விமலா ரமணி

காயத்திரி வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.வாசலில் ஒரு விநோதப் பிச்சை .ராமர் வேடம் போட்டுக் கொண்டு தலையில் அட்டை கிரீடம் இடையில் அட்டை வாள் பளப்பளா உடை ஜரிகை பஞ்சக்கச்சம் ….முகமெல்லாம் நீல நிறப்பூச்சு ராமர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
வீதியில் போகிற சிலர் அந்த ராமனை வணங்கினார்கள். சிலர் ராமர் நீட்டிய கரத்தில் காசு போட்டார்கள்.
அஞசன வண்ணன்,அயோத்தி ராமன் பாவம் அனாதையாய் நடுவீதியில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தார்.
வில் ஏந்திய கரத்தில் பிச்சை பாத்திரம்,அபய ஹஸ்த முத்திரைக்குப் பதிலாக யாசிக்கும் முத்திரை….. கொடுமை…..
இவளுக்குக் கோபமும் வேதனையும் ஒருங்கே வந்தன.
மனிதர்களின் கடவுள் உணர்வை மத நம்பிக்கைகளை இப்படி தன் சுயநலத்திற்காகப் பயன் படுத்துவதா?பசி கொடியது தான். அதற்காகப் பரந்தாமனை அவமானப்படுத்துவதா?
கம்பீரமான யானையை காசு வாங்க வைத்தேர்ம்.பிச்சை எடுக்க வைத்தோம்.யானைக்கு மட்டும் தன் பலம் தெரிந்திருந்தால் இப்படி அடிமைப் பட்டுக் கிடக்குமா?
கடவுள் படைப்பில் மனிதன் புத்திசாலி,அதனால் தான் அவன் கடவுளையே காயப்படுத்துகிறான்.
”காயத்திரி ”
விசுவின் குரல் கோபமாக ஒலிக்கிறது.
”எங்கே போய்த் தொலைஞ்சே?எனக்கு ஆபீஸுக்கு லேட்டாச்சு
என் டை எங்கே?ஷர்ட்டுக்கு இஸ்திரி போட்டாச்சா?”
வரிசையாகக் கேள்விகள்.
இவனும் ஒரு விதத்தில் அதிகார வர்க்கம் தர்ன்.
பெண் பார்க்க வந்தபோது என்ன சொன்னான்?
”எனக்கு என் மனைவி சம்பாதித்துப் போட வேண்டாம். குடும்பத் தலைவியாய் இல்லத்தரசியாய் இருந்தால் போதும்.”
பெண்களுக்கு ரொம்பச் சுலபமான மலர்க் கிரீடம்.
இவள் அம்மா தான் மகிழ்ந்து போனாள்
.‘மாப்பிள்ளைக்கு ரொம்ப நல்ல மனசு.உன் உழைப்பை அவர் விரும்பல்லை.உன்னோட அன்பு தான் அவர் கேட்கறார்.”
அப்போதே மாப்பிள்ளையாக்கி குதூகலித்தவள் அவள் தாய்.
”நீ வேலைக்குப் போக வேண்டாம். வேலையை ரிசைன் பண்ணிடு”
என்றான் விசு
இது அன்பா அல்லது இவள் பலத்தை முறியடிக்கும் முயற்சியா?
இது அதிக சுதந்ததிரமா அல்லது இவள் சிறகுகளைப் பிய்த்தெறியும் சாமர்த்தியமா?
”நாலு பேர் எதிரே நீ கைகட்டிச் சேவகம் பாக்கறது எனக்குப் பிடிக்கல்லை…..”
காயத்திரிக்குச் சிரிப்பு வந்தது. இவனுக்கு மட்டும் பணி புரிந்தால் போதுமா?
ஆனாலும் இவள் தன் கருத்துக்களைச் சொல்லவில்லை.
பெண்களக்குக் கல்விச் சுதந்திரமும் பொருளாதாரச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் தேவை என்று நினைப்பவள் இவள்.
ஒரு பெண்ணின் இந்த அடையாளங்களை அழிக்கக் கூடாது என்று நினைப்பவள் இவள்.
தன் அடையாளங்களை இழந்து வெறும் மனைவியாக மட்டும் வாழ முடியுமா ? என்று தோன்றியது.
வண்ண வண்ணச் சிறகுகுளை வைத்திருக்கும் பறவைக்குச் சிறகுகள் ஒரு அடையாளம்.
தன் வண்ணச்சிறகுகளை இழந்தால் அது பறவையல்ல வெறும் புழு…
இவள் பறவையா அல்லது புழுவா?
வானத்தில் பறக்கிற வல்லூறுகளிடமிருந்து இவளைக் காப்பாற்றப் போகிற சிபிச் சக்கிரவர்த்தியா இவன்?
அல்லது அந்தப் பறவையையே பிரியாணி போடுகிற பரோட்டா
மாஸ்டரா?
தன் எதிர்காலக் கணவரைப் பற்றி இப்படித் தவறாக நினைப்பது கூடாது என்று இவள் பேசாமல் இருந்தாள்
ஆரம்பத்தில்.திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்தபோது எல்லாமே நன்றாகத் தான் இருந்தது. மாமியாரின் அன்பும் கணவனின் நேசமும் இதயத்திற்கு இதமளித்தது.
ஆனாலும் ஏதோ ஒன்று இடறுகிற மாதிரி….
உள்ளூராக இருப்பதால் தன் மகளைப் பார்க்க இவள் தாய் அவ்வப்போது வருவதுண்டு.
ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு கொஞசம் கொஞ்மாக மங்கிய உணர்வு.
”வாங்க சம்பந்தியம்மா ”என்று ஆரம்பத்தில் அழைத்த இவள் மாமியார் குரல் நாளடைவில் அடைத்துப் போயிற்று.
அது கூடப் பரவாயில்லை.அவள் தாயின் தலையைக் கண்டதும்
”ஆ… வந்துட்டா பெரிய புள்ளைப் பாசம்…அப்படி பாசமா இருந்தா
பொண்ணை ஏன் கட்டிக் கொடுத்தாங்க?”
மாமியார்க்காரியின் கிசு கிசுத்த குரல்…
இவளால் சொல்லவும் முடியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை…
கரு சுமந்து உயிர் கொடுத்த தாயின் மனத்தை நோகச் செய்ய இவள் விரும்பவில்லை..
ஒரே மகள் பாசம் கொட்டி வளர்த்தவள்,தனி மனுஷியாக இருந்து
அத்தனை சங்கடங்களையும் சந்தித்தவள்.
கணவனை இழந்தபின் புகுந்த வீட்டாரால் ஏமாற்றப் பட்டும் கூட அதைப் பற்றி கவலைப்படாமல் தன் தாய்மைக்குரிய பணியைச் செய்து முடித்தவள்.
மாதந்தோறும் இவள் அலுவலகத்திலிருந்து வரும் போது தான் தாய்க்காக ஸ்வீட் வாங்கி வருவாள்.
”எதுக்கும்மா ஸ்வீட்?எனக்கு ஏற்கனவே ரத்தத்துலே சர்க்கரை இருக்கு.உன்னைப் பார்த்துட்டே இருந்தாப் போதும் வேற எதுவும்
வேண்டாம்.”
கன்றைத் தொடர்ந்து செல்லும் தாய்ப்பசு அவள்.
அதனால் தான் தன் மகளை அடிக்கடி பார்க்க வேண்டும் என்பதற்காக உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்தவள்.
எட்ட இருந்தாலும் கிட்ட இருந்தாலும் உறவுகள் என்பது உடல்களின் வெளி அடையாளம் மட்டும் அல்ல..
அது உணர்வுகளின் சங்கமம்.
இப்படிப் பட்ட தாயைப் பார்த்து இனி என்னைப் பார்க்க வராதே என்று கூற முயுமா என்ன?
இவள் அலுவலகம் போனால் போகிற வழியில் தன் தாயைச் சந்தித்துவிட்டு வந்துவிட முடியும்…கோவிலுக்குப் போகிறேன் என்று கிளம்பினால் கூடவே மாமியாரும் கிளம்பி விடுகிறாள்.
இவளுக்காக பூ பழம் வெற்றிலை பலகாரம் என்று பொருட்களைச் சுமக்க மாட்டாமல் சுமந்து வரும் தன் தாயைப் பார்க்க இவளுக்குப் பரிதாபமாக இருக்கும்.
இந்தப் பொருட்களின் சுமையைவிட அவள் இதயம் சுமக்கும்
சுமையை இவள் அறிவாள்.
அது பாசச் சுமை அது இவளுக்கு மட்டுமே தெரியும்.
அன்று…………
வாசலைப் பார்ததபடி இவள் அமர்ந்ததிருந்த போது,,,,,
அந்த ராமர் வேடப் பிச்சைக்காரன் வந்தான்.
”இந்தாப்பா” இவள் அவனைக் கூப்பிட்டாள்.
ராமர் பிச்சை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் ஓடி வந்தார்.
’குகனோடு ஐவரானோம் குன்று சூழ்வான் மகனோடு அறுவரானோம் ’ என்று அனைவரையும் தன் சகோதரனாக அணைத்துக் கொண்ட அந்த அயோத்தி ராமன்,
இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்யம் என்று ராஜ்யத்தைக் கொடுத்த ராமன்
இன்று கை நீட்டி பிச்சை கேட்க வந்திருக்கிறான்.
”இந்தாப்பா ஐம்பது ரூபாய் இனிமே இப்படி சாமி வேஷம் போட்டுட்டு பிச்சை எடுக்காதே. நீ உன்னையும் தாழ்த்திட்டுக் கடவுளையும் கேவலப்படுததாதே.”
”என்னம்மா பண்றது வயத்துப் பிழைப்பு..”
”பிழைப்புன்னா உழைக்கணும் பிச்சை எடுக்கக் கூடாது…”
”நான் உழைக்கத தயார்..யார் வேலை கொடுப்பாங்க?
”கொடுப்பாங்க. முதல்லே உன் மேலே ஒரு நம்பிக்கையை நீ உருவாக்கணும்..’
” அம்மா நான் பத்தாவது வரை படிச்சிருக்கேன்.என்னை மேலே படிக்க வைக்க எங்க ஆத்தாவால முடியல்லை அப்பன் ஒரு குடிகாரன்.எங்கம்மாவை குடிக்கக் காசு கேப்பான். தரலேன்னா அடிப்பான்.அம்மா சம்பாரிச்சுட்டு வந்த பணத்தைத் திருடுவான்.எங்கம்மா அவனோட சித்திரவதை தாங்காம ஒரு நாள் அரளிவிதையை அரைச்சு குடிச்சு செத்துட்டா…எங்கப்பன் இன்னொருத்தியைக் கட்டிட்டு அவளோட இருக்கான்.எத்தனையோ இடத்துக்கு வேலை தேடிப் போனேன் கிடைக்கல்லை…எங்கம்மா எப்பவுமே சாமி சாமின்னு கோவில் கோவிலா சுத்தும்…சாமியை நம்பு அவர் காப்பாத்துவார்னு சொல்லும்…அதனாலே அதனாலே நானே நானே சாமி ஆயிட்டேன்.இந்த ராமர் வேசம் கட்டறப்போ நான் என்னை ஒரு குடிகாரனோட மகனா நினைச்சுக்கறதில்லை…ஒரு ராசாதி ராசாவாத் தான் நினைச்சுக்கறேன்.இது தான் என் பலம்.இந்த வேசம் .சும்மா..இதுக்குள்ளாற நிசமா ஒரு பக்தன் இருக்கான் தாயி…நான் கடவுளைக் கேவலப்படுத்தல்லை…என்னைக் கேவலமான நிலைக்குக் கொண்டு போன அந்தக் கடவுளை நான் எப்பவும் நினைச்சுட்டே இருக்கேன்.கடவுள் கிட்டே இந்த வேசத்தோட பேசிட்டுத் தான் இருக்கேன்…”
காயத்திரி அவனை வியப்புடன் பார்த்தாள்.
இவன் ஒரு வேடதாரி தான்.ஆனால் இவனுள் இருக்கும் அந்த மனிதனை அவள் இப்போது தான் பார்க்கிறாள்.
”சரி..ரெண்டு நாள் கழிச்சு வா..உனக்கு வேலைக்கு ஒரு ஏற்பாடு செய்யறேன்.”
அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்த போது மாமியார் பிலுபிலுவென்று இவளைப் பிடித்துக் கொண்டாள்.
”கண்ட கண்ட திருடனையெல்லாம் வீட்டுக்குள்ளே கூப்பிட்டு வேலை தரப் போறியா?முதல்லே அவன் வருவான்.அப்பறம் அவனோட கூட்டாளி வருவான்.எல்லாரையும் கொன்னுட்டு
பணத்தை எல்லாம் திருடிட்டுப் போவான்.”
நிறைய திகில் சீரியல் எல்லாம் பார்ப்பவள். அவள் சிந்தனை அப்படித் தான் இருக்கும்
’‘அத்தை” என இவள் சொல்ல ஆரம்பிப்பதற்குள் போன் ஒலித்தது. இவள் ரிசீவரை எடுத்தர்ள்.
”ஆஸ்பத்திரியிலிருந்து பேசறோம்…’
பகீர் என்றது..ஒரு வாரமாக அம்மா இவளைப் பார்க்க வரவில்லை.ஒரு வேளை….?
இவள் நினைத்தது சரிதான்.அவள் அம்மா வீட்டில் மயங்கி விழுந்திருக்கிறாள்.பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டு இவளின் தொலைபேசி எண்ணைத் தந்திருககிறார்கள்.
இவள் ஓடினாள்.
ஒரு வாரம்….
மரியாதைக்குக கூட விசுவோ அவன் தாயோ அவளை வந்து பார்க்கவில்லை…போன் செய்து விசாரிக்கவில்லை..
தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போன கோபம் விசுவிற்கு இருக்கும்.

அன்று….?
விசு செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான்.
காயத்திரி போய் இரு வாரங்களுக்கு மேலாகிவிட்டது
இவன் தாயின் புலம்பல் வேறு..இவன் ஏக டென்ஷனில் இருந்த நேரம்….
அப்போது வாசலில்….”ஐயா” என்ற குரல்
யாரோ ஒருவன் கையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்தான்.
”யாருப்பா நீ?”
”என் பேர் மாரியப்பனுங்க,,அம்மா எனக்கு வேலை தரதா சொன்னாங்க அம்மாவைக் காணவே இல்லீங்களே…”
”டேய் விசு அவன் ஒரு பிச்சைக்காரன் ..வேஷம் கட்டறவன். ஜாக்கிரதை”
ஜன்னல் வழியே அம்மா கிசுகிசுத்தாள்.
போன் கூப்பிட்டது.
இவன் எழுந்து உள்ளே போனான்.
காயத்திரி தான் பேசினாள்.
”நான் காயத்தரி”
”உம் தெரியுது..இங்கே திரும்பி வர உத்தேசம் இல்லையா?”
சற்று நேரம் போன் மௌனித்தது.
”அம்மா பிழைச்சு எழுந்ததே மறு பிழைப்பு..”
”வயசானா ஏதாவது அப்படித் தான் ஆகும்..அதுக்காக…”
”அதுக்காகத் தான் நான் அம்மா கூடவே இருக்கணும்..”
”உங்கம்மா கோமாவிலே ஆயுசு பூராவும் இருந்தா நீ இங்கே வரவே மாட்டியா?”
”உங்க வாழ்த்துக்கு நன்றி.உங்கம்மா எப்படி இருக்கான்னு ஒரு மனிதாபிமானக் கேள்வி இல்லை.ஆனா நான அங்கே வரது பத்தித் தான் உங்க கவலை..இல்லையா?”
”இங்கே குடும்பத்தைப் பாத்துக்கணும்,…அம்மா..”
”ஆ.. அது தான்..இங்கேயும் ஒரு குடும்பம் இருக்கு..இங்கேயும் ஒரு அம்மா இருக்காங்க…அம்மாவுக்கு டெஸ்ட் பண்ணினதுலே சோடியம் லெவல் ஏற்ற இறக்கமா இருக்கு அது கீழே இறங்கும் போது மயக்கம் வந்துடறது..ஒத்தர் பக்கத்திலேயே இருந்து பாத்துக்க வேண்டி இருக்கு,லெவல் சரியானா..”
”ஒரு நர்ஸைப் போடு நீ புறப்பட்டு வா”
காயத்திரி சிரிக்கும் சப்தம் கேட்கிறது.
”உங்கம்மாவைக் கூட்டிட்டு இங்கே வான்னு சொல்ல உங்களாலே முடியல்லை..நர்ஸைப் போடச் சொல்றீங்க..நான் இல்லேன்னர் என்ன வேற யாரையாவது கூட்டிட்டு வந்து குடும்பத்தைப் பாத்துக்கச் சொல்லுங்களேன்..”
”ஏய் ரொம்ப அதிகமாப் பேசறே,…”
’‘இல்லீங்க இப்பத்ததான் என்னை உணர்ந்து பேசறேன்.என் பலம் தெரிஞசு பேசறேன்.நான் உங்களுக்காகப் போட்ட மனைவிங்கிற அரிதாரத்தை அழிச்சுட்டுப் பேசறேன்.நான் மனைவி மட்டும் இல்லை ஒரு மகளும் கூட..மாறி வரும் இந்த வடிவங்கள்லே என் கடமையைத் தெரிஞசு பேசறேன்.பெண்மைங்கிற என் சுய அடையாளத்தைப் புரிஞசுட்டுப் பேசறேன்.என்னோட அம்மாவுக்கு முற்றிலும் குணமாற வரை நான் இங்கே தான் இருப்பேன்..அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன்.”
விசு சிரித்தான்.
”பணத்துக்கு என்ன பண்ணப் போறே? எங்கிட்டடே தானே கை நீட்டணும்?”
”ராமர் வேஷம் போட்டுட்டுப் பிச்சை எடுக்கற ஒரு பிச்சைக் காரனுக்கு இருக்கிற ஆத்ம சிந்தனை கூட உங்களுக்கு இல்லாதது கஷ்டம்…நான் என் வேலையை ராஜீனாமா செய்யல்லை…நீண்ட கால விடுப்புத் தான் எடுத்தேன் நான் வேலையிலே சேர்ந்துட்டேன்.என்னைத் தேடி ஒரு பிச்சைக் காரன் வருவான்,அவனை இங்கே அனுப்பி வையுங்க.இல்லேனாக் கூடப் பரவாயில்லை..தெருத் தெருவா.
அவன் வேஷம் கட்டிப் பிச்சை எடுக்கும் போது நான் அவனைப் பாத்துக்கறேன்….அவனைக் கண்டுபிடிக்கறது சுலபம்..”
”ஒரு பிச்சைக் காரனுக்குப் போய்..”
”ப்ளீஸ்,,அதிப் படிப்பில்லாத டப்பாவாலாக்களால் ஒரு சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி சரித்திரம் படைக்க முடியும் என்றால் இந்தப் பிச்சைக் காரனையும் சரித்திரம் படைக்க வைக்கலாம்..முடிஞசா எனக்காகக் காத்திருங்க..நீங்க போட்ட எந்த வேஷமும் சரியில்லை…மகன் கணவன்…எந்த வடிவமும் சரியில்லை,,,,இந்தப் போலி வேஷங்களைக் கலைச்சுட்டு ஒரு மனுஷனா வாழப் பாருங்க”
”போதும் உபதேசம் நீ என் ஒய்ப்,,தெரியுமா?”
’ஆமாம் தலை குனிந்து தாலி வாங்கினவள் த்ர்ன். ஆனால் நான் இப்போ தலை நிமிர்ந்துட்டேன்.. பை ”
விசு பிரமித்து நிற்க ….. வாசலில்,…..?
அந்தப் பிச்சைக்காரன் தன் பையிலிருந்து
அட்டைக் கிரீடம் உடைவாள் ஜிகினா உடை என்று ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறான்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வேஷஙகள்!…

  1. மிகவும் ரசித்துப் படித்தேன். இம்மாதிரிக் கதைகளினாலாவது பெண்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாகட்டும்.

  2. உனக்கு உன் பிறந்த வீடுதான் முக்கியம் என்றால் இனி நீ இங்கு வரத் தேவையில்லை, அங்கேயே இருந்து கொள்ளளாம்  என்ற கணவரின் சுடு சொற்களை கேட்ட பெண்கள் இந்தத் தலைமுறையிலும் இருக்கிறார்கள்.  மனிதாபிமானமற்ற சொற்களை அவ்வாறு சுயநல நோக்கில் சொன்னவர்களை என் தலைமுறையிலேயே நான் பார்த்ததுண்டு. 

    உனக்கு நான் வேண்டுமா இல்லை உன் தாய்வீடு வேண்டுமா என்ற கேள்வி கேட்டு இரண்டில் ஒரு முடிவு எதிர்பார்க்கப்படும்.  

    அந்த நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது இந்தக் கதை. பொருளாதார பலம் இல்லாவிட்டால் பெண்கள் எவ்வாறு இந்தக் கேள்வியை எதிர் கொள்வார்கள் என்பதையும் நாம் அறிந்ததுதான்.  சிறப்பான கதைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published.