசுவிற்கு இருக்கும்.

    அன்று….?
    விசு செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான்.
    காயத்திரி போய் இரு வாரங்களுக்கு மேலாகிவிட்டது
    இவன் தாயின் புலம்பல் வேறு..இவன் ஏக டென்ஷனில் இருந்த நேரம்….
    அப்போது வாசலில்….”ஐயா” என்ற குரல்
    யாரோ ஒருவன் கையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்தான்.
    ”யாருப்பா நீ?”
    ”என் பேர் மாரியப்பனுங்க,,அம்மா எனக்கு வேலை தரதா சொன்னாங்க அம்மாவைக் காணவே இல்லீங்களே…”
    ”டேய் விசு அவன் ஒரு பிச்சைக்காரன் ..வேஷம் கட்டறவன். ஜாக்கிரதை”
    ஜன்னல் வழியே அம்மா கிசுகிசுத்தாள்.
    போன் கூப்பிட்டது.
    இவன் எழுந்து உள்ளே போனான்.
    காயத்திரி தான் பேசினாள்.
    ”நான் காயத்தரி”
    ”உம் தெரியுது..இங்கே திரும்பி வர உத்தேசம் இல்லையா?”
    சற்று நேரம் போன் மௌனித்தது.
    ”அம்மா பிழைச்சு எழுந்ததே மறு பிழைப்பு..”
    ”வயசானா ஏதாவது அப்படித் தான் ஆகும்..அதுக்காக…”
    ”அதுக்காகத் தான் நான் அம்மா கூடவே இருக்கணும்..”
    ”உங்கம்மா கோமாவிலே ஆயுசு பூராவும் இருந்தா நீ இங்கே வரவே மாட்டியா?”
    ”உங்க வாழ்த்துக்கு நன்றி.உங்கம்மா எப்படி இருக்கான்னு ஒரு மனிதாபிமானக் கேள்வி இல்லை.ஆனா நான அங்கே வரது பத்தித் தான் உங்க கவலை..இல்லையா?”
    ”இங்கே குடும்பத்தைப் பாத்துக்கணும்,…அம்மா..”
    ”ஆ.. அது தான்..இங்கேயும் ஒரு குடும்பம் இருக்கு..இங்கேயும் ஒரு அம்மா இருக்காங்க…அம்மாவுக்கு டெஸ்ட் பண்ணினதுலே சோடியம் லெவல் ஏற்ற இறக்கமா இருக்கு அது கீழே இறங்கும் போது மயக்கம் வந்துடறது..ஒத்தர் பக்கத்திலேயே இருந்து பாத்துக்க வேண்டி இருக்கு,லெவல் சரியானா..”
    ”ஒரு நர்ஸைப் போடு நீ புறப்பட்டு வா”
    காயத்திரி சிரிக்கும் சப்தம் கேட்கிறது.
    ”உங்கம்மாவைக் கூட்டிட்டு இங்கே வான்னு சொல்ல உங்களாலே முடியல்லை..நர்ஸைப் போடச் சொல்றீங்க..நான் இல்லேன்னர் என்ன வேற யாரையாவது கூட்டிட்டு வந்து குடும்பத்தைப் பாத்துக்கச் சொல்லுங்களேன்..”
    ”ஏய் ரொம்ப அதிகமாப் பேசறே,…”
    ’‘இல்லீங்க இப்பத்ததான் என்னை உணர்ந்து பேசறேன்.என் பலம் தெரிஞசு பேசறேன்.நான் உங்களுக்காகப் போட்ட மனைவிங்கிற அரிதாரத்தை அழிச்சுட்டுப் பேசறேன்.நான் மனைவி மட்டும் இல்லை ஒரு மகளும் கூட..மாறி வரும் இந்த வடிவங்கள்லே என் கடமையைத் தெரிஞசு பேசறேன்.பெண்மைங்கிற என் சுய அடையாளத்தைப் புரிஞசுட்டுப் பேசறேன்.என்னோட அம்மாவுக்கு முற்றிலும் குணமாற வரை நான் இங்கே தான் இருப்பேன்..அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன்.”
    விசு சிரித்தான்.
    ”பணத்துக்கு என்ன பண்ணப் போறே? எங்கிட்டடே தானே கை நீட்டணும்?”
    ”ராமர் வேஷம் போட்டுட்டுப் பிச்சை எடுக்கற ஒரு பிச்சைக் காரனுக்கு இருக்கிற ஆத்ம சிந்தனை கூட உங்களுக்கு இல்லாதது கஷ்டம்…நான் என் வேலையை ராஜீனாமா செய்யல்லை…நீண்ட கால விடுப்புத் தான் எடுத்தேன் நான் வேலையிலே சேர்ந்துட்டேன்.என்னைத் தேடி ஒரு பிச்சைக் காரன் வருவான்,அவனை இங்கே அனுப்பி வையுங்க.இல்லேனாக் கூடப் பரவாயில்லை..தெருத் தெருவா.
    அவன் வேஷம் கட்டிப் பிச்சை எடுக்கும் போது நான் அவனைப் பாத்துக்கறேன்….அவனைக் கண்டுபிடிக்கறது சுலபம்..”
    ”ஒரு பிச்சைக் காரனுக்குப் போய்..”
    ”ப்ளீஸ்,,அதிப் படிப்பில்லாத டப்பாவாலாக்களால் ஒரு சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி சரித்திரம் படைக்க முடியும் என்றால் இந்தப் பிச்சைக் காரனையும் சரித்திரம் படைக்க வைக்கலாம்..முடிஞசா எனக்காகக் காத்திருங்க..நீங்க போட்ட எந்த வேஷமும் சரியில்லை…மகன் கணவன்…எந்த வடிவமும் சரியில்லை,,,,இந்தப் போலி வேஷங்களைக் கலைச்சுட்டு ஒரு மனுஷனா வாழப் பாருங்க”
    ”போதும் உபதேசம் நீ என் ஒய்ப்,,தெரியுமா?”
    ’ஆமாம் தலை குனிந்து தாலி வாங்கினவள் த்ர்ன். ஆனால் நான் இப்போ தலை நிமிர்ந்துட்டேன்.. பை ”
    விசு பிரமித்து நிற்க ….. வாசலில்,…..?
    அந்தப் பிச்சைக்காரன் தன் பையிலிருந்து
    அட்டைக் கிரீடம் உடைவாள் ஜிகினா உடை என்று ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறான்.

    Share