உலகமெலாம் செழிக்கவேண்டி உள்ளமெலாம் ஒளியையேந்தி வான்பிறையின் வழித்தடத்தில் வயிற்றுப்பசி தான் உணர்ந்து மாதம் ஒரு முப்பது நாள் மாண்புடனே நோன்பிருந்து தன்னுயிர்போல் மண்ணுயிர்களெனும் தத்துவத்தைத் தான் அறிந்து இறையருளின் கருணையினால் ஈகைக்குணம் நிறையக்கண்டு ஒருமித்தக் கருத்தாலே ஒன்றிவாழும் அனைவருக்கும் உள்ளம்நிறை வாழ்த்துக்களை உரித்தாக்கும் திருநாள் ரமலான் வருக! வருகவே!!
அவனுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், வாலி ஆகியோரின் திரைப்படப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். கவிஞர் வாலியின் தனிப்பாடல்களில் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்”, “ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும்” போன்றவை அவனுக்குப் பிடித்தமானவை. அவனது கிராமத்தில் ஒருவர் தினமும் காலை வேளையில் ஒவ்வொரு வீடாக இந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டே வருவார். அவனும் அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டே அவர்பின்னால் சில வீடுகள்வரைத் தொடர்ந்து செல்வான். அந்தப் பாடகர் வள்ளலாரைப் போல வெள்ளை உடை அணிந்திருப்பார். நெற்றியில் திருநீறும், புருவ மத்தியில் சந்தனப் பொட்டும், கும்குமமும் இருக்கும். கழுத்தில் ஒரு ருத்ட்ராக்ஷ மாலையும் உண்டு. வலது கையில் ஒரு அலுமினியத் தூக்கு தொங்கிக் கொண்டிருக்கும். அதில்தான் ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் அரிசியை வாங்கிப் போட்டுக் கொள்வார். அருணகிரிநாதரின் “முத்தைத்திரு பத்தித்திரு” பாட்டை அவர் பாடும்பொழுது கண்களை மூடிக்கொண்டு கேட்டால் T.M. சௌந்தரராஜன் பாடுவது போலவே இருக்கும். தமிழ் வார்த்தைகளை அத்தனை அழகாக அவர் உச்சரிப்பர். திரைப்படத்தில் இருந்தும் பக்திப் பாடல்களை அவர் பாடுவார். “கையில் ஒரு கிடிக்கியை” வைத்துத் தாளம் தப்பாமல் வாசித்துக்கொண்டே பாடுவார். பின்னாளில் அவரை மையமாக வைத்து “தெருப்பாடகன்” என்ற சிறுகதையை அவன் எழுதினான். அவரது பாடல்களைக் கேட்டுக் கேட்டுத்தான் திரைப்படப் பாடல்களில் அவனுக்கு ஈர்ப்பு வந்தது.
அவனுடைய வீட்டில் வானொலிப் பெட்டி கிடையாது. அவனது வீட்டிற்கு கிழக்கில் நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் அவனது நண்பன் “ரகு”வின் வீட்டிலும் , நேர் எதிர்ப் புறத்தில் இருக்கும் மற்றொரு நண்பன் “சுரேஷ்” வீட்டிலும் பெரிய “மர்பி” ரேடியோ எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். காலையில் கர்னாடக சங்கீதமும், மாலையில் “விவித பாரதி” நிகழ்ச்சியில் திரைப்படப் பாடலும், இரவில் பத்து மணிமுதல் பதினொரு மணிவரை நல்ல கர்நாடக சங்கீதக் கச்சேரிகளும், ஞாயிறு தோறும் மாலை “வானொலி அண்ணா கூத்தபிரானின்” சிறுவர் நிகழ்ச்சியும், மாலை நாலுமணி முதல் ஐந்து மணிவரை திரைப்படப் பாடலும் வைப்பார்கள். அவன் வீட்டிற்கும் அந்தப் பாடல்கள் நன்றாகக் கேட்கும். அவன் அவனுடைய வீட்டின் வாயில் திண்ணையில் அமர்ந்தபடி அந்தப் பாடல்களைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பான். சில வேளை களில் அவன் அந்த நண்பர்களின் வீட்டிற்கே சென்று பாடல்களைக் கேட்பதுண்டு. பாடல்களில் உள்ள கவித்துவத்தைத் தானே பாடிப் பாடி ரசிப்பான். ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும் பொழுதும், பள்ளிக்குச் செல்லும் பொழுதும் நல்ல திரைப்பாடல்களை மனதிற்குள்ளே ரசித்துப் பாடியபடியே செல்வது அவனுக்குப் பழக்கம்.
கிராமத்தில் பார்த்த நாடகங்கள்
அவனைவிட வயதில் பெரிய நண்பர்கள் சேர்ந்து அந்த கிராமத்தில் “என்னதான் முடிவு”, மெழுகுவர்த்தி, “பங்களூரில் பிரும்மச்சாரிகள்” போன்ற நாடகங்களை நடத்தினர். “என்னதான் முடிவு” என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதி இயக்கியவர் “கண்ணன்”சார். இவர் சிறிதுகாலம் திலகர் வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். எழாபுரம் தெருவில் அரிசி அப்பளம் வியாபாரம் செய்து வந்த குத்தாலம் ஐயரின் மைத்துனர்தான் இந்தக் “கண்ணன்” என்பவர். வேடிக்கை வேடிக்கையாகப் பேசும் குணம் இவருக்கு இருந்தது. அது “என்னதான் முடிவு?” நாடகத்திலும் பிரதிபலித்தது. அதன் பிறகு மெழுகுவர்த்தி, “பெங்களூரில் பிரும்ம சாரிகள்” போன்ற நாடகங்களும் அவன் குடியிருந்த குத்துக்கல் தெருவிலேயேதான் நடந்தது. மூன்று பையன்கள் ஒரு பெண்ணைக் காதலிப்பார்கள். அந்தப் பையன்களின் அப்பவே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு விடுவார். இந்த ஒரு வரிக் கதையை நல்ல நகைச்சுவையோடு சொன்ன நாடகம் தான் “பெங்களூரில் பிரும்மச்சாரிகள்”. இந்த நாடகங்களில் சாமிநாதன், V. குருசாமி, H. குருசாமி, சங்கரமணி, பேப்பர் ராமலிங்கம், ராமலிங்கம் போன்றவர்கள் நடித்தனர். இதில் H. குருசாமி, சங்கரமணி இருவரும் பெண்வேடம் போட்டு மிகச் சிறப்பாக நடித்திருந்தது அவனுக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.
இந்த நாடகங்களுக்கு இசை அமைத்தவர் ” C. S. கண்ணன். இவர் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் அவர்களின் மகன். இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் இருவரில் “சங்கர்” இவருக்குச் சித்தாப்பா. இவர் பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூருக்குப் பக்கத்தில் இருக்கும் “சிந்தாமணி அக்ரஹாரம்”. சி.ஆர். சுப்புராமன் அவர்கள் இசையமைத்த கடேசிப் படம் தியாகராஜ பாகவதர் நடித்த “தேவதாஸ்”. அந்தப் படம் வெளியாகும் முன்பே 1952ம் வருடம் சி.ஆர்.சுப்புராமன் காலமாகிவிட்டார். அந்தப் படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பு வேலைகளை சி.ஆர். சுப்புராமனிடம் உதவியாளர்களாக வேலை செய்து வந்த எம்.எஸ். விஸ்வநாதனும், T. K. ராமமூர்த்தியும்தான் பூர்த்தி செய்த்தனர்.
தந்தை இறந்த பின்பு சென்னையில் மூன்று வருடங்கள் இருந்த பின்பு, சி.எஸ்.கண்ணனின் தாயாரின் மூத்த சகோதரியின் கணவரும், சிங்கம்பட்டி கிராமத்தின் கணக்கையருமான “வேங்கட்ராமையரின்” அழைப்பின் பேரில் கல்லிடைக்குறிச்சிக்கு வந்து விட்டனர். சி.எஸ். கண்ணன் தேரடித்தெருவில் இருந்த சரஸ்வதி பள்ளியிலும், திலகர் வித்யாலயம் பள்ளியிலும் கல்வி கற்றிருக்கிறார்.
“சிறுவயதில் கிரிகெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்ததால் திலகர்வித்யாலயம் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் வீ. சங்கரராமன், காசிராமன் ஆகியோர்தான் தனக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஊக்கம் கொடுத்து உயரே வர வழிகாட்டினார்கள் என்றும், அதன் பிறகு “தாழையூத்தில்” சங்கர் பாலிடெக்கினிக்கில் படிக்கும் பொழுது, இந்தியா சிமிண்ட்ஸ் கம்பெனிக்கு எதிரணியில் K.S. காசிவிஸ்வநாத ஐயரின் “கார்பைடு” கம்பெனிக்காக விளையாடி வெற்றி பெற்று அதிக “ரன்” எடுத்தவன் என்ற பெருமையும் தனக்குக் கிடைத்தது என்றும், அந்த விளையாட்டில் இந்தியா சிமிண்ட்ஸ் சார்பாக விளையாடிய கே.எஸ். ராமன் ( Geneal Manager-India cements) தான் சிறப்பாக “பௌலிங்” செய்ததோடு மட்டுமல்லாது எதிரணியில் நன்றாக விளையாடிய என்னை ரொம்பவும் பாராட்டியதாகவும் ” சி.எஸ். கண்ணன் அவனிடம் பெருமையாகத் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கல்லிடைக்குறிச்சியில் சு.ராமைய்யா, ஸ்டேட் பேங்க் ஹரிஹரன், சங்கரமணி, சாமிநாதன், சின்னப்பா, ரங்கன், சந்துரு போன்ற நண்பர்கள் சேர்ந்து ஒரு “கிரிகெட்குழு” வைத்திருந்ததாகவும், விகிரமசிங்கபுரம் “ஆர்வி”மில் அணியுடன் போட்டியிட்டு வென்றதாகவும் அவனிடம் சொன்னார். சமையல் வேலை செய்து வந்த “கைலாசம் ஐயர்” சில நாட்கள் தங்களுடன் விளையாடுவார் என்றும், அவர் பந்தை அடித்தால் அது சிக்ஸர்தான். அதனால் அவரை “சிக்ஸர் கைலாசம்” என்றுதான் அழைப்போம் ” என்றும் சொன்னது அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஏன் என்றால் அவன் “கைலாசமையருடன்” கிட்டிப்புள் விளையாடி இருக்கிறான். பிரமாதமாக விளையாடுவார். அவர் “கிட்டிப்புள்” அடித்தால் அது யார்வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது தெருக்கோடியிலோதான் சென்று விழும். தெருப்பிள்ளைகளோடு நெருங்கி விளையாரும் குணம் அவருக்கு இருந்தது.
ஒருமுறை எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நெல்லை சங்கீத சபாவின் நடந்திருக்கிறது. அப்பொழுது அந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்று கேட்ட சி.எஸ்.கண்ணனும், நன்னி சங்கரராமையரின் இளைய மகன் எஸ். சாமிநாதனும் தாங்களும் திரைப்படத்தில் பங்கு பெறவேண்டும் என்ற ஆசையில் கல்லூரிக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கட்டாமல், அந்தப் பணத்தில் சென்னைக்குச் சென்று சி.எஸ். கண்ணனின் சித்தப்பாவான இசையமைப்பாளர் “சங்கரை”ச் சந்தித்து தங்களையும் அவரது இசைக்குழுவில் சேர்த்துக் கொள்ளக் கெஞ்சி இருக்கிறார்கள். அவர் அவர்கள் இருவரையும் உடனேயே ஊருக்குத் திரும்பிச் சென்று படிப்பை முடித்துவிட்டு வரச் சொல்லி அறிவுரை கூறித் திருப்பி அனுப்பி இருக்கிறார். எப்படியாவது தாங்களும் திரைப்படங்களுக்கு இசை அமைக்கவேண்டும் என்ற ஆர்வத்தில், தங்களது திறமையைக் காட்டவே, ஊருக்குத் திரும்பியதும் சாமிநாதன், சந்துரு, சங்கரமணி போன்ற நண்பர்களுடன் சி.எஸ்.கண்ணன் “ப்ளூ பேர்டு ஆர்கெஸ்ட்ரா” என்ற மெல்லிசைக் குழுவை ஏற்படுத்தியுள்ளார். அந்த மெல்லிசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை அவன் பலமுறை கேட்டிருக்கிறான். அந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை, சி.எஸ். கண்ணன் வீட்டில் வைத்து நடக்கும். அப்பொழுது அவர்கள் வைத்தியப்பபுரம் தெருவில் குடி இருந்தனர். அவனது நண்பன் சங்கரன் (ரகுவின் அண்ணன்) அந்தக் குழுவில் வயலின் வாசிப்பான். ஒத்திகையைப் பார்க்க அவனை சங்கரன் அழைத்துக் கொண்டு போனான். “நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே” என்ற பாட்டுக்கு ஒத்திகை நடந்தது. சி.எஸ். கண்ணன் சங்கரிடம் ,”இந்த இடத்தில் “தாரார” என்று அழுத்தமாக வயலின் வாசிக்க வேண்டும்” என்று சொல்லிக் கொடுத்தார். அந்தப் பாடல் முழுவதும் கேட்ட பொழுது அவனுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. “பாவை பாவைதான் ஆசை ஆசைதான்” என்ற சுசீலா பாடலுக்கு இடையில் வருகின்ற “பாங்கோஸ்” வாத்தியத்தின் லயம் “சந்துரு” வாசிப்பில் பிரமாதமாக இருந்ததை அவன் நன்றாக அனுபவித்தான். சந்துரு தாள வாத்தியங்கள் வாசிப்பதில் “கை”தேர்ந்தவர். கந்தப்பபுரம் தெரு லக்ஷ்மணனின் அண்ணா அனந்தராமனும், பாவா சங்கரன் மாமாவின் மகன் “கோவை ராமகிருஷ்ணனனும்” T.M.S. குரலுக்கு மிகப் பொருத்தமானவர்களாக இருந்தனர். “கல்லிடை ரமேஷ்” என்ற பெயரில் சாமிநாதன் எஸ்.பி.பி., பி.பி.எஸ். பாடல்களைப் பாடுவார். மாடு கறக்கும் மூக்காண்டியின் சகோதரி சுசீலா பாடல்களை பாடவும் அவன் கேட்டிருக்கிறான். ஒரு திறந்த சத்துரமான பெட்டியின் ஓரத்தில் ஒரு பெரிய கம்பைக் கட்டி, அதிலிருந்து ஒரு கயிற்றை கீழ்முகமாக இறக்கி அந்தப் பெட்டியின் வாய்ப்பகுதியில் கட்டி இருப்பார்கள். அந்தக் கயிற்றின் நடுப்பகுதியை தனது வலது கையால் சங்கரமணி இழுத்து இழுத்து விடும் பொழுது “தொம் ..தொம்..” என்று மெல்லிய குரல் வரும். அது ரசிக்கும் படியாகவே இருக்கும். அந்த வாத்தியத்தின் அமைப்பு அவனுக்கு வேடிக்கையாக இருக்கும். அதை சங்கரமணி ரசித்து வாசிப்பார். இதை அவனுக்கு நண்பன் பிரபுவும் அவனோடு பகிர்ந்து கொண்டான். “அக்காடின், ஆர்மோனியம்” என்று அந்த குழுவினர் கலக்கத்தான் செய்தனர். டைட்டில் பாடலாக “நாளாம் நாளாம் திருநாளாம்” பாடலையும், கச்சேரிக்கு இடையில் “பூமாலையில் ஓர் மல்லிகை” பாடலையும் வாத்தியத்தை மாத்திரம் வைத்து அற்புதமாக இசைப்பார்கள். அப்பொழுதெல்லாம் அவர்களுக்கிருந்த சில வாத்தியங்களை வைத்துக் கொண்டே அசுர சாதனைகளை சி.எஸ்.கண்ணன் குழுவினர் செய்தது “முயற்சி திருவினையாகும்” என்பதற்கான விளக்கமாகவே அவன் புரிந்து கொண்டான்.
திருமணத்திற்குப் பிறகு “கண்ணன் லதா” குழுவினர் என்று மெல்லிசை நிகழ்சிகளை நிறைய ஊர்களுக்குச் சென்று செய்து வந்தனர். சி.எஸ். கண்ணனின் மனைவி “லதா” அருமையாகப் பாடுவார். சுசீலாவின் குரல் அப்படியே இருக்கும். திரைப்படங்களுக்கும் சி.எஸ்.கண்ணன் இசையமத்திருக்கிறார். வெளிநாடுகளுக்கும் தனது குழுவினருடன் சென்று பல இசை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார். கண்ணன், லதா தம்பதியருக்கு “ரஷாந்த் அரவிந்த்” என்ற மகன் இருக்கிறார். அவரும் நல்ல இசை ஞானம் உள்ளவர். வீணைக்கலைஞர். திரைப்படங்களுக்கும், சின்னத்திரைத் தொடர்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
சி.எஸ்.கண்ணன்-லதா இசைக்கலைஞர்கள் தமிழ் நாட்டில் ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் “மார்ஸ் வின்” (Maar’s Win – School for Music) என்ற பெயரில் ஒரு “இசைப் பள்ளி”யை நடத்தி வருகின்றனர். பதினைந்து வருடங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக நடந்துவருகின்ற இந்த இசைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வாய்பாட்டு மற்றும் இசைக்கருவிகளை வாசிப்பதற்கும் கற்றுத்தருகின்றார்கள்.
மிகச் சிறந்த இசைமேதை சி.ஆர்.சுப்புராமன் தனது நாற்பத்தொன்றாவது வயதிலேயே இறைவன் திருவடியை அடைந்தாலும் அவரது சந்ததியர்கள் மூலமாகத் தொடர்ந்து தனது “இசைப் பயணத்தை”த் தொடர்ந்து கொண்டேதான் இருப்பார். அவனோடு சேர்ந்து நீங்களும் கேட்டு இன்புற்றுக் கொண்டுதான் இருப்பீர்கள்.
“பாட்டினைப்போல் ஆச்சர்யம் பாரின்மிசை இல்லையடி” என்ற மஹாகவி பாரதியாரின் வாக்கு சத்தியம் அல்லவா.
நீளப் புரியாமை
நிறமாறிய வானவில்லில்
தொடுவானமாய்ச் சிதறிய
பின்னோக்கிய சிந்தனைக்
கூடுகளின் கற்குவியல்
பயங்களாய்
கூடு விட்டுக் குருவியான
இலக்கியச் சந்தையில்
தீ சுட்ட ஒற்றை விரலை
மருதாணி சிவக்கடிக்க,
சிந்திய வெண்பனி
மழைத் தேசத் தாவலாய்
தன்னிலை மறக்க…
உச்சி மலைப் பாட்டை
காற்றொன்று தேடுவதாய்த்
தலை விரித்த கவிதையாய்
உடல் வளைத்த ஆடையில்
மிச்சமென ஒரு
நிர்வாணம்
இலை இணுங்கிய
சிறு துளிகளில்
ஓ வெனக் கதறியது அருவி…
அது தீ சுட்ட புகை
என்ற மாற்றுக்
கருத்தில்
என் தற்கொலை!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றில் மைல் கற்களாய் அமைந்த திரைப்படங்கள் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவையாகும். மேலும் இவ்விரண்டு திரைப்படங்களையும் தானே இயக்கிய பெருமையும் எம்.ஜி.ஆருக்கு உண்டு. 1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70 எனும் கண்காட்சியை முழுக்க முழுக்க தமிழ் மக்கள் காண வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பியதால், இப்படத்தின் திரைக்கதையோட்டம் ஜப்பான் நோக்கித் திரும்பியது.
எம்.ஜி.ஆர் அவர்களின் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கே உண்டு. அவ்வரிசையில் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்கள் உலகப் புகழ் பெற்றவை. இத்திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னரை ஒப்பந்தம் செய்தபோது எம்.ஜி.ஆர். அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றார். திரைப்படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள், அனைத்தும் முத்துப் பாடல்கள் எனலாம். கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், புலவர் வேதா ஆகிய கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இன்றும் மின்னுகின்றன. இப்பாடல்கள் பதிவான பின் எம்.ஜி.ஆர். அவர்கள் மெல்லிசை மன்னரை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாராம். மெச்சிப் புகழ்ந்தாராம்.
அப்பாடல்களில் ஒன்று இதோ, கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் தமிழ் வார்த்தை விளையாட்டு நடக்கிறது பாருங்கள்.
மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ
பத்மஸ்ரீ கே.ஜி.யேசுதாஸ் பி. சுசீலா குரல்களில் இழைந்து வரும் இசைத் தென்றல் இது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அபூர்வ ராகம் இது. காட்சியமைப்பும் காண வெகு கச்சிதமாய் மக்கள் திலகத்தின் திரைச் சரித்திரத்தில் மற்றுமொரு மாணிக்க மகுடம். கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் இளமை நந்தவனம் நர்த்தனமிடுகிறது, அதற்கு மெல்லிசை மன்னரின் இசை கவரி வீசி விடுகிறது! வாழ்க்கையின் அன்றாடப் பரபரப்பிலிருந்து சற்று விலகி இளைப்பாற இப்பாடல் அழைக்கிறது…
தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ
வண்ணப் பாவை கன்னித் தேனை கன்னம் என்னும்கிண்ணம் கொண்டு உண்ணச் சொன்னாளோ தங்கத் தோணியிலே தவழும் பொன்னழகே நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ
மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
இன்னும் கொஞ்சம் சொல்லச்சொல்ல காதல் உண்டானதோ (தங்கத் தோணியிலே)
அல்லி பூவைக் கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ
கிள்ளும்போதே கன்னிப் போகும் பூ அல்லவோ
அஞ்சும் கெஞ்சும் ஆசை நெஞ்சம் நாணம் விடாததோ
அச்சம் வெட்கம் விட்டுப் போனால் தானே வராததோ (தங்கத் தோணியிலே)
“காதல் அன்பு தன்னைத் தவிர வேறெதையும் தருவதில்லை. தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. காதல் அன்பு எதனையும் தனக்கென பற்றிக் கொள்வதில்லை. அதை எவரும் கைப்பற்ற முடிவதில்லை. ஏனெனில் காதல் அன்புக்கு காதல் அன்பே போதுமானது.”
– கலில் கிப்ரான்
“ஒவ்வொருவருக்கும் உன் உணவைப் பங்கிட்டுக் கொடு. ஆனால் அதே உண்டியிலிருந்து எடுத்து நீ உண்ணாதே. ஆடிப் பாடிக் கூடிக் களித்திரு. ஆனால் உங்களில் ஒவ்வொருவரும், வீணைக் கருவியின் நாண்கள் தனித்தனியாய் ஒலித்து ஒருங்கே கீத இசையை எழுப்புவதுபோல் தனித்த உரிமையோடு வாழ்ந்திருக்கட்டும்.”
– கலில் கிப்ரான்
காதலியுடன் வாழ்வு (வசந்த காலம்) ____________________________________________
என் கண்மணியே ! வா
இந்தக் குன்றின் மேல்
இருவரும் உலாவி வருவோம் !
பனிப் பொழிவுகள்
நீராய் ஓடும் !
உறக்கத்தி லிருந்து வாழ்க்கை
உயிர்த் தெழுந்து
மேடு பள்ளங்களில்
திரிந்து வருகிறது !
வசந்த காலம்
வைத்த தடங்களைப்
பின்பற்றுவோம்
தூரத் தளங்களில் !
பசுமைக் குளிர்
வயல்களுக்கு மேல்
உயர்ந்த
மலை உச்சிக்கு நாம்
ஏறுவோம்
மகத்தான உள்ளெழுச்சி நம்மை
இழுத்துக் கொள்ள !
விடிந்துள்ள வசந்த காலம்
குளிர் காலத்து
அங்கியை
மடித்து வைத்து
எலுமிச்சை மரங்கள் மேல்
படிய விட்டது !
பார்ப்பதற்கு
இரவில் அலங்கரித்த
பெருநகர்த்
திருமணப் பந்தலில் உள்ள
மணப்பெண் போல்
தெரிகிறது !
ஒருவரை ஒருவர்
தழுவிக் கொள்ளும்
காதல் ஜோடிகள் போல்
தெரிகின்றன
திராட்சைக் கொடிகள் !
பாறைகளுக் கிடையில்
நடனமிடும்
சிற்றோடைகள் களிப்புடன்
பாடிக் கொண்டு !
மொட்டுகளில் சட்டென
முகிழ்த் தெழும் பூக்கள்
இயற்கை இதயத்தில்
களஞ்சியாய்ச் செழித்த
கடல் வயிற்றி லிருந்து வரும்
நுரை போல் !
என் கண்மணியே ! வா
மல்லிகைக் கிண்ணத்தில்
கடந்த காலத்தில் குளிர்ந்த
கண்ணீர்த் துளிகளைக்
குடித்துத்
தேற்றுவோம் நம் ஆத்மாவை !
பறவைகள் பொழிந்திடும்
கீதங்களைக் கேட்டு
உலாவித் திரிவோம்
உவகை யோடு
மதி மயக்கம் உண்டாக்கும்
தென்றலில் !
ஊதாப் பூக்கள்
ஒளிந்திருக்கும்
அந்தப் பாறை அருகிலே நாம்
அமர்ந்தி ருப்போம் !
அவை கொடுக்குக் கொள்ளும்
இனிய முத்தங்களை
பரிமாறிக் கொள்வோம்
நாமிருவரும் !
காதலியுடன் வாழ்வு (வேனிற் காலம்) ____________________________________________
வயல் வழியே செல்வோம்
வா என் கண்மணி !
வருகிறது
அறுவடைக் காலம் !
பரிதியின் விழிகள்
பக்குவ மாக்கும் பயிர்களை !
காசினி விளைத்திடும்
கனிகளைக்
கண்காணித்து வருவோம்
இதயத்தின் ஆழத்தில்
விதைக்கும்
காதல் வித்துக்கள்
விளைவிக்கும்
களிப்புத் தானி யங்களை
ஊட்டி வளர்ப்பது
அந்த ஆன்மா !
முடிவில்லாக் கொடைகள்
அளிப்பது இயற்கை !
இதயத்தை ஆட்கொண்டு
வாழ்வு செழிப்படைந்து
மூழ்கிப் போவதால்
நிரம்பட்டும் நமது
சேமிப்புக் களங்சியம்
இயற்கையின் விளைவுப்
பயிர்களால் !
பூக்களால் நமது படுக்கை
ஆக்கப் படட்டும் !
ஆகாயம் நமது போர்வை யாய்
அமையட்டும் !
மெல்லிய வைக்கோல்
தலையணை மேல்
சாயட்டும்
நம்மிரு தலைகளும் !
உடல் உழைப்பில் சற்று
ஓய்வெடுத்து
ஓடை முணு முணுப்பைக்
கேட்போம் நாம் !
காதலியுடன் வாழ்வு (இலையுதிர் காலம்) ____________________________________________
வா நாமிருவரும் போவோம்
முந்திரிப் பழத் தோப்புக்கு
திராட் சையைச்
பறித்துச் சாரெடுக்க !
பழரசத்தை விட்டு வைப்போம்
பழைய குடங்களில் !
காரணம் :
யுக யுகமாய்ச்
சேர்ந்திடும் அறிவை
ஆன்மா
முடிவில்லா நீடிப்புப்
படகுகளில்
வடித்துள்ளதால் !
மீளுவோம் நமது குடிலுக்கு !
வீழ்ந்திட வைக்கும்
மஞ்சல் இலைகளை
வீசிடும் காற்று !
வேனிற் காலத் துக்கு
இலைகள் மூடும்
உதிரும் பூக்கள்
இரங்கற் பா பாடும் !
எனக்கென்றும் உரியவளே !
வீட்டுக்குள் வா என் கண்மணி !
வேனிற் தளம் நோக்கிப்
புள்ளினம்
புரிந்திடும் பயணம் !
குளிர்ந்து போன
அறுவடை வயல்கள்
அழுது வாடும் தனிமையில் !
கண்ணீர் வரண்டு போகும்
மல்லிகைச் செடிக்கும்
முல்லைக் கொடிக்கும் !
திரும்பிச் செல்வோம் நாம்
பாடிக் களைத்த அந்த
ஓடைக்கு !
பொங்கி எழுந்த ஊற்றுகள்
அடங்கி விட்டன
அழுது தீர்த்த தீவிரத்தில் !
பழங் குன்றுகள்
கழற்றிச் சேமிக்கும் தமது
பன்னிற உடுப்புகளை
எச்சரிக்கை யோடு !
வா என் கண்மணி !
இயற்கை ஓய்ந்து போனது
நியாயமே !
மகிழ்ச்சிக்கு விடைகூறி
வழியனுப்பி வைக்கும் இயற்கை
மௌன மாக
மனத் திருப்தி யோடு
சோக கீதம் இசைத்து !
காதலியுடன் வாழ்வு (குளிர் காலம்) ____________________________________________
காலம் கரைந்து செல்கிறது.
நேற்று இருந்தவர் இன்று இல்லை
வாழ்க்கை என்கின்ற நியதிக்குள் யாவரும் உட்படுகின்றனர்.
அந்த நியதியையும் வென்று
மக்கள் மனங்களில் வாழும் உறவுகள்
என்றென்றும் மதிக்கப்படுகின்றார்கள்.
நினைவுபடுத்தப்படுகின்றார்கள்
அவ்வகையில் என் இதயத்தின்
அடையாளமாக இருக்கக் கூடிய உறவு
என் றாத்தா சித்தி பௌசியா(ஜெஸிமா ) ‘அவர்கள்
.
அவருடைய மறைவு நிகழ்ந்து
இன்று ஓராண்டு பூர்த்தியாகின்றது.
நம்ப முடியவில்லை.
என் றாத்தா என்னுடன் இல்லை என்பதை!
அவர் என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்கின்ற உணர்வையே தந்து கொண்டிருக்கிறது.
அந்த உணர்வு இன்று இக் கவியோடு நிழலாடுகின்றது!
……………………………………………………………………………………………..
நகர்ந்து விட்டது ஓர்ஆண்டு மனத்துயரம் மாறவில்லை
உடன்பிறப்பு உன்பிரிவால் மகிழ்ச்சி பறந்தது
சுமையாகிவிட்ட உலகில் சுமக்கமுடியா நிலையிலே நான்
மனநிம்மதி யில்லாமல் துடிக்கின்றேன் உன்மறைவால்
வாழுகின்ற வாழ்க்கையில் உன்னைநினைத்து எந்நாளும்
வடி(க்)கின்ற கண்ணீரை துடைத்து ஏங்குகின்றேன்
மரணத்தால் என்னை விட்டுச்சென்றீர், தொப்புள்கொடியுறவால்லல்ல
சுவர்க்கலோகம் சென்றதுபோல் நினைத்திருக்கின்றேன் மண்ணில் .!
உடன்பிறந்த தங்கையாய் தவிக்கின்றேன் றாத்தா !
எழுதிடும் கவிதைகள் என்மன நிலைதனை புரிந்து
இடி விழுந்து சிதறிய மன நிலை போல
கலங்குகின்றேன் உன்மௌத்தை நினைத்து நினைத்து
குருவிக் கூட்டம்போல றாத்தா மகிழ்ந்திருந்தோம் நாம்
இன்று நிலையாகச்சென்றுவிட்டீர் மனதில் வேரூன்றிவிட்டு
கலண்டர் தாள்களை ஒன்றொன்றாய் கிழித்தாலும்
மாறாத்துயரத்தை தாங்கிட பொறுமை தா! யாஅல்லாஹ் !
அன்புத் தோழியாக பாச பிறப்பாக என்னோடு
இணைந்திருந்து வரம்பெற்ற உறவாக வாழந்துவிட்டு
இன்று என்னைவிட்டுச் சென்றாலும் உங்களன்பு
ஒருபோதும் என்னுள்ளத்தைவிட்டு நீக்கிடாது பேணுகின்றேன்
வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம்.
சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப் படைப்பு.
இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்கிய சர்மினி பெலி என்கிற இலங்கைப் பெண் ஏப்ரல் மாத ‘தி சிறீலங்கா றிப்போர்ட்டர்’ பத்திரிகைக்கு கொடுத்துள்ள அறிமுகப் பேட்டி, இதுபோல் அறநெறிகளின் மீதாக தம் வாழ்க்கையை நிறுத்தியுள்ள பல்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்களின் மனநிலையின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இருப்பதை காணமுடியும். அவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக தான் இலங்கையில் வசித்த காலத்தில் பல கொலைகளையே கண்கூடாகக் கண்டதாகவும், இலங்கை அரசாங்கத்தின் அவ்வகையான ஒவ்வொரு கொடுமை நிகழ்த்தலுக்கும் தானும் ஒருவகையில் காரணமென்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அதில் கூறுகிறார்.
‘அம்மாவின் ரகசியம்’ ஒரு பெண்ணிலை நோக்காகவே விரிகின்றது. ஆனாலும் அது மறைமுகமாய் சுட்டுகிற விஷயமும் குறுநாவலில் உண்டு. எந்த அரசும் சரி, அரசாங்கமும் சரி மக்களைப் பார்ப்பதில்லை, அவை தமக்கு முன்னாலுள்ள வர்க்க சார்பான நலனைமட்டுமே பார்த்துக்கொள்கின்றன என்ற உண்மையை பெரும்பான்மையின அனுபவங்களினூடாக வெளிப்படுத்தியுள்ள படைப்பாகவும் இது இருக்கிறது. இக் குறுநாவலின் வேறு அம்சங்களைவிட இதுவே முக்கியமானதாக என் பார்வையில் பட்டது.
முத்துலதாவுக்கு நேரும் படையினரின் கொடுமைகள் அவள் ஒரு பெண்ணாகவிருப்பதால் விளைகிறது. ஆனால் தமது வர்க்க நலனுக்கு அச்சுறுத்தலாகும் சமயத்தில் தமது சமூகத்தவளாயினும்கூட அரசு அழித்தொழிக்கத் தயங்குவதில்லையென்பதையும் அது துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.
கலாபூர்வமான அம்சங்களிலும் இக் குறுநாவல் குறிப்பிடத்தக்கதாக உள்ளதைச் சொல்லவேண்டும். ஒரு கயிற்றில் பிணைத்து பறக்கவிடப்பட்ட பறவை தன் எல்லைவரை பறந்து கயிற்றின் நீளத்துக்கு மேலே செல்ல முடியாது ஒரு அதைப்புடன் திரும்புவதுபோலத்தான், ‘அம்மாவின் ரகசிய’மும், குறுநாவல் என்ற தன் எல்லைக்கு மேல் செல்லமுடியாது அதைப்புடன் திரும்பும் வெளிகள் இப்படைப்பில் மிகுதியாக உள்ளமையை குறிப்பாகச் சொல்லவேண்டும்.
முத்துலதாவுக்கு ஏற்பட்ட பாலியல்ரீதியிலான கொடுமை சிங்கள சமூகத்தில் அவள் ஒருத்திக்கு மட்டுமே ஏற்பட்டதாக இருக்கமுடியாத பட்சத்திலும், அவள் தன் குடும்பம் சார்ந்து அடையும் துயரங்கள் அதன் காரணமாகவே இருக்கிறபட்சத்திலும், அவளுக்கு நேர்ந்தவை பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக வரும்வரை ரகசியமாகவே இருப்பது குறுநாவலில் பலஹீனமான அம்சமாகவே தோன்றுகிறது. வளர்ந்த பெண்ணின்மீது அவ்வளவு அக்கறை காட்டும் அவளது அம்மாவுக்குமே அவளது சிதைவு தெரியாமல் போனது அதிசயம். ஆயினும் அவளது தனக்குள்ளான ஒடுங்குகையே முத்துலதாவை அவளது இரண்டு பெண்பிள்ளைகளிடமிருந்தும் அந்நியமாக்குகிறது. அதை உடைக்கிற கணத்திலேயே பிள்ளைகளும் ரகசியம் வெளித்து தாயாக முத்துலதாவைக் கண்டு அன்பு செலுத்துகிறார்கள்.
இக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே. அடங்கியிருப்பவர்கள் மக்களென்றும், தன் நலனை அச்சுறுத்துபவர்களோ, அச்சுறுத்தக்கூடியவர்களோ தன் எதிரிகளென்றும் அது திட்டமாக அபிப்பிராயம் கொண்டிருக்கிறது.
இலங்கையின் மும்மொழிகளின் இலக்கிய ஊடாட்டத்தை இதுபோன்ற மொழிபெயர்ப்பு நூல்களால் வளர்க்கமுடியுமென்பதை இங்கே ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.
ஏப்ரல் 4-ஆம் தேதி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகருக்கு விமானத்தில் ஒரு பெண் வந்து இறங்குகிறார். எல்லோரையும்போல் அவருக்கும் குடிபுகல் பகுதியில் வழக்கமான சோதனைகள் முடிந்து விமான நிலையத்தை விட்டுக் கிளம்புகிறார். காரில் இல்லினாய் மாநிலத்திலும் அதற்கு அருகில் இருக்கும் மாநிலங்களான டென்னஸி, மிசௌரி மாநிலங்களிலும் இருக்கும் தன் உறவினர்களின் இல்லங்களுக்குச் செல்கிறார். மே மாதம் பதினெட்டாம் தேதிவரை இம்மாதிரி இடங்களுக்குச் சென்றவருக்கு ஏதோ உபாதை ஏற்பட்டு இல்லினாய் மாநில மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகிறார். அப்போது அங்கு அவருக்கு நடந்த பல மருத்துவ சோதனைகளில் மருந்துகளுக்கு எளிதில் கட்டுப்படாத XDR-TB என்னும் ஒரு வகைக் காச நோய் இருப்பது தெரிய வருகிறது. காச நோய் மட்டுமல்ல, இம்மாதிரி கிருமிகளால் பரவும் எந்த நோய் என்றாலும் அமெரிக்கா பதைபதைத்துவிடும். போன வருடம் எபோலா என்ற கொடிய உயிர்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அங்கிருந்து வரும் பயணிகள் மூலம் பரவுவதைத் தடுக்க அமெரிக்கா வெகுபாடு பட்டது. இப்போது இந்தப் பெண் கொடிய வகை டி.பி.யைத் தனக்குள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் அது அமெரிக்காவில் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பெண்ணுக்குப் பரிசோதனைகள் செய்த மருத்துவர்கள் உடனேயே அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள். அந்த மருத்துவமனையிலேயே மற்ற நோயாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தபட்ட அந்தப் பெண் ஒரு சில தினங்களிலேயே மேரிலாந்து மாநிலத்திலுள்ள தேசிய உடல்நல நிறுவனத்திற்கு (National Institute of Health) மாற்றப்பட்டு அங்கும் தனிமைப்படுத்தப்பட்டார்.
இவரை மற்ற எல்லாக் குடிமக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தி அவரிடமிருந்து வேறு யாருக்கும் வியாதி பரவுவதைத் தடுத்த பிறகு இதுவரை இவருக்கு அருகில் இருந்தவர்கள் யாருக்காவது இவரிடமிருந்து வியாதி பரவியிருக்கிறதா என்று கண்டறியப் பல முயற்சிகளைக் கையாண்டனர். முதலில் அவர் அமெரிக்காவிற்கு பயணம் செய்த விமானக் கம்பெனிக்குத் தெரிவித்து இந்தப் பெண்ணோடு பயணம் செய்த எல்லாப் பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தும்படி யோசனை கூறப்பட்டது. பின் அவர் சந்தித்த உறவினர்கள், மனிதர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுரை கூறப்பட்டது.
இந்தப் பெண்ணோடு விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு இந்த வியாதி வருவதற்குரிய வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றாலும் வருவதற்குரிய வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாதாம். தொத்து வியாதியால் பீடிக்கப்பட்டவர்களோடு நீண்ட தூரம் விமானத்தில் பிரயாணம் செய்தவர்களுக்கு வியாதி பரவியிருக்கிறதாம். அதனால்தான் அத்தனை பயணிகளையும் மருத்துவ சோதனைகளுக்கு உள்ளாக்குகிறார்களாம். இந்த வகைக் காச நோய், ஃப்ளூ, தட்டம்மை போன்ற வியாதிகளைப் போல் எளிதாக மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு இல்லையென்றாலும் அவரோடு நெருங்கிப் பழகிய உறவினர் போன்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு இருக்கிறதாம்.
பொதுவாக அமெரிக்காவிலேயே தங்கிவிடுவதற்குரிய விசா வாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன் அவர்களுக்கு இம்மாதிரிக் கொடிய நோய்கள் இருக்கின்றனவா என்று அவரவர்கள் நாட்டிலேயே பரிசோதித்த பிறகுதான் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கிறார்கள். ஆனால் தினம் தினம் அமெரிக்காவிற்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு இம்மாதிரியான காச நோய் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்கு இயலாது. ஏனெனில் இந்தப் பரிசோதனை நீண்ட நேரம் எடுக்கக் கூடியது. இதை விமான நிலையத்தில் வைத்துப் பார்க்க முடியாது.
காச நோயுள்ள பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தவர்களை சில மணி நேரங்களிலேயே தொடர்பு கொண்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தினார்கள். அதில் எத்தனை பேருக்கு வியாதி பரவியிருக்கலாம் என்ற விபரத்தை வெளியிடவில்லை. இப்படி சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களை இன்னும் பத்து வாரங்களில் மறுபடியும் சோதிப்பார்களாம். ஏனெனில் முதலில் வியாதி இருப்பதற்குரிய அறிகுறி இல்லையென்றாலும் பின்னால் வருவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.
கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்க தேசிய உடல்நல நிறுவனம் இம்மாதிரியான கடும் நோயாளிகள் இருபது பேரைக் குணப்படுத்தியிருக்கிறதாம். வியாதியின் அறிகுறிகள் வெளியே தெரியாமல் உள்ளேயே இருந்தாலும் அவர்களுக்கும் சிகிச்சை கொடுக்கிறார்களாம். வியாதி பலருக்குத் தொற்றுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை.
இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பெண் மருத்துவமனையில் எல்லோரிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்சுகள் அனைவரும் கையுறைகள், முகமூடிகள், உடல் முழுவதையும் மூடிக்கொள்ளும் உடைகள், கண்களைப் பாதுகாக்கும் சாதனங்கள் ஆகியவற்றை அணிந்துகொள்ள வேண்டும். இத்தனை பாதுகாப்பிற்குப் பிறகும் இவர்கள் வருடத்திற்கு ஒரு முறை பரிசோதிக்கப்படுகிறார்கள்.
இந்தப் பெண்ணை அவர் முழுவதுமாகக் குணமடைந்த பிறகே மருத்துவமனையிலிருந்து அனுப்புவார்கள். டி.பி.யை குணப்படுத்த நான்கு மருந்துகள் வேண்டுமாம். இந்த வகை காச நோயைக் குணப்படுத்த இன்னும் சில மருந்துகள் வேண்டும் என்பதோடு அதிக நாட்களும் எடுக்குமாம். இந்தப் பெண் பல மாதங்கள் வரை மருத்துவமனையில் இருக்க நேரிடலாமாம். இதற்கு எக்கச்சக்க செலவு ஆகலாம் என்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்ணிடம் எதையும் வசூலிக்க மாட்டார்களாம். இம்மாதிரியான நோயாளிகள் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அந்த நாட்டின் அரசிடமிருந்தும் எந்தப் பணமும் வசூலிப்பதில்லையாம். பொதுவாக மருத்துவச் செலவுகளுக்கு நிறையச் செலவாகும் அமெரிக்காவில் இந்த தேசிய உடல்நல நிறுவனத்தில் எல்லோருக்கும் மருத்துவ வசதி இலவசம். நாட்டில் வைரசுகள் பரவுவதைத் தடுக்க அமெரிக்கா எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் இவை.
எப்போதுமே அமெரிக்கர்கள் வைரசுகள், பாக்டீரியாக்கள் தங்களிடம் வந்து சேர்ந்துவிடக் கூடாதென்று மிகவும் ஜாகிரதையாக இருப்பார்கள். சூப்பர்மார்க்கெட்டுகளில் கிருமி கொல்லி மருந்து தெளித்த காகித டவல்களை எல்லா இடங்களிலும் வைத்திருப்பார்கள். அங்கு வாங்கும் சாமான்களை ஒரு சிறிய வண்டியில் வைத்து எடுத்துச் சென்று கடைசியில் பணம் கட்டி எடுத்து வரலாம். அந்த வண்டிகளைத் தொடுவதற்கு முன் மேலே கூறிய டவல்களைக் கொண்டு அவற்றைச் சுத்தப்படுத்திவிட்டுத்தான் அந்த வண்டிகளைத் தொடுவார்கள். ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் ‘இந்தியாவில் நாங்கள் கையால் சாப்பிடுவோம்’ என்றபோது அந்தப் பெண்ணுக்கு அப்படியொரு ஆச்சரியம். ‘எதை எதையெல்லாமோ தொட்ட கையால் எப்படி உணவைத் தொட்டுச் சாப்பிடுவது?’ என்று அந்தப் பெண் கேட்டாள். ‘சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவிவிட்டால் போயிற்று’ என்று நான் சொன்னதை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. அலுவலகத்தில் யாருக்காவது தடுமன் பிடித்தால் ‘அது போகும்வரை தயவுசெய்து வேலைக்கு வராதீர்கள்’ என்பார்கள். தடுமன் பிடித்தவர்கள் மற்றவர்களுக்கு எளிதாக அதைக் கொடுத்துவிடுவார்கள் என்பதால் இப்படிக் கேட்டுக்கொள்வார்கள். அதிலும் கணினியில் வேலைபார்ப்பவர்கள் வீட்டிலிருந்துகொண்டும் வேலைபார்க்கலாம் என்பதால் இப்படி கேட்டுக்கொள்ள வசதியாக இருக்கிறது.
அமெரிக்கர்கள் பிறந்ததிலிருந்தே இப்படி எல்லா விஷயத்திலும் கிருமிகள் பற்றி ஜாக்கிரதையாக இருப்பதால் அவர்களுக்கு நோய் தடுப்புச் சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது. அதனால் இன்னும் ஜாக்கிரதை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பிறகு தடுப்புச் சக்தி மேலும் குறைகிறது. சிறு வயதில் குளத்துத் தண்ணீரைக் குடித்து வளர்ந்த எனக்கு நல்ல எதிர்ப்புச் சக்தி இருந்தது. அமெரிக்கா வந்த பிறகு அது எவ்வளவோ குறைந்துவிட்டது. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக இயற்கையாகவே தங்களுக்கிருந்த எதிர்ப்புச் சக்தியை இழந்துவிட்டு இப்போது தங்களைக் கிருமிகளிடமிருந்து காத்துக்கொள்ள என்னென்னவோ செய்கிறார்கள். முதலிலேயே குழந்தைகளிடம் கொஞ்சம் வளர்ப்புச் சக்தியை வளர்த்திருக்கலாம்.
அவர்கள் ஒத்துழைப்புக்கான கூட்டம்தானே — போரிடாதவர்க்கு ஆயுதங்கள் ஒரு கேடா என்று பிரிட்டிஷார் முதலில் எண்ணியிருக்கலாம். ஆனால், காலம் செல்லச் செல்ல மெட்ராஸ் ஸாப்பர்கள் என்ற – இந்திய ராணுவத்தின் முந்தைய பொறியியல் குழு — பல போர்களைச் சந்தித்தார்கள்.
1947ல், இந்திய விடுதலை கிடைத்த கையுடன், மெட்ராஸ் ஸாப்பர்கள் ஜம்முவில் நடந்த போரில் கலந்துகொள்ள நேர்ந்தது. அதில் பெரும்பாலானோர் கடுங்குளிரைக் காணாத தென்னிந்தியர்களே! இருப்பினும், பனியையும், எலும்பைத் தாக்கும் குளிரையும் பொருட்படுத்தாது, ராணுவம் முன்னேறிச் செல்வதற்காக, அடைத்துக் கிடந்த சாலைகளைச் சீர்படுத்தினார்கள். இந்தப் பணியில் ஸாப்பர்களின் ஒரு பிரிவே தங்கள் இன்னுயிரை இழக்கவேண்டியிருந்தது. ஹைதராபாத் மாகாணம் இந்தியாவுடன் இணைக்கப்படும்போது, இந்தக் குழு மீண்டும் “ஆபரேஷன் போலோ”வில் [ராணுவ நடவடிக்கை] களம் கண்டார்கள்.
மெட்ராஸ் ஸாப்பர்கள் தமிழில் “தம்பிகள்” என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களின் குழுப் பாடல், “வெற்றி, வெற்றி, எதிலும் வெற்றி, தம்பி!” என்று துவங்குகிறது.
ஃபிரெடெரிக் ராபர்ட்ஸ்
அவர்களின் திறமை மிகவும் பிரபலம் ஆனதால் சென்னை இராணுவத்தின் தலைவரான ஃபிரடெரிக் ராபர்ட்ஸ்1883ல், “படையைக் களத்திற்கு அனுப்பிவைக்கும்படி எப்பொழுதெல்லாம் இந்தியாவுக்கு அழைப்பு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ராணியாரின் ஸாப்பர்களும் [மெட்ராஸ் ஸாப்பர்கள்] மைனர்[Miners]களும் [கண்ணிவெடி அகற்றுவோர்] கட்டாயம் களம் இறங்குவார்கள். எங்கெல்லாம் மெட்ராஸ் ஸாப்பர்கள் செல்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் தங்கள் புகழை நிலைநிறுத்தி, [சென்னை] ராஜதானிக்கும் பெருமை சேர்க்கிறார்கள்…”
பிரிட்டிஷ் ராணுவம் தனிச்சிறப்பு வாய்ந்த வீரமிக்க செயல்களைச் செய்தவர்களைக் கௌரவிக்க ஆரம்பித்தபோது, முதன்முதலாகச் சிறப்பிக்கப்பட்டவர் மெட்ராஸ் ஸாப்பர்களைச் சேர்ந்த ஹவில்தார் சொக்கலிங்கம்தான். அவர் 1834ல் குடகில் நடந்த கர்நாடகப் போரில் அவர் காட்டிய வீரத்திற்காக அக்கௌரவம் வழங்கப்பட்டது. அம்மாதிரி வழங்கப்படும் சிறப்புப் பதக்கங்களே “சொக்கலிங்கம் பதக்கம்” என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டதுதான் அதன் தனிச் சிறப்பாகும்.
பின்னால் அக்குழுவுக்கு அரசியார் விக்டோரியாவின் ஸாப்பர்கள் [சுருக்கமாக “க்வீன்ஸாப்ஸ்”] என்று பெயரிடப்பட்டது. அக்குழுவினர் தங்கள் சாதி, சமய வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒன்றாகவே உண்டு, உழைத்துப் பணி செய்தனர். செல்லுமிடமெல்லாம் அவர்களது “தம்பி” பாட்டைப் பாடினர்.
ஒருமுறை அவர்களைப் பார்வையிடும் ஒரு மேலதிகாரி ஒரு தம்பியையைப் பார்த்து அவனது சாதி என்ன என்று கேட்டபோது, அவன் நெஞ்சை நிமிர்த்தி “ஸாப்பர் சாதி, ஐயா!” என்று பதிலளித்த உண்மை ஆவணங்களில் பதிவாகியுள்ளது
.
அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகள்: பாலங்கள் கட்டுதல், சாலைகள் அமைத்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், மறைகுழிகள் தோண்டுதல் ஆவன. அவர்களது “ஸாப்பர்கள்” என்ற பெயரே “ஸாப்” என்ற ஒருவித மறைகுழியின் பெயராகும். இராணுவம் முன்னேறுவதற்காக வேலிகளை அகற்றுவது இன்னுமொரு முக்கியமான வேலை.
பங்களூர் டார்ப்பிடோ வைத்து வேலியைத் தகர்த்தல்
முதல் உலகப் போரின்பொது, ஒரு வேலியைத் தகர்த்தெடுக்க தம்பிகள் மேஜர் ஆர்.எல். மக்க்ளிண்டாக்கின் உதவியுடன் செய்த குழாய் வெடிகுண்டு பங்களூர் டார்பிடோ என்று அழைக்கப்பட்டது.
பங்களூர் டார்ப்பிடோ
முள்கம்பி வேலிகளை விரைவில் தகர்த்துச் செல்ல இந்த பங்களூர் டார்பிடோ போர்க்கள முன்னணியில் உள்ள வீரர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது என்றும், அதன் பல முன்னேற்றங்கள் இன்றும் உபயோகப்படுத்தப் படுகின்றன என்றும், கார்டன் எல். ராட்மன் தனது “த பிக் புக் ஆஃப் கன் ட்ரிவியா” [துப்பாக்கித் துணுக்குகளின் பெரும் புத்தகம்] என்ற புத்தகத்தில் பதிந்துள்ளார்.
மூன்று மீட்டர்கள் தள்ளி நின்று பங்களூர் டார்பிடோவை ஒரு வெடிக்கச் செய்ய முடியும். அதன் தற்கால மாற்றுபட்ட வடிவம் ஐக்கிய அரசு நாட்டில் [இங்கிலாந்து] அதனது இரானுவத்திற்காகத் தயாரிக்கப்படுகிறது. அது சமீபத்தில் இராணுவக் குப்பைகளைத் தகர்க்க உபயோகப்படுத்தப்பட்டது. முதல் உலகப் போரில் முள்கம்பி வேலிகளைத் தூரத்தில் இருந்து தகர்க்க பங்களூர் டார்பிடோ குண்டுகள் உதவின. பிற்காலத்தில் அந்தப் போர்க்கருவியின் அளவு முறைமைப்படுத்தப்பட்டது.
மெட்ராஸ் ஸாப்பர்களின் சின்னம்
மெட்ராஸ் ஸாப்பர்களின் மேற்கோள் உரை [motto] “ஸர்வத்ர” [எங்கும்] என்ற வடமொழிச் சொல் ராயல் எஞ்சினீயர்களின் “யுபீக்” என்ற லத்தின் சொல்லின் மொழிபெயர்ப்பே. பணியாற்றும், மற்றும் ஓய்வுபெற்ற “தம்பி ஸாப்பர்கள்” ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் அவர்கள் குடும்பத்துடன் இராணுவ பொறியியல் கல்லூரியில்[College of Military Engineering – CME] ஒன்றுகூடுகிறார்கள்.
ராயல் என்ஜினீயர்களின் சின்னம்
அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில், “முடிவில்லாத வீரம், துணிவு நிரம்பிய நிகழ்ச்சிகள் தம்பிகள் சிறந்த போர்வீரர்கள் என்னும் அடைமொழியை உறுதி செய்கிறது!” என்று CMEயின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் எஸ். சென்குப்தா தம்பிகளின் தோழமைப் பண்பைப் புகழ்ந்து பாராட்டினார்.
மெட்ராஸ் ஸாப்பர் அசோசியேஷன் 1947ல் இக்குழுவுக்குப் பிரியாவிடை கொடுத்த பிரிட்டிஷ் ஆஃபீசர்களால் துவங்கப்பட்டது.அப்பொழுதான் ஒவ்வொரு ஆண்டிலும் செப்டெம்பர் மாதம் 30ம் தேதி இக்குழுவின் உயர்வு நாளாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.
— இக்கட்டுரை ஆசிரியர் KRA நரசய்யா, 1881ல் வெளியிடப்பட்ட “த ஹிஸ்டரி ஆஃப் மெட்ராஸ் எஞ்சினீர்ஸ் அண்ட் பயனீயர்ஸ், ஃப்ரம் 1743 டு பிரசன்ட் டைம்” என்ற புத்தகத்திற்காக மேஜர் ஹென்றி மெரிடித் வைபார்ட் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறார்.
டி.பி. இராமச்சந்திரன் எழுதிய “பேரரசின் முதல் வீரர்கள்” [Empire’s First Soldiers] என்ற புத்தகம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மெட்ராஸ் ஸாப்பர்கள் கலந்துகொண்ட போர்களைப் பற்றி முழு விவரங்களும் கொடுக்கிறது.